Sidebar

18
Sat, May
26 New Articles

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

7:155 வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது காளைச் சிற்பத்தை வணங்கியதற்காக அக்குற்றத்தைச் செய்யாத நல்லவர்களை அழைத்து வரச் செய்து அல்லாஹ் தண்டித்தான் என்ற கருத்தைத் தருவது போல் உள்ளது.

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகின்ற இறைவனின் நியதியாகும். (பார்க்க: குறிப்பு 265)

உலக மக்களிடமும் கூட இந்த நீதி தான் நடைமுறையில் உள்ளது. யாரோ செய்த பாவத்துக்காக வேறு யாரையோ இறைவன் எப்படித் தண்டிப்பான் என்ற கேள்வி இதில் எழுகின்றது.

எனவே இறைவனின் இந்த நீதிக்கு ஏற்பவே இவ்வசனத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்தில் எழுபது நபர்களைத் தேர்வு செய்ததாக இவ்வசனம் துவங்குகிறது. தேர்வு செய்தல் என்பது சிறந்த பணிகளுக்காகத் தேர்வு செய்வதையே குறிக்கும். தம் சமுதாயத்தில் தகுதியான நல்லவர்களை மூஸா நபியவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

அப்போது தான் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியதாக இங்கே கூறப்படுகிறது. எதற்காக இவ்வாறு பெரும் சப்தம் தாக்கியது என்று இங்கே கூறப்படவில்லை.

ஆனால் வேறு வசனங்களை ஆராயும் போது இறைவனை நேரில் காண வேண்டும் என்று அவர்கள் கோரியதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்ததாக 2:55, 4:153 வசனங்கள் கூறுகின்றன.

பொதுவாக இறைவனைக் காண வேண்டும் என்று கேட்டவர்களை இப்படித் தாக்குவது தான் இறைவனின் நியதியாகவும் இருந்தது. மூஸா நபி கூட இறைவனைக் காண வேண்டும் என்று கேட்டு விட்டு மூர்ச்சித்து விழுந்தார் என்று 7:143 வசனம் கூறுகிறது.

எனவே இவர்கள் தாக்கப்பட்டது இவர்கள் வைத்த தவறான கோரிக்கைக்காகவே தவிர மற்றவர்கள் சிலையை வணங்கியதற்காக அல்ல.

மேலும் 4:153 வசனத்தில் பெரும் சப்தம் தாக்கிய பிறகு தான் காளை மாட்டை வணங்கிய குற்றத்தைச் செய்தனர் என்று கூறப்படுகிறது. "அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. பின்னர் காளைமாட்டை வணங்கினார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

"எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா'' என்று மூஸா நபி கேட்டதை அடிப்படையாக வைத்துத் தான் காளைமாட்டை வணங்கியதற்காக வணங்காத நன்மக்களை இறைவன் தண்டித்தான் என்ற முடிவுக்குப் பல விரிவுரையாளர்கள் வந்துள்ளனர்.

ஒருவர் செயலுக்காக மற்றவரை அழிக்க மாட்டான் என்ற வசனங்களுக்கு இது எதிராக அமைந்துள்ளதை அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இறைவனைக் காட்டுமாறு அவர்களில் சிலர் மட்டும் வாயால் கேட்டனர்; மற்றவர்கள் அவ்வாறு கேட்கவில்லை. ஆயினும் உள்ளூர அவர்களும் அதை விரும்பினார்கள். எனவே அனைவரையும் பெரும் சப்தத்தால் இறைவன் தாக்கினான். வெளிப்படையாகச் சிலர் மட்டும் இவ்வாறு கூறியது தான் மூஸா நபிக்குத் தெரியும் என்பதால் தான் மூஸா நபி இப்படிக் கேட்டார்கள் என்று புரிந்து கொண்டால் அனைத்து வசனங்களும் ஒன்றுடன் ஒன்று அழகாகப் பொருந்திப் போகின்றன.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account