Sidebar

22
Wed, Jan
2 New Articles

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்றும் கூறி சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி மெய்யான செய்தி தான் என்று சிலர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது கட்டுக்கதை என்பதை 357வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே பொய் என்று ஆகிவிடும் போது அதற்காகத் தான் இவ்விரு வசனங்களும் அருளப்பட்டன என்ற செய்தியும் கட்டுக்கதை என்பது உறுதியாகி விட்டது.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி இஸ்லாத் தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளதால் அது கட்டுக்கதை என்கிறோம்.

113, 114 ஆகிய அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நீக்குவதற்கு அருளப்பட்டது என்பதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. ஏற்கத்தக்க அறிவிப்பாளர் தொடரும் இதற்கு இல்லை.

இது குறித்து இப்னு கஸீர் அவர்கள் செய்யும் விமர்சனத்தைப் பாருங்கள்!

திருக்குர்ஆன் விரிவுரையாளரான ஸஅலபி அவர்கள் தமது தப்சீரில் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட பின் அலீ, ஸுபைர், அம்மார் பின் யாசிர் ஆகியோரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு அனுப்பினார்கள். அவர்கள் கிணற்றின் நீரை இறைத்தார்கள். அந்த நீர் மருதாணிச் சாறைப் போல் இருந்தது. பின்னர் பாறாங்கல்லை நீக்கினார்கள். அதனடியில் இருந்த பேரீச்சம் பாளையின் உறையை வெளியே எடுத்தார்கள். அதில் நபியவர்களின் தலைமுடியும் அவர்களுடைய சீப்பின் பற்களும் இருந்தன. ஊசியில் கோர்க்கப்பட்ட நூலும் பன்னிரண்டு முடிச்சுக்கள் போடப்பட்டு இருந்தன. அப்போது தான் 113, 114 அத்தியாயங்கள் அருளப்பட்டன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தன...... இப்படி ஒரு செய்தியை ஸஅலபீ கூறுகிறார்.

ஆயிஷா, இப்னு அப்பாஸ் கூறியதாக மட்டும் தான் இதில் உள்ளது.

அவ்விருவரும் யாரிடம் சொன்னார்கள் என்று நூலாசிரியர் வரை இணைக்கும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் கூறியுள்ளார். இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படுவதாக உள்ளது. யாரும் சொல்லாததாகவும் உள்ளது என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் சொல்லப்படும் எந்த ஹதீஸும் கட்டுக்கதைக்கு நிகரானது என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இது போல் இப்னு ஹஜர் அவர்களும் இதை விமர்சனம் செய்துள்ளார்கள்.

சூனியம் செய்வதற்காக 11 முடிச்சுக்கள் போடப்பட்டதாகவும், அது குறித்தே பலக், நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாகவும், ஒவ்வொரு வசனம் அருளப்பட்டவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்ததாகவும் பைஹகீ அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் தலாயிலுன்னுபுவ்வா என்ற தமது நூலில் கூறுகிறார். அது போல் இப்னு சஅது அவர்கள், இப்னு அப்பாஸ் வழியாக அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் விமர்சனம் செய்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது தான் இவ்விரு அத்தியாயங்களும் அருளப்பட்டதாக ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கொள்கை உடையவர்களும் இது பலவீனமானது என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனவே இது ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத கட்டுக்கதையாகும்.

இந்த அத்தியாயங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து இது சூனியத்தைத் தான் பேசுகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

குறிப்பாக ஃபலக் அத்தியாத்தில் முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிச்சுகளில் ஊதி சூனியம் செய்யும் பெண்களைத் தான் இது குறிக்கிறது என்று கூறி சூனியத்துக்கு தாக்கம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கை விட்டும் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் கற்பனை தானே தவிர அல்லாஹ்வோ, அவனது தூதரோ அளித்த விளக்கம் அல்ல. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் ஏற்கத்தக்க எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

இவர்கள் கூறுவது தவறானது என்று சாதாரண மனிதனின் அறிவு கூட தீர்ப்பு அளித்து விடும்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சூனியம் செய்வார்கள் என்பது தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கொள்கையுடையவர்களின் நம்பிக்கையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லபீத் என்ற யூத ஆண் தான் சூனியம் வைத்தான் என்று தான் இவர்கள் நம்புகிறார்கள். அப்படி இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களை விட்டு பாதுகாப்பு தேடுமாறு சொல்வது பொருந்துமா?

இந்த அத்தியாயத்தில் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து தான் பாதுகாப்பு தேடப்படுகிறது. சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?

பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் சூனியத்துக்கு இருந்து அதில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்குத் தான் இந்த அத்தியாயங்கள் மூலம் அல்லாஹ் வழிகாட்டுகிறான் என்றால் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டு மட்டும் பாதுகாப்பு தேடச் சொல்லி, சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அற்ற நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானா?

இப்படி சிந்திக்கும் போது இவர்கள் கொடுக்கும் விளக்கம் பயனற்றதாகவும், அல்லாஹ்வின் கூற்றை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் முடிச்சுகளில் ஊதுதல் என்ற ஒரு வழியில் தான் சூனியம் உள்ளது என்பது சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவோரின் கொள்கை அல்ல.

ஆயிரக்கணக்கான வழிகளில் சூனியம் செய்யலாம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. இந்த அத்தியாயம் சூனியத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க அருளப்பட்டது என்றால் இதில் முடிச்சுக்களில் ஊதும் ஒரு வகை சூனியத்தில் இருந்து மட்டுமே பாதுகாப்பு உள்ளது. அது அல்லாத வகைகளில் ஒருவன் சூனியம் செய்தால் அதில் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய் விடுகிறது.

இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன? இது சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவதற்காக அருளப்பட்டதல்ல. இப்படி அறைகுறையாக அல்லாஹ் கற்றுத்தர மாட்டான் என்பது தெரிகிறது.

உலகில் பெரும்பாலும். ஆண்கள் தான் சூனியம் செய்கின்றனர். மிகமிக அரிதாகத் தான் பெண் சூனியக்காரிகள் உள்ளனர். காமிக்ஸ் கதைகளிலும், பேய்ப் படங்களிலும் தான் சூனியக்காரக் கிழவி என்று காட்டுகிறார்கள். நிஜத்தில் அப்படி இல்லை. ஆண்களே அதிக அளவில் சூனியக்காரர்களாக இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேடச்சொல்வது பொருந்தவில்லை.

முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கை விட்டும் என்பது எதைக் குறிக்கிறது? முடிச்சுக்கள் என்றால் அதற்கு நேரடியாக முடிச்சு என்று அர்த்தம் இருந்தாலும் இங்கே அது பொருந்தவில்லை. முடிச்சுப் போடுவதால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனச் சிந்திக்கும் போது முடிச்சுகள் என்பதற்கு முடிச்சு என்ற நேரடிப் பொருளைக் கொடுக்க முடியாது.

முடிச்சு என்பது அதன் நேரடிப் பொருள் அல்லாத மாற்றுப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மூஸா நபி அவர்களுக்கு பேச்சுகுறைபாடு இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கி வை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. (20:27) என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தை நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என்று நாம் விளங்க மாட்டோம். மூஸா நபிக்குத் திக்குவாய் இருந்துள்ளது. அதனைத் தான் அவர்கள் முடிச்சு என்று குறிப்பிடுகிறார்கள் என்று எல்லோரும் புரிந்து கொள்கிறோம். முடிச்சு என்று புரிந்து கொள்வதில்லை.

இதே போன்று திருமணத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, திருமணம் செய்த பின் இருவரும் சேராமல் பிரிந்து விட்டால் பாதி மஹர் கொடுத்துவிட வேண்டும். நிக்காஹ் எனும் முடிச்சு யார் கை வசம் உள்ளதோ அவர் விட்டுக் கொடுத்தால் தவிர (2:237) என்று கூறுகிறான்.

ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதை முடிச்சு என்று அல்லாஹ் இங்கே சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே இந்த அத்தியாயத்தில் முடிச்சு என்று கூறப்பட்டதற்கு பொருத்தமான விளக்கம் நபிமொழியில் கிடைக்கிறதா என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் தேடிப்பார்க்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று உளுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்ந்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கூறியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான் என்று அந்த ஹதீஸில் வருகின்றது.

நூல் : புகாரீ 1142, 3269

ஷைத்தான் போடும் முடிச்சு என்றால் நல்ல அமல்கள் செய்ய விடாமல் ஆக்குவதும், தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதுமாகும் என்று இதில் இருந்து விளங்குறது.

இது போல் ஷைத்தான் முடிச்சு போட்டு நம்மை வழிகெடுத்து விடாமல் பாதுகாப்பு கோருவது தான் முடிச்சுக்களில் ஊதுதல் என்பது.

ஆதாரமின்றி கற்பனை செய்து பொருந்தாத விளக்கம் கூறுவதை விட ஹதீஸ் துணயுடன் முடிச்சு என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது தான் சரியானது.

114வது அத்தியாயத்தில் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றோம். அது போன்றது தான் 113 வது அத்தியாயமும்.

சூனியம் குறித்து மேலும் அறிய 28, 285, 357, 468, 495, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account