Sidebar

30
Fri, Oct

✍️ஜகாத் சொத்துக்களை நாணயத்தைக் கொண்டு மதிப்பிடுதல்

✍️ஜக்காத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆரம்ப காலத்தில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே மனிதர்களிடையே பண்டமாற்று முறைமையே நடைமுறையில் இருந்தது. பண்டமாற்று முறை என்பது ஒருவருக்குத் தேவையான ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக, அதற்குப் பதிலாகத் தம்மிடமிருக்கும் வேறொரு பொருளைக் கொடுப்பதாகும். உதாரணமாக, ஒருவரிடம் மிளகாய் இருக்கும், மற்றொருவரிடம் மல்லி இருக்கும்; தன் மிளகாயைக் கொடுத்து அதற்கு நிகரான அளவில் மல்லியைப் பெற்றுக் கொள்வர். வியாபாரிகளும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்களிடம் அனைத்துப் பண்டங்களையும் வைத்திருப்பர். வாங்குபவர் தங்களிடமுள்ள ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு, தங்களுக்குத் தேவையான வேறொரு பொருளைப் பெற்றுக் கொள்வர்; அரிசியைக் கொடுத்து உளுந்தையும், உளுந்தைக் கொடுத்துப் பருப்பையும் கேட்பர். வியாபாரிகள் இதற்கிடையே தங்களுக்குரிய ஒரு குறிப்பிட்ட லாபத்தைக் கணக்கிட்டு வைத்துக் கொண்டு, பொருளுக்குப் பொருளை மட்டுமே பரிமாற்றம் செய்தனர். அன்றைய சந்தைகள் யாவும் இத்தகைய முறையிலேயே இயங்கின.


அதன் பின்னர், தூர தேசங்களுக்குப் பொருள்களைச் சுமந்து செல்வதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவை வெள்ளி மற்றும் தங்கத்திலான நாணயங்களாகும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதும் நிலையான, உண்மையான மதிப்பு உண்டு என்பதால் அவை மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டன. மேலும், பொருள்களை நேரடியாகக் கொண்டு செல்வதை விட இவற்றை எளிதாக எடுத்துச் செல்ல முடிந்தது. உதாரணமாக, ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு ஒட்டகத்தைக் கொண்டு செல்வதை விட, அதன் விலையான முப்பது திர்ஹம் அல்லது இருபது திர்ஹம் மதிப்புள்ள நாணயங்களைக் கொண்டு செல்வது எளிதானது அல்லவா? பத்து ஒட்டகங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப வேண்டுமானால், அதற்குப் பெரிய வாகன வசதிகள் போன்ற பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் இருக்கும். ஆனால், அந்தப் பத்து ஒட்டகங்களின் மதிப்புக்கு நிகரான தங்கம் அல்லது வெள்ளியை மிக எளிதாக எடுத்துச் சென்று விடலாம்.


இத்தகைய நாணய முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. அவர்களின் காலத்தில் தங்கக் காசுகளும் வெள்ளிக்காசுகளும் புழக்கத்தில் இருந்தன. வெள்ளிக்காசுகள் 'திர்ஹம்' என்றும், தங்கக் காசுகள் 'தீனார்' என்றும் அழைக்கப்பட்டன. இவை இன்றைய அச்சு முறையிலான காசுகளைப் போலன்றி, குறிப்பிட்ட எடையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. வெள்ளியில் ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட பகுதி திர்ஹம் என்றும், தங்கத்தில் அமைந்த ஒரு சிறிய அளவு தீனார் என்றும் பெயரிடப்பட்டு புழக்கத்தில் இருந்தன. இந்த இரு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டே மற்ற அனைத்துப் பொருள்களும் மதிப்பிடப்பட்டன.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துச் சம்பவங்கள் மூலமே இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு நிகழ்வில், ஒட்டகத்தின் வயதுக் கணக்கில் குறைபாடு இருந்தால், அதற்குப் பதிலாக இரண்டு ஆடுகளைக் கொடுக்குமாறும் அல்லது இருபது திர்ஹம்களைக் கொடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, அன்றைய காலகட்டத்தில் ஓர் ஆட்டின் மதிப்பு பத்து திர்ஹம்கள் என மதிப்பிடப்பட்டிருந்ததை நாம் அறியலாம்.
அதேபோன்று, ஜாபிர் (ரலி) அவர்கள் நபிகளாருடன் மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது, அவர்களின் ஒட்டகம் மிகவும் பலவீனமடைந்து நகர மறுத்துப் பிடிவாதம் செய்தது. ஜாபிர் அவர்கள் பயணக் குழுவில் மிக இறுதியாகப் பின்தங்கி நின்றார். அப்போது அவரிடம் வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விபரம் கேட்டு, தங்களது கைத்தடியால் அந்த ஒட்டகத்தை ஒருமுறை அடித்தார்கள். உடனே அந்த ஒட்டகம் வேகமாக நடக்கத் தொடங்கியது. பின்னர் நபிகளார், "இந்த ஒட்டகம் உனக்குச் சரிவராது, இதனை எனக்கு விற்றுவிடு" எனக் கூறினர். ஜாபிர் அவர்கள் அதற்குச் சம்மதித்தார். விலை பேசப்பட்ட பிறகும், "நாம் மதினா சென்றடையும் வரை நீ இதன் மீதே ஏறி வா" என்று நபிகளார் அனுமதியளித்தார்கள்.

மதினாவை வந்தடைந்ததும், "ஒட்டகத்தை ஒப்படைத்துவிட்டு உனக்குரிய தொகையைப் பெற்றுக்கொள்" எனக் கூறி, ஜாபிர் அவர்களைப் பள்ளிவாசலில் இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு வருமாறு பணித்தார்கள். அவர் தொழுது முடித்து வந்ததும், பிலால் (ரலி) அவர்களிடம் அதற்கான தொகையை எடைபோட்டுக் கொடுக்குமாறு நபிகளார் உத்தரவிட்டார்கள். அதன்படி பிலால் (ரலி) அவர்கள், பேசப்பட்ட விலைக்கு நிகரான வெள்ளிக்காசுகளை (திர்ஹம்களை) எடைபோட்டு வழங்கினார்கள். ஒட்டகத்தை விற்றுவிட்டு அதற்குப் பகரமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இத்தகைய முறை அன்றே இருந்தது என்பதற்கு இது சான்றாகும். மேலும், ஜாபிர் அவர்களிடம் பணத்தைக் கொடுத்த பிறகு நபிகளார், "நீ வாங்கிய பணத்தையும் வைத்துக் கொள், இந்த ஒட்டகத்தையும் உனக்கே அன்பளிப்பாகத் தருகிறேன், இதையும் நீயே வைத்துக் கொள்" என்று பெருந்தன்மையோடு கூறினார்கள் என புகாரி போன்ற ஹதீஸ் நூல்களில் காண்கிறோம்.


இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வீடு, தோட்டம் போன்ற சொத்துக்கள் யாவும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் மதிப்பைக்கொண்டே கணக்கிடப்பட்டன என்பதாகும். அதன் அடிப்படையிலேயே சொத்துக்களுக்கான ஜகாத் முறையும் வகுக்கப்பட்டது. ஒரு வீட்டின் மீது ஜகாத் கடமையாகிறது எனில், அந்த வீட்டை இரண்டரை சதவீத அளவிற்குத் துண்டு துண்டாக வெட்டிக் கொடுக்க இயலாது; அவ்வாறு வெட்டினால் அது எதற்கும் பயன்படாமல் போய்விடும். எனவே, அந்த வீட்டின் மதிப்பைத் தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்போடு ஒப்பிட்டுக் கணக்கிட்டே இரண்டரை சதவீத ஜகாத் தொகையை வழங்க முடியும். தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டே அன்றைய மதிப்பீடுகள் அமைந்திருந்தன. உதாரணமாக, தங்கத்திற்கு ஐம்பது விழுக்காடு ஜகாத் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், வீட்டின் மதிப்பில் ஐம்பது விழுக்காடும், தங்கத்திற்குப் பத்து விழுக்காடு எனில் வீட்டின் மதிப்பில் பத்து விழுக்காடும் ஜகாத்தாகக் கொடுக்கப்பட வேண்டும். எனவே, சொத்துக்கள் யாவும் தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும் என்பதே அன்றைய விதியாகும்.


ஆனால், பிற்காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாக நிக்கல், செம்பு போன்ற உலோகக் காசுகளும், பின்னர் காகிதப் பணமும் பயன்பாட்டிற்கு வந்தன. காகிதப் பணத்திற்கு என்று தனிப்பட்ட இயற்கையான மதிப்பு ஏதும் கிடையாது; அது ஒரு கற்பிதமான மதிப்பாகும். ஏனெனில், அரசு ஒரு குறிப்பிட்ட காகிதப் பணத்தைச் செல்லாது என்று அறிவித்துவிட்டால், அதன் மதிப்பு முற்றிலும் அழிந்துவிடும். உதாரணமாக, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று ஓர் இரவில் அறிவிக்கப்பட்டதும், அது வெறும் காகிதமாக மாறியதை நாம் கண்டோம். ஆனால், தங்கம் அல்லது வெள்ளியாலான திர்ஹம் மற்றும் தீனார்களை அவ்வாறு செல்லாததாக்க முடியாது. ஏனெனில், அவற்றிற்கு இயற்கையான உலோக மதிப்பு எப்போதும் நிலைத்திருக்கும்.


இன்றைய காகிதப் பணத்தின் மதிப்பு என்பது, அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் (Governor) வழங்கும் உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ரூபாய் நோட்டுகளில் "இதைக் கொண்டு வருபவருக்கு இந்த மதிப்பிற்குரிய தொகையை வழங்க உத்திரவாதம் அளிக்கிறேன்" என்று ஆளுநர் கையொப்பமிட்டிருப்பார். அந்த ஒரு கையெழுத்திற்காகவே அக்காகிதம் மதிப்பிடப்படுகிறது. அரசு அதனைச் செல்லாது என அறிவித்தால், அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. இருப்பினும், இன்று உலக அளவில் நாம் அனைவரும் இக்காகிதப் பணத்தையே பரிமாற்ற ஊடகமாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நாம் இப்பணத்தையே பயன்படுத்துகிறோம். எனவே, இன்றைய காலகட்டத்தில் சொத்துக்களை மதிப்பிடுவதற்கு நாம் திர்ஹம் அல்லது தீனார்களைப் பயன்படுத்தாமல், பழக்கத்திலுள்ள காகிதப் பணத்தைக் கொண்டு மதிப்பிட்டு, அதற்கேற்ப ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.