181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்
இவ்வசனங்களில் (7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18) முஸ்லிமல்லாத ஒரு அரசனிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மூஸா நபியவர்கள் உரிமைக் குரல் எழுப்பிய விபரம் சொல்லப்பட்டுள்ளது.
மூஸா நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் பணியுடன் மற்றொரு பணிக்காகவும் அனுப்பப்பட்டார்கள்.
அன்றைய ஆளும் வர்க்கமான ஃபிர்அவ்னின் இனத்தவர், இஸ்ரவேல் சமுதாயத்தின் மீது அடக்குமுறை புரிந்தனர். அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தினர்.
மூஸா நபியவர்கள், ஃபிர்அவ்னுக்கு ஏகத்துவத்தைச் சொன்னதோடு இஸ்ரவேல் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார்கள். "அவர்களை என்னோடு அனுப்பி விடு! அவர்களைக் கொடுமைப்படுத்தாதே'' என்று அவனிடம் கோரிக்கை எழுப்பினார்கள். இவ்வசனங்களில் அதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பதும், ஒடுக்கப்பட்ட இனத்துக்காகக் குரல் எழுப்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக உள்ளன.
இஸ்லாமிய ஆட்சி நடக்காத நாடுகளில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டாலோ, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, அவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டாலோ அந்த ஆட்சியாளரிடம் உரிமைக் குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும் என்பதற்கு மூஸா நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.
181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode