377. பிரச்சாரத்திற்குக் கூலி
மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23) கூறப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய உறவினருக்குப் பிரச்சாரம் செய்யும் போது, எனக்கும், உங்களுக்கும் உள்ள உறவின் காரணமாக நான் செய்யும் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி அம்மக்களின் அன்பைக் கூலியாக கேட்கலாம் என்று இலக்கிய நயத்துடன் இங்கே சொல்லிக் காட்டப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த மக்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் இருந்தனர். அந்த உறவினர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பத்தில் எதிர்த்து வந்தனர்.
"நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என் மீது செலுத்த வேண்டிய அன்பை நான் கூலியாகக் கேட்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூறுமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் கட்டளை யிடுகிறான்.
நாம் சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது உறவினர்களிடம் உறவு முறையைச் சொல்லி உதவி கேட்கலாம் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
இது போல் 25:57 வசனத்தில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களையே கூலியாகக் கேட்கிறேன் என்று கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். மனிதர்கள் இறையன்பைப் பெறுவது தான் என் பிரச்சாரத்துக்கான கூலியே தவிர எனக்கு ஏதும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பது இதன் கருத்தாகும்.
377. பிரச்சாரத்திற்குக் கூலி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode