அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா?
மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர்..
இது குறித்து விபரமாகப் பார்ப்போம்.
صحيح البخاري
1374 - حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ حَدَّثَهُمْ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ العَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ، فَيَقُولاَنِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا المُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்? எனக் கேட்பர். அதற்கு இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன் என்பார். பிறகு (நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார் ! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பான். அப்போது அவனிடம் நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் ரலி)
நூல் : புகாரி 1338, 1374
இந்த ஹதீஸ் கூறுவது என்ன? அடக்கம் செய்ய வந்த மக்கள் அடக்கத் தலத்தில் பல விஷயங்களைப் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர் குறித்தும் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கேட்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. செருப்போசையைக் கேட்கும் என்று தான் கூறினார்கள்.
முஸ்லிமில் உள்ள அறிவிப்பில்
صحيح مسلم
71 - (2870) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَيِّتَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا انْصَرَفُوا»،
அவர்கள் திரும்பிச் செல்லும் போது ஏற்படும் செருப்போசையைக் கேட்பார்கள்
என்று கூறப்பட்டுள்ளது.
மக்களின் பேச்சுக்களைச் செவியுறுவார்கள் என்று கூறாமல் செருப்போசையைக் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்தையும் கேட்பார்கள் என்றால் இப்படி கூறமாட்டார்கள்.
உயிருடன் வாழும் ஒரு மனிதர் அனைத்தையும் செவியுறுவார் என்பதை நாம் அறிவோம். உயிருடன் உள்ள ஒருவரைப் பற்றி பேசும் போது செருப்போசையைக் கேட்பார் என்று சொல்ல மாட்டோம். அனைத்தையும் கேட்பார் என்பதால் இப்படிக் கூறுவது பொருளற்றதாக ஆகும்.
ஆனால் கூர்மையான கேட்கும் திறன் உள்ளவர் என்பதைக் கூற நாம் விரும்பினால் கேட்க சாத்தியக் குறைவானதைக் குறிப்பிடுவோம். ஊசி விழும் சப்தத்தையும் இவர் கேட்பார் என்போம். இடியோசையைக் கேட்பார் என்று கூறமாட்டோம். அப்படிக் கூறினால் அதைத் தவிர வேறு எதையும் செவியுற மாட்டார் என்று தான் பொருள்.
உயிருடன் உள்ள ஒருவர் மண்ணுக்குள் சில நிமிடம் புதைக்கப்பட்டால் அவரால் மக்கள் பேசுவதைக் கேட்க முடியாது. ஏனெனில் பேசுவதைக் கேட்க காற்றின் ஊடுறுவல் இருக்க வேண்டும். ஆனால் அருகில் கார் ஓடும் போது எழுப்பும் அதிர்வலைகளை அவர் கேட்பார். பூமிக்குள் காற்று புகாவிட்டாலும் கார் ஓடும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அதைக் கேட்க முடியும். அதிர்வுகளைக் கேட்டதால் பேசுவதையும் கேட்பார்கள் என்ற அர்த்தம் வராது.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கிறது.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:21
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
திருக்குர்ஆன் 35:14
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
திருக்குர்ஆன் 46:5
‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’
திருக்குர்ஆன் 30:52
அவ்வாறு இருக்கும் போது பேச்சுக்களைச் செவியுறுவது பற்றிப் பேசாத இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் கேட்பார்கள் என்று அறிவுடையோர் வாதிட மாட்டார்கள்.
செருப்போசை என்பது எந்தக் கருத்தையும் சொல்லாத வெறும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சுக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சைக் கேட்பார்கள் என்றால் அதைத் தான் நபியவர்கள் சொல்லி இருப்பார்கள்.
மேலும் செருப்போசையைக் கேட்பார்கள் என்பது கூட எப்போதும் நடக்கக் கூடியதல்ல. அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது எழும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று முஸ்லிம் அறிவிப்பில் உள்ளதால் அந்த ஒரு தடவை மட்டும் தான் அதைக் கேட்பார்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தமாகும்.
எப்போதும் செருப்போசையைக் கேட்பார்கள் என்றால் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று நபியவர்கள் சொல்வார்களா?
நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் வைக்கப்படுகிறார்கள் என்ற ஹதீஸையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
. سنن الترمذي ت شاكر (3/ 375)
1071 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ - أَوْ قَالَ: أَحَدُكُمْ - أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ
முன்கர் நகீர் கேள்வி கேட்டு முடித்த உடன் “ நெருக்கமானவரை (மனைவியை) தவிர யாரும் எழுப்ப முடியாத புது மணமகன் போல் அல்லாஹ் உம்மை இந்த இடத்தில் இருந்து எழுப்பும் வரை தூங்குவீராக என்று வானவர்கள் அவரிடம் சொல்வார்கள்.
நூல் : திர்மிதி
ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதால் அவர்களால் எதையும் செவியுற முடியாது என்பது உறுதி.
செருப்போசையைக் கேட்பது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவதற்கு முன் நடப்பதாகும் என்று மேற்கண்ட ஹதீஸில் இருந்தே அறியலாம். அடக்கம் செய்து மக்கள் திரும்பிச் செல்லும் ஓசையைச் செவியேற்ற பின்னர் தான் முன்கர் நகீர் எனும் வானவர்கள் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குப் பின்னர் தான் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்படுகிறார்கள்.
அடக்கம் செய்ததற்கும், வானவர்கள் விசாரணையைத் துவக்குவதற்கும் இடைப்பட்ட குறுகிய நேரத்தில் தான் செருப்போசையைச் செவியேற்கிறார்கள். இப்படிச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அனைத்து ஆதாரங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகிறது.
மேலும் செருப்போசையைக் கேட்பது என்பது நல்லடியார்களுக்கு மட்டும் உரியது அல்ல. மரணிக்கும் அனைவருக்கும் உரியதாகும். காஃபிர்களுக்கும் உரியதாகும்.
இது மகான்களை வழிபடுவதற்கும் ஆதாரமாகாது. அனைத்தையும் செவியுறுகிறார்கள் என்பதற்கும் ஆதாரமாகாது.
13.10.2016. 4:42 AM
அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode