471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.
இவ்வசனங்களில் (12:87, 15:56, 29:23, 39:53) மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இறையருளில் நம்பிக்கை இழப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் இவ்வசனங்கள் எச்சரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் செயல்கள் இருந்து வருகின்றன.
பாவம் செய்து, இறைவனின் பல கட்டளைகளை மீறிய நாம் எப்படி நாம் இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி தர்கா வழிபாட்டைச் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.
அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசைமாறிச் செல்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்று வாதிடுவதன் விபரீதம் இவர்களுக்குப் புரியவில்லை.
'அல்லாஹ் கோபக்காரன்; அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள்' என நம்புவோர் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணைவைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ்செயலாகும்.
இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் தவறை உணர்ந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டால் தனது அருள் அவனுக்கு உண்டு என அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427 ஆகிய குறிப்புகளையும் காண்க!
471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode