தாயின் சொத்திலிருந்து வாடகை வருமானம் வருகிறது; ஆனால், அந்த வாடகைத் தொகையை ஒருவர் தனக்கென வைத்துக்கொள்ளாமல், நேரடியாகத் தன் தம்பிக்கோ அல்லது அண்ணனுக்கோ வழங்கிவிடுகிறார். இந்நிலைப்பாட்டில், அத்தொகைக்குரிய ஜகாத்தை யார் வழங்க வேண்டும் என்ற வினா எழுகிறது. முதலில், அச்சொத்து யாருக்குச் சொந்தமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய் உயிரோடு இருந்து, அச்சொத்து இன்னும் அவரிடமே இருக்கும்பட்சத்தில், அது தாயின் சொத்தே ஆகும். அல்லது தாய் மறைந்து, வாரிசுரிமை அடிப்படையில் அச்சொத்து மூத்தவருக்குச் சொந்தமாகிவிட்டது என்றால், அது மூத்தவரின் சொத்தாக மாறுகிறது.
ஒருவர் தன் சொத்திலிருந்து வரும் வாடகைத் தொகையைக் கையால் தொடாமல், நேரடியாகத் தம்பியின் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றிவிட்டாலும் (Transfer), மார்க்கச் சட்டங்களின்படி அத்தொகை முதலில் மூத்தவரை வந்தடைந்து, அவரே அதனைத் தம்பிக்கு வழங்கியதாகவே கருதப்படும். ஏனெனில், பணப்பரிவர்த்தனைத் தொழில்நுட்பத்தின் மூலம் தொகையை மாற்றி அமைப்பது என்பது, தொகையை நேரில் பெற்றுப் பின்னர் வழங்குவதற்குச் சமமானதாகும்.
மேலும், இஸ்லாமியச் சட்டத்தில் 'குடும்ப வக்பு' (Family Waqf) என்றொரு வழிமுறையும் உண்டு. ஒருவர் தனது சொத்தைக் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக வக்பு செய்து, "இச்சொத்தின் மூலம் வரும் வருமானத்தை என் குடும்பத்தார் அல்லது உடன்பிறந்தார்கள் எடுத்துக்கொள்ளலாம்" என்று அறக்கொடையாக மாற்றிவிடலாம். அவ்வாறு குடும்ப வக்பு செய்யப்படும்பொழுது, அந்த வாடகை வருமானத்தை யார் பெறுகிறார்களோ, அதுவே அவர்களின் வருமானமாக அமைகிறது.
சுருங்கக் கூறின், தாயின் சொத்திலிருந்து வரும் வாடகையை அண்ணன் பெற்றுத் தம்பிக்குக் கொடுத்துவிட்டால், அத்தகைக்கு அண்ணனும் தம்பியும் இரண்டு பேரும் ஜகாத் கொடுக்க வேண்டும். ஒருவேளை அண்ணன் அதை குடும்ப வக்பு செய்துவிட்டால் அப்போது அந்த சொத்து நேராக தம்பிக்கு செல்லும் அதனால் அண்ணனுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை
✍️தாயின் சொத்துக்கு வரும் வாடகையை தம்பிக்கு கொடுத்து விடுகிறேன். ஜகாத்தை நான் கொடுக்க வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode