Sidebar

07
Thu, Nov
47 New Articles

மதீனா ஜியாரத் அவசியமா?

ஜியாரத், தர்கா, சமாதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மதீனா ஜியாரத் அவசியமா?

பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஜியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஜியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு அங்கம் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் சென்று ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை.

மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் ஓரளவு நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ قَزَعَةَ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَرْبَعًا قَالَ سَمِعْتُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً ح حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسْجِدِ الْأَقْصَى

(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996

இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.

ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் ஒருவர் மதீனாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்பவர்களின் குறிக்கோள் ஜியாரத்தாக இருக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் ஒன்று அங்கே உள்ளது; பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது; அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.

சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஜியாரத் செய்யலாம்.

மறுபடியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஜியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் மதீனா வந்து விட்டதால் வந்த இடத்தில் ஜியாரத்தையும் செய்கிறோம். ஜியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஜியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஜியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஸியாரத் செய்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ هِلَالٍ هُوَ الْوَزَّانُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا قَالَتْ وَلَوْلَا ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, 1390, 4441

இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸஜ்தாச் செய்வது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவிக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஜியாரத் செய்ய வேண்டும்.

மதினா ஜியாரத் பற்றி சிறப்பித்துக் கூறும் பலவீனமான ஹதீஸ்கள் சில உள்ளன. அது குறித்த விளக்கத்தை

நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா

என்ற ஆக்கத்தில் காணலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account