364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)யின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும்.
இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் உதவிகள் செய்து வந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டது அவதூறு தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின் "இனிமேல் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தார்கள். தமது மகள் மீது களங்கம் சுமத்தியவர்களுக்கு உதவ அவர்களின் உள்ளம் இடம் தரவில்லை. (பார்க்க: புகாரீ 2661, 4141, 4750, 6679)
ஆனால் இவ்வசனத்தில் (24:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தியவர்களுக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்திருந்தாலும் அதை அமுல்படுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
இது அல்லாஹ்வின் வேதமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கியதாக இருந்தால் தனது மனைவியின் மீது அவதூறு சொல்லி, பல நாட்கள் நிம்மதியைக் குலைத்து, மன உளைச்சலை ஏற்படுத்திய ஒருவருக்காகத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று ஒரு வசனத்தைக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் அபூபக்ர் அவர்கள் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்று சொன்னதைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பார்கள்.
திருக்குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வேதமாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு இவ்வசனமும் தர்க்க ரீதியான சான்றாக அமைந்துள்ளது.
364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode