வலீமார்களிடம் உதவி தேடலாமா?
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:117
அல்லாஹ் ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு உலகில் எவராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது.
எதற்கு ஆதாரமில்லை என்று அல்லாஹ் கூறிவிட்டானோ அதற்கு நான் ஆதாரம் தருகிறேன் என ஒருவன் கூறினால் அவன் சொல்வது உண்மையான ஆதாரமில்லை என்பதுடன் அவன் இறைவனுடனும், இறைவேதத்துடனும் மோதத் தயாராகி விட்டான் என்று பொருள்.
இறைவேதத்துடன் மோதும் இந்த வேலையைத் தான் கப்ர் வணங்கிகள் செய்துவருகிறார்கள்.
அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிரார்த்தனை புரியவும், அவர்களிடம் உதவி தேடவும் திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆதாரங்கள் உள்ளன எனக்கூறி அப்பாவி மக்களை நரகப்படுக்குழிக்கு இவர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாவி மக்களை இணைவைப்பை நோக்கி அழைப்பதற்கு எம்மாதிரியான தந்திரங்களைக் கையாள்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடிப்பது கொள்கைவாதிகளின் கடமையாகும்.
வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.
வாதம் ஒன்று
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي
என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)
பதில் ஒன்று
இது பலவீனமான செய்தியாகும்.
இச்செய்தி இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் பைஹகீ, தப்ரானீயில் இல்லை. மாறாக இப்னு அஸாகிரின் தாரீகு திமிஷ்க் பாகம் 43 பக்கம் 5 மற்றும் இப்னு முன்தஹ் அவர்களின் மஜாலிஸ் பக் 33 உள்ளிட்ட நூல்களில் தான் இவர்கள் குறிப்பிடும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இச்செய்திகளில் உள்ள பலவீனத்தை அறியும் முன் இதற்கு இவர்கள் செய்த பொருள் சரியா? என்பதை பார்ப்போம்.
اطلبوا الحوائج الي ذوي الرحمة
என்ற வார்த்தைக்கு ரஹ்மத்தான கூட்டத்தார்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று பொருள் செய்து ரஹ்மத்தான கூட்டத்தார் என்றால் அவர்கள் தான் வலீமார்கள், நாதாக்கள். அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என வியாக்கியானம் அளிக்கிறார்கள்.
இச்சொல்லுக்கான அர்த்தம் இதுவல்ல. இவர்கள் குறிப்பிடும் பொருளில் இச்செய்தி இல்லை.
மனிதர்களிடம் துஆ செய்வதைப் பற்றி இச்செய்தி பேசவில்லை. யாசகம், பொருளாதார உதவி கேட்பது பற்றித்தான் இச்செய்தியில் சொல்லப்படுகிறது. யாரிடம் யாசகம் கேட்கலாம் – யாரிடம் கேட்கக் கூடாது என்பதை தான் இச்செய்தி சொல்கிறது என்பதை அதன் முழுமையான மொழிபெயர்ப்பை அறியும் போது தெரியலாம்.
اطلبوا الحوائج إلى ذوي الرحمة من أمتي ترزقوا وتنجحوا فإن الله يقول رحمتي في ذوي الرحمة من عبادي ولا تطلبوا الحوائج عند القاسية قلوبهم فلا ترزقوا ولا تنجحوا
என் சமுதாயத்தில் உள்ள இரக்கமுடையோரிடம் உங்கள் தேவைகளைக் கேளுங்கள். அப்போது தான் உணவளிக்கப்படுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். எனது அருள் என் அடியார்களில் உள்ள இரக்கமுடையோருக்குத் தான் என்று அல்லாஹ் கூறியுள்ளான். கடின சித்தம் கொண்டோரிடம் தேவைகளைக் கேட்காதீர்கள். அவர்களிடம் கேட்டால் நீங்கள் உணவளிக்கப்பட மாட்டீர்கள். வெற்றியும் கிடைக்காது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதுதான் முழு ஹதீஸாகும். இரக்கமுடையோர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் மூலத்தில் ரஹ்மத் என்ற மூலச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், அருள் என பல அர்த்தங்கள் உள்ளன.
ரஹ்மத் உடையோரிடம் கேட்டால் உணவு கிடைக்கும் என்றால் இந்த ரஹ்மத் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.
இரக்கம் உள்ளவனிடம் யாசகம் கேட்டால் தான் அவன் எதையாவது தருவான். உண்ண உணவு கிடைக்கும்; கடுகடுப்பான நபர்களிடம் கேட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள், உண்ண உணவும் கிடைக்காது என்றும் தான் இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே இது மனிதர்களிடம் யாசகம், பொருளாதார உதவி கேட்பதைப் பற்றித் தான் குறிப்பிடுகிறது என்பதை அறியலாம். மார்க்கப் பிடிப்பு இல்லாத இரக்க்குணம் கொண்டவனையும் இது குறிக்கும். அவனிடம் உதவி கேட்டால் கிடைக்கும். தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களில் பேணுதலாக இருந்து கொண்டு இரக்க குணம் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவனிடம் கேட்டால் எதுவும் கிடைக்காது என்ற கருத்தில் தான் இது சொல்லப்பட்டுள்ளது என்பது பளிச்சென்று தெரிகிறது.
ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லும் பொருளில் தான் இச்செய்தி உள்ளது என்றாலும் அப்போதும் இது ஏற்கப்படாது. காரணம் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
இப்னு அஸாகிரின் அறிவிப்பில் கல்ஃப் பின் யஹ்யா என்பார் இதன் அறிவிப்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
الجرح والتعديل (3/ 372)
1697 – خلف بن يحيى الخراساني بخارى وسألته عنه فقال: متروك الحديث كان كذابا لا يشتغل به ولا بحديثه
கல்ஃப் பின் யஹ்யா என்பார் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர், பொய்யர், இவரும் இவரது ஹதீஸ்களும் கண்டு கொள்ளப்படாது என்று அபூஹாதம் இவரை விமர்சித்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 3 பக்கம் 372
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அலீ பின் தாஹிர் அல்குரஷீ என்பவரின் நம்பகத்தன்மை ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை.
இப்னு முன்தஹ் அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஹாரிஸ் என்பார் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று அறிஞர்களால் சந்தேகிக்கப்படுபவர் ஆவார்.
நம்பகமானவர்கள் பெயரில் அரிதானவைகளைச் சொல்கிறார் என்று ஹாகிம் அவர்களும், பலவீனமானவர் என்று அபூஸூர்ஆ அவர்களும், ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என்று அபூஹாதம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இன்னும் பல விமர்சனங்கள் இவர் மீது உள்ளன.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 496
அடுத்து இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் மர்வான் என்பவரையும் அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயி, அபூஹாதம் அவர்களும், மதிப்பற்றவர் என்று ஸஃதீ, நம்பகமானவர் அல்ல என்று இப்னு மயீன் அவர்களும், இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று புகாரி அவர்களும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க தஹ்தீபுல் கமால் பாகம் 26 பக்கம் 392, 393
அந்தோ பரிதாபம்
கப்ர் வணங்கிகளின் நிலையைக் கண்டால் உண்மையில் பரிதாபமாகவே உள்ளது.
மிகவும் பலவீனமான செய்தியைக் கூட உள்ளதை உள்ளபடி கூறி தங்கள் கருத்தை நிலைநாட்ட இவர்களால் முடியவில்லை. மிகவும் பலவீனமான செய்தி, மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அதன் யதார்த்த அர்த்தத்தை மாற்றி தங்கள் சொந்தச் சரக்குகளை உள்ளே திணித்தால் மட்டுமே தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியும் எனும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கப்ர் வணக்கத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகம் அந்த இழிநிலைக்கும் இவர்களை இட்டுச்சென்று விட்டது என்பதை இது பளிச்சென்று காட்டுகிறது.
தப்ரானியில் என்ன உள்ளது?
இவர்கள் தப்ரானியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள் அல்லவா?
இவர்கள் குறிப்பிட்ட தப்ரானீயில் அபூஹூரைராவின் அறிவிப்பாக பின்வரும் வாசக அமைப்பில் உள்ளது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ
அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்.
தப்ரானீ பாகம் 19 பக்கம் 309
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அழகானவர்களிடம் துஆச் செய்யலாம், அழகற்றவர்களிடம் துஆச் செய்யக் கூடாது என்று கப்ர் வணங்கிகள் வாதிடுவார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இமாமைப் பள்ளியில் சேர்க்க அவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொன்னவர்கள் அவ்லியா என்றால் அவர் அழகாக இருக்க வேண்டும், அழகான அவ்லியாவிடம் தான் நாம் துஆச் செய்ய முடியும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட என்னவுள்ளது?
இந்தச் செய்தியின் பொருள் என்ன என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவும் பலவீனமான செய்தியே.
தப்ரானியின் அறிவிப்பில் தல்ஹா பின் அம்ர் இடம்பெறுகிறார்.
இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று அஹ்மத் மற்றும் நஸாயி அவர்களும், இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று புகாரி அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.
தஹ்தீபுல் கமால் பாகம் 13 பக்கம் 427
ஜாபிர் (ரலி) அறிவிப்பு
இதே செய்தி தமாமுர் ராஸி அவர்களின் ஃபவாயித் எனும் நூலில் ஜாபிர் (ரலி) அறிவிப்பாக உள்ளது.
இதில் இடம்பெறும் சுலைமான் பின் கராஸ் மற்றும் உமர் பின் சுஹ்பான் ஆகிய இரு அறிவிப்பாளர்களுமே பலவீனமானவர்கள் ஆவர். அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுலைமான் பின் கராஸை இப்னு அதீ, அபூஹாதம் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 23
அவரது அதிகமான செய்திகளில் தவறு உள்ளது என்று உகைலீ குறிப்பிடுகிறார்.
அல்லுஅஃபாஉ லில் உகைலீ பாகம் 2 பக்கம் 138
உமர் பின் சுஹ்பானை மறுக்கப்பட வேண்டியவர் என்று புகாரி குறை கூறியுள்ளார்.
தாரீகுல் கபீர் பாகம் 6 பக்கம் 165
அபூஹாதம் அவர்களும் இவரைப் பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 6 பக்கம் 116
தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில்
المعجم الأوسط (5/ 76)
قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم
எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
முஃஜமுல் அவ்ஸத் பாகம் 5 பக்கம் 76
இச்செய்தியில் முஹம்மத் பின் மர்வான் என்பவர் இடம் பெறுகிறார். அவரது விமர்சனம் முந்தைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.
ميزان الاعتدال (4/ 219)
موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى كذبه أبو زرعة، وأبو حاتم. وقال النسائي: ليس بثقة. وقال الدارقطني وغيره: متروك. قال الاسدي: فلم أعد إليه. وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث. وقال ابن عدى: كان يسرق الحديث.
இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரைப் பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க : மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 219
மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட இச்செய்தியில் இவர்கள் சொன்ன கருத்து எதுவுமில்லை. நாம் முன்னர் சொன்ன கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த பலவீனமான செய்தி அமைந்துள்ளது. அதாவது உணவோ, பொருளாதார உதவியோ கேட்பதாக இருந்தால் இரக்கமுள்ளவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு தந்து வாழ்வளிப்பார்கள் என்று தான் இதன் பொருள் அமைந்துள்ளது.
இந்தச் செய்தியும் பல்வேறு வாசக மாற்றங்களுடன் வரும் இச்செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கப்ர் வணங்கிகள் கூறும் மயிர்க்கூச்செறியச் செய்யும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப்போம்.
வாதம் இரண்டு
பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஆதாரம் : தஃப்ஸீருல் ரூஹூல் பயான் பாகம் 5
பதில் இரண்டு
கப்ர் வணங்கிகள் எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை இந்த வாதத்தின் மூலம் அவர்களை அறியாதவர்களும் அறிந்து கொள்ளலாம்.
தங்கள் வழிகெட்ட கொள்கையை நிலைநாட்டவும், மக்களிடம் அதை விற்கவும் எந்தச் செயலிலும் இறங்குவார்கள் என்பதை புரிய இது ஒன்றே போதுமானது.
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரில் உள்ள வலிமார்களைக் கொண்டு உதவி தேடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.
இந்தச் செய்தி கட்டுக்கதைகளின் தொகுப்பான ரூஹுல் பயான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹனபி மத்ஹப் வெறியரான இஸ்மாயீல் ஹக்கீ என்பவரால் எழுதப்பட்டதே இந்த நூல். ஹிஜ்ரி 1127 ஆம் ஆண்டு மரணித்த மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவர் இவர். ஹதீஸ் திரட்டிய காலத்தின் அறிஞர் அல்ல. இதையும் தூக்கி அடிக்கக் கூடிய கட்டுக்கதைகள் எல்லாம் இந்தக் குப்பை நூலில் மலிந்து காணப்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தி என்றால் அந்த ஹதீஸ் நபிகளில் தொடங்கி நூலாசிரியர் வரை அறிவிப்பாளர் தொடர் இருக்க வேண்டும். அல்லது அறிவிப்பாளர் தொடருடன் கூடிய நூல்களில் பதிவு செய்யப்பட்டதை எடுத்துக் காட்ட வேண்டும்.
அப்படி ரூஹுல் பயானில் குறிப்பிடப்படவில்லை.
(إذا تحيرتم في الأمور فاستعينوا من أصحاب القبور) كذا في الأربعين لابن كمال باشا – روح البيان (5/ 178)
இதுதான் ரூஹுல் பயான் என்ற கட்டுக்கதை நூலில் உள்ள விபரம். அதாவது இந்த ஹதீஸ் இப்னு கமால் பாஷா என்பவரின் நாற்பது ஹதீஸ்கள் என்ற நூலில் உள்ளதாக இந்த அறிவிலி குறிப்பிடுகிறார்.
இப்னு கமால் பாஷா என்பவர் ஹதீஸ் தொகுத்த காலத்தவர் அல்லர். ஹிஜ்ரி 940ல் வாழ்ந்தவர் தான் இவர். நபிகள் சொன்ன செய்தி 940ல் வாழ்ந்தவருக்கு எப்படிக் கிடைக்கும்? 940 ஆன்டுகளாக வாழ்ந்த எந்த அறிஞரும் பதிவு செய்யாத செய்தி இவருக்கு எப்படி கிடைக்கும்?
இந்த ஆசாமியும் ஹனபி மத்ஹப் வெறியராவார். ஹதீஸ்கள் பற்றியோ, அதன் தராதரம் பற்றியோ அறிவில்லாதவர். இந்தப் பொய்யர் சுயமாக இட்டுக்கட்டி நபியின் பெயரால் சொன்னதை இன்னொரு பொய்யரான ரூஹுல் பயான் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
இப்னு கமால் பாஷா என்று ஒரு ஷைத்தான் தோன்றுவான். அவனை நம்பாதீர்கள் என்று நபி சொன்னதாக இப்போது ஒருவர் பதிவிட்டால் அதன் தரம் என்னவோ அந்தத் தரம் தான் இவரது நூலுக்கும் உள்ளது.
தர்காவாதிகளுக்கு பகிரங்க சவால் விடுகிறோம்.
இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் உள்ளது? இதன் முழு அறிவிப்பாளர் தொடர் என்ன?
இணைவைப்பை ஒழிக்க வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?
நபிகளார் மீது இட்டுக்கட்ட எப்படி மனம் வந்தது? என்றெல்லாம் கப்ர் வணங்கிகளிடம் கேட்க முடியாது. அவர்களின் தொழிலே அது தானே.
தங்கள் கருத்தை நிலைநாட்ட நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய்களை அள்ளிவிடுவது கப்ர் வணங்கிகளுக்கு கைவந்த கலை. அவர்கள் படித்த மத்ஹபு நூற்கள் அவர்களை அப்படி பயபக்தி கொண்டவர்களாக பரிணமிக்கச் செய்கிறது.
அதனால் எப்படி நபி மீது இட்டுக்கட்டினீர்கள் என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டு வேறு சில கேள்விகளை தர்காவாதிகளிடம் கேட்கிறோம். முடிந்தால் பதிலளிக்கட்டும்.
கேள்வி ஒன்று
ஒரு செயலில் தடுமாற்றம் ஏற்படும் போது வலிமார்களின் கப்ரில் உதவி வேண்டுமாறு நபிகளார் சொன்னது உண்மை எனில் பிறகேன் அதைச் செய்த யூத, கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்?
صحيح البخاري
1390 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِلاَلٍ هُوَ الوَزَّانُ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»، لَوْلاَ ذَلِكَ أُبْرِزَ قَبْرُهُ غَيْرَ أَنَّهُ خَشِيَ – أَوْ خُشِيَ – أَنَّ يُتَّخَذَ مَسْجِدًا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது மரணத்தருவாயில்) நோயுற்றிருந்த போது, யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டார்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ரலி
நூல் : புகாரி 1390
கப்ர் வணங்கிகளின் வாதப்படி நபிகளார் சொன்னதைத் தானே யூத, கிறித்தவர்கள் செய்தார்கள்?
பிறகேன் இந்த யூதர்களும், கிறித்தவர்களும் நபிகள் நாயகத்தால் சபிக்கப்பட்டார்கள் என்பதை யூத, கிறித்தவ கூட்டாளிகளான தர்காவாதிகள் விளக்குவார்களா?
கேள்வி இரண்டு
எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேள் என்று குர்ஆன் வழியில் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
இந்த இறைவசனத்தை நமக்குக் கற்றுத்தந்த நபிகளார் இதற்கு மாற்றமாக உனக்கு தடுமாற்றம் வந்தால் கப்ரில் உள்ளோரிடம் போய் உதவி வேண்டு! அவர்களிடம் போய் பிரார்த்தனை செய் என்று எப்படி கூறுவார்கள்?
தர்காவாதிகள் பதிலளிப்பார்களா? அல்லது பல்லிளிப்பார்களா?
கேள்வி மூன்று
நபிகள் நாயகம் கூறியதாக கப்ர் வணங்கிகள் இட்டுக்கட்டிச் சொன்ன செய்தியை சற்று நன்றாகக் கவனியுங்கள்.
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.
இதில் வலிமார்களை என்பது நேரடிச் சொல்லில் இல்லை. அடைப்புக்குறிக்குள் தான் உள்ளது.
அப்படிப் பார்த்தால் கப்ரு உடையவர்களை அதாவது கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடவும் என்று தான் அந்தப் பொய்யான செய்தியில் உள்ளது.
கப்ரில் உள்ளவர்கள் என்பது பொதுவான சொல்லாகும்.
கப்ரில் நல்லோரும் இருப்பார்கள். தீயோரும் இருப்பார்கள்.
அதன்படி கப்ரில் உள்ள யாரைக் கொண்டும் உதவி தேடலாம் என்று சொல்லவேண்டியது தானே?
மேலும் முஸ்லிம்கள் மட்டுமின்றி இறைமறுப்பாளர்களும் கப்ரில் உள்ளவர்கள் தாம். கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடு என்று நபி சொன்னது உண்மை எனில் கப்ரில் உள்ள இறைமறுப்பாளர்களைக் கொண்டும் உதவி கேட்க வேண்டியது தானே? நபி சொன்னதற்குப் பிறகு அவர்களைக் கொண்டு உதவி தேடுவதில் இவர்களுக்கு என்ன தடை?
நபி மீது இட்டுக்கட்டிச் சொல்வது என்றாகி விட்டதற்கு பிறகு வலிமார்களிடம் என்பது மட்டும் ஏன் அடைப்புக்குறிக்குள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டும். அதையும் நேரடியாக நபியின் வார்த்தையாக இட்டுக்கட்டி இது போன்ற கேள்விகளைத் தவிர்த்திருக்கலாமே?
இப்படி பல கேள்விகள் இவர்களிடம் கேட்கலாம்.
பல வருடங்களாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு வாய்திறக்க மறுப்பவர்கள் இதற்கா பதிலளிக்க போகிறார்கள்?
எனவே அடுத்த வாதத்திற்கு செல்வோம்.
வாதம் மூன்று
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள்.
ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني
எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள் என்று மூன்று முறை கூறவும்.
(ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)
பதில் மூன்று
தப்ரானியில் (பாகம் 12 பக்கம் 44) சில வாசக மாற்றத்துடன் இவர்கள் கூறும் செய்தி இடம்பெறுகிறது.
இதுவும் பல காரணங்களால் மிகவும் பலவீனமான செய்தியாகும்.
இதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பார் ஹதீஸ் துறையில் மிகவும் மோசமானவர் ஆவார்.
இவ்வாறு அபூஹாதம் விமர்சித்துள்ளார்.
தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 170
இதில் இடம் பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் மீதும் நினைவாற்றல் ரீதியாக விமர்சனம் உள்ளது.
அது தவிர இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகும்.
ஏனெனில் இதில் ஜைது பின் அலீ என்பவர் உத்பா பின் கஸ்வான் ரலியிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது. இதில் ஜைது பின் அலீ ஹிஜ்ரி 122ல் மரணமடைகிறார்.
தாரீகுல் கபீர் பாகம் 2 பக்கம் 403
அப்படி எனில் சுமார் ஹிஜ்ரி 20 ல் பிறந்திருப்பார் என்று பார்த்தாலும் கூட உத்பா ரலி யிடமிருந்து ஜைது அறிவிக்க இயலாது. ஏனெனில் உத்பா ரலி ஹிஜ்ரி 20 க்குள் மரணித்து விட்டதாக வரலாறு சொல்கிறது. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகவும் இருப்பதால் இது முழுக்க பலவீனமானகும்.
தப்ரானியின் மற்றொரு அறிவிப்பில் (பாகம்9 பக்கம்67) மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பார் இடம்பெறுகிறார்.
இவரது நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அதுவும் பலவீனம் ஆகும்.
(அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 8 பக்கம் 323)
இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
إن لله ملائكة في الأرض سوى الحفظة يكتبون ما سقط من ورق الشجر فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد : أعينوا عباد الله.
பூமியில் அல்லாஹ்வுக்கென்று நன்மை தீமை பதிவு செய்யும் வானவர்கள் அல்லாத மற்றும் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளைப் பதிவு செய்வார்கள். உங்களுக்கு பாலைவன பூமியில் (மேலேறிச் செல்லும்) சிரமம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள் என்று அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
முஸ்னது பஸ்ஸார் பாகம் 2 பக்கம் 178
இச்செய்தியில் இடம்பெறுகிற உஸாமா பின் ஸைது அல்லைஸீ என்பவர் பலவீனமானவர் ஆவார். யஹ்யா அல்கத்தான் இவரை பலவீனமாக்கியுள்ளார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார் என்று அபூஹாதம் விமர்சித்துள்ளார். இவரது செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது என அஹ்மத் கூறியுள்ளார். இன்னும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.
பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம் 183
இந்த கருத்திலமைந்த அனைத்து செய்திகளும் அறிவிப்பு ரீதியாகவே பலவீனமாக உள்ளன. இதன் கருத்தும் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளது.
(இதன் கருத்து பற்றிய விளக்கம் இறுதியில் உள்ளது.)
வாதம் நான்கு
பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள்.
பதில் நான்கு
நபிகள் நாயகம் மீது இதை விட அபாண்டத்தை அநியாயமாக பரப்பிச் செல்ல முடியாது.
அல்லாஹ் அல்லாதவர்கள் ஒரு காலத்திலும் மனிதர்களின் துஆக்களை அறியமாட்டார்கள் என்றும், அதற்கு பதிலளிக்க மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக குர்ஆன் வழியே நபிகள் நாயகம் நமக்குப் போதித்து விட்டார்கள்.
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 7:197,198
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
திருக்குர்ஆன் 7:194
அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிரார்த்திப்பவன் வழிகெட்டவன் என்று குர்ஆன் வர்ணிக்கின்றது.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
திருக்குர்ஆன் 46:5
அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிரார்த்திப்பவன் அநீதி இழைத்தவன் என்று குர்ஆன் சாடுகிறது.
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
திருக்குர்ஆன் 10:106
அல்லாஹ் அல்லாத யாரும் மனிதர்களின் பிரார்த்தனையை செவியுற மாட்டார்கள். செவியுற்றாலும் பதிலளிக்க சக்தி பெறமாட்டார்கள். அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில்1 நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
திருக்குர்ஆன் 35:13,14
தரையானாலும், கடலானாலும் எங்கும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான் என்று இறைவன் கூறுகிறான்.
தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்? என்று கேட்பீராக! இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள் என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:63, 64
இத்தகைய எண்ணற்ற இறைவசனங்களுக்கு மாற்றமாக, தான் கொண்டு வந்த சத்திய வேதத்திற்கு முரணாக பாலைவனத்திலோ, எங்குமோ ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு நபிகள் நாயகம் ஒரு போதும் கூற மாட்டார்கள்.
எச்செயலை பயனற்றது, வீணானது, வழிகேடு, இணைவைப்பு என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் போதித்து சென்றார்களோ அச்செயலைச் செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரே சொன்னார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமும் நம்ப மாட்டான்.
அப்படி நம்புபவன், அவ்வாறு சொல்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். அவன் வேண்டும் என்றே நபிகள் நாயகம் மீது பொய்யுரைத்து நரகை முன்பதிவு செய்கிறான்.
இதில் மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?
அவ்லியாக்களான இறைநேசர்களிடம்? நேரடியாக உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தை பாருங்களேன்.
வாதம் ஐந்து
அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.
குர்ஆன் கூறுகிறது:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்.
அல்குர்ஆன் 16:43
இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.
பதில் ஐந்து
இதைப் படித்ததும் நபிகள் நாயகம் காலத்து யூதர்கள் தான் நம் சிந்தனைக்கு வருகிறார்கள்.
அவர்கள் தான் இறைவனின் வசனத்தையும், இறைத்தூதரின் போதனையையும் தங்கள் மனோ இச்சைக்குத் தகுந்தவாறும், தங்களுக்கு சாதகமாகவும் திரித்து கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அதனாலே இறைவனின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்! என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:41
இன்றைய கப்ர் வணங்கிகளின் செயல் அச்சரம் பிசகாமல் அன்றைய காஃபிர்கள் – யூதர்களின் செயலை அப்படியே ஒத்திருக்கின்றது.
இருக்கின்ற குர்ஆன் வசனங்களை தங்கள் கருத்திற்கு தோதாக வளைத்து திரிப்பது, இல்லாத நபிமொழிகளை நபிகள் நாயகம் கூறியதாக அபாண்டமாகப் பொய் சொல்வது இவ்விரண்டுமே கப்ர் வணங்கிகளின் ஆதாரச் செயலாகும். இவ்விரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தியே தங்களின் அழிந்து போன கொள்கைகளை மக்களிடையே உயிரூட்ட முற்படுகிறார்கள்.
வலீமார்களிடம் உதவி தேடலாம் எனும் இந்தத் தலைப்பிலும் தங்களின் வழக்கமான பாணியில் அதே வழியில் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
பதில்
இனி இவர்களின் அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரத்திற்கு வருவோம்.
குர்ஆன் கூறுகிறது:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்!
திருகுர்ஆன் 16:43
இது தான் அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பதற்கு கப்ர் வணங்கிகள் குறிப்பிடும் ஆதாரம்.
அது சரி ஏழாம் நாள் பாத்திஹா ஓத அல்ஹம்து சூரா 7 வசனம் உள்ளதை ஆதாரம் காட்டிய மூளையற்ற கூட்டம்தானே.
மண்ணை வணங்கும் மடையர்களிடம் வேறு என்ன ஆதாரத்தை எதிர்பார்க்க இயலும்?
திக்ர் உடையவர்கள் என்றால் அவ்லியாக்களாம். என்னே இவர்களது குர்ஆன் ஞானம்.
ஒரு வாதத்திற்கு இவர்கள் செய்த பொருளின் படி திக்ர் செய்பவர்கள் – திக்ரை உடையவர்கள் என்று அர்த்தம் வைத்தாலும் திக்ர் செய்யும் அனைவரையும் தானே அது குறிக்கின்றது.
திக்ர் செய்யும் அனைவரையும் கொண்டு உதவி தேடலாம் என்று சொல்ல வேண்டியது தானே?
ஒரு வார்த்தைக்கு என்ன பொருள் செய்தாலும் அடைப்புக்குறி போட்டு அதில் அவ்லியா என்று மறக்காமல் எழுதி விட வேண்டும் என்று யார் தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ?
இவர்கள் குறிப்பிட்ட வசனத்தை முழுமையாகப் படித்தாலே திக்ர் உடையவர்கள் என்றால் யார்? அவர்கள் அவ்லியாக்களா? என்பதை இலகுவாக புரியலாம்.
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
திருக்குர்ஆன் 16:43
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் என்பது இறைவன் நபிகள் நாயகத்திற்கு சொல்லும் சேதியாகும்.
இதுவரை ஆண்களையே இறைத்தூதர்களாக அனுப்பியதாக அல்லாஹ் நபிகளாரிடம் தெரிவித்து விட்டு வேண்டுமானால் திக்ர் உடையவர்களிடம் கேட்டுப்பார் என்கிறான்.
இவர்கள் செய்த பொருளின் படி அவ்லியாக்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் சொன்னான் என்றாகி விடும்.
நபிகள் நாயகம் எந்த அவ்லியாவிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்? முஹ்யித்தீனா? ஷாகுல் ஹமீது பாதுஷாவா? அல்லது வேறு யாருமா?
முதலில் அஹ்லுத் திக்ர் என்றால் அவ்லியா என்று இவர்களுக்கு யார் சொன்னது? என்ன ஆதாரம்? மனம் போன போக்கில் அர்த்தம் வைத்து பழகியதன் விளைவினாலும் திக்ர் மஜ்லிஸ் என்று அவ்லியாக்களின் பெயரால் அதிகம் கூத்தடிப்பதாலும் எங்கே திக்ர் என்று பார்த்தாலும் இவர்களுக்கு அவ்லியாக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் போலும்.
அதற்காக குர்ஆனில் திக்ர் என்று வந்தாலும் கூட இறைவனை நினைவு கூராமல் அவ்லியாக்கள் என்று மனிதர்களை நினைவு கூர்வது திக்ர் மஜ்லிஸ் தாக்கம் சற்றே அதிகம் எனத்தோன்றுகிறது.
திக்ர் என்றால் அறிவுரை என்று பொருள்.
குர்ஆனும் திக்ர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அல்குர்ஆன் 15:6,9
அஹ்லுத் திக்ர் என்றால் அறிவுரை வழங்கப்பட்டவர் எனப் பொருளாகும். எந்த அகராதியிலும் அவ்லியா என்று பொருள் கிடையாது.
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம் எனக் கூறிவிட்டு வேண்டுமானால் திக்ர் வழங்கப்பட்டவர்கள் அதாவது தவ்ராத், இன்ஜீல் எனும் அறிவுரைகள் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இது தான் இந்த வசனத்தின் கருத்தாகும்.
இதில் எங்கே அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமுள்ளது?
மனம் போன போக்கில் இறைவசனத்திற்கு அர்த்தம் வைக்க ஆரம்பித்தால் இப்படித்தான் கண்டதையும் உளறும் படி மறை கழன்று போகும் என்பதை அறிவுறுத்துகிறோம்.
வாதம் ஆறு
அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான் (ஹதீது குத்ஸி புகாரி)
அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான்.
பதில் ஆறு
இறைநேசர்கள் என்போர் திக்ர் அதிகமதிகம் செய்து இறைவன் அளவில் சேர்ந்து விட்டார்களாம். அதனால் அவர்கள் இப்போது மனிதர்கள் இல்லையாம்! அல்லாஹ்தானாம்.
அல்லாஹ்விடமிருந்து வெளிப்படும் அத்தனையும் அந்த அவ்லியாவிடமிருந்தும் வெளிப்படுமாம். அதனால் அவரிடம் நாம் துஆ செய்யலாமாம்.
இவர்கள் செய்யும் இருட்டு திக்ர், குருட்டு திக்ர், பாட்டு திக்ர், கைகோர்த்து டான்ஸ் ஆடும் திக்ர், சினிமா பாடல் பாடும் திக்ர் என்று அதிகமாக திக்ர் செய்வதால் அல்லாஹ் ஆகிவிடுவார்களாம்.
அல்லாஹ் தான் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படும் ஸ்தலமாக மாறிவிடுகிறார்கள் என்றால் ஒருவரையாவது அப்படி காட்ட முடியுமா?
அல்லாஹ்வின் சக்தி எல்லாம் வெளிப்பட வேண்டாம். அற்ப மனிதர்களின் சக்தியாவாது வெளிப்படுமா?
உயிருள்ள மனிதனிடம் பேசினால் பதிலளிக்கிறான்.
திக்ரின் மூலம் அல்லாஹ்வை தஞ்சமடைந்த இறந்து போன இறைநேசர்களின் ஸ்தலங்களில் அவர்களை அழைத்தால் அவர்கள் பதிலளிப்பார்களா?
மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்பு மனித சக்தியே வெளிப்பட வக்கில்லை; இங்கு அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுமாம்.
இவர்கள் குறிப்பிடும் செய்திக்கு என்ன விளக்கம் என்பது பிஜே அவர்கள் தமது தர்ஜூமா விளக்க குறிப்பில் விளக்கியுள்ளார்கள்.
அதையே இதற்குப் பதிலாக தருகிறோம்.
யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.
பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான் என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.
பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். இவர் எனது வலக்கரமாக இருக்கிறார் என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர் என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை? என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது? என்று கேட்பான், அதற்கு இறைவன் ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய் என்று கூறுவான்.
(பார்க்க: முஸ்லிம் 5021)
அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?
இந்தச் செய்தியை எப்படி புரிந்து கொள்கிறார்களோ அப்படியே (புகாரீ 6502) செய்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே அல்லாஹ் மட்டுமே பிரார்த்திக்கப்பட தகுதி படைத்தவன்.
அவனை மட்டுமே வணங்குவோம் அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வோம்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 72:18
(ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
திருக்குர்ஆன் 40:14
அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பதை மீண்டும் நினைவு கூர்கிறோம்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:117
கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode