Sidebar

18
Wed, Sep
1 New Articles

நபி வழியில் நம் ஹஜ்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிவழியில் நம் ஹஜ்

நூலின் பெயர்: நபிவழியில் நம் ஹஜ்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

 மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

 திருக்குர்ஆன் 3:188

நபிவழியில் நம் ஹஜ்

இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது.

நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு ஹஜ்.

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் கூட சிலர் அறியாமையின் காரணமாக வேறுபட்டு நிற்கும் கொடுமையைக் காண்கிறோம். மத்ஹபுகளின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஹஜ் செய்யும் நிலையையும் காண்கிறோம்.

அணிகின்ற ஆடைகள் கூட ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய இடத்தில் வணக்க வழிபாடுகளில் வித்தியாசப்படுவதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்(முஸ்லிம் 2286) என்று கூறியதுடன் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு மூன்று தடவை ஹஜ் செய்து ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக நடந்திருந்தால் வித்தியாசங்கள் ஏற்பட சிறிதளவாவது நியாயம் இருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரு தடவை தான் ஹஜ் செய்தனர். அந்த ஹஜ்ஜை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அந்த ஒரே விதமாகத் தான் நாம் அனைவரும் செய்தாக வேண்டும். அந்தப் புண்ணிய பூமியிலாவது ஒரே விதமாக வணக்கங்கள் புரிய வேண்டும்.

இந்த நன்னோக்கத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்தனர் என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளியிட்டுள்ளோம்.

பின் வரும் தலைப்புக்களில் ஹஜ்ஜின் அனைத்துச் சட்டங்களையும் தெளிவுபட எடுத்துக் கூறும் நூல்

ஹஜ்ஜின் சிறப்புக்கள்

ஹஜ்ஜின் அவசியம்

பெண்கள் மீதும் ஹஜ் கடமை

தக்க துணை அவசியம்

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?

முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டுமா?

ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?

இஹ்ராம் கட்டுவது

தல்பியா கூறுதல்

தல்பியாவை உரத்துக் கூறுதல்

தல்பியாவை நிறுத்த வேண்டிய நேரம்

இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்

இஹ்ராமின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

திருமணம்

தாம்பத்தியம்

வேட்டையாடுதல்

தலையை மறைத்தல்

நறுமணம் பூசக் கூடாது.

மயிர்களை நீக்கக் கூடாது

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்

தவாஃப் அல்குதூம்

மக்கா நகரின் புனிதம்

இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?

மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்

தவாஃப் அல்குதூம் செய்யும் முறை

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்ற வேண்டும்

ருக்னுல் யமானியை முத்தமிடுதல்

தவாஃபுக்காக உளூச் செய்தல்

தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்

ஸஃபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது

மினாவுக்குச் செல்வது

அரஃபாவுக்குச் செல்வது

அரஃபா நாளில் நோன்பு நோற்பது

அரஃபாவில் தங்குவதன் அவசியம்

அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்

அரஃபாவில் செய்ய வேண்டியவை

முஸ்தலிஃபாவுக்குச் செல்வது

மீண்டும் மினாவுக்குச் செல்வது

மினாவில் செய்ய வேண்டியவை

ஜம்ரதுல் அகபா

தலை மழித்தல்

பெண்கள் தலை மழித்தல்

கல்லெறிந்த பின் தவாஃப் அல் இஃபாளா

தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை

பெருநாள் தொழுகை கிடையாது

கல்லெறியும் நாட்களும் இடங்களும்

தவாஃபுல் விதாஃ

தவாஃபின் போது பேசலாம்

எந்த நேரமும் தொழலாம்;

தவாஃப் செய்யலாம்

ஆண்களுடன், பெண்களும் தவாஃப் செய்வது

அதிகமதிகம் தொழ வேண்டும்

அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும்

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்

தமத்துவ்

கிரான் இஃப்ராத்

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்

உம்ரா என்றால் என்ன?

ரமளானில் உம்ரா

குர்பானி கொடுத்தல்

ஸம்ஸம் நீர்

பிறருக்காக ஹஜ் செய்தல்

மதீனாவுக்குச் செல்வது

ஹஜ்ஜின் சிறப்புக்கள்

ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.

அமல்களில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவதுஎன்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது என்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 26, 1519

ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1773

அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத், ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1520, 2748

உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1521, 1819, 1920

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.

அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவை யாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.

ஹஜ்ஜின் அவசியம்

மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக்குர்ஆன் 3:97)

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2380.

பெண்கள் மீதும் ஹஜ் கடமை

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக்குர்ஆன் 3:97)

அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும், உம்ராவும்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 24158, இப்னுமாஜா 2892

சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸின் அடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம்.

(உம்ராச் செய்வது கடமையா என்பதைப் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.)

தக்க துணை அவசியம்

பெணகள் மஹ்ரம் துணையில்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று முன்னர் நாம் கருதி வந்தோம். அதனடைப்படயில் பின்வருமாறு இந்த நூலில் நம் எழுதினோம்.

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1086, 1087

கணவன், அல்லது திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர இரண்டு நாட்கள் பயணத் தொலைவு கொண்ட இடத்துக்கு பெண்கள் பயணம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1996, 1197, 1864.

திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார். நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராகஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233.

பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் கொண்ட பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எனவே தக்க துணையில்லா விட்டால் பெண்கள் மீது ஹஜ் கடமையாகாது.

ஆனால் இது குறித்து நாம் மறு ஆய்வு செய்த போது இந்தக் கருத்தில் இருந்து நாம் மாறிவிட்டோம். இது குறித்து செய்யப்பட்ட ஆய்வைக் கீழே தருகிறோம்.

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.

அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.

ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

நாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம்.

முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்

ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா? என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது.

ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ قُلْتُ لِأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1086, 1087

ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرٍو عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ فَقَالَ اخْرُجْ مَعَهَا

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து  அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம்,  உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அல்லது அழகில்லாதவளா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா?அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா? இல்லையா? என்றெல்லாம் விசாரிக்கவில்லை. உன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.

இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.

பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

(அல்குர்ஆன் 3:97)

இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. இது இரண்டாவது சாராரின் வாதமாகும்.

மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:

பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.

இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحَكَمِ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا إِسْرَائِيلُ أَخْبَرَنَا سَعْدٌ الطَّائِيُّ أَخْبَرَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الْفَاقَةَ ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ فَقَالَ يَا عَدِيُّ هَلْ رَأَيْتَ الْحِيرَةَ قُلْتُ لَمْ أَرَهَا وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا قَالَ فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا الْبِلَادَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى قُلْتُ كِسْرَى بْنِ هُرْمُزَ قَالَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ فَلَيَقُولَنَّ لَهُ أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ فَيَقُولُ بَلَى فَيَقُولُ أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ فَيَقُولُ بَلَى فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ قَالَ عَدِيٌّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ قَالَ عَدِيٌّ فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ إِلَّا اللَّهَ وَكُنْتُ فِيمَنْ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?  என்று கேட்டார்கள்.  நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது  என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்  என்று சொன்னார்கள். அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?  என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய் என்று சொன்னார்கள். நான்,  (மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?  என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்  என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார்.  அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை  இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம்.

அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612 வது அறிவிப்பில் கூறுவது போல், ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்  என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்  என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?

மதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,

பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.

அது தான்,  ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம் என்பதாகும்.

கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே,  ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்  என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி 3595)

எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல;மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

இவ்வாறு இரண்டாவது சாரார்,  ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்  என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.

தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் ஹதீஸில் அந்த நபித்தோழரிடம்,  உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா?  என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்:

புகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.

பெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.

உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(நூல்: முஸ்லிம் 3771)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்: புகாரி 5615, 5616)

இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.

இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டு விதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.

ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.

எனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.

ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அதைக் காரணம் காட்டி ஹஜ் பயணத்தைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹா என்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! கூலி உனக்கு உண்டுஎன்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2377, 2378.

நான் ஏழு வயதுடையவனாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள்

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 1858

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

சிறு வயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்டா? என்ற கேள்விக்கு, ஆம்! உனக்குக் கூலி உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறு வயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.

ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமானால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.

முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?

ஆரம்பமாக நாம் குறிப்பிட்ட வசனத்தில் அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்று கூறப்படுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்.

பிரயாணமே செய்ய முடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை.

இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கி விடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது போல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்து விட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.

ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவர் பலவீனப்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகி விட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகைகளையும் தராது.

முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டுமா?

முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகின்றது. பல லட்சம் மக்கள் கூடும் அந்தச் சமயத்தில் இளமையானவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்ய முடியும். முதிய வயதில் பல காரியங்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஹஜ் கடமையானவுடனேயே அதை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?

இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.

இஹ்ராம் கட்டுவது

ஒருவர் தொழ நாடினால் அவர் அல்லாஹு அக்பர்என்று தக்பீர் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாகக் கூறுகின்ற இந்த தக்பீர், தஹ்ரீமாஎன்று குறிப்பிடப்படுகின்றது.

தஹ்ரீமா என்றால் தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் தடுக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.

அல்லாஹு அக்பர்என்று கூறுவதற்குத் தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என மக்கள் விளங்கியுள்ளனர். நெஞ்சில் கை கட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக் கூடாது. அல்லாஹு அக்பர் என்று சொல்வதே தக்பீராகும்.

இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன்என்று கூற வேண்டும்.

உம்ராவை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க உம்ரதன்என்று கூற வேண்டும்.

இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2194, 2195

தல்பியா கூறுதல்

தல்பியாவின் வாசகம் வருமாறு:

அரபி1

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1549, 5915

அரபி2

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1550

தல்பியாவை உரத்துக் கூறுதல்

திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)

நூல்கள்: ஹாகிம், பைஹகீ

தல்பியாவை நிறுத்த வேண்டிய நேரம்

இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1544, 1683, 1687.

எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓத வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும்.

இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852.

இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838

தைக்கப்படாத ஆடைகள் கிடைக்கும் போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.

யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1841, 1843, 5804, 5853.

இஹ்ராமின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

இஹ்ராம் கட்டும் போது குளித்து விட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5928, 267, 5923.

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

  1. திருமணம்

இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 2522., 2524

  1. தாம்பத்தியம்

மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன் 2:197)

இந்த வசனம், இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்களில், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் தடை செய்கின்றது.

  1. வேட்டையாடுதல்

இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.

நம்பிக்கை கொண்டோரே! தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்? என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:94)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் 5:95)

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:96)

வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.

வேட்டையாடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டை யாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டை யாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடல் வாழ் உயிரினங்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடி விட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும்; அந்த முடிவுப் படி நடந்து கொள்ள வேண்டும்.

மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும்.

இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது நோன்பு நோற்க வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 1821, 1822, 1823, 2570, 2914, 5407, 491, 5492

இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப் பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக் கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது.

இதில் சில பிராணிகள் விலக்குப் பெறுகின்றன.

வெறி நாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1828, 3315

  1. தலையை மறைத்தல்

இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்கக் கூடாது. ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்க வேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்ல் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியாகூறியவராக எழுப்பப்படுவார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851

மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

நாங்கள் கடைசி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். மற்றொருவர் அவர்கள் மீது வெயில் படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.

அறிவிப்பவர்: உம்முல் ஹுஸைன் (ரலி)

நூல்: முஸ்லிம் 2287

வெயில் படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

  1. நறுமணம் பூசக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப் பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸில் அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் அறியலாம்.

  1. மயிர்களை நீக்கக் கூடாது

இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை மயிர்களை நீக்கக் கூடாது; நகங்களை வெட்டக் கூடாது; தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக் கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான் ஆம்என்றேன். அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவுபேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!என்றார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாதுஎன்பது நபிமொழி.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 3653, 3654

குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாதுஎன்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா என்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம் (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம் வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

துல்ஹுலைஃபாஎன்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜுஹ்ஃபாஎன்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கர்ன் அல்மனாஸில்என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.

யலம்லம் என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.

(அல்குர்ஆன் 2:197)

ஹஜ் ஒரு மாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான்.

ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர். (புகாரி)

எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும் ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குவதால், அது வரை தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிட வேண்டும்.

தவாஃப் அல்குதூம்

அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப்செய்ய வேண்டும். இந்த தவாஃப் தவாஃபுல் குதூம்என்று கூறப்படுகிறது.

குதூம்என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம்என்று கூறப்படுகிறது.

இந்த நாளில் தான் தவாஃப் அல்குதூம் செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.

ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.

மக்கா நகரின் புனிதம்

மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.

ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.

மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்யீம் என்ற இடம்

வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அளாஹ் என்ற இடம்

கிழக்கே பதினாறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜியிர்ரானா என்ற இடம்

வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதீ நக்லாஎன்ற இடம்

மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹுதைபியா எனும் இடம்

ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.

இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?

அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 104, 1832, 4295.

மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்

மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளிப்பது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திட வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்தினார்கள். தூ துவாஎன்ற இடத்தில் இரவில் தங்கி விட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நாபிவு

நூல்: புகாரி 1573

தவாஃப் அல்குதூம்செய்யும் முறை

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல்குதூம்செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1644, 1617

தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607

கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத்எனும் கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும் போது ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத்வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப்செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2213, 2214.

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது

ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1611

அந்தக் கல்லில் வாய் வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டு விட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாபிவு

நூல்கள்: புகாரி 1606

கையால் அதைத் தொட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் வாஸிலா (ரலி)

நூல்: புகாரி 1608

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவது போல் சைகை செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293

ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்து விடக் கூடாது.

நீ எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும் போது கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரலி)

நூல்: புகாரி 1597, 1605, 1610

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்ற வேண்டும்

கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரை வட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தில் மக்கா வாசிகள் கஃபாவைப் புணர் நிர்மானம் செய்த போது பொருள் வசதி போதாமல் செவ்வகமாகக் கட்டி விட்டனர்.

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாஃப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழு! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும், இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதீ 802

பார்க்க: புகாரி 126, 1583, 1584, 1585, 1586, 3368, 4484, 7243

கஃபாவின் உண்மையான வடிவம் செவ்வகமானது அல்ல என்பதையும், அரை வட்டமான பகுதியும் சேர்ந்ததே கஃபா என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

ருக்னுல் யமானியை முத்தமிடுதல்

கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் இரண்டு மூலைகள் தான் இருக்க வேண்டும் என்பதை சற்று முன்னர் அறிந்தோம். அரை வட்டமான பகுதிக்கு எதிர்ப்புறம் அமைந்த இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் யமானிஎனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 166, 1609

தவாஃபுக்காக உளூச் செய்தல்

ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.

கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

(புகாரி 1615, 1642)

இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.

புகாரி 337)

இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.

அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத் தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்என்று கூறினார்கள்.

இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.

மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.

ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.

தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை

ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே

ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்

தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும்.

நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 464, 1619, 1633, 4853

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்

தவாஃப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும் போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்படாவிட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில், எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

(பார்க்க திருக்குர்ஆன் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம் என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன்சூராவையும், குல் ஹுவல்லாஹு அஹத்சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

(பார்க்க புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)

ஸஃபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது

தவாஃபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸஃபாமர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும் என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தாஎன்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இதுபோல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) பதனுல் வாதீஎன்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.

ஏழு தடவை ஸஃயு செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸஃபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

துவங்கிய இடத்துக்கே திரும்பி வருவது தான் ஒரு தடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸஃபாவில் தான் முடிவுறும்; மர்வாவில் முடிவுறாது.

மர்வாவில் முடிந்ததிலிருந்து ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒருதடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவைஎன்றும் விளங்கலாம்.

மினாவுக்குச் செல்வது

துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும்.

தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள்.

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும்.

அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.

நூல்: முஸ்லிம் 2137

தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் மினாவில்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ரபீவு

நூல்: புகாரி 1653, 1763

எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856

இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.

மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656

அரஃபாவுக்குச் செல்வது

மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2137

மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியாகூறிக் கொண்டும் தக்பீர்கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.

நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அபீபக்ர்

நூல்: புகாரி 970, 1659

அரஃபா நாளில் நோன்பு நோற்பது

அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.

பார்க்க: புகாரி 1658, 1663, 1988, 1989, 5604, 5618, 5636

அரஃபாவில் தங்குவதன் அவசியம்

ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.

ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814

ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும், மறு நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்

அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம்.

அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138

அரஃபாவில் செய்ய வேண்டியவை

நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: நஸயீ 2961

அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை - செவிமடுக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா - உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

முஸ்தலிஃபாவுக்குச் செல்வது

அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிஃபாவுக்குச் சென்றதும் மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி விட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

மீண்டும் மினாவுக்குச் செல்வது

முஸ்தலிஃபாவில் பஜ்ரைத் தொழுததும் மஷ்அருல் ஹராம்என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.

(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.

ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1681, 1680

தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1678, 1677, 1856

மினாவில் செய்ய வேண்டியவை

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தாஎனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.

அதன் பிறகு ஜம்ரதுல் ஊலாஎனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன.

ஜம்ரதுல் அகபா

முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும் போது இடப்புறமாக ஜம்ரதுல் அகபாஎனும் இடம் அமைந்துள்ளது.

துல் ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும்.

(புகாரி 1753)

ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும்.

(புகாரி 1753)

ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.

(புகாரி 1753)

எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.

(முஸ்லிம் 2289)

நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடுஎன்பது போன்ற கூச்சல் இல்லை.

அறிவிப்பவர்: குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள்: நஸயீ 3011, திர்மிதீ 827, இப்னுமாஜா 3026.

இரவே மினாவுக்குச் சென்றவர்கள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரம் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 817.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர்என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) சற்று விரைவு படுத்தினார்கள். ஜம்ரதுல் அகபாவை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறு கற்களையே எறிந்தார்கள். பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137

முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லைஎன்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம்என்றேன். அப்போது அவர்கள், புறப்படுங்கள்என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களேஎன்று கேட்டேன். அதற்கவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்

நூல்: புகாரி 1679

தலை மழித்தல்

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுவார்.

தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1727

பெண்கள் தலை மழித்தல்

தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1694

கல்லெறிந்த பின்

நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1708

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசி விட்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 1754, 5922 முஸ்லிம் 2040

(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது சம்பந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்.)

பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். இன்னொருவர் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாஃப் செய்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் செய்து கொள்! தவறேதும் இல்லைஎன்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி 124, 1738, 83, 1736, 6665

மினாவில் பத்தாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களை முன் பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

தவாஃப் அல் இஃபாளா

பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். ஹஜ்ஜுடன் உம்ராவையும் ஒரே பயணத்தில் செய்பவர் கல்லெறிந்த பின் பலிப்பிராணியை பலியிட வேண்டும்.

இது தவாஃப் ஸியாரா எனவும் கூறப்படுகிறது.

இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2307

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் ஆரம்ப தவாஃபின் போது என்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051

பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)

அது போல் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.

இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.

கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாஃபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 319, 1562, 4408

பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். தவாஃப் அல் இஃபாளா செய்தவுடன் முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.

பெருநாள் தொழுகை கிடையாது

பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாகப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பாஎனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669

பத்தாம் நாளன்று மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: அபூதாவூத் 1670

அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.

கல்லெறியும் நாட்களும், இடங்களும்

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.

(அல்குர்ஆன் 2:203)

அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிட வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.

மினாவுக்குள் நுழையும் போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம்.

அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது.

ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது.

இம்மூன்றும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலாஎனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்எனவும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம்

நூல்: புகாரி 1751, 1753

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.

நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிவோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1746

இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.

மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1634, 1745

தவாஃபுல் விதாஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும்.

விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.

மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2350, 2351

தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம். ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை வரிசையாக இது வரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும் போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

தவாஃபின் போது பேசலாம்

தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராகஎன்றும் கூறினார்கள்.

புகாரி 1620, 6703

எந்த நேரமும் தொழலாம்; தவாஃப் செய்யலாம்

சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரமும் தொழலாம். எந்த நேரமும் தவாஃப் செய்யலாம்.

அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875

ஆண்களுடன், பெண்களும் தவாஃப் செய்வது

பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாஃப் செய்ததாக புகாரியில் (1618) காணப்படுகின்றது.

எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும்.

அதிகமதிகம் தொழ வேண்டும்

மக்காவில் - மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்.என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.

(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸாஎன நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996

அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும்

மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம்

பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா

மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ

ஆகிய மூன்று தவாஃப்களைப் பற்றி நாம் அறிந்தோம். இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம்.

இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம்

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.

இந்த நபி மொழியிலிருந்து எந்த நேரமும் தவாஃப் செய்யலாம் என்பதை நாம் அறியலாம்.

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்

  1. தமத்துவ்

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டலாம். அதில் முதல் வகை தமத்துவ் எனப்படும்.

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம்.

ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன் பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதற்கு தமத்துவ் என்று கூறப்படுகின்றது.

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க உம்ரதன்என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க ஹஜ்ஜன்என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

  1. கிரான்

கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை.

தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.

  1. இஃப்ராத்

இஃப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.

இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.

குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார். இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.

மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம், உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 317, 1562

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாஃப் செய்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்; பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 319

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீக்எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! உம்ரதுன் பீஹஜ்ஜதின்(ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்.) என்று கூறுவீராக என்று கூறினார்எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1534, 2337, 7343

ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை. ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து இதை நாம் அறியலாம்.

கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு கொண்டு செல்லாதவர்கள் தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின்வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.

மக்களெல்லாம் உம்ராவை முடித்து, இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வந்து விட்டேன். எனவே ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி 1568

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்

ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு ஏற்பட்டாலும் ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாஃப் செய்வதும் ஸஃபா, மர்வா இடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம்.

மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாஃபுல் குதூம்செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் நாம் முன்னர் கண்டோம்.

ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் இஹ்ராம் கட்டிய பெண்ணுக்கு இந்தத் தவாஃப் செய்வதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்பட்டால் இந்தத் தவாஃபை அவர்கள் விட்டு விட வேண்டும். இந்தத் தவாஃபை விட்டு விட்டதால் அவர்கள் உம்ராச் செய்தவர்களாக ஆக மாட்டார்கள். மாத விலக்கு உள்ள நிலையிலேயே ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாதவிலக்கு நிற்கும் வரை காத்திருந்து, எப்போது மாதவிலக்கு நிற்கிறதோ அப்போது தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்ற வேண்டும். பத்தாம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறு செய்து விட்டால் அவர்களுக்கு ஹஜ் நிறைவேறுகிறது.

உம்ரா அவர்களுக்குத் தவறி விட்டதால் அவர்கள் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தவாஃபுல் விதாஃ எனும் தவாஃப் இவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. புறப்பட எண்ணியுள்ள கடைசி நேரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்தத் தவாஃபுக்காக இவர்கள் பயணத்தைத் தள்ளிப் போடத் தேவையில்லை. அதைச் செய்யாமலேயே திட்டமிட்ட படி புறப்பட அனுமதி உண்டு. இவற்றுக்குரிய சான்றுகள் வருமாறு:

நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு! உம்ராவை விட்டு விடு!என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம்என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். இது அந்த உம்ராவுக்குப் பகரமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 319, 316, 317, 1556

நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்யாதே!என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 305, 1650

சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, நம்மை - நமது பயணத்தை - அவர் தடுத்து விட்டாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். தவாஃபுல் இஃபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டதுஎன்று நான் கூறினேன். அதற்கவர்கள், அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லைஎன்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1733, 328, 1757, 1772, 4401, 5329, 6157

உம்ரா என்றால் என்ன?

நி இஹ்ராம் கட்டி

நி கஃபாவில் தவாஃப் செய்து

நி இரண்டு ரக்அத்கள் தொழுது

நி ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது

ஆகியவையே உம்ராவாகும்.

அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம். ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

ரமளானில் உம்ரா

ரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1782, 1863

நான் எங்கிருந்து உம்ராச் செய்ய வேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நஜ்து வாசிகளுக்கு கர்ன்என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஜுபைர்

நூல்: புகாரி 1522

ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வர வேண்டும்என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம்என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம்.

தன்யீம் என்ற இடத்திலும் இஹ்ராம் கட்டலாம். அதை விட தூரமான இடத்துக்குச் சென்றும் இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டி வருகிறாரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.

தன்யீம் என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு! பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர்! என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1787

ஹாகிம், தாரகுத்னியில் உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் காணப்படுகின்றது.

உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

குர்பானி கொடுத்தல்

ஹஜஜுப் பெருநாள் தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம்.

கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப் பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பயிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பயிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 2:196)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2128, 2323

மினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.

பெருநாள் தினத்தன்று குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல் ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவரும் அதிலிருந்து சாப்பிடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்தி மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலீ (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலீ (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியைச் சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

எத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாகக் குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.

தாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம்.

அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே நம் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமணம் செய்துள்ளனர். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.

ஸம்ஸம் நீர்

மக்காவில் ஸம்ஸம் என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம் நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

திர்மிதீ 886

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தமது மகன்) பழ்லு அவர்களிடம், நீ உன் தாயாரிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வா என்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குடிக்கத் தருவீராக என்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதையே குடிக்கத் தருவீராக என்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கூறிவிட்டு, மற்றவர்கள் உங்களுடன் போட்டியிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறங்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன் எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1636

ஸம்ஸம் நீரைக் கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ஸம்ஸம் நீர் புனிதமானது என்பதையும் இதிலிருந்து அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ஸம்ஸம் நீரை வேண்டிப் பெற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்தும் இதனை நாம் அறியலாம்.

ஸம்ஸம் நீரை நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை.

இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது.

மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும் போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடப்படவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

பிறருக்காக ஹஜ் செய்தல்

ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஜுஹைனாஎனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீ தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6699

ஹஜ் கடமையானவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. மேலும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஹஜ் போலவே, தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்ட ஹஜ்ஜையும் அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து ஒருவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ் செய்யலாம் என்பதை நாம் அறிகிறோம். உன் தந்தையின் கடனை யார் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்? என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. பிள்ளைகள் தான் பெற்றோர் சார்பாக ஹஜ் செய்யலாம் என்பதை இந்தக் கேள்வியிலிருந்து விளங்க முடியும்.

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் இல்லை என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய் என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஒருவருடன் எந்த விதமான உறவும் இல்லாத அன்னியர்கள் அவருக்காக ஹஜ் செய்ய எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.

அல்லாஹ்வுக்காக இக்லாஸுடன் செய்ய வேண்டிய கடமை இன்று பத்லீ ஹஜ்என்ற பெயரால் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களிடம் சில மவ்லவிமார்கள் அவர்களுக்காக ஹஜ் செய்வதாக வசூலில் இறங்கியுள்ளனர். இவர்கள் உறவினராக இல்லாததுடன், இதில் இக்லாஸும் அடிபட்டுப் போகின்றது.

கொடுக்கப்படுகின்ற கூலிக்காகவே இது நிறைவேற்றப் படுகின்றது. இவை யாவும் ஏமாற்று வேலையாகும்.

ஒருவருக்கு வசதி இருந்து பயணம் செய்ய வாரிசுகள் இல்லாவிட்டால் அவரிடம் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவருக்காக அவரது உறவினர்கள் ஹஜ் செய்வதற்குத் தான் ஆதாரங்கள் காண முடிகின்றது. ஒருவருக்காக இன்னொருவர் உம்ராவை நிறைவேற்ற எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.

மதீனாவுக்குச் செல்வது

ஹஜ்ஜின் கிரியைகளை இது வரை நாம் விளங்கினோம். இவ்வாறு ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும்என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வதற்கும் ஹஜ்ஜுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை.

ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று மினாவில் மூன்று நாட்கள் கல்லெறிந்து முடிப்பதுடன் ஹஜ் நிறைவு பெறுகிறது. அந்த மூன்று நாட்களில் கூட இரண்டு நாட்களோடு விரைந்து ஒருவர் புறப்பட்டு தாயகம் திரும்பி விட்டால் அவரது ஹஜ்ஜில் எந்தக் குறைவும் ஏற்படாது என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்ட மூன்று நாட்களில் ஒரு நாளைக் குறைத்துக் கொண்டு புறப்பட இறைவன் அனுமதிக்கும் போது, அதன் பிறகு மதீனா செல்வது எப்படி ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட முடியும்? இதை ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் ஓரளவு நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.

வணக்கமாகக் கருதி அதிக நன்மைகளை நாடி மூன்றே மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதி உண்டு; இது சம்பந்தமான ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.

ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் ஒருவர் மதீனாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்பவர்களின் குறிக்கோள் ஸியாரத்தாக இருக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளி வாசல் ஒன்று அங்கே உள்ளது. பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது. அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.

சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஸியாரத் செய்யலாம்.

மீண்டும் ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஸியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதே நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் மதீனா வந்து விட்டதால் வந்த இடத்தில் ஸியாரத்தையும் செய்கிறோம். ஸியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஸியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஸியாரத் செய்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எச்சரிக்கைகள் வருமாறு:

தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத, கிருத்தவர்களை அல்லாஹ் லஃனத் செய்கிறான்.

இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் லஃனதுக்குரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸஜ்தாச் செய்வது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும்.

எனது கப்ரைத் திருவிழா நடக்கும் இடமாக - திருநாளாக - ஆக்காதீர்கள் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவிக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஸியாரத் செய்ய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை மட்டும் சிறப்பித்துக் கூறும் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதை முன் குறிப்பிட்டோம். பொதுவாக ஸியாரத் செய்வது பற்றிக் கூறும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும் ஸியாரத் செய்யப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டோம்.

இது போன்ற தவறுகள் நடக்காமல் நபிவழியில் அமைய வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account