Sidebar

18
Wed, Sep
1 New Articles

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல்

இவ்வசனங்கள் (2:102, 5:110, 6:7, 7:109- 120, 10:2, 10:76,77, 10:81, 11:7, 15:15, 17:47, 17:101, 20:63-73, 21:3, 25:8, 26:34,35, 26:45,46, 26:153, 28:36, 28:48, 34:43, 37:15, 38:4, 43:30, 43:49, 46:7, 51:39, 51:52, 52:15, 54:2, 61:6, 74:24) பில்லி சூனியம் பற்றி பேசுகின்றன.

சூனியம் என்பது மக்களை ஏமாற்றும் பித்தலாட்டமா? அல்லது மெய்யாக சூனியத்தின் மூலம் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியுமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

இதில் சரியான கருத்து எது என்பதை 28, 285 ஆகிய குறிப்புகளில் விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளாக இருந்த யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ததாகவும், அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அதனை ஆதாரமாகக் கொண்டு சூனியத்தால் மற்றவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று அதிகமான முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் மனநோயாளியாக ஆனார்கள் என்று சொல்லும் ஹதீஸ்கள் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவை திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக ஆகாது. மாறாக அவை கட்டுக்கதைகள் என்றே நாம் முடிவு செய்ய வேண்டும்.

ஹதீஸ்களை அணுகும் முறை

இதை அறிவதற்கு முன்னர், திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள ஹதீஸ்களை நாம் எவ்வாறு அணுகுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களை நாம் மார்க்க ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் ஒட்டு மொத்த திருக்குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருந்தால், எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருந்தால் அப்போது அதை ஏற்கக் கூடாது. அந்தச் செய்திக்கும், நபிகள் நாயகத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.

திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்த செய்திகளை நம்பும் போது திருக்குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள் என்று 16:44 வசனம் கூறுகிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக, அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.

நபிகள் நாயகத்தின் சொற்களும், செயல்களும் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக இருக்குமே தவிர திருக்குர்ஆனுக்கு எதிராக இருக்காது என்பதே இதற்குக் காரணம்.

இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித் தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி "இது என் இறைவனிடமிருந்து வந்தது'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். திருக்குர்ஆனை எழுத்து வடிவிலும் பதிவு செய்தனர். பலர் மனனமும் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குர்ஆனைப் போல் ஹதீஸ்களை நபித்தோழர்கள் எழுத்தில் பதிவு செய்யவில்லை.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு நம்பகமானவர்களாக இருந்தாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் "இது தான் குர்ஆன்" என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் உள்ள அனைவரும் இது போல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

எனவே திருக்குர்ஆன் விஷயத்தில் கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.

நபித்தோழர்களின் நம்பகத் தன்மை அடிப்படையில் அவற்றை நாம் ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும் போது "இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது" என்று முடிவு செய்து திருக்குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நபித்தோழர்கள் அறைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல் : அஹ்மத் 15478

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.

எந்தச் செய்தியைக் கேட்கும் போது இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அது போன்ற செய்திகளைச் சொல்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள். எந்தச் செய்தியைச் செவியுறும் போது தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சி அதை வெறுக்குமோ, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதது; அவர்கள் செய்யாதது என்ற சரியான நிலைபாட்டை நபியவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள்.

அறிவிப்பாளர்களை ஆய்வு செய்வது எவ்வளவு அவசியமோ அதை விட ஹதீஸின் கருத்து சரியாக உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

திருக்குர்ஆனில் முரண்பாடுகளும் இருக்காது, தவறும் இருக்காது என்று 41:40-42 வசனங்கள் சொல்கின்றன.

எனவே திருக்குர்ஆனில் முரண்பாடும், தவறும் இருக்கிறது என்ற வகையில் நமது நம்பிக்கை இருக்கக் கூடாது.

திருக்குர்ஆனில் தவறு இருக்கிறதென்று ஒரு ஹதீஸ் வருமானால் அது ஹதீஸ் கிடையாது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டும். அவர்கள் பெயரால் தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எண்ண வேண்டும்.

குர்ஆனுக்கு முரணாக உள்ளவை ஹதீஸ்கள் அல்ல என்று நாம் மறுக்கும் போது அது ஹதீஸ்களை மறுப்பது போல் சிலர் சித்தரிக்கின்றனர். இப்படிச் சித்தரிக்கும் இவர்கள் ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் போது அதில் பலமானதை எடுத்துக் கொண்டு பலமற்றதை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

அது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். அதில் மூவர் ஒரு விதமாகவும், இருவர் அதற்கு முரணாகவும் அறிவித்தால், ஐவரும் நம்பகத் தன்மையில் சமமானவர்களாக இருந்தால் மூவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இருவர் சொன்னதை நிராகரிக்க வேண்டும். இது ஷாத் எனப்படும்.

இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அதை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

மூவர் சொன்னதற்கு மாற்றமாக இருவர் சொன்னால் அதை உரசிப் பார்த்து உறுதியானதைத் தான் ஏற்பார்களாம். பல்லாயிரக் கணக்கான நபித்தோழர்கள் அல்லாஹ்வின் வேதம் என்று அறிவித்ததற்கு மாற்றமாக ஒருவர் அறிவித்தால் திருக்குர்ஆனை ஓரம் கட்டிவிட்டு அதற்கு முரணாக உள்ளதை ஏற்றுக் கொள்வார்களாம்! ஷைத்தான் இவர்களுக்கு எப்படி வழிகேட்டை ஆழகாக்கிக் காட்டுகிறான் என்று பாருங்கள்.

அல்லாஹ்வின் வேதத்துக்கு இவர்களிடம் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

எனவே திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ள சூனியம் சம்மந்தப்பட்ட ஹதீஸை நாம் சான்றாக ஏற்கக் கூடாது. ஏற்றால் திருக்குர்ஆனை மறுத்த குற்றவாளிகளாகி விடுவோம்.

இது போல் அமைந்த சில ஹதீஸ்களை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.

புகாரீயில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரீ 3359

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள் என்று மட்டும் ஹதீஸ் இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தக் கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும். இது எந்த வசனத்துக்கும் எதிரானது அல்ல.

இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தக் காரணம் சரியா என்று திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

சிந்திக்கும் போது இது திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கும், இஸ்லாமின்  அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணாக அமைந்துள்ளதை நாம் அறியலாம்.

சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். ஸுலைமான் நபியவர்களுக்கு ஹுத் ஹுத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் 27:20 வசனம் கூறுகிறது.

ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராகக் களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்தை 3 : 81, 13:15, 22:18 ஆகிய வசனங்களில் காணலாம்.

இவ்வசனங்களுக்கு எதிராக பல்லி அல்லாஹ்வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இப்ராஹீம் நபி அவர்கள் ஏகத்துவக் கொள்கையைச் சொன்னார்கள். இதற்காகவே அவர்கள் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள். பல்லி இதில் சந்தோஷம் அடைந்து இப்ராஹீம் நபிக்கு எதிராக தன் பங்குக்கு நெருப்பை ஊதி விட்டது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.

இதை நம்பினால் மனிதனல்லாத உயிரினங்களில் முஸ்லிமான உயிரினம், முஸ்லிமல்லாத உயிரினம் உள்ளது என்று நாம் நம்பியாக வேண்டும். அவ்வாறு நம்புவது மேற்கண்ட வசனங்களை மறுப்பதாக அமையும்.

இன்னொரு இஸ்லாமிய அடிப்படைக்கும் முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாமின்  அடிப்படையாகும். இதை 6 : 164, 17:15, 35:18, 39:7, 53:36, ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பது தான் இஸ்லாமையும், கிறித்தவ மதத்தையும் வேறுபடுத்திக் காட்டும் முக்கியக் கொள்கையாகும்.

முதல் மனிதர் ஆதம் பாவம் செய்ததால் அனைவரும் பாவியாகப் பிறக்கிறார்கள் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. ஆதம் பாவம் செய்தால் அவரின் சந்ததிகள் எப்படி அந்தப் பாவத்தைச் சுமப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் கேள்வி எழுப்புகிறோம்.

எல்லோரும் பாவிகளாகப் பிறக்கின்றனர். இந்தப் பிறவிப் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன்னைப் பலி கொடுத்து நிவாரணம் தந்தார் என்பது கிறித்தவர்களின் மற்றொரு நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு எதிராகவும் மேற்கண்ட வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் கேள்விகளை எழுப்புகிறோம்.

இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதியது என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

இது உண்மையாக இருந்தால் எந்தப் பல்லி அவ்வாறு ஊதியதோ அந்தப் பல்லியைத் தானே கொல்ல வேண்டும். அந்தப் பல்லி செத்துப் போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் அதன் வழித்தோன்றல்களான பல்லிகளைக் கொல்ல இந்தக் காரணம் பொருந்துமா?

மேலும் இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் போடும் போது உலகத்தில் உள்ள பல்லிகள் எல்லாம் அந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. அந்தப் பல்லிகளையும் அதன் வழித்தோன்றல்களையும் ஏன் கொல்ல வேண்டும்?

திருக்குர்ஆனுக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பேசியிருப்பார்களா? சாதாரண மனிதன் கூட ஒருவர் செய்த தவறுக்காக மற்றவரைத் தண்டிக்க மாட்டான் எனும் போது அறிவின் சிகரமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா?

எனவே பல்லியைக் கொல்லச் சொல்லும் காரணம் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதாலும், உண்மைக்கு எதிராக இருப்பதாலும் இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு நாம் வந்தாக வேண்டும்.

இது எந்த நூலில் இடம்பெற்று இருந்தாலும், எத்தனை நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இந்த முடிவுக்குத் தான் நாம் வர வேண்டும். அப்படி வர மறுத்தால் மேலே நாம் எடுத்துக் காட்டிய எல்லா வசனங்களையும், இஸ்லாமின்  அடிப்படையையும் மறுத்தவர்களாக நேரும். எந்த மனிதனும் முரண்பட்ட இரண்டை நம்ப முடியாது.

இது தான் ஹதீஸ்களைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்.

முஹம்மத் பின் ஸியாத் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும், மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 2321

ஏர் கலப்பை இருக்கும் வீட்டுக்கு இழிவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக விவசாயம் தான் மனித வாழ்வின் உயிர் நாடி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். முஸ்லிம்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாட்டில் இந்தச் செய்தியை நம்பி ஏர் கலப்பையைத் தூக்கி எறிந்து, அனைவரும் விவசாயத்தைக் கைவிட்டால் அந்த நாடு என்ன கதிக்கு ஆளாகும்?

உலக மக்களை அழித்து நாசமாக்கும் ஒரு வழிகாட்டுதலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா?

ஏற்றுமதியும், இறக்குமதியும் எளிதாகி விட்ட இந்தக் காலத்தில் கூட விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு எல்லா உணவுகளையும் ஒரு நாடு இறக்குமதி செய்தால் அந்த நாடு அழிந்து விடும். ஏற்றுமதியும், இறக்குமதியும் சிரமமாக இருந்த காலத்தில் விவசாயத்தைக் கைவிட்டால் இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மிகத் தலைவராக மட்டுமில்லாமல் நாட்டை ஆட்சி செய்த தலைவராக இருந்துள்ள போது விவசாயத்திற்கு எதிராக இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்திருப்பார்களா?

திருக்குர்ஆன் விவசாயம் குறித்து அதிகமாகப் பேசுகிறது. உதாரணத்துக்கு கீழ்க்காணும் வசனங்களைக் காணுங்கள்!

2:22, 2:164, 6:99, 6:141, 7:57, 12:47, 13:4, 14:24, 14:32, 15:19, 16:11, 16:65, 18:32, 20:53,54, 22:5, 22:63, 23:20, 26:7, 27:60, 29:63, 30:24, 31:10, 32:27, 35:27, 36:36, 39:21, 41:39, 43:11, 45:5, 48:29, 50:7, 50:9, 56:64, 78:14,15,16, 80:27-32

இவ்வசனங்களில் விவசாயத்தின் சிறப்பையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், அது ஒரு பாக்கியம் என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் வேதத்திற்கு விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வசனங்களுக்கு மாற்றமாக விவசாயக் கருவிகளைப் பழிப்பார்களா? என்று சிந்தித்தால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விவசாயத்தைச் சிறப்பித்து சொன்னதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. உதாரணமாகச் சில ஹதீஸ்களைக் காணுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

நூல் : புகாரீ 2320

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்சை மரங்களைப் பங்கிட்டு விடுங்கள் என்றனர். அதற்கு நபிகளார், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கின்றோம் என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 2325

கலப்பையைப் பழிக்கும் ஹதீஸ் மனித குலத்தை அழித்தொழிக்க வழிகாட்டுவதாக இருப்பதாலும், ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல போதனைகளுக்கு முரணாக இருப்பதாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் ஒருவர் மேற்கண்ட ஹதீஸை நம்பினால் அல்லாஹ்வின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் முரண்பட்ட இரண்டை யாராலும் நம்ப முடியாது.

மற்றொரு ஹதீஸைக் காணுங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக் கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5379

முஸ்லிம் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் இந்தச் செய்தியில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொன்றைப் படைத்து மொத்தம் ஏழு நாட்களில் அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்ததாக உள்ளது.

ஆனால் திருக்குர்ஆனின் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 50:38, 57:4 ஆகிய வசனங்களில் உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறி இருக்கும் போது மேற்கண்ட ஹதீஸ் ஏழு நாட்களில் இவ்வுலகம் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

அது மட்டுமின்றி அதில் சொல்லப்படும் விபரங்களும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக அமைந்துள்ளன.

எனவே இந்த ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதுவதால் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி இருக்க மாட்டார்கள்; இது முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று நாம் முடிவுக்கு வர வேண்டும்.

நாம் மட்டும் தான் இப்படிச் சொல்கிறோம் என்று கருதக் கூடாது. தலை சிறந்த இஸ்லாமிய அறிஞரான இப்னு தைமியா அவர்களும் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று கூறுகிறார்கள்.

படைப்பின் துவக்கம் சனிக்கிழமையாகவும், படைப்பின் முடிவு வெள்ளிக்கிழமையாகவும் இருந்தால் ஏழு நாட்களிலும் படைத்தல் நிகழ்ந்துள்ளது என்று ஆகிறது. இது திருக்குர்ஆன் கூறுவதற்கு முரணாக அமைந்துள்ளது. இது அல்லாத நுணுக்கமான குறைபாடும் இதில் உள்ளதாக ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளனர்.

ஆதாரம்: இப்னு தைமியா அவர்களின் ஃபதாவா எனும் நூல்.

ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்று கூறும் திருக்குர்ஆன் வசனங்களை மறுத்தால் தான் ஏழு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியும்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்று மறுக்கின்றோம்.

இது போல் அமைந்த இன்னொரு ஹதீஸைக் காணுங்கள்.

7001 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் மணைவியாவார். ஒரு நாள் (பகலில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

7002 தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தமது தலையைக் கீழே வைத்து (உறங்கி) விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடியே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.

நூல் : புகாரீ 7001, 7002

இந்த ஹதீஸ் சொல்லும் செய்தி என்ன?

இரத்த சம்மந்தமான உறவோ, பால்குடி உறவோ இல்லாத அந்நியப் பெண் வீட்டுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள் என்று இச்செய்தி கூறுகிறது. அதுவும் அடிக்கடி செல்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. சென்றது மட்டுமில்லாமல் அந்தப் பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்ததாகவும், ஒருவரை ஒருவர் தொடும் அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளதாகவும், அங்கேயே படுத்து உறங்கியதாகவும் இச்செய்தியில் கூறப்படுகிறது. அவர்கள் திடீரென விழித்து சிரித்தபோதெல்லாம் அந்தப் பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளார் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.

இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து இருப்பார்களா? அவர்கள் அன்னியப் பெண்கள் விஷயத்தில் எந்த அளவு விலகி இருப்பார்கள் என்பது ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) உறுதிமொழி வாங்கும் போது அவர்களின் கைகளைப் பிடித்து உறுதி மொழி வாங்குவார்கள். ஆனால் பெண்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி வாங்கும் போது பெண்களின் கையைத் தொடமாட்டார்கள். (பார்க்க : புகாரீ 7214)

எந்த ஆணும் அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. கணவனின் சகோதரன் போன்ற உறவினருடன் கூட எந்தப் பெண்ணும் தனித்து இருக்கக் கூடாது என்று கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பார்க்க புகாரீ 5232) அந்தக் கட்டளையை தாமே மீறி இருப்பார்களா?

திருக்குர்ஆன் கற்பிக்கும் ஒழுக்க வாழ்வுக்கான கட்டளைகளையும், விதிகளையும் நபியவர்களே மீறியுள்ளார்கள் என்ற கருத்தும் இதனால் ஏற்படுகிறது.

அன்னியப் பெண்கள் முன்னால் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடும் மார்க்கத்தில் (பார்க்க : 24:30) அன்னியப் பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நெருக்கமாகவும், அந்நியப் பெண் வீட்டில் அந்தப் பெண் முன்னிலையில் நபிகள் நாயகம் (ஸல்) படுத்து உறங்கி இருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறை கூறி இஸ்லாமின்  வளர்ச்சியைத் தடுக்க யூதர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போல் நடந்து இருந்தால் இதை வைத்தே யூதர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்பெயரைக் கெடுத்து இஸ்லாமின்  வளர்ச்சியைத் தடுத்து இருப்பார்கள்.

இஸ்லாமின் எந்த ஒரு எதிரியும் இது குறித்து விமர்சனம் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.

அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைக் கண்டு தான் அன்றைய மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள்.

'இவரை முழுமையாக நம்பலாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாமை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர்.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16

இறைத்தூதராக ஆவதற்கு முன்னர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆன பின்னர் அதைவிட பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஆனால் மேற்கண்ட செய்தி இந்த அடிப்படையைத் தகர்த்து சுக்கு நூறாக்கி விடுகிறது.

அறிவிப்பாளர்கள் சரியாகத்தானே இருக்கின்றார்கள் என்று கூறி இதற்கும் முட்டுக் கொடுக்கும் அறிஞர்கள் உள்ளனர். அறிவிப்பாளர் நல்லவர் என்று பார்க்கிறார்களே தவிர அல்லாஹ்வின் தூதருடைய கன்னியத்துக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் என்று 68:4 வசனத்தில் அல்லாஹ் நற்சான்று கொடுக்கிறான். இந்தச் செய்தியில் சொல்லப்படுவது மகத்தான நற்குணம் ஆகுமா?

இது போன்ற செய்தியை நம்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பழி சுமத்தியது போல் ஆகுமா? ஆகாதா? அல்லாஹ்வுடைய தூதர் இப்படி நடந்து கொள்வார்களா?

இது புகாரீயில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இதை நம்பித் தான் ஆக வேண்டும் என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் தமது கூற்றில் உண்மையாளர்களாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதால் அவர்களைப் பின்பற்றி எல்லா முஸ்லிம்களும் இப்படி அந்நியப் பெண்கள் வீட்டில் போய் தங்கி நெருக்கமாக இருக்கலாம் என்று இவர்கள் மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? அளிக்க மாட்டார்கள்.

இவர்களின் நாவு தான் இதை நம்ப வேண்டும் என்று சொல்கிறது. மனது மறுக்கத் தான் செய்கிறது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்து இன்னொரு செய்தியைப் பாருங்கள்.

பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) திருக்குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 2876

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ஒரு வசனம் திருக்குர்ஆனில் இருந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இந்தச் செய்தி கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை திருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் இப்போதும் அந்த வசனம் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை மாற்றுவதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாகத் தான் அல்லாஹ் மாற்றுவான். அவர்கள் மரணித்த பின்னர் எந்த வசனத்தையும் மாற்ற முடியாது.

இப்போதுள்ள எந்த ஒரு திருக்குர்ஆன் பிரதியிலும், அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் உஸ்மான் (ரலி) அவர்களின் பழங்காலப் பிரதியிலும் இது போன்ற வசனம் கிடையாது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம் என்று அல்லாஹ் 15:9 வசனத்தில் கூறுகிறான்.

திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்று இருக்கும் போது திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தைத் தரும் இந்தச் செய்தி கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும். இந்தச் செய்தியை நம்பினால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று நம்புவதாக ஆகும்.

எனவே இந்தச் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திருக்குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தைப் பின்னர் யாரோ மாற்றி விட்டார்கள் என்ற கருத்தைத் தருவதால் இந்தச் செய்தி உண்மையாக இருக்க முடியாது. இது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும்.

இது தான் ஹதீஸ்களைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் ஒரு வானவர் இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்) ஸுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே ஸுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் அரை மனிதனைத் தான் பெற்றெடுத்தார்.

நூல் : புகாரீ : 5242

ஒரே இரவில் நூறு மனைவியிடத்தில் சேருவதற்கு சக்தி உள்ளதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.

ஈமானைப் பாதிக்கும் அம்சத்தைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

இது உண்மையாக இருந்தால் ஸுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த பல மறைவான விஷயங்களைக் கூறியுள்ளார்கள் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

ஒரு இரவில் அவர் உடலுறவு கொண்ட நூறு பேரும் கருத்தரிப்பார்கள்;

நூறு பிள்ளைகளைப் பெற்றெடுப்பார்கள்;

அந்த நூறு பேரும் ஆண் பிள்ளைகளாக இருப்பார்கள்;

நூறு பேரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்;

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வாலிப வயதுக்கு முன் மரணிக்க மாட்டார்கள்;

அனைவரும் நல்லடியார்களாக இருப்பார்கள்;

அவர்கள் வீரர்களாக இருப்பார்கள்

என்று மறைவான பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

இத்தனை மறைவான விஷயங்களையும் அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இது போன்ற விஷயங்களை சாதாரண ஈமான் உள்ளவரே பேசுவதற்கு அச்சமடைவார்.

இன்று நான் என் மனைவிடம் சேரப் போகிறேன். அவர் ஆண் குழந்தையைப் பெறுவார், அவர் இளம் வயதை அடைந்து நல்லடியாராகவும் இருப்பார் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாமா? நிச்சயம் சொல்லக் கூடாது. இதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர்.

இந்தச் சாதாரண உண்மை ஸுலைமான் நபிக்குத் தெரியாமல் இருக்குமா? ஈமானைப் பாதிக்கும் இது போன்ற சொல்லை அவர்கள் சொல்லி இருக்கவே மாட்டார்கள்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 31 : 34

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். கருவறையில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரீ 4697

கருவறையில் உள்ளவற்றை அல்லாஹ்வைத் தவிர யாராலும் அறிய முடியாது என்ற இஸ்லாமின்  அடிப்படைக் கொள்கைக்கு முரணாக ஒரு நபி சொல்ல முடியுமா?

இந்தச் செய்தி ஸுலைமான் நபியின் பெயரால் சொல்லப்பட்டிருந்தாலும், இது ஸுலைமான் நபி சொல்லியிருக்க முடியாது என்று தான் உண்மை முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

அவர்கள் இறைத்தூதர் என்பதால் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து இருக்கலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து இப்படிச் சொல்லி இருந்தால் அவர்கள் கூறியவாறு நூறு மனைவியரும் தலா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் அவர்கள் சொல்லவில்லை என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் இருக்கும் போது இது போல் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லி இருக்க மாட்டார்கள். இது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும்.

இன்னொரு செய்தியைப் பாருங்கள்!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உயிரை எடுத்துச் செல்லும் வானவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். அவரது கரம் மூடுகின்ற ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்) எனக் கூறினான். (வானவர் மூஸா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். மரணம் தான் என்று இறைவன் பதிலளித்தான். மூஸா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

நூல் : புகாரீ 3407

உயிரைக் கைப்பற்றும் வானவர் தன் கடமையைச் செய்ய வந்துள்ளார். அப்போது மூஸா நபி அவரது கன்னத்தில் அறைந்திருக்க முடியுமா?

உயிரைக் கைப்பற்றும் வானவரை அல்லாஹ் தான் அனுப்பியுள்ளான் என்பது மூஸா நபிக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அவர் வானவர் என்றும், அல்லாஹ் தான் அவரை அனுப்பியுள்ளான் என்றும் தெரிந்து கொண்டு அவரை மூஸா நபி கன்னத்தில் அறைந்தார் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருக்க மாட்டார்கள்.

இது அல்லாஹ்வுக்கு எதிராகத் தொடுக்கும் யுத்தமாக அமைந்துள்ளது என்று பளிச்சென்று தெரிகின்றது.

மூஸா நபிக்கு மரணிக்க விருப்பம் இல்லாமல் இருந்து இன்னும் சிறிது காலம் வாழ ஆசைப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் தர வழியுண்டா என்று இறைவனிடம் கேட்டு வருமாறு அவர் வானவரிடம் கூறினால் ஓரளவுக்கு அதை ஏற்கலாம். முகத்தில் அறைந்து விரட்டினார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?

வானவரின் அசாத்திய பலத்துக்கு முன்னால் மூஸா நபியின் பலம் ஒன்றுமில்லை. இவ்வாறிருக்க எப்படி அறைந்திருக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

அப்படியே மூஸா நபி அறைந்திருந்தாலும் வானவர் தன் கடமையைச் செய்யாமல் தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா?

வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்துபவர்கள் என்றும், அதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள் என்றும், அல்லாஹ்வின் எந்தக் கட்டளையையும் அவர்கள் மீற மாட்டார்கள் என்றும் 6:61, 21:27, 16:50, 66:6 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இத்தகைய தன்மை பெற்ற வானவர்கள் அல்லாஹ் சொன்னதைத் தான் செய்வார்களே தவிர அடிவாங்கிக் கொண்டு திரும்ப மாட்டார்கள் என்ற சாதாரண அறிவு இருப்பவர் கூட இதை ஏற்க மாட்டார்.

அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்ப்பை நிராகரித்து அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத்தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.

அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அதிருப்தி அடைந்து கோபப்பட்ட யூனுஸ் நபியின் வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டியிருக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

திருக்குர்ஆன் 21:87,88

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

திருக்குர்ஆன் 68:48,49,50

யூனுஸ் நபியின் சம்பவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டு முகம்மதே மீன் வயிற்றில் இருந்தாரே அவரைப் போன்று நீர் ஆகிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கின்றான்.

தனது பெருமையைப் பாதிக்கும் வகையில் யார் நடந்தாலும் அல்லாஹ் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் கண்ணியத்துக்கு எதிராகப் போர் செய்யும் வகையில் அமைந்த இந்தச் செய்தியையும் சிலர் நியாயப்படுத்த படாதபாடு படுகின்றனர்.

நீ மூஸா நபியிடம் போ! அவர் உன் கன்னத்தில் அறைவார். அதை வாங்கிக் கொண்டு திரும்பி வா என்று அல்லாஹ் சொல்லி அனுப்பி இருக்கலாம் அல்லவா? என்று உளறுகின்றனர்.

இப்படி இருந்தால் உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறுவாரா? நீ சொன்னபடி என்னை அறைந்து விட்டார்; நானும் அறை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் என்றல்லவா சொல்லி இருப்பார்.

மேலும் ஒரு செய்தியைப் பாருங்கள்:

சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது என் கணவர் அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ (சாலிமுக்கு) அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 2878

ஒரு குழந்தைக்கு ஒரு பெண் பாலூட்டினால் அந்தப் பெண் அந்தக் குழந்தைக்கு தாய் என்ற நிலையை அடைந்து விடுவாள். இதன் பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாக ஆனாலும் தனக்கு பாலூட்டியவளுடன் தனிமையில் இருக்கலாம். ஏனெனில் பெற்ற தாயைப் போல் இவளும் தாயாகி விடுவாள் என்ற சட்டம் இஸ்லாமில் உள்ளது.

ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட விஷயம் இந்தச் சட்டத்துக்குள் அடங்குமா என்றால் நிச்சயம் அடங்காது. இதை விரிவாக நாம் பார்ப்போம்.

மூன்று வயதுக் குழந்தைக்கு ஒரு பெண் பாலூட்டினால் அந்தக் குழந்தைக்கு அவள் தாயாக மாட்டாள். இதைப் பின்வரும் ஆதாரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் 2:233

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

திருக்குர்ஆன் 31:14

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

திருக்குர்ஆன் 46:15

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தாரகுத்னீ

மூன்று வயதுக் குழந்தைக்குப் பாலூட்டினால் கூட ஒருத்தி தாயாக ஆக மாட்டாள் என்று மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து தெரிகிறது.

ஆனால் சாலிம் தொடர்பான செய்தியில் பருவ வயதை அடைந்த இளைஞனுக்குப் பாலூட்டுமாறும், அதனால் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வகையில் இது திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ளது.

அடுத்து அன்னியப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்துமாறு அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பெண்களிடம் ஆண்களை ஈர்க்கும் உறுப்புகளில் மார்பகம் தான் முதலிடத்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு இளைஞனின் வாயில் மார்பை வைத்து பாலூட்டுமாறும் அதனால் அந்த இளைஞன் மகன் என்ற உறவாக ஆகிவிடுவான் என்றும் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள்?

இது கேட்கும் போதே அருவருப்பாகவும், அல்லாஹ்வின் தூதருடைய அறிவையும், நாகரிகத்தையும் கேள்விக் குறியாக்கும் வகையிலும் உள்ளது.

இதை நம்ப வேண்டும் என்று சொல்பவர்கள் நாவளவில் தான் நம்பச் சொல்கின்றனர். மனதளவில் அவர்கள் இதை நம்புவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று இவர்கள் நம்பினால் விரும்பக் கூடிய முஸ்லிம்கள் இது போல் செய்து கொள்ளலாம் என்று மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? நிச்சயமாக அளிக்க மாட்டார்கள். அப்படியானால் இவர்களும் இதை நம்பவில்லை என்பதும், நம்புவதாகப் பொய் சொல்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்க சிலர் அற்புதமான விளக்கத்தைத் தருகிறார்கள்.

அதாவது மார்பகத்தில் வாய் வைத்து பால் கொடுக்கச் சொல்லவில்லை. கறந்து கொடுத்து இருப்பார்கள் என்பது தான் அந்த விளக்கம்.

இப்படிச் சொல்வதற்கு அந்த ஹதீஸிலோ, வேறு அறிவிப்புகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.

இதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா என்றால் இதுவும் பொய் தான்.

அன்னிய ஆணுடன் தனித்து இருக்க விரும்பும் எல்லாப் பெண்களும் மார்பகத்தில் இருந்து பால் கறந்து கொடுத்து விட்டு தனிமையில் இருக்கலாம். எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து தனிமையில் இருக்கலாம் என்று மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? அதையும் கொடுக்க மாட்டார்கள். அதாவது இந்த விளக்கத்தை அவர்கள் நம்பாமல் மற்றவர்களை நம்பச் சொல்கின்றனர்.

இவர்கள் ஃபத்வா கொடுக்கா விட்டாலும் ஒரு ஆணும், பெண்ணும் தனிமையில் இருந்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது இப்ப தான் பால் கொடுத்தேன்; இவன் என் மகன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சட்டம் சொல்வார்களா? அதுவும் சொல்ல மாட்டார்கள்.

இவை அனைத்தில் இருந்தும் தப்பிக்க இவர்கள் கண்டுபிடித்த வழி என்ன? இது சாலிமுக்கு மட்டும் உள்ள சட்டம். எல்லோருக்கும் உரியது அல்ல என்பது தான்.

சாலிமுக்கு மட்டும் உரியது என்று இந்த ஹதீஸில் உள்ளதா? இல்லவே இல்லை.

சில சந்தர்ப்பங்களில் சில தனிப்பட்ட நபர்களுக்கு பொதுவிதியில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி விலக்கு அளித்துள்ளனர். ஆனால் அவை ஆபாசத்துக்கும், அசிங்கத்துக்கும் அனுமதி அளிப்பதாக இருக்காது.

ஒருவருக்கு மட்டும் விபச்சாரம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள் என்று சொன்னால் இதை யாராவது ஏற்பார்களா? ஒருவருக்கு மட்டும் அந்நியப் பெண்ணின் மார்பகத்தைப் பார்க்கவும், சுவைக்கவும் அனுமதித்தார்கள் என்பது இது போல் தான் உள்ளது. தனிச்சட்டம் என்பது அசிங்கமான விஷயங்களுக்கு இல்லை.

இதோ இவர்களுக்காகவே அருளப்பட்டது போல் அமைந்த வசனங்களைக் காணுங்கள்!

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 7:28

நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

திருக்குர்ஆன் 16:90

அருவருப்பானவைகளை ஷைத்தான் தான் ஏவுவான் என்று 24:21, 2:169, 2:268 ஆகிய வசனங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

எனவே இது கட்டுக்கதை தானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல.

இந்த விபரங்களை நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் ஹதீஸைத் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். நபிகள் நாயகத்துக்கே சூனியம் வைத்து அவர்களை மனநோயாளியாக ஆக்க முடியும் என்றால் மற்றவர்களுக்கு ஏன் செய்ய முடியாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் நாம் மேலே எடுத்துக் காட்டிய மறுக்கப்பட வேண்டிய பொய்யான ஹதீஸ்களை விட சூனியம் பற்றிய ஹதீஸ் பெரிய அளவில் இஸ்லாமிய அடிப்படையைத் தகர்க்கப் பார்க்கிறது. இதைப் புரிந்து கொள்வதற்காகத் தான் இந்த அடிப்படையை நாம் விளக்கியுள்ளோம்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இஸ்லாமின்  பல அடிப்படைகளை எப்படி தகர்க்கின்றது என்பதை அறிவதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்' எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை; என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

நூல் : புகாரீ 3268

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள்

புகாரீ 5763 வது ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

புகாரீ 5765 வது ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

புகாரீ 5766 வது ஹதீஸில் இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.

புகாரீ 6063 வது ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்று வந்ததாகப் பிரமையூட்டப்பட்ட நிலையில் நீடித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

புகாரீ 6391 வது ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையவர்கள் இதைத் தங்களின் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம்.

யூதன் ஒருவன் செய்த சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. மேற்கண்ட ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறும் வாக்கியங்களைக் கவனமாகப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்றும்

தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றும்

இதில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தான் செய்யாததைச் செய்ததாகச் சொல்லிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல், சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

மனநோய் மட்டுமின்றி உடல் உபாதையும் ஏற்பட்டதாக முதலாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன என்று வானவர்கள் பேசிக் கொண்டதாக இந்த அறிவிப்பில் உள்ளது. (வேதனை என்று மூலத்தில் இருக்க நோய் என்று சிலர் செய்த தமிழாக்கம் தவறானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இது ஏதோ ஒரு நாள் நடந்ததாகச் சொன்னால் அது மனநோய் என்று சொல்ல முடியாது. ஆனால் இது அதிக காலம் நீடித்தது என்று இந்த அறிவிப்புகள் சொல்கின்றன. சில மொழிபயர்ப்பாளர்கள் இந்தக் கருத்துப்படி தமிழாக்கம் செய்யாவிட்டாலும் மூலத்தில் ’கான’ என்ற சொல் உள்ளது. இந்த நிலையில் நீடித்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.

இது எவ்வளவு காலம் நீடித்தது என்று அஹ்மதில் உள்ள பின்வரும் ஹதீஸ் தெளிவாகவும் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது

நூல் : அஹ்மத் 23211

செய்யாததைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதகாலம் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த ஹதீஸ்கள் சொல்வதால் சூனியத்தினால் எதுவும் செய்ய முடியும் என்று வாதிடுகின்றனர்.

இஸ்லாமின்  அடிப்படைகளைப் புறக்கணித்து விட்டு இவர்கள் இந்த ஹதீஸ்களை அணுகியுள்ளதால் தான் இவர்களால் இப்படி வாதிட முடிகின்றது. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை மீறாமல் சிந்தித்தால் இந்த ஹதீஸ் கட்டுக்கதை என்ற முடிவுக்குத் தான் அவர்களும் வருவார்கள்.

ஏனெனில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என நம்பும் போது

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றத்தைச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்பினால் திருக்குர்ஆனின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

திருக்குர்ஆனுடன் முரண்படும் சில ஹதீஸ்களை நாம் துவக்கத்தில் சுட்டிக் காட்டினோம். அந்த ஹதீஸ்களை விட அதிக ஆட்சேபனைக்குரியதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

இது குறித்து விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல்

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. எனவே அது எப்படி என்று பார்ப்போம்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்ட தாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

இதை 36:78, 42:11, 112:4 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும்.

உதாரணமாக நமக்கு கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.

அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.

ஒரு நேரத்தில் ஒருவன் பேசுவதைத் தான் நாம் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். ஆனால் உலகில் உள்ள எழுநூறு கோடி மக்களும் ஒரு நேரத்தில் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கை வைத்தால் அவை அனைத்தையும் அதே நேரத்தில் அல்லாஹ் கேட்பான்.

சமாதிகளை வழிபடுவோர், மகான்கள் என்று தாங்கள் கருதியவர்களை அழைக்கிறார்கள். அவ்லியாவே எங்களுக்கு இதைத் தாரும் என்று பல ஊர்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள். அவரால் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவரது கோரிக்கைகளையும் அவர் அதே நேரத்தில் செவிமடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அவரை அழைக்கிறார்கள். அப்படியானால் அந்த மகான் ஒரு நேரத்தில் எத்தனை பேருடைய அழைப்பையும் கேட்க வல்லவர் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. இது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருவரது அழைப்பை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அவருக்கும், நமக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருந்தால் தான் கேட்க முடியும். அதிக தூரத்தில் இருந்து கொண்டு ஒருவர் பேசுவதை நாம் கேட்க முடியாது.

ஒருவர் பேசுவதை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அந்தப் பேச்சைக் கடத்தக் கூடிய காற்று இருக்க வேண்டும். அல்லது மின் அலைகள் இருக்க வேண்டும். அவர் பேசும் ஒலி குறிப்பிட்ட டெசிபலில் இருக்க வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் நாம் கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு இது போன்ற பலவீனங்கள் இல்லை.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எவ்வளவு குறைந்த சப்தத்தில் அழைத்தாலும் அனைத்தையும் ஒருவர் கேட்பார் என்று நாம் நம்பும் போது, அவருடைய கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறனுக்குச் சமமாக ஆக்கப்படுவதால் இதை இணைகற்பித்தல் என்று சொல்கிறோம்.

பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அதுவும் இணை கற்பித்தலாகும்.

குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.

இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார் என்றும், எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்றும் நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக கருதியதாக ஆகும்.

இஸ்லாமை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ் அல்லாத பல குட்டித் தெய்வங்களை வணங்கி வந்தனர். அதே நேரத்தில் எல்லா ஆற்றலும், அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனாலும் அவர்களை இணைவைத்தவர்கள் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

10:31, 23:84,85, 23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25, 39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள், இஸ்லாமை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள் என்பதையும், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

தமது குட்டித் தெய்வங்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசி எங்களுக்கு உதவுவார்கள் என்பது தான் மக்காவில் இருந்த முஸ்லிமல்லாதவர்களின் நம்பிக்கையாக இருந்தது என்பதை 10:18, 39:3 வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இறைவனின் ஆற்றல் தங்களின் குட்டித் தெய்வங்களுக்கு இல்லை என்று ஒரு புறம் நம்பிக்கொண்டு மற்றொரு புறம் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தக் குட்டித் தெய்வங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணைகற்பித்தல் ஆகும் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு சூனியத்தைப் பற்றி ஆராய்வோம்.

பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு.

அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே, எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.

ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக் கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

ஒருவனை மனநோயாளியாக ஆக்க அல்லாஹ் நினைத்தால் மனநோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மனநோயாளியாக ஆக்க முடியும்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அல்லாஹ் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?

சூனியக்காரன், உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.

இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராகவும் யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி, சிறுநீர் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து, அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.

கணவன் மனைவியைப் பிரிக்க பணம் கொடுத்தால் சூனியக்காரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டே கணவன் மனைவியைப் பிரித்து விடுவான் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர், சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

எனவே லபீத் என்ற யூதன் மந்திர சக்தியால் நபிகள் நாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினான் என்று நம்புவது அவனுக்கு அல்லாஹ்வின் தன்மை உள்ளது என்று சொல்லாமல் சொல்வதாகும். எனவே நபிகள் நாயகத்துக்கு சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் கட்டுக் கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் இந்த நம்பிக்கை இருந்தாலும் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். சில எதிர்வாதங்களையும் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம்.

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

திருக்குர்ஆன் 17:111, 25:2 ஆகிய வசனங்கள் இதைத் தெளிவாகச் சொல்கின்றன.

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

இஸ்லாமை ஏற்காத மக்காவாசிகளும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.

சூனியக்காரன் அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்கிறான் என்ற இந்த வாதமும் இஸ்லாமை ஏற்காத மக்காவாசிகளின் வாதமும் ஒரே மதிரியாகவே உள்ளன.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டு அது இணைகற்பித்தலில் சேராது என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள இது போல் உளறுகிறார்கள்.

சமாதி வழிபாடு நடத்துபவர்கள் இறந்தவர்களை வணங்குகிறார்கள். நாங்கள் மகான்களை அல்லாஹ் என்றா நம்பினோம்? அவர்களுக்குச் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருக்கிறது என்றா சொன்னோம்? இல்லவே இல்லை. அல்லாஹ்விடமிருந்து பெற்றுத் தான் அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். இது எப்படி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் ஆகும்? அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள் தானே தவிர அல்லாஹ் அல்ல என்று கூறி தங்களின் இணைவைப்புக் கொள்கையை நியாயப்படுத்துகிறார்கள்.

சமாதி வழிபாடு செய்வோரின் அதே வாதங்களை சூனியக்காரன் விஷயத்தில் இவர்கள் எடுத்து வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.

இது அப்பட்டமான இணைவைப்பு என்று நாம் கூறும் போது எங்கள் நம்பிக்கைக்கும், இஸ்லாமை ஏற்காத மக்காவாசிகளின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள்.

எங்களின் நம்பிக்கைக்கும், தர்கா வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதால் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக மாட்டோம் என்று மறுமொழி கூறுகிறார்கள்.

அது என்ன வித்தியாசம் என்று அவர்களிடம் கேட்டால் அவ்லியாக்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருப்பதாக அல்லாஹ் சொல்லவில்லை. ஆனால் சூனியக்காரனுக்கு அதிசய ஆற்றல் உள்ளதாக அல்லாஹ்வே 2:102 வசனத்தில் சொல்லி விட்டான் என்பது தான் அந்த வித்தியாசம் என்கிறார்கள்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதை நாங்கள் நம்புகிறோம். அவ்லியாக்களுக்கு அப்படி அற்புத சக்தி வழங்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அற்புத சக்தி உள்ளதாக நம்புகிறார்கள். இரண்டையும் எப்படி ஒப்பிடலாம் என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் வித்தியாசம்.

தன்னைப் போல் செயல்படும் ஆற்றலை அல்லாஹ் அவ்லியாக்களுக்கும் கொடுக்க மாட்டான். நபிமார்களுக்கும் கொடுக்க மாட்டான். சூனியக்காரனுக்கும் கொடுக்க மாட்டான் என்ற பொதுவான அடிப்படைக்கு முரணாக இந்த வாதத்தை வைக்கிறார்கள்.

சூனியக்காரர்களுக்கு சக்தி உள்ளது போல் மேலோட்டமாக தோன்றக் கூடிய வசனம் இருப்பது போல் அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி உள்ளது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றக் கூடிய பல ஆதாரங்கள் தர்கா வழிபாட்டுக்காரர்களிடமும் உள்ளது.

அதை அடிப்படையாகக் கொண்டு அவ்லியாக்களுக்கு அல்லாஹ் அற்புத சக்தியை வழங்கியுள்ளதற்கு ஆதாரம் இருப்பதால் தான் நாங்கள் நம்புகிறோம் என்று தர்கா வழிபாட்டுக்காரர்களும் கூறுகிறார்கள்.

அந்த ஆதாரங்கள் சூனியக்காரனுக்கு முட்டுக் கொடுக்க இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட வலுவாகவும் உள்ளன.

உதாரணமாக,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 6502

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவ்லியாக்களின் கைகள் அல்லாஹ்வின் கைகள் என்றும், அவ்லியாக்களின் கால்கள் அல்லாஹ்வின் கால்கள் என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளதால் அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று தர்கா வழிபாட்டுக் கூட்டம் வாதிடுகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டும் ஆதாரத்தை விட இது வலிமையாக இருக்கிறது.

அவ்லியாக்களுக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் தந்துள்ளான் என்று அல்லாஹ்வே கூறியதால் தான் நாங்கள் இவ்வாறு நம்புகிறோம் என்று கூறுகிறார்களே இதை சூனியத்தை நம்புவோர் ஏற்றுக் கொள்கிறார்களா?

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக திருக்குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

ஆதமுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் பெரியார்கள் காலில் விழலாம் என்று தர்காவாதிகள் வாதிடுகின்றனர். தங்களின் இந்த வாதத்தை நியாயப்படுத்த 2:34, 17:61, 7:11, 18:50, 20:116 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஒட்டுமொத்த திருக்குர்ஆனின் போதனைக்கு முரணில்லாமல் தான் இந்த வசனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை 11வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் 72:26,27, 81:24 வசனங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்கள். ஒட்டுமொத்த திருக்குர்ஆன் போதனைக்கு முரணாக இவ்வசனத்தை விளங்கக் கூடாது என்பதை 104 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களை மறந்து விட்டு அதற்கு முரணாக 2:102 வசனத்துக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும், சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதத்துக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.

2:102 வசனம் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா என்பதை 495 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

தர்காவிற்குச் செல்பவர்கள் கூட இறந்தவரை நல்ல மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ் இவருக்கு அற்புத ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான் என்று சொல்கின்றனர். ஆனால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புபவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கு அல்லாஹ் இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளான் என்று சொல்கின்றனர். இது தர்காவாதிகளின் நம்பிக்கையை விட கேடுகெட்ட நம்பிக்கையாகும்.

எனவே இவர்கள் செய்யும் இந்த அர்த்தமற்ற வாதங்கள் சூனியத்தை நம்புதல் இணைவைத்தல் அல்ல என்று நிறுவுவதற்குச் சிறிதும் உதவாது.

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணைவைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்தச் சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியாது என்பதை 183 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

இவர்கள் மனமறிந்து பொய் சொல்கிறார்கள் என்பது இந்த வாதத்தின் மூலம் தெரிகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டினார்கள்?

யூதன் ஒருவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து அவர்களை முடக்கிப் போட்டான் என்ற செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

சீப்பு, உதிர்ந்த முடி, பேரீச்சம்பாளை ஆகிய பொருட்களில் லபீத் எனும் யூதன் சூனியம் வைத்து தர்வான் எனும் கிணற்றில் புதைத்து வைத்ததாகவும், அந்தக் கிணற்று நீரை இறைத்து அப்பொருட்களை அப்புறப்படுத்திய பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

யூதன் ஜின்களை ஏவிவிட்டு அந்த ஜின்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தாக்கியதால் தான் அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று அந்த ஹதீஸில் இருந்தால் தான் இவர்கள் இவ்வாறு வாதிட முடியும்.

இவர்களே நம்பாத ஒரு காரணத்தைப் புதிதாக கற்பனை செய்து சொல்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவன் சூனியம் வைத்தால் அவன் ஜின்களைப் பற்றி அறிந்துள்ளதால் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்தான் என்று வாதம் செய்ய கொஞ்சமாவது இடமிருக்கும்.

இந்துக்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் இன்னும் பல மதத்தினரும் சூனியம் செய்வதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இஸ்லாமில் இருந்து கொண்டே சூனியத்தை ஆதரிப்பவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். ஜின்களையே அறியாத இவர்கள் எப்படி ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்வார்கள்? இவர்களுக்கு இந்த வாதம் பொருந்தாதே?

முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவன் சூனியம் செய்வதைத் தான் நாங்கள் நம்புகிறோம். ஜின்களை நம்பாத பிற மதத்தவர்களுக்கு ஜின்களைப் பற்றி நம்பிக்கை இல்லாததால் அவர்களால் சூனியம் செய்ய முடியாது என்பது தான் எங்கள் நம்பிக்கை என்று சொல்லப் போகிறார்களா?

அப்படிச் சொல்வார்களானால் யூதன் சூனியம் வைத்தான் என்ற ஹதீஸை இவர்களே மறுத்தவர்களாகி விடுவார்கள்.

இவர்கள் தமது வாதத்தில் பொய்யர்கள் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

ஜின்களை வசப்படுத்தி அவர்களை ஏவி விட்டு அதன் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று வாதிடுவோர் இவ்வாறு கூறும் திருக்குர்ஆன் வசனத்தையோ, ஏற்கத்தக்க நபி மொழியையோ எடுத்துக் காட்டுவதில்லை.

சூனியக்காரன் மனிதனைப் போல் செயல்படாமல் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்தைத் தருவதால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்று நாம் சொல்கிறோம். இதை மறுப்பதற்கு மேலும் சில எதிர்வாதங்களையும் சூனியத்தை நம்புவோர் கூறுகின்றனர்.

நபிமார்கள் அற்புதங்கள் செய்ததாக நீங்களும் நம்புகிறீர்கள். நாங்களும் நம்புகிறோம். நபிமார்கள் செய்த எந்த அற்புதமும் மனிதனின் செயலைப் போல் இருக்கவில்லை. அல்லாஹ்வின் செயலைப் போல் தான் உள்ளது. நபிமார்கள் செய்த அற்புதங்களை நம்பும் போது நபிமார்கள் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்து வருவதால் அற்புதங்களை நம்புவதும் இணை கற்பித்தல் என்று சொல்வீர்களா? என்பது தான் அந்த வாதம்.

இது அறிவீனமான வாதமாகும்.

நபிமார்கள் செய்த அற்புதங்கள் மனிதனின் செயலைப் போன்றவை அல்ல என்பது உண்மை. எந்த மனிதனாலும் அது போல் செய்ய முடியாது என்பதும் உண்மை. ஆனால் நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையில் அவர்கள் செய்தவை அல்ல.

மனிதர்களாக இருந்த நபிமார்களை இறைவனே தனது தூதர்களாக அனுப்பினான் என்று மக்கள் நம்புவதற்கான சான்றுகளாகச் சில அற்புதங்களை அவர்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தினான். அதற்கும் நபிமார்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே எந்த அற்புதத்தையும் நாங்கள் செய்ய முடியும் என்று நபிமார்கள் வாயாலேயே அல்லாஹ் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான். இதைப் பல வசனங்களில் தெளிவுபட அல்லாஹ் கூறி இருக்கிறான்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

13:38, 17:90-93, 40:78, 14:11 ஆகிய வசனங்கள் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

எல்லா நபிமார்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்? நாங்கள் மனிதர்கள் தான். அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் மட்டும் அல்லாஹ் எங்கள் மூலம் அவன் விரும்புகின்ற அற்புத்தை நிகழ்த்துவான். இதில் எங்களின் பங்கு எதுவும் இல்லை என்றே நபிமார்கள் சொன்னார்கள்.

ஆனால் சூனியக்காரர்கள் காசு கொடுத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூனியம் செய்வார்கள் என்று சூனியத்தை நம்புவோர் கூறுகின்றனர்.

அற்புதங்களை நபிமார்கள் சுயமாகச் செய்யவில்லை என்பது குறித்து மேலும் அறிய 269 வது குறிப்பைக் காணவும்.

நபிமார்கள் மூலம் அல்லாஹ் செய்து காட்டிய அற்புதங்களை நம்புவதால் அது இணைகற்பித்தலில் சேரவே சேராது. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இவ்வாறு இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்று அல்லாஹ்வின் அனுமதியோடு தான் சூனியக்காரர்கள் சூனியம் செய்கிறார்களா? இது தான் சூனியத்தை நம்புவோரின் கொள்கையா?

எனவே நபிமார்களின் அற்புதங்களுடன் சூனியத்தையும் ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

மேலும் மூஸா நபி காலத்தில் ஸாமிரி என்பவன் செய்த அற்புதத்தை எடுத்துக் காட்டி இவனது செயலும் இறைவனின் செயலைப் போல் அமைந்துள்ளதே? இது இணை கற்பித்தல் ஆகாதா என்று கேட்கின்றனர்.

இது இணைகற்பித்தலாகாது. ஏனெனில் ஸாமிரி உண்மையில் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை

(இது குறித்து 19வது குறிப்பிலும் 269வது குறிப்பிலும் தெளிவாக விளக்கியுள்ளோம்.)

சூனியக்காரனுக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்களே அது இப்படிப்பட்டதல்ல.

சூனியக்காரன் அவனே திட்டமிடுகிறான்.

அவன் திட்டமிடும் நேரங்களில் எல்லாம் மந்திரம் செய்கிறான்.

எத்தனை தடவை வேண்டுமானாலும் இவ்வாறு செய்கிறான்.

இது அப்பட்டமான இணை வைத்தல் அல்லாமல் வேறு என்ன?

தஜ்ஜால் செய்யப்போகும் செயல்களை எடுத்துக் காட்டி தஜ்ஜாலின் செயலும் அல்லாஹ்வின் செயலைப் போல் உள்ளதே அதை நம்புவதும் இணைவைத்தலா என்று கேட்கின்றனர்.

தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.

அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

தஜ்ஜால் என்பவன் சில அதிசயங்களைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என வாதிடுவான் என்றாலும் இது சூனியக்காரனுக்குச் சக்தி உள்ளதாக நம்புவது போன்றதல்ல.

இந்தக் கேள்விக்கான விளக்கமும் 269வது குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இப்லீஸும், அவனது வழித் தோன்றல்களான ஷைத்தான்களும் மனித உள்ளங்களில் ஊடுறுவி தீய எண்ணங்களைப் போடும் அளவுக்கு ஆற்றல் பெற்றுள்ளனர். அப்படியானால் இப்லீஸும் அல்லாஹ்வைப் போல் செயல்படவல்லவன் என்று ஆகாதா? ஷைத்தானின் ஆற்றலை மறுக்கிறீர்களா எனவும் கேட்கின்றனர்.

இக்கேள்விக்கான விடையும் 269வது குறிப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும்

இஸ்லாமின்  மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவர்களின் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் எவ்வாறு நம்புவது? அவர்களுக்கும் ஒரு அற்புதம் வேண்டுமே என்ற கேள்விக்கு அந்த அற்புதம் திருக்குர்ஆன் தான் என்று இஸ்லாம் விடையளிக்கிறது.

"ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 4981, 7274

இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் வந்தது என்பதை திருக்குர்ஆனே நிரூபிக்கின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது நிரூபணமானால் அதனைக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதும் நிரூபணமாகிவிடும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் திருக்குர்ஆன் சொல்லி அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கின்றது.

திருக்குர்ஆன் ஒரு அற்புதம் தான் என்பதை ஏற்கனவே ஒரு ரமலானில் “தனித்து விளங்கும் இஸ்லாம்“ என்ற தலைப்பில் முழுமையாக நாம் விளக்கியுள்ளோம்.

பார்க்க:

https://onlinepj.in/index.php/videos/videos/series-of-speeches/thaniuthu_vilangum_islam

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அற்புதம் என்று நாம் மெய்யாக நம்பினால் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

எனெனில் சந்தேகம் இல்லை என்பது தான் திருக்குர்ஆனின் தனித் தன்மை என்று அல்லாஹ் 2:2, 10:37, 32:2 வசனங்களில் அடையாளப்படுத்துகிறான்.

இந்தக் கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.

திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாத பலருக்குச் சந்தேகம் உள்ளதை நாம் அறிகிறோம். எனவே இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை. இதில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சந்தேகத்துக்கும் இஸ்லாமில் விடை உண்டு என்பது தான் இதன் பொருள்.

மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக திருக்குர்ஆனை அல்லாஹ் அருளியுள்ளதால் மனிதர்கள் நம்பும் வகையில் அது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர்கள் வேதம் என்று அதை நம்பி நேர்வழிக்கு வருவார்கள். எனவே தான் இதில் சந்தேகம் இல்லை என்பதை முக்கியமான வாதமாக அல்லாஹ் வைக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் மனநோயாளியாக ஆக்கப்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் சந்தேகத்தைக் கிளப்ப முடியும்.

அந்த ஆறுமாத காலம் எது என்பது குறித்து சூனியத்தை நம்புவோரிடம் ஆதாரம் இல்லாததால் மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் அனைத்தும் அந்த ஆறு மாதங்களில் அருளப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும்.

திருக்குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று சந்தேகம் ஏற்படுவதை அல்லாஹ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதால் தான் இந்தக் குர்ஆனைப் போல் கொண்டு வா என்று அறைகூவல் விடுகிறான். இதை 2:23, 10:38, 11:13, 17:88, 52:33,34 ஆகிய வசனங்களில் காணலாம்.

முஹம்மது சுயமாக இட்டுக்கட்டி விட்டு அல்லாஹ்வின் வேதம் எனக் கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது நீ என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துகொள்! முஸ்லிம்கள் நம்பினால் போதும் என்று அல்லாஹ் நினைக்கவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கத் தக்க அறை கூவலை விட்டு இது இறைவேதமே என நிரூபிக்கிறான்.

அது போல் திருக்குர்ஆனுக்கு எதிராக மற்றொரு சந்தேகத்தையும் அன்றைய எதிரிகள் எழுப்பினார்கள். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மதுக்கு இந்த விஷயங்கள் தெரிய வாய்ப்பு இல்லை; எனவே வெளியூரில் இருந்து ஒருவர் வந்து இவருக்குக் கற்றுக் கொடுத்துச் செல்கிறார். அதைத் தான் முஹம்மது வேதம் எனச் சொல்கிறார் என்று விமர்சனம் செய்து திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாதவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் எனக்கு என்ன என்று அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கும் வகையில் தக்க பதில் கூறுகிறான்.

இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 25:4,5

நம்பிக்கையாளர்களைப் பலப்படுத் திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் (ஜிப்ரீல்) உண்மையுடன் இறக்கினார் என்பதை (முஹம்மதே!) கூறுவீராக! "ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.

திருக்குர்ஆன் 16:102, 103

திருக்குர்ஆனின் உயர்ந்த அரபுமொழி நடையை எடுத்துக் காட்டி, வேறு மொழி பேசுபவன் எப்படி இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டு அல்லாஹ் அவர்களை வாயடைக்கச் செய்தான்.

திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் விஷயங்களுக்கெல்லாம் ஏற்கத்தக்க மறுப்பை அளித்த இறைவன் தனது தூதரை மனநோயாளியாக்கி, சொல்லாததைச் சொல்ல வைத்து அவனே திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்துவானா?

இதைச் சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று தெரிந்துவிடும்.

திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் அருளப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படக் கூடாது என்பதற்கு அல்லாஹ் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களை எழுதப் படிக்கத் தெரியாதவராக ஆக்கி இருப்பதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

எழுதுதலும், படித்தலும் மனிதனுக்கு அவசியம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

அல்லாஹ்விடமிருந்து முதன் முதலில் வந்த வசனங்களே இது பற்றித் தான் பேசுகின்றன.

அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

திருக்குர்ஆன் 96:4,5

எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக

திருக்குர்ஆன் 68:1

எழுத்தின் மூலம் தான் அறிவைப் பெருக்கவும், கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் இயலும் என்று சொல்லும் அல்லாஹ் நபியவர்களுக்கு மட்டும் அந்தப் பாக்கியத்தைக் கொடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை ஆதாரங்களுடன் 312 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக அல்லாஹ் ஏன் ஆக்கினான்? இதற்கான விடையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்கிறான்.

இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 29:47,48,49

படிப்பறிவு மனிதர்களுக்குக் கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத் திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.

அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்களில் பலர் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றும், அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.

"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.

எழுத்தறிவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்தால் திருக்குர்ஆன் இறைவேதம் என்ற நம்பிக்கையை அது பாதிக்கும் என்பதற்காகவே அல்லாஹ் இந்தப் பாக்கியத்தை அவர்களுக்குத் தரவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதங்கள் மனநோய் ஏற்பட்டதாக நாம் நம்பினால் அதை விட அதிக சந்தேகத்தை திருக்குர்ஆனில் அது ஏற்படுத்தும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது; கட்டுக்கதை என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

அதே போன்று திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (4:82) என்றும், சிந்திக்க மாட்டீர்களா? (4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) என்றும், தவறுகள் வராது (41:42), என்றும், இது பாதுகாக்கப்பட்ட வேதம் (15:9, 18:1, 39:28, 41:42, 75:17) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

இவை அனைத்துமே திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், “வீணர்கள் சந்தேகப்படுவார்கள்” என்பதற்கு ஏற்ப அந்த வீணர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.

மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க எதிரிகளுக்கு அல்லாஹ் வாய்ப்பளித்திருக்க மாட்டான்.

மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை மற்றவர்களை விட அதிகமாக அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான்.

திருக்குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை நபியவர்களுக்கு வழங்கி அவர்களைப் பலப்படுத்தியதாக 75:17-19 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது.

பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபி அவர்களுக்குப் பலவீனமான உள்ளம் இருந்ததாகச் சித்தரிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் வராது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் அவர்களைப் பைத்தியம் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் அதைத் தான் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்.

ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் நேரடியாக அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தவிர வேறு கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக ஆறுமாத காலம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் என்பதும், ஆறுமாதம் மனநோயாளியாக இருந்தார்கள் என்று சொல்வதும் ஒரே கருத்தைச் சொல்லும் இருவேறு சொல் வடிவங்கள் தான்.

நபி அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று மக்கள் சொன்னவுடன் அல்லாஹ் கோபப்படுகின்றான்.

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

திருக்குர்ஆன் 52:29

நபி அவர்களை அல்லாஹ் பைத்தியமாக ஆக்க மாட்டான் என்று இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளான்.

எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:2-6

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

இவ்வசனங்களை ஊன்றிக் கவனியுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்காது என்றும், இது அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவரைக் கவனித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிந்தித்துப் பார்க்கட்டும். அவருக்கு எந்த வகையான மன நோயும் இல்லை என்று அறிந்து கொள்வார்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

இவர்களுக்கு மரண அடியாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

"நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் "உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:46

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்கள் மனநோயாளியாக ஆனார்கள் என்று சொல்பவர்களே! ஒவ்வொருவராக வந்து, அல்லது இருவர் இருவராக வந்து முஹம்மது நபியைச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் அவரிடம் எந்த வகையான கேள்வியையும் கேட்டுப் பாருங்கள். செய்யாததைச் செய்தேன் என்கிறாரா? செய்ததைச் செய்யவில்லை என்கிறாரா? அவர் மனநோயாளி போல் பதில் சொல்கிறாரா? மாமேதை போல் பதில் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தால் அவருக்கு எந்த வகையான மன நோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதால் அவர்கள் மன நோயாளியானார்கள் என்ற செய்தி கட்டுக்கதை என்பதற்கு இந்த ஒருவசனமே போதிய ஆதாரமாக உள்ளது.

யூதர்கள் எப்படியாவது இஸ்லாமை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால், அந்த மன நோய் யூதர்களின் மந்திர சக்தியால் ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள்.

இப்படி ஒருவர் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.

இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையோர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாகக் காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர்.

நபியவர்களுக்கு ஏற்பட்ட மன நோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.

சூனியம் வைத்து மன நோயாளியாக ஆக்கினானே அந்த யூதனுக்குக் கூடவா தெரியாமல் போய் விட்டது?

அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா?

இதைக் கூட அறியாத ஞான சூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்படுவது உலகத்தில் வழக்கம். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.

இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டு இருந்தால் அது மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபியைப் பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாமுக்கு வராமல் தடுக்க முயற்சித்திருக்க மாட்டார்களா? இஸ்லாமில் உள்ள மக்களில் சிலராவது மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?

இது போன்று எந்தச் செய்தியும், எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.

திருக்குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். (பார்க்க 15:9)

திருக்குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது திருக்குர்ஆனைப் பாதுகாப்பதாக இறைவன் சொன்னதில் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மாபெரும் அற்புதமாகத் திகழும் திருக்குர்ஆன் மீது எத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் எனக்குக் கவலை இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மனநோயாளியாக ஆனதாகவும் நம்ப முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து அவர்களை மனநோயாளியாக ஆக்கி விட்டார்கள் என்று அறியும் முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமை ஏற்பார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட அற்புத சக்தி பெற்ற யூதர்களிடம் செல்வார்களா?

ஒரு தந்தை தனது சொத்தை ஒரு மகனுக்கு எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மற்ற மகன்கள் தனது தந்தைக்குப் பைத்தியம் பிடித்து இருந்த போது தான் எழுதிக் கொடுத்தார் என்று ஒரு ஆதாரத்தை உருவாக்கி நீதிமன்றம் நம்பும் வகையில் எடுத்து வைத்தால் அந்த மகனுக்கு சொத்தை எழுதி வைத்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்படும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இது தான் சட்டம். முஸ்லிம் நாடுகளிலும் இது தான் சட்டம்.

பைத்தியம் என்ற நிலையை ஒருவர் அடைந்தால் அவரது எல்லா கொடுக்கல் வாங்கலும் செல்லத் தகாததாக ஆகிவிடுகிறது.

சொத்து விஷயங்களில் சரியாக இதைப் புரிந்து வைத்திருக்கும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் மூளையை அடகு வைத்து விட்டு ஏறுக்கு மாறாகச் சிந்திப்பது சரிதானா?

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நான் நம்புவேன். பாதுகாக்கப்படவில்லை என்பதையும் நம்புவேன் என்று ஒருவன் கூறமுடியுமா?

அல்லாஹ்வைப் போல் எவனும் எந்த விஷயத்திலும் செயல்பட முடியாது என்றும் நம்புவேன். அவ்வாறு சூனியக்காரன் மட்டும் செயல்படுவான் என்றும் நம்புவேன் என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

திருக்குர்ஆன் மீது அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பவனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக அளவு மரியாதை வைத்திருப்பவனும் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று எப்படி நம்புவான்?

இப்படி நாம் கேட்கும் போது சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடையோர் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி இருந்திருக்கிறது. மறதியின் காரணமாக திருக்குர்ஆன் வசனங்களை மறந்திருக்க மாட்டார்களா என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படவில்லை என்று சொல்வீர்களா? என்பது தான் அந்த எதிர்க்கேள்வி.

ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதும், சில விஷயங்களை ஒருவர் மறந்து விடுவதும் இவர்களுக்குச் சமமாகத் தெரிகின்றது.

மறதி என்பது இருப்பதைச் சொல்லாமல் விடுவது.

மனநோய் என்பது இல்லாததை இருப்பதாகக் கூறுவதாகும்.

இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று சூனியக் கட்சியினர் கூறுகிறார்கள். வஹீ வராமல் இருந்து வஹீ வந்ததாகச் சொல்லி இருப்பார்கள் என்பது மறதியைப் போன்றதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளிய வசனங்களில் சிலவற்றை அல்லாஹ் மறக்கச் செய்தால் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

2:106 வசனத்தில் எந்த வசனத்தையாவது நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததை அருளுவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி சிலதை மறந்து விட்டால் அவர்கள் மறக்காமல் எதை மக்கள் மத்தியில் வைத்தார்களோ அது தான் திருக்குர்ஆன் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது.

அவர்கள் மக்களிடம் சொல்லாதது திருக்குர்ஆன் அல்ல என்று கூறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை.

மனநோய் என்பது அல்லாஹ் சொல்லாமல் இருந்தும் அல்லாஹ் சொன்னதாகச் சொல்வதாகும். மனநோய் மூலம் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக நபி கூறி இருக்கலாமே என்று கேள்வி கேட்க முடியும்.

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மறதி ஏற்பட்டது என்று கூறினால் இப்போது திருக்குர்ஆனில் உள்ள எந்த வசனத்திலும் சந்தேகம் வராது.

எனவே நபிக்கு மறதி ஏற்பட்டதாகச் சொல்வது திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தாது. நபிக்கு மனநோய் ஏற்பட்டதாகச் சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்ற வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அற்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை

இன்னொரு காரணத்தினாலும் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு இருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தான்?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

17:94, 21:3, 23:33, 23:47, 25:7, 26:154, 26:186, 36:15 ஆகிய வசனங்களில் இதை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.

"மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும்'' என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடையவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாகத் திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இறைத்தூதர்கள் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும் அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் 3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25, 64:6 ஆகிய வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத்தூதர் தன்னை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் அனுப்பப்படுகிறார்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத்தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

"நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத்தூதர் என்று நம்பினோம்; இன்று இவரது எதிரிகள் இவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆற்றல் மிக்கவர்கள்'' என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

இவர் செய்தது, சூனியக்காரன் செய்ததை விட சாதாரணமானதாக உள்ளதால் இவர் இறைத்தூதராக இருக்க முடியாது என்று அன்றைய மக்கள் சொல்லி இருப்பார்கள்.

"இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்' என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாமை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

"எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத்தூதரை வீழ்த்தியதாகக் கூறுவது கட்டுக்கதை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

இறைத்தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்ன போது, அதை ஏற்க மறுத்த எதிரிகள் சொன்ன காரணங்கள் என்ன?

சாப்பிடுகிறீர்கள்,

பருகுகிறீர்கள்,

எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள்,

நீங்கள் சோதிடக்காரர்கள்,

திறமை வாய்ந்த புலவர்கள்,

உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள்

என்று சொன்னார்கள்.

இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபிமார்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதையும், சோதிடக்காரர், புலவர் என்று கூறுவதையும் கடுமையான சொற்களால் மறுக்கிறான்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

17:94, 21:3, 23:33, 23:47, 25:7, 26:154, 26:186, 36:15 ஆகிய வசனங்களில் எங்களைப் போன்ற மனிதர்களாக உள்ள நபிமார்களை எப்படி இறைத்தூதர்கள் என்று நாங்கள் நம்ப முடியும் என மக்கள் கேட்டதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மக்கள் இப்படிக் கூறியதற்கு அல்லாஹ் பதில் கூறும் போது, அவர்களை மனிதர்கள் என்று எப்படிச் சொல்லலாம் என்று கண்டிக்கவில்லை. மாறாக அவர்கள் மனிதர்கள் தான். மனிதர்களைத் தான் தூதர்களாக அனுப்புவோம் என 14:11, 17:93, 21:7,8, ஆகிய வசனங்களில் பதிலளித்தான்.

சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்களாக மக்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கம், நரகம் போன்றவற்றை மக்களுக்குச் சொன்ன போது அது அவர்களின் அறிவுக்கு எட்டாமல் இருந்ததால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார்கள்.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட போதும், நபிமார்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்று சொல்லப்பட்ட போதும் அல்லாஹ் அதைக் கடுமையாக மறுக்கிறான்.

"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது'' என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

"இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம்; அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத்தூதர் சாப்பிடுகிறார்; குடிக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட போது, சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது, அநியாயக்காரர்கள் இப்படிக் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப்பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை இறைவன் மறுக்கிறான்.

"இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?'' என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்குச் சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும், அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்'' என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது என்றும் கூறுகிறான்.

சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது உறுதியாகிறது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஹ்மது (26212)

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை.

ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.

சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்ற ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.

இதே அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர். அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும், (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும் தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால் தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 1038

இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும், எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும் என்றும், அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவர் அல்லாஹ்வை நம்பவில்லை; நட்சத்திரத்தையே நம்பிக்கை கொண்டுள்ளார் என்று ஆகும்.

சூனியத்தை இப்படி ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல முடியாது.

சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக இந்த ஹதீஸ் உள்ளது.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற இந்த வாசகம் திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்

சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது; அது தந்திரமாக ஏமாற்றுவது தான் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் உள்ளவர்கள், தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் வசனங்களை எடுத்துக் காட்டி சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சாதிக்கின்றனர்.

முரண்பட்ட வகையில் அல்லாஹ் பேச மாட்டான் என்று கவனமாக ஆய்வு செய்யும் போது இவர்கள் திருக்குர்ஆனை தவறாகப் புரிந்து கொண்டு வாதிட்டுள்ளனர் என்பதை அறியலாம்.

இது பற்றி 285வது குறிப்பில் விரிவாக விளக்கியுள்ளோம்.

113, 114 ஆகிய அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுப்பதற்காக அருளப்பட்டது என்றும், இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு வசனம் ஓதப்பட்ட போது ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தது என்றும் கூறி சூனியத்தை மெய்யாக்க முயல்வோர் வாதிடுகின்றனர்.

இந்த வாதம் முற்றிலும் தவறானது என்பதை 499 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?

முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுப்பவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்குவோர், சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ற கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் இவ்வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்யட்டும். அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.

ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சூனியத்தை மறுப்பவர்களை முஃதஸிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போட நினைக்கிறனர்.

முஃதஸிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இவர்கள் முஃதஸிலாக்களின் கொள்கை என்னவென்று தெரியாமல் உள்ளனர்.

தப்லீக் ஜமாஅத்திற்கு ஆறு நம்பர் இருப்பதைப் போன்று முஃதஸிலாக்களுக்கு குறிப்பிட்ட அடிப்படையான ஐந்து கொள்கைகள் இருக்கின்றன.

முஃதஸிலா அறிஞர்களில் முக்கிய இடம் வகிக்கும் அபுல் ஹஸன் அல்கய்யாத் கூறுகிறார்:

ஐந்து அடிப்படைகளான தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை), அத்ல் (நீதி), அல்வஃத் வல்வயீத் (வாக்கு மற்றும் எச்சரிக்கை), அல்மன்ஸிலது பைனல் மன்ஸிலதைனீ (இரண்டுக்கும் மத்தியிலான நிலை) அல்அம்ரு பில்மஃரூப் வன்னஹ்யு அனில் முன்கர் (நன்மையை ஏவுதல் தீமையைத் தடுத்தல்) ஆகிய கொள்கைகள் அனைத்தையும் சொல்லாத ஒருவரை முஃதஸிலா என்று சொல்வது தகுதியாகாது. ஒரு மனிதரிடம் இந்த ஐந்தும் பூரணமாக இருந்தால் தான் அவர் முஃதஸிலாக் கொள்கையைச் சார்ந்தவர் ஆவார்.

அல் இன்திஸார் பாகம் 1 பக்கம் 126

இந்த ஐந்து கொள்கைகளின் விளக்கம் இது தான்.

இவர்களின் முதல் கொள்கை தவ்ஹீத். இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையாளன் கிடையாது. அவனைப் போன்று எதுவுமில்லை என்ற கொள்கை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

இறைவனுக்கு உருவம் இல்லை; உருவம் இருப்பதாக நம்புவது படைக்கப்பட்டவைகளுக்கு இறைவனை ஒப்பாக்கிய குற்றமாகும் என்பதையே தவ்ஹீத் என்ற சொல் மூலம் இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதை நாம் ஏற்கவில்லை. இது அறிவீனமான வாதமாகும். அல்லாஹ்வின் படைப்புகளில் உருவமுள்ளவையும் உள்ளன. உருவமற்றவையும் உள்ளன. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொன்னாலும் உருவமற்ற காற்று, மின் ஆற்றல் போன்றவற்றுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கியதாக ஆகும் என்று கூறி இவர்களின் கொள்கையை நாம் மறுக்கிறோம்.

இறைவனுக்கு உருவமுண்டு; ஆனால் அதற்கு உதாரணம் கூறுதலோ ஒப்பீடு காட்டுதலோ கூடாது என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டுள்ளோம். இது குறித்து 488வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

முஃதஸிலாக்களின் இரண்டாவது கொள்கை அத்ல். இதன் நேரடிப் பொருள் நீதி என்பதாகும். ஆனால் முஃதஸிலாக்களிடம் இதன் அர்த்தம் வேறு. அல்லாஹ் நீதி செலுத்துபவன் என்பதற்கு மாற்றமாக உள்ளதால் தக்தீர் எனும் தலைவிதியை நம்பக் கூடாது என்பதைத் தான் நீதி என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.

எல்லாச் செயல்களும் விதிப்படியே நடக்கின்றன என்றால் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிப்பது அநீதியாகிவிடும். அல்லாஹ் நீதியாளன் என்பதற்கு இது எதிராக உள்ளது. தவறு செய்யும் மனிதன் அந்த தவறைச் செய்வதற்கு இறைவன் பொறுப்பாளன் இல்லை என்பது முஃதஸிலாக்களின் வாதம்.

விதியை நம்ப வேண்டும் என்பதையே நாம் கொள்கையாகக் கொண்டுள்ளோம். இது குறித்து 289வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

முஃதஸிலாக்களின் மூன்றாவது கொள்கை அல்வஃது வல்வயீத் என்பதாகும். இதன் நேரடிப் பொருள் வாக்குறுதியும், எச்சரிக்கையும் என்பதாகும். அல்லாஹ் வாக்களித்ததை நிறைவேற்றுவான்; எச்சரிக்கைப்படி தண்டிப்பான். பாவம் செய்தவன் உலகில் வாழும் போதே மன்னிப்புக் கேட்டு திருந்தாவிட்டால் அவனை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்பது இதன் விரிவாக்கம்.

இதனடிப்படையில் பெரும்பாவம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் நிரந்தர நரகில் இருப்பார்கள் என்பது முஃதஸிலாக்களின் நிலைப்பாடாகும்.

நாம் இந்தக் கொள்கையில் இருக்கவில்லை. ஒருவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் எந்தப் பாவம் செய்தாலும் அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான் என்பது தான் நமது கொள்கை. இதை 4:48, 4:116, 5:18, 5:40, 33:24 ஆகிய வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

முஃதஸிலாக்களின் நான்காவது கொள்கை அல்மன்ஸிலது பைனல் மன்ஸிலைதன் என்பதாகும். இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலை என்பது இதன் நேரடிப்பொருள்.

பெரும்பாவங்கள் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல. இறைநம்பிக்கை மற்றும் இறைநிராகரிப்பு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறான் என்பது இதன் கருத்து.

ஒரு முஸ்லிம் பெரும்பாவம் செய்தாலும் அவன் முஃமினாகவே இருக்கிறான். பெரும்பாவம் செய்வதால் அவன் இஸ்லாமை விட்டு வெளியேற மாட்டான் என்று கூறி முஃதஸிலாக்களின் இக்கொள்கையையும் நாம் நிராகரிக்கிறோம்.

முஃதஸிலாக்களின் ஐந்தாவது கொள்கை அல்அம்ரு பில்மஃரூப் வந்நஹ்யு அனில் முன்கர் என்பதாகும். நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பது இதன் நேரடிப் பொருள். ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர் செய்வதைத் தான் முஃதஸிலாக்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் இக் கொள்கையை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால் முஃதஸிலாக்களின் இந்தக் கொள்கைப்படி செயல்படும் கூட்டத்தினர், நம்மை முஃதஸிலாக்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

முஃதஸிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதஸிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதஸிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதஸிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.

இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!

சூனியம் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இது தான். ஹனஃபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இது தான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இது தான். (திருக்குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இது தான். சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத் தான் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.

ஆதாரம் : பத்ஹுல் பாரி

நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதஸிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதஸிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதஸிலாக்கள் என்று சொல்லவில்லை.

அது போல் ஹனஃபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்!

சூனியம் என்பது உண்மை தான் என்பது சூனியம் குறித்த முதல் கருத்தாகும். சூனியம் உண்மையான ஒன்று என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீஃபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீஃபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும் போது நாடியதைப் படைப்பான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதஸிலாக்களும், ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்பிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.

ஆதாரம்: உம்ததுல்காரி

அபூ ஹனீஃபா இமாமும், ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதஸிலாக்களா?

இதே கருத்தை இப்னு கஸீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.

சூனியம் முற்றிலும் உண்மை என்பது முதல் கருத்தாகும். சூனியம் உண்மை என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீஃபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீஃபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார்.

சூனியம் என்பது உண்மையா என்பதிலும் அப்படி ஒன்று உண்டா என்பதிலும், ஒரு பொருளை வேறு பொருளாக சூனியத்தின் மூலம் மாற்ற முடியுமா என்பதிலும் அது முற்றிலும் கற்பனையா என்பதிலும் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முஃதஸிலா பிரிவினரும், ஜஸ்ஸாஸ் என்று அறியப்படும் ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூ பக்ர் ராஸீ அவர்களும், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் பகவீ, அபூ ஜஃபர் இஸ்திர்பாதி ஆகியோரும் சூனியத்தின் அனைத்து வகைகளையும் மறுத்துள்ளனர். சூனியம் என்பது இல்லாததை இருப்பது போல் காட்டுவதும், பொய்த்தோற்றமும் ஆகும். சூனியம் வைக்கப்பட்டவனுக்குள் விஷம் அல்லது புகை போன்றவற்றைச் செலுத்தினாலே தவிர சூனியத்தால் ஒன்று செய்ய முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனஃபி மத்ஹபினரின் கருத்து இது தான் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சூனியக்காரன் ஒரு பொருளின் தன்மையை மாற்ற முடியாது. கைத்தடியைப் பாம்பாக மாற்ற முடியாது. மனிதனைக் கழுதையாக ஆக்க முடியாது என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்: அல்மவ்சூஅத்துல் ஃபிக்ஹிய்யா

பகவி அவர்கள் ஹதீஸ்களை நிலைநாட்டப் பாடுபட்டவர் என்பதால் முஹ்யிஸ் ஸுன்னா (நபிவழியை உயிர்ப்பித்தவர்) என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். சூனியம் சம்மந்தமான செய்திகளை அவர் மறுத்ததால் முஹ்யிஸ் ஸுன்னா என்ற அடைமொழியை நீக்கி முஃதஸிலா பட்டத்தை யாரும் இவருக்குக் கொடுக்கவில்லை.

போலி மார்க்க அறிஞர்களுக்கு சூனியம் என்பது சம்பாதிக்க உதவுவதாலும், சூனியம் வைத்து விடுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த இது உதவுவதாலும் சூனியத்துக்கு தாக்கம் உண்டு என்ற கருத்து அதிக அளவில் சென்றடைந்து விட்டது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹனஃபி மத்ஹபினரே இருந்தும் அவர்கள் சூனியத்தை நம்புகிறார்கள். சூனியம் என்பது கற்பனை என்று அபூஹனீஃபா கூறி இருந்தும் இப்படி நம்புகிறார்கள் என்றால் போலி ஆலிம்கள் சூனியத்திற்கு ஆற்றல் உள்ளது என்று பிரச்சாரம் செய்ததே காரணம்.

சூனியத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் இந்தக் கருத்து குறைவாகவே மக்களிடம் சென்றடைந்துள்ளது.

முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுக்கவில்லை என்று சொல்பவர்களின் வாதங்கள் அனைத்தும் மேலே சொன்ன ஆதாரங்களால் பொய் என நிரூபிக்கப்பட்டு விட்டன.

ஷாஃபி, ஹனஃபி மத்ஹபினர் நடத்தும் அனைத்து அரபி மதரஸாக்களிலும் பட்டம் பெறும் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட நூலாக பைழாவி என்ற தஃப்ஸீர் சொல்லித் தரப்படுகிறது.

இந்த தஃப்ஸீரில் ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும், இவர்கள் பாடம் நடத்தும் இந்த தஃப்ஸீரில் சூனியத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்க்கலாம்.

மூஸா நபி அற்புதம் செய்து காட்டியவுடன் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர் என்று 26:46 வசனம் கூறுகிறது. மூஸா நபி செய்தது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்ததால் ஸஜ்தாவில் விழுந்தனர். சூனியம் என்பது போலித்தோற்றம், முலாம் பூசுதல், அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

இப்படி விரிவுரை எழுதிய பைளாவி முஃதஸிலா கொள்கை உடையவரா? முஃதஸிலா கொள்கை உடையவரின் நூலைத் தான் பட்டப் படிப்புக்கு பாட நூலாக வைத்துள்ளார்களா?

சூனியக்காரர்கள் சூனியம் செய்ததைப் பார்த்த மூஸா நபியவர்கள், நீங்கள் செய்தது சூனியம். அல்லாஹ் அதைத் தோற்கடிப்பான். வீணர்களின் செயலுக்கு அல்லாஹ் வெற்றியளிக்க மாட்டான் என்று கூறியதாக 10:81 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது குழப்பம் ஏற்படுத்துதலும், இல்லாததை இருப்பதாகக் காட்டுதலும் தான் என்பதற்கும் அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கும் இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

இப்படி தப்ஸீர் பைளாவியில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இவரை ஏன் முஃதஸிலா என்று ஒருவரும் சொல்லவில்லை?

மவ்லவி பட்டப்படிப்பில் ஏழாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நூலாக இதைத்தானே படித்தார்கள்? பைளாவியில் ஆதாரம் இல்லாமல் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்கள் பைளாவி தக்க ஆதாரத் துடன் சொன்ன உண்மையை மட்டும் மறுப்பது ஏன்?

அது போல் ஷவ்கானி அவர்கள் தமது ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்!

7:117 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, யஅஃபிகூன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். இச்சொல்லுக்கு பொய்யான புனைதல் என்று பொருள். சூனியக்காரர்கள் செய்த சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்பதால் தான் அல்லாஹ் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அது பொய்யும், புளுகும், புனை சுருட்டும், முலாம் பூசுவதுமாகும். இதனால் தான் சூனியக்காரர்கள் தோற்றனர்.

என்று ஷவ்கானி கூறுகிறார்.

இதே யஅஃபிகூன் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு தப்ரீ அவர்கள் கூறுவதைப் பாருங்கள்!

அவர்கள் பொய்யாகப் புனைந்ததை மூஸா நபி செய்த அற்புதம் விழுங்கியது என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் அவர்கள் செய்தது அறவே உண்மை இல்லாத சூனியமும், கற்பனையுமாகும் என்பதால் தான் இவ்வாறு கூறுகிறான். அதனால் தான் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.

அது போல் இப்னு ஹய்யான் எழுதிய தப்ஸீர் அல்முஹீத் நூலில் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

20:66 வசனத்தில் மக்களின் கண்களை வசப்படுத்தினார்கள் என்பதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் தந்திரங்கள் மூலமாகவும், பொய்த்தோற்றம் ஏற்படுத்தியும் இல்லாததை இருப்பது போல் காட்டினார்கள் என்பது தான். இதனால் தான் மூஸாவுக்கு கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்கள்

அது போல் ரூஹுல் பயான் நூலில் அதன் ஆசிரியர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்.

10:81 வசனத்தில் வீணர்களின் செயலைச் சீராக்க மாட்டான் என்று அல்லாஹ் சொல்வது சூனியத்தில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதற்கும் அது பொய், பித்தலாட்டம் என்பதற்கும் ஆதாரமாகும் என்று காளீ அவர்கள் கூறியுள்ளார்.

அதே ரூஹுல் பயான் நூலில் ஷஃரானி கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர் என்பது சூனியம் என்பதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இது எப்படி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஒரு பொருளை வேறு பொருளாக மெய்யாகவே மாற்றி அவர்கள் சூனியம் செய்திருந்தால் மூஸா நபி கைத்தடியைப் பாம்பாக மாற்றியதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்க மாட்டார்கள். இது சூனியத்தால் செய்ய முடியாத நிஜமான மாற்றம் என்று கருதியதால் தான் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

இப்னு குதாமா அவர்கள் தமது ஷரஹுல் கபீர் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

சூனியம் என்பது முடிச்சுப் போடுதல், சில சொற்கள், சில எழுத்துக்கள், அல்லது ஏதாவது செய்தல் எனப் பல வகைகள் உள்ளன. சூனியம் செய்யப்பட்டவனைத் தொடாமலே அவனது உடலிலோ, அறிவிலோ, உள்ளத்திலோ பாதிப்பை ஏற்படுத்த முடியும். அது மெய்யானது. சூனியத்தின் மூலம் ஒருவனைக் கொல்லலாம். நோயாளியாக ஆக்கலாம். கணவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் ஆக்கலாம். கணவன் மனைவியரைப் பிரிக்கலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்யலாம். ஒருவரை ஒருவர் விரும்பச் செய்யலாம். இது தான் ஷாஃபி இமாமின் கருத்தாகும். ஆனால் ஷாஃபி மத்ஹபின் சில அறிஞர்கள் சூனியம் அறவே உண்மை இல்லை; வெறும் கற்பனை என்று கூறியுள்ளனர். சீறுவது போல் பொய்த்தோற்றம் ஏற்பட்டது என்று அல்லாஹ் கூறுவது தான் இதற்கு ஆதாரம். புகை போன்றவைகளை ஒருவனின் உடலில் செலுத்தினால் அது தீங்கிழைக்கலாம். எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் நோய் ஏற்படுத்துவது, மரணத்தை ஏற்படுத்துவது அறவே சாத்தியம் இல்லை. அப்படி நடந்தால் நபிமார்களின் அற்புதங்கள் தோல்வியாகி விடும். நபிமார்கள் அல்லாதவர்களும் நடைமுறை சாத்தியமற்றதைச் செய்தால் நபிமார்களின் அற்புதம் வீணாகி விடும் என அபூ ஹனீஃபாவின் மாணவர்கள் கூறுகின்றனர்.

முஃதஸிலா கொள்கையை எதிர்த்த மேலும் பல அறிஞர்கள் சூனியம் பித்தலாட்டம் எனக் கூறியுள்ளனர்

மூஸா நபி காலத்து சூனியக்காரர்கள் குறித்த வசனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாகக் கவனித்து சூனியத்தில் அறவே உண்மை இல்லை என்று சொன்னவர்களில் பலர் 2:102 வசனத்துக்கு விளக்கம் சொல்லும் போது தாங்கள் சொன்னதையும், சூனியக்காரர்கள் தொடர்பான எல்லா வசனங்களையும் மறந்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர் என்பது தான் இதில் வேதனையான விஷயம். ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்கள்.

சூனியத்தை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவர் நபித்துவம் பற்றி அறியவில்லை. சூனியத்தை நம்பினால் நபிமார்கள் செய்த அற்புதமும் சூனியத்தின் வகை என்று கருதப்படுவதில் இருந்தும், நபிமார்களும் சூனியக்காரர்களாக இருந்தார்கள் என்று கருதப்படுவதில் இருந்தும் தப்பிக்க முடியாது. 20:69 வசனத்தில் சூனியக்காரன் சூனியம் செய்யும் போது வெற்றி பெறமாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அந்தச் சூனியத்தினால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; யூதப் பெண் சீப்பு, தலைமுடி, பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்ற கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது.

ஆனால் அல்லாஹ் திருக்குர்ஆன் 25:8வது வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறினார்கள் என்று சொல்கிறான். இதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்று கூறியவர்களைப் பொய்யர்களாக்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற செய்தி இஸ்லாமின்  எதிரிகள் இட்டுக்கட்டியதாகும். நபிமார்கள் செய்த அற்புதத்தின் தனித்துவத்தை அழிப்பது இவர்களின் நோக்கம். இவர்களின் நம்பிக்கைப்படி சூனியத்துக்கும், நபிமார்களின் அற்புதங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களின் நம்பிக்கைப்படி சூனியமும், அற்புதமும் ஒரே வகையானதாகவே ஆக்கப்படுகிறது.

நபிமார்களின் அற்புதமும் உண்மை; சூனியக்காரர்கள் செய்த அற்புதமும் உண்மை எனக் கூறுவோரின் முரண்பட்ட நம்பிக்கை நமக்கு வியப்பளிக்கிறது. சூனியம் செய்யும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்று கூறி சூனியக்காரர்களை அல்லாஹ் பொய்யர்களாக்கி இருக்கும் போது இவர்கள் சூனியக்காரர்களை உண்மையாளர்களாக ஆக்குகிறார்கள்.

நபிமார்களின் அற்புதங்களுக்கும், சூனியக்காரர்களின் தந்திர வித்தைக்கும் உள்ள வித்தியாசம் இது தான். நபிமார்களின் அற்புதங்கள் என்பது அப்படியே மெய்யாகும். வெளியே எப்படி தெரிகிறதோ உள்ளேயும் அப்படித் தான் இருக்கும். நபிமார்களின் அற்புதங்களில் எந்த அளவுக்கு நீ சிந்தனையைச் செலுத்துகிறாயோ அந்த அளவுக்கு அதன் உண்மைத் தன்மை தெரியவரும். உலகமே திரண்டு அது போல் செய்ய முயன்றாலும் அவர்களால் செய்ய இயலாது. சூனியக்காரர்களின் சூனியம் என்பது பொய்யும், தில்லுமுல்லுமாகும். அதன் உண்மை நிலைக்கு மாறாக அதன் வெளித்தோற்றம் இருக்கும். சிந்தித்து ஆய்வு செய்தால் இதைக் கண்டுபிடித்து விடலாம்.

மேலும் ஜஸ்ஸாஸ் அவர்கள் கூறுகிறார்கள்.

சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும், மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும், பரம ஏழைகளாகவும், மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் வாதிடக்கூடிய எந்த ஆற்றலும் இவர்களுக்கு இல்லை என்று இதில் இருந்து தெளிவாகின்றது.

இவ்வாறு கூறிய அபூபக்ர் அல் ஜஸ்ஸாஸ் அவர்களை யாராவது முஃதஸிலா என்று சொல்லியிருக்கின்றார்களா?

முஃதஸிலாக்கள் தவிர ஒருவரும் சொல்லவில்லை என்று சூனியக் கட்சியினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.

சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும், மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா?

இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது.

வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும்.

ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது தங்கச் செயின் தான். ஆனால் நம்பிக்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

திருமண பந்தமே தாலியில் தான் உள்ளது. தாலி அறுந்து விட்டால் கணவனுக்கு ஏதோ நேர்ந்து விடும் என்ற மூட நம்பிக்கை இதன் பின்னால் உள்ளது என்பதால் இது கூடாது என்று நாம் சொல்கிறோம்.

ஆனால் அலங்காரமாக பெண்கள் அணிந்து கொள்வது கூடும் என்றும் நாம் சொல்கிறோம்.

ஒரே தங்கச் செயின் தான் என்றாலும் அது நமது நம்பிக்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறோம்.

ஒரு வாழைப்பழத்தை பூஜை செய்து ஒருவர் நம்மிடம் தருகிறார். அதை நாம் வாங்க மாட்டோம்.

இன்னொருவர் அதே வாழைப்பழத்தை சாதாரணமாகத் தந்தால் வாங்கிக் கொள்வோம்.

இரண்டும் வாழைப்பழம் தான். ஆனால் படையல் செய்யப்பட்டதால் புனிதமாகி விட்டது என்ற பொய்யான நம்பிக்கை அதில் இருப்பதால் அதை மார்க்கம் ஹராம் என்கிறது.

இன்னொரு வாழைப்பழத்தில் அந்த நம்பிக்கை இல்லாததால் அது ஹலாலாக ஆகின்றது.

அது போல் தான் மேஜிக்கும், சூனியமும் தோற்றத்தில் ஒன்றாகக் காட்சி தந்தாலும் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையால் அது மாறுபடுகிறது.

மேஜிக் செய்பவன் வெறும் கையில் மோதிரத்தை வரவழைத்துக் காட்டினால் அவன் இல்லாத மோதிரத்தை கொண்டு வந்து விட்டான் என்று மேஜிக் செய்பவனும் சொல்வதில்லை. மக்களும் அப்படி நம்புவதில்லை. ஏற்கனவே தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாத வகையில் எடுத்துக் காட்டுகிறான். இதற்காக சில தந்திரங்களைச் செய்துள்ளான் என்று தான் நாம் நம்புகிறோம்.

தனது காணாமல் போன ஆடு எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடித்து தருமாறு மேஜிக் செய்பவனிடம் யாரும் கேட்பதில்லை. கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்குமாறும், எதிரியின் கைகால்களை முடக்குமாறும் மேஜிக் செய்பவனை யாரும் அணுகுவதில்லை. அணுகினாலும் அதைச் செய்ய இயலாது என்று மேஜிக் செய்பவன் கூறி விடுவான்.

ஆனால் சூனியக்காரன் என்ன செய்கிறான்? நான் நிஜமாகவே அதிசயம் செய்பவன். நான் இங்கிருந்து கொண்டு எங்கோ இருப்பவனின் கைகால்களை முடக்கி விடுவேன். கணவனிடமிருந்து மனைவியையும், மனைவியிடமிருந்து கணவனையும் மந்திரத்தால் பிரித்து விடுவேன் என்று சொல்கிறான். இதற்காக மக்களும் அவனை அணுகுகிறார்கள்.

மேஜிக் செய்பவன் அறிவிக்கப்பட்ட பொது நிகழ்ச்சியில் அவன் முன்னரே திட்டமிட்டதைச் செய்து காட்டுவான். அவ்வளவு தான்.

சூனியக்காரன் ஏற்கனவே திட்டமிட்டதை மட்டுமின்றி யார் அணுகினாலும், யாருக்கு எதிராக அணுகினாலும், எதைச் செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும் ஆற்றல் இருப்பதாகச் சொல்கிறான். இதுதான் சூனியம்.

ஒன்றில் இணைவைத்தல் உள்ளதை நம் அறிவே சொல்லி விடுகிறது. இன்னொன்று பொழுது போக்கும் தந்திரம் என்று நம் அறிவு தீர்ப்பளிக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேஜிக் செய்பவர்கள் பயிற்சியைக் கொண்டு செய்வதாகச் சொல்வார்கள். உங்களுக்கும் அந்தப் பயிற்சி இருந்தால் செய்யலாம் என்றும் சொல்வார்கள்.

ஆனால் சூனியம் செய்பவர்கள் தனது மந்திர சக்தியால் கிடைத்த ஆற்றலால் செய்வதாகச் சொல்வார்கள்.

சூனியம் இருந்தால் செய்து காட்ட வேண்டும்

மறைவான விஷயங்களை அல்லாஹ் சொல்லிவிட்டால் அதனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மலக்குகள், வானவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் என அல்லாஹ் பல விஷயங்களைக் கூறுகின்றான்.

இதனைச் சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்புகின்றோம். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல. அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக நம்புகின்றோம்.

ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படும் விஷயங்களும் உள்ளன. அவற்றைச் சோதித்துப் பார்த்து அது உண்மையா? பொய்யா என்று ஆராய வேண்டும். குருட்டுத்தனமாக நம்பக் கூடாது.

உதாரணமாக வழுக்கையான ஒருவனுக்கு இந்த எண்ணையைத் தேய்த்தால் முடி வளர்ந்துவிடும் என்று சொன்னால் இதனைச் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாம் நம்ப வேண்டும்.

இணை கற்பித்தல் என்ற பிரச்சனை வரும் போது அதைச் சோதித்துப் பார்த்துத் தான் அறிய வேண்டும்.

சூனியக்காரனுக்கு சக்தி இருப்பதாகச் சொன்னால் இப்போதே இதனை சோதனைக்கு உட்படுத்தி பார்க்க முடியும். ஏனெனில் இணைவைத்தலுக்கு எதிராக அல்லாஹ் இந்த வழிமுறையைத் தான் நமக்குக் கற்றுத் தருகிறான்.

"அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?'' என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!" என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

"அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

அல்லாஹ்வைப் போல் ஒருவனுக்கு சக்தி உண்டா என்ற பிரச்சனை வந்தால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது தான் அல்லாஹ் கற்றுத் தரும் வழிமுறையாகும்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு என்று கேட்பதும், அவ்வாறு அவனால் நிரூபிக்க இயலவில்லை என்று தெரியும் போது அது பொய் என்று அறிந்து கொள்வதும் இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும்.

சூனியம் வைக்கும் ஒருவனைக் காட்டுங்கள். நாங்கள் சொல்வதை அவன் செய்யட்டும். அல்லது அவன் தனக்கு என்ன சக்தி இருப்பதாகச் சொல்கின்றானோ அதனைச் செய்து காட்டட்டும் என்று கேட்டால் எவனும் முன்வருவதில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:191- 195

சிலைகளுக்கு கைகால்களை அமைத்து, அந்தக் கைகளால் அவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்கிறார்கள். இது எங்கள் நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள்.

இதை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்தக் கைகளால் எதையாவது பிடித்துக் காட்டட்டும். அந்தக் கால்களால் நடந்து காட்டட்டும் என்று கூறி இணைவைப்புக்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்.

சூனியத்தை நம்புபவர்கள் அறிவு கெட்டவர்களாக இருந்து கொண்டு அறிவுப்பூர்வமாக பேசுகின்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

இஸ்லாமில் தர்க்கம் செய்து அறிவார்ந்த முறையில் தான் பேச வேண்டும்.

இதோ ஹூது நபி விட்ட அறைகூவலைப் பாருங்கள்.

"எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார்.

 திருக்குர்ஆன் 11:54, 55

ஹூது நபி சொன்னது போல் நாங்கள் சொல்கிறோம். சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை. அப்படி இருந்தால் எங்களுக்குச் செய்து காட்டு என்று அறைகூவல் விடுக்கிறோம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

சிலைகளுக்கு ஆற்றல் உண்டு என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கற்றுத் தருகிறான் என்று சிந்தியுங்கள்.

இணைகற்பித்தல் என்ற பிரச்சனை வந்தால் அதற்கான தீர்வு அதை நிரூபித்துக் காட்டச் சொல்வது தான். சூனியமும் இணை கற்பித்தல் என்ற நிலையில் இருப்பதால் அதையும் சோதனைக்கு உட்படுத்துவது தான் சரியான வழிமுறை.

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர். இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

இதிலிருந்து சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகின்றது.

சூனியம் குறித்து எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் உரிய பதிலை அறிந்து கொள்ள 28, 285, 468, 495, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account