445.வேதத்தை வியாபாரமாக்குதல்
இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது.
அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக் கண்டித்துத் தான் மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டன. யூதர்கள் தங்களின் வேதப் புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டித்து இவ்வசனம் பேசவில்லை என்பது எளிதில் விளங்கும் உண்மையாகும்.
அந்தக் காலத்தில் நூல்களை அச்சிடுவதும், அதை வியாபாரம் செய்வதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே புத்தக வியாபாரம் குறித்து இவ்வசனம் பேசவில்லை என்பதில் சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்பது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்கள் மத்தியில் சொன்னால் அதற்காக மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும். அவ்வாறு செய்யாமல் உலக ஆதாயம் கருதி வேதத்தில் உள்ளதை மறைப்பது தான் இங்கே வியாபாரம் என்று கூறப்படுகிறது.
இதன் கருத்து என்ன என்பதை 3:187வது வசனம் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வின் வசனங்களை மறைத்து அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள் என இவ்வசனம் கூறுகிறது.
அற்பக் கிரயத்துக்காகவும், மனிதர்களுக்கு அஞ்சியும் வேதத்தை மறைப்பதும், வேதத்தில் உள்ளபடி தீர்ப்பளிக்காமல் இருப்பதும் தான் வேதத்தை வியாபாரமாக்குதல் என்பதன் கருத்தாகும்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை அறியலாம்.
திருக்குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும், அதன் தமிழாக்கத்தையும், போதனைகளையும் அச்சிட்டு விற்பதும் திருக்குர்ஆனை விற்பதில் அடங்காது.
அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பனவற்றில் தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக் கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
மேலும் அச்சிடப்பட்ட நூல்களைப் பாதுகாத்து வைக்கவும் விற்பனை செய்யவும் தேவைப்படும் இடத்துக்காக வாடகை கொடுக்க வேண்டும்; அதற்காக ஊழியரை நியமித்து சம்பளம் கொடுக்க வேண்டும்; மின்கட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர திருக்குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது.
இன்னும் சொல்லப்போனால் வேதம் மக்களிடம் சென்றடைய வேண்டுமானால் இப்படிச் சிலராவது முயற்சித்தால் தான் சென்றடைய முடியும். வேதத்தை அச்சிட்டு விற்கக் கூடாது என்றால் வேதம் மக்களுக்குக் கிடைக்காமல் போய் விடும்.
குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்காக கூலி வாங்கினால் அது வேதத்தை விற்பனை செய்யும் குற்றத்தில் சேருமா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும், கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.
குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.
2276, நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்ட போது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கும் கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.... என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி 2276
மற்றொரு அறிவிப்பில்
5737, (ஒரு பயணத்தின் போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கின்றார் என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப் பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை வெறுத்து அல்லாஹ்வின் வேதத்திற்கா நீர் கூலி வாங்கினீர்? என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக் கொண்டார் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5737
இந்த ஹதீஸில் கூலியை நிர்ணயித்துக் கேட்டுப் பெற்றுள்ளதாலும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தது மட்டுமின்றி தமக்கும் அதில் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டதாலும் ஊதியம் பெற்றிட குர்ஆன் மிகவும் தகுதியானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாலும் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேற்கூறிய ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என்பதையும் அவர்களின் அந்தக் கருத்துக்கு அதில் இடமுண்டு என்பதையும் மறுக்க முடியாது.
5871, ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.
அவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு மஹ்ராகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அம்மனிதர், ஏதுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (ஏதேனும் கிடைக்குமா என்று) பார் என்றனர். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஏதும் கிடைக்கவில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மேலும் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை என்றார்.
அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது கீழங்கியா? அதை இவள் அணிந்து கொண்டால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்து கொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்து கொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல் புகாரி 5871
மஹர் எனும் மனக்கொடை கொடுத்துத்தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் மணம் செய்ய கோரிக்கை வைத்தவரிடம் மஹராகக் கொடுக்க எதுவும் இல்லை. மாறாக அவர் சில குர்ஆன் அத்தியாயங்களை மனனம் செய்து இருந்ததால் அதையே மஹராக ஆக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மஹருக்கு சமமாக குர்ஆனை ஆக்கியுள்ளதால் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
குர்ஆனை மஹராக ஆக்கவில்லை; அவர் குர்ஆனை மனனம் செய்திருந்த காரணத்தால் அதற்கு மதிப்பளித்து மஹரை விட்டுக் கொடுத்தார்கள் என்று தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் அறிவிப்பு இந்த விளக்கத்துக்கு எதிராக அமைந்துள்ளது.
நீ செல்! உமக்கு இந்தப் பெண்ணை நாம் மணமுடித்துத் தந்தோம். எனவே குர்ஆனை இந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இவருக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களைக் கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவ்ர்கள் மஹராக ஆக்கியுள்ளனர். கற்றுக் கொடுப்பதற்கு கூலி வாங்கலாம் என்று இந்தக் கருத்துடையோர் வாதிடுகின்றனர்.
எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளியிருந்தது.
அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)
நூல்: நஸாயீ
பாங்கு என்ற வணக்கத்துக்குக் கூலியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிதளவு வெள்ளியை வழங்கியதாக இந்த ஹதீஸ் கூறுவதாலும், பொருளாகக் கொடுக்க வேண்டிய மஹருக்கு நிகராக குர்ஆனைக் கற்பிப்பதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளதாக இதற்கு முந்தைய ஹதீஸில் கூறப்படுவதாலும், ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தெளிவாகவே குர்ஆனுக்குக் கூலி வாங்கியதாகக் கூறப்படுவதாலும் குர்ஆன் ஓதுவதற்கும், இன்ன பிற வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இனி இதற்கு மாற்றமாக வந்துள்ள ஹதீஸ்களையும் பார்த்து விட்டு இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! அதில் எல்லை மீறாதீர்கள். அதை அலட்சியம் செய்யாதீர்கள் அதன் மூலம் சாப்பிடாதீர்கள்! அதன் மூலம் ஆதாயம் அடையாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)
நூல்கள் : அஹ்மத், பைஹகீ, தப்ரானீ சகீர், தப்ரானி அவ்ஸத், முஸ்னத் அபீ யஃலா
அரபுகளும், பிறமொழியினரும் கலந்திருந்து நாங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த போது எங்களிடம் வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஓதுங்கள்! அனைவர் ஓதுவதும் அழகாக உள்ளன. ஈட்டி சீர்படுத்தப்படுவது போல் குர்ஆனைச் சீர்படுத்துவோர் தோன்றுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அதன் கூலியை எதிர்பார்ப்பார்கள். மறுமையில் எதிர்பர்க்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
நூல்: அபூதாவூத்
நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், எல்லாமே! (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத் தான் உள்ளது. அம்பு வளைவின்றி நேராக ஆக்கப்படுவது போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது, உச்சரிப்புக்கள், ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காக காத்திருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத்
பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)
நூல்: ஹாகிம்
எனது வசனங்களை அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள்.
திருக்குர்ஆன் 2:41
மேற்கூறிய வசனத்திலும், நபிமொழிகளிலும் குர்ஆனுக்குக் கூலி வாங்குவதும் அதற்காக உலகப் பயன்களை மக்களிடம் எதிர்பார்ப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகக் கவனிக்கும் போது இவற்றுக்கும் இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களுக்குமிடையே முரண்பாடு இருப்பது போல் தோன்றினாலும் கூறப்பட்ட சந்தர்ப்பங்களையும், பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளையும் கவனித்தால் இவ்விரண்டு கருத்துக்களிடையே முரண்பாடு எதுவுமில்லை என்று உணரலாம்.
குர்ஆன் சம்பந்தமாக எவ்விதக் கூலியும் பெறக் கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எவ்விதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதன்று.
குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது.
ஒரு எழுத்துக்கு பத்து நன்மையை நாடி தனது மறுமைக்காக ஓதுதல் ஒரு வகை
பிறருக்கு உதவுவதற்காக குர்ஆனை ஓதுதல் மற்றொரு வகை.
முதல் வகையான ஓதுதலுக்காக மனிதர்களிடம் கூலி வாங்கக் கூடாது.
இரண்டாம் வகை ஓதுதலுக்காக கூலி வாங்கலாம் என்று புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லாமல் இரு வகையான ஹதீஸ்களும் இணங்கிப் போகின்றன.
தேள் கடிபட்டவருக்கு ஓதிப்பார்த்தது மறுமையில் கூலியை எதிர்பார்த்து அல்ல. குர்ஆனில் நோய் நிவாரணம் உண்டு; அந்த நிவாரணம் பெற பிறருக்கு உதவும் நோக்கத்தில் தான் அல்ஹம்து அத்தியாயத்தை நபித்தோழர் ஓதியுள்ளார். இதற்குக் கூலி வாங்குவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். இதை அந்த ஹதீஸைச் சிந்தித்தாலே விளங்க முடியும்.
குர்ஆனை தனக்காக ஓதாமல் மனைவிக்கு கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளனர். மற்றவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக கூலி வாங்கினால் அது குர்ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது என்று தான் மஹர் சம்மந்தப்பட்ட ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஹதீஸைச் சிந்தித்தால் அதில் இந்த அம்சம் அடங்கியுள்ளதை அறியலாம்.
மாணவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டால் அதற்காக அவர் கூலி வாங்கலாம். அது குர்ஆனை ஓதி அதன் மூலம் சாப்பிட்டதாக ஆகாது. பிறருக்குக் கற்றுக் கொடுத்து அதற்காக கூலி வாங்கியதாகவே ஆகும்.
ஒருவர் குர்ஆனை எழுதிக் கேட்கிறார். அவருக்காக குர்ஆனை நாம் எழுதிக் கொடுத்தால் அதற்காக நாம் விரும்பினால் கூலி வாங்கலாம், அது குர்ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது. மாறாக குர்ஆன் விஷயத்தில் மற்றவருக்கு உதவியதற்காகவே கூலி வாங்குகிறார்.
மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் குர்ஆன் மூலம் மற்றவருக்கு உதவினால் அதற்குக் கூலி வாங்கலாம். ஆனால் மார்க்கம் அனுமதிக்காத வகையில் குர்ஆனைப் பயன்படுத்துவதும் கூடாது. அதற்கு கூலி வாங்குவதும் கூடாது.
இறந்தவருக்கு மறுமை நன்மையைச் சேர்த்து வைக்க குர்ஆன் ஓதி விட்டு கூலி வாங்குவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஏனென்றால் குர்ஆனை ஓதி இறந்தவருக்கு நன்மை சேர்க்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை.
நோய் நிவாரணம் நாடி குர்ஆனை ஓதினால் கூலி வாங்கலாம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நோய் நிவாரணம் நாடி அல்ஹம்து அத்தியாயம் ஓதிப் பார்த்து அதனால் நிவாரணம் ஏற்பட்ட பின்னர் தான் கூலி வாங்கியதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.
மருந்து, மாத்திரை, ஊசி போன்ற உலகப் பொருட்களைப் பயன்படுத்தி மருத்துவம் பார்க்கும் போது நிவாரணம் கிடைத்தால் தான் கூலி தருவேன் எனக் கூற முடியாது. ஏனெனில் இவை முதலீடு செய்து பார்க்கும் தொழிலாகும். அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக கூலி வாங்கலாம்.
ஆனால் ஓதிப் பார்த்தல் என்பதற்கு முதலீடோ, செலவோ இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஓதுபவரின் நல் எண்ணத்தால் தான் நிவாரணம் கிடைக்கும். எனவே நிவாரணம் கிடைத்ததற்குப் பின்னரே கூலியைப் பெற உரிமை உண்டு.
பாங்கு சொன்ன பிறகு அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளது வணக்கங்களுக்குக் கூலி கொடுக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.
கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணி புரிந்த பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு வழங்கியது பாங்கின் கூலியாக இருக்க முடியாது.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.
இமாமத் போன்ற மார்க்கப் பணி செய்வோருக்கு கூலி கொடுக்கலாமா என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ள 82 வது குறிப்பைப் பார்க்கவும்.
445.வேதத்தை வியாபாரமாக்குதல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode