Sidebar

21
Sat, Dec
38 New Articles

பீஜேயின் சொத்து எவ்வளவு?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பீஜேயின் சொத்து எவ்வளவு?

(இந்த ஆக்கம் எழுதப்பட்ட போது மூன் மார்ட் நிறுவனத்தை நான் ஆரம்பிக்கவில்லை. அப்போது உள்ள நிலையில் எனது பொருளாதார நிலை குறித்தே இதில்  எழுதியுள்ளேன். சில ஆண்டுகளாக அல்லாஹ் எனக்கு பரகத் செய்துள்ளதால் இதில் கூறப்பட்ட நிலையில் நான் இப்போது இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு இதை வாசிக்கவும்)

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி பீஜே பணம் சம்பாதித்துள்ளார் என்று பாக்கரும், இஸ்மாயீல் சலஃபி என்பவரும் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஜமாஅத்தைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளுக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர் கூட்டம் இப்போது பேசுகிறார்கள்.

மஞ்சள் பையுடன் வந்தவர் இன்று சொகுசு காரில் போவது எப்படி என்று பாக்கரை மேடையில் வைத்துக் கொண்டு செங்கிஸ் கான் பேசி இருக்கிறார்.

இது குறித்து இஸ்மாயில் ஸலஃபி என்பவரும் கேள்வி எழுப்பிய போது பீஜேயகிய நான் எனது இணைய தளத்தில் பின்வருமாறு பதில் அளித்துள்ளேன். அதுவே பாக்கர் கூட்டத்தின் குற்றச் சாட்டுக்கும் உரிய பதிலாகும்.

இஸ்மாயீல் ஸலஃபி என்பவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல்ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாய் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன?

அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?

இதற்கு பீஜே அளித்த பதில் வருமாறு:

எனது பதில்

இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் பொய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இல்லை.

என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்த்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார்.

இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி?

இஸ்மாயீல் ஸலஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா? தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன்.

உங்களுக்கு நாணயம், நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும்.

என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்?

மானம், சூடு, சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை. இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து நான் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன்.

இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன்.

நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார்.

அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு நிலம் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும், அந்த நிலமும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ, என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் ஸலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறார்களோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ, என் மனைவி மக்கள் பெயரிலோ, சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலஃபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர்கள் வந்த போது கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிந்திருந்ததையும், உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் பொய்களைப் பரப்பியதால் தான் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:273

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலஃபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே, அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவே இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும், செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும், மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது நானும் சுயமரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம்.

இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன்.

அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்தச் சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி அல்ல.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காகச் சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலஃபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அத்னால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா பணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன்.

ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐ.ஏ.சி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காக பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல், ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன், அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே ஜாக் இயக்கமே அல்ஜன்னத் இதழை எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி அல் ஜன்னத் இதழை ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலஃபி குறிப்பிடுகிறார்.

அந்த உறுத்தலைத் தவிர்ப்பதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன்.

சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சென்னை வந்ததும் நூல்கள் எழுதி தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.

நான் தமுமுக அமைப்பாளராக இருந்த போது எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர்.

இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்று கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி பதில் எழுதுதல், பிழை திருத்தல், மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்றதில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ, ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான நேரத்தில், கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி அல்லது சில நிர்வாகிகள் துணையுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத் தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவர்  இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஃஹீத் ஜ்மாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போது அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கியக் காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன்.

கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக. தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ, நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது பல லட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன்.

அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்குப் பயன்பட்டது. இப்போது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக் காட்சி மூலமும், குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று பல நண்பர்கள் கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆச் செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கும் வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தைத் தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். ஆனால் அதில் முதலீடு செய்து வாடகை கொடுத்து சம்பளம் கொடுத்து உழைப்பும் அடங்கியுள்ளதால் இந்த வாதமும் சரியல்ல..

இது குறித்து விளக்கமாக அறிய வேதத்தை வியாபாரமாக்கலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account