Sidebar

22
Sun, Dec
38 New Articles

திருமறையின் தோற்றுவாய்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

திருமறையின் தோற்றுவாய்

நூலின் பெயர்: திருமறையின் தோற்றுவாய்

அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரை

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

வெளியீடு: நபீலா பதிப்பகம்

பதிப்புரை

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரையான இந்த நூல் உங்கள் கைகளில் ஆறாவது பதிப்பாகத் தவழ்கிறது.

குறுகிய காலத்தில் ஆறு பதிப்புகளைக் காண்பதிலிருந்து இந்த நூலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

சென்ற பதிப்புகளில் சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. சலிப்பு ஏற்படாமல் வாசிக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பெயரால் சமுதாயத்தில் நுழைந்து விட்ட தவறான கொள்கைகள் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தவறான கொள்கைகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் முதுகெலும்பை முறிக்கும் வகையில் எதிர்வாதம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான ஆதாரங்கள் அரபு மூலத்துடனும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது

இது அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரையாக இருப்பதுடன் இஸ்லாத்தின் கொள்கை விளக்க நூலாகவும் அமைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டும் வகையில் எண்ணற்ற நூல்களை வெளியிட்டுள்ள எங்கள் நிறுவனம் அல்ஹம்து அத்தியாயத்தின் ஆறாம் பதிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

முன்னுரை

திருக்குர்ஆனில் ஏழு வசனங்களைக் கொண்ட அல்ஹம்து அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் தாய் என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். முழுக் குர்ஆனுக்கும் இது தாயாகத் திகழ்கிறது என்றால் அந்த அளவுக்கு ஆழமான கருத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே தான் இந்த அத்தியாயத்துக்கு தனியாக விளக்கவுரை எழுதும் உந்துதல் ஏற்பட்டது. இந்த அத்தியாயத்தில் இன்னும் கவனம் செலுத்தி ஆராய்பவர்கள் இதை விட அதிகமான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்த அத்தியாயம் ஆழம் நிறைந்தது.

இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் ஆழமாக ஒருவர் அறிந்து கொண்டால் மொத்தக் குர்ஆனிலும் கூறப்பட்ட போதனைகளை அறிந்து கொண்டவராவார்.

எனவே தான் இந்த அத்தியாயத்திற்கு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

முந்தைய பதிப்புகளை விட இதில் ஏராளமான விளக்கங்கள் சேர்த்துள்ளேன். ஹதீஸ்களை அரபு மூலத்துடன் தந்துள்ளேன். தேவையற்றவை எனக் கருதும் விஷயங்களை நீக்கியுள்ளேன்.

இஸ்லாத்தின் ஜீவ நாடியாகத் திகழும் ஏகத்துவக் கொள்கை குறித்தும், அதற்கு எதிரான வாதங்களுக்கு எவ்வாறு விளக்கமளிப்பது என்பது குறித்தும் இயன்ற அளவு முழுமையான விளக்கத்தை உரிய இடத்தில் சேர்த்துள்ளேன்.

ஏகத்துவக் கொள்கையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நூ-ன் ஒரே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,

பி.ஜைனுல் ஆபிதீன்.

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள்

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் முதல் அத்தியாயமான அல் ஃபாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புக்கள் பலவற்றைப் பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் ஒரு பகுதியாக இந்த அத்தியாயம் அமைந்திருந்தாலும் திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஒரு இடத்தில் கூறப்படுகின்றது. வேறு எந்த அத்தியாயத்திற்கும் வழங்கப்படாத தனிச்சிறப்பாகும் இது.

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம்.

(அல்குர்ஆன் 15:87)

இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன. இந்த அத்தியாயத்தைச் சிறப்பித்துக் கூறிய அளவுக்கு வேறு எந்த அத்தியாயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியதில்லை.

صحيح البخاري
4474 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ المُعَلَّى، قَالَ: كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: " أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]. ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ». ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»، قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»

நான் ஒருமுறை தொழுது கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களு(டைய அழைப்பு)க்கு மறுமொழி கூறவில்லை. (தொழுது முடித்த பின்) அவர்களிடம் சென்றேன். (நான் அழைத்தவுடன்) வருவதற்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் என்னை அழைக்கும் போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று நான் கூறினேன். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இந்தத் தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும், அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்! (அல்குர்ஆன் 8:24) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு, இந்தப் பள்ளியில் இருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று கூறி எனது கையையும் பிடித்துக் கொண்டனர். அவர்கள் பள்ளியிலிருந்து புறப்பட எத்தனித்த போது அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவாதாகக் கூறினீர்களே! என்று நினைவுபடுத்தினேன். அவர்கள் ஆம்! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அல் முஅல்லா(ரலி)

நூல்: புகாரி (4474, 4647, 4703, 4704)

صحيح البخاري 
2276 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ [ص:93] مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ، بِهَذَا

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டுவிட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2276

மற்றொரு அறிவிப்பில்

صحيح البخاري
5737 - حَدَّثَنِي سِيدَانُ بْنُ مُضَارِبٍ أَبُو مُحَمَّدٍ البَاهِلِيُّ، حَدَّثَنَا [ص:132] أَبُو مَعْشَرٍ البَصْرِيُّ هُوَ صَدُوقٌ يُوسُفُ بْنُ يَزِيدَ البَرَّاءُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ أَبُو مَالِكٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ، فِيهِمْ لَدِيغٌ أَوْ سَلِيمٌ، فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ المَاءِ، فَقَالَ: هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ، إِنَّ فِي المَاءِ رَجُلًا لَدِيغًا أَوْ سَلِيمًا، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ عَلَى شَاءٍ، فَبَرَأَ، فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ، فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا: أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، حَتَّى قَدِمُوا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ»

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டீரே! என்று மந்திரித்தவரைக் கண்டித்தனர். இது பற்றி நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, கூலிகள் பெறுவதற்கு மிகவும் அருகதை உள்ளது அல்லாஹ்வின் வேதம் தான் என்று கூறினார்கள்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தைக் கொண்ட ஹதீஸ் முஸ்லிமிலும் உள்ளது.*

* குர்ஆனை ஓதிப்பார்த்து கூலி வாங்கலாமா என்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற பிற்சேர்க்கை எண் : 2 ல் பார்க்கவும்.

صحيح البخاري
756 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»

இவ்வேதத்தின் தோற்றுவாயை (ஃபாத்திஹாவை) ஓதாதவருக்கு தொழுகை இல்லை! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 756

صحيح مسلم
38 - (395) وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ» ثَلَاثًا غَيْرُ تَمَامٍ.

எவர் உம்முல் குர்ஆன் (திருக்குர்ஆனின் தாய் என்று பொருள்படும் ஃபாத்திஹாவை) ஓதவில்லையோ அவரது தொழுகை குறைவுபட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் 598

அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் தலையாயது தொழுகை தான். அதற்கு நிராக எந்தக் கடமையும் இல்லை. அந்தத் தொழுகையே ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாவிட்டால் தொழுகையாக அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.

صحيح مسلم 
38 - (395) وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ» ثَلَاثًا غَيْرُ تَمَامٍ. فَقِيلَ لِأَبِي هُرَيْرَةَ: إِنَّا نَكُونُ وَرَاءَ الْإِمَامِ؟ فَقَالَ: «اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ»؛ فإنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " قَالَ اللهُ تَعَالَى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، قَالَ اللهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، قَالَ اللهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: {مَالِكِ يَوْمِ الدِّينِ}، قَالَ: مَجَّدَنِي عَبْدِي - وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَيَّ عَبْدِي - فَإِذَا قَالَ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5] قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " قَالَ: سُفْيَانُ، حَدَّثَنِي بِهِ الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمنِ بْنِ يَعْقُوبَ، دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ. فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ

தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்குமிடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும்போது என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது (என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிகியவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும்போது என்னைக் (கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்... (இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! எவர்களுக்கு நீ பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை (செலுத்துவாயாக) எவர்கள் (உன்னால்) கோபிக்கப்படவில்லையோ அவர்களின் வழியிலும், எவர்கள் வழிகெடவில்லையோ அவர்களின் வழியிலும் (எங்களை செலுத்துவாயாக!) எனக் கூறும்போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 598

இந்த ஹதீஸ் ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் அமைப்பையும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

  1. முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஒருவன் கூறும் போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.
  2. நான்காவது வசனம், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவாக்குகின்றது. அல்லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும் தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள உறவாகும். எஜமான் அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
  3. இறுதியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இறைவனிடம் மிக முக்கியமான கோரிக்கையை முன் வைக்கும் விதமாக அருளப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த ஹதீஸ் அளிக்கின்றது.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தை மூன்று பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம். அந்த அடிப்படையிலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் விரிவுரையை நாமும் காண்போம்.

ஃபாத்திஹா அத்தியாயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்பட்டுள்ளது. 9-வது அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டும் எழுதப்படவில்லை.

இந்தச் சொற்றொடரை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல்வசனம் என்று எடுத்துக் கொள்வதா? அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது என்பதற்கு அடையாளமாக எடுத்துக் கொள்வதா என்பதை முதலில் அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்தில் நுழைவோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அத்தியாயத்தின் ஒரு பகுதியா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஃபாதிஹா அத்தியாயத்திலும், ஏனைய அத்தியாயங்களிலும் உள்ளடங்கியதா? அல்லது குர்ஆனுக்கு அப்பாற்பட்டதா? என்பதை முதலில் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் அத்தவ்பா என்ற 9-வது அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. இதைத் தவிர அன்னம்லு என்ற 27-வது அத்தியாயத்தின் 30-வது வசனத்திலும் இடம் பெறுகின்றது. இதில் அன்னம்லு அத்தியாயத்தின் இடையில் வருகின்ற பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த அறிஞரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.

113 அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். இரு கருத்துடையவர்களும் தங்களின் கருத்துக்குச் சில ஆதாரங்களையும் சமர்ப்பிக்கின்றனர்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதில்லை என்ற கருத்துடையோரின் ஆதாரங்களையும், அவர்களின் வாதங்களையும் முதலில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

நாம் ஏற்கனவே ஃபாதிஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி சில ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த ஹதீஸ்கள் அனைத்துமே இந்தக் கருத்துடையவர்களின் ஆதாரமாக உள்ளன.

குர்ஆனில் உள்ள மகத்தான அத்தியாயத்தைக் கற்றுத் தரட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் என்று கூறினார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது இந்த அத்தியாயத்தில் கட்டுப்பட்டதாக இருந்திருந்தால், அதிலிருந்து ஓதத் துவங்கி இருப்பார்கள் என்பது இந்த சாராரின் வாதம்.

இரண்டாவது ஆதாரம்

நீ தொழுகையைத் துவங்கியதும் என்ன ஓதுவாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று ஓதுவேன் என பதில் கூறினேன். அது தான் தலை சிறந்த அத்தியாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நபித்தோழர் ஃபாதிஹா அத்தியாயத்தை அல்ஹம்து விலிருந்தே தொடங்கி ஓதுகிறார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் அங்கீகரிக்கிறார்கள். பிஸ்மில்லாஹ்வும் அதன் ஒரு பகுதி என்றிருந்தால் திருத்திக் கொடுத்திருக்க மாட்டார்களா? இது இந்த சாராரின் கேள்வி.

மூன்றாவது ஆதாரம்

அபூஸயீதுல் குத்ரீ அவர்கள் ஒருவருக்கு ஓதிப்பார்க்கும் நிகழ்ச்சியில் அல்ஹம்துலில்லாஹி என்றே ஓதிப்பார்த்ததாக வந்துள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்றால் அதை அவர் விட்டிருக்க மாட்டார் அல்லவா? என்று இந்தக் கருத்துடையவர்கள் கேட்கிறார்கள்.

நான்காவது ஆதாரம்

தொழுகையில் ஓதுவதை எனக்கும், என் அடியானுக்கும் இடையில் நான் பங்கிட்டுள்ளேன் என்று வருகின்ற ஹதீஸில் அல்ஹம்து என்றே துவங்கப்படுகின்றது. இங்கேயும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறப்படாததால் அது அத்தியாயங்களில் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் இவர்கள்.

ஐந்தாவது ஆதாரம்

سنن أبي داود
1400 - حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً، تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ "

திருக்குர்ஆனின் 30 வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதுபவர் மன்னிக்கபடும் வரை அந்த அத்தியாயம் பரிந்துரை செய்து கொண்டே இருக்கும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தபாரகல்லதீ பியதிஹில் முல்கு என்ற அத்தியாயமே அது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 7634, அபூதாவூத் 1192, திர்மிதீ 2716

தபாரகல்லதீ அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டும் போது தபாரகல்லதீ என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதைக் குறிப்பிடவில்லை. மேலும் இந்த அத்தியாயத்தில் 30 வசனங்கள் உள்ளதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்காமல் தான் 30 வசனங்கள் உள்ளன. அதைச் சேர்த்தால் 31 ஆகிவிடும். எனவே எந்த அத்தியாயத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கட்டுப்பட்டதல்ல என்று இவர்கள் கூறுகிறார்கள்.

ஆறாவது ஆதாரம்

صحيح مسلم
وَعَنْ قَتَادَةَ أَنَّهُ كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ: " صَلَّيْتُ خَلَفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَكَانُوا يَسْتَفْتِحُونَ بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا يَذْكُرُونَ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا "

நான் அல்லாஹ்வின் தூதருடனும், அபூபக்ருடனும், உமருடனும் உஸ்மானுடனும் தொழுதிருக்கிறேன். அவர்கள் அல்ஹம்து லில்லாஹி ... என்றே துவங்குவார்கள். யாரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை ஆரம்பத்திலோ கடைசியிலோ ஓதி நான் கேட்டதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 605

இதே கருத்தை அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) அவர்களும் அறிவிக்க அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்து என்றே ஓதத் துவங்கியதாக இந்த ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனக் கூற மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயங்களின் ஒரு பகுதி அல்ல. ஒரு அத்தியாயம் முடிவுற்று, அடுத்த அத்தியாயம் துவங்குகிறது என்று அடையாளம் காட்டுவதற்காகவே அத்தியாயங்களின் துவக்கத்தில் அது எழுதப்படுகின்றது என்று இந்த சாரார் வாதிக்கிறார்கள்.

இந்த சாராரின் வாதங்கள் சரியானவை அல்ல. மாற்றுக் கருத்துக் கொண்டோரின் வாதங்களே பலமானவை. மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களையும் இந்த ஆதாரங்களுக்கு அவர்கள் தருகின்ற பதிலையும் பார்ப்போம்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ, அல்லது பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதைக் குர்ஆன் என அறிமுகம் செய்திருக்க வேண்டும்.

குர்ஆன் வசனம் என்று நிரூபணம் செய்ய ஒன்றிரண்டு நபித்தோழர்கள் அறிவிப்பது மட்டும் போதுமான ஆதாரமாகாது.

அல்ஃபாத்திஹா அத்தியாயம் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று நாம் நம்புகிறோம். எவ்வாறு நம்புகிறோம்? ஒட்டுமொத்த சமுதாயமும் - ஒருவர் கூட மாற்றுக் கருத்துக் கொள்ளாமல் இதைக் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று முடிவு செய்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினர்.

எனவே இது போல் வலிமையான சான்றின் மூலம் மட்டுமே குர்ஆன் வசனம் என்று முடிவு எடுக்க வேண்டும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டவுடன் அதை எழுதக் கூடியவர்களை உடனுக்குடன் அழைத்து எழுதி வைக்கச் செய்தார்கள். திருக்குர்ஆனுடன் திருக்குர்ஆன் அல்லாத எந்த வார்த்தையும் கலந்து விடாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்

உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைத் தொகுத்த போது எழுத்தர்களான நபித்தோழர்கள் எந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்களோ, எந்த வரிசையில் மனனம் செய்திருந்தார்களோ அந்த அடிப்படையில் தான் தொகுத்தார்கள். எனவே எந்த வசனம் எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசைப்படுத்தி ஓதியும், எழுதச் செய்தும் வழிகாட்டியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு வசனத்தை எந்த இடத்தில் எழுத வேண்டும் என்பது உட்பட எல்லாக் குறிப்புகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி குர்ஆனில் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள் என்பது மேற்கூறிய ஹதீஸிலிருந்து தெளிவாகும்.

صحيح البخاري 
3758 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ، مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ [ص:28]، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»، قَالَ: لاَ أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ، أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ

அப்துல்லாஹ் பின் மஸ்வூது, ஸாலிம், முஆத், உபை பின் கஃபு ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி 3758, 3760, 3806, 3808

صحيح البخاري 
5000 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقُ بْنُ سَلَمَةَ، قَالَ: خَطَبَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَقَالَ: «وَاللَّهِ لَقَدْ أَخَذْتُ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضْعًا وَسَبْعِينَ سُورَةً، وَاللَّهِ لَقَدْ عَلِمَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي مِنْ أَعْلَمِهِمْ بِكِتَابِ اللَّهِ، وَمَا أَنَا بِخَيْرِهِمْ»، قَالَ شَقِيقٌ: فَجَلَسْتُ فِي الحِلَقِ أَسْمَعُ مَا يَقُولُونَ، فَمَا سَمِعْتُ رَادًّا يَقُولُ غَيْرَ ذَلِكَ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து எழுபதுக்கும் அதிகமான அத்தியாயங்களைப் பெற்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் வேதத்தை நான் நன்கு அறிந்தவன் என்பதை நபித்தோழர்கள் விளங்கி இருக்கிறார்கள். (இதனால்) நான் அவர்களை விட (எல்லா விதத்திலும்) சிறந்தவனில்லை என்று ஒரு சொற்பொழிவில் இப்னு மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா (ரலி)

நூல்: புகாரி 5000

صحيح البخاري 
5002 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ، مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ، وَلاَ أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّي بِكِتَابِ اللَّهِ، تُبَلِّغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ»

அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவருமில்லை. அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தில் எந்த அத்தியாயம் அருளப்பட்டாலும் அது எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்த வசனம் அருளப்பட்டாலும் அது யாரைப் பற்றி அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட நன்கு அறிந்தவர்கள் ஒட்டகத்தில் சென்றடையும் தூரத்தில் இருந்தாலும் நான் அவர்களை நோக்கிப் பயணமாகி இருப்பேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி)

நூல்: புகாரி 5002

صحيح البخاري 
5003 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَنْ جَمَعَ القُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: " أَرْبَعَةٌ، كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ: أُبَيُّ بْنُ كَعْبٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ " تَابَعَهُ الفَضْلُ، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனைத் திரட்டியவர்கள் யார்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். உபை பின் கஃபு, முஆது பின் ஜபல், ஸைத் பின் ஸாபித், அபூஸைத் ஆகிய அன்ஸார்களைச் சேர்ந்த நால்வர் தான் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரலி)

நூல்: புகாரி 5003

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்அன் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது என்பதையும், எந்த இடத்தில் யாரைப் பற்றி அந்த வசனங்கள் அருளப்பட்டன என்ற விபரங்கள் உட்பட எல்லா விபரங்களும் நபித்தோழர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதையும் இந்த ஹதீஸ்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு அருளப்பட்டு உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவைகளை ஆண்டு தோறும் சரிபார்க்கும் பணியும் இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

صحيح البخاري 
3624 - فَقَالَتْ: أَسَرَّ إِلَيَّ: «إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِي القُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ عَارَضَنِي العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أُرَاهُ إِلَّا حَضَرَ أَجَلِي، وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِي لَحَاقًا بِي». فَبَكَيْتُ، فَقَالَ: «أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ، أَوْ نِسَاءِ المُؤْمِنِينَ» فَضَحِكْتُ لِذَلِكَ

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். இந்த ஆண்டு இரண்டு முறை எனக்கு ஓதிக் காட்டினார்கள். இதன் மூலம் என் வாழ் நாள் (தவணை) நெருங்கி விட்டதாகவே நான் கருதுகின்றேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா (ரலி)

நூல்: புகாரி 3624

صحيح البخاري 
1902 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ، يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். அதிலும் (குறிப்பாக) ரமளான் மாதத்தில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனெனில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலானில் ஒவ்வொரு இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை எடுத்தோதுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4997

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை திருக்குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள் என்ற ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஓதிக்காட்டியதன் மூலமும் ஒத்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

صحيح مسلم 
72 - (3004) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَكْتُبُوا عَنِّي، وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ، وَحَدِّثُوا عَنِّي، وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ - قَالَ هَمَّامٌ: أَحْسِبُهُ قَالَ - مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "

என் மூலம் குர்ஆன் அல்லாத எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையும் பிறப்பித்திருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5326

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களை எழுதி வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆகவே மேற்கூறிய ஹதீஸுக்கு குர்ஆனுடன் கலந்து விடுமாறு எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்றே நாம் பொருள் கொள்ள முடியும்.

திருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒரு சொல்லையும் குர்ஆனுடன் இணைத்து எழுதாதீர்கள்! என்ற கட்டளையின் மூலம் குர்ஆன் விஷயத்தில் மிகமிக அதிக கவனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணரலாம். நபித்தோழர்களும் குர்ஆனில் சேராத எந்த ஒன்றையும் சேர்த்து எழுதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அருளப்பட்ட எந்த வசனமும் எழுதப்படாமல் விடுபட்டதில்லை. எனினும் ஒட்டுமொத்தமாக நூல் வடிவில் அது தொகுக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக பல்வேறு நபித்தோழர்கள் தங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை எழுதிக் கொண்டார்கள். சிலர் எழுதிக் கொண்டது வேறு சிலரிடம் இல்லாமல் இருந்தது.

சில வசனங்கள், அத்தியாயங்கள் அருளப்பட்ட போது சில நபித்தோழர்கள் எங்கேனும் சென்றிருந்தால் அவர்கள் அதை எழுதிக் கொள்ள முடியாமல் போனது.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் எல்லா நபித்தோழர்களும் எழுதி வைத்துள்ளதைத் திரட்டிஉ கோர்வை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் கட்டாயத்தை மேலும் உறுதிப் படுத்துவதற்கான நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

صحيح البخاري 
4679 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ - وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الوَحْيَ - قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ اليَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ: إِنَّ القَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ اليَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ القَتْلُ بِالقُرَّاءِ فِي المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ القُرْآنَ "، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ لِعُمَرَ: «كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ، قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، وَلاَ نَتَّهِمُكَ، «كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ، فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ القُرْآنِ، قُلْتُ: «كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالأَكْتَافِ، وَالعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ مِنْ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إِلَى آخِرِهِمَا، وَكَانَتِ الصُّحُفُ الَّتِي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ، وَاللَّيْثُ [ص:72]، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، وَقَالَ مُوسَى: عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، مَعَ أَبِي خُزَيْمَةَ، وَتَابَعَهُ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَقَالَ أَبُو ثَابِتٍ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ. وَقَالَ: مَعَ خُزَيْمَةَ أَوْ أَبِي خُزَيْمَةَ

யாமாமா போர் நடந்த பின் அபூபக்ரு (ரலி) எனக்குத் தூது அனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்ற போது) உமர் (ரலி) அவர்களும் அவர்களுடனிருந்தனர். திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை யமாமா போர்க்களம் அதிக அளவில் அழித்து விட்டது. இது போல் பல்வேறு போர்க்களங்களில் குர்ஆனை மனனம் செய்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டு விட்டால் குர்ஆனில் பெரும்பகுதி அழிந்துவிடுமோ? என அஞ்சுகிறேன். எனவே குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று உமர் என்னை வற்புறுத்துகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நான் எப்படிச் செய்வது என்று உமருக்கு நான் பதில் கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது மிகவும் சிறந்த பணி தான்! உமர் கூறினார். இறைவன் என் உள்ளத்திலும் அதன் நியாயத்தை உணர வைக்கும் வரை உமர் என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். (இறுதியில்) உமருடைய கருத்துக்கே நானும் வந்தேன் என்று என்னிடம் அபூபக்ரு (ரலி) விபரமாகக் கூறினார்கள். மேலும் என்னை நோக்கி, அறிஞனாகவும், இளைஞனாகவும் நீர் இருக்கிறீர்! நாம் உம்மைச் சந்தேகிக்க மாட்டோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயை நீர் எழுதிக் கொண்டுமிருந்தீர்! எனவே குர்ஆன் வசனங்களைத் தேடி எடுத்து ஒன்று திரட்டுவீராக என்று அபூபக்ரு (ரலி) கட்டளையிட்டார்கள். குர்ஆனைத் திரட்டும் இந்தப் பணியை விட மலைகளில் ஏதேனும் ஒரு மலையை இடம் பெயர்க்கும் படி எனக்கு அவர் கட்டளையிட்டிருந்தால் அது எனக்கு அவ்வளவு சிரமமாக இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்ய முடியும்? என்று நான் அவர்களிடம் கேட்டேன். இது மிகவும் சிறந்த பணி தான் என்று அவர்கள் கூறினார்கள். அபூபக்ரும், உமரும் கொண்ட கருத்தை நான் கொள்ளும் வரை அபூபக்ரு என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். பேரீச்சை மட்டைகள், ஓடுகள், மனித உள்ளங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆனை நான் திரட்டலானேன். தவ்பா அத்தியாயத்தின் இறுதிக்கு நான் வந்த போது லகத் ஜாஅகும் ரஸுலுன்... என்ற கடைசி வரிகளை அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் தவிர வேறு எவரிடமும் நான் காணவில்லை. அதை தவ்பா வின் இறுதியில் சேர்த்தேன். பிறகு அந்த ஏடு அபூபக்ரு அவர்களிடம் இருந்தது. அதன் பின் உமரிடம் இருந்தது. அதன் பின் உமருடைய மகள் ஹஃப்ஸாவிடம் இருந்தது.

அறிவிப்பவர்: ஸைது பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 4679, 4986, 7191

இந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் எழுத்து வடிவில் இருந்தாலும் இது குர்ஆனில் உள்ளது தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

المستدرك على الصحيحين للحاكم 

3296 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا بَكَّارُ بْنُ قُتَيْبَةَ الْقَاضِي، ثنا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنِ عَمْرٍو الْعَقَدِيُّ، ثنا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، وَعَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ} » حَدِيثُ شُعْبَةَ عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ «صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخْرِجَاهُ»

[التعليق - من تلخيص الذهبي] 3296 - على شرط البخاري ومسلم

இந்த வசனம் தான் குர்ஆனில் இறுதியாக அருளப்பட்டது என்று உபை பின் கஅப் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

நூல் : ஹாகிம்

திருக்குர்ஆனைத் திரட்டும் பணியை மேற்கொண்ட ஸைது பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒரு வசனத்தை குர்ஆனில் இணைக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் எழுதி வைத்திருந்தால் பதிய மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ் உணர்த்துகின்றது.

லகத்ஜா அகும் ரஸுலுன்... என்ற வசனம் அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் மட்டுமே இருந்தது என்று கூறுவதன் மூலம் மற்ற வசனங்களை பலரும் எழுதி வைத்திருந்தார்கள் என்பதை நாம் உணரலாம். அந்த வசனம் மட்டும் தான் ஒரே ஒருவரிடம் இருந்திருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். அந்த ஒரு வசனத்தைக் கூட உடனே ஸைது பின் ஸாபித் (ரலி) தவ்பா அத்தியாயத்தில் சேர்த்து விடவில்லை. அதையும் நன்கு பரிசீலனை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படாத எந்த ஒரு வார்த்தையையும் மேம்போக்காக அந்த அறிஞர் குழுவினர் குர்ஆனுடன் சேர்த்து விடவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள மேற்கூறிய ஆதாரங்கள் போதுமானவையாகும்.

இந்த அறிஞர் குழுவின் மாபெரும் பரிசீலனையுடன் திரட்டப்பட்ட குர்ஆனில் தவ்பா தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.

صحيح البخاري
4987 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ: أَنَّ حُذَيْفَةَ بْنَ اليَمَانِ، قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ أَرْمِينِيَةَ، وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ العِرَاقِ، فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي القِرَاءَةِ، فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ، قَبْلَ [ص:184] أَنْ يَخْتَلِفُوا فِي الكِتَابِ اخْتِلاَفَ اليَهُودِ وَالنَّصَارَى، فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ: «أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي المَصَاحِفِ، ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ»، فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ، فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ العَاصِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي المَصَاحِفِ "، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ القُرَشِيِّينَ الثَّلاَثَةِ: «إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَيْءٍ مِنَ القُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ» فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي المَصَاحِفِ، رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا، وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ القُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ، أَنْ يُحْرَقَ

அபூபக்ரு (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் திரட்டப்பட்டு நூலுருவம் பெற்ற குர்ஆன் ஒரே ஒரு பிரதி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களின் வாழ்நாளில் அந்தப் பிரதி அவர்களிடம் இருந்து வந்தது. அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. அதன் பின் உமர் (ரலி) அவர்களின் மகளார் அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவிய போது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகத் திருக்குர்ஆனை ஓதலானார்கள். ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளும் ஒரே மூலப் பிரதி மதீனாவில் ஹஃப்ஸா (ரலி)யிடம் மட்டுமே இருந்தது. எல்லாப் பகுதி மக்களும் குர்ஆனை அதன் உண்மையான அமைப்பில் ஓதிட வேண்டும் என்பதற்காக மூலப் பிரதிக்கு பல நகல்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் உஸ்மான் (ரலி) அனுப்பினார்கள். ஹுதைஃபதுல் யமான் (ரலி) அவர்கள் அர்மீனியா அஜர்பைஜான் வெற்றியின் போது அங்குள்ளவர்கள் குர்ஆனை ஓதுவதில் பல்வேறு முறைகளைக் கையாண்டு வந்ததைக் கண்டனர். இது அவர்களைத் திடுக்கமுறச் செய்தது (அப்போதை ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து மூமின்களின் தலைவரே! யூத கிறித்தவர்கள் தங்கள் வேதங்களில் முரண்பட்டது போல் இந்தச் சமுதாயத்தினரும் முரண்படுவதற்கு முன்பாக இவர்களைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறினார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆன் (மூலப்) பிரதியை எங்களுக்குத் தந்துதவுங்கள். அதைப் போல் பல பிரதிகள் தயார் செய்து கொண்டு திருப்பித் தருகிறோம் என்று ஹஃப்ஸாவிடம் கேட்டு அனுப்பினார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்களும் தம்மிடமிருந்த பிரதியை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), ஸயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரைப் பல பிரதிகள் தயாரிக்கும்படி கட்டளையிட்டார்கள். அதன்படி பல பிரதிகளை அவர்கள் தயார் செய்தார்கள். மேற்கூறிய நால்வரில் ஸைத் பின் ஸாபித் (ரலி) (அவர்களைத் தவிர உள்ள) குறைஷிகளான மூவரையும் நோக்கி, நீங்களும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனில் (எப்படி ஓதுவது என்பதில்) கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதனை எழுதுங்கள்! ஏனெனில் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே குர்ஆன் இறங்கியது என்று கூறினார்கள். அப்படியே அவர்கள் செய்தார்கள். பல பிரதிகள் தயாரான பின் மூலப் பிரதியை ஹஃப்ஸா (ரலி)யிடம் உஸ்மான் (ரலி) ஒப்படைத்தார்கள். (நகல் எடுக்கப்பட்ட) பிரதிகளை நாலா பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். அதைத் தவிர உள்ள மற்ற ஏடுகளைத் தீயிட்டு எரித்து விடும்படிக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4988

மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து விளங்கும் உண்மைகளை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் எவ்வாறு இறங்கியதோ அவ்வாறே எதையும் கூட்டாமல் குறைக்காமல் ஒரு பிரதியை அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்தார்கள். பல அறிஞர்களின் தகுந்த பரிசீலனைக்குப் பின் அந்த ஒரு பிரதி தயாரிக்கப்பட்டது.

அந்த ஒரு பிரதியை பல நகல்களாக எடுக்கும் திருப்பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்கொண்டார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த மூலப் பிரதியில் உள்ளதற்கு மேல் எந்த ஒன்றையும் அவர்கள் சேர்க்கவோ, நீக்கவோ இல்லை.

அவர்களால் தொகுக்கப்பட்டவற்றில் எவை எழுதப்பட்டிருந்ததோ அவை அனைத்துமே திருக்குர்ஆன் தான். ஸஹாபாக்கள் அத்தனை பேரின் ஒட்டுமொத்தமான கருத்தும் அது தான். அந்தப் பிரதிகளில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனமும் எழுதப்பட்டிருந்தது.

தவ்பா என்ற அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டுமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டிருக்கவில்லை. ஸஹாபாக்கள் அனைவரும் எதைக் குர்ஆன் என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அதில் எந்த ஒன்றையும் குர்ஆன் அல்ல என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனும், உஸ்மான் (ரலி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறுதலாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார். அது பற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் எழுதப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி தான் என்பதற்கு இது வலுவான சான்றாகும்.

سنن أبي داود 
788 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَابْنُ السَّرْحِ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُتَيْبَةُ فِيهِ: عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، وَهَذَا لَفْظُ ابْنِ السَّرْحِ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 669

அத்தியாயம் முடிந்ததன் அடையாளமாக பின்னால் வந்தவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்கவில்லை என்பதையும், அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளையே என்பதையும், எனவே அது குர்ஆனின் ஒரு பகுதி என்பதையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் என்ற சொற்றொடர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது தவ்பா அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களிலும் ஒரு வசனம் தான் என்பதைக் கண்டோம். முதல் சாரார் எடுத்து வைத்த ஆதாரங்களுக்கான விளக்கத்தை இனி காண்போம்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சில அத்தியாயங்களைக் குறிப்பிடும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமல் அந்த அத்தியாயங்களை ஓதி இருக்கிறார்கள். இந்தக் கருத்தில் ஐந்து ஹதீஸ்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயத்தின் ஒரு பகுதியில்லை என்பதற்குப் போதிய சான்றாக அவை ஆகமாட்டா.

ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சில அத்தியாயங்களை ஓதிக் காட்டியுள்ளனர்.

صحيح مسلم 
53 - (400) حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْمُخْتَارِ، عَنْ أَنَسٍ، قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا، فَقُلْنَا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «أُنْزِلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ» فَقَرَأَ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ} [الكوثر: 2] ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ؟» فَقُلْنَا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: " فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ، عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ، هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ، فَيُخْتَلَجُ الْعَبْدُ مِنْهُمْ، فَأَقُولُ: رَبِّ، إِنَّهُ مِنْ أُمَّتِي فَيَقُولُ: مَا تَدْرِي مَا أَحْدَثَتْ بَعْدَكَ " زَادَ ابْنُ حُجْرٍ، فِي حَدِيثِهِ: بَيْنَ أَظْهُرِنَا فِي الْمَسْجِدِ. وَقَالَ: «مَا أَحْدَثَ بَعْدَكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் எங்களுடன் இருந்த போது சிறிது நேரம் தலை கவிழ்ந்துவிட்டு பின்னர் சிரித்தவர்களாகத் தம் தலையை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதற்காகச் சிரிக்கின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். சற்று முன் எனக்கு ஒரு அத்தியாயம் அருளப்பட்டது. அதில் எனக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதால் அதற்காக மகிழ்ச்சியுற்று சிரித்தேன் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இன்னா அஃதைனாகல் கவ்ஸர்... என்று ஓதிக் காட்டலானார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 607

ஒரு அத்தியாயம் இறங்கியதாகக் கூறி அந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அதை ஓதிக் காட்டுகின்றார்கள்.

صحيح البخاري
5046 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا»، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள் என்று கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: புகாரி 5046

سنن أبي داود 
4001 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا ذَكَرَتْ أَوْ كَلِمَةً غَيْرَهَا " قِرَاءَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. الرَّحْمَنِ الرَّحِيمِ. مَلِكِ يَوْمِ الدِّينِ) يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً " قَالَ أَبُو دَاوُدَ: «سَمِعْتُ أَحْمَدَ يَقُولُ الْقِرَاءَةُ الْقَدِيمَةُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: அபூதாவூத் 3487

இந்த மூன்று நபிவழிகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அத்தியாயங்களை ஓதி இருப்பது தெளிவாகக் கூறப்படுகிறது.

சில சமயங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடனும், வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இல்லாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை ஓதியுள்ளது முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதில் முரண்பாடு எதுவுமில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வை இணைத்துக் கொள்ளும்படி இறைவனது உத்தரவு வராமல் இருந்து, பின்னரே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பே ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டோம். இந்த ஹதீஸின் அடிப்படையில் மேற்கூறிய இரு கருத்துடைய ஹதீஸ்களை இணைக்கும் போது நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்துவிடும்.

அதாவது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்குவதற்கு முன்னர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமலும், அதன் பின்னர் அதனைக் கூறியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதி இருக்கிறார்கள். இரண்டு வகையான ஹதீஸ்களுக்கும் அப்போது தான் அர்த்தமிருக்கும்.

سنن الدارقطنى
1207 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلٍ حَدَّثَنَا خَلاَّدُ بْنُ خَالِدٍ الْمُقْرِى حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ عَنِ السُّدِّىِّ عَنْ عَبْدِ خَيْرٍ قَالَ سُئِلَ عَلِىٌّ رضى الله عنه عَنِ السَّبْعِ الْمَثَانِى فَقَالَ (الْحَمْدُ لِلَّهِ) فَقِيلَ لَهُ إِنَّمَا هِىَ سِتُّ آيَاتٍ فَقَالَ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ) آيَةٌ.

ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எவை? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றார்கள். அதில் ஆறு வசனங்கள் தானே உள்ளன என்று மறுபடியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (என்பதையும் சேர்த்து ஏழு வசனங்கள்) என்று பதில் கூறினார்கள்.

நூல் தாரகுத்னியில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வையும் அந்தந்த அத்தியாயங்களில் ஒரு பகுதியாகவே நபித்தோழர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கும் திருக்குர்ஆனில் ஸப்வுல் மஸானி என்று கூறப்படுவது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்ந்த ஃபாத்திஹா அத்தியாயம் தான் என்பதற்கும் இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத மாட்டார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயங்களின் ஒரு பகுதி இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. ஏனெனில் வேறு சில அறிவிப்புகளில் சப்தமிட்டு அதை ஓத மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறப்படுகின்றது. சப்தமிட்டோ, சப்தமிடாமலோ ஓதினார்கள் என்பதை வைத்து ஒன்றைக் குர்ஆனில் உள்ளதா? இல்லையா? என்று முடிவு செய்ய முடியாது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் வேறு படுத்தி அறிந்து கொள்வதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சிலர் கூறுவது பொருத்தமானது அல்ல.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டது என்றால் இரண்டு சூராக்களுக்கிடையில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். முதல் சூராவாகிய ஃபாதிஹாவில் அது எழுதப்பட வேண்டியதில்லை.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்றால் தவ்பா அத்தியாயத்திலும் அது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அத்தியாயங்களைப் பிரித்துக் காட்டத் தான் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்ற காரணம் சரியானது என்றால் தவ்பா, அன்பால் இரண்டையும் பிரித்துக் காட்ட பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் தேவையல்லவா?

ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகின்றது என்பதைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வாசகத்தைச் சேர்த்திருக்க வேண்டியதில்லை. ஒரு அத்தியாயம் முடிந்ததும், நீண்ட கோடு போன்ற அடையாளங்களைப் போட்டு வேறுபடுத்த முடியும். அர்த்தமும் கருத்துமுள்ள அழகான வசனத்தை உருவாக்கி குர்ஆனில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வாசகத்தைச் சேர்த்திருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வின் உத்தரவுப்படியே அந்த வசனம் அத்தியாயங்களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. எந்த மனிதனுடைய அபிப்பிராயப்படியும் எதுவும் நபித்தோழர்களால் குர்ஆனில் சேர்க்கப்படவில்லை. அவ்வளவு வடிகட்டித் தான் குர்ஆன் தொகுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால் இது பற்றிய ஐயங்கள் அகன்று விடும்.

அல்ஹம்து அத்தியாயத்தின் பொருள்

இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை அறிவதற்கு முன் இதன் நேரடிப் பொருளை அறிந்து கொள்வோம்.

* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

* அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

* அர்ரஹ்மானிர் ரஹீம்

(அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

* மாலிகி யவ்மித்தீன்:

(அவன்) நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி

* இய்யா(க்)க நஃபுது

(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.

* வ இய்யா(க்)க நஸ்தயீன்

உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

* இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்

(இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!

* ஸிரா(த்)தல்லதீன அன் அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

பிஸ்மில்லாஹ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இறை வசனத்திற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் என்று பொருள்.

இந்தச் சொற்றொடரில் பிஸ்மி அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. அல்லாஹ் என்ற சொல் அடுத்த வசனத்திலும் இடம் பெற்றுள்ளதால் அல்லாஹ் என்ற திருப்பெயர் பற்றி அந்த இடத்தில் விளக்குவோம். அது போல் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் அதற்கு அடுத்த வசனத்தில் இடம் பெறுவதால் அந்த இடத்தில் இவ்விரு திருப்பெயர்கள் பற்றி விளக்குவோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கூறியே எந்தக் காரியத்தையும் துவக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கே விளக்குவோம்

முஸ்லிம்கள் தங்களின் எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கூறியே செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் மட்டுமின்றி, ஏனைய நபிமார்களும் அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனின் திருப்பெயர் கூறியே தங்கள் காரியங்களைத் துவங்கியுள்ளனர்.

நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் ஏறும் போது அல்லாஹ்வின் திருநாமத்தால் இதில் ஏறுங்கள்! என்று கூறியதாக திருக்குர்ஆனின் 11:41 வசனம் குறிப்பிடுகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு ராணிக்கு எழுதிய மடலில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆனின் 27:30 வசனம் குறிப்பிடுகின்றது.

படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் நீர் ஓதுவீராக! என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம். முதல் வசனத்திலேயே தனது திருநாமத்தால் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதிலிருந்து பிஸ்மில்லாஹ்வின் மகத்துவத்தை நாம் தெளிவாக உணரலாம்.

திருக்குர்ஆனை ஓதும் போது மட்டுமின்றி எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கொண்டே நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

سنن النسائي 
78 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ: طَلَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا. فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ مَاءٌ؟» فَوَضَعَ يَدَهُ فِي الْمَاءِ وَيَقُولُ: «تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ». فَرَأَيْتُ الْمَاءَ يَخْرُجُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ قَالَ ثَابِتٌ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ تُرَاهُمْ؟ قَالَ: نَحْوًا مِنْ سَبْعِينَ

நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள் என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித்

நூல்: நஸயீ 77

صحيح البخاري 
5376 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ الوَلِيدُ بْنُ كَثِيرٍ: أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ

உன் வலக்கரத்தால் உண்! அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உனக்கு அருகே உள்ளதை உண்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அபீ ஸலமா (ரலி)

நூல்: புகாரி 5376

صحيح البخاري
3271 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ، وَقَالَ: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَرُزِقَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ "

மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் பிஸ்மில்லாஹ் கூற வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3271

அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போதும் இறைவனின் திருப்பெயர் கூறியே அறுக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆனின் 6:118, 6:121 ஆகிய வசனங்களும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன.

ஆனால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இதே சொல்லைத் தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஏனெனில் உண்ணும் போது, அறுக்கும் போது, உடலுறவு கொள்ளும் போது என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) பிஸ்மிக (உன் பெயரால்) என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுத் தந்தார்களோ அதனையே கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றுவதாகும். எந்தச் சந்தர்ப்பங்களில் வேறு விதமாக சொல்லித் தரவில்லையோ அது போன்ற சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறலாம்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன்

ரப்புல் ஆலமீன்

ரஹ்மான்

ரஹீம்

மாலிகி யவ்மித்தீன்

ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இதன் கருத்து. இந்நான்கு பண்புகளிலும் இறைவனுக்குரிய அனைத்து இலக்கணங்களும் அடங்கியுள்ளன. இப்பண்புகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் எவரும் அல்லாஹ்வை முழுமையாகப் புரிந்து கொள்கின்றனர்.

இந்த நான்கு பண்புகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று இங்கே கூறப்படுவதால் அல்லாஹ் எனும் திருப்பெயர் பற்றி முதலில் ஆராய்ந்து விட்டு பின்னர் இந்நான்கு பண்புகளை ஆராய்வோம்.

அல்லாஹ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக எந்த மக்களைச் சந்தித்தார்களோ அந்த மக்கள் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அறிந்திருந்தார்கள். அகில உலகையும் படைத்து அனைத்து ஆற்றலையும் தன்னகத்தே கொண்டு அகில உலகையும் நிர்வகிக்கும் கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அல்லாஹ் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி போதிக்கும் முன்பாகவே அம்மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அம்மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறாகும். ஏராளமான சான்றுகளின் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்துல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் நபியவர்களின் பாட்டனார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம். அல்லாஹ் தான் எஜமான். மாந்தர் அனைவரும் அவனது அடிமைகளே என்ற நம்பிக்கை அம்மக்களுக்கு இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் பெயரிட்டிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைத்துள்ளான்.

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

29:63, 31:25, 39:38, 43:87, 10:31, 23:84-89 ஆகிய வசனங்களிலும் அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இய்யாக நஃபுது வசனத்தை விளக்கும் போது இது பற்றி விரிவாக நாம் விளக்கவுள்ளோம்.

அகில உலகைப் படைத்தவன், அனைத்து ஆற்றலும் உள்ளவன், அர்ஷில் வீற்றிருப்பவன், மழையையும் உணவையும் வழங்குபவன் அல்லாஹ் தான் என்று அம்மக்கள் நம்பியிருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் இவை.

அல்லாஹ்வை சர்வ சக்தியுள்ளவனாக நம்பிய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏன் எதிர்த்தனர்?

அல்லாஹ்வின் முழு இலக்கணத்தை அவர்கள் விளங்காததே காரணமாகும்.

இதன் காரணமாகத் தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுடன் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளாமல் இறைவனுக்குரிய முழு இலக்கணத்தையும் அம்மக்களுக்கு விளக்குவதற்காக தொடர்ந்து நான்கு பண்புகளைக் கூறுகிறான். அப்பண்புகளை ஒவ்வொன்றாக நாம் காண்போம்.

ரப்புல் ஆலமீன்

அனைவரும் அடிமைகளே

முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.

அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.

படைப்பினங்களுக்கும், இறைவனுக்குமிடையே உள்ள உறவை வல்ல அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். அகில உலகுக்கும் அவன் எஜமானனாக இருப்பதால், அவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது அடிமைகளே. அடிமை - எஜமான் என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே கிடையாது.

இந்தப் பாடத்தை மறந்த காரணத்தினால் தான் மனித சமூகத்தில் பெரும்பாலோர் கடவுட் கொள்கையில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு தான் இறைவனுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தாலும், எவ்வளவு தான் அதிசயங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தாலும் அதிசயமான முறையிலே அவர் பிறந்தாலும் அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனுக்கு அவர் அடிமை தான்.

வேண்டுமானால் மற்ற அடிமைகளை விட சிறந்த அடிமை என்று கூறலாமே தவிர, அடிமை என்ற நிலையை விட்டும் உயர்ந்து விட்டார் என்று கூற முடியாது. இது தான் இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் பிரதான அம்சம். இந்த அம்சத்தைத் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடரில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் இதை விரிவாக விளக்கமாக எடுத்து வைத்து அடிமைகள், அடிமைகள் தாம், எஜமான் எஜமான் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரையாக அமைந்த அத்தகைய வசனங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

ஆதம் (அலை)

அல்லாஹ் தன் திருக்கரத்தால் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா? என்று (இறைவன்) கேட்டான்.

(அல்குர்ஆன் 38:75)

வானவர்களை அவர்களுக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கட்டளையிட்டு அவர்களின் மதிப்பை உயர்த்தினான். வானவர்களுக்கு கற்றுக் கொடுக்காததையெல்லாம் ஆதம் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர். ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக! என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா? என (இறைவன்) கேட்டான். ஆதமுக்குப் பணியுங்கள்! என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

(அல்குர்ஆன் 2:31 - 34)

இவ்வளவு சிறப்புக்கள் வழங்கப்பட்டிருந்த ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஒரு கட்டளையைத் தான் மீறினார்கள். போனால் போகிறது என்று அல்லாஹ் விடவில்லை.அவர்களைத் தூக்கி எறிந்து விட்டான்.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம்

(அல்குர்ஆன் 2:36)

(பார்க்க 2:38, 7:24, 20:123)

ஆதம் (அலை) அவர்கள் தமது தவறுக்காக வருந்தி பாவ மன்னிப்புக் கேட்ட பிறகு தான் அவர்களை மன்னித்தான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

அல்லாஹ் நேரடியாகப் படைத்த முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வால் அடிமையாகத் தான் நடத்தப்பட்டார்கள். அவர்களும் அடிமையாகத் தான் நடந்து கொண்டார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ், ரப்புல் ஆலமீனாக - அகிலத்துக்கும் எஜமானனாக இருப்பது தான்.

நூஹ் (அலை)

மிகப்பெரிய நபிமார்களில் நூஹ் (அலை) அவர்களும் ஒருவராவார்.

950 ஆண்டுகள் அவர்கள் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்தார்கள்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது

(அல்குர்ஆன் 29:14)

நூஹ் (அலை) அவர்களை மக்கள் நிராகரித்தனர். விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே அவர்களை ஏற்றனர். ஆனால் அவர்களின் மனைவியும், மகனும் அவர்களை ஏற்காத கூட்டத்தில் தான் இருந்தனர்.

அல்லாஹ்வுக்காக 950 ஆண்டு காலம் துன்பங்களைச் சகித்துக் கொண்டவர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட முடிந்ததா?

அப்படிக் கடந்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களது மகனையாவது அல்லாஹ் காப்பாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 11:42 - 47)

வெள்ளப் பிரளயத்திலிருந்து மகனைக் காப்பாற்ற நூஹ் (அலை) அவர்களால் இயலவில்லை. கப்பலில் ஏறச் சொல்லும் போது கூட நிராகரிப்பவர்களில் ஆகிவிடாதே எனக் கூறித் தான் அவனை அழைத்தார்கள். நபி என்ற காரணத்துக்காக மகனை ஏற்றிக் கொள்ளும் அதிகாரம் தமக்கு இல்லை என்பதை நூஹ் (அலை) உணர்ந்த காரணத்தினாலேயே கொள்கையை ஏற்று கப்பலில் ஏறச் சொல்கிறார்கள் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறிகிறோம்.

அழிக்கப்பட வேண்டியவர்கள் அழிக்கப்பட்ட பின் தமது மகன் பற்றி நூஹ் நபிக்கு நினைவு வருகிறது. தமது குடும்பத்தை அல்லாஹ் காப்பாற்றுவதாக வாக்களித்ததும் நினைவுக்கு வந்தது. எனவே தான் அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா! உன் வாக்குறுதி உண்மையானது தானே என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இதை அல்லாஹ் எவ்வளவு கடுமையாக எடுத்துக் கொள்கிறான் என்று பாருங்கள்!

அவன் உன் மகனில்லை

இவ்வாறு கேட்பது நல்ல செயல் கிடையாது.

உனக்கு அறிவு இல்லாததைப் பற்றி என்னிடம் இனிமேல் பேசக் கூடாது.

அறிவீனர்களில் ஒருவராக நீர் ஆகிவிடக் கூடாது.

நூஹ் நபிக்குச் சமமாகாதவர்களையெல்லாம் மகான்கள் எனவும் அவர்கள் நினைத்ததையெல்லாம் அல்லாஹ் செய்து கொடுக்கக் கடமைப்பட்டவன் போலவும் நம்புகிற சமுதாயமே! நூஹ் நபிக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையிலிருந்து பாடம் படியுங்கள்!

நான் எஜமான். நீர் அடிமை. நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமே தவிர நீர் விரும்புவதையெல்லாம் நான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று எவ்வளவு அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான் என்று சிந்தித்துப் பாருங்கள்!

இவ்வாறு அல்லாஹ் கண்டித்த உடன் நூஹ் நபி கூறியது தான் இங்கே மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்ன இறைவா! எனக்காக இதைக் கூட நீ செய்யக் கூடாதா? இதற்காக என்னைக் கோபித்துக் கொள்ளலாமா? என் மகனுக்காகக் கூட நான் பரிந்து பேச உரிமையில்லையா? என்று நூஹ் நபி கேட்கவில்லை.

இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன். அதற்காக என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் எனக்குத் தான் நட்டம் என்று தன் அடிமைத் தனத்தை நூஹ் நபி ஒப்புக் கொள்கிறார்கள்.

அல்லாஹ் தான் எஜமான். மற்றவர்கள் அவனுக்கு அடிமைகள் என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து ஐயமற அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபி அவர்களின் மகனுக்கு மட்டும் தான் இந்தக் கதி என்று நினைக்க வேண்டாம். அவரது மனைவியின் கதியும் இது தான். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 66:10)

மனைவியையோ, மகனையோ காப்பாற்றும் அதிகாரம் கூட எந்த நல்லடியாருக்கும் வழங்கப்படவில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாகவுள்ளது.

இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்காகவும் கூட அல்லாஹ் அடிமைத்தனத்திலிருந்து விலக்களிக்கவில்லை. மற்ற எவருக்கும் அளிக்காத பல தனிச் சிறப்புக்களை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் வழங்கி இருந்தான். அந்தச் சிறப்புக்களைக் கவனிக்கும் எவருக்குமே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட்டவரோ என்று தான் எண்ணத் தோன்றும்.

உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற பணியை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான்.

(அல்குர்ஆன் 2:127)

அந்த இல்லத்தைத் தூய்மைப்படுத்தும் திருப்பணியும் இப்ராஹீம் (அலை) அவர்களிடமே வழங்கப்பட்டது.

(அல்குர்ஆன் 2:125)

இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற அந்த இடத்தில் தொழுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 2:125)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மக்காவுக்கு அபயத்தையும், அந்தப் பாலைவனத்தில் பலவகையான உணவுகளையும் இன்றளவும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

(அல்குர்ஆன் 2:126)

இப்ராஹீம் (அலை) அவர்களைப் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்த போது அந்தச் சோதனையில் அவர்கள் வெற்றி பெற்றதாக அல்லாஹ் சொல்கிறான்.

(அல்குர்ஆன் 2:124)

மக்காவின் தனிச் சிறப்பைக் குறிப்பிடும் போது இப்ராஹீம் நின்ற இடமும் அங்கே உள்ளது என்று சிலாகித்துச் சொல்கிறான்.

(அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் என்ற தனி நபர் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்ததாக அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.

(அல்குர்ஆன் 16:120)

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும், குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) விட்டு வந்தார்கள்.

(அல்குர்ஆன் 14:37)

குழந்தை தாகத்தால் தவித்த போது ஹாஜரா அம்மையார் அவர்கள் ஸஃபா மர்வா எனும் மலைகளில் ஏறி ஏதாவது வாகனக் கூட்டம் தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.

நம்மையும் அது போல் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 2:158)

இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தார் செய்த ஒரு காரியத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுவதாக இருந்தால் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்?

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆட்டைப் பலியிட்டதற்காக நாமும் அதைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 37:108)

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தான் மீது கல்லெறிந்ததற்காக நாம் ஷைத்தானைக் காணாவிட்டாலும் நாமும் கல்லெறிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

அவர்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் நம் மீது மார்க்கக் கடமையாகவே ஆக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து அவர்கள் மீது அல்லாஹ் எந்த அளவு நேசம் வைத்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 16:123)

இப்ராஹீமைத் தனது நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 4:125)

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் . இப்ராஹீமுக்கு நீ அருள் புரிந்ததைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அருள் புரிவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

(புகாரி 3370)

இதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள இயலும்.

இவ்வளவு மகத்தான சிறப்புக்களைப் பெற்றிருந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து விலக்குப் பெறவும் இல்லை. எஜமான் என்ற தனது தன்மையில் அல்லாஹ் அவர்களுக்குப் பங்களிக்கவுமில்லை.

நம்முடைய அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யாஃகூப் ஆகியோரை (நபியே) நீர் நினைவு கூர்வீராக!

(அல்குர்ஆன் 38:45)

தன்னுடைய அடியார்களில் ஒருவராகவே அவர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதனால் தான் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களில் சிலவற்றை அல்லாஹ் நிறைவேற்றாமலும் இருந்திருக்கிறான்.

அவர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இமாமாக (தலைவராக) நியமித்த நேரத்தில் என் சந்ததிகளிலும் அத்தகையவர்களை ஏற்படுத்துவாயாக என்று கேட்கிறார்கள். அக்கிரமம் புரிபவர்களுக்கு என் வாக்குறுதி சேராது என்று அல்லாஹ் கூறி விடுகிறான்.

(அல்குர்ஆன் 2:124)

இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளாக இருக்கின்ற தகுதியை மட்டும் வைத்து எவரும் இறைவனின் அன்பைப் பெற இயலாது. இறைவனுக்கு அடிமைகளாக வாழ்வதோடு, அல்லாஹ் எஜமான் என்பதையும் ஏற்று வாழ வேண்டும் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனால் தான் அவர்களின் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அனுமதி மறுக்கிறான்.

(அல்குர்ஆன் 9:114)

ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை.

தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான் என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 11:71,72)

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

(அல்குர்ஆன் 15:53,54)

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே என்றார்.

(அல்குர்ஆன் 51:29)

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

(அல்குர்ஆன் 14:39)

ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை.

எதை விரும்புகிறானோ எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.

ஈஸா (அலை)

ஈஸா (அலை) என்ற இறைத் தூதரின் பிறப்பு அதிசயமான ஒன்று. இது உலகின் இரண்டு பெரும் சமுதாயத்தினர் ஏற்றுக் கொண்ட உண்மை. தந்தையின்றி இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் அவர்கள் படைக்கப்பட்டார்கள். இதைத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

(அல்குர்ஆன் 3:47, 19:20)

இவ்வளவு அதிசயமான முறையில் பிறந்து விட்டதனால் இறைவனின் அடிமை என்ற நிலையை ஈஸா (அலை) கடந்து இறைவனுக்குச் சகோதரனாக, மகனாக ஆகிவிட முடியுமா? அவர்களையே அல்லாஹ் பின்வருமாறு கூறச் செய்து விடுகின்றான். அதுவும் அவர் பிறந்த உடனேயே இவ்வாறு கூறச் செய்கிறான்.

நான் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று ஈஸா (அலை) கூறினார்கள்.

(அல்குர்ஆன் 19:30)

மஸீஹ் (என்ற ஈஸா) அவர்களும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

(அல்குர்ஆன் 4:172)

எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் அல்லாஹ் எஜமான் என்ற நிலையிலிருந்து தன்னை இறக்கிக் கொள்ள மாட்டான். எஜமான் தன்மையில் எவருக்கும் பங்களிக்கவும் மாட்டான் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இவ்வளவு தெளிவாக விளக்கிய பிறகும் உண்மையை உணராது, அவர்களை அடிமை என்ற நிலையிலிருந்து உயர்த்தி வேறுவிதமான உறவுகளைக் கற்பனை செய்து கொள்பவர்களுக்கும் புரியக் கூடிய வகையில், அகில உலகுக்கும் எஜமான் என்பதை அல்லாஹ் தெளிவாக்குவதைக் கவனியுங்கள்!

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்

(அல்குர்ஆன் 5:17)

ஈஸா (அலை) அவர்கள் இறைக் கோட்பாட்டில் எந்தத் தவறும் செய்திடவில்லை. இறைவனுக்கு அடிமையாக இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. அவர்களின் சமுதாயத்தினர் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் கற்பித்துக் கொண்ட தந்தை - மகன் என்ற உறவுக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

அப்படி இருந்தும் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை அல்லாஹ் பிரயோகிக்கிறான். இதிலிருந்து அவன் ரப்புல் ஆலமீன் (அகில உலகின் எஜமான்) என்ற தனித்தன்மையை எவருக்கும் பங்கிட்டு வழங்கத் தயாராக இல்லை என்பதை உணரலாம்.

எந்த ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று கருதிக் கொண்டு அவர்களை வணங்கி வழிபடுகின்றார்களோ அந்த ஈஸா (அலை) அவர்களையும், அவர்களின் தாயையும், உலகில் உள்ள அனைவரையும் நான் அழித்தொழிக்க முடிவு செய்தால் என்னை எவர் தடுக்க முடியும்? என்று கேட்டு ரப்புல் ஆலமீன் என்ற தன் உரிமையை மீண்டும் வலியுறுத்துகின்றான்.

எவரேனும் இறைத்தன்மையைப் பிறருக்குப் பங்கிட்டு வழங்க முயன்றால், இறைவனின் அடிமைகளை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க (?) எண்ணினால் அவர்களை அவர்களால் பூஜிக்கப்பட்வர்களே கைகழுவி விடும் நிலைமை மறுமையில் ஏற்படும் என்று வல்ல அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

(அல்குர்ஆன் 5:116, 117)

ஈஸா (அலை) அவர்களுக்காகக் கூட அல்லாஹ் தன் ஆளுமையில் பங்களிக்கத் தயாரில்லை என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

யஃகூப் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்களின் பேரரான யஃகூப் நபியின் வரலாற்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் தமது மகன் யூசுபின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அல்லாஹ் யூசுப் நபி அவர்களைச் சிறு பிராயத்திலேயே தந்தையிடமிருந்து பிரித்தான்.

மகனைப் பறிகொடுத்த சோகத்தில் அவர்கள் அழுது புலம்பத் தான் முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. மகன் உயிரோடு இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என்ற மறைவான விபரம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கவலைப்பட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்) என்று அவர்கள் கூறினர். எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 12:84,85,86)

இஸ்ரவேல் எனும் சிறப்புப் பெயர் பெற்ற நல்லடியார் யஃகூப் நபியின் நிலை இது தான். தன் மகன் தன்னோடு இருக்க வேண்டும் என்று எல்லா மனிதர்களும் ஆசைப்படுவது போலவே அவர்களும் ஆசைப்பட்டார்கள்

ஆனால் அல்லாஹ் தான் நினைத்ததைத் தான் செய்தானே தவிர யஃகூப் நபியின் விருப்பத்தைக் கண்டு கொள்ளவில்லை.

அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதே இதற்குக் காரணம்.

யூசுப் (அலை)

அழகிய வரலாறு என்று அல்லாஹ்வே யூசுப் நபியின் வரலாற்றைச் சிறப்பித்துக் கூறுகிறான்.

صحيح البخاري 
3390 - أَخْبَرَنِي عَبْدَةُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الكَرِيمُ، ابْنُ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلاَمُ»

பாரம்பரியத்தின் அடிப்படையில் மிகச் சிறந்தவர் என்று ஒருவரைக் கூற வேண்டுமானால் யூசுப் நபியைத் தான் கூற முடியும். ஏனெனில் அவரும் நபியாக இருந்தார். அவரது தந்தை யஃகூபும் நபியாக இருந்தார். அவரது பாட்டனார் இஸ்ஹாகும் நபியாக இருந்தார். அவரது முப்பாட்டனார் இப்ராஹீமும் நபியாக இருந்தார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3390

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நபியாக இருக்கிறாரே என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு அடிமைத் தனத்திலிருந்து விதி விலக்கு அளித்தானா?

உடன் பிறந்த சகோதரர்களால் கிணற்றில் தள்ளப்பட்டார்கள். சந்தையில் அடிமையாக விற்கப்பட்டார்கள். வீண் பழி சுமத்தப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்கள். தந்தையைப் பல ஆண்டுகள் பிரிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யூசுப் என்ற அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

தமக்கு எது நன்மையோ அதைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கூட யூசுப் நபி உட்பட எந்த நபிக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. அவன் ரப்புல் ஆலமீன் (அகிலத்தாருக்கும் எஜமான்) ஆக இருப்பதே இதற்குக் காரணம்.

அய்யூப் (அலை)

அல்லாஹ்வால் அதிகமாகச் சோதிக்கப்பட்ட நபிமார்களில் அய்யூப் (அலை) அவர்களும் ஒருவராவார்.

பலவிதமான நோய்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். குடும்பத்தார் அவரிடமிருந்து பிரிந்து சென்றனர்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83,84)

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

(அல்குர்ஆன் 38:41,42)

நோய் நொடிகளுக்கு ஆளாகி, மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, கடுமையான வேதனையை அவர்கள் அனுபவித்தார்கள். மகான்கள்(?) மற்றவர்களின் நோய்களை மகான்கள்(?) நீக்குவார்கள் என்று நம்புகிற சமுதாயமே! அய்யூப் நபியவர்களுக்கு ஏற்பட்ட நோயை தாமாகக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது.

அவன் எப்போது விரும்பினானோ அப்போது குணப்படுத்தி குடும்பத்தினரையும் சேர்த்து வைத்தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியும் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்புக்கு விளக்கவுரையாகும்.

ஸக்கரியா (அலை)

யஹ்யா (அலை) அவர்களின் தந்தையாகவும், மர்யம் (அலை) அவர்களை எடுத்து வளர்த்த காப்பாளராகவும், ஈஸா நபியின் வளர்ப்புத் தந்தையாகவும் ஸக்கரியா (அலை) திகழ்ந்தார்கள்.

மற்றவர்களைப் போல் தமக்கொரு சந்ததி வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கும் இருந்தது. ஆனால் இவர்களால் தமக்கொரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள இயலவில்லை.

அவர்கள் ஆசைப்பட்ட பருவத்தில் அல்லாஹ்வும் அவர்களுக்கு சந்ததிகளை வழங்கவுமில்லை.

பலமுறை அழுதழுது பிரார்த்தித்த பின்னால் அவர்களும் அவர்களது மனைவியும் தள்ளாத வயதை அடைந்த நிலையில் அவர்களுக்கு அல்லாஹ் ஓர் ஆண் மகனை வழங்கினான்.

அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்? என்று அவர் கேட்டார். தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான் என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் 3:38,39,40)

அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! என்றார். ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன் என்று அவர் கூறினார். அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார்.

(அல்குர்ஆன் 19:3-9)

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன் என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:89,90)

ஸக்கரிய்யா அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் செய்தியை அல்லாஹ் கூறிய போது அவர்களால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு தள்ளாத வயதை அடைந்திருந்தார்கள். இதனால் தம் மனைவி கர்ப்பமடைந்ததற்கு ஒரு அடையாளத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

எவ்வளவு தான் நல்லடியாராக இருந்தாலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் எவருக்கும் பங்கில்லை என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

என்றோ மரணித்து விட்டவர்களின் மண்ணறைகளில் போய் சந்ததிகளைக் கேட்கும் சமுதாயமே! இவர்களெல்லாம் இப்ராஹீம் (அலை), ஸக்கரியா (அலை) அவர்களின் தூசுக்கும் கூட சமமாக மாட்டார்கள். அந்த நபிமார்களுக்கே தமக்கொரு சந்ததியை தாம் விரும்பும் நேரத்தில் உருவாக்கிக் கொள்ள முடியாத போது என்றோ மரணித்தவர்கள் எப்படி நமக்கு குழந்தைகளைத் தருவார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்பதையும் மற்றவர்கள் உங்களைப் போலவே எந்த அதிகாரமும் வழங்கப்படாத அடிமைகள் என்பதையும் உணர மாட்டீர்களா?

யூனுஸ் (அலை)

யூனுஸ் (அலை) அவர்கள் ஈமான் கொள்ளாத தம் சமூகம் அழிக்கப்பட வேண்டுமென விரும்பினார்கள். அதை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்த மக்கள் கடைசி நேரத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி தங்கள் எஜமானனிடம் மன்னிப்புக் கேட்டபோது அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களை அல்லாஹ் காப்பாற்றுகிறான்.

(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

(அல்குர்ஆன் 10:98)

ஒரு நபியின் விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

தமது விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றதற்காக இறைவனிடமே யூனுஸ் (அலை) கோபித்துக் கொண்டு போகிறார்கள். இதன் காரணமாக மீன் வயிற்றில் சிறை வைக்கப்படுகின்றார்கள்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன் என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

(அல்குர்ஆன் 21:87)

தமது விருப்பப்படி தான் அல்லாஹ் நடக்க வேண்டும்; தாம் கேட்டதை எல்லாம் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்றெல்லாம் நபிமார்களும் கூட அல்லாஹ்வை வற்புறுத்த முடியாது என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகின்றது.

தாம் செய்த இந்தத் தவறுக்காக அல்லாஹ்வைத் துதித்து அவனிடம் மன்னிப்புக் கேட்கத் தவறி இருந்தால் யூனுஸ் கியாம நாள் வரை மீன் வயிற்றிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 37:144)

தன் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றவில்லை என்று யூனுஸ்(அலை) கோபித்துச் சென்றதற்காக இறைவனது எஜமான் தனத்தில் குறை கண்டதற்காக எவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்கின்றான் தெரியுமா?

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.

(அல்குர்ஆன் 68:49)

ஒவ்வொரு நபிமார்களையும் பின்பற்றி நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட அல்லாஹ் யூனுஸைப் போல் நீர் ஆகக் கூடாது என்கிறான். (அல்குர்ஆன் 68:48)

எந்த நபியாக இருந்தாலும் அவன் தீர்ப்பில் குறை காணக் கூடாது. அவனது அடிமை என்பதை மறந்து விடலாகாது என்பதால் தான் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட தனது அடிமை என்ற நிலையிலிருந்து விடுவிக்க அல்லாஹ் தயாராக இல்லை.

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:15)

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:162, 163)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:188)

என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அல்குர்ஆன் 23:97, 98)

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக!

(அல்குர்ஆன் 23:118)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 114:1 - 4)

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 113:1 - 5)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 72:22)

என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 67:28)

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

இந்த வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசியுங்கள்! நபிமார்களிலேயே தலை சிறந்த - அல்லாஹ்வால் அதிகம் விரும்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளே இவை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டது மட்டுமின்றி இதை மக்களிடம் போய்ச் சொல்லுமாறும் ஆணையிடப்படுகின்றது.

உமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறாமல் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உமது வாயாலேயே மக்களிடம் கூறுவீராக என்ற கட்டளை அழுத்தமானதாகும்.

மகான்கள், பெரியார்கள் என்றெல்லாம் சிலரைப் பற்றி நாமாக முடிவு செய்து கொண்டு, அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் என்று நம்பிக்கை வைத்து மன்றாடுவதும், பிரார்த்தனை செய்வதும், நேர்ச்சை செய்வதும் எவ்வளவு தவறானவை என்பதை இந்த இடத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் கூட இத்தகைய அதிகாரத்தை அல்லாஹ் வழங்காத போது நாம் மகான்கள் என்று கற்பனை செய்து கொண்டவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்குவானா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அகிலத்துக்கும் அவன் எஜமான் (ரப்புல் ஆலமீன்) என்பதில் நபிமார்களே அடங்கும் போது மகான்கள் அடங்க மாட்டார்களா என்பதையும் உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அன்றைய காபிர்கள் பல்வேறு அற்புதங்களைக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றே ஒன்றை நிகழ்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு நிகழ்த்திக் காட்டினால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவும் கூறினார்கள். இந்த அற்புதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நிகழ்த்த முடிந்ததா? அல்லது அல்லாஹ் தான் அனுமதித்தானா?

அவர்கள் கேட்ட அற்புதங்கள் அனைத்தையுமோ, அவற்றில் ஒன்றையோ செய்வது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமா? இதற்கு முன்னர் நபிமார்கள் மூலம் எத்தனையோ அற்புதங்களை அவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறானே?

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

அவன் நாடும் போது நிகழ்த்திக் காட்டுவான். நாடினால் அதை மறுப்பான். இதைத் தேர்வு செய்யும் அதிகாரம் எந்த நபிமார்களுக்கும் கிடையாது. இதனால் தான் நான் கடவுள் இல்லை. நான் மனிதனாகவும் கடவுளின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் செய்கிறான்.

இங்கேயும் நான் எஜமான் நீர் அடிமை என்பதைப் பிரகடனம் செய்கிறான்.

(அற்புதங்கள் - கராமத் குறித்து இய்யாக நஃபுது வசனத்தை விளக்கும் போது விரிவாக ஆய்வு செய்வோம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் தான் வளர்த்தார். அவர்களுக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்து, திருமணம் செய்து வைத்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது அவர்களுக்குக் கடுமையான எதிர்ப்பு வந்த போதெல்லாம் அதைத் தடுக்கும் அரணாக இருந்தார்.

அவர் இருந்த வரை நபிகள் நாயகத்தின் மீது யாரும் கை வைக்கத் துணியவில்லை. அவர்களின் தோழர்களைத் தான் துன்புறுத்தி வந்தனர். அபூதாலிப் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததால் அவரது சகோதரர் மகனாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு பெற்றிருந்தனர்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அல்லாஹ் நாடினால் இதைச் செய்து காட்டுவது பெரிய காரியமல்ல.

தனது நேசர் புன்படலாமா? அவர்களைக் கவலையில் ஆழ்த்தலாமா? என்றெல்லாம் அல்லாஹ் நினைக்கவில்லை. தான் விரும்பியதைத் தான் அவன் முடிவு செய்தான். யார் கவலைப்பட்டாலும் அது பற்றி அவன் கவலைப்படவே இல்லை.

صحيح البخاري 
3884 - حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]

அபூதாலிப் மரண வேளையை நெருங்கிய போது அவரைச் சந்திக்கச் சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! ஒரு கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கிறேன் என்று எவ்வளவோ மன்றாடிக் கேட்டனர். நான் என் அப்பன் வழியிலேயே மரணிக்கிறேன் என்று கூறி காஃபிராகவே (இஸ்லாத்தை ஏற்காதவர்) அபூதாலிப் மரணித்து விட்டார். தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்காது மரணித்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடுமையான வேதனையை அளித்தது. இதற்காகப் பெரிதும் கவலை கொண்டார்கள். இடிந்து போனார்கள். அப்போது தான் பின் வரும் வசனம் அருளப்பட்டது. நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழியில் செலுத்த முடியாது. (அல்குர்ஆன் 28:56)

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி)

நூல்: புகாரி 3884, 4772

இந்த ஒரு நிகழ்ச்சியே ரப்புல் ஆலமீன் என்பதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

صحيح مسلم 
104 - (1791) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ، وَشُجَّ فِي رَأْسِهِ، فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ، وَيَقُولُ: «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ، وَكَسَرُوا رَبَاعِيَتَهُ، وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللهِ؟»، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]

உஹதுப் போர் முனையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்பட்டு முகம் சேதப்படுத்தப்பட்ட போது நபியின் திருமுகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று அவர்கள் கூறினார்கள். அதிகாரத்தில் உமக்கு எதுவுமில்லை (அல்குர்ஆன் 3:128) என்ற வசனத்தை அப்போது அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3346

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட காயம் காரணமாக மூர்ச்சையாகி மரணித்து விட்டார்களோ என்ற வதந்தி கிளம்பியது. காயம் அவ்வளவு கடுமையானதாக இருந்தது. அந்த வேதனை தாளாமல் தான் என் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? எனக் கேட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிமை எனும் நிலையிலிருந்து விடுபட்டு இருந்தால் அல்லாஹ்வும் இதை ஆமோதித்திருப்பான். உன் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறலாம் எனக் கூறியிருப்பான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தைப் பார்க்காத அல்லாஹ் அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான். இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? என்று நீர் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி பெற வைப்பதும், தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நீர் தலையிடலாம் என்று உணர்த்திடவே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறுகிறான்.

வேண்டியவராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே! அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் அடிமைகள் அவர்கள் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத் தான் பேச வேண்டுமே தவிர எனக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத் தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவர்களின் சமாதிகளில் மண்டியிடுவோர் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்பையும், அதற்கு விளக்கமாக அமைந்த இந்த நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்துத் திருந்தட்டும்!

ரப்புல் ஆலமீன் என்பதற்கு அனைவரும் அவனது அடிமைகளே என்பது மட்டும் தான் பொருள் என்று கருதக் கூடாது. ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

கடவுள் ஒருவரே

ரப்புல் ஆலமீன் என்ற வார்த்தைப் பிரயோகம் இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே உள்ள உறவுகளை மட்டும் கூறவில்லை. ஓரிறைக் கொள்கையின் அவசியத்தையும் இந்தச் சொற்றொடர் உறுதி செய்கின்றது.

அவன் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்துக் காப்பவன் என்பதால் எல்லா இலாக்காக்களும் அவனது கையில் தான். தன் இலாக்காக்களைப் பங்கிட்டு எவரிடமும் அவன் கொடுக்கவில்லை என்பதையும் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் உள்ளடக்கியுள்ளது.

உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 6:46)

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 7:158)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

(அல்குர்ஆன் 27:60)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

(அல்குர்ஆன் 27:61)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(அல்குர்ஆன் 27:62)

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா? என்று கேட்பீராக! கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 28:71,72)

அனைத்து இலாக்காக்களையும் தான் ஒருவனே கவனித்துக் கொள்வதாக இவ்வசனங்கள் கூறுகின்றன. கடவுள் ஒரே ஒருவன் தான் என்பதையும் ஐயமற விளக்குகின்றன. அந்த வகையில் இவ்வசனங்கள் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடரின் விளக்கவுரைகளே!

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மற்றொரு இடத்தில் விளக்கமாகவே அல்லாஹ் கூறுகிறான்.

கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா? அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

(அல்குர்ஆன் 21:22)

இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படக் கூடிய சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.

அகில உலகத்துக்கும் அவன் மட்டுமே எஜமானனாக - ரப்புல் ஆலமீனாக - இருப்பது தான் இதற்கு ஒரே காரணமாகும்.

இதைத் தான் மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள்! அழிப்பதற்கு ஒரு கடவுள்! காப்பதற்கு ஒரு கடவுள்! துன்பத்தை நீக்க ஒரு கடவுள்! இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்! மழைக்குத் தனி கடவுள்! உணவு வழங்க இன்னொரு கடவுள்! கல்விக்கு என்று ஒரு கடவுள்!

கடவுளை இப்படியெல்லாம் கூறுபோடுவதைத் தடுக்கும் விதத்திலேயே தன்னை ரப்புல் ஆலமீன் என்கிறான் அல்லாஹ்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கு ஒரு கடவுள்! மலையாளிக்கு மற்றொரு கடவுள்! இது என் கடவுள்! அது உன் கடவுள்! என்ற சித்தாந்தத்தையும் ரப்புல் ஆலமீன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் தகர்த்தெறிகிறான். தமிழனாயினும், மலையாளியாயினும், இந்தியனாயினும், அராபியனாயினும், குரைஷியாயினும், ஹபஷியாயினும் அகில உலகுக்கும் நானே ரப்பு எஜமான் என்று அல்லாஹ் பிரகடனப்படுத்துகிறான்.

தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இதனால் தான் அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலித்துக் காப்பவன் என்கிறான்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

கடவுள் தேவைகளற்றவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான்.

கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்கு காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுளை ரப்புல் ஆலமீன் என்று நம்பினால் கடவுளின் பெயரால் எந்தச் சுரண்டலும் நடக்காது. எவரது சுயமரியாதையும் இதனால் பாதிக்கப்படாது.

ஏனெனில் ரப்புல் ஆலமீன் - அனைத்தையும் பரிபாலனம் செய்பவன் என்பதில் அவன் எந்தத் தேவையும் அற்றவன் என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது.

நான் உங்களுக்குத் தேவையானதைத் தந்து உங்களைப் பரிபாலிக்கக் கூடியவனே தவிர உங்களிடம் எதையும் கேட்பவனல்லன் என்று கூறி கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டலையும் ஒழித்துக் கட்டுகிறான் அல்லாஹ்.

பத்தியையும், சாம்பிரானியையும், சர்க்கரையையும் கொண்டு வா! என்று தன் பக்தனிடத்தில் கேட்பவனும், தேங்காயும், வாழைப்பழமும், பூமாலையும் கொண்டு வா என்று தன் அடிமையிடத்தில் எதிர்பார்ப்பவனும் மெழுகுவர்த்தியையும், காணிக்கையையும் தந்தாக வேண்டும் என்று தன் படைப்புகளிடம் வேண்டுபவனும் அல்ல நான். உங்கள் அனைவருக்கும் எல்லாவற்றையும் தந்து உதவுபவன் நான் என்பதை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான்.

உங்கள் இறைவனாகிய நான் தீப ஆராதனைகளையும், சந்தனம் பால் அபிஷேகத்தையும் பக்தனிடம் வேண்டுபவனோ படைப்புக்களால் பாதுகாக்கப்படுபவனோ வெயில் மழை போன்றவற்றிலிருந்து தன் அடிமையினால் காக்கப்படுபவனோ அல்லன். உங்கள் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் ரப்புல் ஆலமீன் ஆவேன் என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகவும் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:195)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 7:197,198)

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 35:40)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20, 21)

கடவுள் என்பவன் அனைத்தையும் படைத்தவனாகவும், அனைத்தையும் பரிபாலிப்பவனாகவும் இருக்க வேண்டும். எதையும் செய்ய இயலாமலும், பரிபாலிக்க இயலாமலும் இருப்போர் கடவுளாக முடியாது என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ரப்புல் ஆலமீன் (அகில உலகையும் படைத்துப் பரிபாலிப்பவன்) என்பதன் விளக்கவுரைகளே இவ்வசனங்கள்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

கடவுள் தேவைகளற்றவன் என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மறுப்பவர்கள் உருவாகிட மற்றொரு காரணம் பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள்.

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளை பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் போய் கடவுளை பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான். நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.

எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவைதானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறக்கூடிய கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதையாவது ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

பிறப்பின் அடிப்படையில் மனிதனைக் கூறுபோட்டு வேறுபடுத்தும் சித்தாந்தத்துக்கு எதிராக ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் சம்மட்டி அடி கொடுக்கிறது.

அவன் ஒருவன் மட்டுமே எஜமான். மற்ற அனைவரும் அடிமைகள் தான். நான் எப்படி கடவுளின் அடிமையாக இருக்கிறேனோ அது போன்று தான் நீயும் ஒரு அடிமை. அடிமைகள் என்ற விதத்தில் இருவரும் சமமானவர்கள் தான். எஜமான் முன்னிலையில் நிற்கும் எவரும் அவனது அடிமைகளாகத் தான் நிற்க வேண்டும் என்ற சிந்தனையை மனிதனுக்கு ஊட்டி குலப் பெருமைக்கு சாவு மணி அடிக்கிறது ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர்.

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே புரோக்கரும், புரோகிதரும் இல்லை என்பதையும் இந்தச் சொற்றொடர் தாங்கி நிற்கிறது.

கடவுளை நம்பும் மக்கள் அவனை ரப்புல் ஆலமீன் என்றும் நம்பி விட்டால் இது போன்ற அவமானங்களைச் சுமக்கும் நிலை ஏற்படாது. சுயமரியாதைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்பதைக் கூறும் வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதற்கான விளக்கவுரைகளே!

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

(அல்குர்ஆன் 53:32)

எந்தச் சட்டங்களாலும் ஒழித்துக்கட்ட முடியாத வேற்றுமைகளையும், தீண்டாமையையும் ரப்புல் ஆலமீன் என்று கடவுளை நம்புவதன் மூலம் அடியோடு ஒழித்துக் கட்ட முடியும். இஸ்லாம் ஒழித்துக் கட்டிக் காட்டியது. இன்றும் கூட ஒழித்துக் கட்டி வருகிறது?

ரப்புல் ஆலமீன் எனும் போது மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்ற கருத்தும் அடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

கடவுள் தேவைகளற்றவன் என்றும்

மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

மனிதனுக்கு மனிதன் அடிமை அல்ல

மனிதன் கடவுளை மறுப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

கடவுளை இப்படி வணங்க வேண்டும். இந்த நாளில் வணங்க வேண்டும் என்றெல்லாம் ஒழுங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன. இந்த ஒழுங்குகள் யாரால் உருவாக்கப்பட்டன என்று கேட்டால் அதற்குச் சரியான விடை கிடைப்பதில்லை. இன்றைக்கு மதகுருவாக இருப்பவர் கூட ஒரு வணக்கத்தை உருவாக்க முடியும்.

இதைப் பார்க்கும் ஒருவன் நம்மைப் போல் இருக்கின்ற இந்த மனிதன் இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம் என்று சிந்திக்கிறான்.

இந்த வழிபாட்டு முறை கடவுளிடமிருந்து வந்தது என்று அவர்கள் விடையளிக்க முடியாது. அப்படி விடையளித்தால் காலத்திற்கேற்ப வழிபாடுகள் மாறாது. புதுப்புது வழிபாடுகள் உருவாக முடியாது.

நம்மைப் போன்ற மனிதன் கண்டு பிடித்ததை ஏற்கும் போது அவனையே நாம் கடவுளாகக் கருதும் நிலை ஏற்படும்.

ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் அந்தக் குறையையும் நிவர்த்தி செய்துவிடுகிறது.

எந்த மதகுருவும் புதிதாக ஒரு வழிபாட்டு முறையை உருவாக்க முடியாது. கடவுள் எப்படி வழிபட வேண்டும் என்று குர்ஆன் மூலம் கட்டளையிட்டானோ அல்லது அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) மூலம் வழிகாட்டினானோ, அவை மட்டும் தான் வணக்க வழிபாடுகள். அதற்குப் பிறகு எந்த வணக்கமோ எந்தச் சட்டதிட்டமோ கிடையாது. ஏனெனில் ரப்புல் ஆலமீன் தான் அடிமைகளுக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்க முடியும்.

ஒரு அடிமை இன்னொரு அடிமையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதோ, அடிமைப்படுத்த எண்ணுவதோ எவ்விதத்திலும் நியாயமானதல்ல. எஜமான் தான் அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்த அருகதை உள்ளவன்.

ஒன்றை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனப் பிரகடனப்படுத்தவோ, ஹராம் என்று தடை உத்தரவு பிறப்பிக்கவோ, ஒன்றைக் கடமையாக்கவோ, சட்டங்கள் வகுக்கவோ, வணக்கங்களுக்கு உரிமை கொண்டாடவோ எஜமான் மட்டுமே அருகதை உள்ளவன். எந்த ஒரு அடிமையும் இன்னொரு அடிமைக்கு இது போன்ற கட்டளைகளை இடமுடியாது என்பதையும் ரப்புல் ஆலமீன் என்ற உயர் பண்பு மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

தனது அதிகாரத்தை இதன் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அல்லாஹ், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சட்டங்கள் இயற்றி, அடிமைப்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம் மனிதனது சுயமரியாதையையும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.

மத குருமார்கள் மீது கொண்ட பக்தியின் காரணமாக மக்கள் மத குருமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதையும், அவர்களிடம் தம் தேவைகளை முறையிடுவதையும், அவர்களிடம் ஆசி பெறுவதையும், அவர்களுக்குக் காணிக்கை செலுத்துவதையும் நாம் காண்கிறோம்.

பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.

மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே! அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன. மற்றவர்களைப் போல் அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன. போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன. மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.

அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான், மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.

முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.

صحيح بن حبان
4162 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا مِنْ حَوَائِطِ الأَنْصَارِ فَإِذَا فِيهِ جَمَلانِ يَضْرِبَانِ وَيَرْعَدَانِ فَاقْتَرَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْهُمَا فَوَضَعَا جِرَانَهُمَا بِالأَرْضِ فَقَالَ مَنْ مَعَهُ سَجَدَ لَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَسْجُدَ لأَحَدٍ وَلَوْ كَانَ أَحَدٌ يَنْبَغِي أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا لِمَا عَظَّمَ اللَّهُ عَلَيْهَا مِنْ حَقِّهِ.

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இரு ஒட்டகங்கள் நடுங்கிக் கொண்டு மூட்டுக்களை தரையில் வைத்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்கள் ஒட்டகங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று பேசிக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரும் எவருக்கும் ஸஜ்தாச் செய்வது கூடாது. ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்யலாம் என்று இருந்தால் பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். ஏனெனில் மனைவியின் மீது கணவனுக்குள்ள உரிமையை அல்லாஹ் முக்கியத்துவப்படுத்தியுள்ளான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : இப்னுஹிப்பான்

 

مسند أحمد
12345 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ (1) ، عَنْ أَنَسٍ قَالَ: " مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ (2) مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ " (3)

தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2678, அஹ்மத் 11895

தாம் அடக்கம் செய்யப்பட்ட பின் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7054

صحيح البخاري
435 و 436 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

நபிமார்களின் அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கியதற்காக யூதர்களையும், கிறித்தவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

நபியவர்களின் இந்தப் போதனைகள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.

ரப்புல் ஆலமீன் என்ற நம்பிக்கை எவரது உள்ளத்தில் பதிந்து விட்டதோ அவர்கள் ஒரு போதும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் எவர் முன்னிலையிலும் இழக்க மாட்டார். எவ்வளவு பெரிய மகானாக தலைவனாக இருந்தாலும் அவனும் தன்னைப் போன்ற ஒரு மனிதன் தான் என்பதை சரியாக உணர்ந்து கொள்வார்.

மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுவதிலிருந்து விடுவிக்கும் மந்திரச் சொல்லே ரப்புல் ஆலமீன்.

அனைவருக்கும் எஜமானாக

அனைவரையும் படைத்தவனாக

அனைத்தையும் பரிபாலனம் செய்பவனாக

மொழி, நிறம், இனம் என்ற பேதங்களைக் கடந்து அனைவரையும் இரட்சிப்பவனாக

போட்டியாக எந்த சக்தியும் இல்லாதவனாக

எதனையும் எப்போதும் செய்ய ஆற்றல் மிக்கவனாக

எல்லா இலாக்காக்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டவனாக

திகழும் அந்த மகத்தான சர்வசக்தனைத் தவிர வேறு எவன் புகழுக்கு உரிமை கொண்டாட இயலும்?

அதனால் தான் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று அல்லாஹ் பிரகடனம் செய்கின்றான்.

அர்ரஹ்மான் - அர்ரஹீம்

ரஹ்மான், ரஹீம் ஆகிய இரு சொற்களும் ரஹிம என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ரஹிம என்ற சொல்லின் பொருள் அருளினான் அல்லது இரங்கினான் என்பதாகும்.

ஒரே மூலத்திலிருந்து இவ்விரு சொற்களும் பிறந்தாலும் இரண்டு சொற்களுக்கும் அருள் புரிவான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும் சிறிய வித்தியாசமும் உள்ளது.

வேண்டியவன், வேண்டாதவன், விருப்பமானவன், விருப்பமில்லாதவன் என்ற பாகுபாடு இன்றி அருள் புரிபவன் ரஹ்மான் என்றும், வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிபவன் ரஹீம் என்றும் அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வுலகில் ரஹ்மானாகவும், இரு உலகிலும் ரஹீமாகவும் இருப்பவனே என்று அல்லாஹ்வைக் குறிப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.

இவ்வுலகைப் பொருத்தவரை அவன் அருள் புரியும் போது நல்லவன், கெட்டவன் என்ற அடிப்படையில் செய்வதில்லை. அவனை மறுக்கக் கூடியவர்களுக்கும் இவ்வுலகில் பாக்கியங்களை வழங்கி வருகிறான். எனவே இவ்வுலகைப் பொருத்தவரை அவன் ரஹ்மானாக உள்ளான்.

அதே சமயம் தனது நல்லடியார்களுக்கு மட்டும் மறுமையில் பிரத்யோகமான அருளை வழங்குவான். இம்மையிலும் கூட வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிகிறான். அதனால் தான் இரு உலகிலும் ரஹீமாக இருப்பவனே என்று குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாக கூறுவதென்றால் ரஹ்மானுக்கு அளவற்ற அருளாளன் என்றும், ரஹீமுக்கு நிகரற்ற அன்புடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

அருள், இரக்கம் என்பது வேண்டியவன் வேண்டாதவன் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஒரு பிச்சைக்காரனுக்குக் கூட அருள் செய்யலாம். அவன் நமக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ கிடையாது. ஏன் நாய்க்குக் கூட அருள் - இரக்கம் காட்டலாம். இதனால் அதை நேசிக்கிறோம் என்று பொருள் இல்லை.

அன்பு என்பது வேண்டியவர்கள் மீது மட்டுமே ஏற்படுவதாகும்.

நண்பனுக்கு ஒரு பொருளை நாம் கொடுக்கும் போது அன்பும் உள்ளது. அருளும் உள்ளது.

அதையே ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது அருள் மட்டுமே உள்ளது.

ரஹ்மான் என்பதற்கும், ரஹீம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.

எல்லா மனிதர்களுக்கும் அவன் ரஹ்மானாகவும் - அளவற்ற அருளாளனாகவும் - நல்ல மனிதர்களுக்கு மட்டும் ரஹீமாகவும் - நிகரில்லா அன்பு உடையவனாகவும் இருக்கிறான் என்பது அர்ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடரின் பொருளாகும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஏன் கூற வேண்டும் என்பதற்கு இப்போது கூடுதல் விளக்கம் கிடைக்கிறது.

அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதனாலும்

அவன் ரஹ்மானாக இருப்பதனாலும்

அவன் ரஹீமாக இருப்பதனாலும்

அவனுக்கே புகழனைத்தும்

என்று காரணத்துடன் விளங்கிக் கொள்கிறோம்.

ரஹ்மான் என்ற திருப்பெயர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ, நபித்தோழர்களின் பேச்சுக்களிலோ பயன்படுத்தப்பட்டதே இல்லை. அல்லாஹ் என்ற சொல் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லையோ அதே போல் ரஹ்மான் என்பதும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லை.

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

ரஹீம் என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம் என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128 வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

ரஹீம் என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர் என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன் என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

ரஹீம் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்கு காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

صحيح البخاري 
1284 - حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன் என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன் என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன் என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணைக் கடல்

அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் என்று கூறியது மட்டும் போதாதா? அத்துடன் ஏன் இந்த இரண்டு பண்புகளையும் தொடர்ந்து கூற வேண்டும்? என்பதை இப்போது ஆராய்வோம்.

ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி என்று அல்லாஹ் தன்னை அறிமுகம் செய்யும் போது, மனித உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றி சில தப்பான அபிப்பிராயங்கள் தோன்றுவது இயல்பு.

அகில உலகுக்கும் அதிபதி (ரப்புல் ஆலமீன்) என்ற அறிமுகத்தைச் செவியுறும் மனிதன் சாதாரண அதிகாரம் படைத்த தலைவர்களே கொடூரமானவர்களாக இருக்கும் போது, அகில உலகுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும் அல்லாஹ் இவர்களை விடவும் கொடூரமானவனாக இருப்பானோ? என்று எண்ணலாம்.

இப்படிப்பட்ட எண்ணம் மனித உள்ளங்களில் தோன்றாமலிருக்கவும், ஏற்கனவே தோன்றி இருந்தால் அதை நீக்கவும் ரப்புல் ஆலமீன் என்ற பண்பைத் தொடர்ந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்ற அழகிய திருப்பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்.

நான் ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி. எனக்கு மேல் எந்த சக்தியும் கிடையாது. நான் எது செய்தாலும் எவரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சின்னஞ்சிறு தவறுகளையும் கூட நான் விசாரித்துத் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) நிகரற்ற அன்புடையவன் (அர்ரஹீம்)

நீங்கள் பார்த்து பழகிய உங்கள் தலைவர்களை விட என்னிடம் அதிகாரமும், ஆற்றலும், வல்லமையும் இருந்தாலும் நான் அர்ரஹ்மானாகவும், அர்ரஹீமாகவும் இருக்கிறேன் என்று பொருத்தமான இடத்தில் இந்தப் பண்புகளையும் அமைத்து விடுகிறான் அல்லாஹ்.

இவ்வாறு அளவற்ற அருளாளனாக இருப்பது எவரது வற்புறுத்தலுக்காகவோ, அல்லது வேண்டுகோளுக்காகவோ அல்ல. மாறாக தன் மீது தானே இதை விதியாக்கிக் கொண்டதாக இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.

உங்கள் இறைவன் தன் மீது ரஹ்மத்தை (அருளை அன்பை) விதியாக்கிக் கொண்டான்.

(அல்குர்ஆன் 6:54, 6:12)

صحيح البخاري 
2856 - حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ يَحْيَى بْنَ آدَمَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ: «يَا مُعَاذُ، هَلْ تَدْرِي حَقَّ اللَّهِ عَلَى عِبَادِهِ، وَمَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ؟»، قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُبَشِّرُ بِهِ النَّاسَ؟ قَالَ: «لاَ تُبَشِّرْهُمْ، فَيَتَّكِلُوا»

முஆதே! அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்? அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். அல்லாஹ்வுடன் எவரையும் இணையாக்காது அவனை வணங்குவதே அந்தக் கடமை என்று கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு மனிதர்கள் இணைவைக்காது இருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். இணைவைக்காத எவரையும் நரகில் நுழையச் செய்யாதிருப்பது தான் அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புகாரி 2856, 6267, 7373

தன் மீது எதுவும் கடமை இல்லாதிருந்தும், எவரும் தன் மீது எதையும் திணிக்க முடியாது என்று இருந்தும் அருளையும் அன்பையும் தன் மீது கடமையாக அல்லாஹ் ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவனது அளவற்ற அருளையும் நிகரற்ற அன்பையும் என்னவென்பது?

திருக்குர்ஆனின் பலநூறு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) மவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளுக்கு விளக்கவுரைகளாகவே அமைந்துள்ளன.

صحيح البخاري
6491 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا جَعْدُ بْنُ دِينَارٍ أَبُو عُثْمَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ العُطَارِدِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللَّهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً»

யாரேனும் நல்ல காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி அதைச் செய்ய இயலாது போனால் (அவன் எண்ணியதற்காக) ஒரு முழுமையான நன்மையை அல்லாஹ் அவனுக்காகப் பதிவு செய்கிறான். நல்ல காரியம் ஒன்றைச் செய்திட எண்ணி, அதைச் செய்து விட்டாலோ (அவரின் எண்ணத் தூய்மைக்கேற்ப) பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை அல்லாஹ் நன்மைகளைப் பதிவு செய்கிறான். யாரேனும் தீய காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி (அல்லாஹ்வை அஞ்சி) அதைச் செய்யாது விட்டு விட்டால் அதற்கும் ஒரு நன்மையைப் பதிவு செய்கிறான். தீய காரியத்தைச் செய்ய எண்ணி அதைச் செய்து விட்டால் அதற்காக ஒரு தீமையைத் தான் அல்லாஹ் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6491, 7501

இந்த நபிமொழியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள்! அவனது அளவற்ற அருளையும், அன்பையும் இதை விட வேறு வார்த்தைகளில் விளக்க முடியாது. நல்ல காரியம் ஒன்றைச் செய்தால் ஒரு கூலி தருவேன்; செய்ய நினைத்ததற்காக கூலி எதுவும் தர மாட்டேன் என்று அல்லாஹ் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பாதகம் எதுவும் வந்து விடாது.

அவன் அளவற்ற அருளாளன் அல்லவா? அதனால் தான், நன்மையைச் செய்ய எண்ணியதற்கும் கூலி தருகிறான். செய்துவிட்டால் பத்து முதல் எழுநூறு வரை கூலி தருவேன் என்கிறான்.

தீமையைச் செய்ய எண்ணினால் ஒரு தண்டனை உண்டு என்று அவன் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பங்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்த அளவற்ற அருளாளனோ தீமைகளைச் செய்ய எண்ணி அதைச் செய்யாது விட்டால், அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்பதையும் கடந்து அதற்கும் கூலி தருவேன் என்கிறான்.

صحيح البخاري 
4423 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ المَدِينَةِ، فَقَالَ: «إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا، مَا سِرْتُمْ مَسِيرًا، وَلاَ قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَهُمْ بِالْمَدِينَةِ؟ قَالَ: «وَهُمْ بِالْمَدِينَةِ، حَبَسَهُمُ العُذْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நோயின் காரணமாக போருக்கு வராமல் மதீனாவிலேயே சிலர் தங்கி விட்டனர். இந்த அறப்போருக்காக நீங்கள் மேற்கொண்ட சிரமமான பயணம் மற்றும் போரில் நீங்கள் சந்திக்கும் துன்பம் ஆகியவற்றுக்கு நீங்கள் அடையும் கூலியைப் போல் அவர்களும் பெறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4423, 2839

صحيح البخاري
6424 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ، إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ، إِلَّا الجَنَّةُ "

ஒரு மூமினான அடியானுக்கு மிகவும் விருப்பமான ஒருவரை நான் கைப்பற்றிக் கொள்ளும் போது, பொறுமையுடன் என்னிடம் நன்மையை எதிர்பார்த்தால் அவனுக்கு சொர்க்கத்தைக் கூலியாக வழங்கியே தீருவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6424

صحيح البخاري 
3474 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي «أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»

ஒரு அடியான் காலரா நோயினால் தாக்கப்பட்டு, தனது ஊரிலேயே பொறுமையுடனும், நன்மையை எதிர்பார்த்தும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் தனக்கு ஏற்பட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுடனுமிருந்தால் அவனுக்கு ஷஹீத் உடைய கூலி கிடைப்பது நிச்சயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3474, 6619

صحيح البخاري 
5653 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الهَادِ، عَنْ عَمْرٍو، مَوْلَى المُطَّلِبِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الجَنَّةَ " يُرِيدُ: عَيْنَيْهِ، تَابَعَهُ أَشْعَثُ بْنُ جَابِرٍ، وَأَبُو ظِلاَلٍ هِلاَلٌ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

எனது அடியானின் இரு கண்களையும் நான் (சோதிக்கும் முகமாக) பழுதாக்கி விடும் போது அவன் பொறுமையை மேற்கொண்டால் அவ்விரு கண்களுக்கும் பகரமாக அவனுக்கு சொர்க்கத்தை நான் வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5653

صحيح البخاري 
5641 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»

ஒரு முஸ்லிமுக்கு நோய், கவலை, தொல்லை மற்றும் முள் குத்துதல் போன்ற துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை அவன் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 5642

இந்த நபிமொழிகளும், இந்தக் கருத்தில் அமைந்துள்ள ஏனைய நபிமொழிகளும் அர்ரஹ்மான், அர்ரஹீம் ஆகிய பண்புகளின் தெளிவுரைகளாகும். மனிதன் விரும்பிச் செய்கின்ற காரியங்களுக்குக் கூலி கொடுப்பது தான் தர்மம். மனிதன் விரும்பாமல், அவனுக்குச் சம்பவிக்கும் துன்பங்களுக்கும் கூட கூலி உண்டென்றால் அவனது அருளையும், அன்பையும் எவ்வாறு வர்ணிக்க முடியும்?

மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக செய்கின்ற காரியங்களையும் நல்லறமாக அந்த ரஹ்மான் கருதுகிறான். மனைவியுடன் ஒருவன் கூடும் போது தன்னுடைய இச்சையைத் தணித்துக் கொள்ள வேண்டும்; தனக்கென சந்ததியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே கூடுகிறான்.

இவன் இன்பம் அடைவதற்காக செய்யும் இது போன்ற காரியங்களுக்காக எவரும் கூலி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்கும் கூட கூலி தருவேன் என்று சொன்னால் அவனை விட அருளாளன், அன்புடையவன் எவனிருக்க முடியும்?

صحيح مسلم 
53 - (1006) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: " أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ»

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் கூடுவதும் நல்லறமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத் தணித்துக் கொள்ளும் (இது போன்ற) காரியங்களுக்கும் கூலி கிடைக்குமா என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தடை செய்துள்ள வழிகளில் இந்த இச்சையைத் தணித்துக் கொண்டால் அதற்காக அவனுக்குத் தண்டனை உண்டல்லவா? அது போலவே அனுமதிக்கப்பட்ட முறையில் அவன் தன் இச்சையைத் தணித்துக் கொள்வதற்கும் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1674

صحيح البخاري 
56 - حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا [ص:21] شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ»

உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற கவள உணவும் நல்லறமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 56, 1296, 5668, 5373

மனிதன் தனது சுய நலனுக்காக மனைவியுடன் நடந்து கொள்கின்ற முறைக்கும் அல்லாஹ் கூலி தருகிறான் என்பது அவனது அளவற்ற அருளை விளக்கிடப் போதுமானதாகும்.

மனிதன் மிகவும் அற்பமாகக் கருதுகின்ற, செய்வதற்கு எவருக்கும் எளிதில் சாத்தியமாகின்ற காரியங்களுக்குக் கூட அந்த ரஹ்மான் கூலி வழங்குவதாகக் கூறுவதும், அளவற்ற அருளாளன் என்ற பண்பின் வெளிப்பாடேயாகும்.

صحيح البخاري
2989 - حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»

இரண்டு நபர்களுக்கிடையே நீதி வழங்குவதும் நல்லறமே! ஒரு மனிதன் அவனது வாகனத்தில் ஏற உதவுவதும் ஏற்றி வைப்பதும் நல்லறமே! அவனது பொருட்களை அவனுடைய வாகனத்தில் ஏற்றி வைப்பதும் நல்லறமே! நல்ல சொற்களைப் பேசுவதும் நல்லறமே. தொழுவதற்காக நடந்து செல்லும் போது நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் நல்லறமே! பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் நல்லறமே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2989

صحيح مسلم 
144 - (2626) حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي الْخَزَّازَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»

உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த நல்லறத்தையும் இலேசாக நீ எண்ணி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4760

صحيح البخاري 
2518 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ»، قُلْتُ: فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: «أَعْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا»، قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تُعِينُ ضَايِعًا، أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ»،: قَالَ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ»

அல்லாஹ்வின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்! அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்கள்: புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த நபிமொழிகள் யாவும் இந்த ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகளாகும்.

ரப்புல் ஆலமீன் என்றவுடன் என்னைக் கொடூரமானவனாக எண்ணி விடாதீர்கள்! என்னால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் நான் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்பதைச் சொல்கிறான்.

அர்ரஹ்மான் அர்ரஹீம் ஆகிய அழகுத் திருப்பெயர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்ற மற்றொரு ஐயத்தையும் அகற்றி, இறைவனின் பால் மனிதனை நெருங்கி வருவதற்குத் தூண்டுகின்றன.

பாவிகளுக்கும் அருளுபவன்

எவரிடமிருந்தாவது அளவுக்கதிகமான உதவிகளை ஒருவன் பெற்று விட்டால் அவருக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறான்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளஓ தவறி விடும் போது உதவி செய்த மனிதனைச் சந்திப்பதைத் தவிர்க்கிறான். தயக்கம் காட்டுகிறான். எந்த முகத்துடன் அவனைச் சந்திப்பது என்று வெட்கமடைகிறான். இதே கண்ணோட்டத்துடனேயே அல்லாஹ்விடத்திலும் மனிதன் நடந்து கொள்கிறான்.

நான் இறைவனுடைய பல கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்து விட்டேன். எந்தத் தகுதியைக் கொண்டு நான் இறைவனிடம் என் தேவைகளைக் கேட்பேன்? இதன் காரணமாகவே இறைவனுக்கு நெருக்கமான அடியார்களைத் தேடிப் போய் என் கோரிக்கைகளை முன் வைக்கிறேன் என்று கூறக் கூடியவர்களை வாழ்க்கையில் நாம் சந்திக்கின்றோம்.

இவ்வாறு அவர்களைக் கூறச் செய்வது மேலே நாம் குறிப்பிட்ட அந்த மனநிலையேயாகும். அல்லாஹ்வைப் பற்றி அவனது அடியார்கள் அவ்வாறு கருதிவிடக் கூடாது என்பதற்காகவே ரப்புல் ஆலமீன் என்ற ஆதிக்கப் பண்பைத் தொடர்ந்து அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு மனிதனின் அந்த மனநிலையை மாற்றுகிறான்.

மனிதன் என்ற முறையில் நீங்கள் தவறுகள் செய்பவர்கள்! அதற்காக என்னை விட்டு நீங்கள் வெருண்டோட வேண்டியதில்லை. நான் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறேன் என அழைப்பு விடுக்கிறான்.

தன்னுடைய அருளும் அன்பும் எந்த அளவுக்கு விசாலமானது என்று மற்றொரு இடத்தில் அவன் கூறுவதைக் கவனிப்போம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

இது எவ்வளவு அருள் நிறைந்த அழைப்பு! பாவிகளையே அழைத்து, என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று கூறுவதென்றால் இந்தத் தாராளத்தை என்னவென்பது?

மன்னிப்புக் கேட்கும் போது மன்னிப்பவர்களைப் பார்த்திருக்கிறான் மனிதன். மன்னிப்புக் கேளுங்கள் என்று அழைப்பு விடக் கூடியவன் அந்த ரஹ்மானைத் தவிர வேறெவரும் இருக்க முடியாது.

திருக்குர்ஆனின் எத்தனை இடங்களில் மன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறானோ, அத்தனையும் அவன் அளவற்ற அருளாளனாக (ரஹ்மானாக) நிகரற்ற அன்புடையோனாக (ரஹீமாக) இருப்பதனாலேயே. மன்னிப்புக்கு அழைப்பு விடுக்கும் அத்தனை வசனங்களும் இந்த இரண்டு பண்புகளின் விளக்கவுரைகளேயாகும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் துரோகம் செய்து விட்டு, மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கக் கூடும்! மன்னிக்க மறுக்கவும் கூடும்! மன்னிக்கும் போது கூட வேண்டா வெறுப்பாகவே மன்னிப்பது மனித இயல்பு. ஆனால் அந்த ரஹ்மான் இந்த மன்னிப்பை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்தால் அவனது அருளையும், அன்பையும் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

صحيح البخاري
6309 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ، سَقَطَ عَلَى بَعِيرِهِ، وَقَدْ أَضَلَّهُ فِي أَرْضِ فَلاَةٍ»

ஒரு மனிதன் வனாந்திரத்தில் காணாமல் போன தன் வாகனத்துக்காக தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவனது வாகனம் கிடைத்து விட்டால் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தன் வாகனத்தைக் கண்ட போது ஒருவன் அடையும் மகிழ்ச்சியை விட தன் அடியான் தன்னிடம் பாவ மன்னிப்புக் கோரும் போது பன்மடங்கு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6309

صحيح مسلم 
3 - (2744) حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لِعُثْمَانَ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وقَالَ عُثْمَانُ: حَدَّثَنَا - جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ: دَخَلْتُ عَلَى عَبْدِ اللهِ أَعُودُهُ وَهُوَ مَرِيضٌ، فَحَدَّثَنَا بِحَدِيثَيْنِ: حَدِيثًا عَنْ نَفْسِهِ، وَحَدِيثًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ، مِنْ رَجُلٍ فِي أَرْضٍ دَوِّيَّةٍ مَهْلِكَةٍ، مَعَهُ رَاحِلَتُهُ، عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَنَامَ فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ، فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ، ثُمَّ قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِيَ الَّذِي كُنْتُ فِيهِ، فَأَنَامُ حَتَّى أَمُوتَ، فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ، فَاللهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ وَزَادِهِ "،

ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4932

இறைவனின் பேரருளைப் பெருங்கருணையைப் புரிந்து கொள்ள இதை விடவும் அழகான உவமையைக் கூறவே முடியாது. பாலைவனப் பெருவெளியில் பயணம் செய்பவன் யாருமற்ற வெட்ட வெளியில் தன் வாகனத்தை இழந்து விடும் போதே தன் கதையும் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விடுவான்.

அவனது உணவும், தண்ணீரும் கூட அந்த வாகனத்துடன் காணாமல் போய் விட்டதென்றால் உயிர் பிழைப்போம் என்று எள்ளளவு கூட எதிர்பார்க்க மாட்டான். இத்துடன் எல்லாம் முடிந்தது என கையறு நிலைக்கு வந்த பின் அவனது வாகனம் திடீரென கிடைத்து விடுவது என்பது சாதாரண மகிழ்ச்சி தரும் விஷயமா என்ன?

தன் உயிரே திரும்பி வந்து விட்டதாக அதைக் கருதுவான். அந்த மகிழ்ச்சியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவு அழகுற எடுத்துரைக்கிறார்கள்!

நான் உனது அடிமை! நீ எனது எஜமான் என்று கூறுவதற்குப் பதில் நான் உனது எஜமான்! நீ எனது அடிமை என்று அவன் கூறுகிறான் என்றால் அவன் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.

இதை விடவும் அதிகமாக அந்த ரஹ்மான் மகிழ்ச்சியடைகிறான் என்றால் அந்தக் கருணையை வர்ணிக்க எந்த மொழியில் தான் வார்த்தைகள் இருக்கும்?

அல்லாஹ் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இந்த மனிதன் என்ன செய்து விட்டான்? பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பது பெரிய சாதனை ஒன்றும் இல்லை. இது பாராட்டப்பட வேண்டிய பெரிய சமாச்சாரமும் இல்லை. மன்னிப்புக் கேட்பதன் மூலம் மனிதன் தனக்கு வருகின்ற தண்டனையைத் தவிர்த்துக் கொள்கிறான்.

இதற்காக அல்லாஹ் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது? மன்னிக்க முடியாது என்று கூறினாலும் அவனை எதிர்க் கேள்வி கேட்க முடியாது. ஒரு படி மேலே போய் மன்னித்தேன். தொலைந்து போ என்று கூறலாம்.

அப்படிக் கூறினாலேயே அவனது அளவற்ற அருளுக்கும், நிகரற்ற அன்புக்கும் குறைவு ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் பெருமகிழ்ச்சி அடைகிறான் என்றால், அந்த ரஹ்மானின் அன்புக்கும் அருளுக்கும் அளவேது?

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் அருளியுள்ளான் அந்த அத்தியாயம் முழுவதும் அவன் மனித சமுதாயத்திற்கு அளித்துள்ள அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த அத்தியாயம் முழுமையுமே ரஹ்மான் என்ற பண்பின் விளக்கவுரையாக அமைந்துள்ளதை உணரலாம்.

இன்னும் கணக்கிலடங்கா அருட்கொடைகளை வாரி வழங்கி தனது அளவற்ற அருளை உலகறியச் செய்கிறான். அவனது அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் வசனங்கள் யாவுமே இந்தத் திருப்பெயர்களின் விளக்கவுரைகளேயாகும்.

صحيح البخاري 
7405 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً "

ஒரு அடியான் ஒரு ஜான் என்னை நோக்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் இரு கைகளையும் விரிக்கும் தூரம் நெருங்கி வருகிறேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7405

இறைவனுடைய அளவற்ற அருளையும், அன்பையும் எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே வியப்போடு சொல்லிக்காட்டுவதையும் கவனியுங்கள்!

صحيح مسلم
64 - (2999) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ»

அல்லாஹ்வை நம்பிய மூமினுடைய எல்லாக் காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அதனை அவன் பொறுத்துக் கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மை தான். அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மை தான். மூமினுக்குக் கிடைத்த இந்த நிலை மிகவும் ஆச்சரியமானதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் 5318

ரஹ்மான், ரஹீம் எனும் திருப்பெயர்களின் ஆழத்தை அறிந்து கொள்ள இவையே போதுமாகும். இனி மாலிகி யவ்மித்தீன் என்னும் பண்பைப் பார்ப்போம்.

மாலிகி யவ்மித்தீன்

ஒரு தந்தை தன் மக்களில் எவரையும், எந்தக் குற்றத்திற்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் தண்டித்ததே இல்லை என்றால், இனியும் தண்டிக்கவே மாட்டான் என்றால் அவனை இரக்கம் உடையவன் என்று எவரும் கூற மாட்டார்.

ஏமாளி என்றும், இளித்தவாயன் என்றும், கையாலாகாதவன் என்றும் அவன் குறிப்பிடப்படுவான். அளவற்ற அருள் என்றாலும், நிகரற்ற அன்பு என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை இருந்தால் தான் அருள், அன்பு எனக் கூற முடியும்.

இறைவனின் அருட்கொடைகளையும், பாக்கியங்களையும் ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டு அதற்கான நன்றியை இறைவனின் அடிமைகளுக்குச் செலுத்துவோரையும், அல்லாஹ் அளித்த பொருளையும், உறுப்புகளையும், அறிவையும், ஆற்றலையும் அல்லாஹ் விரும்பும் வழிகளில் பயன்படுத்த மறுப்போரையும் சில நாட்கள் விட்டு விடலாம். சில மாதங்கள் விட்டு விடலாம். சில ஆண்டுகள் விட்டு விடலாம். அல்லாஹ்வை ஏற்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, இறைக் கட்டளைகளைச் செயல்படுத்தி வாழ்ந்தவர்கள் நாமும் அவர்களைப் போல் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்திருக்கலாமே! அதனால் ஒரு நஷ்டமும் ஏற்பட்டிருக்காதே என்று கருதும் அளவுக்கு அவர்களை எந்த விசாரணையும், தண்டனையுமின்றி, விட்டு வைத்தால் அதற்குப் பெயர் அருளும் அல்ல. அன்பும் அல்ல.

இதை உணர வைப்பதற்காகத் தான் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதைத் தொடர்ந்து மாலிகி யவ்மித்தீன் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி என்று பொருத்தமான இடத்தில் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பொருத்தி விடுகிறான்.

நான் அளவற்ற அருளாளன் தான்; நிகரற்ற அன்புடையவன் தான்; இந்த உலகில் வாழும் வரை நீங்கள் செய்த எந்தத் தவறுகளுக்காகவும் என்னிடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் உடனே மன்னிப்பவன் தான்; இந்த உலக வாழ்வு முடிந்து விடுமானால் நியாயமான தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உண்டு. நியாயத் தீர்ப்பு நாளில் நானே முழு அதிபதி. எவருக்கும் சுதந்திரம் எதுவும் வழங்கப்படாத நாள் அது என்று அல்லாஹ் சொல்கிறான்.

மறுமை நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணிவேர்

மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் திருக்குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான். அதைப் பற்றி எச்சரிக்கின்றான்.

ஒருவனது செல்வம், அவன் பெற்றெடுத்த பிள்ளைகள், அதனுடன் பிறந்தவர்கள், அவனைப் பெற்றவர்கள், அவன் கட்டிய மனைவி, அவன் திரட்டிய செல்வாக்கு, செல்வாக்குமிக்கவர்களின் அறிமுகம் எதுவுமே பயன் தராத நாள் ஒன்று உள்ளது. அன்றைய தினத்துக்கு அதிபதியாக இருக்கும் அவன் திருப்தியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே தப்ப முடியும் என்பதைத் தான் மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பு மூலம் குறிப்பிடுகின்றான். மறுமையைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா வசனங்களும் இந்தப் பண்பின் விரைவுரைகள் தான்.

அவன், அவர்களை அழைக்கும் நாளில் எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?

(அல்குர்ஆன் 28:62)

என்று அவன் கேட்கத்தான் போகிறான்.

அல்லாஹ் சொன்னதைக் கேட்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் சொன்னதையும் கேட்காமல், பெரியார்கள், இமாம்கள், தலைவர்கள் சொன்னார்கள் என்று கருதிக் கொண்டு தவறான பாதையில் சென்றார்களே அவர்களும் அங்கே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.

அந்த நாளில் சில முகங்கள் நரகில் போடப்பட்டு புரட்டப்படும். நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படாமல் போனோமே? தூதருக்கு வழிப்படாமல் போனோமே? எங்கள் பெரியார்களுக்கும், தலைவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்ததனால் எங்களை அவர்கள் வழிகெடுத்து விட்டார்களே! (அல்குர்ஆன் 33:66) என்று புலம்பத்தான் போகிறார்கள்.

நாங்கள் இறைவனிடம் வாதாட வக்கீல்களை வைத்திருக்கிறோம் என்று சமாதிகளைக் கட்டி அழுவோரும் அங்கே வரத்தான் போகிறார்கள். அன்றைய தினத்தில் அவர்களின் வாய்கள் மீது நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகளும் கால்களும் அவர்கள் செய்தது பற்றிக் கூற ஆரம்பிக்கும்.

(அல்குர்ஆன் 36:65)

இந்த நிலையை வக்கீல்களும், வக்கீல்களை ஏற்படுத்தியவர்களும் சந்திக்கத்தான் போகிறார்கள்.

கடமை தவறியவர்கள், தடையை மீறியவர்கள், மனித உரிமையில் கை வைத்தவர்கள் யாராயினும் அதற்கான பலனை யவ்மித்தீனில் (நியாயத் தீர்ப்பு நாளில்) அனுபவித்தே ஆக வேண்டும். யாரும், எதன் மூலமும் தப்பித்து விட முடியாது என்பதைச் சொல்லித் தருவதற்கே தன்னை மாலிகியவ்மித்தீன் என்கிறான்.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

(அல்குர்ஆன் 26:88,89)

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்).

(அல்குர்ஆன் 74:40-47)

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்

(அல்குர்ஆன் 83:1-6)

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன் 9:34,35)

நியாயத் தீர்ப்பு நாள் பற்றிய நம்பிக்கையின் காரணமாகவே தமக்கு இழைக்கப்பட்ட அவ்வளவு துன்பங்களையும் நபிமார்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அந்நாளில் கிடைக்கப் போகும் பரிசுகளைப் பெரிதாக மதித்ததனாலேயே சுடு மணலையும் சிலரால் தாங்கிக் கொள்ள முடிந்தது. தூக்கு மேடையை முத்தமிட முடிந்தது. இருகூராகக் கிழிக்கப்படுவோம் என்று தெரிந்தும் கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது. நாட்டை விட்டு விரட்டப்படும் போதும், சமூகப் பரிஷ்காரம் செய்யப்படும் போதும், வம்புச் சண்டைக்கு வந்த போதும், வறுமை வாட்டிய போதும் அத்தனையையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

அவர்களைப் பைத்தியம் என்று பட்டம் சூட்டிய நேரமாகட்டும்! அவர்களின் மனைவியரின் ஒழுக்கத்தின் மீது களங்கம் சுமத்தப்பட்ட நேரமாகட்டும்! இத்தனையையும் அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது? நியாயத் தீர்ப்பு நாளில் அந்த நாளின் அதிபதியிடம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை.

மதுவிலும், மங்கையர் சுகத்திலும் மதி மயங்கியவர்களின் மயக்கம் தெளிந்ததற்கும்

இயல்பிலேயே அவர்களிடம் குடி கொண்டிருந்த முரட்டுத்தனம் இருந்த இடம் தெரியாமல் போனதற்கும்

தாழ்ந்த நிலையில் இருந்தவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் புழுவாய் மதித்தவர்கள், அவர்களையே தங்களின் தலைவர்களாக, உடன் பிறவாச் சகோதரர்களாக மதித்ததற்கும்

நேர்மை, நாணயம், நல்லொழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது வாழ்ந்தவர்கள் இவற்றையெல்லாம் உலகுக்கே படித்து தரும் ஆசான்களாக மாறியதற்கும்

அந்த நாளைப் பற்றிய நம்பிக்கையும், அந்த நாளின் அதிபதி பற்றி அவர்களுக்கிருந்த அச்சம் தான் காரணம்.

நியாயத் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை இல்லாததனாலேயே இந்த உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

அனைத்தைப் பற்றியும் விசாரித்து தக்க தீர்ப்பு வழங்கப்படும் நாள் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டு விட்டால் அனைத்து தீமைகளிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் மனித குலம் விடுபடும். இதனால் தான் ரப்பு, ரஹ்மான், ரஹீம் என்பதுடன் மிகவும் அவசியமான மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பையும் சேர்த்து வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்த நாளை நம்புகின்றவர்களில் சிலர் குறுக்கு வழியில் தப்பித்து விடலாம் என்ற அளவுக்குத் தான் அந்த நாளை நம்புகிறார்கள். எந்தக் குறுக்கு வழியும் அங்கே உதவாது என்பதைப் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.

(அல்குர்ஆன் 82:19)

எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்! என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம்.

(அல்குர்ஆன் 34:42)

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள். அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான். அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் தன்னந்தனியாகவே வருவார்கள்.

(அல்குர்ஆன் 19:93,94,95)

அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது. ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 78:37,38)

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.

(அல்குர்ஆன் 78:40)

இந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 22:56)

அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்றைய தினம் ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே. இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். சீக்கிரம் வரக்கூடிய நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.

(அல்குர்ஆன் 40:16,17,18)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 2:254)

எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:25)

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன் 3:30)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்! என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)

(அல்குர்ஆன் 3:106)

பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:36)

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று அல்லாஹ் கூறுவான்.

(அல்குர்ஆன் 5:119)

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக! அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.

(அல்குர்ஆன் 6:15,16)

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.

(அல்குர்ஆன் 11:105)

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர்! பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

(அல்குர்ஆன் 14:42)

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

(அல்குர்ஆன் 24:24)

அந்த நாள் பற்றி இப்படி ஏராளமான வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். இந்த வசனங்களும் யவ்முல் ஆகிர் என்ற வார்த்தை இடம் பெறும் நூற்றுக்கணக்கான வசனங்களும், மாலிகியவ்மித்தீனுடைய விரிவுரைகளேயாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கமும், திருத்தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கமும் அந்த நாள் பற்றி மனிதனுக்கு எச்சரிக்கை செய்வது தான். இந்த வகையில் முழுக் குர்ஆனுமே மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பின் விளக்கம் தான்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன் ஆகிய மூன்று திருவசனங்களுக்கும் உரிய பொருளை இப்போது காண்போம்.

அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் ஒருங்கே அமையப் பெற்ற நியாயத் தீர்ப்பு நாளின் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இவ்வசனங்களின் பொருள்.

அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்?

இத்தகைய பண்புகளும், தகுதிகளும் உள்ள அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்? அதனால் இறைவனின் தகுதி எதுவும் அதிகமாகி விடப்போகிறதா? நிச்சயமாக ஏற்படப் போவதில்லை. புகழ்கின்ற மனிதர்கள் தான் இவ்வுலகிலும், மறு உலகிலும் அளப்பரிய நன்மைகளை இதனால் பெற்றுக் கொள்கின்றனர். மனிதர்களுக்கிடையே ஏற்படக் கூடிய பெறாமை, பெருமை, ஆணவம் ஆகிய எல்லாக் கெட்ட குணங்களிலிருந்தும் அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் மனிதன் விடுபடலாம்.

அல்லாஹ் சிலரை விட சிலருக்கு அறிவை அதிகம் வழங்கி இருக்கிறான். அந்தத் திறமையின் மூலம் ஏதேனும் சாதனைகளை நிகழ்த்தி விடும் போது அவனுக்குள் ஷைத்தான் தன்னுடைய வேலையைத் துவக்கி விடுகிறான். என்னைப் போல் எவருளர்? மற்றவர்கள் என்னை விட மட்டமானவர்களே என்று எண்ண ஆரம்பிக்கிறான்.

இதன் மூலம் அவனிடம் இருந்த எளிமை, நல்லொழுக்கப் பண்பாடுகள் யாவுமே தலைகீழாய் மாறி விடுவதைக் காண்கிறோம். இந்த அறிவும் ஆற்றலும் என்னைப் படைத்த இறைவனால் எனக்குத் தரப்பட்டவை. இதற்கான பெருமையும், புகழும் எனக்குரியதன்று. என்னைப் படைத்த இறைவனுக்கே இது சொந்தம் என்ற பக்குவத்தை அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் ஒருவன் பெற்றுக் கொள்கிறான். அல்ஹம்துலில்லாஹ்! (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று உணர்வதன் மூலம் மட்டுமே, சாத்தானின் இந்தத் தூண்டுதலிலிருந்து மனிதன் விடுபட முடியும்.

சிலருக்கு அல்லாஹ் அபரிதமான செல்வத்தை வழங்கியிருக்கிறான். வேறு சிலருக்கு நல்ல உடல் வலிமையை வழங்கியிருக்கிறான். சிலரை அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வத்தைத் தாராளமாக அல்லாஹ் வழங்கியிருக்கிறான். இவற்றையெல்லாம் பெற்ற மனிதன் தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களை மட்டமானவர்களாகவும் கருதி, மமதை கொள்ள முற்படுகிறான்.

மனிதர்களுக்கிடையே உள்ள நல்லுறவு இதனால் பாதிக்கப்பட்டு போட்டி, பொறாமை, பூசல், பகை போன்ற சீர்கேடுகளை மனிதன் சந்திக்க நேரிடுகின்றது. இதை முற்றாக அகற்ற என்ன வழி?

என்னிடம் உள்ள செல்வம், நான் பெற்றெடுத்த மழலைச் செல்வங்கள், என்னுடைய வலிமை, அழகு ஆகிய யாவுமே என்னைப் படைத்த அல்லாஹ் எனக்கு வழங்கிய அருட்கொடை. இதில் நான் பெருமை அடிக்க எதுவுமே இல்லை. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் என்னைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே உரிமையானது என்று உணர்வதைத் தவிர இந்தத் தீய குணத்தை மாற்ற வேறு வழி எதுவுமில்லை.

உலகத்தில் வேறு எவருக்கும் வழங்காத பெரும் செல்வங்களைத் தன் தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கிவிட்டு, இது என் இறைவனின் அருட்கொடை என்று சொல்ல வைக்கிறான் வல்ல அல்லாஹ்.

(அல்குர்ஆன் 27:40)

இறைவனின் படைப்பினங்களிலேயே மிக உயர்வான இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இது போன்ற கட்டளையை இட அல்லாஹ் தவறவில்லை.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்

(அல்குர்ஆன் 110:1-3)

இருபத்தி மூன்று ஆண்டுகள் படாத பாடுபட்டு, பல்வேறு தியாகங்கள் புரிந்து, நாடு துறந்து, நல்லோர் பலரைப் பலி கொடுத்து மக்களைச் சத்திய மார்க்கத்தின் பால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தனர்.

இவ்வளவு சிரமத்திற்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உண்மை மார்க்கத்தில் இணையும் போது இது என்னால் என் பிரச்சாரத்தால் என்னுடைய தியாகத்தால் தான் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக உமது இறைவனின் புகழைப் பாடுவீராக! என்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு எண்ண மாட்டார்கள் என்றாலும் அவர்களுக்குச் சொல்வதைப் போல் நமக்குக் கற்றுத் தருகின்றான். இதுவும் அல்ஹம்து லில்லாஹ் வின் விளக்கவுரை தான்.

நான், எனது என்பது போன்ற ஆணவப் போக்கை மனிதன் கைவிட்டு எல்லாப் பெருமைகளையும், புகழமையும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமாக்கி விட வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதற்காகத் தான் முதல் அத்தியாயத்திலேயே புகழுக்கு உரிமை கொண்டாடுகிறான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பக்குவப்படுத்துவதற்காக யார் யார் காலிலோ விழுந்து பொருளையும், சுயமரியாதையையும் பறிகொடுத்து வருகிறான்.

இஸ்லாம் கூறும் எளிமையான இந்த ஆன்மீக வழி உண்மையிலேயே மனிதனைப் பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது.

தனது நிலை உயரும் போதெல்லாம் இதற்கான புகழும், பெருமையும் என்னைச் சேராது. என் இறைவனையே சேரும் என்பதை மட்டும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு பாருங்கள்! உண்மையான ஆன்மீக நிலையை நீங்கள் அடைவதை நீங்களே உணர்வீர்கள்! நான் எனது என்ற ஆணவம் அழிந்து போவதைக் காண்பீர்கள்! ஆணவம் அழிந்த பின் உங்களிடமிருந்து வெளிப்படும் காரியங்கள் யாவும் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.

அல்ஹம்துலில்லாஹ் எனும் மந்திரச் சொல் மூலம் மனித குலம் பெறுகின்ற மகத்தான நன்மை இது.

உண்மையில் எல்லாப் பெருமைக்கும் வல்ல அல்லாஹ் மட்டுமே உரிமையாளன் என்பதை ஏற்க மறுப்போர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரும் என்று வல்ல அல்லாஹ் எச்சரிக்கிறான்.

مسند أحمد
7382 - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُفْيَانُ: أَوَّلَ مَرَّةٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَهُ فَقَالَ الْأَغَرِّ: عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعِزَّةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، أُلْقِهِ (1) فِي النَّارِ " (2)

கவுரவம் எனது கீழாடை. பெருமை எனது மேலாடை. இவ்விரண்டிலும் எவன் என்னுடன் போட்டிக்கு வருகிறானோ அவனை நான் வேதனைப்படுத்துவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத்

صحيح البخاري 
4918 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ: سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الخُزَاعِيَّ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ، جَوَّاظٍ مُسْتَكْبِرٍ "

நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 4918, 6072, 6657

صحيح مسلم 
64 - (2865) وحَدَّثَنِي أَبُو عَمَّارٍ حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ، عَنْ مَطَرٍ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: «إِنَّ اللهَ أَمَرَنِي» وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، وَزَادَ فِيهِ «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ» وَقَالَ فِي حَدِيثِهِ «وَهُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْغُونَ أَهْلًا وَلَا مَالًا»، فَقُلْتُ: فَيَكُونُ ذَلِكَ؟ يَا أَبَا عَبْدِ اللهِ قَالَ: نَعَمْ، وَاللهِ لَقَدْ أَدْرَكْتُهُمْ فِي الْجَاهِلِيَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَرْعَى عَلَى الْحَيِّ، مَا بِهِ إِلَّا وَلِيدَتُهُمْ يَطَؤُهَا

நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர், சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: இயாழ் பின் ஹிமார் (ரலி)

நூல்: முஸ்லிம் 5109

இது போன்ற ஹதீஸ்களும், பெருமையடிப்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று வருகின்ற வசனங்களும், இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு வரும் கட்டளைகளும் யாவுமே அல்ஹம்துலில்லாஹ் வின் விளக்கவுரைகளேயாகும்.

صحيح البخاري 
1130 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ المُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ - أَوْ سَاقَاهُ - فَيُقَالُ لَهُ فَيَقُولُ: «أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கால்கள் வீங்கிவிடும் அளவுக்கு நின்று வணங்குவதைக் கண்ட நபித்தோழர்கள் உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்ட பிறகும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் இறைவனுக்கு நன்றியுள்ள ஒரு அடியானாக இருக்க ஆசைப்படக் கூடாதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரி 1130, 4836, 4837, 6471

ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த போதும் உயர்ந்து விட்டோம் என்று பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை. யாவும் என் இறைவனுக்கே சொந்தம் என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே இறைவனின் திருப்தியை அடைய முடியும்.

صحيح مسلم 
89 - (2734) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ - وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ - قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا»،

ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு அல்லாஹ்வைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழும் போதும் அல்லாஹ் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திபடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4915

மிகப்பெரும் சாதனைகளைப் புரியும் போது மட்டுமல்ல. ஒரு கவள உணவைப் பெறும் போதும் அதற்கான நன்றியை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி இறைவனுக்குச் சொந்தமாக்கி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தருகிறார்கள்.

இறைத்திருப்தியை அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் தம் வாழ்வில் அடைகின்ற உயர்வின் போதும், சின்னஞ்சிறு அருட்கொடைகளைப் பெறும் போதும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதை உணர்ந்து நடந்து கொள்வதன் மூலமே அந்தக் குறிக்கோளை எட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவனது திருப்தியை மறுமையில் அடைவதுடன் இம்மையிலும் கூட இந்தப் பண்பு மகத்தான மாறுதல்களை உருவாக்கி விடும். சண்டை, சச்சரவு, காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, தீயகுணங்கள் யாவும் அகன்று சமத்துவமும், சகோதரத்துவமும் நிரம்பிய சமுதாயம் உருவாகி விடும். படைத்த இறைவனுக்கே எல்லாப் புகழையும் உரித்தாக்குவோம்.

இய்யாக நஃபுது

உன்னையே வணங்குகிறோம் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள். அல்லாஹ்வின் முன்னிலையில் அன்றாடம் எடுக்கப்படும் இவ்வுறுதிமொழியில் அல்லாஹ் கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம். இந்த ஒரு சொற்றொடர் மட்டும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுமானால் மனித வாழ்வில் மகத்தான மாறுதல் ஏற்பட்டு விடும்.

உன்னை வணங்குகிறோம் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத் தராமல் உன்னையே வணங்குகிறோம் எனக் கற்றுத் தருகிறான். அதாவது அல்லாஹ்வை வணங்குவது மட்டும் போதாது. அவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதாலேயே உன்னையே வணங்குகிறோம் எனக் கற்பித்துத் தருகிறான்.

லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற திருக்கலிமா எந்தக் கருத்தை வலியுறுத்துகின்றதோ அதையே இய்யாக நஃபுது என்பதும் வலியுறுத்துவதைக் காணலாம். அல்லாஹ்வை வணங்குவது மாத்திரம் போதாது. அல்லாஹ் அல்லாத வேறு யாரையும் எதையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதையும் இவ்விரு சொற்களும் நமக்கு அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அனைவரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்பதை மறுத்ததே இல்லை. இறைவனுடைய இறைத்தன்மையை அவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் நிராகரித்ததில்லை.

மாறாக, அல்லாஹ்வை அவர்கள் ஏற்றிருந்தார்கள். அவனையும் வணங்கி வந்தார்கள். அத்துடன் சில சமயங்களில் சில வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தார்கள்.

உன்னை வணங்குகிறோம் என்பதில் அவர்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கவில்லை. உன்னையே வணங்குகிறோம். (வேறு யாரையும் வணங்க மாட்டோம்) என்பதிலேயே அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக! பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:84,85,86,87)

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:88)

இந்த வசனங்களும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள். அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. அல்லாஹ்வை நம்பிய மக்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவதேன்? அல்லாஹ்வை ஏற்ற மக்களுக்கு ஏன் இறைத் தூதரை அனுப்ப வேண்டும்? கடவுள் விஷயத்தில் அவர்கள் செய்த தவறு என்ன?

திருக்குர்ஆனை ஆராயும் போது அவர்கள் செய்த தவறு என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அல்லாஹ்வைக் கடவுளாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சில வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் செய்து வந்தனர். இவர்களை நாம் திருப்திப்படுத்தினால் இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே நெருக்கத்தை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கி வந்தனர்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் அவர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை தவறானது என்பதைச் சுட்டிக்காட்டித் திருத்தவே உன்னையே - உன்னை மட்டும் வணங்குகிறோம் என்று அவர்களுக்குக் கற்றுத் தருகிறான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன் 12:106)

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

(அல்குர்ஆன் 38:5)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

(அல்குர்ஆன் 37:35,36)

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்ஆன் 39:45)

படைத்தவன், உணவளிப்பவன், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவன் என்றெல்லாம் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியிருந்தாலும், இறைவனுக்கு இணையாக இன்னும் பல கடவுளர்களை அவர்கள் உருவாக்கி வழிபட்டு வந்தனர் என்பதை இந்த வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இதன் காரணமாகவே உன்னை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிமொழி எடுக்குமாறு நமக்கு அல்லாஹ் கற்றுத் தந்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிகின்றான். அன்றைய மக்கள் எவ்வாறு இணை வைத்தனர் என்பதையும் அல்லாஹ் வேறு சில இடங்களில் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இந்த வசனங்கள் மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை நம்பியதுடன் அந்த இறைவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அவர்களை திருப்திப்படுத்த முயன்றனர் என்பதை அறிவிக்கின்றன. அவர்களின் இத்தகைய நம்பிக்கையை முற்றாக மறுத்திடவே உன்னையே வணங்குகிறோம் என்று சொல்லுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான்.

மொத்தத்தில் அன்றைய காஃபிர்களுக்கு (இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு) அல்லாஹ்வை வணங்குவதில் ஆட்சேபணை எதுவும் இருந்ததில்லை. அல்லாஹ்வை மதிக்கவும், அவனைப் போற்றவும் அவனை வணங்கவும் அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அவர்கள் செய்த தவறு என்னவென்றால் அல்லாஹ்வைக் கடவுள் என்ற முறையில் அவர்கள் வணங்கியதுடன் இறைவனின் அடியார்களை கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற முறையில் வணங்கி வந்தனர்.

இவ்வாறு பரிந்துரை செய்வார்கள் என்று அவர்களைத் திருப்திபடுத்த எண்ணுவதும் ஒரு சில வணக்கங்களை அவர்களுக்கு செய்ய முன்வருவதும் தவறான கொள்கை என்பதனாலேயே அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) என்றான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

(அல்குர்ஆன் 16:53,54,55)

அல்லாஹ்வை வணங்கி அவனிடமே பிரார்த்தனை செய்து வந்த அம்மக்கள் இறைவனல்லாதவர்களையும் வணங்கியதன் மூலம் இணைவைத்து வந்தனர் என்பதற்கு இந்த வசனங்களும் சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு இறைவனல்லாதவர்களையும் வணங்கினால் அது இறைவனால் ஏற்கப்படாது. மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்ததை அல்லாஹ் ஏற்கவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

என்றோ மரணித்து விட்டவர்களை முஸ்லிம்களில் சிலர் அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பெரியார்களைப் பரிந்துரை செய்பவர்களாகத் தானே கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் (இஸ்லாத்தை ஏற்காதவர்களும்) இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) கூறவேயில்லை.

கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கையை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

மகான்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைத்தல் என்ற கடும் குற்றம் என்பதை விளங்க வேண்டும்.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படக் கூடிய ஒரு சந்தேகத்தை அகற்றுவது அவசியமாகும். மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தானே? மகான்களை அல்லவே? என்பதே அந்தச் சந்தேகம். இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) நல்லடியார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகின்ற நபிமார்களின் சிலைகளையும் இவ்வாறு வணங்கி வந்தனர். அந்தச் சிலைகள் மூலம் அவர்கள் நாடியது நபிமார்களைத் தான். நபிமார்களைத் தானே அவர்கள் திருப்திபடுத்துகின்றனர் என்பதால் அல்லாஹ் அதை அங்கீகரிக்கவில்லை.

صحيح البخاري 
1601 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ البَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَهُمُ اللَّهُ، أَمَا وَاللَّهِ لَقَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ». فَدَخَلَ البَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றை தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3351, 4289

அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடவுள் என்று நம்பவில்லை. மாறாக இறைவனிடம் பரிந்து பேசி நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே நம்பினார்கள். அதற்காக சில வணக்கங்களையும் செய்து வந்தனர்.

இவ்வாறு நல்லடியார்களிடம் போய் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணி அவர்களைத் திருப்திப்படுத்த அனுமதி இல்லை. உன்னையே வணங்குகிறோம் என்று உறுதிமொழிக்கு இது மாற்றமானது என்பதாலேயே அந்தச் சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

நாம் இவ்வாறு கூறுவதால் நபிமார்கள், நல்லவர்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பதை மறுப்பதாக எவரும் கருதலாகாது. இறைவனின் அனுமதி பெற்று இணை வைக்காதவர்களுக்காக நபிமார்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் மறுமையில் நாம் கூறுவதை அவர்களும், அவர்கள் கூறுவதை நாமும் கேட்க முடிகின்ற விதத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் போது, இவ்வாறு கேட்பதற்குத் தடையில்லை. நபிமார்களிடம் அவர்களின் உம்மத்தினர் மறுமையில் இவ்வாறு கேட்பதாக ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

நாம் மறுப்பது என்னவென்றால் இறந்து போனவர்களை - அவர்களின் சிலையை - சமாதியை பரிந்துரை செய்யுமாறு இம்மையிலேயே வேண்டுவதையும், அவர்களுக்காகவே சில வணக்கங்கள் புரிவதையும் தான்.

(பரிந்துரை பற்றி தனித் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதைக் காண்க)

நல்லவர்களைச் சிலையாக வடிவமைத்து அதற்கு வேண்டுதல் செலுத்துவது தான் கூடாது. அவர்களைச் சமாதி வடிவில் வைத்துக் கொண்டு இவ்வாறு பரிந்துரை செய்யுமாறு வேண்டுவதும் அவர்களுக்குச் சில வணக்கங்கள் புரிவதும் தவறல்ல என்பர் சிலர்.

அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்கலாகாது என்பது தான் இய்யாக நஃபுது வின் பொருள். சிலை வடிவமும், சமாதி வடிவமும் இதில் சமமானதேயாகும்.

صحيح البخاري 
435 و 436 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

مسند أحمد 
7358 - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اللهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ " (1)

என் சமாதியை வழிபாடு நடக்கும் இடமாக இறைவா ஆக்கி விடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7054

سنن أبي داود
2042 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 1746

சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

صحيح البخاري
427 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

صحيح مسلم 
94 - (970) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதிகளின் மீது கட்டிடம் கட்டுவதையும் அது பூசப்படுவதையும் அதன் மீது உட்கார்வதையும் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

صحيح مسلم 
93 - (969) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ، قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ»

இந்தப் பூமியில் உள்ள எந்தச் சமாதியையும் இடித்துத் தரை மட்டமாக்காது விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டனர். அதே கட்டளையை நிறைவேற்ற உம்மை நான் அனுப்புகிறேன் என்று அலீ (ரலி) என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609,

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

கல்லை, மண்ணை, சமாதியை எதை வணங்கினாலும் உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழி அர்த்தமற்றதாகி விடும். அல்லாஹ்வைத் தவிர எதனையும் எந்த வடிவிலும் வணங்காமலிருக்கும் போது தான் உன்னை மட்டும் வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு அர்த்தமிருக்க முடியும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

உன்னை மட்டும் வணங்குவோம் என்று இறைவனுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி இறைவனல்லாதவர்களை வணங்குவதும், அவர்களிடம் பிரார்த்தனை செய்வதும், இம்மையிலேயே அவர்களின் பரிந்துரையை மக்கா காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) வேண்டியது போல் வேண்டுவதும், இறைவனுக்குச் செய்கின்ற பாவங்களிலேயே பயங்கரமான கடுமையான குற்றமாகும்.

இணை வைத்தலின் விளைவுகள்

ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரு காலத்திலும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. இணை வைத்தல் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன் 4:48)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன் 5:72)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன் 6:88)

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 9:17)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன் 39:65,66)

صحيح البخاري 
1238 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ» وَقُلْتُ أَنَا: «مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ»

எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 1238

صحيح البخاري 
32 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، ح قَالَ: وحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ العَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَ} [لقمان: 13]

விசுவாசங்கொண்டு தங்கள் விசுவாசத்துடன் அநீதியைக் கலக்காதவர்களுக்கே பாதுகாப்பு உண்டு (6:82) என்ற வசனம் இறங்கியதும், அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியுமா? என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக! இணைவைத்தல் தான் மிகப் பெரும் அநீதியாகும் (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 32, 6937

உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது எவ்வளவு பயங்கரக் குற்றம் என்பதை உணர இந்தச் சான்றுகளே போதுமாகும்.

வணக்கம் என்றால் என்ன?

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்று வல்ல இறைவனிடம் உறுதிமொழி எடுக்கும் போது வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருவதைக் காண முடிகின்றது.

தொழுகை, நோன்பு போன்ற காரியங்கள் மாத்திரமே வணக்கம் என்று இவர்கள் தவறாக நம்புவதால் தொழுகை, நோன்பு போன்றவை அல்லாத ஏனைய வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்யத் துணிந்து விடுகின்றார்கள்.

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!

தனக்காக தனது அடிமைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்று அல்லாஹ்தனது திருக்குர்ஆனிலும், தனது திருத்தூதர் வாயிலாகவும் கற்றுத் தருகிறானோ அவையாவும் வணக்கங்களேயாகும்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 2:165)

அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்அன் 39:45)

இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் - இறைவனின் - அழைப்பை பாங்கை கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள். இய்யாக நஃபுது என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.

இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்! இய்யாக நஃபுது என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

தவக்குல் வைப்பதும் வணக்கமே!

தனது இயலாமையை ஒப்புக் கொண்டு அடுத்தவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடமே தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது தவக்குல் ஆகும். தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆற்றல்களையும், வசதிகளையும் பயன்படுத்திய பின்னரும் ஒரு காரியம் கைகூடாத போது தன்னைப் போன்ற மனிதர்களால் அந்தக் காரியத்தைச் செய்திட முடியாது என்பதை உணர்ந்து தனக்கும் மேலான சக்தி பெற்றவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல்.

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்! என்று மூஸா கூறினார்.

(அல்குர்அன் 10:84)

அல்குர்ஆன் 3:122, 3:159, 3:160, 5:11, 5:23, 8:2, 8:49, 8:61, 9:51, 12:67, 14:11, 11:123, 14:12, 16:42, 16:99, 25:58, 29:59, 39:38, 42:36, 58:10, 64:13 ஆகிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் யார் மீதும் தவக்குல் வைக்கலாகாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இறைவனல்லாத எவர் மீதும் தவக்குல் வைப்பவர்கள் ஈமான் இல்லாதவர்கள்; இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் தெளிவாக்குகின்றான்.

பசியைப் போக்கிக் கொள்ள உழைக்காமல் படுக்கையில் படுத்துக் கொண்டு, அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறுவதற்குப் பெயர் தவக்குல் அல்ல. செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

صحيح البخاري 
1770 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ: قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: " ] كَانَ ذُو المَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198] فِي مَوَاسِمِ الحَجِّ "

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு, எந்தத் தயாரிப்பும் இன்றி, ஹஜ்ஜுக்கு வந்து சிலர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டித்து (ஹஜ்ஜுடைய காலங்களில் வியாபாரம் செய்வதன் மூலம்) உங்கள் இறைவனின் அருட்கொடைகளைத் தேடிக் கொள்வது தவறில்லை. (அல்குர்ஆன் 2:19) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1770, 2050, 2098, 4519

இதன் மூலம் தவக்குல் என்பதன் பொருளை நாம் அறியலாம். ஒருவன் திருமணம் செய்கிறான். தனக்குச் சந்ததி வேண்டுமென்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறான். அதன் பிறகும் சந்ததி உருவாகவில்லை எனும் போது மருத்துவர்களை அணுகி, தன் உடலைச் சோதனை செய்கிறான். செய்ய வேண்டிய அனைத்தையும் மனித சக்திக்கு உட்பட்டு செய்து பார்த்த பின் இறைவனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது அவன் அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாகின்றான்.

மற்றொருவன் இந்தக் கட்டத்தை அடையும் போது என்றைக்கோ இறந்து போய் விட்ட, தனக்கே ஒரு குழந்தையைச் சுயமாக உருவாக்கிக் கொள்ளச் சக்தியற்றவர்களிடம் போய் அவ்லியாவே! நீங்கள் தான் எனக்குப் பிள்ளை தர வேண்டும் என்று வேண்டுகின்றான் என்றால் அவனது தவக்குல் அல்லாஹ்வின் மீது இல்லை. அல்குர்ஆன் 5:23, 10:84 வசனங்களின் படி இஸ்லாத்தை விட்டு அவன் வெளியேறி விடுகிறான். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறி விடுகிறான்.

தவக்குல் வைக்க வேண்டுமானால், அதற்கு மிக முக்கியமான தகுதி ஒன்று வைக்கப்படுபவரிடம் இருந்தாக வேண்டும். அந்தத் தகுதி எவரிடம் இல்லையோ, அவர் மீது தவக்குல் வைக்க முடியாது. அதாவது எவர் மீது தவக்குல் வைக்கப்படுகின்றதோ, அவர் உயிருடனிருக்க வேண்டும். உயிருடனிருப்பது மட்டும் கூட போதாது. ஒருக்காலும் அவருக்கு மரணமே ஏற்படாது இருக்க வேண்டும். இத்தன்மை கொண்டவரிடமே தவக்குல் வைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் 25:58)

இந்தத் தகுதி அல்லாஹ்வைத் தவிர, வேறு எவருக்கேனும் இருக்க முடியுமா? பச்சிளம் பாலகனுக்குப் புரியும் விதமாக வல்ல அல்லாஹ் சொல்லித் தந்த பின்னரும் இறந்து போனவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் மீது தவக்குல் வைக்க சிலர் துணிந்து விடுகிறார்கள் என்றால் இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? இய்யாக நஃபுது என்று அன்றாடம் பலமுறை எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏதாவது அர்த்தமிருக்கின்றதா?

பைத்தியம் பிடித்து, சிலர் சமாதிகளில் சரணடைவார்கள். பைத்தியம் அங்கே தெளியும் என்பர். பைத்தியத்தைக் குணப்படுத்தும் வல்லமை அந்தச் சமாதிகளுக்கு உண்டென்று நம்புவர்.

இவர்கள் மனநோய்க்கு ஆளானதும், பைத்தியம் பிடித்து அலைவதும், ஷைத்தானின் வலையில் இவர்கள் விழுவதும் எதனால்? எவர்கள் தங்களின் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ் மீது தவக்குல் வைக்கத் தவறினார்களோ அவர்களே பைத்தியத்துக்கு ஆளாகின்றனர்.

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

(அல்குர்ஆன் 16:98,99,100)

வந்துவிட்ட மனநோய்க்காக அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்த மனநோய் வந்ததற்கு காரணமே அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்காமல் எவர் மீதும், எதன் மீதும் தவக்குல் வைத்தது தான் என்பதை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உன்னை மட்டுமே வணங்குவோம் என்று நாம் உறுதிமொழி எடுத்துள்ளதால் தவக்குல் எனும் இவ்வணக்கத்தை எவருக்கும் செய்ய மாட்டோம் என்று எவர் நம்புகிறாரோ, அதன் படி நடக்கிறாரோ, அவர் தான் இய்யாக நஃபுது என்ற உறுதிமொழியை அர்த்தமுள்ளதாக ஆக்கியவராவார்.

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் வணக்கமே!

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்ட முஸ்லிம்களில் சிலர், இறைவனல்லாத இறைவனின் அடியார்களுக்கு நேர்ச்சை செய்வதையும், அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர்.

இறைவனல்லாத எவரையும், எதனையும் வணங்கலாகாது என்று உறுதிமொழி எடுத்தவர்கள், இறைவனல்லாதவர்களுக்காக நேர்சச்சை செய்யவும், அவர்களுக்காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதற்கு என்ன காரணம்? வணக்கத்தில் இவைகளும் அடங்கும் என்று அவர்கள் அறியாமலிருப்பதே காரணமாகும்.

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன் 108:2)

இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை.

ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தாமாக இறந்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், இறைவனல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்கள் மீது அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.

(அல்குர்ஆன் 2:173)

இதே கருத்தை அல்குர்ஆன் 5:3 வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

பன்றியின் மாமிசமும், இரத்தமும், செத்த பிராணிகளும் எப்படி ஹராமாக உள்ளனவோ, அது போல் ஹலாலான ஆடு, மாடு போன்றவற்றை இறைவனல்லாத மற்றவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடும் போது அவையும் ஹராமாக உண்ணத் தகாதவையாக மாறிவிடுகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவனால் அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டால் அவையும் ஹராமாகி விடுகின்றன என்றால் இதை அல்லாஹ் எந்த அளவுக்கு வெறுக்கின்றான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டவைகளும், பன்றியின் மாமிசமும், இறைவனின் பார்வையில் சமமானவையே. இதை விடவும் கடுமையான எச்சரிக்கை என்ன இருக்க முடியும்?

صحيح مسلم 
43 - (1978) حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، كِلَاهُمَا عَنْ مَرْوَانَ، قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَيْكَ، قَالَ: فَغَضِبَ، وَقَالَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَيَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ، غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِي بِكَلِمَاتٍ أَرْبَعٍ، قَالَ: فَقَالَ: مَا هُنَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: قَالَ: «لَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ»

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான் (சபிக்கிறான்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 3657, 3658, 3659

படைத்த இறைவனே சபிக்கிறான் என்றால், தன்னுடைய அருளை விட்டும் அவனை அப்புறப்படுத்துகிறான் என்றால் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய ஒரு அடியானுக்கு இதை விட துர்பாக்கியம் என்ன இருக்க முடியும்? இறைவனுடைய சாபத்துக்கு ஆளாகிவிட்ட ஒருவன் எப்படி மறுமைப் பேறுகளைப் பெற முடியும்? இறைவனின் சாபத்துக்கு உரியவனாக ஒருவன் ஆகின்றான் என்றால் அவன் நரகத்திற்கு தகுதி படைத்தவனாக ஆகிவிடுகிறான் என்பது பொருள்.

உயிரே போய்விடும் என்ற நிலை ஏற்பட்டாலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

நான் புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமாகும்

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் நேர்ச்சை எனும் வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்யத் துணிய மாட்டார்கள்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன் 2:270)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

(அல்குர்ஆன் 22:29)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன் 76:7)

இந்த வசனங்கள் மூலம் நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அதை நிறைவேற்றலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் ஒரு வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ அவர்கள் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதி மொழியை அர்த்தமற்றதாக்குகிறார்கள். இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

அதிகாரம் படைத்தவன் என நம்புவதும் வணக்கமே

ஒன்றைக் கூடும் என்று சட்டமியற்றவோ, கூடாது என்று தடை விதிக்கவோ அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. அப்படி நம்புவதும் இறை வணக்கங்களில் ஒன்றாகும். இறைவனல்லாத வேறு யாரும் இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எவர் நம்பினாலும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியை மீறியவராவார். இறைவனல்லாதவர்களையும் வணங்கியவராக அவர் கருதப்படுவார்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

(அல்குர்அன் 9:31)

பாதிரிமார்களையும், மதகுருக்களையும் யூத கிறித்தவர்கள் கடவுளர்களாக ஆக்கி விட்டதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். உண்மையில் யூத கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்கள் என்று நம்பியதுமில்லை! அவர்கள் இறைத்தன்மை பெற்றவர்கள் என்று கொள்ளவுமில்லை!

அவர்கள் செய்த தவறு என்னவென்றால், தங்கள் மதகுருமார்களும் சட்டம் வகுக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்று நம்பியது தான். இவ்வாறு நம்பியதாலேயே அவர்கள், தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்களாகக் கருதினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

எவ்வளவு பெரிய மேதைகள் என்றாலும், மகான்கள் என்றாலும், வேத விற்பன்னர்கள் என்றாலும், இமாம்கள் என்றாலும் அனைவரும் இறைவனின் அடிமைகளே! அல்லாஹ் இடும் கட்டளைக்குக் கட்டுப்படவும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். சுயமாக இறைவனின் வேத ஆதாரமின்றி இறைத்தூதரின் வழிகாட்டலின்றி எந்த ஒன்றையும் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்று நம்புவது தான் இய்யாக நஃபுது என்று கூறுவதன் சரியான அர்த்தமாகும்.

இதற்கு மாறாக நடப்பவர்கள், மறுமையில் சந்திக்கும் விளைவை வல்ல அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவிக்கிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66,67,68)

பெரியார்கள், இமாம்கள், நாதாக்கள், தங்கள்மார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு அதற்குரிய சான்றுகள் உள்ளனவா? என்று ஆராயாமல் நம்பியவர்கள் மறுமையில் படும்பாட்டை இங்கே அல்லாஹ் படம்பிடித்துக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வழிகாட்டுதலுக்குப் பிறகும் மத்ஹபுகள் என்றும், தரீக்காக்கள் என்றும் சமுதாயத்தைக் கூறுபோட்டுப் பெரியார்களின் காலடிகளில் வீழ்ந்து கிடக்க முஸ்லிம் சமுதாயம் துணிந்து விட்டது என்றால் இதற்கு காரணம் வணக்கம் என்றால் என்னவென்பது முழுமையாக விளக்கப்படாததேயாகும்!

வணக்க வழிபாடுகளாகட்டும்! அரசியலாகட்டும்! இல்லற நெறிகளாகட்டும், இன்ன பிற துறைகளாகட்டும்! அனைத்துமே அல்லாஹ் காட்டித் தந்த வழியில் தான் நடக்க வேண்டும். இதை நிர்ணயிக்கின்ற உரிமையை அல்லாஹ் எவரது கையிலும் ஒப்படைக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

மதகுருமார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்பது போலவே மூதாதையாரானலும், பெற்றெடுத்த தாய் தந்தையரானாலும் அவர்கள் கூறுவது இறைவனது வழிகாட்டலுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்பதும் அவர்களை வணங்கியதாகவே பொருள்.

தங்கள் முன்னோர்கள் கூறினார்கள் என்பதற்காக, அவர்கள் செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்துபவர்களை 9:23, 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:74, 31:21, 43:22, 43:23, 58:22 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கடுமையாகக் கண்டனம் செய்கிறான்.

பெற்றோர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக வேத ஆதாரமின்றி அவர்களுக்குக் கட்டுப்படுவதை 29:8, 31:15 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கண்டிக்கிறான்.

அது போல் பெரும்பான்மை மக்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதும், சட்டமியற்றும் அதிகாரத்தை அவர்கள் கையில் ஒப்படைத்து விடுவதும் அவர்களை வணங்கியதாகவே கொள்ளப்படும். 6:116 வசனத்தில் பெரும்பான்மைக்கு வழிபடுவதை அல்லாஹ் மறுத்துரைக்கிறான். ஆக, எந்த விஷயத்திலும் சட்டமியற்றும் அதிகாரம் எவரிடமாவது இருப்பதாக நம்புவதும் அதைச் செயல்படுத்துவதும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாகும்.

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

துஆ எனும் பிரார்த்தனையும் வணக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாததால் இறைவனல்லாதவர்களிடம் பிரார்த்திக்கின்றனர் சிலர். உன்னையே வணங்குகிறோம் என்று இறைவனிடம் அளித்த உறுதிமொழிக்கு மாறாக நடக்கிறோம் என்று இவர்கள் உணரவில்லை.

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதீ 2895

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: ஹாகிம் 1801

பிரார்த்தனை என்பது வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக இந்த நபிமொழிகள் யாவும் அறிவிக்கின்றன. துஆ என்பது தலையாய வணக்கம் என நிரூபணமாகும் போது உன்னையே வணங்குகிறோம் என்பதில் துஆவும் அடங்கிவிடுமென்பதில் ஐயமில்லை.

யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர்.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

என் இறைவனுக்குத் தான் யாவும் தெரியுமே என்று எவரேனும் கருதி இறைவனிடம் பிரார்த்திக்கத் தவறினால் இவன் இறைவனின் வல்லமையை உணர்ந்தவனாகக் கருதப்பட மாட்டான். மாறாக, தன் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கும் அகம்பாவம் கொண்டவனாகவே கருதப்படுவான்.

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் வெறுப்படைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3295

இறைவனின் அருட்கொடையை இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ 3494

துஆ கேட்காதவர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்றால், துஆ செய்யப்படுவதை எவ்வளவு விரும்புகிறான் என்பதை உணர முடியும். இறைவனுக்கு மிகவும் விருப்பமான இந்த வணக்கத்தை இறைவனல்லாதவர்களுக்குச் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். அவ்வசனங்கள் யாவும் இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளேயாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:194)

எவரையாவது பிரார்த்திப்பது கூடும் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் எத்தகையவர்களாக இருந்திட வேண்டும் என்று அல்லாஹ் இங்கே போதிக்கின்றான். அதாவது பிரார்த்திக்கப்படுவோர் எவருக்கும் அடிமைகளாக இல்லாதிருத்தல் அவசியம்.

அல்லாஹ் பல்வேறு வசனங்களில் நபிமார்களை நல்லவர்களை - வானவர்களைத் தனது அடிமைகள் என்றே குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

(2:23, 4:172, 8:41, 17:1,3, 18:1,6,5, 19:93, 38:17,30,44, 43:59, 54:9, 72:19, 53:10, 25:1, 57:9, 66:10 ஆகிய வசனங்களைக் காண்க!)

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

இந்த வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் விளக்குகிறான். இறைவனல்லாத அழைக்கப்படுபவர்களுக்கு தாங்கள் அழைக்கப்படுவதே தெரியாது என்பது ஒரு உண்மை.

தங்களைப் பிரார்த்தனை செய்தது மறுமையில் தெரியும் போது தங்களுக்கும், இவர்களது பிரார்த்தனைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தாங்கள் அதை விரும்பவில்லை என்று கூறி, பிரார்த்தனை செய்தவர்களுக்கே எதிரிகளாகிப் போவர் என்பது மற்றொரு உண்மை. இதன் பின்னரும் யாரேனும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யத் துணிவார்களா?

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

பிரார்த்தனை செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய மற்றொரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மாத்திரமே பிரார்த்திக்கப்பட அருகதையுடையவன். இறைவனன்றி பிரார்த்திக்கப்படுபவர்கள் நபிமார்களானாலும், நல்லடியார்களானாலும் அவர்களில் எவருமே ஒரு ஈயைக் கூடப் படைப்பதில்லை. படைக்க இயலாது. இந்த நிலையில் அவர்களை எங்ஙனம் பிரார்த்திக்கலாம்?

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(அல்குர்ஆன் 27:62)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன் 10:106)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7:197)

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20,21)

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணைவைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளாக இவை அமைந்துள்ளன. இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்பும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யலாம் என சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான். இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

இறைவனல்லாத பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை. மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள் என்றே கூறுகிறோம். ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம். சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்? இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது பொருந்தாத வாதம் என்பதை உணரலாம்.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அத்தனையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்கின்றனர். நேரடியாக எதையும் தருவார்கள் என்று இவர்கள் நம்பாவிட்டாலும் தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர்.

மக்கத்துக் காஃபிர்கள், (இஸ்லாத்தை ஏற்காதவர்) இறைவனல்லாத பெரியவர்களை இறைவனுக்குச் சமமாக எண்ணியிருக்கவில்லை. மாறாக, அல்லாஹ் தான் ஏக இறைவன்; படைப்பவன் அவனே; உணவளிப்பவன் அவனே; அனைத்து அதிகாரங்களும் அவன் கையில் தான் உள்ளன என்றே அவர்கள் நம்பினார்கள்.

(10:31, 29:61, 31:25, 39:93, 43:9,87, 34:24, 23:88 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களைக் காண்க)

இப்படியெல்லாம் அல்லாஹ்வைப் புரிந்து வைத்திருந்த மக்கத்து காபிர்கள், அல்லாஹ் விசயத்தில் செய்த தவறு தான் என்ன?

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இவ்விரு வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இதை விடச் சான்று எதுவும் தேவையில்லை.

உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

அதிகாரி

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு நடைமுறை உதாரணங்களைக் காரணம் காட்டுவது, இவர்களிடம் உள்ள மற்றொரு நியாயம்.

அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர். ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!

யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

வக்கீல்

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாட ஒரு வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். அவர் தன் வாதத் திறமையால் குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார். நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா? யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால், வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 16:74)

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை

(அல்குர்ஆன் 112:4)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

(அல்குர்ஆன் 36:78)

அல்லாஹ்வைப் பற்றிப் பேசும் போது யாதொன்றையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

நாம் பாவங்கள் பல செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம் என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.

அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

யாசிப்பதற்கும், பிச்சை கேட்பதற்கும் தகுதி என்ன வேண்டிக் கிடக்கின்றது? என்பதை இவர்கள் உணரவில்லை. இவர்கள் அல்லாஹ்வுக்கு எதையோ கொடுக்கப் போவது போலவும் இவன் அவர்களிடம் வாங்கப் போவது போலவும் இருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கும். நாம் ரப்புல் ஆலமீனிடம் யாசகம் தான் கேட்கப் போகிறோம். தகுதியில் குறைந்தவர்கள் தான் யாசகம் கேட்க அதிகம் அருகதை உள்ளவர்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அல்லாஹ்வின் அளவற்ற அருளாளன் பண்பையே மறுக்கிறார்கள். அல்லாஹ் கோபக்காரன் எனவும் அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள் எனவும் நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணைவைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ் செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் என்றார்.

(அல்குர்ஆன் 12:87)

மனிதன் எவ்வளவு தான் பாவங்கள் புரிந்தாலும் அவனும் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் கேட்டால் அவனது அருள் உண்டு என உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஆக, அல்லாஹ்வைத் தவிர எவரையும் எந்தக் காரணம் காட்டியும் பிரார்த்தித்தலாகாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எந்தக் காரணத்திற்காக மற்றவர்களை பிரார்த்தித்தாலும் அவர்கள் இய்யாக நஃபுது எனும் உறுதிமொழிக்கு மாறு செய்தவர்களே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு மகான்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம், பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

அற்புதங்கள் பற்றி முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை அவர்கள் முன் வைக்கின்றனர்.

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளது உண்மை தான். அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த மாட்டார்கள். நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்ற உண்மையை விளங்காமலிருப்பது தான் அந்த வாதத்தன் அடிப்படையாகும்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 13:38)

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

(அல்குர்ஆன் 40:78)

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 14:11)

எந்த ஒரு அற்புதத்தைக் கொண்டு வருவதென்றாலும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் முடியாது என்பதற்கு மறுக்க முடியாத மாற்றுக் கருத்து கொள்ள முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

இதைப் புரிந்து கொள்வதற்கு நபிமார்கள் வழியாக அல்லாஹ் நிகழ்த்திய சில அற்புதங்களை நாம் ஆராய்வோம்.

மூஸா நபி அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை வழங்கியிருந்தான். கைத்தடியைக் கீழே போட்டதும் அது பாம்பாக மாறுவதும் அவற்றுள் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 27:10, 20:19-21, 7:107, 26:32, 28:31 ஆகிய வசனங்களில் இந்த அற்புதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் கையில் இருந்த கைத்தடி எப்போது போடப்பட்டாலும் பாம்பாக மாறுமா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைப்படி போடும் போது மட்டும் பாம்பாக மாறுமா? இக்கேள்விக்கு திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விடையளிக்கிறது.

மூஸா நபியவர்கள் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறியபோது அம்மக்கள் ஏற்கவில்லை. மூஸா நபி செய்து காட்டிய அற்புதம் அவர்களுக்கு தந்திரக் கலையாகத் தோன்றியது. எனவே மூஸா நபிக்கும் அந்த நாட்டிலுள்ள மந்திரக் கலை நிபுணர்களுக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். உமது கைத்தடியைப் போடுவீராக! என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:115-117)

எதிரிகள் தமது வித்தையைக் காட்டியவுடன் மூஸா நபியவர்கள் தமது கைத்தடியைக் கீழே போட்டு தமது அற்புதத்தைக் காட்டவில்லை. மாறாக அல்லாஹ் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்த பிறகு தான் கைத்தடியைப் போட்டனர் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

அற்புதம் செய்யும் ஆற்றல் மூஸா நபியின் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது அவர்களின் கைத்தடிக்கே மந்திர சக்தி அளிக்கப்பட்டிருந்தால் உடனே தமது கைத்தடியைப் போட்டிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்கள் தமது கைத்தடியைக் கீழே போடவில்லை.

மற்றொரு இடத்தில் பின்வருமாறு இந்த நிகழ்ச்சியை அல்லாஹ் கூறுகிறான்.

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா? என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம். உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன் 20:65-69)

அல்லாஹ்வின் கட்டளை வருவதற்கு முன் அவர்கள் பயந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமது கைத்தடியின் மூலம் எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் நினைத்திருந்தால் பயந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் அனுமதி கிடைத்தால் தான் தம்மால் அற்புதம் செய்து காட்டி எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் கருதியதால் தான் பயந்தார்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்.

மூஸா நபி அவர்கள் தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு சென்ற போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே மக்கள் மூஸா நபியிடம் முறையிட்டனர்.

மக்கள் முறையிட்டவுடன் உங்களுக்குத் தண்ணீர் தானே வேண்டும்? இதோ எனது மந்திரக் கோல் மூலம் தண்ணீரை உண்டாக்கிக் காட்டுகிறேன் என்று கூறினார்களா? அல்லது இது அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்று கருதினார்களா?

இந்த நிகழ்ச்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக! என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்! (என்று கூறினோம்)

(அல்குர்ஆன் 2:60)

அவர்கள் கையில் கைத்தடி இருந்தும் அதன் மூலம் அவர்களாக பாறையில் அடித்து தண்ணீரைக் கொண்டு வரவில்லை. அல்லாஹ் அடிக்கச் சொன்ன பிறகு தான் அடித்தார்கள் என்பதிலிருந்து அற்புதங்கள் நிகழ்த்துவது அல்லாஹ்வின் அதிகாரத்தின்பாற்பட்டது என்பதை அறியலாம்.

இந்த விபரம் 7:160 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

மூஸா நபியை எதிரிகள் விரட்டி வருகின்றனர். மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டு ஓடுகின்றனர். எதிரில் செங்கடல் குறுக்கிடுகின்றது. மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் வசமாக மாட்டிக் கொண்டனர். பின்புறம் பிர்அவ்னுடைய வலிமையான படை. முன்புறம் செங்கடல். இந்த நிலையில் தம்மிடம் இருந்த கைத்தடியின் மூலம் தாமாக அற்புதம் நிகழ்த்தி அவர்கள் தப்பித்தார்களா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்களா? இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன் 26:61-63)

மூஸா நபியவர்கள் மாட்டிக் கொண்ட போது தமது கைத்தடியால் தாமாகக் கடலில் அடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். கைத்தடியின் மூலம் கடலைப் பிளந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தான் அவன் எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? அல்லாஹ் எப்போது போடச் சொல்கிறானோ அப்போது போட்டால் தான் அது பாம்பாகும். அல்லாஹ் பாறையில் அடிக்கச் சொல்லும் போது அடித்தால் தான் பாறையில் நீரூற்றுக்கள் பீரிட்டு வரும். அல்லாஹ் அடிக்கச் சொல்லும் போது கடலில் அடித்தால் தான் பிளந்து வழிவிடும். மூஸா நபி விரும்பும் போதெல்லாம் நடக்காது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

இது போலவே ஈஸா (அலை) அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஈஸா நபி சில நேரங்களில் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனர். குஷ்டரோகத்தையும் பிறவிக் குருடையும் குணப்படுத்தியுள்ளனர். களி மண்ணால் பறவை செய்து அவற்றை உயிருள்ள பறவையாக மாற்றிக் காட்டினார்கள். அல்குர்ஆன் 3:49, 5:110 ஆகிய வசனங்களில் இந்த விபரங்களைக் காணலாம்.

இவ்வளவு பெரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை அல்லாஹ் அவர்களது அதிகாரத்தில் அளித்தானா? அல்லது ஒவ்வொரு அற்புதம் நிகழ்த்தும் போதும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தான் நிகழ்த்த முடிந்ததா? மேலே நாம் சுட்டிக்காட்டிய 3:49, 5:110 ஆகிய வசனங்களிலேயே இதற்கான விடையையும் காணலாம்.

என்னிடம் அனுமதி பெற்று இந்த அற்புதங்களை நீர் நிகழ்த்துவீர் என்று 5:110 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அல்லாஹ்வின் அனுமதி பெற்று இவற்றைச் செய்வேன் என்று ஈஸா நபி அவர்கள் மக்களிடம் கூறியதாக 3:49 வசனம் கூறுகிறது.

தேவைப்படும் போதெல்லாம் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் அதிகாரம் ஈஸா நபிக்குக் கூட வழங்கப்பட்டதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியவர்கள் நெருப்பில் வீசப்பட்ட போது அவர்களாக அந்த நெருப்பிலிருந்து தப்பித்ததாக அல்லாஹ் கூறவில்லை. நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளிர்ந்து விடு என நாம் கூறினோம் (21:69) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிமார்களில் தலைசிறந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். அந்த அற்புதங்களையெல்லாம் அவர்கள் நினைத்த உடனே நடத்திக் காட்டும் அதிகாரம் பெற்று நிகழ்த்தினார்களா? அல்லது அல்லாஹ் தான் விரும்பிய நேரத்தில் அவர்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினானா?

பின்வரும் வசனங்கள் இந்தக் கேள்விக்கு தெளிவாக விடையளிக்கின்றன.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டவுடன் அவர்கள் இதைச் செய்யவில்லை. செய்யவும் முடியாது. கடவுள் தான் இவற்றைச் செய்ய முடியும். நான் கடவுள் என்று உங்களிடம் வாதம் செய்தால் என்னிடம் இவற்றைச் செய்யுமாறு கேட்கலாம். மனிதன் என்றும் கடவுளின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் கடவுளிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். மனிதர்கள் மூலம் அவன் நாடும் போது வெளிப்படுத்துகிறான் என்பதையும் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதை அல்குர்ஆன் 3:112, 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களில் காணலாம்.

இங்கே சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்கள் நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலைமைய நீட்ட முடியாது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

நபிமார்களை எதிரிகள் கொல்ல வரும் போது, அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் அவர்களிடம் இருந்திருந்தால் அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதல்ல என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

இவை தவிர நபிமார்கள் பட்ட துன்பங்களையும் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அல்லாஹ் துன்பத்திலிருந்து விடுபட அற்புதம் செய்யும் ஆற்றலைப் பயன்படுத்தி துன்பங்களை வெல்ல முடியும். வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்களைப் பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்ட நேரத்தில் கூட எந்த அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டவில்லை என்பதிலிருந்து அற்புதங்கள் அலலாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளைத் துவம்சம் செய்திருக்க முடியும்.

நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வோம்.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது. அல்குர்ஆன் 27:20 முதல் 27:28 வரை உள்ள வசனங்களில் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று அதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.

இது போலவே எறும்பு பேசிய விபரமும் திருக்குர்ஆனில் உள்ளது. பேசியது மட்டுமின்றி மனிதர்களைப் போலவே வருபவர் சுலைமான் என்றும் அவருடன் அவரது படையினர் வருகிறார்கள் என்றும் புரிந்து கொள்கிறது.

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும் எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான். இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தும் இறைத் தன்மையை வழங்கி விட்டான் என்று புரிந்து கொள்வது முற்றிலும் தவறானதாகும்.

பறவைகள் எறும்புகள் ஒருபுறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும் சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்கிறான். இந்த விபரங்களை அல்குர்ஆன் 20:85 முதல் 20:98 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை இவன் மூலம் நிகழ்த்திக் காட்டினான். இயல்பிலேயே இவன் நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தைச் செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இவன் இப்போது செய்து காட்டிய அந்த அற்புதத்தையே மற்றொரு தடவையும் இவனால் செய்ய முடியாது என்பதை அல்குர்ஆன் 20:89 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இது போலவே எதிர்காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு தடவை இறந்தவரை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்திவிட்டனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7132

ஏன் ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

என்றோ மரணித்து விட்ட மனிதர்களின் அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அற்புதங்கள் பல நிகத்திய ஈஸா நபியை அழைக்கும் கிறிஸ்தவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) என்று கூறுகின்ற இவர்கள் ஈஸா நபியின் கால் தூசுக்கு சமமாகாத மற்றவர்களை அழைப்பது இவர்களுக்கு ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.

பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.

ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்ம் 3084

உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது என்றால் இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது.

அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?

அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? சாமுரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.

நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?

அற்புதங்கள் நிகழட்டும்! நிகழாமல் போகட்டும்! அதற்காக அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்திப்பது கூடும் என்று ஆகிவிடாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்று கருதி சோதனையில் வெற்றி பெறுவது தான் உண்மையான முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர். இரண்டு பேர் 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை. இவரெல்லாம் ஒரு மகானா என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைவித்துவிடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. மாறாக கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன. இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் காணிக்கைகள் குவிகின்றன. தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் சேர்கின்றன.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பதும் குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தினடிப்படையில் கோவில், சர்ச்சுகளுக்குப் போய் பிரார்த்திப்பதையும் குறை காண முடியாது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே? இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒரு காரியம் ஒருவருக்கு நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும் பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை. (7:34, 10:49, 16:61)

எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட (தவறான வியாக்கியானம் கொடுத்து) இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன் 3:169)

நல்லடியார்கள் மரணித்த பின்பும் வாழ்கிறார்கள் என்று இந்த இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் தவறாகும்.

முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று, அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவார். அதன் பின்னர் புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு! எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

நூல்: திர்மிதீ 991

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இந்தக் காரணத்தினாலும் இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். அவர்களின் வாதப்படி அவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியைத் தந்து விடுமா?

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளனர். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதனாலும் இவர்களின் வாதம் மேலும் பலவீனப்படுகின்றது.

சமாதி வழிபாடு

இன்னும் நாம் இதில் ஆழமாக இறங்கினால் சமாதி வழிபாட்டையும், சமாதிகளையும் தரைமட்டமாக்கும் சான்றுகள் பலவற்றைக் காணலாம்.

அவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கமேயாகும்.

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதைக் கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள். இதை அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், இவ்வாறு யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்த செயலைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்யாதிருந்தால் அவர்களின் மண்ணறையை வீட்டுக்கு வெளியில் (பகிரங்கமாக) ஆக்கியிருப்பார்கள் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டுவிடுமோ என அஞ்சப்பட்டது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, 1390, 4441

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன். ஏனெனில் நபி இப்ராஹீமை தன் உற்ற தோழராக அல்லாஹ் ஆக்கியதைப் போல என்னையும் ஆக்கிக் கொண்டான். (உண்மையாக) நான் என் சமுதாயத்தவர்களிலிருந்து ஒரு உற்ற தோழரை ஆக்குபவனாக இருந்தால் அபூபக்கரையே என் உற்ற தோழராக ஆக்கியிருப்பேன். முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜிதாக ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 827

கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி)

நூல்: அஹ்மத் 1602

உயரமான எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காது விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609,

நல்லடியார்கள் என்று நம்பப்படுபவர்கள், நபிமார்கள் யாராயினும் அவர்களின் சமாதிகளை வழிபட இஸ்லாத்தில் இடமில்லை என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கவுரைகள் தான்.

எவ்வகையிலும் இறைவனல்லாதவர்களை வணங்க அறவே அனுமதி இல்லை என்று யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியில் உண்மையாளர்கள்.

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

கனவுகள் என்றால் என்ன என்பதைப் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.

யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110, 6197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும் எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.

கனவில் வரக்கூடியவர் நான் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜீலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து நான் தான் அப்துல் காதிர் ஜீலானி எனக் கூறலாம்.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு, தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு - அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தது ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது.

கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்திக்காத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.

கனவில் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்கள் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை அவர்கள் நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கண்டு பிடித்தார்கள்?

கனவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்னை கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் அவரிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கனவில் கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

ஒரு மகானைக் கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. அல்லாஹ் நல்ல நோக்கத்திற்காகவும் அல்லது சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளைக் காட்டுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.

எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல; அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் யாரும் போய் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.

உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்.

ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.

நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.

நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்கள் முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.

நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990

நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவில் ஷைத்தான் வர மாட்டான் என்பதால் அவர்களைக் கனவில் காண முடியுமல்லவா? என்று சிலர் கேட்கலாம்.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னை விழிப்பிலும் (நேரடியாகக்) காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

கனவில் கண்ட பின் நேரிலும் அவர்களைக் காண முடியும் என்றால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் சாத்தியமாகும்.

மதீனாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பார்கள். விடிந்தவுடன் அவர்கள் நேரில் காணும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவான்.

இன்றைக்கு ஒருவர் கனவில் நபிகள் நாயகத்தைப் பார்த்தால் விழித்தவுடன் நேரில் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவர் நபிகள் நாயகத்தைக் காணவில்லை என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களை உலகில் யாரும் கனவில் காணவே முடியாது என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சான்றாக உள்ளது.

கனவுகள் பற்றிய இந்த விளக்கத்தை அறிந்து கொண்டால் அல்லாஹ்வைத் தவிர எவரிடமும் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்.

மறுமையில் பரிந்துரை

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்று வாதிடுவோர் ஷபாஅத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.

எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் 2:48)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(அல்குர்ஆன் 2:255)

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 10:3)

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.

(அல்குர்ஆன் 20:109)

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் உங்கள் இறைவன் என்ன கூறினான்? எனக் கேட்டுக் கொள்வார்கள். உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன் என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 34:23)

இந்த வசனங்களையும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன் சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற கருத்தைப் பெற முடிகின்றது.

ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளவும் படாது.

நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும் தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை ஏற்படுத்தப்படும். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே என்று நான் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம் நீர் அறியமாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான் கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

நூல்கள்: புகாரி 4740, 6526

இறைவனது படைப்புகளிலேயே மிகவும் உயர்வான இடத்தைப் பெற்றுள்ள இறைவனுக்கு மிகவும் நெருக்கமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திசைமாறிச் சென்ற தம் தோழர்களுக்காகப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனாலும் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படவில்லை. முஹம்மதே! நீர் பரிந்துரைக்கலாம் என்று இறைவன் அனுமதி வழங்காத நிலையில் அவர்கள் பரிந்துரை செய்ததனாலேயே இந்த நிலை. முஹம்மத் (ஸல்) அவர்களாக இருந்தால் கூட நினைத்த போது நினைத்த நபர்களுக்காகப் பரிந்துரைத்திட முடியாது என்பதற்கு இது தெளிவான சான்று. மற்றொரு ஹதீஸிலிருந்தும் இதை அறியலாம்.

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி செய்வதைப் பற்றி எச்சரிக்கை செய்தனர். அது எவ்வளவு பயங்கரமான குற்றம் என்பதை விளக்கினார்கள். மேலும் தொடர்ந்து (ஒட்டகத்தை மோசடி செய்தவன்) மறுமை நாளில் தன் பிடரியின் மேல் அந்த ஒட்டகத்தைச் சுமந்து கொண்டு அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (உலகிலேயே) உனக்கு (இது பற்றி) எடுத்துரைத்து விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள் (குதிரையை மோசடி செய்தவன்) குதிரையைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (சொல்ல வேண்டியவைகளை உலகிலேயே) உனக்குச் சொல்லிவிட்டேன் என்று நான் கூறி விடுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள். (ஆட்டை மோசடி செய்தவன்) ஆட்டைத் தன் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிடவில்லை. (சொல்ல வேண்டியவைகளை) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள். (ஏதேனும் ஒரு உயிர்ப் பிராணியை மோசடி செய்தவன்) அதைத் தன் தோளில் சுமந்தவனாக வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (முன்பே) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்கள் எவரையும் நாம் சந்திக்கும்படி செய்து விடாதீர்கள். (அசையாப் பொருட்களில் மோசடி செய்தவன்) அதைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! (என்னைக்) காப்பாற்றுங்கள்! என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்குமாறு செய்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1402, 3073

முஹம்மதே பரிந்துரை செய்யுங்கள் என்று இறைவன் அனுமதி அளிப்பதற்கு முன் தன்னிச்சையாக அவர்கள் பரிந்துரை செய்ய மறுக்கின்றனர் என்பதை இதிலிருந்து நாம் விளங்கலாம். இறைவன் எப்போது அனுமதிக்கின்றானோ அப்போது தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக அறிவிக்கின்றது.

மக்களெல்லாம் தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோரிடம் சென்று விட்டு அவர்களெல்லாம் மறுத்து விட முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது நான் ஸஜ்தாவில் விழுவேன். எவ்வளவு நேரம் என்னை (அந்த நிலையில் கிடக்க) அல்லாஹ் நாடினானோ அவ்வளவு நேரம் விட்டு விடுவான். பிறகு முஹம்மதே! (தலையை) உயர்த்துவீராக! கூறு! அது கேட்கப்படும். பரிந்துரை செய்! அது ஏற்கப்படும்! கேள்! கொடுக்கப்படுவாய் என்று இறைவன் கூறுவான். நான் தலையை உயர்த்தி என் இறைவன் கற்றுத் தந்த விதமாகப் புகழ்ந்துரைத்து விட்டுப் பரிந்துரை செய்வேன். அந்த பரிந்துரைக்கும் இறைவன் சில வரம்புகளை ஏற்படுத்துவான். (அதாவது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்கள் விஷயத்தில் மட்டும் பரிந்துரைக்க அனுமதிப்பான்) நான் அந்தத் தகுதி உள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் சேர்ப்பிப்பேன். இப்படியே பலமுறை நடக்கும். ஒவ்வொரு தடவையும் ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின் பரிந்துரைக்க வரம்பு ஏற்படுத்துவான். யாரைக் குர்ஆன் தடுத்து விட்டதோ அவர்களைத் தவிர அதாவது யாருக்கு நிரந்தர நரகம் என்று கூறி விட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களை நரகிலிருந்து வெளியேற்றுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகவும் நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4712, 6565

பரிந்துரை செய்தல் மறுமையில் உண்டு என்பதையும், இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 296

நபிமார்கள் மற்றும் பெரியார்களின் பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றவர்களுக்கு அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை முஸ்லிம்களில் உள்ள சமாதி வழிபாட்டுக்காரர்கள் உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பதும் இறைவனது தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை வைத்தலில் இறங்க மாட்டார்கள்.

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.

(அல்குர்ஆன் 53:26)

அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.

(அல்குர்ஆன் 21:28)

அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது. பரிந்துரை செய்யும் அதிகாரம் நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

யாரை, எப்போது, யாருக்காக பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம் இறைவனுக்கேயுரியது என்ற காரணத்தினால் தான் - மக்கத்து காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனை மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களை காஃபிர்கள் என்று இறைவன் பிரகடனம் செய்தான்.

நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காகப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால் அப்போது இறைவனை மட்டுமே வணங்கி இறைவனிடம் தான் இதைக் கேட்க வேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பரிந்துரை செய்யவை என்று கேட்க வேண்டுமே தவிர நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நேரடியாகச் சந்திக்கும் போது மட்டுமே அப்படிக் கேட்பார்கள். அங்கு மட்டுமே அது தவறாக இறைவனால் கருதப்படாது. காரணம் மறுமையில் இறைவனது தனி அதிகாரம் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாயிருக்கும். இறைவனுக்கும், இறைவனது படைப்பினங்களுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகியிருக்கும். நபிமார்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கி திடுக்குற்று இருப்பதை எல்லோரும் உணர முடியும். இந்தக் கட்டத்தில் பரிந்துரை செய்யச் சொல்லும் போது அங்கே இணைவைத்தலின் சாயல் கூட இருக்காது. இதனால் தான் மறுமையில் நேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணும் போது அவர்களைப் பரிந்துரை செய்ய மக்கள் கேட்கின்றனர்.

மறுமையில் பரிந்துரை செய்வதற்காக இம்மையிலேயே எந்தப் பெரியாரிடமும் கேட்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) இவ்வுலகில் வாழ்ந்த போது அவர்களை நபித்தோழர்கள் நேரடியாகச் சந்தித்ததால் இவ்வாறு கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் மரணித்த பிறகு கேட்டதில்லை.

மறுமையில் பரிந்துரை பற்றி இவ்வாறே நாம் விளங்க வேண்டும். இந்தப் பரிந்துரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் என்று எவரும் விளங்கி விடக் கூடாது. மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்ய இறைவன் அனுமதிப்பான். இதையும் நாம் உணர வேண்டும்.

சொர்க்கத்திற்குச் சென்று விட்ட முஸ்லிம்கள் நரகத்தில் கிடக்கும் முஸ்லிம்களுக்காக எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றனர்; தொழுதனர்; ஹஜ் செய்தனர்; (அவர்களின் தவறுகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பாயாக) என்று பரிந்துரைப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறப்படும். நரகிற்கு அவர்கள் ஹராமாக்கப்படுவார்கள். பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு இறைவா! நீ சொன்ன தகுதியில் உள்ள எவரும் நரகில் மிச்சமாக இல்லை என அவர்கள் கூறுவார்கள். அப்போது இறைவன் ஒரு தீனார் அளவு எவருடைய உள்ளத்தில் நல்லவை இருக்கின்றதோ அவர்களையும் நீங்கள் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை நரகிலிருந்து வெளியேற்றுவார்கள். பிறகு இறைவன் யாருடைய உள்ளத்தில் அரை தீனார் அளவுக்கு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றுங்கள் என்பான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு யாருடைய உள்ளத்தில் அணு அளவு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு இறைவா! எஞ்சியிருப்பவர்களில் சிறிதளவும் நன்மையில்லை என்பார்கள். அப்போது இறைவன் மலக்குகள் பரிந்துரைத்து விட்டார்கள்; நபிமார்கள் பரிந்துரைத்து விட்டார்கள்; கருணையாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் கருணையாளனாகிய என்னைத் தவிர யாரும் மிச்சமில்லை என்று கூறிவிட்டு நரகிலிருந்து ஒரு பிடி அள்ளுவான். அவர்கள் அடுப்புக் கரியாக மாறியிருப்பார்கள். ஜீவநதி எனும் பெயருடைய நதியில் அவர்களைப் போடுவான். முத்துக்கள் போல் அவர்கள் வெளிப்படுவார்கள். அப்போது சுவர்க்கவாசிகள் இவர்கள் இறைவனால் விடுதலை செய்யப்பட்டவர்கள். ஒரு நன்மையும் செய்யாமல் இவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைத்து விட்டானே என்பார்கள். அப்போது இவர்களுக்கு கிடைத்தது போல் இன்னொரு மடங்கு உங்களுக்கு உண்டு என்று கூறுவான். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 7440

பரிந்துரை என்பது மேலோட்டமாகப் பார்த்தால் யாரோ சொல்வதை இறைவன் கேட்பது போல் தோன்றினாலும் இந்த ஹதீஸைக் கவனிக்கும் போது இறைவன் சிலரை விடுவிக்க முடிவு செய்து விட்டு ஒரு பேச்சுக்காகத் தான் பரிந்துரைக்கச் சொல்கிறான். பரிந்துரை இல்லாமல் அதை விட அதிகமானோரை அவன் வெளியேற்றுவான் என்பதை உணரலாம்.

வஸீலா தேடுவது தவறா?

அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அவனளவில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள் (அல்குர்ஆன் 5:35) என்று கூறுகிறான்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிடும் காரணத்தினால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது.

ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதே நமது வாதமாகும்.

வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏற்றுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.

அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனுக்காக எதையும் செய்யாமல் கேட்கக் கூடாது. அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். நாம் கேட்பதற்கு அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது அதன் பொருள் அல்ல.

இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) நபித்தோழர்கள் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் அடங்குவர்.

மூமின்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான். முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.

இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.

வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் அந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.

முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்

இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அவர்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் இவர்கள் வஸீலாவாக்க வில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

எனவே வஸீலாவுக்கு இடைத் தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.

இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள் என்று கேட்டால் நம்மை பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும் என்று கேட்பார்.

இன்னார் பொருட்டால் என்று இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாகே உள்ளது.

நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்கு கோபம் வராதா? நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித் தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித் தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்றும், இந்தக் கோமாளித் தனத்தை அல்லாஹ் விரும்புவான் என்றும் நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.

எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

ஸியாரத் ஒரு நபிவழியல்லவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.

இவர்கள் இறந்து போனவர்களிடம் எதையும் பிரார்த்திக்கலாகாது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

அவ்லியாக்களை அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு தான் கேட்கிறோம் என்கின்றனர்.

இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.

இவர்கள் ஸியாரத் செய்வதற்குத் தான் ஆதாரம் காட்டுகின்றனர். இறந்தவரிடம் போய் நமக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுமாறு வேண்டலாம் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காக துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.

எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.

இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.

கப்ர்களை - அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: திர்மிதி 974

இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.

ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது இவ்வாறு அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மறுமையை நினைவு படுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.

ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டிடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.

எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.

என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1621

எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன் 9:113)

நமது தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸியாரத் என்பது நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவு படுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1230

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அந்தப் பணிக்காக உன்னை நான் அனுப்புகிறேன். இம்மண்ணில் உயரமாக்கப்பட்ட எந்த சமாதியையும் தரைமட்டமாக்காது விடாதே என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609

என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.

எனவே ஸியாரத்துக்கும், அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

உன்னையே வணங்குகிறோம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்பவர்கள் இது போன்ற உளறல்கள் மூலம் தங்கள் செயல்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்தத் தெளிவான சான்றுக்கு முன்னால் சரணடைவார்கள்.

வஇய்யாக நஸ்தயீன்

உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம் (வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான். அதனையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குவது அவசியமாகும். ஏனெனில் சில அறிவீனர்கள் இந்த உறுதிமொழியைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து பலதெய்வ வணக்கத்தை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

அப்படியானால் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது செயல்படுத்த முடியாததாகவே உள்ளது. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவி தேடுவது பாவம் என்றால் எந்த மனிதனும் இந்தப் பாவத்தைச் செய்யாமலில்லை. இப்படிப் போகிறது அந்த அறிவீனர்களின் சிந்தனை. இத்துடன் இவர்கள் நிறுத்திக் கொண்டார்களில்லை. ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து போய் விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று விரிகிறது இவர்களது சிந்தனை. இதன் காரணமாகவே இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதன் சரியான பொருளை திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் நமக்கு விளக்குகின்றது.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:2) என்பதே அந்த வசனம்.

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

இறைவனே இவ்வாறு உதவிக் கொள்வதை அனுமதிப்பதால், உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதையும் மறுக்கும் விதத்தில் அருளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவதை மட்டுமே இந்த வசனம் மறுக்கின்றது. இறந்து போன நல்லடியார் ஒருவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை. எப்படி என்று விளக்கமாகக் காண்போம்.

ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

இறந்து போனவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான். மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்து போனவக்கும் இவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

இரண்டாவது வித்தியாசம்

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

இறந்து போன நல்லடியாரை அணுகக் கூடியவனின் நம்பிக்கை இப்படி இல்லை. இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

மூன்றாவது வித்தியாசம்

ஒரு மருத்துவரை அணுகும் போது இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

இறந்து போன நல்லடியார் ஒருவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் அவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று நம்புகிறான். இறந்து போனவரின் கேட்கும் திறனோ இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

நான்காவது வித்தியாசம்

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

ஐந்தாவது வித்தியாசம்

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.

ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.

ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் எல்லாக் காரியங்களிலும் எவ்வித இயலாமையும் இல்லாதவன் என்ற நம்பிக்கையிலும், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அதைச் செவியுற்று நடவடிக்கை எடுக்கிறவன் என்ற நம்பிக்கையிலும், இறைவா! உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

இனி இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் விளக்கத்தைக் காண்போம்.

சூரதுல் ஃபாத்திஹாவில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைத் துவக்கத்திலேயே நாம் குறிப்பிட்டிருந்தோம். பிஸ்மில்லாஹிவையும் சேர்த்து முதல் நான்கு வசனங்கள் இறைவனின் பண்புகளைக் கூறும் விதமாக அமைந்துள்ளன. ஐந்தாவது வசனம் இறைவனிடம் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியைக் கற்றுத் தருகின்றது.

மூன்றாவது அம்சமான ஆறாவது, ஏழாவது வசனங்கள் இறைவனிடம் அவனது அடியார்கள் பிரார்த்தனை செய்வதைக் கற்றுத் தருகின்றன. இந்த மூன்றாவது அம்சத்தைக் கொண்ட அந்த வசனங்களின் விளக்கவுரைகயையே இப்போது நாம் காணவிருக்கிறோம்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் (இறைவா எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக!) என்று அன்றாடம் பல தடவை இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். ஆயினும் நாம் பிரார்த்திக்கின்ற நேரான வழி எதுவென்பதை அறிந்து கொள்ளாமலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றோம். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதையே நேரான வழி என்று கருதிக் கொண்டு பிரார்த்திப்பவர்களும் கூட உள்ளனர்.

நேர்வழி எதுவென்பதை அறிவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், அதில் நடப்பதற்கு முயலாமல் நேரான வழியைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

தொழுகையை நிறைவேற்றாத ஒருவன், தொழுவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இறைவா! என்னைத் தொழுகையாளியாக்கு என்று பிரார்த்தனை செய்வது எவ்வாறு அர்த்தமற்றதோ அது போலவே நேரான வழியைக் காட்டு என்று பிரார்த்தனை செய்துவிட்டு நேரான வழியை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதும் அர்த்தமற்றதாகும்.

நேரான வழியைக் காட்டுமாறு பிரார்த்திக்கக் கற்றுத் தரும் அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் நேரான வழி என்னவென்பதை அடையாளம் காட்டுகிறான். அதை உணர்ந்து நேர்வழியைக் கேட்கும் போது தான் இந்தப் பிரார்த்தனை அர்த்தமுள்ளதாக அமையும்.

குர்ஆனும், ஹதீஸுமே நேர்வழி

குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என அல்லாஹ் திருக்குர்ஆன் நெடுகிலும் தெளிவுபடுத்துகிறான்.

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43,44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனால் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றியாக வேண்டும். அது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என்று இங்கே வலியுறுத்துகின்றான்.

மார்க்கத்தின் எந்த அம்சமானாலும், அதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரம் உண்டா? என்று ஆராயாமல் கண்மூடி மற்றவர்களைப் பின்பற்றுபவர்கள் இந்தப் பிரார்த்தனையில் பொய்யுரைத்தவர்களாவார்கள்.

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு (ஸிராதுல் முஸ்தகீமுக்கு) அழைக்கிறீர்.

(அல்குர்ஆன் 42:52)

குர்ஆனையும், நபிவழியையும் விட்டு மத்ஹபுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இவ்வசனத்தில் போதுமான அறிவுரை இருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, இந்த வேதம் அருளப்படுவதற்கு முன் விசுவாசம் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த வேதம் அருளப்பட்ட பின்பே அவர்களால் அறிய முடிந்தது. இதன் துணை கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸிராதுல் முஸ்தகீம் பால் மக்களை அழைக்கின்றனர் என்கிறான் அல்லாஹ்.

திருக்குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதுவும் நேர்வழி கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்று. இறைவா! உனது வேதத்தையும், உனது தூதருடைய வழிகாட்டுதலையும் சான்றுகளாகக் கொண்டு நடக்கின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பதுவே இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் பொருளாக ஆகிவிடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு முன் வந்த நபிமார்களும் கூட, அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்த வேதங்களின் மூலமே நேர்வழியை அடைய முடிந்தது. உலகைப் படைத்தது முதல் இதுவே இறைவனது நியதியாக இருந்து வந்திருக்கின்றது என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம். அவ்விருவருக்கும் (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேரான வழியைக் காட்டினோம்.

(அல்குர்ஆன் 37:117,118)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களின் கட்டளையை சிரமேற் கொண்டவர்களைத் தவிர வேறு எவரும் விசுவாசிகளாக, நேர்வழி பெற்றவர்களாக ஆகவே முடியாது என்பதைப் பின்வரும் வசனங்களில் வல்ல அல்லாஹ் கற்பிக்கிறான்.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:65)

இதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். மேலும் அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) நாம் காட்டி இருப்போம் எனவும் கூறுகிறான்.

உங்களையே கொன்று விடுங்கள்! அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்! என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம். அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) காட்டியிருப்போம்.

(அல்குர்ஆன் 4:66,67,68)

தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயத்தில் அதற்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ்வின் தூதரிடம் அதாவது அவர்களின் போதனையின் பால் செல்லாதவர்கள் மூமின்கள் அல்லவென்று அல்லாஹ் தெளிவாக அறிவிக்கின்றான். மேலும், இந்தப் போதனையின் படி யார் நடக்கின்றார்களோ அவர்களுக்கே நேர்வழி காட்ட முடியும் எனவும் நிபந்தனை விதிக்கிறான்.

ஸிராதுல் முஸ்தகீமை அடைவதற்கு எதனை அல்லாஹ் நிபந்தனையாக ஏற்படுத்துகின்றானோ அதை விட்டு விட்டு ஸிராதுல் முஸ்தகீமைக் காட்டுவாயாக! என கூறுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?

இதற்கு மாற்றமான எந்தக் கொள்கையும், செயல் முறைகளும் ஸிராதுல் முஸ்தகீமாக முடியாது.

இறைவனும், அவனது திருத்தூதரும் கூறக் கூடியவை நம்முடைய சிற்றறிவுக்கு எட்டவில்லையென்றாலும் அதையும் நம்பக் கூடியவர்கள் தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியில் இருப்பவர்கள் என்பதற்கு அல்குர்ஆன் 43:61-வது வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேர் வழி (எனக் கூறுவீராக.)

(அல்குர்ஆன் 43:61)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஒருவர் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிரோடு வானில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது நமது சிற்றறிவுக்கு எட்டாமலிருக்கலாம். வானில் இருப்பவர் எதை உண்கிறார்? எவ்வாறு அங்கே மலஜலம் கழிக்கிறார்? இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் இருப்பது எப்படிச் சாத்தியமாக முடியும்? என்றெல்லாம் நம்முடைய அறிவு வினாக்களை எழுப்பலாம். உலக நடைமுறைக்கு இது முரணானது தான். நமது அறிவின் தீர்ப்புப் படி இது சாத்தியமற்றது தான்.

நமது அறிவுக்கு இது நம்ப முடியாததாக இருந்தாலும் இறைவனது ஆற்றலையும், வல்லமையையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது சாத்தியமானதாகவே தெரியும். எந்த அல்லாஹ் நடைமுறைக்கு மாற்றமாக ஈஸா நபியை தந்தையின்றி பிறக்கச் செய்தானோ அதே அல்லாஹ், ஈஸா நபியை எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் வாழச் செய்ய இயலும்.

அந்த அல்லாஹ் தான் ஈஸா கியாமத் நாளின் அடையாளமாகத் திகழ்கிறார் என்கிறான். அந்த அல்லாஹ் தான் இதிலே சந்தேகப்படக் கூடாது என்கிறான். அந்த அல்லாஹ் தான் இப்படி நம்பிக்கை கொள்வதை ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான்.

அந்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் (ஸல்) அவர்களும் இதைப் பற்றி இன்னும் விரிவாக தெளிவாகச் சொல்லித் தருகின்றார்கள்.

இறைவனால் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள். நீதியை நிலைநாட்டுவார்கள். தஜ்ஜாலைக் கொல்வார்கள். அவர்கள் வரக்கூடிய காலத்தில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். வாங்குவதற்குக் கூட எவரும் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் தெளிவான முன்னறிவிப்புகளை செய்துள்ளனர்.

நூல்: புகாரி 2222, 2476,

இதில் ஐயம் கொள்பவனும், நம்ப மறுப்பவனும் நிச்சயமாக ஸிராதுல் முஸ்தகீமில் இல்லை.

இது ஈஸா (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இறைவனும், அவனது தூதரும் சொல்லக் கூடிய எல்லா விஷயங்களுக்கும் பொதுவானது தான். அவ்விருவரும் கூறுவதில் எந்த ஒன்றிலாவது எவருக்காவது சந்தேகமோ, மறுப்போ இருக்குமானால் அவர்கள் அசத்திய வழியில் செல்பவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி இரத்தினச் சுருக்கமாகப் பின்வருமாறு வல்ல அல்லாஹ் விளக்குகின்றான்.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

ஹனபி, ஷாபி, மாலிக், ஹம்பளி என்றும் ஷியா, காரிஜிய்யா, ராபிஜிய்யா என்றும் ஷாதுலிய்யா, காதிரிய்யா என்றும் நம்மிடையே எத்தனையோ மார்க்கங்கள்! ஒவ்வொரு பிரிவினருக்கும் கொள்கைள் தனி! இப்படியெல்லாம் பலவாறான வழிகளில் செல்வது நேர்வழி அல்ல. சாத்தானின் வழிகள் எனவும் இங்கே அடையாளம் காட்டுகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று அன்றாடம் பல தடவை இறைவனிடம் பிரார்த்திக்கின்ற நாம் அல்லாஹ் எதனை நேர்வழி என அடையாளம் காட்டுகிறானோ, அதில் செல்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். பாரம்பரியப் பழக்கங்கள், முன்னோர்கள் சென்ற வழிமுறை, மதகுருமார்கள் மீது கொண்ட பக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழியை மட்டும் பின்பற்றுவது பலருக்கு எளிதில் சாத்தியமாவதில்லை. இதற்கான காரணத்தையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான் என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:142, 143)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த சமயத்தில் கஃபாவை நோக்கித் தம் தொழுகைகளை தொழுது வந்தார்கள். மதீனா வந்த பின் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழலானார்கள். அதன் பின் இறைவனது கட்டளைக்கேற்ப மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள்.

நூல்: புகாரி 41, 399, 4486

கஃபாவை விடுத்து பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பழைய கிப்லாவை விட்டும் புதிய கிப்லாவின் பால் இவர் திரும்பக் காரணம் என்ன? என்று விமர்சிக்கலானார்கள். பைத்துல் முகத்தஸை விடுத்து மீண்டும் கஃபாவை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மதீனத்து யூதர்கள் இது போன்ற விமர்சனத்தைச் செய்தார்கள். இப்படி விமர்சித்தவர்களையே அல்லாஹ் அறிவீனர்கள் என்கிறான்.

இவர் என்ன அடிக்கடி திசை மாறுகிறார்? என்று அன்றைய யூதர்களும், இணை வைப்பவர்களும் எண்ணியதைப் போல் எண்ணாமல் அல்லாஹ் நமது எஜமான்; சட்டமியற்றவும் கட்டளையிடவும் அவனுக்கு முழு அதிகாரம் உண்டு; அவனது கட்டளையை அவனது தூதர் அவர்கள் எடுத்து வைக்கும் போது அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பதே முஸ்லிமுக்குரிய இலக்கணமாகும் என்ற நம்பிக்கையுடன் இதை யார் ஏற்றுக் கொண்டார்களோ அவர்களை நேர்வழியில் - ஸிராதுல் முஸ்தகீமில் செலுத்துவதாக அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மற்றவர்களுக்கு இது மிகப் பெரிய பாரமாகத் தென்பட்டாலும் உண்மை விசுவாசிகளுக்கு அதாவது இறைவனின் ஆளுமையையும், தனது அடிமைத்தனத்தையும் உணர்ந்து கொண்டவர்களுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றாது எனவும் அல்லாஹ் இங்கே கற்றுத் தருகிறான்.

இந்த இரண்டு வசனங்களும் இறைவனது கட்டளை எதுவானாலும் இறைத்தூதரது வழிகாட்டுதல் எதுவானாலும் அதை அப்படியே ஏற்று நடப்பது தான் ஸிராதுல் முஸ்தகீம் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன.

அல்லாஹ் இவ்வாறு கிப்லாவை அடிக்கடி மாற்றியது கூட இறைவனது கட்டளை எதுவானாலும் அப்படியே ஏற்கக் கூடியவர் யார்? தான் விரும்புவதை அல்லாஹ் கட்டளையிட்டால் மட்டும் ஏற்று மற்ற விஷயங்களில் அல்லாஹ்வை அலட்சியப்படுத்துபவர் யார் என்பதை அடையாளம் காட்டவே எனவும் அல்லாஹ் சொல்கிறான்.

இறைவனது கட்டளையும், இறைத்தூதருடைய வழிகாட்டுதலும் இது தான் என அறிந்த பின் அதை ஏற்க மறுப்பவர்களும், எதிர்த்து விமர்சனம் செய்பவர்களும் அறிவீனர்கள்; வந்த வழியே திரும்பிச் சென்றவர்கள். (அதாவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்) எனவும் இங்கே அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான்.

ஏற்கனவே ஒரு கிப்லாவை நோக்கியதாக அல்லாஹ் கூறுகிறானே அந்தக் கிப்லாவை நோக்குமாறு குர்ஆனில் எந்தக் கட்டளையும் இல்லை. குர்ஆன் கட்டளையில்லாமல் இன்னொரு வஹீ மூலம் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியதை தனது கட்டளையாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். குர்ஆன் மட்டும் போதும் என்போர் யார்? இத்தூதரின் வழியையும் பின்பற்றுவோர் யார் என்பதை அறிந்திடவே கிப்லாவை மாற்றியதாக அவனே கூறுகிறான். இறைக் கட்டளையை மட்டுமின்றி இறைத்தூதரின் கட்டளையையும் சேர்த்துப் பின்பற்றுவதே நேரான வழி எனவும் அல்லாஹ் விளக்குகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என இறைவனிடம் பிரார்த்திக்கும் போது இறைவா! இது தான் நேர்வழி என்று எனக்குத் தெரிந்த பின் அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்க அருள் புரிவாயாக! என் மனோ இச்சை இதை விரும்பாவிட்டாலும் அதை வெல்லக் கூடிய உறுதியை எனக்குத் தருவாயாக! என்ற எண்ணத்தை மனதிலிறுத்திப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வளவு அர்த்தமும் இந்த சின்னஞ்சிறு வாசகத்தில் உள்ளடங்கி இருக்கிறது.

ஸிராதுல் முஸ்தகீம் என்ற சொற்றொடரைப் பின் வரும் வசனங்களில் இறைவன் பயன்படுத்திள்ளான். இந்த வசனங்களைச் சிந்தித்தால் எவையெல்லாம் ஸிராதுல் முஸ்தகீமில் அடங்கும் என்பதை அறியலாம்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துவான்.

(அல்குர்ஆன் 2:213)

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்தப்பட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 3:101)

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 5:15,16)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:39)

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். இதுவே உமது இறைவனின் (ஸிராதுல் முஸ்தகீம்) நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

(அல்குர்ஆன் 6:125,126)

(முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையை (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 22:54)

நீர் அவர்களை நேரான வழியை (ஸிராதுல் முஸ்தகீமை) நோக்கி அழைக்கிறீர்! மறுமையை நம்பாதோர் அவ்வழியை விட்டும் விலகியவர்கள்.

(அல்குர்ஆன் 23:73,74)

தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான். அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர். உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர். அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா? அல்லது சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள். அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:46 -52)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43,44)

நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) அமர்ந்து கொள்வேன் என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய் (என்றும் கூறினான்).

(அல்குர்ஆன் 7:16,17)

இந்த வசனங்கள் அனைத்திலும் ஸிராதுல் முஸ்தகீம் எதுவென மிகத் தெளிவாக அல்லாஹ் விளக்குகின்றான். இறைவனது வசனங்களை விளங்கி நடப்பதும், இறைத்தூதர் கொண்டு வந்த மார்க்கத்தின் படி நடப்பதும் தான் ஸிராதுல் முஸ்தகீம். நூற்றுக்கு நூறு அதற்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு எதுவும் ஸிராதுல் முஸ்தகீம் அல்ல. வாயளவில் அல்லாஹ், ரசூலுக்குக் கட்டுப்பட்டோம் எனக் கூறி விட்டுப் பெரியார்கள், மகான்கள் சொன்ன சொற்களெல்லாம் சான்றுகள் என எவர்கள் நம்புகிறார்களோ அவர்கள் மூமின்களே அல்லர் எனவும் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

வணக்கங்களை இறைவனுக்கு மட்டும் செய்வதும் நேர்வழியாகும்

வணக்க வழிபாடுகள் அனைத்தையும், இறைவனுக்கு மாத்திரமே உரித்தாக்கி, இறைவனல்லாத எவருக்கும் வணக்கத்தில் பங்கு எதையும் யார் அளிக்கவில்லையோ அவர்களும் நேர்வழியில் இருப்பதாக பல இடங்களில் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

மனிதர்களையும், மரங்களையும், கல்லையும், மண்ணையும், உயிருடனுள்ளவர்களையும், இறந்தவர்களையும், சிலைகளையும், சமாதிகளையும் ஒரு பக்கம் வணங்கிக் கொண்டு, அல்லாஹ்வையும் அவ்வப்போது வணங்குபவர்கள் நேர்வழியில் - ஸிராதுல் முஸ்தகீமில் இருப்பவர்கள் அல்லர் எனப் பல இடங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும் (எனவும் கூறினார்)

(அல்குர்ஆன் 3:51)

அல்லாஹ்வே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி (என்று கூறுவீராக!)

(அல்குர்ஆன் 19:36)

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன் 43:64)

6:81 முதல் 6:87 முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு இணை வைக்காது அவனை மாத்திரமே வணங்குவதே ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

11:53 முதல் 11:56 முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இறைவனல்லாத போலித் தெய்வங்களுக்கு அஞ்சாது துணிவுடன் நடப்பதை ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

15:40 முதல் 15:43 முடிய உள்ள வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனவும், ஷைத்தானால் இத்தகையோரை வழிகெடுக்க இயலாது எனவும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

16:120,121 வசனங்களில் இறைவனுக்கு எதையும், எவரையும் இணை வைக்காது இருப்பது ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான் அல்லாஹ்.

36:60,61 வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதே நேர்வழி எனவும், இறைவனல்லாத எவரையும் வணங்கினால் அது ஷைத்தானை வணங்கியதாகவே கொள்ளப்படும் என்றும் அறிவிக்கின்றான் அல்லாஹ்.

இந்த வசனங்கள் அனைத்தையும் ஊன்றிக் கவனிப்பவர்கள் எது நேர்வழி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று இறைவனிடம் கேட்கும் போது இறைவா! உன்னைத் தவிர வேறு எவரையும் வணங்காத, உன்னை மட்டுமே வணங்குகின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பது அதன் பொருளாக அமைந்து விடுகிறது.

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்ஃகைரில் மஃக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்

இது ஃபாத்திஹா அத்தியாயத்தின் கடைசி வசனமாகும். இறைவா! எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியை எங்களுக்குக் காட்டுவாயாக! (உனது) கோபத்திற்கு ஆளானவர்களின் வழியையும், வழிதவறியவர்களின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது இதன் கருத்தாகும்.

ஸிராதல் முஸ்தகீம் எனும் நேர்வழியைக் காட்டுவாயாக! என்று தன்னிடம் பிரார்த்திக்குமாறு கற்றுத் தந்த அல்லாஹ் அதைத் தொடர்ந்து வரும் மேற்கண்ட வசனத்தில் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழி எதுவென்பதை இரத்தினச் சுருக்கமாக விளக்குகின்றான். ஸிராதுல் முஸ்தகீம் என்பது மூன்று அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறான்.

  1. இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியாக அது இருக்கக் கூடாது.
  2. தவறான பாதையில் சென்றவர்களின் வழியாகவும் அது இருக்கக் கூடாது.
  3. மாறாக இறைவனின் நல்லருள் பெற்றவர்களின் வழியாக இருக்க வேண்டும்.

நாம் செல்லக் கூடிய வழி இந்த மூன்று அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்வது நாம் செல்லும் வழி நேர்வழி தானா என்பதைத் தெளிவாக அறிய உதவும் என்பதால் அது பற்றிய விபரத்தைக் காண்போம். இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? அவர்கள் இறை வெறுப்புக்குரியவர்களாக ஏன் ஆனார்கள்? என்ற விபரங்களை முதலில் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

கோழைகள் இறைவனின் கோபத்திற்குரியவர்களாவர்

நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏக இறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்

(அல்குர்ஆன் 8:15)

நியாயமான காரணங்களுக்காகக் களத்தில் இறங்கிய பின் எவன் உயிருக்குப் பயந்து பின் வாங்குகின்றானோ அவன் இறைவனது கோபத்திற்குரியவன் என்று அல்லாஹ் இங்கே அடையாளம் காட்டுகின்றான்.

உயிருக்கு அஞ்சியவர்களும், கோழைகளும் இறைவனது கோபத்திற்குரியவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகின்றது.

அக்கிரமத்தையும், அநீதியையும் காணும் போது அதற்கெதிராகப் போராட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது போன்ற அறப்போரில் மடிந்து விட்டால் மறுமையில் இதற்கு வழங்கப்படும் பரிசுக்கு ஈடு இல்லை என்றெல்லாம் இஸ்லாம் கூறுகின்றது. அக்கிரமமும், அநீதியும், தீமைகளும் தலைவிரித்தாடும் போது அதைக் கண்டும் காணாதிருக்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

யார் தனது பொருட்களை பிறரிடமிருந்து காக்கும் போராட்டத்தில் கொல்லப்படுகின்றாரோ அவரும் ஷஹீத் (உயிர்த் தியாகி) என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி 2480

ஒரு பொருள் நமக்குச் சொந்தமானது என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அல்லது முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிகின்றது. அதை அநியாயமாக எவரேனும் பறித்துக் கொள்ள முயன்றால் அதை மீட்கும் போராட்டத்தில் மடிந்து விட்டாலும் அவன் ஷஹீத் எனும் உயர் பதவியை அடைகின்றான்.

தனக்குச் சொந்தமான ஒரு பொருளை அநியாயமாக எவரேனும் பறிக்க முற்படும் போது அந்தப் பொருளின் மதிப்பு உயர்ந்ததா? அல்லது தனது உயிரின் மதிப்பு உயர்ந்ததா? என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிரை விட எந்தப் பொருளும் மதிப்பு மிக்கவை அல்ல என்பதில் ஐயம் இல்லை.

அப்படி இருந்தும் நபியவர்கள் இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கணக்குப் பார்த்திருந்தால் மேற்கண்ட பொன்மொழியைச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

பொருட்களை மீட்பதற்காகப் போராடி மடிய வேண்டாம். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பொருட்களைப் பறிக்க வருபவனிடம் கொடுத்து விடுங்கள் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறாமல் அதை மீட்கும் போரில் உயிரைப் பறிகொடுப்பவனுக்கு மகத்தான அந்தஸ்தை வாக்களிக்கின்றார்கள்.

அசத்தியத்திற்கெதிரான போராட்டங்களில் லாப நட்டக் கணக்குப் பார்க்க முடியாது. அக்கிரமத்தைக் கண்ட பிறகு வாளாவிருந்தால், அக்கிரமத்திற்குப் பணிந்தால் அக்கிரமம் மேலும் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக அழகாகச் சொன்னார்கள்.

தனது குதிரையின் முதுகின் மீது தயார் நிலையில் இருந்து கொண்டு எங்காவது அக்கிரமமோ, அநியாயமோ நடக்கக் கண்டால் தனது குதிரையின் மீது பறந்து சென்று மரணம் தான் ஏற்படும் என்று தெரிந்தே அந்தத் தீமையைத் தடுக்க முயல்பவன் மனிதர்களில் மிகவும் சிறந்தவன் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3503

மரணம் நிச்சயம் என்று தெரிந்த நிலையில் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடுபவனே முஸ்லிம்களில் சிறந்தவன். அவனே உண்மையான முஸ்லிம்.

இப்படியெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் உலகில் எந்த அறப்போராட்டமும் நடக்காது. நடந்திருக்காது. அக்கிரமம் மேலும் துணிவு பெறும். நியாயவான்கள் நேர்மையாளர்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்படும்.

முஸ்லிம்கள் நடத்தும் அறப்போராட்டங்கள் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை ஒரு ஜாதியாக எண்ணி, தன் இனத்தவர் செய்யும் அக்கிரமங்களை நியாயப்படுத்தவோ தவறு நம்மவர்களின் மீது இருக்கும் போது அவர்களுக்காகப் போராடவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நியாயம் அல்லாத எந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். திடீரென்று இரண்டு மூன்று பேர் பயங்கர ஆயுதங்களுடன் எழுந்து கொள்ளையடிக்க முற்படுகிறார்கள். அந்தப் பேருந்தில் பயணம் செய்யும் அறுபது பேரும் பதுமைகளாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அன்றாடம் நடந்து வரும் நிகழ்ச்சி இது.

பகிரங்கமாகக் கொள்ளையடிக்க வருகிறான். அப்பாவி மக்களை அச்சுறுத்துகிறான். அறுபது நபர்களை அக்கிரமக்கார ஐந்து பேர் மிரட்டுகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்ட பின்பும் கற்சிலையாய் அமர்ந்திருக்கும் கோழைகளைக் காண்கிறோம். இந்த அக்கிரமத்தைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கெதிராக எவன் போராடத் துணிகின்றானோ அவன் அப்போரில் கொல்லப்பட்டால் அவன் ஷஹீத் எனும் உயர் நிலையை அடைகிறான். இப்படி நான்கு பேர் துணிந்து விட்டால் இது போன்ற வழிப்பறிக் கொள்ளைகள் இல்லாது ஒழியும்.

இந்தக் கட்டத்திலும் கூட வாளாவிருந்து கையில் உள்ளதைக் கழற்றிக் கொடுப்பவனும், பையில் உள்ளதை எடுத்துக் கொடுப்பவனும் இறைவனின் கோபத்திற்கு உரியவனே. நேர்வழியில் இருப்பவன் ஒருக்காலும் அக்கிரமத்திற்குப் பணிய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக் கூடியவன் வேறு எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான். மறு உலக வாழ்வை மட்டுமே குறியாகக் கொண்டவன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்குக் காட்டாதே! என்று பிரார்த்திக்கும் போது இறைவா! எங்களைக் கோழைகளாக ஆக்காதே! கோழைகளின் வழியில் எங்களை நடத்தாதே என்பதும் அதன் பொருளாக அமைந்து விடுகின்றது.

கோழைத்தனத்திலிருந்து விடுபவட்டவர்களே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழிக்குரியவர்கள். இறை கோபத்திற்கு ஆளானவர்களின் பட்டியலை மேலும் காண்போம்.

மறுமையை நம்பாதோர்இறைவனின் கோபத்திற்குரியவர்கள்

இவ்வுலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறுவோரும், அதனடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் இறைவனின் கோபத்திற்கு உரியவர்களாவர்.

மறுமையை நம்பியுள்ளதாகப் பிரகடனம் செய்யும் முஸ்லிம்களில் பலரிடம் இது போன்ற போக்கைக் காண முடிகின்றது.

ஐங்காலமும் தொழுது, நோன்பு நோற்று, இன்ன பிற கடமைகளை நிறைவேற்றக் கூடிய பலர் பகிரங்கமாக பாவச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். வட்டி வாங்குவோர் நிரந்தர நரகை அடைவர் எனக் குர்ஆன் கூறுவதை அறிந்த பின்பும் நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியப்படுமா? என்று கூறி வட்டி வாங்குவோர் உண்மையில் மறுமை நம்பிக்கை இல்லாதவர்களே.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

(அல்குர்ஆன் 60:13)

மறுமை நம்பிக்கையை இழந்து விட்ட காரணத்தினால் ஒரு சாரார் இறைவனது கோபத்திற்கு ஆளாகி விட்டனர் என்றும், அவர்களை நண்பர்களாகக் கூட ஆக்கி விடலாகாது என்றும் இங்கே அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

இறைவா! உன் கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்றால் இறைவா! மறுமை நம்பிக்கையற்றவர்களாக எங்களை ஆக்கி விடாதே என்ற கருத்து இதனுள் அடங்கி விடுவதை மேற்கண்ட விபரங்களிலிருந்து அறியலாம்.

அல்லாஹ் கூறுவது இது தான் எனத் தெரிந்த பின்னரும் அதை ஏற்க மறுப்பவர்களும் அவனது கோபத்திற்கு உரியவர்களாகின்றனர்.

அல்லாஹ் கூறுவது எதுவானாலும் அதற்கு அப்படியே தலை சாய்ப்பவன் மட்டுமே இறைவனது கோபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

உண்மையான மார்க்கத்தை எடுத்துச் சொல்வோரை அநியாயமாகத் தாக்குவதும் அவர்களைக் கொல்ல முயல்வதும் கூட இறைவனின் கடுமையான கோபத்திற்குரிய காரியங்களாகும்.

மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான் என்று நீங்கள் கூறிய போது, சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் 2:61)

மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் இறைவனது வசனங்களில் நம்பிக்கையிழந்ததினாலும், சத்தியத்தைப் போதிக்கும் நபிமார்களைக் கொல்ல முயன்றதாலும், கொன்றதாலும் இறைவனது கோபத்திற்கு ஆளானார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இது பற்றி இன்னும் விரிவாக அல்லாஹ் வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் தூதராக நியமிக்கப்பட்ட போது அதை இஸ்ரவேலர்கள் தான் நம்ப மறுத்தார்கள். இதே இஸ்ரவேலர்கள் தான் இறுதி நபியின் வருகையை எதிர்பார்த்து, அவர் வந்ததும் அவரை ஏற்று பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதற்காக முன்னர் மதீனாவில் குடியேறினார்கள்.

தலைமுறை, தலைமுறையாக இறுதித் தூதரின் வருகையை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். இறுதித் தூதரின் அடையாளங்கள் யாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேதங்களிலும், அவர்களின் நபிமார்களின் போதனைகளிலும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

(அல்குர்ஆன் 2:146)

ஆனால் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராக வருகை தந்த போது ஏற்க மறுத்து விட்டனர். இவர்கள் மறுத்ததற்குக் காரணம், தங்கள் விரும்புகின்ற தங்கள் இனத்தைச் சார்ந்தவரை அல்லாஹ் நபியாக அனுப்பவில்லை என்பது தான். அதாவது அல்லாஹ் கூட இவர்களின் விருப்பத்தின்படியே நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன் 2:90)

இறைவனது கட்டளையில் எதிர்க்கேள்வி கேட்போரும், அதில் ஆட்சேபனை எழுப்புவோரும், அதை நம்ப மறுப்போரும் கடுமையான கோபத்திற்குரியவர்கள் என இங்கே அல்லாஹ் கூறுகிறான்.

கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்கு காட்டாதே! என்றால், உனது கட்டளையை அப்படியே ஏற்கும் பக்குவத்தைத் தருவாயாக என்பது உள்ளடங்கும்.

இரட்டை வேடம் போடுவோரும் இறைவனின் கோபத்திற்கு ஆளானவர்களே!

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசுவோரும், இரட்டை வேடம் போடுவோரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் என்று அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.

(அல்குர்ஆன் 48:6)

அல்லாஹ்வைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனுக்கு இணை வைக்கும் ஆண்களும், பெண்களும் தனது கோபத்திற்குரியவர்கள் என்றும் அது போலவே அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளாது, அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு இரட்டை வேடம் போடுவோரும் தனது கோபத்திற்காளானவர்கள் என்றும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்று பிரார்த்திக்கும் போது இரட்டை வேடம் போடுவோராகவும் இணை வைப்போராகவும் ஆக்காதே என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது. கைரில் மக்லூபி அலைஹிம் என்று கூறும் போது இதுவும் நம் கவனத்திற்கு வர வேண்டும்.

கொலைப் பாதகம் புரிவோரும் அவனது கோபத்திற்கு ஆளானவர்கள்

தக்க காரணமின்றி கொலைப் பாதகம் புரிவோரையும் தனது கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று அல்லாஹ் இனம் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:93)

இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? யார்? என்பதை மிகவும் சுருக்கமான முறையில் இன்னொரு இடத்தில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு மீறாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.

(அல்குர்ஆன் 20:81)

எல்லா விதமான அக்கிரமமும், வரம்பு மீறலும் யாருக்கு வாடிக்கையாகிவிட்டதோ அவர்களனைவரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களே.

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே எனும் போது இவ்வளவும் நம் உள்ளத்தில் பதிய வேண்டும். இத்தகையோர் வழியில் நடத்தாதே என்ற எண்ணமும் நமக்கு ஏற்பட வேண்டும்.

வலள்ளால்லீன்

தவறான பாதையில் சென்றோரின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது வலள்ளால்லீன் என்பதன் கருத்தாகும். தவறான வழியில் சென்றோரைப் பொதுவாக இங்கே குறிப்பிட்டாலும் திருக்குர்ஆன் நெடுகிலும் எத்தகையோர் தவறான வழி சென்றோர் எனத் தெளிவாகவும் அவன் அடையாளம் காட்டுகிறான்.

பிறரது விருப்பத்துக்காகவும், அவர்களை அனுசரிக்க வேண்டுமென்பதற்காகவும் உண்மையை விட்டும் விலகிச் செல்பவர்களை வழிகெட்டவர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:56)

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 45:23)

இந்த வசனமும் 33:36, 6:119, 28:50 வசனங்களும் வழிகெட்டவர்கள் யார் என்று விளக்கும் வசனங்களாகும்.

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன் 31:6)

வீணான கதைகள், வெட்டிப் பேச்சுக்கள் ஆகியவற்றில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகெட்டவர்களே என்று இனம் காட்டுகின்றான்.

தங்களின் மார்க்க நடைமுறைகளுக்கு திருக்குர்ஆனையும், நபிமொழியையும் சான்றுகளாகச் சமர்ப்பிக்காமல் தங்களின் முன்னோர்களையும், சமகாலத்தவர்களையும், முன்னோடிகளாகக் கொண்டவர்களும் வழிகெட்டவர்களே.

உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக! என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று (அவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 7:38)

அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர். அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர். முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர். அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம். தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 37:69 - 74)

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 21:52 - 54)

பெரியவர்கள், மகான்கள் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்ய முடியும் என்பதைக் கூட உணராமல் இவர்களாகவே சிலருக்கு அவ்லியாப் பட்டம் வழங்கி அவர்களை கண்மூடி பின்சென்றவர்களும் வழிகேடர்களேயாவர்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66 - 68)

அல்லாஹ் வழங்கிய மகத்தான பாக்கியமான பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகேடர்களே.

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான். அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காண மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:118 - 121)

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன் 7:179)

இங்கே குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி கெட்டவராகவும் இருப்பார்.

(அல்குர்ஆன் 17:72)

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.

(அல்குர்ஆன் 25:44)

இறைவனின் பேரருளில் நம்பிக்கை இழந்தவர்களும் (15:56), பெரும்பான்மையை பின்பற்றுபவர்களும் (6:116) வீண் தர்க்கத்தில் ஈடுபடுபவர்களும் (11:48, 25:9), பாவங்களில் மூழ்கிவிடுபவர்களும் (26:99), வீண் விரயம் செய்பவர்களும் (40:34) வழிகேடர்களே என்கிறான்.

வளல்லால்லீன் எனக் கூறும் போது இறைவா! இத்தகைய செயல்களை விட்டும் எங்களைக் காத்து நல்லவர்களின் பாதையில் நடக்கச் செய்வாயாக என்று உணர்ந்து கூற வேண்டும்.

ஆமீன்

இந்த அத்தியாயத்தை தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஓதும் போது முடிந்ததும் ஆமீன் என்று கூறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என சிலர் தவறாக எண்ணுகின்றனர்.

ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி அல்ல.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம். குர்ஆனில் இல்லாத எதுவும் குர்ஆனுடன் கலந்து விடாமலும், குர்ஆனில் உள்ளது எதுவும் விடுபட்டுப் போகாமலும் மிகுந்த சிரத்தையுடன் குர்ஆன் தொகுக்கப்பட்டது என்பதையும் முன்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆனில் ஃபாத்திஹா அத்தியாயத்தின் இறுதியில் ஆமீன் எழுதப்பட்டிருக்கவில்லை.

அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அதை விட்டிருக்க மாட்டார்கள். எனவே ஆமீன் என்பது இந்த அத்தியாத்தின் ஒரு பகுதி அல்ல.

ஆனாலும் இந்த அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களிலும் நேர்வழியில் செலுத்துமாறு நாம் பிரார்த்தனை புரிகிறோம். இந்தப் பிரார்த்தனை முடித்தவுடன் ஆமீன் இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக என்று கூறப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதற்காக அல்ல.

அல்லாஹ் இந்தப் போதனைகளைப் பின்பற்றி நடப்பவர்களாக நம்மை ஆக்கட்டும்!

பிற்சேர்க்கை 1

அல்லாஹ்வின் தூதர் அழைக்கும் போது தொழுகையை எப்படி முறிக்கலாம்?

அல்லாஹ்வின் தூதர் அழைக்கும் போது தொழுகையை எப்படி முறிக்க முடியும்? இது சரிதானா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போது அவர்கள் யாரையேனும் அழைத்தால் அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கூட அதை விட்டு விட்டு அந்த அழைப்புக்கு மறுமொழி கூறியாக வேண்டும் என்று அந்த ஹதீஸ் தெளிவாகவே கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி வந்து கொண்டிருந்ததாலும் அவர்கள் வழியாகவே அனைத்துச் சட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டியிருந்ததாலும் தொழும் முறை கூட அவர்கள் வழியாகவே நமக்குத் தெரிய வந்ததாலும் அவர்கள் அழைத்தால் உடனே சென்று தான் ஆக வேண்டும்.

தொழும் முறையையோ, அல்லது நேரத்தையோ, அல்லது தொழும் திசையையோ, அல்லது ரக்அத்களின் எண்ணிக்கையையோ இறைவன் மாற்றலாம். அதற்காகக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்திருக்கலாம். அல்லாஹ்வின் கட்டளையைச் சொல்லித் தரவே அவர்கள் அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அந்த அழைப்பை ஏற்க வேண்டும். தொழுகை பெரிதா? தூதர் பெரியவரா? என்று ஒப்பு நோக்குவது அறியாமையாகும்.

தொழுகை அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது. அதைக் கூட விட்டு விட்டு ரஸுலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை விட ரசூலுக்குக் கட்டுப்படுவதே சிறந்தது எனவும் சில வழி கேடர்கள் கூறுகின்றனர்.

தொழச் சொன்ன இறைவன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அழைக்கும் போது பதிலளிக்கச் சொல்கிறான். ரசூலின் அழைப்புக்காக தொழுகையை விட்டாலும் இறைவன் அவ்வாறு கூறுவதாலேயே தொழுகையை விடுகிறோம். இங்கேயும் இறைவனது கட்டளைக்காகவே ரசூலின் அழைப்பு ஏற்கப்படுகின்றது என்பதை இவர்கள் உணரவில்லை.

பிற்சேர்க்கை 2

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர் ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.

صحيح البخاري

2276 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ  مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ، بِهَذَا

2276, நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்ட போது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கும் கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.... என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல் : புகாரி 2276

மற்றொரு அறிவிப்பில்

صحيح البخاري

5737 - حَدَّثَنِي سِيدَانُ بْنُ مُضَارِبٍ أَبُو مُحَمَّدٍ البَاهِلِيُّ، حَدَّثَنَا  أَبُو مَعْشَرٍ البَصْرِيُّ هُوَ صَدُوقٌ يُوسُفُ بْنُ يَزِيدَ البَرَّاءُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ أَبُو مَالِكٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ، فِيهِمْ لَدِيغٌ أَوْ سَلِيمٌ، فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ المَاءِ، فَقَالَ: هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ، إِنَّ فِي المَاءِ رَجُلًا لَدِيغًا أَوْ سَلِيمًا، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ عَلَى شَاءٍ، فَبَرَأَ، فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ، فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا: أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، حَتَّى قَدِمُوا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ»

5737,  (ஒரு பயணத்தின் போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கின்றார் என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப் பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை வெறுத்து அல்லாஹ்வின் வேதத்திற்கா நீர் கூலி வாங்கினீர்? என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக் கொண்டார் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5737

இந்த ஹதீஸில் கூலியை நிர்ணயித்துக் கேட்டுப் பெற்றுள்ளதாலும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தது மட்டுமின்றி தமக்கும் அதில் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டதாலும் ஊதியம் பெற்றிட குர்ஆன் மிகவும் தகுதியானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாலும் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறிய ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என்பதையும் அவர்களின் அந்தக் கருத்துக்கு அதில் இடமுண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

صحيح البخاري

5871 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلًا، يَقُولُ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: جِئْتُ أَهَبُ نَفْسِي، فَقَامَتْ طَوِيلًا، فَنَظَرَ وَصَوَّبَ، فَلَمَّا طَالَ مُقَامُهَا، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ، قَالَ: «عِنْدَكَ شَيْءٌ تُصْدِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «انْظُرْ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ: وَاللَّهِ إِنْ وَجَدْتُ شَيْئًا، قَالَ: «اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ  قَالَ: لاَ وَاللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَعَلَيْهِ إِزَارٌ مَا عَلَيْهِ رِدَاءٌ، فَقَالَ: أُصْدِقُهَا إِزَارِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِزَارُكَ إِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ» فَتَنَحَّى الرَّجُلُ فَجَلَسَ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا، فَأَمَرَ بِهِ فَدُعِيَ، فَقَالَ: «مَا مَعَكَ مِنَ القُرْآنِ» قَالَ: سُورَةُ كَذَا وَكَذَا، لِسُوَرٍ عَدَّدَهَا، قَالَ: «قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

5871, ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

அவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு மஹ்ராகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அம்மனிதர், ஏதுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (ஏதேனும் கிடைக்குமா என்று) பார் என்றனர். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஏதும் கிடைக்கவில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மேலும் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை என்றார்.

அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது கீழங்கியா? அதை இவள் அணிந்து கொண்டால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்து கொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்து கொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல் புகாரி 5871

மஹர் எனும் மனக்கொடை கொடுத்துத் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் மணம் செய்ய கோரிக்கை வைத்தவரிடம் மஹராக கொடுக்க எதுவும் இல்லை. மாறாக அவர் சில குர்ஆன் அத்தியாயங்களை மனனம் செய்து இருந்ததால் அதையே மஹராக ஆக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மஹருக்கு சமமாக குர்ஆனை ஆக்கியுள்ளதால் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

குர்ஆனை மஹராக ஆக்கவில்லை; அவர் குர்ஆனை மனனம் செய்திருந்த காரணத்தால் அதற்கு மதிப்பளித்து மஹரை விட்டுக் கொடுத்தார்கள் என்று தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் அறிவிப்பு இந்த விளக்கத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

صحيح مسلم

77 - (1425) وَحَدَّثَنَاهُ خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، كُلُّهُمْ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، بِهَذَا الْحَدِيثِ، يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ زَائِدَةَ، قَالَ: «انْطَلِقْ فَقَدْ زَوَّجْتُكَهَا فَعَلِّمْهَا مِنَ الْقُرْآنِ»

நீ செல்! உமக்கு இந்தப் பெண்ணை நாம் மணமுடித்துத் தந்தோம். எனவே குர்ஆனை இந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

இவருக்குத் தெரிந்த குர் ஆன் வசனங்களை கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் மஹராக ஆக்கியுள்ளனர். கற்றுக் கொடுப்பதற்கு கூலி வாங்கலாம் என்று இந்தக் கருத்துடையோர் வாதிடுகின்றனர்.

سنن النسائي

632 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ وَيُوسُفُ بْنُ سَعِيدٍ وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ أَخْبَرَهُ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ حَتَّى جَهَّزَهُ إِلَى الشَّامِ - قَالَ: يَالَ لِأَبِي مَحْذُورَةَ إِنِّي خَارِجٌ إِلَى الشَّامِ وَأَخْشَى أَنْ أُسْأَلَ عَنْ تَأْذِينِكَ، فَأَخْبَرَنِي أَنَّ أَبَا مَحْذُورَةَ قَالَ لَهُ: " خَرَجْتُ فِي نَفَرٍ فَكُنَّا بِبَعْضِ طَرِيقِ حُنَيْنٍ مَقْفَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُنَيْنٍ، فَلَقِيَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ الطَّرِيقِ، فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ عَنْهُ مُتَنَكِّبُونَ، فَظَلِلْنَا نَحْكِيهِ وَنَهْزَأُ بِهِ، فَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّوْتَ فَأَرْسَلَ إِلَيْنَا حَتَّى وَقَفْنَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ؟» فَأَشَارَ الْقَوْمُ إِلَيَّ وَصَدَقُوا، فَأَرْسَلَهُمْ كُلَّهُمْ وَحَبَسَنِي فَقَالَ: «قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ» فَقُمْتُ فَأَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ قَالَ: " قُلِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: ارْجِعْ فَامْدُدْ صَوْتَكَ، ثُمَّ قَالَ: قُلْ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ "، ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ فَقَالَ: «أَمَرْتُكَ بِهِ»، فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أَسِيدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَأَذَّنْتُ مَعَهُ بِالصَّلَاةِ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "

எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளியிருந்தது.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)

நூல்: நஸாயீ

பாங்கு என்ற வணக்கத்துக்குக் கூலியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிதளவு வெள்ளியை வழங்கியதாக இந்த ஹதீஸ் கூறுவதாலும், பொருளாகக் கொடுக்க வேண்டிய மஹருக்கு நிகராக குர்ஆனைக் கற்பிப்பதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளதாக இதற்கு முந்தைய ஹதீஸில் கூறப்படுவதாலும் ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தெளிவாகவே குர்ஆனுக்குக் கூலி வாங்கியதாகக் கூறப்படுவதாலும் குர்ஆன் ஓதுவதற்கும், இன்ன பிற வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இனி இதற்கு மாற்றமாக வந்துள்ள ஹதீஸ்களையும் பார்த்து விட்டு இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.

مسند أحمد

15529 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ يَعْنِي الدَّسْتُوَائِيَّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ  ، عَنْ أَبِي رَاشِدٍ الْحَبْرَانِيِّ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَغْلُوا فِيهِ، وَلَا تَجْفُوا عَنْهُ، وَلَا تَأْكُلُوا بِهِ، وَلَا تَسْتَكْثِرُوا بِهِ "

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! அதில் எல்லை மீறாதீர்கள். அதை அலட்சியம் செய்யாதீர்கள் அதன் மூலம் சாப்பிடாதீர்கள்! அதன் மூலம் ஆதாயம் அடையாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)

நூல்கள் : அஹ்மத், பைஹகீ, தப்ரானீ சகீர், தப்ரானி அவ்ஸத், முஸ்னத் அபீ யஃலா

سنن أبي داود

830 - حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ، فَقَالَ: «اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ»

அரபுகளும், வேற்றுமொழியினரும் கலந்திருந்து நாங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த போது எங்களிடம் வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஓதுங்கள்! அனைவர் ஓதுவதும் அழகாக உள்ளன. ஈட்டி சீர்படுத்தப்படுவது போல் குர்ஆனைச் சீர்படுத்துவோர் தோன்றுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அதன் கூலியை எதிர்பார்ப்பார்கள். மறுமையில் எதிர்பர்க்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

நூல்: அபூதாவூத்

سنن أبي داود

831 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، وَابْنُ لَهِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ وَفَاءِ بْنِ شُرَيْحٍ الصَّدَفِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ كِتَابُ اللَّهِ وَاحِدٌ، وَفِيكُمُ الْأَحْمَرُ وَفِيكُمُ الْأَبْيَضُ وَفِيكُمْا لْأَسْوَدُ، اقْرَءُوهُ قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَوَّمُ السَّهْمُ يُتَعَجَّلُ أَجْرُهُ وَلَا يُتَأَجَّلُهُ»

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், எல்லாமே! (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத் தான் உள்ளது. அம்பு வளைவின்றி நேராக ஆக்கப்படுவது போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது, உச்சரிப்புக்கள், ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காக காத்திருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத்

المستدرك على الصحيحين للحاكم

715 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ، بِبَغْدَادَ، قِرَاءَةً عَلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مُحَمَّدٍ، وَأَنَا أَسْمَعُ، ثنا سَهْلُ بْنُ حَمَّادٍ، وَأَبُو رَبِيعَةَ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، وَحَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثنا عَفَّانُ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، ثنا سَعِيدُ بْنُ إِيَاسٍ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْنِي إِمَامَ قَوْمِي، قَالَ: «أَنْتَ إِمَامُهُمْ، وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ، وَاتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا» عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ "

பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

நூல்: ஹாகிம்

எனது வசனங்களை அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள்.

திருக்குர்ஆன் 2:41

மேற்கூறிய வசனத்திலும், நபிமொழிகளிலும் குர்ஆனுக்குக் கூலி வாங்குவதும் அதற்காக உலகப் பயன்களை மக்களிடம் எதிர்பார்ப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகக் கவனிக்கும் போது இவற்றுக்கும் இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களுக்குமிடையே முரண்பாடு இருப்பது போல் தோன்றினாலும் கூறப்பட்ட சந்தர்ப்பங்களையும், பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளையும் கவனித்தால் இவ்விரண்டு கருத்துக்களிடையே முரண்பாடு எதுவுமில்லை என்று உணரலாம்.

குர்ஆன் சம்பந்தமாக எவ்விதக் கூலியும் பெறக் கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எவ்விதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதன்று.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது.

ஒரு எழுத்துக்கு பத்து நன்மையை நாடி தனது மறுமைக்காக ஓதுதல் ஒரு வகை

பிறருக்கு உதவுவதற்காக குர்ஆனை ஓதுதல் மற்றொரு வகை.

முதல் வகையான ஓதுதலுக்காக மனிதர்களிடம் கூலி வாங்கக் கூடாது.

இரண்டாம் வகை ஓதுதலுக்காக கூலி வாங்கலாம் என்று புருந்து கொண்டால் முரண்பாடு இல்லாமல் இரு வகையான ஹதீஸ்களும் இணங்கிப் போகின்றன.

தேள் கடி பட்டவருக்கு ஓதிப்பார்த்தது மறுமையில் கூலியை எதிர்பார்த்து அல்ல. குர்ஆனில் நோய் நிவாரணம் உண்டு; அந்த நிவாரணம் பெற பிறருக்கு உதவும் நோக்கத்தில் தான் அல்ஹம்து அத்தியாயத்தை நபித்தோழர் ஓதியுள்ளார். இதற்கு கூலி வாங்குவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். இதை அந்த ஹதீஸைச் சிந்தித்தாலே விளங்க முடியும்.

குர்ஆனை தனக்காக ஓதாமல் மனைவிக்கு கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளனர். மற்றவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக கூலி வாங்கினால் அது குர் ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது என்று தான் மஹர் சம்மந்தப்படட் ஹதீஸைப் பரிந்து கொள்ள வேண்டும். அந்த ஹதீஸைச் சிந்தித்தால் அதில் இந்த அம்சம் அடங்க்யுள்ளதை அறியலாம்.

மாணவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டால் அதற்காக அவர் கூலி வாங்கலாம். அது குர்ஆனை ஓதி அதன் மூலம் சாப்பிட்டதாக ஆகாது. பிறருக்குக் கற்றுக் கொடுத்து அதற்காக கூலி வாங்கியதாகவே ஆகும்.

ஒருவர் குர்ஆனை எழுதிக் கேட்கிறார். அவருக்காக குர்ஆனை நாம் எழுதிக் கொடுத்தால் அதற்காக நாம் விரும்பினால் கூலி வாங்கலாம், அது குர்ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது. மாறாக குர்ஆன் விஷயத்தில் மற்றவருக்கு உதவியதற்காகவே கூலி வாங்குகிறார்.

மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் குர்ஆன் மூலம் மற்றவருக்கு உதவினால் அதற்குக் கூலி வாங்கலாம். ஆனால் மார்க்கம் அனுமதிக்காத வகையில் குர் ஆனைப் பயன்படுத்துவதும் கூடாது. அதற்கு கூலி வாங்குவதும் கூடாது.

இறந்தவருக்கு மறுமை நன்மையைச் சேர்த்து வைக்க குர்ஆன் ஓதி விட்டு கூலி வாங்குவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஏனென்றால் குர்ஆனை ஓதி இறந்தவருக்கு நன்மை சேர்க்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை.

நோய் நிவாரணம் நாடி குர் ஆனை ஓதினால் கூலி வாங்கலாம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நோய் நிவாரணம் நாடி அல்ஹம்து அத்தியாயம் ஓதிப் பார்த்து அதனால் நிவாரணம் ஏற்பட்ட பின்னர் தான் கூலி வாங்கியதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

மருந்து மாத்திரை ஊசி போன்ற உலகப் பொருட்களைப் பயன்படுத்தி மருத்துவம் பார்க்கும் போது நிவாரணம் கிடைத்தால் தான் கூலி தருவேன் எனக் கூற முடியாது. ஏனெனில் இவை முதலீடு செய்து பார்க்கும் தொழிலாகும். அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக கூலி வாங்கலாம்.

ஆனால் ஓதிப் பார்த்தல் என்பதற்கு முதலீடோ செலவோ இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஓதுபவரின் நல் எண்ணத்தால் தான் நிவாரணம் கிடைக்கும். எனவே நிவாரணம் கிடைப்பதற்குப் பின்னரே கூலியைப் பெற உரிமை உண்டு.

இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும், அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும், அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில் புத்தக விற்பனை என்பனவற்றில் தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக் கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது.

பாங்கு சொன்ன பிறகு அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளது வணக்கங்களுக்குக் கூலி கொடுக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணி புரிந்த பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு வழங்கியது பாங்கின் கூலியாக இருக்க முடியாது.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இமாமத் போன்ற மார்க்கப்பணி செய்வோருக்கு கூலி கொடுக்கலாமா என்ற கேள்விக்கான விடையயும் அறிந்து கொள்வது பொருத்தமாக அமையும்.

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (273) الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (274)

273. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர் ஆன் 2:274

இவ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர்.

ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க இவ்வசனத்தில் (2:273) அல்லாஹ் ஆர்வமூட்டுகிறான்.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர், வருமானத்திற்கு வேறு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.

எல்லா நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்கு மார்க்கப் பணியைக் காரணம் காட்டி இஸ்லாமிய அரசும், முஸ்லிம் சமுதாயமும் உதவி செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

02.12.2009. 11:01 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account