Sidebar

20
Sat, Apr
0 New Articles

சவூதியில் பீ.ஜே. நூல்களுக்குத் தடையா?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சவூதியில் பீ.ஜே. நூல்களுக்குத் தடையா?

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும், பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்குத் தடை!

பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!

சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!

சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!

என்றெல்லாம் சில மதனிகளும், பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும் போது நாம் தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இதை நாம் பகிரங்கப்படுத்தவில்லை.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போன ரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றது ஒரு கும்பல்.

இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர்.

அரபு நாடுகள் தான் அத்தாரிட்டியா?

இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக எனது கருத்துக்கள் தவறு என்பது நிரூபணமாகி விடுமா?

சவூதிக்காரர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியா?

நான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோ, தவறானதாகவோ உள்ளது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

நமது கருத்துக்களை எதிர்கொள்ள அவர்களிடம் சரக்கு இல்லாததால் இதுவே இவர்களுக்குப் பெரிய ஆதாரமாகத் தெரிகிறது.

சத்தியத்தைச் சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இவர்கள் ஆசைப்படுவது போல் சவூதி என்ன? ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடை போட்டாலும் நமது பயணம் நின்று விடாது. இக்கொள்கையை நம்பியவர்களின் மன உறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் அறிவித்துக் கொள்கிறேன்.

கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எப்போது என்னைப் பாதிக்கும்?

சவூதியிலோ, மற்ற அரபு நாடுகளிலோ நான் ஊதியம் பெற்று அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப் பார்வை என்னைப் பாதிக்கும்.

எந்த ஒரு காலகட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ, அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை - நூல்களை- வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

ஜாக் அமைப்பில் பணியாற்றிய அந்தச் சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும் உலமாக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள் மதனிகளாக இல்லாத சில தாயிகளுக்கு சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் நான் எதையும் பெற விரும்பவில்லை என்று மறுத்து விட்டேன். எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை.

அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அது என்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவூதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை.

இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.

செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர சவூதி அரபு நாட்டுப் பனத்துக்கு பல்லிளிக்கவில்லை.

அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது)

செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.

இதை சுய தம்பட்டம் அடிப்பதற்காகக் குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை வித்தித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களைக் காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

தடை பூச்சாண்டி ஏன்?

இந்தத் தடை பூச்சாண்டி ஏன் என்றால் அதற்கும் காரணம் உண்டு. அரபு நாடுகளுக்குச் சென்ற தமிழ் கூறும் முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத்வாதிகளாக மாறி வருகிறார்கள். தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநல நோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும் தஃவா சென்டர்களில் முக்கிய மொழிகளுக்கு அம்மொழி பேசும் பிரச்சாரகர்களை நியமித்திருக்கிறார்கள். அது போல் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச் செய்வதில்லை.

இவர்கள் உப்புக்குச் சப்பாக நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் மக்கள் செல்வதில்லை. நம்மைக் காட்டி பணம் கறக்கிறார்கள் என்று மக்கள் நம்புவதால் இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.

அதே சமயம் தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ் மொழியில் மட்டும் மார்க்கத்தை அறிந்த சிலர் மூலம் நடத்தும் பிரச்சார் நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள்.

படியளக்கும் எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவது, என் மீது வெறுப்பை விதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள் பிரச்சாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள்.

பாவம்! இவர்கள் மார்க்கம் பேசாமல் தனி நபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.

அடுத்து என்ன செய்யலாம்?

சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அங்கே கூட்டமாகக் கூடிப் பேசினாலே பிரச்சனையாகி விடும். பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால் ஆகா தடை செய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்கு பிரச்சனை வருமோ என்று தவ்ஹீத் சகொதரர்களுக்கு பயம் வரும். இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளை முடக்கி விடுவார்கள். களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள், பயந்து போய் முடங்கி விடுவார்கள். இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.

இந்தச் சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளற முடியும்.

அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே இந்த தரம் கெட்ட பொய்ப் பிரச்சாரம்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டமோ, வேறு விதமாக இருந்தது. யார் இப்படிப் பரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானது. இந்த இழி செயல் செய்த சில போலி உலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஆட்குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள். பாக்கவிகளும், அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.

இவர்களின் மதனி செல்வாக்கோ, அரபு மொழிப் புலமையோ, ஜாலியாத் பதவியோ இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

உணர்வு ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்து குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு கறுப்புச் சாயம் பூசியதையும், சில பக்கங்களைக் கிழித்து விட்டு விற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்ய முடியவில்லை.

அது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானல் சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவது போன்ற படம் இடம் பெற்று அது விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் உள்ளதை இவர்கள் தான் தணிக்கை செய்யும் அதிகாரிகளுக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச் செய்தனர். இது ஒரு உதாரணமே.

மூன்றாவது திட்டம்

சவூதியில் எனக்கோ, எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால் நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்து சவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.

சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த உலமாக்கள் அமைப்பின் தலைவருமான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அவர்களுக்கு கீழ்க்காணும் நபர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினார்கள்.

தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது (இலங்கைவாசி)

தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக் மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதனி, (இலங்கைவாசி)

இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்

ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.

அந்தக் கடிதம் இதோ.

mubarak madani 1

mubarak madani 2

mubarak madani 3

mubarak madani 4

இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.

தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும், இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.

குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும், பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

எழுத்து, பேச்சு, விவாதம், கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும், காதியானிகளுடனும், கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.

இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.

இவர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் கொடுத்துள்ளார். இது இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சில தவறுகளை நாங்கள் காண்கிறோம். அவற்றுள் சில

  1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
  2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.
  3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.
  4. ரசூல், நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.
  5. ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.
  6. சிஹ்ர் - சூனியம் என்பது கற்பனை என்கிறார்.
  7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.
  8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.
  9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
  10. ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
  11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.
  12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.
  13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.
  14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.
  15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.

இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும், நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.

  1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.
  2. இஜ்மாவையும், கியாஸையும் அறவே மறுக்கிறார்.
  3. சலஃபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.
  4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.
  5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.
  6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.
  7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.
  8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.
  9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.
  10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.
  11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.

இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும், எழுத்து வடிவிலும் சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர்க் கருத்து சொல்பவர்களை விவாதத்துக்கு அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.

இவருக்கு இருக்கும் பேச்சாற்றல் காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.

அதனடிப்படையில் தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

  1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது?
  2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும், பித்அத்களை ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலஃபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?
  3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும், வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.

இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இது தான் மேற்படி மதனிமார்கள் சவூதி உலமாக்களுக்கு எழுதிய புகார் பட்டியல்.

கடிதத்தில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக விமர்சித்தவர்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது கொள்கைச் சகோதரர்கள் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழிசெயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.

தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி, தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.

சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று நினைக்கிறார்கள். சமுதாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை.

இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது. தமுமுக நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சயில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகள் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இந்த மதனிக்ள் அளித்ததில்லை.

சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள் என்பதால் தான் தரக் குறைவாக எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு புகார் அனுப்பினார்கள்.

இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர் சவூதி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.

மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி என்னிடம் சேர்ப்பிக்கும் படியும், இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.க்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.

இதன் பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவூதி அரசு உங்களுக்கு சில தகவல்களைத் தெரிவிக்கப் பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். நான் பேக்ஸ் நமபர் அனுப்பினேன். எனது பேக்ஸுக்கு சவூதி அரசு எனக்கு அனுப்பச் சொன்ன கடிதத் தொகுப்பை அனுப்பி வைத்தார்.

அவர் அனுப்பிய கடிதங்களில் சவூதி அரசு எனக்கு எழுதிய கடிதங்கள் மட்டும் இன்றி எனக்கு எதிராக இவர்கள் அனுப்பிய் மேற்கண்ட கடிதங்களும் இணைக்கப்பட்டு இருந்தன,

எனக்கு எதிராக இவர்கள் சவூதி அரசுக்கு அனுப்பிய புகார் கடித்தை இவர்கள் கையாலேயே அல்லாஹ் எனக்கு அனுப்பச் செய்தான்.

இத்துடன் சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள் இது தான். 

முதல் கடிதம் தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் அவர்கள் புகார் கொடுத்தவர்களுக்கு இட்ட உத்தரவு அடங்கிய கடிதம். அந்தக் கடிதம் இதுதான்

ksa02

இதன் தமிழாக்கம்

தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவதுஅஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல் ஆபிதீன் என்பவர் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி 1426)ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டாவது கடிதம் எனக்கு அனுப்பப்பட்ட கடிதமாகும்.

ksa1.

பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன் இந்தியாவின் பிரச்சார தாயி.உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். 

இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ......

உங்களை உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.

ஜனவரி 1/ 2006 முதல் ஜனவரி 16 /2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.

இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.

சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.

நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.

இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-

ஹஜ் அழைப்பில் ஹஜ் கிரியை முடியும் வரை இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு இருந்தது. விவாதித்தல் பற்றி எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.

ஹஜ் முடிந்த பின் எங்கே விவாதிப்பதுஅதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.

சாதாரண நட்பு முறையில் பேசவே அவர்கள் விரும்பியுள்ளனர் இதிலிருந்து தெரிகிறது. இந்த மதனிகள் சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.

இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக வரச் சொல்லி அழைப்பு அனுப்பி இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

இந்த அழைப்புக்கு நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன் கடிதம் இதோ.,   

pj ripley1

pj ripley2

pj ripley3

pj ripley4

நாம் அனுப்பிய இக்கடிதத்தின் சாராம்சம் தமிழில்

தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக கும்பகோணத்தில் ஜனவரி 29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.

நானே அமைப்பின் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று குறிப்பிட்டு பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் இக்கடிதத்தில் விளக்கப்பட்டது.

எனவே ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள் வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன்

என்று பதில் போட்டேன்.

அந்த பதிலை முபாரக் மதனிக்கும்  அக்கடிதத்தில் குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.

ஜித்தாவின் ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.

ஆண்டுகள் பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்; விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.

இவர்களின் புகார் பைசா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.

ரகசியமாக குர்ஆன் தமிழாக்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரச்சாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இது தான் நடந்த உண்மை.

இது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி இவர்கள் எழுதிய புகார்களில் எதை இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ அவை அனைத்தும் அவர்களிடம் என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் இது தான் பைபிள் என்ற நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன. 

 baible jalyath

இது போல் இயேசு இறைமகனா என்ற நூலையும் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.

iraimakana jaliyath

பித்அத் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையையும் புத்தகமாக வெளியிட்டனர்.

bidath jaliyath

நோன்பு என்ற எனது நூலையும்திருமறையின் தோற்றுவாய் என்ற நூலையும் வெளியிட்டனர்.  

nonbu jaliyath

 

thotruvay jaliyath

அதற்காக என்னிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம் இதோ.    

திருமறையின் தோற்றுவாய் நூலை ஜாலியாத மூலம் வெளியிட என்னிடம் அனும்தி  கேட்டு எழுதிய கடிதம்

thotruvay jaliyath anumthi

 

இயேசு இறைமகனா எனும் நூலை வெளியிட என்னிடம் அனுமதி கேட்டு ஜாலியாத் எழுதிய கடிதம்

iraimakna jaliyath anumathi

இன்னும் சில கடிதங்கள் தவறி விட்டன.

இன்னும் பல நூல்களையும் ஜாலியாத மூலம்ம்சவூதி அரசு வெளியிட்டது.

arthamulla jaliyath

mamanithar jaliyath

இப்படி வெளியிடப்படும் நூல்களுக்கு பெரிய அளவில் ராயல்டி வாங்கிக் கொண்டு தான் வெளியிடுவார்கள். நான் எந்த ராயல்டியும் வேண்டாம் என்று இலவச்மாகவே அனுமதி வழ்ங்கினேன் என்பதையும் கவனத்தில் கொள்க!

இந்த மதனிகள் சவூதியில் படித்தவர்களாக இருந்ததால் எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தனர். ஆனாலும்  இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.

துபைகத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராகச் செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான்.

அவர் செய்த தில்லுமுல்லுகள்திருகுதாளங்கள் என்னென்னஎன்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.

பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும் பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். 

பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளும் அபத்தமானவைஉண்மைக்கு புறம்பானவை கீழே உள்ள ஆக்கத்தில் தெளிவாக்கியுள்ளேன்.

பீஜேயின் சொத்துக்கள் எவ்வளவு

மதனிகளாக இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.

30.09.2009. 02:22

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account