6. அல்லாஹ் இயலாதவனா?
இவ்வசனங்களை (2:15, 2:88, 2:89, 2:152, 2:158, 2:159, 2:161, 3:87, 4:46, 4:47, 4:52, 4:93, 4:118, 4:147, 5:13, 5:60, 7:44, 9:68, 9:79, 11:18, 24:7, 33:57, 33:64, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22) மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வை பலவீனனாகக் காட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம்.
அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் 'ஆகு' எனக் கூறினால் உடனே ஆகி விடும்.
ஆனால் "அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்", "அல்லாஹ் கேலி செய்கிறான்", "அல்லாஹ் ஏமாற்றுகிறான்" என்பன போன்ற வாக்கியங்கள் இவ்வசனங்களில் காணப்படுகின்றன.
ஏமாற்றுதல், கேலிசெய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். 'ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி செய்யத் தேவை இல்லை எனும்போது இறைவன் ஏன் இப்படிக் கூற வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்.
பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளிலும் பயன்படுத்துவதைக் காணலாம்.
உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்'' என்று நாம் கூறும்போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் தான் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது.
"அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நீ செய்தால் நான் செய்வேன்'' என்ற தோரணையில் அமைந்த, இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்'' "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்'' என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நமக்கு நன்றி செலுத்தவும் தேவையில்லை. எனவே அதற்கான பலனைத் தருவான் என்று இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்'' என்றால் "தண்டிக்கிறான்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.
6.அல்லாஹ் இயலாதவனா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode