Sidebar

24
Mon, Feb
0 New Articles

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்

தூய ஆவியால் ஈஸா நபியைப் பலப்படுத்தினோம் என்று 2:87, 2:253, 5:110 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

தூய ஆவி இதனை உமது உள்ளத்தில் இறக்கினார் என்று 16:102 வசனத்தில் கூறப்படுகிறது.

நம்பிக்கைக்குரிய ஆவி என்று 26:193 வசனத்திலும், ஆவி என்று 19:17, 58:22, 70:4, 78:38, 97:4 ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் ஜிப்ரீல் எனும் வானவரையே குறிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தாக்கி அவர்களின் எதிரிகள் கவிதை புனைந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் என்ற நபித்தோழரை பதில் கவிதை பாடச் சொன்னார்கள். அப்போது அவரை ஊக்கப்படுத்தும் விதமாக 'இறைவா இவரை தூய ஆவி மூலம் பலப்படுத்து' என்று பிரார்த்தனை செய்தார்கள். (புகாரீ 453, 3212, 6152)

மற்றொரு சந்தர்ப்பத்தில் 'ஹஸ்ஸானே எதிர்த்துக் கவி பாடு! உன்னுடன் ஜிப்ரீல் இருக்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 3213, 4124, 6153)

இவ்விரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது தூய ஆவி என்பது ஜிப்ரீல் எனும் வானவர் தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜிப்ரீல் எனும் தூயஆவி மூலம் பலப்படுத்துதல் என்பதன் பொருள் என்ன என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

கருத்தைச் சரியாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்ல நாவைப் பலப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.

மார்க்கத்தின் சார்பில் மறுப்பளிப்பதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் நாவை ஜிப்ரீல் மூலம் அல்லாஹ் பலப்படுத்தினான் என்பதில் இருந்து இதை அறியலாம்.

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு எல்லா நேரத்திலும், எல்லா விஷயத்திலும் ஜிப்ரீல் மூலம் பலப்படுத்துதல் இருக்கவில்லை. அதனால் தான் எதிரிகளுக்கு மறுப்புச் சொல்லும் போது ஜிப்ரீல் (அலை) மூலம் ஆன்ம பலம் அவருக்குக் கிடைத்த போதும் ஆயிஷா (ரலி) மீது அவர் அவதூறு கூறிய போது ஜிப்ரீல் மூலம் ஆன்ம பலம் கிடைக்கவில்லை.

ஜிப்ரீல் அவரைப் பலப்படுத்தி இருந்தால் அவர் ஆயிஷா (ரலி) மீது அவதூறு கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கசையடி வாங்கியிருக்க மாட்டார். (பார்க்க : புகாரீ 4141, 4146, 4755, 4758)

ஜிப்ரீல் (அலை) அவர்கள் வஹீயைக் கொண்டு வரும் பணி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முடிந்து விட்ட போதும் ஜிப்ரீல் (அலை) மூலம் பலப்படுத்துதல் சரியான கொள்கையில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ் செய்யும் அருளாகும். இதை 58:22 வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு (ஜிப்ரீல்) மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

திருக்குர்ஆன் 58:22

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, மார்க்க வரம்பை மீறுகின்ற சொந்தபந்தங்களையும் ஊர் உலகத்தையும் யார் பகைக்கிறார்களோ அவர்களையும் அல்லாஹ் ஜிப்ரீல் மூலம் பலப்படுத்துகிறான் என்று இவ்வசனம் உறுதியளிக்கிறது.

இத்தகையோரை யாராலும் கருத்தால் வெல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ் அவர்களைத் தூயஆவி எனும் ஜிப்ரீல் மூலம் பலப்படுத்தி இருக்கிறான்.

திருக்குர்ஆனையும், நபிவழியையும் மட்டும் மார்க்கமாக ஏற்று மார்க்கத்துக்காகச் சொந்த பந்தங்களைப் பகைக்கும் கொள்கைவாதிகளை அல்லாஹ் பலப்படுத்துவதை இன்றும் நாம் காணலாம். பெரிய பெரிய உலமாக்கள் கூட பதில் சொல்ல முடியாத வலிமை கொள்கைவாதிகளிடம் இருப்பதற்கு ஜிப்ரீல் மூலம் அல்லாஹ் பலப்படுத்தியிருப்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account