Sidebar

19
Sun, May
26 New Articles

350. வஹீ மூன்று வகைப்படும்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

350. வஹீ மூன்று வகைப்படும்

இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது.

* வஹீயின் மூலம் பேசுவது

* திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது

* தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.

இரண்டாவதாகக் கூறப்படும் திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுதல் என்பதற்கு மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் நேருக்குநேர் உரையாடியதை உதாரணமாகக் கூறலாம்.

மூஸா (அலை) அவர்கள் இறைவனை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் கூறியதைத் தமது செவிகளால் கேட்டார்கள் என்பதை 4:164, 7:143,144, 19:51,52, 28:30, 20:11,12,13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஒரு தூதரை அனுப்பி அவர் வழியாக இறைவன் பேசுவான் என்பது, ஜிப்ரீல் போன்ற வானவர்கள் மூலம் இறைத்தூதர்களுக்குச் செய்தி அறிவிப்பதாகும். இதை 2:97, 3:39, 3:42, 3:45, 11:69, 11:77, 15:52,53, 15:61,62, 16:2, 16:102, 19:19, 20:21, 22:75, 26:193, 29:31, 51:28, 53:56, 81:19 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம். திருக்குர்ஆனும் இந்த வகையான இறைச் செய்திதான்.

மனிதர்களுடன் அல்லாஹ் பேசுவதற்குரிய மூன்று வழிகளில் நேரடியாகப் பேசுவது என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. வானவர்கள் வழியாகச் சொல்லி அனுப்புவதன் பொருளும் நமக்கு விளங்குகிறது. வஹீயின் மூலம் பேசுதல் என்ற மூன்றாவது வகை என்பது என்ன? இதைத் தான் விளக்க வேண்டியுள்ளது.

பொதுவாக வஹீ எனும் சொல் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து வகைச் செய்திகளையும் குறிக்கும் என்றாலும் இவ்வசனத்தில் அவ்வாறு பொதுவான கருத்தைக் கொடுக்க முடியாது.

இரண்டு வகையான வஹீயை வேறு வார்த்தைகளால் கூறிவிட்டு மூன்றாவதாக "வஹீயின் மூலம்'' எனக் கூறப்பட்டுள்ளதால் அவ்விரண்டு வகையிலும் சேராத மற்றொரு வகை வஹீயை மட்டுமே இது குறிக்க முடியும். இவ்விரு வகை தவிர ஏதேனும் வஹீ இருக்கிறதா என்றால் "தான் கூற விரும்புவதைத் தனது தூதரின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தல்'' என்பது தான் அந்த மூன்றாவது வஹீ.

வஹீயில் இப்படி ஒரு வகை உள்ளது என்பதைத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

தேனீக்கள் எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து விடும் என்பதைப் பற்றி திருக்குர்ஆன் பேசும்போது 16:68 வசனத்தில் "தேனீக்களுக்கு உமது இறைவன் வஹீ அறிவித்தான்'' என்று கூறுகிறது.

அதாவது, தான் கூற விரும்பும் செய்தியைத் தேனீக்களுக்கு உள்ளுணர்வாக இறைவன் ஏற்படுத்தினான் என இவ்வசனம் கூறுகிறது. இது போன்ற வஹீ மூலமும் இறைவன் தனது தூதர்களிடம் பேசுவான். இது மூன்றாவது வகையாகும்.

இந்த மூன்று வகையான வஹீயையும் நம்புபவர் தான் உண்மையில் திருக்குர்ஆனை நம்பியவராவார்.

இதை விடுத்து, திருக்குர்ஆன் மட்டும் போதும் என யாரேனும் வாதிட்டால் அவர்கள் மூன்று வகைகளில் வானவர் வழியாக வந்த ஒரு வகையை மட்டுமே நம்புகிறார்கள். மற்ற இரு வகைகளை மறுக்கிறார்கள். அதாவது இறைவன் நேருக்கு நேராகப் பேசி அருளிய செய்தியை மறுக்கின்றனர். உள்ளுணர்வு மூலம் இறைவன் அறிவிக்கும் செய்தியையும் மறுக்கின்றனர்.

மூன்று வகையான இறைச் செய்திகள் உள்ளதாகக் கூறும் இந்த வசனத்தையும் மறுக்கிறார்கள்.

வானவர்கள் வழியாக திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளன. அவற்றையும் இவர்கள் மறுத்தவர்களாகின்றனர்.

இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையில் பெரும் பகுதியை இவர்கள் மறுக்கின்றனர். ஹதீஸ்களைப் பின்பற்றுவோர் தான் அல்லாஹ் அருளியதை முழுமையாக நம்புகின்றனர்.

மூஸா நபி, ஈஸா நபி ஆகியோரின் தாயார்களுக்கும் அல்லாஹ் வஹீ அறிவித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 20:39, 28:7)

இதை ஆதாரமாகக் கொண்டு இறைத்தூதர்கள் அல்லாதவர்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து வஹீ வரும் என்று கருதலாமா? இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் சமுதாய மக்களிடம் அல்லாஹ் பேசுவானா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இறைத்தூதர் அல்லாதவர்களிடம் அல்லாஹ் உரையாடிய நிகழ்வுகள் நபிகள் நாயகத்தின் மூலம் வஹீக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு முன்னர் நடந்தவையாகும்.

முந்தைய சமுதாயங்களில் இறைவன் இந்த வழியில் சிலரிடம் பேசியுள்ளான். ஆனால் இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேச மாட்டான்.

இஸ்லாம் நிறைவு பெற்று இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததோடு இந்த வஹீ நின்று விட்டது. நுபுவ்வத் நிறைவு பெற்று விட்டதால் இனிமேல் வஹீ என்ற இறைச்செய்தி யாருக்கும் வரவே வராது. அதிலும் மார்க்க சம்பந்தமான காரியங்களிலும், சட்ட சம்பந்தமான காரியங்களிலும் இறைவன் என்னிடத்தில் உரையாடினான், அசரீரியில் சொன்னான் என்று யார் கூறினாலும் அது பொய்யாகும். காரணம் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது.

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' என்று இறைவன் குர்ஆனில் கூறுவதன் மூலம் இனி எவரிடமும் அவன் பேச மாட்டான் என்பதை உணர்த்தியுள்ளான். மார்க்க சம்பந்தமான சட்டதிட்டங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் யாரிடமும் பேச மாட்டேன் என்று இறைவன் முடிவு செய்து விட்டான் என்பதை இதில் இருந்து அறியலாம்.

நபித்துவமும் சகல விதமான வஹீயும் நின்று விட்டது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்காவது வஹீ வர வேண்டும் என்றால் நபித் தோழர்களுக்குத் தான் வர வேண்டும். ஆனால் அவர்களே வஹீ வரவில்லை என்பதை அறிவித்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலீ) அவர்கள் உமர் (ரலீ) அவர்களை நோக்கி, "நாம் இருவரும் உம்மு அய்மன் (ரலீ) அம்மையாரைச் சந்தித்து வருவோம்'' என்றார்கள். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அம்மையாரை அடிக்கடி சந்தித்து வருபவர்களாக இருந்தார்கள். அவரை அவ்விருவரும் சந்திக்கச் சென்ற போது அந்தப் பெண் அவ்விருவரையும் பார்த்து அழத் துவங்கினார்கள். அவ்விருவரும் "அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் தானே கிடைக்கும் ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?'' என்றார்கள். அதற்கு அவர் "அல்லாஹ்விடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நன்மையே கிடைக்கும் என்பதை நான் அறிவேன். நான் அது கிடைக்காது என்பதற்காக அழவில்லை. என்றாலும் வானிலிருந்து வரும் வல்லவன் அல்லாஹ்வின் வஹீ (இறைச்செய்தி) நின்று விட்டதே என்பதற்காக அழுகிறேன்''என்று சொன்னார்கள். அவ்வம்மையார் அவ்விருவரையும் அழ வைத்து விட்டார்கள். எனவே அவரோடு அவ்விருவரும் அழத் துவங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலீ)

நூல் : முஸ்லிம் 4492

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் (சில சந்தர்ப்பங்களில்) மக்கள் வஹீயின் வாயிலாக தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடித்துத் தண்டிப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி, கவுரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கில் எடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறோரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடன் இருக்க மாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே என்று உமர் (ரலி) கூறினார்கள்.

நூல் : புகாரீ 2641

மேலும் முந்தைய சமுதாயத்தில் இறைவன் புறத்தில் இருந்து செய்திகள் அறிவிக்கப்படுவோர் இருந்துள்ளனர். இந்த சமுதாயத்தில் அது கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 3469, 3689

இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்பது உறுதியாகிறது.

எனவே மூஸா நபியின் தாயாருக்கு அறிவித்தது போல் முந்தைய சமுதாயத்தில் சிலருக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் முஹம்மது நபி அவர்களின் சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்கள் கிடையாது என ஏற்படுத்தி அல்லாஹ் மாபெரும் அருள் செய்து விட்டான்.

இந்தச் சமுதாயத்தில் இது போன்ற நிலை இருந்தால் பொய்யர்கள் தங்களுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாகக் கூறி மக்களின் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவித்திருப்பார்கள்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account