Sidebar

29
Thu, Oct

✍️வியாபாரத்தில் பங்குதாரராக சேரும்போது ஒருவர் ஏமாற்றப்பட்டால் நஷ்டத்தை ஜகாத்தில் கழிக்கலாமா?

✍️ஜக்காத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒருவர் வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்ந்து, மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை லாபமாகத் தருகிறேன் என்று உறுதி கூறிப் பணம் பெற்றுக்கொண்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே பணத்தைத் தந்துவிட்டு, பின்னர்ப் "வியாபாரம் இல்லை" என்று சாக்குப்போக்குகள் கூறி ஆண்டுகள் பல கடந்து, அசலையும் லாபத்தையும் தராமல், தற்போது அவர் இருக்கும் இடமும் தெரியாமல் தலைமறைவாகிவிட்ட சூழலில் எழும் மார்க்க ரீதியான ஐயங்களுக்குரிய விளக்கம் இதோ:

தொழிலுக்காகப் பணத்தைக் கொடுத்தவர், அவர் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் அப்பணத்தைப் பயன்படுத்தி லாபம் தந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே கொடுத்துள்ளார். தற்போது அவரைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், "நான் அவருக்குக் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகையை, தொழிலுக்காகக் கொடுத்து அவரிடம் ஏமாந்துபோன அந்தப் பணத்தில் கழித்துக் கொள்ளலாமா?" என்ற வினா எழுகிறது. உடனுழைப்பவர் அல்லது உறங்கும் பங்குதாரராக (Sleeping Partner) ஒருவர் இணையும்போது, "நீங்கள் முதலீடு செய்யுங்கள், நான் உழைக்கிறேன்" என்று ஒப்பந்தம் செய்துகொண்டு, சில மாதங்களுக்குப் பின் லாபமும் தராமல், கணக்கும் காட்டாமல், இறுதியில் ஆளே இல்லாமல் தலைமறைவாகிவிடும் சூழல் நேரிடுகிறது.

இத்தகைய நிலையில், ஏமாற்றிய நபர் நேரில் இருந்தால் மட்டுமே அவரிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற இயலும். அல்லது அவர் கடனாகப் பெற்றிருந்தாலும், அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஓடிவிட்ட நில ஏற்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் வேறு தொழில்கள் வாயிலாகப் பெறுகின்ற வருமானத்திற்காக ஜகாத் கொடுக்க வேண்டிய கடமை இருக்கும்போது, அந்த ஜகாத் தொகையை இந்த இழப்பில் கழிப்பது செல்லுமா என்பதனை ஆராய வேண்டும்.

ஒரு நபர் ஏமாற்றப்பட்டு நஷ்டமடைந்து, கடனாளியாகி, கடன்பட்டவரைத் தொடர்புகொள்ளவும் முடியாத சூழலில், கடன்பட்டவர் ஓடி ஒளிவது அவரிடம் பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்கான சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. ஏமாற்றி மோசடி செய்து ஓடிவிட்டாலும், அல்லது தொழிலில் நஷ்டமடைந்து ஓடிவிட்டாலும், புறவயமான எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதனை வெளிப்படையாகப் பேசித் தீர்த்திருக்கலாம்; ஆனால், அவர் தலைமறைவாகியிருப்பது அவரிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை என்பதையே புலப்படுத்துகிறது.

மார்க்கச் சட்டங்களின்படி, ஒருவன் கடனாளியாகி, கடனை அடைக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படும்போது, அவன் எந்த வகையில் கடன்பட்டிருந்தாலும் சரி, அவனுக்கு ஜகாத் பெறக்கூடிய தகுதி வந்துவிடுகிறது. "நெருக்குதல்களுக்குப் பயந்தும், என்னிடம் பதிலளிக்கப் பணம் இல்லாத காரணத்தினாலுமே நான் ஓடினேன்" என்று அந்த நபர் கூறும் நிலையில், அவருடைய அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஜகாத்தைத் தகுதியுடைய கடனாளியாக மாறுகிறார். எனவே, ஏமாந்த நபர் தன்னுடை ஜகாத் தொகையைக் கணக்கிட்டு, அந்த நபருக்குக் கொடுக்க வேண்டிய கடனாகக் கருதி அதில் கழித்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு.

மேலும், முதலீட்டு அடிப்படையில் பங்குதாரராக இணையும்போது பின்பற்றப்பட வேண்டிய முக்கிய மார்க்க விதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு முதலீட்டிலும் "இத்தனை லட்சம் ரூபாய்க்கு இத்தனை சதவீதம் லாபம் நிச்சயமாகத் தர வேண்டும்" என்று நிலையான ஒரு தொகையையோ அல்லது நிலையான சதவீதத்தையோ நிர்ணயிக்கக் கூடாது. லாபமும் நஷ்டமும் இறைவனின் கைவசமே உள்ளது. "நீ பணமே போட வேண்டாம், உன்னுடைய உழைப்பை மட்டும் தா; நான் முதலீடு தருகிறேன்" என்று பேசி ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், லாபத்தைப் பிரிப்பதில் "கிடைக்கும் லாபத்தில் எனக்குக் கால்பங்கு, உனக்கு முக்கால்பங்கு" என்றோ, "எனக்கு முக்கால்பங்கு, உனக்குக் கால்பங்கு" என்றோ, அல்லது "இருவருக்கும் பாதிக்குப் பாதி" என்றோ விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும்.

இருவரும் சம்மதித்துப்போடும் ஒப்பந்தங்கள் அனைத்தும் மார்க்கத்தில் செல்லும். ஆனால், ஒரு லட்சம் ரூபாயோ அல்லது மூன்று லட்சம் ரூபாயோ முதலீடு செய்துவிட்டு, "மாதா மாதம் எனக்கு இவ்வளவு தொகை நிச்சயமாக வந்தாக வேண்டும்" என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்தல் கூடாது. எவ்வளவோ லாபம் கிடைத்தாலும், அதில் ஒரு நிலையான தொகையை நிர்ணயிப்பது வட்டி (ரிபா) எனும் பெரும் பாவத்தின் வரம்பிற்குள் வந்துவிடும். எனவே, வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தின் சதவீதத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கக் கூடாது என்பதே மார்க்கத்தின் தெளிவான நெறியாகும்.