Sidebar

25
Thu, Apr
7 New Articles

438. ஜம்ஜம் நீரூற்று

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

438. ஜம்ஜம் நீரூற்று

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும்.

மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல மக்காவில் இருக்கலாம். இனிமேல் அவை கண்டுபிடிக்கப்படலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீலையும் மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்தபோது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும். அந்த இடம் தான் பின்னர் ஊராக வளர்ந்த மக்கா நகராகும்.

இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாகவும், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாகவும் இருக்கிறது.

இந்தக் கிணறு 18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்டதாகும்.

இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.

இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும், ரமளான் மாதத்திலும் தினமும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 30 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

மக்காவில் மட்டுமின்றி மதீனாவின் புனிதப்பள்ளியிலும் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீருக்காக ஜம்ஜம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது.

பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆழம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ தூர்ந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர்நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

பொதுவாக மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுப்பவை. இதை ஜம்ஜம் நீரை அருந்தியவர்கள் அனுபவத்தில் உணரலாம்.

மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.

'அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது' என்று பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது.

மற்ற அற்புதங்கள் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 30 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடிநீராகப் பயன்படுகிறது. பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளது. எனவே இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account