Sidebar

18
Wed, Sep
1 New Articles

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக இவ்வசனத்தில் (33:50) கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் இறைவேதம் எனவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் திருக்குர்ஆனில் இருந்தாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லிமல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.

அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று விமர்சனம் செய்கின்றனர்.

தனக்கு வசதியான சட்டங்களைத் தனக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்துபவையாக உள்ளன.

* ஜகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தேவையுள்ளவர்கள் உதவி பெறலாம் என்று சட்டம் கொண்டு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும், தமது குடும்பத்தினரும் அரசுக் கருவூலத்தில் இருந்து எதையும் பெறுவது கூடாது என்ற விதியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

* தமது மரணத்துக்குப் பின்னரும் தமது வழித்தோன்றல்கள் யாரும் ஜகாத் நிதியில் உதவி பெறக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது; அரசாங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்று தனக்குப் பாதகமாக சிறப்புச் சட்டம் போட்டார்கள்.

* தாமும், தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்பதும் அவர்கள் தமக்காகப் போட்டுக் கொண்ட சிறப்புச் சட்டங்களில் ஒன்றாகும்.

* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை மேலதிகமாகக் கடமையாக்கிக் கொண்டார்கள்.

* இரவு, பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தைத் தமக்கு மட்டும் சுமத்திக் கொண்டார்கள்.

இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. அவர்களுக்குச் சிரமமானவைகளாகவே இருந்தன.

மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கவுரவத்தைப் பாதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தையும் மக்கள் மத்தியில் வைத்தார்கள்.

(முன்னுரையில் இது இறைவேதம் என்ற தலைப்பில் எதிர்பார்ப்புகள் இல்லை என்ற உட்தலைப்பில் இதை விரிவாக விளக்கியுள்ளோம். 168வது குறிப்பிலும் இது விளக்கப்பட்டுள்ளது.)

இப்படி வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான பெண்களை அனுபவிக்க தமக்கு வசதியான சட்டங்களைப் போட்டுக் கொண்டார்கள் என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை.

இறைவன் அவர்களைக் கண்டித்தால் அதையும் மக்களிடம் சொல்கிறார்கள். கூடுதல் சுமையை இறைவன் சுமத்தினால் அதையும் ஏற்றுக் கொண்டு மக்களிடம் சொல்கிறார்கள். அது போல் மனைவியர் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்ற சட்டமும் இறைவன் புறத்திலிருந்து வந்ததால் அதையும் மக்கள் மத்தியில் சொல்லி விடுகிறார்கள்.

மேலும் முஹம்மது நபியவர்கள் தமது வாழ்நாளின் கடைசி ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அன்றைய சமூகத்தில் மன்னர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தது. பெயருக்கு ஓரிரு மனைவியரை வைத்துக் கொண்டு எண்ணற்ற பெண்களை அந்தப் புறத்தில் வைத்துக் கொண்டு மன்னர்கள் சல்லாபம் செய்தனர். அப்படிச் செய்திருந்தால் அன்றைக்கு யாரும் குறை சொல்ல முடியாது.

அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. முறைப்படி உலகறிய அறிவித்து விட்டு திருமணம் செய்தார்கள். மேலும் காம உணர்வு மேலோங்கியவர்கள் எந்தத் தரத்தில் உள்ள பெண்களை மணமுடிக்க விரும்ப மாட்டார்களோ அந்த நிலையில் உள்ள பெண்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.

இது பற்றிய முழு விபரத்தை அறிந்து கொள்ளும் ஒருவர் நபிகள் நாயகம் செய்த பல திருமணங்களைக் குறை சொல்ல மாட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறியின் காரணமாக பல திருமணங்களைச் செய்யவில்லை என்று நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். ஏனெனில், அவர்கள் பிறந்தது முதல் தம்மை இறைத்தூதர் என்று அறிவிக்கும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள்.

எந்தவொரு மனிதனும், தன்னுடைய நாற்பது வயது வரை அப்பழுக்கில்லாமல் வாழ்வது சாத்தியக் குறைவானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் தம்மை இறைத்தூதர் என்று மக்களிடம் சொன்ன போது, அதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக, தம்முடைய முந்தைய வாழ்க்கையைத் தான் முன்வைத்தார்கள்.

"உங்களுடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னிடம் தரங்கெட்ட எந்தச் செயலையாவது நீங்கள் கண்டதுண்டா? 40 ஆண்டுகள் கட்டுப்பாடான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த நான் பொய் சொல்வேனா?' என்ற அடிப்படையில் தான் தமது நம்பகத் தன்மையை மக்களிடம் நிரூபித்தார்கள்.

(10:16 வசனத்தின் விளக்கமாக 212வது குறிப்பில் இது பற்றி விபரமாக விளக்கியுள்ளோம்.)

தம்மை ஆரம்பம் முதல் கண்டு வந்த அந்த மக்கள் மத்தியில் அந்த அளவு ஒழுக்கமான வாழ்வை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்ததால் தான் இப்படி அவர்களால் அறைகூவல் விட முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட, இஸ்லாம் புது மார்க்கம் என்பதற்காக எதிர்த்தார்களே தவிர, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடத்தையில் ஐயம் எழுப்பி யாரும் எதிர்க்கவில்லை.

பாலியல் குற்றங்களைச் செய்யத் தூண்டும் இளம் பருவத்தில் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு, 60 வயதில் திடீரென்று பெண் மோகம் ஏற்பட்டிருக்குமா என்று சிந்தித்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததற்குக் காமவெறி காரணமல்ல என்பதை விளங்கலாம்.

இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும்.

கதீஜா (ரலி) யுடன் திருமணம்

நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் - அவர்கள் மட்டுமே - இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

தம்மை இறைத்தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் என்பது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.

தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்கான எல்லா வசதியும் அன்றைய சமூகத்தில் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவராக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.

கதீஜா (ரலி) யுடன் திருமணம்

தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் கூட அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதை உணர்த்தும்.

இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப்படக்கூடிய கட்டழகுக் கன்னியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகவும், நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகவும் இருந்த நாற்பது வயது கதீஜா (ரலி) அவர்களை மணம் செய்து கொள்கிறார்கள்.

தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மனைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கன்னித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மனைவி வேண்டும் என்ற அளவுக்கு அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா (40 முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள காலகட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.

நன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் தம்மை விட பதினைந்து வயது மூத்த ஒரேயொரு விதவை மனைவியுடன் மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காம உணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

இன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் தயாரானால் அந்த உறவு முழுமையானதாக அமையாது. கதீஜா (ரலி) அவர்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்து அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் பெரும்பாலும் அடைந்து விடுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மனைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா (ரலி) அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள். கதீஜா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா? என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிதமிஞ்சிய காம உணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மனைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபியவர்கள் வாழ்ந்திருக்க முடியும்? இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் விரக்தி ஏற்பட்டு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா? குறைந்த பட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா? அப்படியெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மனைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் எவருமே அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். அவர்களின் மனைவி கதீஜா அவர்களும் ஆட்சேபித்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தனது ஐம்பதாம் வயது வரை - கதீஜா மரணிக்கும் வரை - இன்னொரு திருமணமே செய்யவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது. தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்தில் அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயதுக்கு முன்னர் பல மனைவியருடன் வாழ்வதைத் தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து ஐந்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.

இவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு தான் காம உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.

மறுமணம் செய்யாவிட்டாலும், தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மனைவி அமைந்தால் குறைந்த பட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.

காம உணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்ததும் அவர்கள் காம உணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

உடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும், முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள். அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா?

காம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபியவர்களின் தவவாழ்வை கதீஜா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் கதீஜா (ரலி), தம் கணவரை இறைத்தூதர் என்று முதலில் நம்பும் பெருமையைப் பெற்றார்கள். கதீஜா (ரலி) அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவ வாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.

தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜாவுடன் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.

ஐம்பது வயது வரை ஒருவருக்குக் காம வெறி இல்லாமல், அதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காம வெறி திடீரென்று ஏற்பட்டு விட்டது என்று எவரேனும் கூறினால் அறிவுடைய - அனுபவமுடைய - யாரும் அதை ஏற்பார்களா?

ஸவ்தா (ரலி) யுடன் திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.

ஸக்ரான் இப்னு அம்ரு அல் அன்ஸாரி (ரலி) அவர்களும் அவர்களின் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாமில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனிய்யா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் (ரலி) அவர்கள், தம் மனைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரண மடைந்தார்.

இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.

முதல் திருமணம் தன்னை விட மூத்த வயது விதவையுடன் நடந்து, மனைவி மரணித்து விட்டால் காமவெறி கொண்டவர் இல்லறத்துக்கு முழுத்தகுதி படைத்த பெண்ணைத் தான் அடுத்ததாகத் தேர்வு செய்வார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளம் பெண்ணைத் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காம உணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது உறுதி.

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.

ஆயிஷா (ரலி)யுடன் திருமணம்

இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாமில் அது தடை செய்யப்பட்டு விட்டது.

இத்திருமணத்திற்கும் பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர் உடனே அனுபவிக்கும் வகையில் தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாத சிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்.

சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகிறது. எனவே இது பற்றியும் விபரமாக அறிந்து கொள்வது நல்லது.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டன.

எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறு வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்தச் சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.

இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம்.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது.

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது.

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

நூல் : புகாரீ 5139, 6945, 6969

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்குக் கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், திருமணம் செய்யும் போது அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும்.

இந்தக் காரணங்களால் சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்.

இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகு தான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள். எனவே சிறு வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தது ஏன் என்பதற்கு இதுவே போதிய விளக்கமாகும்.

ஒருவனுக்குக் காம உணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத் தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காம உணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.

இப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான். முதல் மனைவியுடனும் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மனைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.

இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் - காமவெறி மேலோங்கி நிற்கும் ஒருவர் - அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.

எனவே இத்திருமணத்திற்கு காமவெறியைக் காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.

அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா (ரலி) மரணமடைந்து விட்டதால் இரண்டு மனைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.

இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.

அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஹஃப்ஸா (ரலி) திருமணம்

நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.

ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாமை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர். அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.

கணவரைப் பறி கொடுத்து விட்டு விதவையாகிப் போன ஹப்ஸா (ரலி) அவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா (ரலி) அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்த உமர் (ரலி) அவர்களின் திருமகளாக இந்த ஹப்ஸா (ரலி) அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாக இருக்கலாம்.

குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) திருமணம்

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது திருமணத்தைக் காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்ததால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.

ஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ததற்கு காம வெறி தான் காரணம் என்று கூற முடியுமா? இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காமவெறியைக் காரணமாகக் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா (ரலி) முன்னரே மரணித்து விட்டதாலும், ஸைனப் (ரலி) எட்டு மாதங்களில் மரணித்து விட்டதாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா (ரலி) ஆகிய மூவர் மட்டுமே!

ஜஹ்ஷ் என்பாரின் மகளாகிய ஸைனப் (ரலி) திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காமுகராக சித்தரிக்க இந்தத் திருமணத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது தனது மருமகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று போதிய விபரமில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

இதன் விபரம் இது தான்:

அடிமையாக இருந்த ஸைத் என்பாரை, அன்றைய அரபுகளின் வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

சொந்த மகன் போலவே ஸைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப் அவர்களை - அதாவது தமது மாமி மகளை - ஸைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத புரட்சியாகும்.

இந்த நிலையில் தத்து எடுத்தல் இஸ்லாமில் இல்லை என்ற சட்டம் அருளப்பட்டது.

அவர்களின் தந்தையர் பெயராலேயே குறப்பிடுங்கள் (33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் (4782) காணப்படுகிறது.

ஸைனபுக்கும், ஸைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல் நிலைக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஸைனபை விவாகரத்து செய்யும் நிலைக்கு ஸைத் (ரலி) ஆளானார்.

வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

தத்தெடுத்தல் ஏன் கூடாது என்பதும், அது மூட நம்பிக்கை என்பதும் 317 வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாமின்  எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை இருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஸைனபைத் திருமணம் செய்திருக்க முடியும். ஏனெனில் அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராக இருந்தார்கள். அவர்கள் ஸைதுக்கே மணமுடித்துக் கொடுக்காமல் தாமே திருமணம் செய்திருக்கலாம்.

இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

இஸ்லாமியச் சட்டப்படி வளர்ப்பு மகன் சொந்த மகனாக மாட்டான். தனக்குப் பிறந்தவரைத் தான் மகன் என்று சொல்ல வேண்டும். எனவே ஸைத் என்பவர் நபிகள் நாயகத்தின் மகன் இல்லை என்று ஆன பின் அவரது மனைவி மருமகளாக ஆக முடியாது. இறைவன் ஏற்படுத்திய மாமி மகள் என்ற உறவு மட்டுமே நபிகள் நாயகத்துக்கு இருந்தது. எனவே இத்திருமணம் குறித்து செய்யப்படும் விமர்சனத்தில் நியாயம் இல்லை.

உம்மு சலமா (ரலி) திருமணம்

நபிகள் நாயகத்தின் அடுத்த திருமணம் உம்மு சலமாவுடன் நடந்த திருமணமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாமை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அவர்களில் இவ்விருவரும் அடங்குவர்.

திரும்பவும் மதீனாவுக்கு நபித்தோழர்கள் ஹிஜ்ரத் சென்ற போது இந்தத் தம்பதியினரும் அவர்களில் இருந்தனர். அபூ ஸலமா (ரலி) பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார். உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார். அதன் பின் ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிறிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று மதீனா திரும்பினார். அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்.

இவர் மரணிக்கும் போது இவரது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வயது என்ற தெளிவான குறிப்பு கிடைக்கா விட்டாலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை.

ஏனெனில் நபியவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய போது நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; என்னால் இனி மேல் குழந்தை பெறவும் இயலாது என்று பதிலளித்தார்கள்.

(பார்க்க : முஸ்னத் அஹ்மத் 15751)

இந்தத் திருமணத்துக்கும் காம வெறியைக் காரணமாகக் கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் திருமணம் நடந்த போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஏழாகும்.

காம உணர்வு மேலோங்கியவர், நான்கு குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற, இல்வாழ்வில் நாட்டம் இல்லை என்று தாமே ஒப்புக் கொண்டுவிட்ட முதிய விதவையைத் தேர்ந்தெடுப்பார்களா? குழந்தை பெறுவதற்குரிய வயதைக் கடந்து அதாவது மாதவிடாய் நின்று விட்ட ஒரு பெண்ணைத் தான் காமஉணர்வு காரணமாக திருமணம் செய்பவர் தேர்ந்தெடுப்பாரா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

ஜுவைரிய்யா (ரலி) திருமணம்

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுவைரியா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இது பற்றிய விபரம் இது தான்:

பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாமின்  பரம எதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்தில் நபிகள் நாயகத்தின் முக்கிய எதிரியான முஸாபிஃ பின் ஸஃப்வான் கொல்லப்பட்டான். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது இவனது மனைவி ஜுவைரியாவும் ஒருவராவார். இவர் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமாவார்.

அன்றைய போர் தர்மத்தின்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜுவைரியா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பனூ முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார். இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தின் போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஒன்பதாகும். கைதிகளாகப் பிடிபட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் அழகில் மயங்கி காம உணர்வின் காரணமாக அவரை அனுபவிக்க விரும்பியிருந்தால் ஜுவைரியாவை தமக்காக எடுத்துக் கொண்டிருக்கலாம். நபித்தோழர்களில் எவரும் அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்பெண்னை ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள். இதன் மூலம் காம உணர்வோ, உணர்ச்சியோ, கவர்ச்சியோ இத்திருமணத்திற்குக் காரணம் அல்ல என்பதை அறியலாம்.

தான் இந்தக் கூட்டத்தின் தலைவி என்று கூறிய பிறகு - தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிறகு - தான் அவரைத் திருமணம் செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இத்திருமணத்தின் போது ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வயது என்னவென்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும் அவர்களும் முதுமையான வயதுடையவர்களாகத் தான் இருந்திருக்கக் கூடும்.

அப்பெண் இளமங்கையாகவோ, அல்லது சுண்டி இழுக்கும் பேரழகு கொண்டவராகவோ இருந்திருந்தால் இளைஞரான ஸாபித் இப்னு கைஸ் அவர்கள் ஏழு ஊக்கியா தந்துவிட்டு விடுதலையாகலாம் எனக் கூறியிருக்க மாட்டார். தாமே அனுபவிக்க எண்ணியிருப்பார். அடிமைகளை அனுபவித்துக் கொள்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் எந்தத் தடையும் இருக்கவில்லை. அல்லது அவரே கூட அப்பெண்னைத் திருமணம் செய்திருக்கலாம்.

தமக்குக் கிடைத்த பெண்ணை ஏழு ஊக்கியா எனும் அற்ப விலையைத் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று அவர் கூறியதிலிருந்து ஜுவைரிய்யா அவர்கள் இளமங்கை ஆகவோ, பேரழகு படைத்தவராகவோ இருந்திருக்க முடியாது என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 59 வயதுடைய முதியவராகி விட்டார்கள். அந்தப் பெண்ணும் அதே நிலையில் இருக்கின்றார். இவ்விருவருக்கும் நடந்த இத்திருமணத்திற்குக் காம உணர்வைக் காரணமாகக் கூற முடியுமா?

உம்மு ஹபீபா (ரலி) திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், மக்காவில் இருந்த எதிரிகளின் தலைவராகத் திகழ்ந்தவருமான அபூ சுஃப்யான் அவர்களின் மகளாவார். முஆவியா (ரலி) அவர்களின் சகோதரியுமாவார்.

இவரது தந்தை இஸ்லாமை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாமைத் தழுவினார்.

தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா)வுக்கு தம் கணவருடன் நாடு துறந்தார்கள். அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாமை விட்டு வெளியேறி கிறித்தவராக மதம் மாறினார். கணவர் இஸ்லாமை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாமில் உறுதியாக நின்றார்கள்.

சரித்திரத்தில் இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள பெண்களை அரிதாகவே காண முடியும். தந்தையை விடவும், கணவரை விடவும் கொண்ட கொள்கையே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்) என்று அழைக்கப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிறந்தார்கள். (அல் இஸாபா) இவர்களை நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் தமது 59ஆம் வயதில் திருமணம் செய்த போது இவர்களுக்கு 37 வயதாக இருந்தது.

கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

அபீஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி (ரலி) அவர்களுக்கு அவரது நாட்டில் நிர்க்கதியாக இருந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் தாம் திருமணம் செய்து கொள்வதாக தூதுச் செய்தி அனுப்பினார்கள்.

இதன் பிறகு நஜ்ஜாஷி மன்னர், உம்மு ஹபீபா (ரலி) அவர்களை மிகவும் மரியாதை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் நானூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) மஹராகக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பிறகே உம்மு ஹபீபா (ரலி) யைத் திருமணம் செய்தார்கள். இது சுருக்கமான விபரம்.

இந்தத் திருமணத்திற்கும் நிச்சயமாக காம உணர்வு காரணமாக இருக்க முடியாது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இஸ்லாமின்  ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்றவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். ஆரம்பக் காலத்திலேயே தம் கணவருடன் அபீஸீனியாவுக்கு தியாகப் பயணம் மேற்கொண்டார்கள். சுமார் 15 ஆண்டுகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அபீஸீனியாவிலேயே தங்கிவிட்டார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இஸ்லாமின்  ஆரம்ப காலத்தில் பார்த்ததைத் தவிர, இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததே இல்லை.

இந்தப் பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில் இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் - கணவரையும் பிரிந்து விட்டவர், ஒரு குழந்தையையும் பெற்று விட்டவர் எத்தகைய உருவ அமைப்பில் இருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

அவர்களின் நிறமும், பருமனும், அழகும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கும் என்பதையும் தீர்மானிக்க இயலாது. காமஉணர்வு தான் இதற்குக் காரணம் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்த்து அவர்களின் அழகில் மயங்கியிருக்க வேண்டும். ஒரு பெண்ணை அறவே பார்க்காது திருமணம் செய்தால் அதற்கு காம உணர்வைக் காரணமாகச் சொல்ல முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்களுக்கு காம உணர்வு எப்படி காரணமாக இருக்கவில்லையோ அது போல் இந்தத் திருமணத்திற்கும் அது காரணமில்லை.

ஸஃபிய்யா (ரலி) திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்து ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள்.

இவர் யூதக் குடும்பத்துப் பெண்மணியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்‌ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார்.

இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மணந்து கொண்டார்கள்.

ஸஃபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர்.

மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காஃபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள்.

இதை அறிந்த ஸஃபிய்யாவும், அவரது தந்தையும், கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.

கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். யூதத் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கொல்லப்பட்டவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார். பலர் சிறைபிடிக்கப்பட்ட போது ஸஃபிய்யாவும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

அன்றைய வழக்கப்படி கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸஃபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் இந்தச் சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று கூறினார்கள். இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.

இதை ஊன்றிக் கவனிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காம வெறியைக் காரணமாகக் கூற மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.

முதலாவது அம்சம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மனைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?

இரண்டாவது அம்சம் ஸஃபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத் தானா காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?

மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபர் என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கன்னியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.

பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கன்னியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.

இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கன்னியரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காம உணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கடைசியாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸஃபிய்யாவும், மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் ஸஃபிய்யாவின் அழகில் மயங்கி மனந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பற்றியோ, மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.

இதனால் தான் திஹ்யா என்பவர் ஸஃபிய்யாவை தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.

ஸஃபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.

யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.

யூதர்களின் வெறுப்புணர்வைத் தணித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.

இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும்.

ஏனைய திருமணங்களுக்கு எப்படி காம உணர்வு தான் காரணம் என்று கூற முடியாதோ அது போல் இத்திருமணத்திற்கும் அதைக் காரணமாகக் கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசியாக மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்.

பர்ரா எனும் இயற்பெயருடைய மைமூனா (ரலி) அவர்கள் ஹாரிஸ் என்பவரின் மகளாவார். இவர்கள் உமர் பின் அம்ர் என்பாரை முதலில் மணந்தார்கள். அவருக்குப் பின் அபூ ரஹ்ம் பின் அப்துல் உஸ்ஸா என்பாரை மணந்தார்கள். இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு அவ்விருவரும் மரணித்த பின் மைமூனா (ரலி) அவர்கள் விதவையாக இருந்தார்கள்.

இவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறுபதாவது வயதின் கடைசியில் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்தின் போது மைமூனா அவர்களின் வயது எவ்வளவு என்பதற்கான தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் ஏற்கனவே இரண்டு கணவர்களை மணந்து பின்னர் விதவையாக இருந்தார்கள் என்பது அவர்கள் நடுத்தர வயதைக் கடந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் உம்முல் ஃபழ்ல் என்ற பெண்னை மணந்திருந்தார்கள். உம்முல் ஃபழ்ல் உடைய சகோதரி தான் மைமூனா. இதன் காரணமாக அப்பாஸ் அவர்களின் பராமாரிப்பில் மைமூனா (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் தாம் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர்.

மேலும் மைமூனா (ரலி) அவர்கள் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தம்மை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதும், தமது பெரிய தந்தையின் பொறுப்பில் அவர் இருந்ததும் இத்திருமணத்திற்கு பிரத்தியேக காரணமாகும். எனவே இத்திருமணத்திற்கும் காம வெறியைக் காரணமாகக் கூற முடியாது.

இவை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்கள். இத்திரு மணங்களில் எவையுமே காம வெறியை அடிப்படையாகக் கொண்டதல்ல.

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தலைவர்களைப் போல் முஸ்லிம்கள் கருத முடியாது. அவர்கள் சொன்ன, செய்த, அனுமதித்த அனைத்தும் முஸ்லிம்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்தாக வேண்டும். அவர்களின் நாற்பதாம் வயது முதல் மரணிக்கும் வரை காட்டிய வழிகளை முஸ்லிம்கள் பின்பற்றியாக வேண்டும்

அவர்களைப் பற்றிய அனைத்து செய்திகளும் ஒளிவுமறைவு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத் தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்தும் மனைவியரால் மட்டும் தான் இது சாத்தியமாகும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறான்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

அவர் பல விஷயங்களை மறந்து விட்டால் அந்தச் செய்திகள் சமுதாயத்துக்குக் கிடைக்காமல் போய்விடும்.

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதை மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறியலாம்.

பொதுவாக மக்கள் காமவெறி கொண்டவர்களை மதிப்புக்கு உரியவராகக் கருத மாட்டார்கள். ஆன்மிகத் தலைவரிடம் காமவெறி இருப்பதை அறிந்தால் அவரை நஞ்சென வெறுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களைச் செய்வதை தமது கண்களால் பார்த்த மக்கள் மனிதர்களின் பொதுவான இந்த இயல்பின் படி நபிகள் நாயகத்தை எடை போடவில்லை.

அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தக் காரணத்தைக் கூறி மதம் மாறியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் திருமணம் செய்த கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்றார்கள். ஏறக்குறைய ஒட்டு மொத்த அரபுலகும் அவர்களை ஏற்றுக் கொண்டு விட்டது.

காமவெறி பிடித்தவர் என்றால் அதைக் கண்ணால் கண்டவர்கள் இஸ்லாமை வெறுத்து ஒதுக்கி இருப்பார்களே? ஏன் அப்படி நடக்கவில்லை? இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

வரலாறுகளைப் படிப்பவர்கள் ஒன்பது மனைவிகள் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். அதன் முழு விபரத்தைப் பார்க்காமல் முடிவு செய்து விடுகிறார்கள்.

அந்த வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பார்த்தார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலையையும் பார்த்தார்கள். இதுபோன்ற வயதுடைய பெண்களை நாமே மணக்க மாட்டோமே அப்படியானல் இதற்கு காமவெறி காரணமாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள். அதனால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்றனர்.

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தால் காமவெறி காரணம் அல்ல என்பதை விளங்கி இஸ்லாமில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account