Sidebar

16
Thu, Jan
34 New Articles

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்?

திருடுவோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் (5:38) சொல்லப்படுகிறது. மணிக்கட்டு வரைக்குமா? முழங்கை வரைக்குமா? தோள்புஜம் வரைக்குமா? என்று விளக்கப்படவில்லை.

ஆனாலும் கை என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது என்று சிந்தித்து அறிய முடியும்.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரை உள்ள பகுதியைக் குறிக்கும் என்றாலும் எல்லா மொழிகளிலும், மனிதர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக கை என்று சொன்னால் மணிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிக்கவே பயன்படுத்துகின்றனர். வேறு அர்த்தம் தரும் வகையில் வாசக அமைப்பு இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் மணிக்கட்டு வரை உள்ள பகுதியைத் தான் கை எனக் கூறுகின்றனர்.

கையால் பிடி, கையால் எடு, கை கழுவு, கையால் முஸாபஹா செய் என்றெல்லாம் சொன்னால் முழுக்கை என்று நாம் புரிந்து கொள்வதில்லை. மணிக்கட்டு வரை உள்ள பகுதி என்றே புரிந்து கொள்கிறோம்.

ஊசி போட கையை நீட்டு என்று மருத்துவர் கூறினால் ஊசி எங்கே போடுவார்கள் என்பது நமக்குத் தெரிந்துள்ளதால் முழுக்கையை நீட்டுகிறோம்.

கையைக் கட்டிக் கொள் என்று கூறினால் கட்டிக் கொள் என்ற வார்த்தை இணைந்துள்ளதன் காரணமாக முழங்கை வரை கட்டிக் கொள்கிறோம்.

இப்படியெல்லாம் சொல்லாமல் வெறும் கை என்று சொன்னால் மணிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிப்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகிறோம். மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆன் அருளப்பட்டது.

கையைக் கழுவிவிட்டு சாப்பிடு என்று கூறினால் தோள் புஜம் வரை கழுவ வேண்டும் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.

கையை மணிக்கட்டு வரை வெட்டுங்கள் என்று சொல்லா விட்டாலும் வேறு அர்த்தம் கொள்ளும் வகையில் வாசக அமைப்பு இல்லாததால் இதன் அர்த்தம் மணிக்கட்டு வரை என்பது தான்.

இதைப் பின்வரும் வசனத்தைச் சிந்தித்துப் பார்த்து அறியலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

இவ்வசனத்தில் கைகள் என்று இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று உளூச் செய்வது பற்றியும், மற்றொன்று தயம்மம் செய்வது பற்றியும் பேசுகிறது.

உளூச் செய்வதைப் பற்றி பேசும் போது முழங்கைகள் வரை கழுவுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் தயம்மும் செய்வதைப் பற்றி பேசும் போது எந்த அளவும் கூறாமல் கைகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் போது தரையில் உள்ளங்கையால் அடித்து முகத்தில் தடவிக் கொண்டார்கள். பின்னர் மணிக்கட்டு வரை கைகளில் தடவிக் கொண்டார்கள்.

பார்க்க : புகாரீ 342, 343, 339, 338

தயம்மம் செய்யும் போது முழங்கை வரை அவர்கள் தடவவில்லை. பொதுவாக கை என்று கூறப்பட்டதால் மணிக்கட்டு வரை என்று செயல் விளக்கம் தந்துள்ளனர்.

பொதுவாக கை என்று சொல்லப்பட்டால் மணிக்கட்டு வரை என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மணிக் கட்டு வரைதான் கைகளை வெட்ட வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account