150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?
இறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று இவ்வசனத்தில் (5:101) சொல்லப்பட்டுள்ளது.
அதிகமான மார்க்க அறிஞர்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? நபிமொழி எது என்று பொதுமக்கள் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி ஆலிம்களிடம் எதிர்க்கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள்.
ஆனால் இவ்வசனம் இறைச்செய்தி அருளப்படும் போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் கூறுகிறது. சில கேள்விகள் கேட்கப்படும் போது அதற்கு இறைவன் அளிக்கும் பதில் கேள்வி கேட்டவருக்கு பாதிப்பை எற்படுத்தி விடக் கூடும் என்ற காரணமும் இதில் கூறப்பட்டுள்ளது.
என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரீ 4621, 4622)
இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து அந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டால் தேவையற்ற மனச்சங்கடத்தை அவர் சந்திப்பார்.
எனவே தான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூட மார்க்க விளக்கம் கேட்பதை இது தடை செய்யவில்லை. வெளிப்படுத்தாமல் இறைவன் மறைத்து வைத்துள்ள சில விஷயங்கள் பற்றியே கேள்வி கேட்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
மார்க்க அறிஞர்கள் அல்லாஹ் மறைத்து வைத்துள்ள விஷயங்களை அல்லாஹ்விடமிருந்து பெற்று அறிவிக்கப் போவதில்லை. அவர்களிடம் ஆதாரம் கேட்பதற்கும், இவ்வசனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
பொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் ஊக்குவிக்கிறது. பார்க்க : 16:43, 21:7.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1 ஆகிய வசனங்களில் காணலாம்.
அதிக விளக்கத்திற்கு 31வது குறிப்பையும் காண்க!
150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode