Sidebar

31
Sat, Oct

✍️ஜகாத் வசூலிப்பவர் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்

✍️ஜக்காத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்லாமிய ஆட்சிமுறையின்கீழ் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளுக்கான ஜகாத் எனும் கடமைக்கொடையை வசூலிக்கச் செல்லும் அதிகாரிகளின் நடைமுறைகளும், அதற்கான மார்க்க விதிகளும் மிகவும் நுட்பமானவை. நிலங்கள், கட்டடங்கள் போன்ற அசையாச் சொத்துகளுக்கு ஜகாத் கணக்கிடுவதைப் போலன்றி, நகரும் தன்மையும் உயிர்ப்பும் கொண்ட கால்நடைகளை வசூலிக்கும் பொழுது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் அநீதிகளும் நிகழ வாய்ப்புள்ளது.

பொதுவாக, ஜகாத் வசூலிக்க அதிகாரிகள் செல்லும்போது, கால்நடைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்களின் சொத்துகளிலேயெ குறைபாடுடைய, ஊனமுற்ற, பயனற்ற கிழட்டுப் பிராணிகளையே ஜகாத்தாகக் கொடுக்க முற்படுவர். அத்தகைய பயனற்றப் பிராணிகளைப் பிடித்துக் கொடுத்துக் கடமையை முடித்துவிடலாம் என்று நினைப்பார்கள். அதேவேளையில், ஜகாத் வசூலிக்க வரும் அதிகாரிகளோ, தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய, நல்ல ஆரோக்கியமும் அதிக உடல் எடையும் கொண்ட பெருத்த உருப்படிகளையே தேடிப் பிடித்து எடுத்துச் செல்ல முனைவர். ஏனெனில், ஒரே வயதுடைய இரு ஆடுகளுக்கிடையே கூடத் தீவனப் பராமரிப்பைப் பொறுத்து உடலமைப்பிலும் எடையிலும் பெருத்த வேறுபாடுகள் இருக்கும்; ஒரு ஆடு பத்து முதல் பன்னிரண்டு கிலோ எடையும், மற்றொன்று இருபது கிலோ எடையும் கொண்டிருக்கக் கூடும். இச்சூழலில், உரிமையாளரோ தீனியின்றி எலும்பும் தோலுமாய் மெலிந்துபோனப் பிராணியைக் கொடுக்கப் பார்ப்பார்; அதிகாரியோ அதிக மதிப்பீடு கொண்ட பிராணியைக் கைப்பற்ற நினைப்பார்.

இத்தகைய அநீதிகளைத் தவிர்க்கும் பொருட்டே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவான வரம்புகளை நிர்ணயித்துள்ளார்கள். ஊனமுற்றவை, நோஞ்சான்கள் மற்றும் முதுமையடைந்த கிழட்டுப் பிராணிகளை ஜகாத்தாக எடுக்கவே கூடாது. அதற்காகவே ஒரு வயது, இரண்டு வயது, மூன்று வயது, நான்கு வயது எனப் பிராணிகளின் வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நான்கு வயதிற்கு மேற்பட்ட, பால்தராத, பயனற்ற கிழட்டுப் பிராணிகளைக் கொடுப்பதற்கோ அல்லது வசூலிப்பதற்கோ மார்க்கத்தில் அனுமதியில்லை. அதேபோன்று, நான்கு வயதே நிரம்பியிருப்பினும், கால் உடைந்ததாகவோ, கொம்புகள் சேதமடைந்ததாகவோ அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் உடையதாகவோ இருக்கும் ஊனமுற்ற பிராணிகளையும் உரிமையாளர் கொடுக்கக் கூடாது; வசூலிப்பவரும் வாங்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட அந்தந்த வயதுக்குரிய, எவ்விதக் குறைபாடுமில்லாத பிராணிகளையே வழங்க வேண்டும்.

மேலும், ஜகாத்தாகப் பெறப்படும் கால்நடைகளில் ஆண் பிராணிகளை வசூலிக்கக் கூடாது; பெண் பிராணிகளையே ஜகாத்தாகப் பெற வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. ஒட்டகம், ஆடு, மாடு எதுவாக இருப்பினும் ஒரு வயது, இரண்டு வயது, மூன்று வயது அல்லது நான்கு வயதுடைய பெண் பிராணிகளையே வசூலிக்க வேண்டும். ஏனெனில், பெண் பிராணிகளாலேயே இனப்பெருக்கமும் உற்பத்திப் பெருக்கமும் சாத்தியமாகும்; அதுவே ஏழைகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால், ஆண் பிராணிகளை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜகாத் வசூலிக்கும் அதிகாரிக்குச் சில சிறப்பு அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. வசூலிக்கும் அதிகாரி அவ்விடத்துச் சூழ்நிலையைக் கவனிக்கிறார். அங்கே பெண் பிராணிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல் அனைத்தும் ஆண்களாகவே இருக்கின்றன என்றாலோ, அல்லது பெண் பிராணிகளுக்குப் பதிலாக ஓரிரு ஆண் ஒட்டகங்களைப் பெறுவது பயனுள்ளது என அவர் கருதினாலோ, தம் விருப்பத்தின் பேரில் ஆண் பிராணியை ஏற்றுக்கொள்ள அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக வசூலிக்கும் அதிகாரியின் முடிவிற்கும் மனநிறைவிற்கும் உட்பட்டதாகும்.

அதேபோன்று, ஒருவரிடம் ஊனமுற்ற அல்லது கிழட்டுப் பிராணிகள் மட்டுமே உள்ளன; அவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பாவப்பட்ட மனிதராக இருக்கிறார் என்பதை அதிகாரி உணர்ந்து, தம் ஆத்ம திருப்தியோடு அதனை ஏற்றுக்கொண்டால் அதில் குற்றமேதுமில்லை. சில மனிதர்களின் வறுமை நிலையை நோக்கிக் காட்டப்படும் இத்தகைய இரக்கமும் நெகிழ்வுத்தன்மையும் அதிகாரியின் பொறுப்புமிக்க முடிவிற்குட்பட்டதாகும். அரசாங்கமும் அத்தகைய சூழலில் அவ்வதிகாரியைக் கேள்வி கேட்காது.

அதேவேளையில், ஜகாத் வசூலிப்பவர்கள் உரிமையாளரின் மிகச் சிறந்த, மதிப்புமிக்கச் செல்வங்களைக் கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்வதைக் கடுமையான எச்சரிக்கையுடன் மார்க்கம் கண்டிக்கிறது. சிலர் தங்களின் கால்நடைகளில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆட்டையோ அல்லது மாட்டையோ தனிக் கவனமும் அன்பும் செலுத்தி, தம் பிள்ளையைப் போலப் பேணி வளர்ப்பார்கள்; அல்லது சண்டைக்காகவும் காட்சிப்படுத்துவதற்காகவும் தனியாகத் தீனியிட்டுச் செல்லமாக வளர்த்து வருவார்கள். அத்தகைய சிறப்புமிக்க, மதிப்புமிக்கப் பிராணிகளை ஜகாத் என்ற பெயரில் பிடித்துச் செல்வது மிகப்பெரிய அநீதியாகும்.

அவ்வாறு செல்லமாக வளர்க்கப்பட்ட பிராணியைப் பலவந்தமாகப் பறித்துச் சென்றால், பாதிக்கப்பட்ட அந்தச் சொந்தக்காரன் வேதனையோடு ஏந்தும் பிரார்த்தனைக்கு (துஆவிற்கு) அஞ்சிக் கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

فایاک و کرائم اموالھم۔۔۔۔ "واتق دعوۃ المظلوم فانه لهس بينه وبين الله حجاب"

 அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எவ்விதத் திரையும் இல்லை; அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். சமுதாய நலனுக்காகவும், அரசு கஜானாவில் அதிகப் பணம் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும்தான் அதிகாரி அதனை எடுக்க முயல்கிறார் என்றாலும், தனிநபரின் விருப்பத்திற்குரிய சிறந்த பொருளைப் பறிப்பது அநீதியாகவே கருதப்படும். மக்கள் தங்களின் செல்வத்தில் உயர்வாகவும் செல்லமாகவும் வைத்திருப்பவற்றைத் தவிர்த்து, சாதாரண நடுத்தரமான பிராணிகளையே ஜகாத்தாக எடுக்க வேண்டும். பிறருடைய உரிமைகளையும் விருப்பங்களையும் மதித்து, அநீதியிழைக்காமல் நடப்பதே ஜகாத் வசூலிப்பின் தலையாய நெறியாகும்.