Sidebar

21
Tue, Jan
5 New Articles

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

நூலின் பெயர் : நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

 மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

முன்னுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் மறு அறிமுகம் செய்யப்பட்டு 14 நூற்றாண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. ஆனாலும் அன்று அவர்கள் கூறிய தெளிவான சட்டங்கள் இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்தால் எப்படி இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வார்களோ அவ்வளவு தெளிவாக அமைந்துள்ளது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அவன் தனக்கு பக்க பலமாக ஒரு அறிஞர் பட்டாளத்தையே வைத்து ஆராய்ச்சி செய்து முடிவு கூறினாலும், அந்த முடிவு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. பொருந்தாமல் போய் விடுகின்றது. பல மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் மட்டுமே காலத்தை வென்று நிற்கின்றது. காரணம் இது இறைவன் அளித்த மார்க்கம்.

நபிகள் நாயகம் காலத்துக்குப் பிறகு தோன்றிய பல நவீன பிரச்சனைகளுக்கு அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் எவ்வாறு தீர்வு சொல்கிறது என்பதை விளக்கவே இந்த நூலை வெளியிடுகிறோம்.

பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பல்வேறு இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் சிறு தொகுப்பே இந்த நூல்.

மார்க்கத்தை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் பெரிதும் பயன் தரும் என நம்புகிறோம்.

அன்புடன்

நபீலா பதிப்பகம்

உள்ளே உள்ளவை

கருணைக் கொலை கூடுமா?

கில்லட் கருவியால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாமா?

அரைஞான் கயிறு கட்டலாமா?

குடும்பக் கட்டுப்பாடு

தொலைக்காட்சி, புகைப்படம்

விளையாட்டும், உடற்பயிற்சியும்

நகச் சாயம் இடலாமா?

கவரிங் நகைகளை விற்பதும்.

விண்வெளிப் பயணத்தில்

துருவப் பிரதேசத்தில் தொழுகை

உண்டியல்

செயற்கை முறையில் கருத்தரித்தல்

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செஸ் விளையாடுதல்

வங்கி - வட்டி - லாபம்

பதிவுத் திருமணம்

அடகு வைத்தல்

எம்மதமும் சம்மதம்?

எழுதப்பட்ட ஸலாம்

தண்ணீர் வியாபாரம்

பால் மாற்றம்

பாடல்கள் பாடுவது

கருணைக் கொலை கூடுமா?

போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர், உறுப்புக்களை இழந்தோர் செத்து விட்டால் நல்லது என்று சில சமயம் கூறி விடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுபவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை கருணைக் கொலை என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய் என்று கேட்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5671, 6351

ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானோ அந்த அளவு மறுமையில் அவனது துன்பங்கள் குறையும் என்பது இஸ்லாம் கூறும் சித்தாந்தம்.

பார்க்க : புகாரி 5640, 5642, 5648, 7684

எனவே ஒருவன் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு மறுமையில் நன்மைகள் தான் ஏற்படப் போகின்றன. அவனுக்கு மறுமையில் கிடைக்கும் பேறுகளை கருணைக் கொலை என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

கில்லட் கருவியால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாமா?

கத்தி எவ்வாறு அறுக்கும் ஆயுதமாக அமைந்துள்ளதோ அது போலவே கில்லட் கருவிகளும் அறுக்கும் ஆயுதங்கள் தான்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544

பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்ய வேண்டும் என்பது தான் பிரச்சினை.

மேலும் அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால் அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 5478, 5488, 5496

கருவியை இயக்கும் பொழுதே பிஸ்மில்லாஹ் கூறி விட்டால் அக்கருவியின் மூலம் அறுக்கப்பட்டதை உண்ணலாம்.

அரைஞான் கயிறு கட்டலாமா?

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவூத் 3512

தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும், மதச் சடங்காகவும் தான் மற்ற சமுதாயத்தினர் அரைஞான் கயிறு (இடுப்புக் கயிறு) கட்டுகின்றனர்.

தாலி எவ்வாறு பிற மதத்துக் கலாச்சாரமாக உள்ளதோ அது போலவே அரைஞான் கயிறு என்பதும் பிற மதத்தின் கலாச்சாரமாக உள்ளது. இது போன்ற மத விஷயங்களில் பிறருக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதால் அரைஞான் கயிற்றைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற நம்பிக்கைகளின்றி, அவசியத் தேவைகளின் நிமித்தம், சாதாரணக் கயிறு என்ற நிலையில் கட்டிக் கொள்வது தவறல்ல. சாவிக் கொத்துக்கள் தொங்க விடுவதற்கும், பெண்களின் மாத விலக்கு சமயங்களில் பயன்படுத்துவதற்கும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் சாதாரணக் கயிறு என்ற நிலையில் அதைக் கட்டிக் கொள்வது தவறல்ல.

குடும்பக் கட்டுப்பாடு

உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன.

குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனைக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை.

அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையைக் கையாண்டு வந்தனர்.

அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இது தான் அன்றைய மக்களிடம் அறிமுகமான முறை. அரபு மொழியில் இந்தச் செயல் அஸ்ல் எனக் கூறப்படுகிறது. இந்த அஸ்ல் என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து வந்தோம்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5209

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித் தோழர்கள் அஸ்ல் செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தடை செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில்

நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை. என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 2847

எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2844

இந்த ஹதீஸில் அந்த மனிதர் அஸ்ல் செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்களே முன் வந்து அஸ்ல் செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்ற இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.

விதியை மாற்ற இயலாது என்பதால் அஸ்ல் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் விதியை நம்புவது என்பது அஸ்ல் என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. விதியை நம்புதல் எல்லாப் பிரச்சினைக்கும் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறு விதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றி விடும் என்று நம்பக் கூடாது. விதியை நம்புகிறோம் என்பதால் மருந்து உட்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வருவதில்லை. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.

பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் அஸ்ல் பற்றிக் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ல் என்பது குழந்தைகளை மறைமுகமாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2850

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் அஸ்ல் செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் அஸ்ல் செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன.

முரண்பாடு போல் தோன்றக் கூடிய இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமாக உள்ளதால் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது. இரண்டையும் ஏற்பதற்குத் தக்கவாறு பொதுவான கருத்துக்கு நாம் வர வேண்டும்.

அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அஸ்ல் செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் அஸ்ல் அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அஸ்ல் போன்ற குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.

இப்போதைய குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல்.

மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது.

இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். அஸ்ல் என்பது இந்த வகையில் தான் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை அஸ்ல் என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.

இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை.

ஒரு நபித் தோழர் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர்.

நூல் : புகாரி 5074

ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை.

குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் கொடுமை நாட்டிலே நிலவுகின்றது இந்தக் கொடுமைக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது

திருக்குர்ஆன் 81:8,9

வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

திருக்குர்ஆன் 6:151

உருவான குழந்தைகளை அழிப்பதற்கு இது போன்ற வசனங்கள் தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.

தொலைக்காட்சி, புகைப்படம்

உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர்.

உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)

நூல் : புகாரி 3224, 5957

உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால் தமாஸீல் ஸுரத் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும்.

இந்தச் சொற்கள் மூன்று பரிமாணம் உள்ள உருவச் சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது; எனவே இரண்டு பரிமாணமுள்ள எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.

ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3224, 5954

திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

உருவச் சிலைகளும், உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1601,

மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3351)

இப்றாஹீம் (அலை), மர்யம் (அலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லடியார்களுக்கு இதில் விதி விலக்கு எதுவும் இல்லை. நல்லடியார்களுக்கு சிலை வடிப்பதிலும், வரைவதிலும் தான் ஈமானுக்கு ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உருவப் படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதி விலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2479

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் 24908

தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அஹ்மத் 23668)

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான் என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள் : அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 3935

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை என்பதை எவரும் அறிய முடியும்.

உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.

எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.

அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்கிறார்கள்.

சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிருக்கத் தேவையில்லை.

இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.

தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலாம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட ,உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

மதிப்பற்ற வகையிலும் கூட உருவப் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கீழ்க்கண்ட ஹதீஸை ஒரு சாரார் சான்றாகக் காட்டக்கூடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும், ஆயிஷா (ரலி) அவர்கள், நான் செய்த தவறு (எதுவாயினும்) அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடுகிறேன் என்றார்கள். இது என்ன திரைச் சீலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அதன் மேல் அமர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கினேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இந்த உருவத்தை வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3224

சாய்ந்து கொண்டார்கள் என்று வருகின்ற ஹதீஸை இந்த ஹதீஸ் மாற்றி விட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல. வரைந்தவர்களைத் தான் இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். அதை வைத்திருந்த ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை.

உருவப் படம் உள்ள தலையணையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்பே ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

மற்றொரு விதிவிலக்கு

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 6130

இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.

உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும் என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே என்ன இது? என்றார்கள். என் பொம்மைகள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறக்கைகள் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க,ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ? என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 4284

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.

உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.

இன்னொரு விதிவிலக்கு

மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.

புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள 5958 வது ஹதீஸில் இருந்து இதை அறியலாம்.

حدثنا قتيبة حدثنا الليث عن بكير عن بسر بن سعيد عن زيد بن خالد عن أبي طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الملائكة لا تدخل بيتا فيه الصورة قال بسر ثم اشتكى زيد فعدناه فإذا على بابه ستر فيه صورة فقلت لعبيدالله ربيب ميمونة زوج النبي صلى الله عليه وسلم ألم يخبرنا زيد عن الصور يوم الأول فقال عبيد الله ألم تسمعه حين قال إلا رقما في ثوب وقال ابن وهب أخبرنا عمرو هو ابن الحارث حدثه بكير حدثه بسر حدثه زيد حدثه أبو طلحة عن النبي صلى الله عليه وسلم

5958 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் துணியில் வரையப்பட்டதைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மேலும் புஹாரி 3226 ஹதீஸையும் பார்க்க

மேற்கண்ட ஹதீஸில் ரஹ்மத் டர்ஸ்ட் தமிழாக்கத்தில் துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று மொழிபெயர்த்துள்ளனர். மொழி பெயர்ப்பு சரியானது என்றாலும் அடைப்புக்குறிக்குள் அவர்கள் போட்டுள்ள சொற்கள் மொழி பெயர்த்தவர்கள் சுயமாக சேர்த்ததாகும். மூலத்தில் இல்லை. அதை நீக்கி விட்டுத்தான் இந்த ஹதீஸின் கருத்தை சிந்திக்க வேண்டும்.

ஆடைகளில் அழகுக்காக சிறு சிறு உருவங்களை பதிப்பதை நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்த்தால் தான் அந்த உருவம் இன்னது எனத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் அது ஒரு வேலைப்பாடாகத் தான் தெரியும். இது தான் ரக்கம் என்று கூறப்பட்டும்.

அந்தச் சொல் தான் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது என்ன உருவம் என்பது தெரியுமானால் அந்த உருவம் முக்கியப்படுத்தப்பட்டு பொரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சின்ன சின்னதாக வேலைப்பாடு என்ற அடிப்படையில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட உருவமாக் இருந்தால் அதற்குத் தடை இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

எனவே உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரணத்துக்காக சிறிய அளவில் வரையப்பட்ட உருவங்களைப் பயன்படுத்துவது தவறல்ல என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

மேலும் நஸயி, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸையும் காணக!

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ قَالَ فَوَجَدْتُ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ قَالَ فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزِعُ نَمَطًا تَحْتَهُ فَقَالَ لَهُ سَهْلٌ لِمَ تَنْزِعُهُ فَقَالَ لِأَنَّ فِيهِ تَصَاوِيرَ وَقَدْ قَالَ فِيهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ قَالَ سَهْلٌ أَوَلَمْ يَقُلْ إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அதற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையா என்று அபூ தல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா அவர்கள் ஆம் ஆனாலும் என் மன திருப்திக்காக (அதாவது பேணுதலுக்காக) அகற்றச் சொன்னேன் என்று கூறினார்கள்.

மேற்கண்ட விதிவிலக்கை இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.

சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.

குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

இது உருவப் படங்களின் நிலை! புகைப் படங்களுக்கும் இதுவே தான் சட்டம். கையால் வரைந்தால் தான் உருவப்படம். கருவியால் வரைந்தால் அது உருவப் படம் அல்ல என்ற வாதம் தவறான வாதமாகும்.

ஒரு காலத்தில் எழுத்தாணியால் எழுதினார்கள். அது வளர்ந்து பேனாக்களால் எழுதப்பட்டு, இன்று அச்சிடப்படுகிறது. எழுத்துக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே அச்சுக் கலை. அச்சிடப்பட்டதையும், கையால் எழுதியதையும் எழுத்துக்கள் என்றே கூறுவோம்.

அது போல் ஓவியக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே போட்டோ (புகைப்படக் கலை) இது உருவப்படம் அல்ல என்று எவரும் கூற முடியாது. அதை விட தத்ரூபமாக படங்கள் போட்டோவில் அமைகின்றன. உருவப்படங்களுக்குச் சொன்ன எல்லா விதிகளும், விலக்குகளும் போட்டோவுக்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் நமக்காக இறைவன் படைத்துள்ளான் என்பதால் உருவப்படங்கள் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். பன்றி, நாய்களையும் இதே அடிப்படையில் உண்ண முடியுமா? நமக்காக எல்லாவற்றையும் படைத்த இறைவன் தான் ஒரு சிலவற்றை நமக்குத் தடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழ வழியில்லை.

மற்றொரு விதிவிலக்கு

உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை.

நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். எல்லா ஓவியர்களும் நரகில் தான். ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2225

உயிரற்ற பொருட்களைச் செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஆனால் இந்த அனுமதியிலும் விதி விலக்கு இருக்கின்றது. உயிரற்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 5952

ஏனைய மக்களால் புனிதமாகக் கருதப்படும் பொருட்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்ததில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

டி.வி., வீடியோ

டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

டி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.

மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.

அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.

ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.

ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.

வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.

கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை.

பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.

இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.

மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும்.

நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.

நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.

விளையாட்டும், உடற்பயிற்சியும்

விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 421, 2868, 2869, 2870, 7336

கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்? என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)

நூல் : புகாரி 2899, 3373, 3516

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 22989, 25075, அபூதாவூத் 2214

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளி வாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 455, 950, 988, 2907, 3530, 5190

இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள பயிற்சிகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், ஆடல், பாடல், கச்சேரிகள் போன்ற விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.

நகச் சாயம் இடலாமா?

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நகச் சாயம் (நைல் பாலிஸ்) இடலாம்.

தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது மேனி நனைய வேண்டும். நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஸ் இட்டவர்கள், உளூ செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும்.

தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஸ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம். தொழுகையும், குளிப்பும் கடமையாகாத சிறுவர், சிறுமியருக்கு இடுவதையும் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் பெரியவர்களான பிறகும் எல்லா நேரங்களிலும் அவர்கள் இதை விரும்பி விடாதவாறு போதனை செய்து விடுவது அவசியமாகும்.

நைல் பாலிஸ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தே இந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கவரிங் நகைகளை விற்பதும்.

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.

(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 2783

கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. உண்மையில் அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.

பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன.

தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)

நூல் : அஹ்மத் 16230, 16241, 16261, 16297, 16304 அபூதாவூத் 3701, நஸயீ 5060, 5061, 5068, 5069

இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.

பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதையும் ஆண்கள் அணியலாகாது.

விலை உயர்வைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் இந்தத் தடை நீடிக்கும். தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.

உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்

(அல்குர்ஆன் 19:64)

விண்வெளிப் பயணத்தில்

கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதி விலக்குகளும் உள்ளன.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:115)

கிப்லாவை நோக்க இயலாத சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டே எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஃபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:115 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1251

எதிரிகளின் அச்சம் மிகவும் கடுமையாக இருந்தால் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, வாகனத்தின் மீதோ, கிப்லாவை முன்னோக்கியோ, அதை முன்னோக்காமலோ தொழலாம் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக ராபிவு அவர்கள் அறிவித்து விட்டு இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகவே இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 4535

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84 வசனங்களையும் பார்க்க!

எனவே விண்வெளிப் பயணத்திலோ, அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ கிப்லாவை முன்னோக்க இயலாவிட்டால் எந்தத் திசையையும் நோக்கித் தொழலாம்.

துருவப் பிரதேசத்தில் தொழுகை

துருவப் பிரதேசங்களில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் ஒரு வருடத்திற்கு ஐந்து நேரத் தொழுகை போதுமல்லவா? ஏனைய பகுதிகளில் முப்பது வருடங்கள், அங்கே முப்பது நாட்களாகும். ஏறத்தாழ 300 வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் நோன்பு நோற்றால் போதுமல்லவா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றிக் கூறும் போது அவன் பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். நாற்பது நாட்கள் அவன் தங்கியிருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும், மற்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் இருக்கும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போலவே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் ஒரு ஆண்டு போல இருக்கக் கூடிய அந்த ஒரு நாளுக்கு ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அதற்குரிய அளவை நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல் : முஸ்லிம் 5228

தஜ்ஜால் வருகையின் போது ஒரு வருடத்தில் ஒரு பகலும் ஒரு இரவும் ஏற்படும். அதாவது ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும்.

இப்படி இருப்பதால் இதை ஒரு நாள் என்று கருதி மொத்தம் ஐந்து வேளை மட்டும் தொழுதால் போதுமா? அல்லது வழக்கமான நாட்களின் அளவுக்கேற்ப ஒவ்வொரு 24 மணி நேரத்தையும் ஒரு நாள் என்று கணக்கிட்டு அதற்குள்ளே ஐந்து வேளை தொழுகைக்கான நேரங்களையும் கனித்துக் கொள்ள வேண்டுமா?

இந்த கேள்விக்குத் தான் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) விடையளிக்கிறார்கள்.

துருவப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் ஏறக்குறைய இந்த நிலையில் தான் உள்ளனர்.

எனவே துருவப் பிரதேசங்களில் வாழ்வோர் நேரங்களைக் கணித்து மற்றப் பகுதிகளைப் போல் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

மஃரிபைத் தொழுது விட்டு மஃரிபுக்கும், இஷாவுக்கும் இடையே ஏனைய பகுதிகளில் எவ்வளவு நேரம் இருக்குமோ அவ்வளவு நேரம் கழிந்ததும் இஷா தொழ வேண்டும்.

இஷாவுக்கும், பஜ்ருக்கும் இடையில் எவ்வளவு நேரம் ஏனைய பகுதிகளில் இருக்குமோ அவ்வளவு நேரம் ஆனதும் பஜ்ரைத் தொழ வேண்டும்.

பஜ்ரிலிருந்து எவ்வளவு நேரம் கழித்து ஏனைய பகுதிகளில் லுஹர் நேரம் வருமோ அவ்வளவு நேரம் கழித்து லுஹரைத் தொழ வேண்டும்.

ஆறு மாதம், பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் அதை ஒரு நாள் என்று கூற முடியாது. 360 வருடங்களுக்கு ஒரு முறை நோன்பு வைக்க வேண்டுமென்றால் என்ன ஏற்படும் தெரியுமா?

360 வருடங்களுக்குப் பிறகு ஆறு மாதம் பகலாக இருக்குமல்லவா? ஆறு மாதம் பகலாக இருக்கும் சமயங்களில் உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும். அந்த ஆறு மாதத்துக்கும் பச்சைத் தண்ணீரும் குடிக்கலாகாது. தப்பித் தவறி பிழைத்தாலும், அவர் இந்த ஆறுமாத பட்டினி கிடந்தது ஒரு நாள் நோன்பு தான். இது போல் 30 வருடங்கள் வைத்தால் தான் 30 நாட்களாகும். இது சரிப்படுமா?

ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்பதால் அது ஒரு நாள் என்று வாதிட்டால் இந்த ஒரு வருட காலத்தில் ஒரு நாளைக்குரிய மூன்று வேளை உணவு தான் அங்கு வாழ்வோர் உட்கொள்கிறார்களா? இரவாக இருந்தால் ஆறு மாதங்களில் அங்குள்ளோர் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா? எந்தப் பெண்ணாவது கர்ப்பமடைந்தால் 300 வருடங்கள் கழித்துத் தான் பிரசவிப்பாளா? இதெல்லாம் எப்படி அட்ஜஸ்ட் செய்கிறார்களோ, கணித்துக் கொள்கிறார்களோ அப்படியே வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் கணித்துக் கொள்ள வேண்டும்.

உண்டியல் மூலம் பணம் அனுப்பலாமா?

இஸ்லாமியப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலையை ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கவோ, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கவோ அனுமதி இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1235, அபூதாவூத் 2994, இப்னுமாஜா 2191, அஹ்மத் 12131

தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது வணிகர்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஆட்சியாளர்களுக்குரிய அதிகாரம் உணரப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் உண்டியல் வழியாக பணம் அனுப்பத் தடை விதிக்கக் கூடாது.

ஒருவர் அயல் நாட்டில் திரட்டிய செல்வத்தை தான் விரும்புகின்ற வழிகளில் தனது தாயகம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இது தான் நியாயமானது. இஸ்லாமிய ஆட்சியில் இப்படித் தான் நடக்க வேண்டும். ஏனைய ஆட்சி முறைகளில் அதற்குத் தடை இருந்தால் அதை நீக்குவதற்காகப் போராடலாம்.

செயற்கை முறையில் கருத்தரித்தல்

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளை நிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர்.

இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளை நிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையிலும் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதையும் தெளிவாக அறிகிறோம்.

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள்.

ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள் உள்ளன. அவற்றை அவசியம் பேண வேண்டும்.

உயிருள்ள எதனையும் (அம்பு எய்து பழகுவதற்கான) இலக்காக ஆக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் 3617

உயிர்ப் பிராணிகள் வதைக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5513

உயிரினங்களின் முகத்தில் வடு ஏற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2953

முந்தைய சமுதாயத்தில் ஒரு பெண்மணி பூனையைக் கட்டி வைத்து தீனி போடாததால் நரகம் சென்றதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 2365, 3318, 3842

இது போன்ற ஒழுங்குகளைக் கவனித்து பிராணிகளை வளர்க்க வேண்டும்.

செஸ் விளையாடுதல்

சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும்.

சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.

செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்.

அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவது பரிசு எனப்படும்.

செஸ் விளையாட்டு சூதாட்டம் அல்ல. ஆனால் அதை சூதாட்டமாகவும் ஆட முடியும்.

பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் அதைக் கூடாது என்று தான் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சூது எனும் காரணத்தை அவர்களும் கூறவில்லை. ஆனாலும் மார்க்கம் தடுக்காததால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.

வங்கி - வட்டி - லாபம்

வங்கிகளில் தரக்கூடிய கூடுதல் பணம், போனஸ் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டாலும் நிச்சயமாக அது வட்டி தான்.

வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்திற்கும், வட்டிக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

* வட்டி என்பது முன்னரே இவ்வளவு தான் என்று தீர்மானிக்கப்படுகிறது.

வியாபாரத்தில் லாபம் என்பது இவ்வளவு தான் என்று முன்னரே உறுதி செய்ய முடியாது.

* வட்டி என்பதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்படலாம்.

வங்கியில் நாம் செலுத்தும் பணத்திற்கு வட்டி இவ்வளவு என்று செலுத்தும் போதே தெரிந்து விடுகிறது. வங்கி நஷ்டமடைந்தாலும் அந்தக் கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லாபம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக வழங்குவதில்லை.

சுருங்கச் சொன்னால் லாப நஷ்டங்களைப் பொறுத்து முடிவு செய்தால் அது வியாபாரம். லாப நட்டம் பற்றியே சிந்திக்காமல் எந்த நிலையிலும் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட்டால் அது வட்டி. அது ஹராம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாம் அந்தப் பணத்தை வாங்காவிட்டால் அந்தப் பணம் நமக்கு எதிராக நம்மை அழிப்போருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தலாம். இந்த நிர்பந்தத்திற்காக அதை வாங்கி யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

நிர்பந்தமான நிலையில் தடை செய்யப்பட்டவை அனுமதிக்கப்படும் என்பது உண்மையே. அது நிர்ப்பந்தம் தானா என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்கட்டும். இது நிர்பந்தம் தான் என்று அவருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது.

பதிவுத் திருமணம்

இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது.

முஸ்லிம் தனியார் சட்ட ப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதார மணம் போன்ற பல விஷயங்கள் இவற்றில் அடங்கும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் மட்டுமே இந்த உரிமைகளை முஸ்லிம்கள் பெற முடியும்.

முஸ்லிம்களேயானாலும் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் பொது சிவில் சட்டத்தின் கீழ் அவர்கள் வந்து விடுவார்கள். மேற்கண்ட உரிமைகளைப் பெற முடியாது.

அதாவது பதிவுத் திருமணம் செய்பவர் தனக்கு முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை என்று வாக்கு மூலம் தருகிறார். நேரடியாக இப்படி அவர் கூறாவிட்டாலும் அதன் விளைவு இது தான். எனவே பதிவுத் திருமணம் என்ற மாய வலையில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயமாகிறது.

மேலும் இஸ்லாமியத் திருமணம் பெண்ணின் பரிபூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் செய்து வைக்க வேண்டும். பொறுப்பாளர் இன்றி தானாக ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது.

பதிவுத் திருமணம் என்பது ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கெள்வதை நிபந்தனையாக்குகின்றது. அவளது தந்தையே அந்த இடத்தில் இருந்தாலும் அவர் சாட்சியாக மட்டும் தான் கருதப்படுவாரேயன்றி திருமணத்தை நடத்தி வைப்பராக ஆக முடியாது. இதுவும் பதிவுத் திருமணம் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம்.

அடகு வைத்தல்

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை.

வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்து விட்டு அந்த வீட்டில் நாம் குடியிருந்தால் - அதாவது வாடகை கொடுக்காமல் குடியிருந்தால் - கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

வீட்டை அடமானமாகப் பெற்ற பிறகு அதில் நாம் குடியிருக்கக் கூடாது. குடியிருந்தால் அதற்கான வாடகையைக் கொடுத்து விட வேண்டும்.

கால்நடைகளை அடமானமாகப் பெற்றால் அதற்கு தீனி போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

(புகாரி 2511, 2512)

இந்த விதிமுறையை மீறாமல் அடைமானம் வைக்கலாம்; வாங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவசத்தை யூதரிடம் அடைமானம் வைத்து, அதை மீட்காமலேயே மரணம் அடைந்தார்கள்.

புகாரி 2916, 4467

எம்மதமும் சம்மதம்?

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.

எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்?

வேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது! இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது? முரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா?

கல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

கடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.

உண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.

* விதவைக்கு விவாகமில்லை;

* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;

* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;

* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.

* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

கடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்லை; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.

ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.

கடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் முரண்பாடுகள்! முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்?

எல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.

அறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.

சாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.

எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை அணிவது? எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமா? அறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்?

ஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.

சமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா?

எல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை, சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்?

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?

எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை.

யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது இன்னொரு வகை.

முதல் வகையிலான எழுதப்பட்ட ஸலாமுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும். அதாவது பதில் எழுதி அனுப்ப வேண்டும். ஏனெனில் பேசுவதன் இன்னொரு வடிவமே எழுத்தாகும்.

அறிவு கெட்டவனே என்று ஒருவன் மற்றவனை நேரில் திட்டினாலும், கடிதத்தில் எழுதி அனுப்பினாலும் இரண்டும் சமமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எழுதி அனுப்பியதால் அவர் திட்டவில்லை என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இந்த அடிப்படையில் உங்களுக்கு ஸலாம் கூறி ஒருவர் கடிதம் எழுதினால் அவருக்கு இரு வழிகளில் பதில் கூறலாம். அவர் எழுதியது போலவே நீங்களும் பதில் ஸலாம் எழுதி அனுப்பலாம். அல்லது அதைப் படித்ததும் வஅலைஹிஸ்ஸலாம் (அவர் மீது ஸலாம் உண்டாகட்டும்) என்று வாயால் கூறலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஜிப்ரீல் ஸலாம் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, வஅலைஹிஸ்ஸலாம் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள்.

புகாரி : 3217, 3768, 6201, 6249, 6253

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரில் காணாததால் அவர் மீது ஸலாம் உண்டாகட்டும் என்றார்கள். கடிதம் மூலம் பதில் எழுத வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.

சுவற்றில் எழுதி தொங்கவிடப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே ஸலாம் கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டதைக் கேட்டால் அதற்கும் பதில் ஸலாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

ஒரு நண்பர் உங்களுக்காகப் பேசி அனுப்பும் கேஸட்டில் ஸலாம் கூறியிருந்தால் அதற்குப் பதில் கூற வேண்டும்.

இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை வானொலி, தொலைக் காட்சியில் நேரடி, ஒலி, ஒளிபரப்பு செய்யும் போது அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால் அனைவருக்காகவும் ஒரு முஸ்லிம் ஸலாம் கூறுகிறார் என்பது தெரிவதால் அதைக் கேட்பவர் பதில் கூற வேண்டும்.

தண்ணீர் வியாபாரம்

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2925

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2353, 2354, 6962

தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.

ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.

நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும். நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

பால் மாற்றம்

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன?

பால் மாற்றம் இயற்கையாக நடக்குமா? என்று தெரியவில்லை. நாம் அறிந்தவரை அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாகவே மாற்றப்படுகின்றது. இவ்வாறு செயற்கையாக மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண்களுக்கு ஒப்ப நடக்கும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்ப நடக்கும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5885, 6834

எந்த வகையிலும் ஒரு பாலினம் இன்னொரு பாலினத்துக்கு ஒப்பாகக் கூடாது என்று இந்த ஹதீஸ் தடுப்பதால் முற்றாகவே மாற முயல்வது கடுமையான குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி மாறி விட்டால் அதன் பின்னர் ஏற்படும் நிலை என்ன? என்பதற்கு இஸ்லாத்தில் தீர்வு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பால் மாறவில்லை என்பதால் அது பற்றிய சட்ட விளக்கம் நேரடியாக ஹதீஸ்களில் கிடைக்காது. இதனை ஒத்திருக்கின்ற ஏனைய சட்டங்களிலிருந்து இதற்கான விளக்கத்தை நாம் பெற வேண்டும்.

கணவன் என்பவன் ஆணாகத் தான் இருக்க வேண்டும். மனைவி என்பவள் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

ஒரு கணவன் எப்போது பெண்ணாக மாறி விடுகின்றானோ அந்த நிமிடமே அவன் கணவனாக இருக்க முடியாது.

* மனைவியைப் பொருத்த வரை அவன் இறந்து விட்டதாகக் கருதப்பட வேண்டும்.

* அல்லது அவனால் விவாகரத்துச் செய்யப் பட்டவளாகக் கருதப்பட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது நிலையே இவளைப் பொருத்த வரை பொருத்தமாக உள்ளது.

கணவன் இறந்து விட்டால் சோகத்தைக் காட்டுவதற்காகவும், கர்ப்ப அறையில் அவனது சிசு வளர்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காகவும் அவள் இத்தா இருக்க வேண்டும். இவன் உயிருடனேயே உள்ளதால் விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையிலேயே அவள் இருக்கிறாள். எனவே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலம் வரை அவள் இத்தா இருந்து விட்டு அதன் பிறகு அவள் ஒரு ஆணைத் திருமணம் செய்யலாம்.

பாடல்கள் பாடுவது

பாடல்களைப் பொருத்த வரை இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடல்களுடன் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.

பாடுகின்ற பாடல் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் அந்தப் பாடல்களைப் பாடலாம். கேட்கலாம்.

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பாடல் சினிமாப் பாடலாக இருந்தாலும் அதன் கருத்து இஸ்லாத்திற்கு முரணில்லாமல் இருப்பதால் இசைக் கருவிகளின்றி பாடலாம்.

* நமனை விரட்ட மருந்தொன்று விக்குது நாகூர் தர்காவிலே

* தமிழகத்தின் தர்காக்களை பார்த்து வருவோம்

* கேரளக் கரையோரம் வாழும் கருணை மிகும் பீமா

என்பது போன்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக உள்ளதால் இதை இசைக் கருவி இல்லாமல் கூடப் பாடக் கூடாது.

நீங்கள் பாடும் பாடல்களில் மார்க்கத்திற்கு முரணில்லாத பாடல் என்றால் எவ்விதக் குற்ற உணர்வுமின்றிப் பாடலாம்.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது போன்ற பைத்தியக்காரத் தனமான உளறலையோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்பது போன்ற இணை வைக்கும் பாடல்களையோ

பாடக் கூடாது. அவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆயினும் நம்மை அறியாமல் இது போன்ற பாடல்கள் வாயில் வந்து விட்டால் அதற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுதலாக செய்து விட்டாலோ எங்களைப் பிடிக்காதே என்று துஆச் செய்யுமாறு இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 2:286)

நீங்கள் தவறாகச் செய்பவற்றில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் வேண்டுமென்று செய்தவையே குற்றமாகும் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 33:5)

இந்த நிலையில் நீங்கள் பாடினால் உங்கள் அமல்கள் அழிக்கப்படாது.

05.11.2009. 18:57 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account