Sidebar

25
Wed, Dec
31 New Articles

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

ஹதீஸ் மறுப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

39. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை - திசையை - முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தத் திசை மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றி 2:142-145 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

சுமார் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அது மாற்றப்பட்டு கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது இதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

இவ்வசனம் நேரடியாகச் சொல்லும் செய்தி இது தான்.

ஆனாலும் திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூல ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இஸ்லாத்தின் மூல ஆதாரமாகும் என்ற கொள்கை விளக்கமும் இந்தச் செய்தியில் உள்ளடங்கியுள்ளது. அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

"ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் முஸ்லிம்கள் ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்'' என்று இந்த வசனம் கூறுகின்றது.

முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது வந்தனர் என்பதும், இப்போது அந்தக் கிப்லாவை விட்டு விட்டு வேறு கிப்லாவுக்கு மாறி விட்டனர் என்பதும், அவ்வாறு மாறியதை அன்றைய அறிவிலிகள் விமர்சித்தனர் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.

இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் இக்கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு 144வது வசனத்தைப் பார்ப்போம்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். (2:144)

முஸ்லிம்கள் முன்னர் எந்தக் கிப்லாவை நோக்கித் தொழுதார்களோ அந்தக் கிப்லாவை அல்லாஹ் மாற்ற வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆசையாகவும், விருப்பமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே கிப்லாவை மாற்றும் கட்டளையை எதிர்பார்த்து அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிப்லாவை விரும்பினார்களோ அந்தக் கிப்லாவையே நோக்குமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான் என்ற விபரங்கள் இந்த வசனத்தில் இருந்து தெரிய வருகின்றன.

முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுததும், இப்போது வேறு ஒரு கிப்லாவுக்கு மாறியதும் ஆகிய இரண்டுமே அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கிப்லா மாற்றப்பட்ட கட்டளை 144வது வசனத்தில் உள்ளது. ஆனால் முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்களே அதற்கான கட்டளை திருக்குர்ஆனில் காணப்படவில்லை.

முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்கள் என்ற தகவல் தான் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

முன்னர் நோக்கிய கிப்லா பற்றிய கட்டளை திருக்குர்ஆனில் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அந்தக் கட்டளையைப் பிறப்பித்திருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக அந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்களா? நிச்சயமாக இருக்க முடியாது. ஏனெனில் முந்தைய கிப்லாவையும் நாமே நிர்ணயித்திருந்தோம் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். (2:143)

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முந்தைய கிப்லாவை நிர்ணயம் செய்திருந்தால் சுயமாக அவர்களே அதை மாற்றியிருப்பார்கள். மாற்றுவதற்கான கட்டளை இறைவனிடமிருந்து வருமா என்று அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கத் தேவை இல்லை.

முந்தைய கிப்லாவை நோக்குமாறு இறைவன் கட்டளை பிறப்பித்தான் என்பதும் உண்மை. அக்கட்டளை திருக்குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை. இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றாவது உண்மை, இறைவனின் கட்டளைகள் யாவும் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைத் தூதர்களின் உள்ளங்களில் ஜிப்ரீல் எனும் வானவரின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான். அதுவும் இறைக்கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.

இந்த விபரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது திருக்குர்ஆன் அல்லாத இன்னொரு வகையான வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய கிப்லா பற்றிய கட்டளை வந்திருக்கிறது என்பதும், அதன் அடிப்படையிலேயே அவர்கள் முந்தைய கிப்லாவை நோக்கியுள்ளார்கள் என்பதும், இதனாலேயே புதிய கிப்லா விஷயத்தில் அல்லாஹ்வின் மறு கட்டளைக்குக் காத்திருந்தார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

திருக்குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ உண்டு என்பதற்கு இது சான்றாக உள்ளது.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர், முதல் கிப்லாவை நோக்கும் கட்டளையைத் திருக்குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

மேலும் முந்தையை கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கியது எனது கட்டளைப்படியே என்று 143வது வசனத்தில் அல்லாஹ் கூறுவது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அனைத்துக் கட்டளைகளையும் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் மட்டும் கூறாமல் சில கட்டளைகளைக் திருக்குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் ஏன் கூற வேண்டும்? என்று சிலருக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு இவ்வசனத் தொடரிலேயே ஆணித்தரமாக அல்லாஹ் பதிலளிக்கிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.

எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள்! திருக்குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறுபவர்களுக்காகவே இவ்வசனம் இறங்கியது போல் உள்ளது.

முந்தையை கிப்லாவை நோக்கும் கட்டளை திருக்குர்ஆனில் இல்லை தான். ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம். திருக்குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேசமாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்தோம் என இறைவன் இவர்களுக்குப் பதிலளிப்பது போல் இவ்வசனம் அமைந்துள்ளது.

அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையைத் திருக்குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத்தூதர் வழியாக அல்லாஹ் பிறப்பித்துள்ளான். இறைத்தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

எனவே திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account