Sidebar

21
Sat, Dec
38 New Articles

நீதி செத்தது - அலகாபாத் தீர்ப்பு

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நீதி செத்தது

பள்ளிவாசல் நிலத்தை மூன்று பங்கு வைத்து இடித்தவனுக்கு இரண்டு, இழந்தவனுக்கு ஒன்று என்ற 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் அதற்கு முன்னரும் பீஜே எழுதிய கண்டனப்பதிவு இப்போது உள்ள தீர்ப்புக்கும் பொருந்துவதால் அதை மீண்டும் வெளியிடுகிறோம்.

பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும்,  தர்மத்துக்கும்  எதிரான  தீர்ப்பு   உலக வரலாற்றில்  இதற்கு  முன்  எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.

முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான்.

இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது.

கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.

ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?

அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை வந்தால் இது இவனுக்கு அது அவனுக்கு என்று தீர்ப்பு அளிப்பதில் அர்த்தம் இருக்கிறது.

பங்காளிகளாக இல்லாத இருவர் ஒரு சொத்து குறித்து வழக்கு கொண்டு வந்தால் ஆக்ரமித்தவனுக்கு இரண்டு ஆகரமிக்கப்பட்டவனுக்கு ஒன்று எனத் தீர்ப்பு அளிப்பதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து இதை விட சிறப்பானதாக இருக்கும்.

எட்டப்பன் போன்றவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு. அது போல் சட்டத்தை மீறி அப்பட்டமாக அநீதி இழைத்த நீதிபதிகள் என்ற பெயர் இந்த நீதிபதிகளுக்கு வரலாற்றில் கிடைப்பது உறுதி.

பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் இருந்ததையும், அது அப்பட்டமாக இடிக்கப்பட்டதையும் உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உலகம் இந்தியாவின் மீதும் இந்த தீர்ப்பை வழங்கியவர்கள் மீதும் காரித்துப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று கூறி வந்த சங்பரிவாரம் இத்தீர்ப்புக்கு முன்னர் அமைதி காக்க வேண்டும் என்று கூறியதும், எங்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று கூறியதும் இது பேசி வைக்கப்பட்ட தீர்ப்பு என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் சட்ட விரோதமாக இருந்தாலும் அது சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படும். முஸ்லிம்களின் சட்டப்படியான உரிமைகளாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பாவிட்டால் அது சட்ட விரோதமானதாகக் கருதப்படும் என்ற செய்தி சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இனிமேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நீதிமன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் சென்று பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்.

இத்தீர்ப்பு மூலம் முஸ்லிம்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.

இனி மேல் நாம் ஏன் விசுவாசமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுமானால் அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த நீதிபதிகளே பொறுப்பாவார்கள்.

நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் எப்போதே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையும் இது போல் காவித் தீர்ப்பு தான் வரும் என்பதையும் சென்ற மாதம் உணர்வு தலையங்கத்தில் நான் சுட்டிக் காட்டினேன்.

அது தான் இப்போது நடந்துள்ளது.

அந்தத் தலையங்கம் இது தான்

பாபர் மசூதி வழக்கு நீதி கிடைக்குமா?

பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு விசாரணை முழுமை பெற்று விட்டது. அனேகமாக இந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரம் கருதுகிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரைவையில் ஆலோசனை நடக்கிறது. அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை மூலம் இந்துக்களின் மனநிலை முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் இந்த வழக்கில் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் என்றோ இழந்து இழந்து விட்டனர்.

ஏராளமான நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் தாங்கள் சார்ந்துள்ள மத உணர்வுக்கும், இன உணர்வுக்கும் ஏற்றவாறு தான் தீர்ப்பு அளிப்பதை நாம் காண்கிறோம்.

இதற்கு ஒன்றல்ல இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன.

பாபர் மஸ்ஜிதில் நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டது நமது நாட்டு நீதியரசர்கள் உத்தரவின் படி தான்.

பூட்டப்பட்ட பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை நடத்துவதற்காக அதைத் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தவர்களும் நமது நாட்டின் நீதியரசர்கள் தான்.

நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிவாசலை இடித்த அத்வானியின் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் கலையும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதியைக் கட்டிக் காத்ததும் நமது நீதிமான்கள் தான்.

பாபர் மசூதி வழக்கில் மட்டும் அல்ல. எண்ணற்ற வழக்குகளில் தங்களின் ஒரு தலைப்பட்சமான போக்கை நமது நாட்டு நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.

இந்துத்துவா என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது என்று பாஜக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

இந்துத்துவா என்பது மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல; அனைத்து மதத்துக்கும் பொதுவான சொல் தான் என்று தீர்ப்பளித்த காவிபதிகள் நமது நாட்டு நீதிபதிகளாக உள்ளனர்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தின் விவாகரத்து வழக்கு வந்த போது அந்த வழக்குக்குச் சம்மந்தமில்லாமலும், சட்ட விரோதமாகவும் பொதுசிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர்களும் நீதிமான்களாக உள்ளனர்.

ஒரு குற்றவாளி கொடுத்த வாக்கு மூலத்தைக் காரணம் காட்டி ஊணமுற்ற அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யச் சொல்வதும், நாட்டில் ஏராளமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திய இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற பால் தாக்கரே, ராஜ்தாக்கரே, முத்தாலிக் போன்றவர்களை நோக்கிச் சுண்டு விரலைக் கூட நீட்ட வக்கற்றவர்களாக இருப்பதும் நமது நீதிபதிகள் தான்.

12  ஆண்டுகள், 14 ஆண்டுகள் வெறும் விசாரணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுத்து உலக அரங்கில் மதவறி பிடித்த நாடாக அடையாளம் காட்டியதும் நமது நீதிபதிகள் தான்.

உலகில் எந்த நாட்டிலும் குற்றம் நிரூபிக்காமல் இவ்வளவு காலம் யாரும் சிறை வைக்கப்பட்டதில்லை. சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த இயக்கத்தினருக்கும் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் ஜாமீன் வழங்க மறுத்ததில்லை.

அன்ஸாரி ஆஃதாப் அஹ்மது என்பவர் இந்திய விமானப்படை ஊழியராவார். அவர் இஸ்லாம் கூறும் மதச் சட்டப்படி தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டார். இராணுவத்தில் மத அடையாளம் கூடாது என்பது இதற்குச் சொல்லப்பட்ட காரணம்.

இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். சீக்கியர்கள் மட்டும் மத அடையாளத்துடன் இராணுவத்தில் இருக்கலாம் என்றால் முஸ்லிம்களுக்கு மறுப்பது என்ன நீதி? என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சீக்கியர்களுக்கு உள்ள அந்த உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க நீதிமன்றம் மறுத்து மதச் சார்பின்மையைப் பேணிக்காத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஸலீம் என்ற மாணவர் தாடியுடன் பள்ளிக் கூடம் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலுவை அணிந்து கொண்டும், நெற்றியில் பொட்டு, திரு நீறு இட்டுக் கொண்டும் வரலாம் என்றால் தாடி வைத்துக் கொண்டு வருவதைத் தடுப்பது என்ன நீதி என்று கருதி அவர் நீதிமன்றத்தை அணுகினார். இஸ்லாம் மார்க்கத்தை பேணுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதைத் தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். அவரது மத உரிமைக்கு எதிராகவே உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது.

அது மட்டுமின்றி தாடி வைப்பது பர்தா அணிவது போன்ற தாலிபானிசத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத துவேசத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தீர்ப்பின் போது குறிப்பிட்டார். இவர் கூறியதற்கு எந்தச் சட்ட ஆதாரமும் இல்லை.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் உள்ளத்தில் எத்தகைய விஷம் ஊற்றப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

பின்னர் இதற்காக மார்கண்டேய கட்ஜு மன்னிப்பு கேட்டார்.

உலக நாடுகளில் இவரது நச்சுக் கருத்துக்கு எதிரான பிரச்சாரம் இல்லாதிருந்தால் இதற்காக இவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.

சென்னையில் ஒட்டகம் குர்பானி கொடுக்க ஒரு நீதிபதி தடை விதித்தார். தடையை மீறி ஒட்டகம் குர்பானி கொடுக்கப்படும் என்று நாம் அறிவித்ததால் மறுநாள் தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.

கற்பழிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முதியவர் ஒருவரை முன்னதாகவே நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு நிறுத்திக் கொள்வதை விட்டு விட்டு இனி மேல் ஒழுங்காக சாமி கும்பிட வேண்டும். பூஜை செய்ய வேண்டும் என்று தனது மத நம்பிக்கையை இதில் நீதிபதி நுழைக்கிறார். பூஜை செய்பவர்கள் தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் விபரம்.

சென்னையில் முக்கிய பிரமுகர் வீட்டு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கும் போது காஞ்சி சங்கராச்சாரியார் அறிவுரைகளைக் கேட்டு தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

சட்டத்தை விட இவர்களின் மத வெறியே இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இவர் இவ்வாறு கூறிய சில மாதங்களில் சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது தனி விஷயம்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு அற்பமான அளவுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது சட்ட விரோதம் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடும் என்றும், மத அடிப்படையில் கூடாது என்றும் கூறுவதற்கு எந்தச் சட்ட நியாயமும் இல்லை. சாதி என்பதே மதத்தின் ஒரு அங்கம் தான். ஆனாலும் முஸ்லிம்கள் என்பதால் நீதிபதிகளுக்கு மூளையும் வரண்டு விடுகிறது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத நீதிமன்றங்கள் அதற்கு முன் 19 முஸ்லிம்களைக் கொன்று, குண்டு வெடிப்புக்குத் தூண்டிய அனைவருக்கும் உடனே ஜாமீன் வழங்கி நீதியை நிலை நாட்டின.

நாட்டில் நடக்கும் காதல் கள்ளக் காதல் ஆகியவற்றுக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் முஸ்லிம் இளைஞனைக் காதலித்த இந்துப் பெண் முஸ்லிமானாள். இதை விசாரித்த கேரள நீதி மன்றம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்றும், கட்டாய மத மாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் மத வெறித் தீர்ப்பை அளித்தது.

வட்டியில்லா கடனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வங்கியை கேரள அரசு துவக்க இருந்த போது அதில் தலையிட்டு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட சங்பரிவாரத்தின் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கிய நீதி மன்றங்கள் சிமி என்ற இயக்கத்திற்கு மட்டும் பாரபட்சமான நீதியை வழங்கியது.

குஷ்புவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள் பகவான் கிருஷ்னரும், ராதையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்துள்ளதால் குஷ்பு கூறியது தவறில்லை என்று கூறினார்கள். சட்டத்தை மட்டும் சொல்லி தீர்ப்பளிக்காமல் புராணத்தை மேற்கோள் காட்டுவது தான் மதச் சார்பின்மையா?

இப்படி பட்டியல் நீள்கிறது. இது போல் தான் பாபர் மசூதி வழக்கையும் நீதிமன்றம் கையாளுமோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உள்ளது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதை விசாரிக்க ஆவணமும், அனுபவ பாத்தியதையும் தான் தேவை. ஆனால் அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் ஏதாவது ஒரு காலத்தில் கோவில் இருந்ததா என்று விசாரிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட போதே தனது நேர்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்ட விரோதமானது. எந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தாலும் ஏதாவது கிடைக்கத் தான் செய்யும். கடுகளவு அறிவு உள்ளவன் கூட செய்யத் தயங்குவதை நீதிமன்றம் செய்தது. இப்படி எல்லா சிவில் வழக்குகளிலும் குழி தோண்டிப்பார்க்கும் படி தீர்ப்பளிப்பது நீதிபதிகள் தீர்ப்பளீப்பது இல்லை.

எனவே பாபர் மசூதி வழக்கில் நீதிமன்றம் சட்டத்தின் படி தீர்ப்பளிக்குமா? தனது உணர்வுக்கு ஏற்பத் தீர்ப்பளிக்குமா என்பது தீர்ப்பு வந்தால் தான் தெரியும்.

நீதிபதிகளிடம் காவிச் சிந்தனையும், மதவெறியும் உள்ளதாகக் கூறுவது அனைத்து நீதிபதிகளைப் பற்றிய பொதுவான கருத்து அல்ல. நியாயத் தராசை சரியாகப் பிடிக்கும் நீதிபதிகள் பலர் உள்ளனர். அது போல் நாம் சுட்டிக்காட்டியது போல் மதத்துவேஷம் உள்ளவர்களும் கனிசமாக உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் நீதிமன்றத்தில் கிடைத்தாலும் அதைச் செயல் படுத்தும் திராணி மத்திய அரசுக்கு நிச்சயம் இருக்காது. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கவும் மேல் முறையீடு என்ற பெயரில் இன்னும் காலம் கடத்தவும் மத்திய அரசு திட்டமிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்சி செய்பவர்களும் சரி இல்லை. நிதிபதிகளிலும் காவிகள் மலிந்து விட்டனர். இந்த நிலையில் இம்மாதம் அளிக்கப்படும் தீர்ப்பின் காரணமாக ஒரு பிரயோஜனமும் முஸ்லிம்களுக்கு ஏற்படாது என்ற சந்தேகத்தை அரசும் நீதித் துறையும் நீக்குமா?

Published on: October 1, 2010, 4:55 PM

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account