193. அத்வைதத்தின் அறியாமை
இவ்வசனத்தில் (8:17) பத்ருப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகள் மீது சிறு கற்களை வீசியதைப் பற்றிக் கூறும்போது இதை நீர் எறியவில்லை. நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒருவரே என்று அத்வைதம் பேசும் வழிகெட்ட ஒரு கூட்டம் இதை ஆதாரமாகக் காட்டி உளறி வருகின்றனர். எனவே இவ்வசனம் கூறுவது என்ன என்பது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் 'பத்ருப் போர்' என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9)
* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான். (8:11)
* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப் படுத்தினான் (8:11)
* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர் (8:12)
* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை அல்லாஹ் ஏற்படுத்தினான் (8:12)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.
"பொடிக்கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல் : தப்ரானி)
இதைத்தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ, அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் இதனால் ஏற்பட்டன.
இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வளவு தெளிவான வசனத்தைத் தான் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு அல்ல; இருவரும் ஒருவர் தான்'' என்று உளறுகின்றனர். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கியுள்ளனர். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.
இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் கொடுத்த இவர்களின் தலைவனான இப்னு அரபி என்பவன் பிற மதங்களில் உள்ள 'அத்வைதம்' என்ற கொள்கையைக் காப்பி அடித்து இஸ்லாத்துக்குள்ளேயும் திணிக்க முயன்றான். காணும் பொருள் அனைத்துமே அல்லாஹ் என்று இவன் கூறினான். இவனை மகான் என்று கூறும் மூடர்களும் இந்தச் சமுதாயத்தில் உள்ளனர்.
திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு கருத்து கொண்ட வாக்கியங்களுக்குத் தவறான பொருள் கொடுத்து இவன் மக்களை வழிகெடுக்க முயன்றான்.
(இரு கருத்து கொண்ட வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை அறிய 86வது குறிப்பைக் காண்க!)
திருக்குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து, தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் ஒரு கைப்பிடி கற்களால் அனைத்து எதிரிகளின் கண்களிலும் படுமாறு வீச முடியுமா? முஹம்மது நபியே அல்லாஹ்வாக இருந்தால் தானே அப்படி வீச முடியும்? அவர்கள் எறிந்ததை, தான் எறிந்ததாக அல்லவா அல்லாஹ் கூறுகிறான்? எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் ஒன்றே'' என்று இவர்கள் உளறுகின்றனர்.
இணைவைத்தலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடுகின்றனர்.
ஆனால் இந்த வசனம் இவர்களது வாதத்துக்கு நேர்எதிரானதாகும்.
"நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசியபோது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதுதான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைப் பற்றிக் கூறுவதற்கு முன், நபித்தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.
நபித்தோழர்கள் தமது வாள்களாலும், ஈட்டிகளாலும் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்தத் தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல் எறிந்தது பற்றிப் பேசும்போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல; பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?
"அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ்'' என்று இவர்கள் கூறியது போல் "அல்லாஹ் தான் நபித் தோழர்கள், நபித்தோழர்கள் தான் அல்லாஹ்'' எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பத்ருப் போரில் பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத்தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.
"எதிரிகளின் படைபலத்தில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருந்தும் உங்களால் எதிரிகளை வெல்ல முடிந்தது என்றால் அதற்கேற்ப பல சூழ்நிலைகளை நான் தான் ஏற்படுத்தினேன்'' என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ, அவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாட முடியாது என்பதற்காகவே, தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.
நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான்.
திருக்குர்ஆன் 18:110
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மலஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி, மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறியபோது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித்தோழர்கள் அந்தக் கூட்டத்தினரால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் மட்டுமல்ல, எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.
நீங்கள் பயிரிடுவதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கேட்கிறான்.
மனிதர்கள் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறானே! அப்படியானால் விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக, இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின்பாற்பட்டது என்று இதை விளங்கிக் கொள்கிறோம்.
அது போலவே மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.
நீர் எறிந்தபோது
நீர் எறியவில்லை
என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்தபோது எனக் கூறும்போது எறிந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே 'நீர் எறியவில்லை' எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று நாம் கூறினால் அதை அபத்தம் என்போம்.
ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.
நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை; அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால், பயிரிடுதல் என்பதற்கு இரு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.
அதாவது நாம் (பயிரிடும்போது) விதையைப் புதைக்கும்போது நாம் அதை முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.
இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.
நீர் எறிந்தபோது
நீர் எறியவில்லை
என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் எறிந்தபோது, அதாவது "பொடிக் கற்களை நீர் வீசியபோது''
நீர் எறியவில்லை, அதாவது "ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை''
என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும், மக்களின் உரையாடல்களிலும் காணப்படுகிறது. திருக்குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் அல்ல.
இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம்; அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு, அவனுடைய தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு, அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.
யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.
"பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.
பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்" என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்" என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்த போது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.
(பார்க்க: முஸ்லிம் 5021)
அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?
இதை எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ அதுபோல் தான் முதஷாபிஹாத் (இரு பொருள் தரும்) வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வழிகேடர்கள் தான் முதஷாபிஹாத் வசனங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பிப்பார்கள் என்பதைப் பற்றி முழு விபரத்திற்கு 86வது குறிப்பைக் காண்க!
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!
193. அத்வைதத்தின் அறியாமை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode