Sidebar

22
Sun, Dec
38 New Articles

மனிதனுக்கேற்ற மார்க்கம்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நூலின் பெயர் : மனிதனுக்கேற்ற மார்க்கம்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 56

விலை ரூபாய் : 12.00

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

முன்னுரை

பாமர மக்கள் தங்களின் மதத்தின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருந்தாலும் சிந்தனையாளர்களும், படித்தவர்களும் தங்களின் மதங்களை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்து வருகின்றனர். சிலர் வெளிப்படையாகவே தங்களின் மதக் கோட்பாடுகளை எதிர்த்து வருகின்றனர்.

அவர்கள் சந்தேகிப்பதிலும் எதிர்ப்பதிலும் நியாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அறிவுக்குப் பொருத்தமில்லாமலும், மக்களை ஏமாற்றுவதற்கு உதவும் வகையிலும், ஒரு சாராருக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அந்தச் சித்தாந்தங்கள் இருப்பதால் தான் எதிர்க்கிறார்கள்; சந்தேகிக்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அத்தகைய குறைபாடுகள் அற்றதாக அமைந்துள்ளன. நடுநிலைக் கண்ணுடன் இஸ்லாத்தை அணுகும் யாராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவார்களே தவிர வெருண்டு ஓட மாட்டார்கள்.

இந்தக் கருத்தை மையமாக வைத்து, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரையே மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற இந்த நூல்.

இந்நூல் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும் இந்தப் பதிப்பு பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் நேரடியாக, பேச்சு நடையிலிருந்து எழுத்து நடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாத மாற்று மத நண்பர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூலாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

  • மனித குல ஒருமைப்பாடு
  • சுயமரியாதை நிலவும்
  • நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்
  • கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை
  • இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை
  • கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
  • மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
  • அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு
  • மனித உரிமை பேணுதல்
  • கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்
  • மனிதன் கடவுளாக முடியாது
  • இஸ்லாம் தான் முதல் தோன்றிய மார்க்கம்
  • முஹம்மது இறைத் தூதரா?
  • இடைத் தரகருக்கு இடமில்லை
  • இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்

மனிதனுக்கேற்ற மார்க்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

உலகில் உள்ள ஏராளமான மதங்களில் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாம் எந்த வகைகளில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இஸ்லாம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது:.

முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்.

இவ்விரண்டு தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

இந்தக் கொள்கைகளை ஒருவன் நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மதங்களிலிருந்து விலகி வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறி விடுகின்றான்.

இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும், ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லை என்றும் கூறும் அளவுக்கு அப்படி என்ன தத்துவம் இதில் இருக்கின்றது?

இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.

நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும்; நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.

எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால், அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒருவன் சொல்லி ஒரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொள்ளும் போது மொழி, இனம், குலம், கோத்திரம், மற்றும் தேசத்தின் அடிப்படையில் மனிதன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே அடிபட்டு போகிறது.

மொத்த உலகத்தையும் படைத்துப் பரிபாலித்து காத்துக் கொண்டு இருப்பவனும், அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவனும் ஒரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது நான் தமிழன்; நீ மலையாளி; அவன் கன்னடன் என்றெல்லாம் மொழியின் பெயரால் மனிதன் கூறுபட்டுப் போவதை இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.

நான் இந்தியன்; அவன் பாக்கிஸ்தானியன்; நீ அமெரிக்கன் என்று தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் இந்தக் கொள்கை மாற்றி விடுகின்றது.

அதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன்; நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்று குலத்தின் பெயரால் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் துடைத்து எறிகின்றது.

மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன்; மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த ஒருவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஒரே இறைவனின் அடிமைகளாகி அடிமைகள் என்ற வட்டத்திற்குள் ஒன்றுபட்டு விடுகின்றனர்.

ஏக இறைவனுக்கு நாம் அடிமைகள் தான் என்று நம்பும் போது

தமிழனும் அவனுக்கு அடிமை

மலையாளியும் அவனுக்கு அடிமை

கன்னடனும் அவனுக்கு அடிமை

அரபு நாட்டவனும் அந்த ஏக இறைவனுக்கு அடிமை

என்று எல்லோரும் ஒன்றுபட்டு விடுகின்றோம்.

அனைவரும் ஒன்றுபட்டு நாங்கள் ஒரே ஒரு கடவுளுக்கு அடிமைகள் என்று கூறும் போது இன்னொருவனை விட தன்னை உயர்ந்தவன் என்று ஒரு மனிதன் கருத மாட்டான்.

என் தாய்மொழி தமிழ் என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி மலையாளம் என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது.

இப்படிப்பட்ட ஒற்றுமை லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற இந்தத் தத்துவத்தினால் ஏற்படும் பயனாகும்.

ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, மனிதர்களில் சிலரை நாயினும் கீழாக நடத்துவதைப் பரவலாக இந்தியாவில் காண்கிறோம். தோலின் நிறத்தை வைத்து மனிதனைத் தாழ்ந்தவன் என்றும் உயர்ந்தவன் என்றும் வேறுபடுத்துவதை மேலை நாடுகளில் பார்க்கிறோம். இத்தகைய வேறுபாடுகள் ஒழிய உலகத்தில் இது வரை தீட்டப்பட்ட திட்டங்கள் பயன் தந்துள்ளனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.

இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் அனைவரும் கடவுளுக்கு அடிமைகள் என்பதை மனிதன் உணர வேண்டும்; ஒப்புக் கொள்ள வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் இன்னொருவனை விடச் சிறந்தவன் என்று தன்னைப் பற்றி நினைக்க மாட்டான்.

நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன்.

நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான்.

நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றானோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதிலிருந்து அனைவரையும் தடுக்கின்றது.

எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன்; மற்றொருவன் கீழானவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் முற்றாகவே ஒழிந்து போகின்றன.

இதைத் தான் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

திருக்குர்ஆன் 53:32

சுயமரியாதை நிலவும்

பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.

மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே!

அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன.

மற்றவர்களைப் போல், அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன.

போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன.

மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.

அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான்; மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.

முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றாலும் மனிதன் உழைத்துப் பெறுகின்ற கல்வி, பதவி, செல்வாக்கு, ஆற்றல் போன்ற தகுதிகளில் மனிதர்களிடையே வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. இந்த உயர்வு தாழ்வில் நியாயமும் உள்ளது.

மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, சிறந்த பதவியை அடைந்து விட்டாலோ, அதிகாரத்துக்கு வந்து விட்டாலோ, மற்றவர்களை விட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்து விட்டாலோ இவற்றைப் பெறாத இன்னொருவன் அவனுக்குச் சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் விழுகின்றான்.

அரசியல் தலைவர்களுடைய கால்களில் விழும் கட்சிகளின் தொண்டர்களையும், செல்வந்தர்களின் கால்களில் விழும் ஏழைகளையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

தன்னை விடச் சிறந்தவன் என்று ஒருவனைப் பற்றி என்னும் போது அவனுடைய கால்களில் விழ வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றான்.

இப்படிச் செய்வதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற தத்துவம் மனிதனைத் தடுத்து நிறுத்துகின்றது.

கடவுளுக்கு மாத்திரம் தான் மனிதன் அடிமை. கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது.

அனைவரும் நம்மைப் போலவே மல ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் என்பதையும். அனைவரும் தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் என்பதையும் எல்லா மனிதர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தன்னப் போல உள்ள மனிதனின் காலில் விழ மாட்டார்கள். தன் காலில் மற்றவர்கள் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.

இதைத் தான் திருக்குர்ஆன் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

மனிதர்களே என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள். உங்கள் அனைவரின் மூலப் பிதா ஒரு ஆண் தான். உங்கள் அனைவரின் மூலத் தாய் ஒரு பெண் தான்.

ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களைக் குடும்பங்களாகவும், கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத் தான். உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத்

எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சிகளில் வலிமை மிக்கதாக இருந்தது.

இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும், தமக்காக எழுந்து நிற்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கொள்கைப் பிரகடனமே காரணம். அந்தக் கொள்கைக்கு மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை. எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.

வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?

அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.

கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பாக்கலாம்

உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.

தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள்!

அழிப்பதற்கு ஒரு கடவுள்!

காப்பதற்கு ஒரு கடவுள்!

துன்பத்தை நீக்க ஒரு கடவுள்!

இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்!

மழைக்குத் தனி கடவுள்!

உணவு வழங்க இன்னொரு கடவுள்!

கல்விக்கு என்று ஒரு கடவுள்!

என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா?காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7 ஆம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும்; அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.

இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் கொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கின்றது.

ஒரு கடவுள் என்ற கொள்கையைக் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்குச் சமாதி கட்டப்பட்டது.

ஆனால் கடைசி இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள்.

அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.

நபிகள் நாயகத்துக்குச் சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லிமும் வழிபடுவதில்லை.

நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லிம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.

மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.

இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லிமும் உயர்த்துவதில்லை.

அதனால் தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.

கடவுளுக்குச் சொந்த பந்தங்கள் இல்லை

அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்ற உறவுகள் கடவுளுக்கு இருக்கக் கூடாது. இதை இஸ்லாம் அழுத்தமாக அறிவிக்கிறது.

அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

நீங்கள் யாரைக் கடவுள் என்ற நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே முரண்பாடு ஏற்படுகிறது.

முரண்பாடு என்னவென்றால் கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே ஒரு காலத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள்.

கடவுள் யாருக்கோ பிறந்தார் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.

கடவுளுக்கு முன்பே இவ்வுலகம் இருந்திருக்கிறது என்ற கருத்து இதனால் ஏற்படும்.

கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்.

இல்லாமையிலிருந்து இருவரின் உடற்சேர்க்கையினால் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்?

எனவே தான் நீங்கள் வணங்கும் ஒரு கடவுளான, உங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது. அவனுக்குத் தாய் தகப்பனும் கிடையாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கடவுளுக்குப் பெற்றோர் இருக்க முடியாது என்பது போல் கடவுளுக்குச் சந்ததியும் இருக்க முடியாது என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

யாருக்குச் சந்ததி தேவைப்படும்? அழிவை எதிர்பார்த்து இருப்போருக்குத் தான் சந்ததி தேவைப்படும். ஒவ்வொரு மனிதனும் அழிவை எதிர்பார்த்து இருப்பதன் காரணத்தினாலேயே சந்ததிகளை விரும்புகிறான்.

நாம் அழிந்து விடுவோம்; நம்முடைய பெயர் சொல்ல ஒருவன் வேண்டும்; நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும்; நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினாலும், வயதான காலத்தில் நம்மைக் கவணித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினாலும் தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

தனக்கு அழிவு இல்லை; முதுமை இல்லை; என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்று ஒருவன் வரம் வாங்கினால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக ஜாலியாக உலகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்குப் பலவீனம் இல்லை. கடவுளுக்குச் சோர்வு இல்லை. கடவுளுக்குச் சாவு இல்லை. இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காகச் சந்ததியைத் தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:101

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ,  பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

திருக்குர்ஆன் 72:3

மேலும் மனைவி இருப்பது வேறொரு வகையிலும் கடவுளுக்குப் பலவீனமாகும்.

கடவுளுக்கு ஆசை வந்து உணர்ச்சி மேலிட்டு மனைவியோடு இணைந்திருக்கும் நேரத்தில் கடவுளே என்று யாராவது கூப்பிட்டால் என்ன ஆகும்?

அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவர் எப்படிக் கொடுப்பார். மேலும் கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானல் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாவல் தேடப்போக அவன் போடா வெளியே என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

மனைவியுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக் கொள்ள முடியாது? என்று சிலர் இதற்குச் சமாதானம் கூறுவார்கள்.

இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகின்றது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்?

அதனால் தான் ஒருவனைக் கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

திருக்குர்ஆன் 50:38

தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் ஜீவராசிகளின் நிலை என்னவாகும்? சூரியன் சந்திரன் பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது.

அவனுடைய படைப்பினங்களில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு கடவுள் தூங்கும் நேரத்தில் எத்தனையோ தேவைகள் இருக்கும். அந்த நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்குப் பிரதிநிதி யாராவது உண்டா? துணைக் கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்துக் கொள்ள முடியுமா?

அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்புகின்ற அவனுக்கு அவனுக்கு அசதி இல்லை என்றும், அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.

தான் தூங்கி விட்டாலும் உலகத்தைக் கண்காணிக்கும் வகையில் கடவுளுக்கு ஆற்றல் இருக்க முடியாதா? என்று இந்த இடத்திலும் கேள்வி எழலாம்.

ஆனால் கடவுளின் கண்கள் ஓய்வின்பால் நாட்டம் கொள்ளும் போது, நம்மைப் போல் அவரும் பலவீனமாக உள்ளார்.

தொடர்ந்து வேலை செய்வதால் நமது உறுப்புகளுக்கு ஏற்படும் சோர்வு கடவுளுக்கும் ஏற்படும் என்றால் இத்தகைய பலவீனர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? என்ற அடிப்படையை எதிர்த்து எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது.

ஆக இந்த அடிப்படையில் ஏனைய மதங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மதமும் கடவுளைச் சொல்லவே இல்லை.

எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவரில் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 55:18

கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக்கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான்.

கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன்; அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:263

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்;  புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:267

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:131

உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

திருக்குர்ஆன் 6:133

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 29:6

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 35:15

மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.

இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்; நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமா? இல்லையா? கடவுளுடைய வேலை என்ன?

எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?

எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.

நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.

இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!

நல்லவன், கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனை, தீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை; பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெருமகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.

இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்; பார்க்கிறார்; கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.

மதவாதிகள் தவறு செய்கிறார்களே? முஸ்லிம்களும் தவறு செய்கிறார்களே? என்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லை, அறை குறையாக நம்புகிறார்கள்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால்

அவன் மது அருந்த மாட்டான்,

விபச்சாரம் செய்ய மாட்டான்.

மோசடி செய்ய மாட்டான்,

ஏமாற்ற மாட்டான்,

திருட மாட்டான்,

கொள்ளையடிக்க மாட்டான்,

கொலை செய்ய மாட்டான்.

வட்டி வாங்க மாட்டான்.

இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.

அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாக, வாடிக்கையாகக் கொள்ள மாட்டான்.

இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.

அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு

கடவுளை எப்படி வழிபடுவது? கடவுளுக்கு எப்படி வணக்கம் செய்வது? கடவுளிடம் எப்படிப் பிரார்த்தனை செய்வது? என்பது மட்டுமே பெரும்பாலும் மதங்களில் கூறப்பட்டிருக்கும். திருமணம், பிறப்பு, இறப்பு தொடர்பான சில சடங்குகளும் கூறப்பட்டிருக்கும்.

ஆனால் இஸ்லாம் மட்டும் மனித வாழ்க்கையில் நடக்கும் அனைத்துக் காரியங்களிலும் தலையிட்டு இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

உண்ணுவது, பருகுவது, வியாபாரம், விவசாயம், கொடுக்கல், வாங்கல், ஆட்சி நடத்துவது, பொருளாதாரத்தைத் திரட்டுவது, செலவு செய்வது என்று எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறைகளில் தலையிட்டு நீ இப்படித் தான் நடக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.

இந்த உலகத்தில் நாம் வாழும் போது நாம் எத்தனையோ பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? எப்படி நடந்து கொண்டால் கடவுள் திருப்தியடைவார் என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது.

இப்படி உலகத்தில் எந்த மதத்தையும் நாம் பார்க்க முடியாது. பொருள் திரட்டுகிறாயா? நன்றாக திரட்டிக் கொள்! ஆனால் வட்டி வாங்காதே! ஏமாற்றாதே! மோசடி செய்யாதே! கலப்படம் செய்யாதே! அளவு நிறுவையில் குறை செய்யாதே! இந்த விதிகளுக்கு உட்பட்டு நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இப்படி இஸ்லாம் இதில் தலையிடும்.

வியாபாரம் செய்பவன் மோசடி செய்கின்றான் என்றால் அவன் சார்ந்திருக்கின்ற மதம் அவனைத் தடுக்கின்றதா? தடுக்காது. மத ரீதியான எந்தச் சான்றுகளையும் காட்டி அவனைத் தடுக்கவும் முடியாது.

வட்டி பெரிய பொருளாதாரச் சுரண்டல். இதை நேரடியாகத் தடுக்கும் மதங்கள் இருக்காது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு இதற்கு இன்ன இன்ன விதிமுறைகள் எனக் கூறுகிறது.

இதனால் கடவுளுக்கு எந்த லாபமும் கிடையாது. நீங்கள் திருடினால் என்ன?திருடாவிட்டால் என்ன?

நீங்கள் திருடுவதால் உங்களைப் போன்ற இன்னொரு மனிதன் பாதிக்கப்படுகின்றான். நீங்கள் வட்டி வாங்குவதால் ஒருவன் சுரண்டப்படுகிறான். நீங்கள் கலப்படம் செய்வதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்படி மனிதனுடைய நன்மைகளிலும், நலன்களிலும் அக்கறை கொண்டதால் தான் அனைத்திலும் இஸ்லாம் தலையிடுகின்றது.

கடவுளுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று நாம் நினைக்கலாம். அந்த மாதிரி விஷயங்களிலும் மனித குல நன்மைக்காக இஸ்லாம் இஸ்லாம் தலையிட்டு தீர்வு சொல்கின்றது.

மனித உரிமை பேணுதல்

இன்னும் இஸ்லாத்தின் தனித்தன்மையை ஆராய்ந்தால் கடவுளுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களும், கடமைகளும் இருக்கின்றன. இதில் மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கடவுள் தலையிடவே மாட்டார் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.

ஒரு மனிதனுக்கு நான் துரோகம் செய்து விட்டால் அதைக் கடவுள் மன்னிக்கவே மாட்டான். எப்போது மன்னிப்பான்? யாருக்கு நான் துரோகம் செய்தேனோ அவனிடத்தில் அந்தத் துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டு, அவன் திருப்தி அடைந்த பின்பு தான் கடவுள் என்னை மன்னிப்பான்.

ஒருவன் தொழாமல் இருக்கின்றான். இது மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல. கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. இந்தக் கடமை (தொழுகை)யை ஒருவன் செய்யாமல் இருக்கின்றான். இது கடவுளுக்கும், மனிதனுக்கும் சம்பந்தப்பட்ட விஷயமாகும். தவறாகச் செய்து விட்டேன் என்ற சொல்கிறாயா? இனி மேல் ஒழுங்காக நடப்பேன் என்கிறாயா? சரி என்று இறைவன் நாடினால் மன்னிக்கின்றான்.

நோன்பு என்பது ஒரு கடமை. இது கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. நோன்பு வைப்பதால், அல்லது வைக்காமல் இருப்பதால் இன்னொரு மனிதனுக்கு இதில் நன்மையோ, தீமையோ இல்லை. இந்த நோன்பை ஒருவன் 10 வருடமாக வைக்கவில்லை. பின்பு திருந்தி நான் இனி மேல் நோன்பு ஒழுங்காக நோன்பு வைக்கிறேன். கடவுளே என்னை மன்னித்து விடு என்று கேட்டால் கடவுள் நாடினால் மன்னித்து விடுவான்.

அதே நேரத்தில் ஒரு மனிதனுக்கு நான் மோசடி செய்திருக்கின்றேன்; ஏமாற்றி இருக்கின்றேன்; களவு செய்திருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம். மனிதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் தலையிட்டிருந்தால் கடவுளே! நான் திருடி விட்டேன்; என்னை மன்னித்து விடு! என்று கேட்டால் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.

கடவுளிடம் ஒரு காலத்திலும் மன்னிப்பு கிடைக்காது. காலமெல்லாம் நின்று தொழுதாலும், தவம் செய்தாலும் மன்னிப்புக் கிடைக்காது. கணவன் மனைவிக்குச் செய்த குற்றம், மனைவி கணவனுக்குச் செய்த குற்றம், தாய் மகனுக்கும், மகன் தாய்க்கும் செய்த குற்றம் ஆகியவற்றைச் சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்காத வரை கடவுள் மன்னிக்கவே மாட்டான் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே.

மதங்களைச் சிலர் வெறுப்பதற்குக் காரணம் என்ன? எல்லா அக்கிரமும் செய்கின்றான். பின்பு கடவுளே என்னை மன்னித்து விடு என்கிறான். தேங்காயை உடைத்தால் கடவுள் மன்னித்து விடுவான் என்கிறான். இது மனிதனைப் பண்படுத்துமா?

ஆனால் இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதனுக்குச் செய்கின்ற கடமைகளில் கடவுள் தலையிடுவது கிடையாது. இவ்வளவு சுயமரியாதை தருகின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஞாபகத்திற்கு வருகிறது.

மறுமை நாளில் சில பேர் விசாரணைக்கு வரும் போது ஒருவன் அதிகமாக தர்மம் செய்து, ஹஜ் கடமையையும் நிறைவேற்றி, இன்னும் இஸ்லாம் கூறும் அனைத்துக் காரியங்களையும் ஒன்று விடாமல் செய்திருப்பான். இப்படி ஏராளமான நன்மைகளைப் பெற்றவனாக மறுமை நாளில் வந்து நிற்பான். அதே நேரத்தில் இந்த உலகத்தில் வாழும் போது ஒருவனை அநியாயமாக ஏசியும், அநியாயமாக ஒருவனுடைய பொருட்களைச் சுரண்டியும் இருப்பான். இப்படி இவனால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து நிற்பார்கள். இந்த நேரத்தில் அவனுக்கு நீதி வழங்கும் கடவுள் என்ன செய்கிறான் தெரியுமா? இவன் எனக்காக காலமெல்லாம் வழிபட்டவன். எனக்காகவே நேரத்தை ஒதுக்கியவன். எனக்கென்று தன்னையே அர்ப்பணித்தவன் என்று இறைவன் பார்ப்பதில்லை. மாறாக இவனுடைய நன்மைகளையெல்லாம் பிடுங்கி யாருக்கு இந்த உலகத்தில் அக்கிரமம், அநியாயம் செய்தானோ, அவனுக்குக் கொடுக்கிறான். எல்லா நன்மைகளையும் இழந்து வெறுங்கையோடு நிற்பான் என்று நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் கூறினார்கள். எவ்வளவோ தொழுது நோன்பு வைத்து இன்னும் ஏராளமான நன்மைகளைச் சுமந்து வருபவன் இன்னொரு மனிதனுக்கு அக்கிரமம் செய்தவனாக வந்து நின்றால் அந்த அக்கிரமத்தினால் பாதிக்கப்பட்டவன் கடவுளிடம் முறையிட்டால் அவனுக்கு நீதி வழங்குவது கடவுளுடைய கடமை.

அங்கு காசு பணம் செல்லாது. அங்கு எது மனிதனுக்கு வெற்றியளிக்கும்? அவன் செய்து வந்த நல்லறங்கள் ஒன்றே வெற்றியளிக்கும். ஆக அந்த உலகத்தில் எது செல்லுமோ அந்த நல்லறங்களையே பரிசாகக் கொடுத்து விடுகிறான்.

உன்னைத் துன்புறுத்தினானா? இந்த அளவுக்கு இவனுடைய நன்மையை நீ வைத்துக் கொள்! உன்னுடைய பொருளை ஏமாற்றினானா? அந்த அளவுக்கு இவனுடைய நன்மையை எடுத்துக் கொள்! இறைவன் அவனுக்கு நீதி வழங்குவான்.

இவன் செய்த நன்மைகள் இப்படியே கரைந்து, எந்த நன்மையும் கைவசம் இல்லாதவனாக நிற்பான். அதற்குப் பின் சிலர் வந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பார்கள். உன்னுடைய தீமையைத் தூக்கி உனக்குத் துரோகம் இழைத்த இவன் தலையில் வை! என இறைவன் கூறுவான். இப்படிப்பட்ட விதி முறைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்.

கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்

யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே.

உன்னுடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை மனிதன் செய்ய வேண்டும். கடவுளை வழிபடுகிறேன் என்று கூறிக் கொண்டு 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது.

உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவும் கூட அல்லாஹ்வுக்காகச் செய்யும் மார்க்கக் கடமை தான். தொழுகை, நோன்பு போல் இதையெல்லாம் நீ செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அல்லாஹ் விசாரிப்பான் எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம்.

ஏனைய மதங்களில் இது போல் பார்க்க முடியாது. மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்றால் அது அவனுக்கும், அவன் மனைவிக்கும் உள்ள விஷயம் என்று ஏனைய மதங்கள் கூறும். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகின்றது தெரியுமா? மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லையென்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஒழுங்காக நடந்தால் பரிசும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் தண்டனையும் தருகின்ற மார்க்கம் இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

வாகனத்தில் ஏறியிருக்கும் ஒரு மனிதன் தனது சாட்டையைக் கீழே போட்டு விடுகிறான். அதை இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இதுவும் ஒரு நல்லறம். உன் மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவு இருக்கின்றதே அதற்குக் கூட நன்மை இருக்கின்றது.

மனைவியை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டால் அதுவும் தொழுகை போல இறைவனிடம் பரிசு வாங்கித் தரும். ஒழுங்காக மனைவியைக் கவனிக்கவில்லையென்றால் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி ஒரு சித்தாந்தம் இந்த உலகில் இருந்தால், இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால் எல்லாத் துறையும் சீராகுமா? ஆகாதா?

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

உனக்கு ஒரு ஆண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்த ஆண்மையை அனுபவி! உனக்குப் பெண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்தப் பெண்மையை அனுபவி! மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் இனி மேல் இரவில் தூங்க மாட்டேன்; விழித்திருந்து வணங்கிக் கொண்டிருப்பேன் என்றார். மற்றொருவர் நான் திருமணம் செய்யாமலே என் வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர் நான் எப்போதும் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கப் போகின்றேன் என்றார்.

இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர்களிடம் நான் தொழவும் செய்கிறேன். தூங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். திருமணமும் செய்திருக்கின்றேன். எவன் ஒருவன் என்னுடைய இந்த வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல! என்று கூறினார்கள்.

கடவுளைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவதும், உடம்பைக் காயப்படுத்திக் கொள்வதும், தன்னைத் தானே பல விதங்களில் வேதனைப்படுத்திக் கொள்வதும் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மனிதன் கடவுளாக முடியாது

இஸ்லாத்தின் மற்றொரு பகுதி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று ஒருவன் நம்ப வேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அவர்கள் கூட அல்லாஹ்வுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் தானே தவிர அல்லாஹ்வாக முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான்.

ஆனால் நாம் இன்று பார்க்கிறோம். ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாகவோ, கடவுளின் அம்சம் பெற்றவராகவோ ஆக முடியும் என்றால் நபிகள் நாயகத்தை இஸ்லாம் அவ்வாறு அறிமுகம் செய்திருக்கும். ஆனால் அவர்களைச் சிறந்த மனிதர் என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும் தான் இஸ்லாம் நம்பச் சொல்கிறது.

நபிகள் நாயகம் அவர்களிடம் பிரார்த்தனை செய்யவோ, வணக்கம் செலுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகள் நாயகம் விலக்குப் பெற்றவர்கள் அல்ல என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

ஏகத்துவக் கொள்கையை சொல்லித் தந்த காரணத்தால், கடவுளுடைய சட்ட திட்டங்களை அவர்கள் மூலம் நாம் அறிந்து கொண்ட காரணத்தால் அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது தான் அவர்களைப் பற்றி இஸ்லாத்தின் நிலை.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையெல்லாம் தந்தார்களோ அவை அனைத்தும் நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் இருந்து நமக்குத் தரப்பட்டவை என்ற நம்ப வேண்டும். இப்படி நம்புவது இஸ்லாத்தின் அடுத்த பாதியாகும்.

இஸ்லாம் தான் முதலில் தோன்றிய மார்க்கம்

உலகத்திற்கெல்லாம் கடவுள் ஒருவன்; அவன் ஆதியில் இருந்தே இருந்து கொண்டிருக்கின்றான் என்றால் 14 நூற்றாண்டுகளுக்கு முன் தானே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கின்றார்கள்?

இப்படி இருக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்றால் இந்த 14 நூற்றாண்டுகளில் வாழும் மக்களுக்குத் தான் வழிகாட்ட வேண்டுமா? இதற்கு முன்னால் எவ்வளவோ மக்கள் வாழ்ந்திருக்கிறார்களே? என்ற சந்தேகம் வரலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் அல்லாஹ்வுடைய தூதர் என்று இஸ்லாம் கூறினால் இந்தக் கேள்விக்கு இடம் உள்ளது. ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வுடைய தூதர்களில் ஒருவர் என்று தான் இஸ்லாம் சொல்கின்றது.

முதல் மனிதர் ஆதம் கூட அல்லாஹ்வின் தூதர் தான்; அவரும் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கையைத் தான் சொன்னார்; ஆதமுக்குப் பிறகு நூஹ் நபியும், மூஸா நபியும், ஈஸா நபியும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையைத் தான் சொன்னார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆதமிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இடையிலுள்ள பல்லாயிரக் கணக்கான நபிமார்களும் இந்தக் கொள்கையைத் தான் கூறினார்களே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முதன் முதலில் கூறியவர்கள் என்பது அல்ல.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப வேண்டும் என்பதன் கருத்து அவர்கள் இறைவனின் தூதர்களில் கடைசியாக வந்தவர் என்பது தான். அவருக்கு முன்னால் தூதர்கள் எவருமே வரவில்லை என்று நாம் நம்பக் கூடாது. திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் ஏராளமான இறைத் தூதர்கள் ஒரு கடவுளை வணங்குங்கள். மனிதனை வணங்காதீர்கள். கல்லை வணங்காதீர்கள் என்று சொன்னதாகப் பார்க்கிறோம்.

பிற மத நூல்களைப் புரட்டிப் பார்த்தால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைப் பார்க்கிறோம். அதே போல் சித்தர்கள் பாடலில்,

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து மொனமொனன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர்கள் கூட நட்ட கல்லைத் தெய்வம் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் இந்தக் கொள்கை சொல்லப்பட்டது. அதன் பின் மறைந்து விட்டது. பிறகு வந்தவர்கள் மாற்றி விட்டார்கள்.

ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறியவர்களையே கடவுளாக மாற்றி விட்டார்கள். கடவுளைச் சொல்ல வந்த நன்மக்கள் கடவுளாக மாற்றப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசித் தூதராக வந்ததனால் இன்று வரை இந்தக் கொள்கையில் மாற்றமில்லாமல் சரியான அரண் போட்டு இஸ்லாம் தந்திருக்கின்றது.

இந்த வகையில் முதல் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான் என்பது புலனாகிறது. முதல் மனிதனிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஒரு கடவுள் கொள்கை தான் இருந்தது. கடவுளுக்குரிய இலக்கணங்களையும் ஆதியிலே வாழ்ந்த நன்மக்கள் சொல்லிக் கொண்டு தான் வந்தார்கள்.

கடைசியாக வந்த நபி (ஸல்) அவர்கள் இந்தக் கொள்கையில் எந்த மாசும் வந்து நுழைந்து விடாத அளவிற்கு ஏராளமான ஏற்பாடுகளையும், அணைகளையும் போட்டு ஏகத்துவக் கொள்கை இன்று வரை நிலைத்து நிற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

முஹம்மது இறைத் தூதரா?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்பதையும் முஹம்மது ரசூலுல்லாஹ் - முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் - என்பதையும் நம்ப வேண்டும். நாம் சுட்டிக் காட்டிய அடிப்படையில் நம்ப வேண்டும். இப்படி யார் நம்பினார்களோ அவர்கள் தாம் முஸ்லிம்கள்.

அறிவுப்பூர்வமாகப் பேசும் சிலருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரலாம். கடவுள் என்று ஒருவன் இருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். இதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? கடவுளே நேராக வந்து எல்லாவற்றையும் சொல்லி விட்டுச் சென்றால் ஏற்றுக் கொள்ளலாம். இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான்; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடவுளுடைய தூதர் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதே அந்தச் சந்தேகம்.

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் தான் என்பதற்கு திருக்குர்ஆன் இன்று வரை ஒரு மாபெரும் நிரூபணமாக உள்ளது. திருக்குர்ஆனை நாம் புரட்டிப் பார்த்தால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தையும், அந்தக் காலத்தில் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் பார்க்கும் போது உண்மையிலேயே இது முஹம்மது என்ற மனிதரால் சொல்லியிருக்க முடியாது.

20ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்குரிய விஷயங்கள் அனைத்தும்  1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆனில் தெளிவாக, நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாகச் சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய கால கட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின்வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 55:33

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 6:125

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!

திருக்குர்ஆன் 51:7

பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதன் தான் வாழ்ந்த பகுதியை விட வேறு ஒரு பகுதி இந்த உலகில் இல்லை என்று தான் விளங்கி வைத்திருந்தான்.

அமெரிக்காவை ஒருவன் கண்டுபிடித்தான் என்று அறிந்து வைத்திருக்கிறோம். இந்தப் பூமியில் இருக்கின்ற அமெரிக்காவையே ஒருவன் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது

இந்த உண்மையைப் பார்க்கும் போது இந்தக் குர்ஆன் 14 நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் கற்பனையில் தோன்றியது என்று சொல்ல முடியுமா?

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திர மண்டலத்திற்குப் போக முடியும் என்று கூறி இருக்கிறார் என்றால் இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகச் சொன்னதில்லை. கடவுளுடைய வார்த்தை தான் என்பதற்கு இதுவே போதுமான சான்றாக இருக்கின்றது.

இது ஒரு சின்ன உதாரணம் தான்.

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 36:38

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

உருண்டையாக இருக்கின்ற பூமி தான், இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி,சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

இப்படி ஏராளமான விஞ்ஞான உண்மைகளைக் குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பார்த்தால் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான் என்பது தெரிய வரும்.

முஹம்மது என்ற மனிதரால் இப்படிப்பட்ட உண்மைகளை எப்படிக் கூற முடியும்? அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? எழுத்தறிவில்லாத ஒரு காலம். முஹம்மது அவர்களுக்கும் எழுத்தறிவு கிடையாது.

எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்க எந்த ஒரு அறிவியலும் ஏன் சாதாரண தொலை நோக்கியைக் கூட கண்டுபிடிக்காத காலத்தில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தக் கோள்கள் அனைத்தும் சுழல்கின்றன. அவற்றுக்குரிய பாதையில் சுழல்கின்றன என்று கூறுபவர்களாக இருந்தால் அவர் சாதாரண முஹம்மதாக இருந்து கூற முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் என்ற அடிப்படையில் இருந்தால் மட்டுமே சொல்ல முடியும்

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மட்டுமே இதைச் சொல்ல முடியும். இன்னும் திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் அறிவியல் உலகம் கூறும் எல்லா விதமான உண்மைகளையும் அன்றே சொல்லி விட்டது. வேறு எந்த வேத நூலிலும் நீங்கள் இதைப் பார்க்க முடியாது.

மாறாக அவை விஞ்ஞானத்திற்கு எதிராகவே இருக்கும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னே அருளப்பட்ட திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. ஆனால் இன்று ஒரே ஒரு வசனத்தைக் காட்டி இது அறிவியல் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது.

14 நூற்றாண்டுகள் ஆன பிறகும், இன்றைய அறிவியல் உலகத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்தும் கூட பொய்ப்பிக்க முடியாத ஒரு நூலை கடவுள் தந்தார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்கள் கையில் இன்றைக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இந்தத் குர்ஆன் தான். இந்தக் குர்ஆனை வைத்துத் தான் நாம் இஸ்லாம் மார்க்கம் கடவுளின் மார்க்கம் என்று நம்புகிறோம்.

இது முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதிய புத்தகம் என்று சொல்வார்கள். இது முஹம்மது எழுதிய புத்தகம் என்றால் இவையெல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது. அவருக்குத் தெரிய வேண்டுமானால் அவர் என்ன 20 ஆம் நூற்றாண்டு மனிதரா? 20 ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்குச் சொல்ல வேண்டியதை அவர் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றால் குர்ஆன் அவர் கற்பனையில் உதித்ததல்லை என்பது உறுதி.

(இது பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள, வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இப்படிப்பட்ட ஒரு அருமையான தத்துவம்

மனிதர்கள் சிந்திக்க வேண்டிய தத்துவம்

அறிவுக்குப் பொருத்தமான தத்துவம்

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தத்துவம்

முரண்பாடே இல்லாத ஒரு தத்துவம் தான் இஸ்லாம்.

இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவதில்லை. அதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போது வருகிறது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இது அகில உலகத்திற்கும் பொதுவானது. மனிதர்களே! என்று தான் குர்ஆன் அழைப்பு விடுகின்றது.

முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்து இதனை ஏற்றுக் கொண்டு விட்டால் அவன் முஸ்லிம். உனது பூர்வீகம் என்ன? என்று கேட்க முடியாது. ஆகவே இஸ்லாம் என்பது நம்பி விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

இடைத் தரகருக்கு இடமில்லை

பொதுவாகவே மதங்கள் என்றால் மனிதனை ஏமாற்றும் ஒரு வழி என்று ஆகி விட்டது.

இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களில் காணப்படும் இடைத் தரகர் கோட்பாடாகும்.

எந்த மதமாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக நெருங்க முடியாது. அதற்குரிய மத குருமார்களிடம் போய் அவர்களுடைய துணையுடன் தான் கடவுளிடம் நெருங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால் கடவுளை நெருங்குவதற்கு உனக்கும், கடவுளுக்கும் இடையில் எந்த இடைத் தரகரோ, புரோகிதரோ இருக்கக் கூடாது.

மனிதன் கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நேரடியாகக் கேட்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் இன்னொரு மனிதன் புரோக்கராக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது.

பெயர் வைக்க வேண்டுமா?

கல்யாணம் நடத்த வேண்டுமா?

இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமா?

நீங்களாகச் செய்து கொள்ளலாம். இதற்கு மத குருவின் தயவு தேவை இல்லை என்று சொல்லி புரோகிதர்களை எல்லாத் துறையிலும் ஒழித்த மார்க்கம் இஸ்லாம் தான். எந்தத் துறையிலும் புரோகிதர் கிடையாது. புரோகிதர்களுக்கு வேலையே கிடையாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் புரோக்கர்கள் நுழைந்து மார்க்கத்தைச் சீரழித்து விடாத அளவுக்கு அணை கட்டிய மார்க்கம் இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ திருமணங்கள் நடந்திருக்கின்றன. அத்திருமணங்களில் மந்திரம் ஓத நபிகள் நாயகம் அவர்களை யாரும் கூப்பிட்டது கிடையாது. இவர்களும் சென்றது கிடையாது.

சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். புரோகிதர் தேவையென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றிருக்க வேண்டும்.

ஏனைய மதங்களின் சுரண்டலைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கின்றார்களே அவர்கள் இஸ்லாம் குறித்து பயப்படத் தேவை இல்லை. உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் மதத்தின் பெயரால் ஒருவரை மற்றவர் சுரண்ட முடியாது. ஏமாற்ற முடியாது. அப்படிப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ நடுநிலையாளர்களுக்கு, இஸ்லாத்திலுள்ள சில விஷயங்கள் உறுத்தலாக இருக்கின்றன.

ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதித்துள்ளது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

இதை இஸ்லாம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியாகவே வழங்கியுள்ளது.

விபச்சாரம், வைப்பாட்டி போன்ற தொடர்புகள் மூலம் வழிகெட்டு, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி விடும் நிலையை விட சட்டப்படி மனைவியாக்கிக் கொள்வது எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல!

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அவளை அம்போ என விட்டு ஓடுவதை விட அவளை மனைவி என அங்கீகரித்து, அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை தனது பிள்ளைகள் என்று வெளிப்படையாக அறிவிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது கிடையது.

இவ்வாறு இஸ்லாம் அனுமதி அளித்ததற்குரிய காரணங்களைக் கூறினால் நீண்டு விடும்.

(பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது? என்பது பற்றி விரிவாக அறிய ஆர்வமுள்ளவர்கள், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

தலாக் என்ற சொல் மூலம் பெண்களை எளிதாக விவாகரத்துச் செய்யும் சட்டமும் சிலருக்கு உறுத்தலாக அமைந்துள்ளது.

இஸ்லாம் தம்பதிகளைச் சேர்ந்து வாழவே வலியுறுத்துகிறது. அதையும் தாண்டி வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தங்கள் மனைவியரை தீ வைத்துக் கொளுத்தி,ஸ்டவ் வெடித்துச் செத்தாள்என்று சொல்லி தப்பித்து விடாமல் இருப்பதற்காகவே தலாக் முறையை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு மண விலக்குப் பெறும் உரிமை பெண்களுக்கும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தலாக் விஷயமாக இஸ்லாம் கூறும் நியாயத்தை அறிந்து கொள்ளும் போது இது போன்ற சட்டம் தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

பெண்களின் ஆடைகள், பெண் கல்வி, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்க விடை உள்ளது.

இது போல் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதம், கடுமையான குற்றவியல் சட்டங்கள் போன்றவையும் பலருக்கு உறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதச் செயலுக்கும் ஜிஹாதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் இதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.

கடுமையான குற்றவியல் சட்டங்கள் தான் இன்றைய உலகுக்குத் தேவை என்பதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன.

(இவை குறித்து அறிந்து கொள்ள குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இது போல் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் சிலர் ஓரிறைக் கொள்கைக்கு எதிராக,இறந்தவர்களின் சமாதிகளை வணங்குவதும், நாகூர் ஆண்டவரே! என்று இறந்தவர்களை அழைத்து வேண்டுதல் புரிவதும் பலருக்கு உறுத்தலாக உள்ளது. இஸ்லாத்திலும் பல தெய்வ நம்பிக்கை உள்ளதோ என்ற சந்தேகம் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

ஆனால் இவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது. இறந்தவரை வழிபடுவதையும், சமாதிகள் கட்டுவதையும், சமாதிகளை வழிபாட்டுத் தலமாக ஆக்குவதையும், அடக்கத்தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதையும் நபிகள் நாயகம் அவர்கள் கண்டிப்புடன் தடை செய்து விட்டனர்.

இஸ்லாத்தின் வேத நூலான குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் இச்செயல்களுக்கு அறவே அங்கீகாரம் கிடையாது. குடிகார முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருப்பதால் இஸ்லாம் போதைப் பொருளை அனுமதிக்கிறது என்று நாம் யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.

அது போல் தான் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய சமாதி வழிபாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

(சமாதி வழிபாடு பற்றி விரிவாக அறிய தர்கா வழிபாடு என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இஸ்லாம் மார்க்கத்தைத் திருக்குர்ஆனிலிருந்து, நபிகள் நாயகத்தின் போதனைகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய யாரும் இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறி நிறைவு செய்கின்றேன்.

05.11.2009. 18:27 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account