83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது.
மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் ஷைத்தானுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.
மனிதர்களை நேர்வழியில் இருந்து தடம்புரளச் செய்து அவர்களை நரகில் சேர்ப்பது தான் ஷைத்தானின் ஒரே பணி. அவன் மனிதர்களை நரகவாசிகளாக ஆக்கும் காரியங்களைத் தான் செய்வான். நரகவாசிகளாக ஆக்காமல் தடுக்கும் காரியங்களை அவன் செய்ய மாட்டான்.
மனிதர்களைத் தீய வழியில் செல்ல வைத்து, பாவிகளாக்கி நரகில் தள்ளுவது தான் ஷைத்தானின் வேலை என 4:119,120, 7:16,17 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
ஒருவன் பைத்தியமாகி விட்டால் அதன் பின்னர் அவன் செய்யும் எந்தத் தீமைக்காகவும் அவன் பாவியாக மாட்டான். அவனுக்குத் தண்டனையும் கிடையாது. ஒருவனை ஷைத்தான் பைத்தியமாக்கி விட்டால் நரகவாசிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து போய்விடும். நரகவாசிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதை முழு நேரப் பணியாகக் கொண்ட ஷைத்தான், நரகவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பைத்தியம் பிடிக்கச் செய்ய மாட்டான்.
எனவே இவ்வசனத்தில், "ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்'' என்று கூறப்பட்டதை மேற்கண்ட சான்றுகளுக்கு முரணில்லாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது "ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்'' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது.
அய்யூப் நபியவர்களுக்கு நோயும், துன்பமும் ஏற்பட்டபோது "ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே'' எனக் கூறியதாக 38:41 வசனம் கூறுகிறது.
நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று யாரும் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறியதாகப் புரிந்து கொள்கிறோம். அது போல் பைத்தியத்தை அல்லாஹ்வே ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஷைத்தானே பைத்தியமாக ஆக்குகிறான் என்பது இதன் பொருளல்ல.
மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பது பற்றி மக்களிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
இறந்தவர்களின் ஆவி, உயிருடன் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது தான் பைத்தியம் என்று பாமர மக்கள் கருதுகின்றனர்.
இறந்தவர்களின் உயிர்கள் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக 39:42 வசனம் கூறுவதாலும், இறந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப முடியாதவாறு பர்ஸக் எனும் புலனுக்கு எட்டாத திரை போடப்பட்டுள்ளது என்று 23:100 வசனம் கூறுவதாலும் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகிற்குத் திரும்ப வரும் என்று நம்புவது திருக்குர்ஆனுக்கு மாற்றமானது.
மேலும் மண்ணறையில் விசாரணை முடிந்ததும் நல்லவர்கள் யுகமுடிவு நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என்றும், தீயவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : திர்மிதீ 991) இந்த நபிமொழிக்கு எதிராகவும் மேற்கண்ட கருத்து அமைந்துள்ளது.
83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode