நீங்கள் அரபுநாட்டு உதவி பெற்றதில்லையா?
அரபு நாட்டில் இருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை எனக் கூறும் நீங்கள் திர்மிதி ஹதீஸ் நூலை மொழிபெயர்த்து வெளியிட்ட போது அதன் முன்னுரையில் அரபு மொழியில் பலரிடம் மதிப்புரை வாங்கி வெளியிட்டது அரபு நாட்டு பணத்துக்காகவா? மேலும் குவைத்துக்கு சில தாயிக்களை அனுப்பி அரபு நாட்டு உதவிபெற நீங்கள் முயற்சித்தது எதற்காக என்று தமுமுகவினர் சிலர் என்னிடம் கேட்கின்றனர். இது பற்றி நான் எவ்வாறு அவர்களுக்கு விளக்கம் கொடுப்பது?
- முஸம்மில், கோவை
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அரபு நாட்டில் அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பி வைத்தேன் என்பது ஒன்று. திர்மிதி எனும் நூலில் அரபு மொழியில் மதிப்புரையும், முன்னுரையும் வாங்கி வெளியிட்டேன் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்த இரண்டுமே புளித்துப் போனதும் முன்னரே பதிலளித்ததுமான குற்றச்சாட்டுக்களாகும்.
அரபிகளிடம் நிதி திரட்ட நான் ஆட்களை அனுப்பினேன் என்ற குற்றச்சாட்டுக்கு பல முறை நான் பதில் கூறியுள்ளேன். இஸ்மாயீல் சலபி என்பவர் இந்தக் குற்றச் சாட்டைச் சுமத்தி இணைய தளங்கள் வழியாக பரப்பிய போது அதற்கு எனது இணையதளத்தில் 5-10-2009 அன்று விளக்கம் அளித்துள்ளேன். அதுவே இந்தக் கேள்விக்கு போதுமான பதிலாக அமைந்திருக்கும்.
பின்வருமாறு இஸ்மாயீல் சலபி கேள்வி எழுப்பி இருந்தார்.
அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999களில் குவைத்திலுள்ள லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப் பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு, சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.
இப்படி அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நான் அளித்த பதில் இது தான்.
சொல்வதைத் தெளிவாகச் சொல்ல உங்களுக்குத் திராணி இல்லை. ஏனெனில் அவர்களில் ஒருவர் ஹாமித் பக்ரியாவார். இன்னொருவர் நமது ஜமாஅத்தில் இருக்கிறார் என்கிறார். (அவர் பெயர் சைஃபுல்லா ஹாஜா) எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனவே அவர்கள் யார் என்பதையும் அது பற்றிய விபரங்களையும் நாமே உடைத்துச் சொல்வோம்.
நமது ஜமாஅத் சார்பில் வெளிநாட்டு உதவி வாங்குவதில்லை என்று முடிவு எடுத்தது முதல் அந்த நிலைபாட்டில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் ஜமாஅத் சார்பில் அரபு நாட்டுப் பணத்துக்கு முயற்சித்து அது கிடைக்கவில்லை என்பதற்காக வெளிநாட்டு உதவி பெறும் நிலைபாட்டை நாங்கள் மாற்றிக் கொள்ளவும் இல்லை.
ஹாமித் பக்ரி அவர்கள் காயல்பட்டிணத்தில் இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைஃபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார். அதில் நான் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கல்விச் சங்கத்தினர் ஆலோசனை செய்து தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதனடிப்படையில் வெளிநாடுகளுக்குக் கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்ற போது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப் ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். இதில் எனக்கும் சம்மந்தமில்லை. தவ்ஹீத் ஜமா அத்துக்கும் சம்மந்தம் இல்லை.
இந்த விபரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்த போது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக் காட்டினர்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இது போன்ற உதவிகளைப் பெறக் கூடாது என்று முடிவு செய்தோம்.
இதன் பின் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர். இதைத் தான் பயங்கரமான விஷயம் போல் காட்டி எட்டாத பழம் புளிக்கும் என்பதால் அரபு நாட்டுப் பணத்தை வெறுத்ததாகக் கூறுகிறார். எட்டிய பழத்தையே நாங்கள் வேண்டாம் என்று சொன்னவர்கள்.
இதற்கு ஏராளமான நிகழ்வுகள் ஆதாரமாக உள்ளன. உங்களின் இந்த வாதமும் உருப்படியானதில்லை.
இன்னொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக் கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைப்பிடித்த கொள்கை அல்ல. (ஜமாஅத்தின் கொள்கையும் ஆரம்பம் முதலே இப்படி இருக்கவில்லை.) ஆரம்பத்தில் நான் ஜாக் இயக்கத்தில் இருந்த போது அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் இருந்தேன். நான் அத்தகைய உதவிகளை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை துவக்கத்தில் எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் இஸ்மாயீல் சலபி கூட்டத்தினரின் அழைப்பை ஏற்று இலங்கையில் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன்.
நாளடைவில் பணமே குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் செயல்படுவதைக் கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை வெறுக்கலானேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்தக் காலகட்டத்தில் ஏதாவது உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன், எழுதியும் இருக்கிறேன். பீஜே எழுதிய கடிதம் இருக்கிறது என்றெல்லாம் பயம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன. கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார்.
இது தான் நான் அப்போது எழுதிய பதில்.
இப்படி பதில் எழுதி ஆண்டுகள் மூன்று ஆகப்போகிறது. இதுவரை இதற்கு எந்த மறுப்பும் யாரும் சொல்லவில்லை. வெளிநாட்டில் பணம் வசூலிப்பதற்காக ஹாமித் பக்ரியும், சைஃபுல்லாவும் உருவாக்கிக் கொண்ட இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற லட்டர்பேட் சங்கத்தில் நான் உறுப்பினராகவும் இருந்ததில்லை. அதை ஆதரிப்பவனாகவும் இருந்ததில்லை. என் கவனத்துக்கு வரும் போதெல்லாம் இதை நான் வன்மையாகக் கண்டித்துள்ளேன். என்மீது குற்றம் சுமத்துவோர் எனக்கு இதில் உடன்பாடோ, சம்மந்தமோ உண்டு என்று நிரூபிக்க வேண்டும்.
அடுத்ததாக திர்மிதி என்ற ஹதீஸ் நூலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு வருகிறேன்.
இதற்குப் பெரிய வரலாறே உள்ளது.
ஹாமித் பக்ரியும், சைஃபுல்லா ஹாஜாவும் அரபு நாடுகளுக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற போது அங்குள்ள மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடப் போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல இலாபத்துடன் முதலீட்டை திரும்பத் தருவோம் என்று அங்குள்ள மக்களிடம் இவர்கள் இருவரும் நிதி திரட்டினார்கள். அவர்கள் இருவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகிகளிடமோ, மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் இதற்காக எந்த ஒப்புதலும் பெறவில்லை. மேலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் அதை வெளியிடப் போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமியக் கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப் போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளைத் திரட்டி வந்தனர்.
இப்படி பங்கு சேர்ந்தவர்களில் அதிகமானவர்கள் அற்பமான ஊதியத்தில் பணி புரியும் ஏழை ஊழியர்கள் தான். இப்படி பங்கு சேர்த்து விட்டு வந்து பல மாதங்கள் ஆன பின்னரும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாக முறையிட்டனர். எழுத்து மூலம் புகார் அனுப்புங்கள். விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று நாம் சொன்னதால் பணம் கொடுத்த பலரும் புகார்களை அனுப்பினார்கள்.
அவர்கள் திரட்டிய தொகை சில லட்சங்களாகும். அது இப்போது எனக்கு நினைவில் இல்லை.
புகார்கள் வந்த பின்னர் உடனடியாக நிர்வாகக் குழுவைக் கூட்ட வற்புறுத்தி நிர்வாகக் குழுவும் கூட்டப்பட்டது. அனைவரும் ஹாமித் பக்ரியிடமும் சைஃபுல்லாவிடமும் விளக்கம் கேட்டோம். யாரைக் கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி திரட்டியது ஜமாஅத்தின் செயலாகப் பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட ஒரு முயற்சியும் செய்யாமல் இருப்பது ஏன்? உடனே அனைவருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று நான் வற்புறுத்தினேன்.
இன்னும் ஒரு நிர்வாகியும் அவ்வாறு வற்புறுத்தியதாக நினைவு. ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டாம். உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை அனைவரும் சேர்ந்து காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.
இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. லுஹா அவர்கள் 300 ஹதீஸ்கள் மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்கள் மொழி பெயர்த்து 1000 ஹதீஸாக வெளியிட எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்ட போது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறி விட்டார்.
அப்படியானால் இன்னும் தாமதமாகி விடும். மக்களிடம் இன்னும் பேர் கெட்டுவிடும் என்று அனைவரும் கருதினார்கள். நான் திர்மிதி நூலை மொழி பெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்து இருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று மேற்படி இருவரும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் இதை வற்புறுத்தினார்கள்.
அனைவரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நான் அவர்களுக்கு அதை வழங்கினேன்.
மேலும் திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்து விட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும். பணம் திரட்டியவர்கள் பட்டியலை ஜமாஅத்தில் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தோம். அதன் படி திர்மிதி நூலை இஸ்லாமியக் கல்விச் சங்கம் தான் வெளியிட்டது.
இது குறித்து இஸ்மாயீல் சலபி என்பவர் கேட்ட போது பின்வருமாறு நான் பதில் அளித்தேன்.
இஸ்மாயீல் ஸலஃபி வாதம்:
அடுத்ததாக, நீங்கள் திர்மிதி நூலை மொழி பெயர்த்தீர்கள். அதை இஸ்லாமியக் கல்விச் சங்கம் வெளியிட்டது. அதன் பதிப்புரிமை உங்களுடையது. அதில் அன்ஸாரிஸ் சுன்னா, ஷபாப், மிமிஸிளி நிறுவனங்களின் அரபு அணிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எதற்காக அரபு அணிந்துரைகள்? உங்கள் பாஷையில் சொல்வதானால், அரபியிடம் காட்டிச் சல்லி அடிப்பதைத் தவிர வேறு காரணம் கூற முடியுமா?
எனது பதில் :
திர்மிதி நூலை ஹாமித் பக்ரியின் கல்விச் சங்கம் தான் வெளியிட்டது; அதில் எனக்குச் சம்மந்தம் இல்லை என்று உங்களைப் போல் நான் கூற மாட்டேன். எனது மொழி பெயர்ப்பு என்பதாலும், என் பெயர் பயன்படுத்தப்பட்டதாலும் அதில் எனக்கும் சம்மந்தம் உண்டு.
அரபு மொழியில் அணிந்துரை சம்மந்தமாக நாங்கள் ஆலோசித்துத் தான் முடிவு செய்தோம். இந்த நூலை பெரும்பாலும் அரபு நாடுகளில் உள்ள தமிழ் கூறும் முஸ்லிம்கள் தான் அதிகம் வாங்குவார்கள். அந்த நூல் அரபு நாடுகளுக்கு தணிக்கை பிரச்சனை இல்லாமல் அனுமதிக்கப்படுவதற்கு அரபு மொழியில் அணிந்துரைகள் இருந்தால் நல்லது என்று ஹாமித் பக்ரி சொன்ன யோசனை எங்களுக்குச் சரியாகப் பட்டது. அதனால் அதற்கு அனுமதி அளித்தோம். அதைக் காட்டி ஹாமித் பக்ரி அரபுகளிடம் பணம் பெற்றதாகவோ பணம் பெற முயற்சித்ததாகவோ தெரியவில்லை. அப்படி ஏதும் ஆதாரம் இருந்தால் எடுத்துக் காட்டலாம்.???
இவ்வாறு 5-10-2009 அன்று நாம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் எழுதினோம்.
இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக் சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம்.
ஆனால் திர்மிதி நூல் வெளியாகி சில நாட்களில் ஹாமித் பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக வியாபாரியிடம் சென்று மீதி புத்தகத்தின் பணத்தை என்னிடம் தர வேண்டும். ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறி அதன் படி அந்தப் பணத்தைச் சாப்பிட ஆரம்பித்தார். பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லா பணத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறி விரட்டியடித்தார். அவர்கள் ஜமாஅத்தில் வந்து பணம் கேட்டனர். திர்மிதி நூலை விற்று அந்த தொகையை உங்களிடம் தருவதாகத் தான் ஹாமித் பக்ரியிடம் பேசப்பட்டது. ஆனால் பல ஆயிரம் பிரதிகளை அவர் தன் கைவசம் எடுத்துக் கொண்டார். எனவே யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே கேளுங்கள் எனக் கூறி விட்டோம்.
பல நூறு ஏழை மக்கள் இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும் பத்துவாவும் அவர் மீது உள்ளது.
இதில் எனக்கு என்ன ரோல் உள்ளது? என்ற கேள்விதான் இதற்கான பதிலாகும்.
இது குறித்து பீஜே நூல்களுக்கு அரபு நாட்டில் தடையா என்ற கட்டுரை எனது இணைய தளத்தில் 30-9-2009 அன்று நான் வெளியிட்டுள்ளேன். அதில் சிறு பகுதியை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.
எந்த ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.
என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.
சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.
எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவூதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை. இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும். செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர அரபு நாட்டுப் பணத்துக்கு பல்லிளிக்கவில்லை.
அவ்வாறு பல நூல்கள் சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ளன. செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நம்மால் ஏற்படும் சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.
இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காகக் குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை விதித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களைக் காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.
இது தான் பைபிள்
இயேசு இறைமகனா?
பித்அத் ஓர் ஆய்வு
திருமறையின் தோற்றுவாய்
நோன்பு
அர்த்தமுள்ள இஸ்லாம்
மாமனிதர் நபிகள் நாயகம் இன்னும் பல நூல்களையும் சவூதியில் வெளியிட்டனர்.![]()
![]()
![]()
![]()
ராயல்டி எதுவும் வாங்காமல் சவூதியில் உள்ள ஜாலியாத் கள் எனது நூலை வெள்யிட அனும்தி கோரிய கடிதங்கள்
![]()
ஜமாஅத்தைக் குறித்தும் என்னைக் குறித்தும் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஏன் உணர்வில் பதிலளிக்க வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். முழு விபரம் அறிந்த நான் தான் இதற்குப் பதிலளிக்க முடியும். எனக்குப் பின் இது போன்ற கேள்விகளைச் சந்திக்கும் சகோதாரர்களும் தக்க பதில் அளிப்பதற்காக இது போன்ற கேள்விகளையும் எடுத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது.
20.03.2012. 12:40 PM
நீங்கள் அரபுநாட்டு உதவி பெற்றதில்லையா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode