394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?
இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் மூஸா நபியைத் தொல்லைப்படுத்தியதில் இருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது.
மூஸா நபி குறித்து அவரது சமுதாயம் எதைக் கூறி தொல்லைப்படுத்தினார்கள்?
புகாரியில் பின்வரும் ஹதீஸில் கூறப்படுவது தான் காரணம் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர்.
மூஸா நபியின் சமுதாயத்தினர் வெட்ட வெளியில் நிர்வாணமாகக் குளிப்பது வழக்கம். ஆனால் மூஸா நபியவர்கள் தனியாக ஒதுங்கி யாரும் பார்க்காத விதத்தில் குளிப்பார்கள். இதன் காரணமாக மூஸா நபிக்கு விரை வீக்கம் இருப்பதாக அவரது சமுதாயத்தினர் பேசிக் கொண்டனர். ஒரு நாள் மூஸா நபியவர்கள் தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளித்தனர். அப்போது அந்தக் கல் அவர்களது ஆடையுடன் ஓடியது. "என் ஆடை, என் ஆடை'' எனக் கூறிக் கொண்டே மூஸா நபியவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்தனர். அப்போது மூஸா நபியவர்களுக்கு விரை வீக்கம் இல்லை என்று அவர்களின் சமுதாயத்தினர் விளங்கிக் கொண்டனர். அதைத் தான் இறைவன் குறிப்பிடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 278, 3404, 3407, 3152 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
இது பல காரணங்களால் ஏற்புடையதாக இல்லை. இந்தக் காரணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்றே கருத முடிகிறது.
மூஸா நபிக்கு விரை வீக்கம் இருந்ததாகவும், மக்கள் பார்க்காத வகையில் மூஸா நபி குளிப்பார்கள் என மூஸா நபியின் சமுதாயத்தினர் கேலி பேசியதாகவும் மூஸா நபியை நிர்வாணமாகக் குளிக்க வைத்து நிர்வாணமாக ஓட வைத்து மக்கள் பார்க்கும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
ஒரு மனிதருக்கு விரை வீக்கம் இருப்பது அவரது தகுதியைக் குறைக்குமா?
இறைத்தூதர்களின் நாணயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் இறைத்தூதர்களின் பிரச்சாரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் குறைகள் பிரச்சாரப் பணியைப் பாதிக்காது. எத்தனையோ இறைத் தூதர்களுக்கு பலவிதமான நோய்கள் இருந்துள்ளன. இதே மூஸா நபிக்கு தெளிவாகப் பேச முடியாத குறை இருந்துள்ளது. அதனால் அவர்களின் தூதுப்பணிக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டதில்லை.
இறைத்தூதர்களின் நன்னடத்தைக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் தூதுப்பணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே பிரச்சாரத்தைப் பாதிக்கும் பழியைத் தான் அவர்கள் சுமத்தி இருப்பார்கள்.
இதை இந்த வசனத்தில் இருந்தே நான் அறிந்து கொள்ள முடியும்.
நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.
என்று இவ்வசனம் கூறுகிறது.
மூஸா நபி மீது இஸ்ரவேலர்கள் சுமத்திய பழியில் இருந்து அவரை விடுவித்தான் எனக் கூறி விட்டு அவர் அல்லாஹ்விடம் தகுதி உடையவராக இருந்தார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
மூஸா நபியின் தகுதியைக் குறைக்கும் பழியைத் தான் அவரது சமுதாயத்தினர் சுமத்தி உள்ளனர். அந்தப் பழியைத் தான் அல்லாஹ் துடைத்து எறிந்தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
மல ஜலம் கழித்தல் தாம்பத்தியம் செய்தல் போன்ற தனிமையில் செய்யும் காரியங்கள் தவிர மற்ற சமயங்களில் நன்மக்கள் நிர்வாணமாக இருக்க மாட்டார்கள். அது மக்களால் இழிவாகப் பார்க்கப்படும். மனிதர்களில் மேலானவர்களான நபிமார்கள் ஆடையைக் களைந்து ஒரு கல்லில் வைத்து விட்டு நிர்வாணமாகக் குளிப்பார்கள் என்று கருத முடியாது.
ஆதம் ஹவ்வா மட்டுமே இருந்த சொர்க்கத்தில் அவர்கள் தடுக்கப்பட்ட கனியைச் சாப்பிட்ட பின் அவர்களுக்கு பாலுணர்வைப் புரிந்து கொள்ளும் உணர்வு ஏற்பட்டது. வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் இருந்தும் அவசரமாக மரங்களின் இலைகள் மூலம் தங்களின் நிர்வாணத்தை இருவரும் மறைத்துக் கொண்டார்கள். இதை 7:22, 20:121 ஆகிய வசனங்களில் அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான்.
நிர்வாணத்தை மறைத்துக் கொள்வது தான் நல்ல மனிதர்களின் பண்பாக இருக்கும் போது மூஸா நபி அவர்கள் நிர்வாணமாகக் குளித்தார்கள் என்பது அவர்களின் தகுதியைக் குறைப்பதாக உள்ளது.
அப்படியே நிர்வாணமாகக் குளித்தாலும் ஆடையை இழுத்துக் கொண்டு ஒரு கல்லை ஓடச் செய்து ஊர் மக்களுக்கு மூஸா நபியின் நிர்வாணத்தை அல்லாஹ் காட்டினான் என்பதும் முழு நிர்வாணமாக அவரை மக்கள் பார்த்தார்கள் என்பதும் மூஸா நபியை மேலும் இழிவு படுத்துவதாக உள்ளது.
இந்தக் காரணத்தாலும் இந்த ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
மேலும் இவ்வசனம் மூஸா நபியின் சம்பவத்தைச் சொல்வதற்காக அருளப்படவில்லை. மூஸா நபிக்கு அவரது சமுதாயம் தொல்லை கொடுத்தது உங்கள் நபிக்கு நீங்கள் தொல்லை கொடுக்காதீர்கள் என்று நபித்தோழர்களுக்கு அறிவுரை கூறுவதற்காகவே இது அருளப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) கனீமத்தை பங்கு வைக்கும் போது இது நீதியான பங்கீடு இல்லை என்று ஒருவர் எதிர்க் கேள்வி கேட்ட செய்தி புகாரி 3150 வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
ஹுனைன் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும் போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும் என்று கூறினார். நான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன் என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளா விட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 3150
இந்த ஹதீஸில் மூஸா நபி இதை விட அதிகம் தொல்லை கொடுக்கப்பட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மூஸா நபி தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது இது போன்ற காரியங்களாகத் தான் இருக்க முடியுமே தவிர விரை வீக்கம் போன்ற உடல் குறைபாடாக இருக்க முடியாது.
394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode