Sidebar

04
Wed, Dec
21 New Articles

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

ஹதீஸ் கலை விதிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

(அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான கொள்கைக்கு மறுப்பாக பீஜே எழுதிய தொடர் கட்டுரைகள்)

தொடர் : 1

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.  இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். 

ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது.  திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன

குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.

ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும்.  இக்கட்டுரைத் தொடரின் இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம். 

குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹீ - இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது வஹீ அல்ல.  உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது.  எனவே இறைவனிடமிருந்து அருளப்பட்ட குர்ஆனை மட்டுமே மூல ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.  இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில் உள்ள சாராம்சம்.

இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்பட்டதைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.  நிச்சயமாக இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி வருகிறோம். 

ஆனால் இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான்.  குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்படவில்லை என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.  குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. 

திருக்குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன் ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டுள்ளதோ - குர்ஆன் எப்படி வஹீயாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல - ஏராளமான இடங்களில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.

3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் 53 : 2, 3, 4

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை.  அவர் பேசுவதெல்லாம் வஹீ என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. 

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது.  குர்ஆன் வஹீ என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர்.  குர்ஆன் வஹீயாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை. 

"இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப்படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹீ தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான். 

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது ஏற்புடையதல்ல. இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் - முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் - விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹீ எனும் இறைச் செய்தி தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. 

குர்ஆன் எப்படி வஹீயாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹீயாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் - அந்தப் பேச்சுக்கள் வஹீ இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுபவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான் விந்தையானது; வேடிக்கையானது.  நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால் இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும்.  அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும் வஹீதான் இறைச் செய்தி தான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும்.  குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி விடும். 

குர்ஆன் அல்லாத வஹீ உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான் கூறுகிறதா? இல்லை.  ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.                         

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் : 2

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனின் 53 : 2,3,4 வசனங்கள் நபிகள் நாயகம் பேசுவது யாவுமே வஹீ என்று திட்டவட்டமாக அறிவிப்பதை சென்ற இதழில் நாம் விளக்கினோம்.

இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது.

51. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை.350 அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 42 : 51

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது.

ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.

மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

11. அங்கே அவர் வந்தபோது மூஸாவே என்று அழைக்கப்பட்டார்.

12. "நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

13. நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!

14. நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!

திருக்குர்ஆன் 20 : 11 - 14

இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப்பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் "திரைக்கு அப்பால் இருந்து'' என்று இறைவன் கூறுகிறான்.

இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக - வஹீ மூலம் - என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான்.

இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீ தான். இறைச் செய்தி தான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை  இப்படித்தான் செயல்படுத்த வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய - வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத் தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப்பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத் தான் கூறப்பட்டுள்ளது.

மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.

மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது; தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.

52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை.344 மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.81

திருக்குர்ஆன் 42: 52

"இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்'' என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அதாவது நபிகள் நாயகத்துடன்....

* திரைக்கப்பாலிருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.

* ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.

* ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி அனுப்பியுள்ளான்.

* இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்

என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலிருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே?  உள்ளத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கே?  அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா!  அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.    (வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் - 3

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன.  இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.

கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.

அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை.  இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.

உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும்67 வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2 : 231

113. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

திருக்குர்ஆன் 4 : 113

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான்.  அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது.  இருக்க முடியாது.  இருக்கக் கூடாது. 

அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம் மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும்.  ஆனால் கிதாபையும், ஹிக்மத்தையும் உம் மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.  அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.

"ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான்.  அதைத் தான் இங்கே குறிப்பிடுகிறான்'' என்பது இவர்களது விளக்கம்.

ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு என்பது தான். இதில் சந்தேகம் இல்லை.  ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.  கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது - தபால் என்பது பொருள். அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.

துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம்.  ஒரே வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும் அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.

கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம் என்று ஆகி விடுகிறது. அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம் என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும் இறக்கியருளியிருக்கிறான்.

பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும் போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.  எனவே குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய இரு வசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின் புரட்டு வாதம் நொறுங்கிப்  போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும் சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத் தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும் குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது.

அதுவும் இதுவும், அவனும் இவனும் என்று "உம்''மைப் பொருளைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.

அல்லாஹ்வையும், ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.

சோறும், குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள் தரப்பட்டதாகத் தான் பொருள்.

இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.

குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா? ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.

இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே கூறவில்லை.  ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும், கிதாபையும் என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல் இங்கே பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும்.  இங்கே கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். மறுநாள் மக்களிடம் "பொறுமையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன்.  சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால் அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம்.  இந்த இடத்தில் பொறுமை எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது தனி விஷயம்.

எனவே அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்திலிருந்து அருளினானோ அவ்வாறே ஹிக்மத்தையும் தன் புறத்திலிருந்து வஹியாக அருளியிருக்கிறான்.  அதை நாம் ஹதீஸ்கள் என்கிறோம்.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய ஹிக்மத் எது என்பதை குர்ஆனிலிருந்து கண்டுபிடித்துக் காட்டட்டும்!

ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.

34. உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும்67 நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

 (அல்குர்ஆன் 33 : 34)

ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அது போலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான்.  நபியின் மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.  நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள்.  மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

திலாவத் - "ஓதிக் காட்டுதல்' என்பது பிறரது வார்த்தையை ஒருவர் எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும்.  எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல.  இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் - 4

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறதோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மற்றொரு மூலாதாரமாக அமைந்துள்ளன.  திருக்குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான் என்பதைக் கடந்த மூன்று தொடர்களாக விளக்கி வருகிறோம்.  இதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம்.

திருக்குர்ஆன் எவ்வாறு வஹீயாக இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த செய்தியாக உள்ளதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயாகவே அமைந்துள்ளன என்பதை நிரூபிக்கும் மேலும் சில சான்றுகளை இந்தத் தொடரில் காண்போம்.

அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப் புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை.

மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.

81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

 திருக்குர்ஆன் 3 : 81

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவுபடுத்துகிறான்.  (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வர முடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது "நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது.  இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

84, 85, 86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.26

87. அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித்தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்.

88. இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.498

89. அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

 திருக்குர்ஆன் 6 : 84 - 89

இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான். 

அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும், சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு "இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம்.  ஹுக்மையும் வழங்கினோம்.  நுவுவ்வத்தையும் வழங்கினோம்'' என்று அல்லாஹ் 89வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது.  நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது.  இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக "ஹுக்மை' வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள்.  இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று இந்த இடத்தில் பொருள் கொள்ள முடியாது.  மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள்.  அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுவுவ்வத்தையும், ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.  "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத - காஃபிர்களாக இல்லாத - ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது.  ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

"இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காஃபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும், மூன்றில் எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.  மூன்றில் ஒன்றோ, இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.  குர்ஆன் மட்டும் போதும் என்போர் காஃபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.

54. அல்லாஹ் தனது அருளை இம் மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

 திருக்குர்ஆன் 4 : 54

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.

163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.

 திருக்குர்ஆன்  4 : 163

இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழிமுறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை.  மாறாக குர்ஆனுடன் ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் அனுப்பப்படவே இல்லை.  மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர்.  அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.

குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள் மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும், கடந்த மூன்று தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள்.  இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா!  இன்னும் உள்ளன.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் - 5

பி. ஜைனுல் ஆபிதீன்

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.

இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித்தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

129. "எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றனர்.)36

திருக்குர்ஆன் 2 : 129

இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.

"உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''

"அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''

என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் - வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் - இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.

உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.  ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது.  ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.

151. உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.36

திருக்குர்ஆன் 2 : 151

இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும், அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப்பட்டார்கள்.  அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும். 

ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்கள்

2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்!

3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள்.

5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்கள்.

இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்ன பிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன.  அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார்.  மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம்.  ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.  உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.

164. நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.36

திருக்குர்ஆன் 3 : 164

வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை. மாறாக தூதரை அனுப்பியது தான் அருட்கொடை என்கிறான்.  அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம்.  அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?

இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும், வசனங்களை ஓதிக் காட்டுவதும், ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்று தான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.

அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலைநாட்டப் பார்க்கிறார்கள்.

பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை.  வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும், நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ - இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை.  இன்னும் பல வசனங்கள் உள்ளன.

(இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் - 6

பி. ஜைனுல் ஆபிதீன்

அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை.  வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதைக் கடந்த ஐந்து தொடர்களாக நாம் அறிந்து வருகிறோம்.

வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம்.  மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும்.

தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும்.  தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக தூதர்களை முதலில் மறுப்பார்கள்.  அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள்.

இதை ஏதோ அனுமானத்தின் அடிப்படையில் கூறுவதாக எண்ண வேண்டாம்.  இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.

7. "இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.154

திருக்குர்ஆன் 25 : 7

தம்மைப் போன்ற மனிதர்களை இறைத் தூதர்கள் என்று நம்புவது மனிதர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

வானிலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு புத்தகத்தை இறைவன் போட்டால் அது இறைவனின் வேதம் தான் என்று நம்புவதில் எந்தத் தயக்கமும் மக்களுக்கு இருக்காது.  இவ்வாறு செய்வதில் ஏராளமான நன்மைகளும் ஏற்படும்.

அடி, உதை, உயிர்ப்பலி ஏதுமின்றி மக்கள் அனைவரும் எளிதாக இதை ஏற்றுக் கொள்வார்கள். இறைத்தூதர் வழியாக வேதம் கிடைக்கும் போது ஏற்படும் நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கை இதனால் ஏற்படுவதால் வேதத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றுவார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து வேதங்களைப் போடுவதால் கருத்து வேறுபாடுகள் குறையும். வேதம் மட்டும் வழிகாட்டி விடும் என்றால் அல்லாஹ் இதைத் தான் செய்திருப்பான்.  வேண்டாத வேலையை அல்லாஹ் ஒரு போதும் செய்ய மாட்டான். 

நமது மூக்கை நாம் தொடுவதாக இருந்தால் கூட நேரடியாகத் தான் நாம் தொடுவோமே தவிர சுற்றி வளைத்துத் தொட மாட்டோம்.  அவ்வாறு யாரேனும் தொட முயன்றால் அவனுக்கு என்னவோ நேர்ந்து விட்டது எனக் கருதுவோம்.

நாமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் வேண்டாத வேலையில் இறங்க மாட்டான்.

பேசாமல் வானிலிருந்து சில பிரதிகளை போட்டு எளிதாக வழி காட்டியிருப்பான்.

ஏன் அவ்வாறு செய்யாமல் ஒரு மனிதரைத் தனது தூதராக அனுப்பி மக்கள் நம்புவதற்குத் தயங்கும் நிலையை ஏற்படுத்தி அடி உதைகளுக்கு அவரை ஆளாக்க வேண்டும்? வேதத்தைக் கொண்டு வந்து தருவதைத் தவிர வேறொரு முக்கியமான பணியும் அவருக்கு இருந்தால் தவிர தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கவே மாட்டான்.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் அந்த முக்கியமான பணி என்ன என்பதைக் கூறுவார்களா?

குர்ஆனை வானிலிருந்து நேரடியாக மக்களுக்குப் போடாவிட்டால் மக்கள் எவ்வாறு தூதர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அப்படி அனுப்பியிருக்கலாம்.

இறைவனின் தூதர் என்று அனுப்பப்படுபவர் தங்களைப் போல் சாப்பிடக் கூடியவராகவும், பருகக்கூடியவராகவும் இல்லாத - ஏனைய பலவீனங்கள் இல்லாத - வானவர்கள் அனுப்பப்பட்டால் ஏற்பதற்கு தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது. 

ஒரு வானவர் இறைத்தூதராக அனுப்பப்படும் போது அவர் எதையும் உண்ணாமல் பருகாமல் தங்களுடன் வாழும் போது அவரை இறைத் தூதர் என்று எளிதில் நம்பலாம்.  அவர் கொண்டு வந்தது இறை வேதம் தான் என்பதையும் நம்பலாம். இது தான் மக்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலேயே சான்று உள்ளது. அந்தக் கோரிக்கைக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான்.

 9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.154

திருக்குர்ஆன் 6 : 9

வானவரையே தூதராக அனுப்புமாறு இவர்கள் கேட்கின்றனர்.  வானவரை அனுப்புவதாக நாம் முடிவு செய்தாலும் அந்த வானவரை மனிதத் தன்மை கொண்டவராக மாற்றித் தான் அனுப்புவோம்.  மனிதத் தன்மையுடன் வரும் அவர் உண்பார் பருகுவார்.  ஏற்கனவே அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை மீண்டும் எழுப்புவார்கள் என்று அல்லாஹ் விடையளிக்கிறான்.

"மலக்கை தூதராக அனுப்புவதாக இருந்தால் கூட அவரை மனிதராக மாற்றித் தான் அனுப்புவேன்'' என்று அல்லாஹ் ஏன் கூறுகிறான் என்று சிந்திக்க வேண்டும்.  வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டும் தான் வேலை என்றால் மலக்கு வந்து கொடுத்தால் என்ன? மனிதர் வந்து கொடுத்தால் என்ன?  மனிதர்களுக்கு மனிதர் தான் செய்முறை விளக்கம் செய்து காட்ட முடியும்.  நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் இருக்க முடியாது. 

வேதத்தைக் கொண்டு வரும் தூதர்கள் வேதத்தின் போதனைகளுக்கு விளக்கம் கூறி செயல் முறை விளக்கமும் தர வேண்டியிருக்கின்ற ஒரே காரணத்தினால் தான்.

வானிலிருந்து வேதப் புத்தகத்தைப் போடாமல்...

மலக்குகளைத் தூதர்களாக அனுப்பாமல்...

மனிதர்களையே அனுப்புகிறான்.

இதிலிருந்து வேதம் மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறி வாழ்ந்து காட்டும் வேலையும் தூதர்களுடையது என்பதை விளங்கலாம். 

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிப்போர், அல்லாஹ் ஒரு மனிதரைத் தூதர் என்று அனுப்பி வேண்டாத வேலையைச் செய்து விட்டான் என்று குற்றம் சுமத்துகிறார்கள் என்பதே அர்த்தமாகும். 

தூதரை அனுப்புவதால் பத்து பைசாவுக்குக் கூட பலனில்லாமல் இருந்தும் தேவையில்லாமல் அல்லாஹ் தூதரை அனுப்பினான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைக்கின்றார்கள் என்பது தான் இந்த வாதத்துக்குப் பொருளாக இருக்க முடியும்.

* அவர் பேசுவதெல்லாம் வஹீ என்று அல்லாஹ் கூறுவதாலும்,

* மூன்று வகையான வஹீ நபி (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதாலும்

* வேதத்துடன் ஹிக்மத்தையும் இறக்கி அருளியதாக அல்லாஹ் கூறுவதாலும்

* வேதத்தை ஓதிக் காட்டுவதுடன் அதைக் கற்றுக் கொடுக்கும் வேலையும் நபி (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதாலும்

* வேதத்துடன் சட்டம் வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதாலும்

குர்ஆனை விளங்கிட நபிவழி அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் விளக்கியுள்ளோம்.

மனிதனுக்கு மனிதனைத் தான் தூதராக அனுப்புவேன் என்று அல்லாஹ் பிரகடனம் செய்வது இதை மேலும் வலுப்படுத்துகின்றது.  எனவே குர்ஆன் மட்டும் போதாது. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு தானா ஆதாரங்கள்? என்று நினைக்க வேண்டாம்.  இன்னும் உள்ளன.  அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்.

தொடர் - 7

பி. ஜைனுல் ஆபிதீன்

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் - வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் - ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும்.

13. ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

14. அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பியபோது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம்.329 நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 36 : 13, 14

இதைத் தொடர்ந்து மேலும் ஆறு வசனங்களிலும் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலையோடு தூதர்களின் பணி முடிந்து விட்டது என்றால் முதலில் இரண்டு தூதர்களை அனுப்பியிருக்க வேண்டியதில்லை.  எவ்வளவு தான் விளக்கிக் கூறிய பிறகும் மக்கள் ஏற்காத போது மேலும் ஒரு தூதரை அனுப்பியிருக்கத் தேவையேயில்லை.

இதிலிருந்து இறைத்தூதர்களின் பணி வேதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்கிறோம்.

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறுவதும், பிரச்சாரம் செய்வதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் மூன்று தூதர்களை அனுப்பியிருக்க முடியும்.

மக்களின் கடின சித்தம், விளங்கும் திறனில் குறைவு போன்ற காரணங்களால் ஒரு தூதரால் இதை முழுமையாகச் செய்ய முடியாது என்று இறைவன் கருதும் போது அதிகமான தூதர்களை அனுப்பி வைக்கிறான்.  ஒரு வகையில் பார்த்தால் வேதத்தை விட தூதர்களுக்கு அல்லாஹ் அதிகமான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இது போன்று மற்றொரு காலகட்டத்தில் மூஸா நபியுடன் துணையாக ஹாரூன் நபியையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

35. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 25 : 35

29, 30. எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!26

31. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!

32. எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

திருக்குர்ஆன் 20 : 29, 30, 31

34. "என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்).

35. "உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 28 : 34, 35

15. "அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான்.

16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!''181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)26

திருக்குர்ஆன் 26 : 16

இவ்வசனங்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்திற்கு இரண்டு தூதர்கள் அனுப்பப்பட்டதைக் கூறுவதுடன் அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் கூறுகின்றன.

வேதத்தைக் கொண்டு போய் கொடுக்கும் வேலை மட்டும் தான் இறைத் தூதர்களுடையது என்றால் மூஸா (அலை) மட்டுமே அனுப்பப்பட்டிருப்பார்கள்.  அதுவே இந்தப் பணியைச் செய்திடப் போதிய ஏற்பாடாகும்.

மூஸா நபியவர்கள் தம்மால் தெளிவாக விளக்க முடியாது என்றும், தம்மை விட ஹாரூன் விளக்கமளிக்கும் திறன் அதிகம் பெற்றவர் என்றும் காரணம் கூறி, "ஹாரூனையும் என்னுடன் அனுப்பு' என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு மூஸா நபியை விட விளக்கும் திறமை பெற்றிருந்த ஹாரூன் நபியையும் துணையாக - தூதராக - அனுப்புகின்றான்.

மக்களுக்குப் புரியும்படி விளக்குவதும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தது என்பதை இதிலிருந்து சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இதை விட முக்கியமான மற்றொரு அம்சமும் மூஸா நபி வரலாற்றில் கவனிக்கத்தக்கதாகும்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை.  சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

மூஸா நபியும் ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.  மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.  அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்துகின்றனர்.  மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர்.  அப்போதும் வேதம் அருளப்படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.  அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர்.  ஃபிர்அவ்ன் விரட்டி விடுகின்றான்.   முடிவில் மூஸா நபியும் அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள்.   ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.  ஏழாவது அத்தியாயம் 103 வது வசனத்திலிருந்து 150 வது வசனம் வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.  103 வது வசனம் முதல் 141 வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப் பட்டதையும் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

எதிரிகள் அழிக்கப்படும் வரை அவர்களுக்கு எந்த வேதமும் அருளப்பட்டிருக்கவில்லை.  இவ்வளவு நீண்ட நெடுங்காலம் அவர்கள் எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்தனர்?  வேதமில்லாத இன்னொரு வஹீயின் மூலம் தான் அவர்கள் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும்.

தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கும் வேதம் அருளப்பட்டதற்கும் உள்ள நீண்ட கால இடைவெளியிலிருந்து வேதம் மட்டும் இறைவனால் அருளப்படுவதில்லை.  வேதமில்லாத வேறு வஹீயின் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறியலாம்.

வேதம் இல்லாமல் அவர்கள் செய்த பிரச்சாரத்தை - போதனையை - சட்ட திட்டங்களை மக்கள் நம்பியே ஆகவேண்டும்.  உமக்குத் தான் வேதம் அருளப்படவில்லையே?  வேதம் இல்லாமல் நீர் கூறுவதை ஏன் ஏற்க வேண்டும் என்று கூறக் கூடாது என்பதையெல்லாம் இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிக்கின்றன.

எனவே வேதம் மட்டும் வழிகாட்டும்.  தூதர்களின் விளக்கமோ வேத ஆதாரமில்லாத வழிகாட்டுதலோ தேவையில்லை என்று வாதிடுவது குர்ஆனுக்கே எதிரானதாகும்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 8

பி. ஜைனுல் ஆபிதீன்

4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.244 தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 14 : 4

வேதங்களைக் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் பணி, விளக்கமளிப்பது அவர்களின் பணி அல்ல என்று வாதிடுபவர்களுக்கு இவ்வசனம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.  இத்தகையோருக்கு மறுப்பு சொல்வதற்காகவே அருளப்பட்டது போல் ஒவ்வொரு வார்த்தையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமுதாயத்துக்கு ஒரு தூதரை அனுப்பும் போது வேதத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பது மட்டும் தான் அவருடைய வேலை என்றால் அம்மக்கள் பேசும் மொழியை அவர் அறிந்திருக்கத் தேவையில்லை.  நம்மிடம் கடிதத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரருக்கு நமது மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் எந்த ஒரு தூதரையும் அவரது சமுதாயத்தினர் பேசும் மொழி பேசுபவராகவே தவிர அனுப்பியதே கிடையாது என்று இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறு அனுப்பியதற்கான காரணத்தையும் அவனே கூறுகின்றான்.  அத்தூதர் அம்மக்களுக்கு விளக்க வேண்டும் என்பது தான் இறைவன் கூறும் காரணம்.

விளக்கம் கூறுவதற்காகத் தான் இறைத்தூதர்கள் அந்தச் சமுதாயத்தின் மொழியை அறிந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றார்கள் என்பதன் உட்கருத்து என்ன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வேதங்களை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அம்மக்களுக்கு அதில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் பொறுப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  விளக்கத்தை அளிக்கும் பொறுப்பு தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் அவ்விளக்கத்தை ஏற்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது என்பது தான் பொருளாகும்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தூதர்களாக அனுப்பப்பட்டவர்களின் விளக்கம் வேண்டுமானால் அவர்களின் காலத்தோடு முடிந்து விடலாம்.  உலகம் அழியும் வரை வருகின்ற மக்களுக்கு தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேதம் எவ்வாறு எல்லாக் காலத்தவர்களுக்கும் தேவையோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் உலகம் அழியும் நாள் வரை தோன்றுகின்ற அனைவருக்கும் தேவையாகும்.

வேதத்துக்கு இறைத்தூதர்கள் அளித்த விளக்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டும் கிடைத்து பின்னர் வருகின்ற சமுதாயத்திற்கு அவ்விளக்கம் கிடைக்காமல் போனால் அது அநீதியாகும்.  அல்லாஹ் எந்த மனிதருக்கும் எள்ளளவும் அநீதி இழைப்பவன் அல்ல என்று திருக்குர்ஆனிலேயே அல்லாஹ் பல இடங்களில் தெளிவுபடுத்தி விட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக விளக்கிய போதும் தெரிந்து கொண்டார்கள்.  அவர்கள் தெரிந்து கொண்ட யாவும் உலகம் உள்ளளவும் வருகின்ற மக்களுக்கு உரியதாகும்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறுவார்களேயானால் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய எல்லா வசனங்களையும் அவர்கள் நிராகரிக்கின்றார்கள்.

இறைத்தூதர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்கமளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் - இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அளித்த விளக்கம் அந்தக் காலத்துடன் முடிந்துவிட்டது என்று கூற எந்த வசனம் ஆதாரமாகவுள்ளது என்று எடுத்துக் காட்ட வேண்டும்.  இவ்வாறு கூறக் கூடிய ஒரு வசனமும் திருக்குர்ஆனில் கிடையாது.

எனவே நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டது போல் அதற்கு விளக்கமளிக்கும் அதிகாரமும் சேர்த்தே அருளப்பட்டுள்ளது.  அதுவும் இறைவனின் வஹீ தான் என்பதை இவ்வசனமும் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்து விடுகின்றது.

இது குறித்து இன்னும் பல வசனங்கள் உள்ளன.  அவற்றையும் பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 9

பி. ஜைனுல் ஆபிதீன்

150, 151. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி132 இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26

152. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4 : 150, 151, 152

திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும், இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன.

"அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம்.  வேறு சிலதை நிராகரிப்போம்'' என்று கூறுபவர்கள் மெய்யாகவே காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்கு தவறான பொருள் கொடுத்து வருகின்றனர்.  திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்கிக் காட்டுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே.  அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது.  அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது.  எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரிதான்.  இதைத் திருக்குர்ஆன் வேறு சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது.  அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.

ஏனெனில் இவ்வசனம் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.

"வயுரீதூன அன் யுபர்ரிகூ பைன ருஸுலிஹி'' என்று கூறப்பட்டால் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்ட எண்ணுகிறார்கள் என்று பொருள். 

ஆனால் இவ்வசனத்தில் "பைன ருஸுலிஹி'' (தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் "பைனல்லாஹி வருஸுலிஹி'' (அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று தான் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.

எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதைத் தான் கூறுகிறது. யாருடைய விளக்கமும் இன்றி நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருளை சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக பாரபட்சம் உள்ளது.  அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. 

அப்படியானால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன? 

இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை.  ஏனெனில் எந்த வகையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான்.  "சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம்'' என்று கூறுவதையே பாரபட்சம் காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். 

அல்லாஹ்வுடைய எல்லா அந்தஸ்தையும் தூதர்களுக்கு வழங்கி பாரபட்சமில்லாது நடக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பேன்.  அவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் கட்டளையை ஏற்க மாட்டேன் என்று கூறும் பாரபட்சத்தையே இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வாறு கூறுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.  இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் இவர்கள் தான் உண்மையாகவே காஃபிர்கள்.  இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது என்று பிரகடனம் செய்கின்றான்.

குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர்.  சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் காஃபிர்களே!

மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.

"யார் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ - மேலும் அவர்களில் எவருக்குமிடையே பாரபட்சம் காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான் என்பது தான் 152வது வசனம்.

இவ்வசனத்தில் இறைத்தூதர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை.  இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்குத் தான் - எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக - வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.

எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது.  இந்த அடிப்படையைத் தான் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

150வது வசனத்தில் "அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகிறார்களோ'' என்று கூறப்படுகின்றது.  இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது.  அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.

"தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது'' என்பது தான் இதன் கருத்து என்றால் "அல்லாஹ்வுக்கும்'' என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும்.  (இறை வேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் இவர்கள் பிடிவாதம் பிடித்தால் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே'' என்று தவறுதலாக இடம் பெற்று விட்டது.  அவனது தூதர்களுக்கு இடையே'' என்று தான் இருக்க வேண்டும் என்று கூறி குர்ஆனை நிராகரிக்கின்றார்களா?

இவ்வாறு கூறுவதும், வாதிடுவதும் தெளிவான இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் பிரகடனம் செய்த பிறகும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப் போகின்றார்களா?

வேதம் மட்டும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ அல்ல.  இறைத் தூதர்களின் விளக்கமும் வஹீ தான்.  அவற்றையும் பின்பற்றுவது அவசியம் தான் எனக் கூறும் இன்னும் பல சான்றுகள் உள்ளன.  அவற்றையும் பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர்-10

பி. ஜைனுல் ஆபிதீன்

43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.105 நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,255 அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.26

திருக்குர்ஆன் 16 : 43, 44

இவ்வசனங்களில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

1. நீர் அவர்களுக்கு விளக்குவதற்காகவும்

2. அவர்கள் சிந்திப்பதற்காகவும்

இவ்வேதத்தை உமக்கு வழங்கியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆனின் சில வசனங்களை நாம் சரியான முறையில் சிந்திப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.  வேறு சில வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்ற கருத்தை இவ்வசனங்கள் தாங்கி நிற்கின்றன.

இவ்வேதத்தைக் கொண்டு போய் மக்களிடம் ஒப்படைப்பதற்காக உம்மிடம் வேதத்தை வழங்கினேன் என்று அல்லாஹ் கூறியிருந்தால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடலாம்.

"நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை அருளினேன்'' என்று அல்லாஹ் கூறியுள்ளதால் திருக்குர்ஆனுக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பது தெளிவாகின்றது.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்!

நபிகள் நாயகம் இவ்வசனத்தின் கட்டளையை ஏற்று இவ்வேதத்துக்கு விளக்கம் அளித்தார்களா? இல்லையா?

விளக்கம் அளித்தார்கள் என்றால் அவ்விளக்கத்தை நாம் ஏற்றுச் செயல்பட வேண்டுமா? கூடாதா?

அவர்கள் விளக்கம் அளித்தார்கள் என்றால் அந்த விளக்கம் என்ன?  அவர்கள் அளித்த விளக்கத்தை நாம் எப்படி அறிந்து கொள்வது?

யுக முடிவு நாள் வரை இவர்களால் நபிகள் நாயகம் அளித்த விளக்கத்தை எடுத்துக் காட்ட இயலாது.  ஹிக்மத் எனப்படும் நபிவழியை ஏற்றுக் கொண்டால் தவிர வேறு எந்த வழியிலும் நபிகள் நாயகத்தின் விளக்கத்தை எடுத்துக் காட்டவே முடியாது.

நபிகள் நாயகத்தின் விளக்கமில்லாமல் சிந்தித்து சில வசனங்களை விளங்க முடியும் என்றாலும் அவர்களின் விளக்கம் இருந்தால் தான் விளங்க முடியும் என்ற நிலையிலும் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன.  அப்படி இருப்பதால் தான், "நீர் அவற்றை விளக்க வேண்டும்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையில்லாமல் முழுக் குர்ஆனையும் விளங்க முடியும் என்றால் "நீர் விளக்க வேண்டும்'' என்று கூறுவது பொருளற்றதாகி விடும்.

எனவே நபிகள் நாயகத்தின் விளக்கங்கள் பல வசனங்களை விளங்குவதற்கு இன்றியமையாதவையாக உள்ளன.  அந்த விளக்கங்களும் அல்லாஹ்வின் வஹீயேயாகும்.  இன்னொரு வஹீ மூலம் வழங்கப்பட்டவை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகவுள்ளன.

64. அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே256 உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

திருக்குர்ஆன் 16 : 64

"நீர் விளக்குவதற்காக இதை அருளினேன்'' என்று கூறுவதை விட "நீர் விளக்குவதற்காகவே தவிர அருளவில்லை'' என்பது அழுத்தம் நிறைந்ததாகும்.  நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் - அவர்களின் விளக்கம் இல்லாவிட்டால் இதை அருளியிருக்கவே மாட்டேன் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது.  நபிகள் நாயகத்தின் விளக்கம் எந்த அளவு முக்கியமானது என்பதற்கு இவ்வசனம் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன் அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால், "நீர் விளக்குவதற்காகவே'' என்று அல்லாஹ் கூறியிருப்பானா?  விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய வேண்டாத வேலையைச் செய்வானா?

எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையோடு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை விளங்கினார்களோ அதே விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும். விளங்க முடியும்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் குர்ஆனை முழுமையாக விளங்க முடியாது என்று அறிவிக்கும் இன்னும் பல வசனங்களும் உள்ளன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 11

பி. ஜைனுல் ஆபிதீன்

105. (முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம்.128 மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்!

திருக்குர்ஆன் 4 : 105

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும்,

குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும்.  அவ்வாறு கருதுவோரும், வாதிடுவோரும் உண்மையில் குர்ஆனையே மறுக்கின்றனர் என்பதற்கு இத்தொடரில் ஏராளமான குர்ஆன் வசனங்களைச் சான்றாக வைத்து விளக்கியுள்ளோம்.

அத்தகைய வசனங்களில் மேற்கண்ட வசனமும் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை அல்லாஹ் அருளினான்.  இக்குர்ஆனைக் கொண்டு மக்களிடம் தீர்ப்பு வழங்குமாறு சில இடங்களில் கூறிய இறைவன் இந்த வசனத்தில் குர்ஆனைக் கொண்டு எவ்வாறு தீர்ப்பு வழங்குவது என்பதைத் தெளிவுபடுத்துகின்றான்.

விளக்கம் தேவைப்படும் ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் இது தான் என்று அல்லாஹ் நபிகள் நாயகத்துக்குக் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

குர்ஆனை எவ்வாறு விளங்கிட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களைத் தேர்வு செய்து இவ்வேதத்தை அவர்களிடம் வழங்கினான்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் ஏதும் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எதைக் காட்டினானோ அது எது?  மக்களிடையே தமக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து வழங்கிய தீர்ப்புக்கள் யாவை?

அவர்களுக்குக் காட்டித் தந்ததைக் கொண்டு தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த வசனத்தின் அறிவுரையை மறுப்பவர்கள் தான் ஹதீஸ்களை - நபிகள் நாயகத்தின் விளக்கங்களை மறுக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தகத்தைப் பெற்று மக்களிடம் கொடுப்பதற்கு மட்டும் அனுப்பப்படவில்லை.  செயல்முறை விளக்கம் அளிப்பதற்காகவும் சேர்த்தே அனுப்பப்பட்டார்கள் என்பதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318

திருக்குர்ஆன் 33 : 21

உஸ்வத் - முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும். ஒருவர் கொண்டு வந்து தந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும் அப்புத்தகத்தில் உள்ளபடி நடப்பதற்கும் உஸ்வத் - முன்மாதிரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை.

"ஒரு தபால்காரர் நம்மிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தருகின்றார். அதை நாம் வாங்கிக் கொள்கின்றோம்.  பின்னர் அதை வாசிக்கிறோம். அதன் பின்னர் அதில் கூறப்பட்டவாறு செயல்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். "இவர் தபால்காரரை முன் மாதிரியாக ஆக்கிக் கொண்டார்'' என்று யாரும் கூறுவதுண்டா?  அப்படி யாரேனும் கூறினால் அவரது அறிவை நாம் சந்தேகப்பட மாட்டோமா?

இவ்வாறு கூறும் மூடர்களுக்கும், ஹதீஸ்கள் வேண்டாம் என்று கூறுவோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஏனெனில் புத்தகத்தைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது மட்டுமே நபிகள் நாயகத்தின் பணி, அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது இவர்கள் எதை மறுக்கிறார்கள்?

குர்ஆனையே மறுக்கிறார்கள். மேற்கண்ட வசனத்தையே மறுக்கிறார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன் மாதிரியாக அனுப்பப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். குர்ஆனில் கூறப்பட்டபடி வாழ்ந்தார்கள் என்பது அதன் கருத்து என்று இவர்கள் சமாளிப்பார்கள்.  அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டபடி வாழ்ந்தார்கள் என்று அறிவிப்பது தான் இவ்வசனத்தின் நோக்கமா? அவரை அப்படியே பார்த்து முழுமையாகப் பின்பற்றுங்கள் என்பது இவ்வசனத்தின் நோக்கமா?

அவர் குர்ஆன் கூறுகிறபடி நடந்தார் என்று கூறப்பட்டால் அவ்வாறு விளங்கலாம். அவர் குர்ஆன் கூறுகிறபடி நடந்தார் என்று கூறாமல் அவரைப் பார்த்து நீங்கள் நடக்க வேண்டும் என்றல்லவா கூறப்பட்டுள்ளது.  இதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? முன்மாதிரி என்றாலே செயல்முறை விளக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரி - வாழ்ந்து காட்டிய முறை தேவையில்லை என்போர் அல்லாஹ்வையே மறுப்போர். இறுதி நாளையும் மறுப்போர்.  அல்லாஹ்வின் நினைவும் அற்றவர்கள் என்ற கடுமையான எச்சரிக்கையும் இவ்வசனத்தில் உள்ளது.

இம்மூன்று நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்று இவ்வசனம் தெளிவாகவே கூறுகின்றது.

குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றாக உள்ளன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 12

தூதருக்குக் கட்டுப்படுதல்

பி. ஜைனுல் ஆபிதீன்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான்.  இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம்.

நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது.

குர்ஆனைப் பற்றிய ஆய்வும், அறிவும் இல்லாத மக்களிடம் மட்டும் தான் இத்தகையோர் பிரச்சாரம் செய்து ஏமாற்றுவார்களே தவிர நேரடியான விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.  இவர்களில் உள்ள ஏராளமான "குரூப்' களும் விவாதம் என்றால் ஓடி ஒளிபவர்களாகவே உள்ளனர். இதிலிருந்தே இவர்களின் உளுத்துப் போன வாதத்தை அறிந்து கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் பல சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.  மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளன.  இவ்வாறு அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் "அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

32. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!

"திருக்குர்ஆன் 3 : 32

132. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 3 : 132

13. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 4 : 13

69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

திருக்குர்ஆன் 4 : 69

80. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

திருக்குர்ஆன் 4 : 80

92. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை81 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 5 : 92

20. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 8 : 20)

46. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 8:46

71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9 : 71

52. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24 : 52

54. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.81

"திருக்குர்ஆன் 24 : 54

56. தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 24 : 56

33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!500 தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

திருக்குர்ஆன் 33 : 33

60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.185

திருக்குர்ஆன் 33 : 66

71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

திருக்குர்ஆன் 33 : 71

33. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 47 : 33

17. (போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

திருக்குர்ஆன் 48 : 17

14. "நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக "கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

"திருக்குர்ஆன் 49:14

13. உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாதபோது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 58 : 13

12. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதர் மீது கடமை.81

திருக்குர்ஆன் 64 : 12

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்!  தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகின்றான்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர்கள் காஃபிர்கள்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

* அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது.  ஒருவன் முஸ்லிமா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவுகோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.

தொழுகை நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய குற்றமாக குர்ஆனில் கூறப்படவில்லை.  அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் குற்றமாகக் கூறப்படுகின்றது.

எனவே, பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாலும், மிகுந்த முக்கியத்துவத்துடன் கூறப்பட்டுள்ளதாலும் இக்கட்டளையை சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்க முடியும்.

திருக்குர்ஆனை மட்டும் அல்லாஹ் வழங்கி வேறு எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் இருந்தால் - குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூறமாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறிவிடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் "இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்'' என்று கூறியிருக்க மாட்டான்.

இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான் என்பதைப் பல வசனங்களை ஆதாரமாகக் காட்டி இத்தொடரில் நிரூபித்துள்ளோம்.  இறைத்தூதரின் அந்த விளக்கங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதைத் தான் இக்கட்டளைகள் வலியுறுத்துகின்றன.

குர்ஆனில் உள்ளதை மட்டும் பின்பற்றுவது தான் ரசூலுக்குக் கட்டுப்படுவது என்று நபிவழியை மறுப்போர் கூறுவார்கள்.

அல்லாஹ் வீணான - தேவையில்லாத - குழப்பமான வார்த்தைகளைக் கூறி விட்டான் என்று அல்லாஹ்வையும் குர்ஆனையும் இழிவுபடுத்தியாவது தங்களின் மனோ இச்சையை நிலைநாட்ட எண்ணுகிறார்கள் என்பது இவர்களின் பதிலிலிருந்து தெரிகின்றது.

"இதாஅத்' என்ற மூலச் சொல்லே மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும்.

இதன் பொருளைச் சரியாக விளங்கிட அல்குர்ஆனின் 4 : 59 வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

59. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்!120 இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4 : 59

* அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

* தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

* அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன.  முதலிரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம்.  மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்?  அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒப்புக் கொள்கின்றது.  அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.  அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம்.  அலலாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து ரசூலுக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான்.  இதிலிருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டும் என்பது உறுதியாகின்றது.  "தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள் - குர்ஆனுக்குக் கட்டுப்படுவது தான்'' என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களில் 8 : 20, 24 : 54 ஆகிய வசனங்களில் ரசூலுக்குக் கட்டுப்படுவது கூடுதலாக முன்னிறுத்தப்படுகின்றது.  "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.  அவரைப் புறக்கணிக்காதீர்கள்' என்று கூறப்படுகின்றது. அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று 8 : 20 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப்பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது.

24 : 54 வசனத்தில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.

வளரும் இன்ஷா அல்லாஹ்.

தொடர் - 13

தூதரை நோக்கி வருதல்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம்.  திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம்.

61. "அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

திருக்குர்ஆன் 4 : 61

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

1. அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் 

2.  இத்தூதரின் பாலும் 

என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

குர்ஆன் மட்டும் தான் அல்லாஹ் இறக்கியருளியது, அது மட்டுமே போதும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் "இத்தூதரின் பாலும்'' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். எதையும் தெளிவாகப் பேசும் திருக்குர்ஆனில் வேண்டாத - குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய - ஒரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை என்பதை முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப்படி அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. "இத்தூதரின் பாலும்'' என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், "இத்தூதரின் பாலும்'' என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

திருக்குர்ஆனின் பால் மக்கள் வரக் கடமைப்பட்டுள்ளது போல் அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போதனைகளின் பாலும் வர வேண்டும்.  அவ்வாறு வருவது தான் குர்ஆனைப் பின்பற்றுவதாக ஆகும் என்பதை இவ்வசனம் தெளிவாகவே பிரகடனம் செய்வதை ஏற்றுக் கொள்வார்கள்.

இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இறைவன் இறக்கியருளியதன் பாலும், இத்தூதரின் பாலும் அழைக்கப்பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் "உம்மைப் புறக்கணிப்பார்கள்'' என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் வருவதை ஏற்றுக் கொண்டு, இத்தூதரின் பால் வர வேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் மட்டும் வருவோம்.  இத்தூதரின் பால் வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப்பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல்

அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல்

உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

இதே போல் 5 : 104 வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

104. "அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

"திருக்குர்ஆன் 5 : 104

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் மேலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என்று இரண்டு அடிப்படைகளின் பால் இறைவன் அழைப்பு விடுக்கின்றான்.  இரண்டையும் ஒருசேர மறுப்பவர்கள் பற்றி இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியது மட்டுமின்றி அவன் தூதரின் பாலும் மக்கள் வரவேண்டும் என்பதும், இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் இவ்வசனங்களிலிருந்து சந்தேகமற நிரூபிக்கப்படுகின்றது.

திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், "அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின் பாலும் அழைக்கப்பட்டால்'' என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது.

48. அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.234

திருக்குர்ஆன் 24 : 48

51. அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.234

திருக்குர்ஆன் 24 : 51

36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33 : 36

24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குப் பதிலளியுங்கள்! உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும்போது அவருக்கும் (பதிலளியுங்கள்.) ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 8 : 24)

அல்லாஹ்வின் பால் அழைக்கப்படுவது என்றால் திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுவது என்பது பொருள்.  தூதரின் பால் அழைக்கப்படுவது என்றால் என்ன பொருள்?  அதற்கும் திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயின் பால் அழைக்கப்படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான் எனப் பொருள் கொள்வதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை.  இன்னும் பல வசனங்கள் உள்ளன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 14

மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும்.  இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கடந்த இதழ்களில் நாம் நிரூபித்தோம்.

இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம்.

70. அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.352

திருக்குர்ஆன் 40 : 70

தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

! வேதத்தையும்

! எதனுடன் நமது தூதர்களை நாம் அனுப்பினோமோ அதனையும்

என்று இறைவன் கூறுகின்றான்.

எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான்.  இரண்டுமே இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகளேயாகும்.

நாங்கள் வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம்.  முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப்பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.

"பின்னர் அறிந்து கொள்வார்கள்' என்ற சொற்றொடரை "அவர்கள் நரகத்தையே அடைவார்கள்' என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது.  எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

17. அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். யுகமுடிவு நேரம்1 அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 42 : 17

வேதத்துடன் மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான்.  மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான்.  நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.

மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும்.  வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

குறிப்பாக இவ்வசனம் நபிகள் நாயகத்தையே நோக்கிப் பேசுகின்றது.  "கியாமத் நாள் எப்போது என்பது உமக்கு எப்படித் தெரியும்?'' என்று இவ்வசனம் முடிகின்றது.  இதிலிருந்து முந்தைய நபிமார்களைப் பற்றி இது பேசவில்லை.  நபிகள் நாயகத்தைக் குறித்தே பேசுகின்றது.

நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்ட "கிதாப்'' எனப்படுவது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட "மீஸான்'' என்பது என்ன?

இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும்.  ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.  எனவே தராசையும், வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு "குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும்' என்பதே பொருளாக இருக்க முடியும்.

இது போல் மற்ற தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இது போன்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

25. நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.423 அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 57 : 25

மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் நேர்வழி செல்வதற்காகவும் கிதாப், மீஸான் என்ற இரண்டு வழிகாட்டி நெறிகளை இறைவன் அனுப்பியுள்ளான். எனவே மீஸான் என்பது இறைத்தூதர்களின் விளக்கம் தவிர வேறு இருக்க முடியாது. (முந்தைய தொடர்களில் நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை நாம் நிரூபித்துள்ளதைப் பார்வையிடுக)

நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர்.  வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

184. (முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105

திருக்குர்ஆன் 3 : 184

25. அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105

திருக்குர்ஆன் 35 : 25

இறைத்தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப்பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்றாலும் ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத்தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம்.  அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன?  இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா?

இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும், ஸுபுரையும் அனுப்பினோம் என்று கூறுகின்றான்.

53. நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!

திருக்குர்ஆன் 2 : 53

ஃபுர்கான் என்றால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள்.  வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும், ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

! கிதாபையும் ஹிக்மத்தையும்

! கிதாபையும் ஹுக்மையும்

! கிதாபையும் இன்னொரு செய்தியையும்

! கிதாபையும் மீஸானையும்

! கிதாபையும் ஸுபுரையும்

! கிதாபையும் ஃபுர்கானையும்

என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

! உம்மை விளக்குவதற்காகவே அனுப்பியுள்ளோம்.

! விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.

! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.

! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.

! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.

! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.

! தூதர்கள் அனுப்பப்படுவதற்கான நோக்கம்.

! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

! தூதருக்கும் கட்டுப்படுங்கள்.

என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும் ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம்.

முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப்படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான்.  நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான்.  அத்தகைய சட்டங்களை வரும் இதழ்களில் காண்போம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போரின் கூற்று எந்த அளவுக்கு அறியாமை மிக்கது என்பது அதிலிருந்து உறுதியாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 15

குர்ஆன் கூறாத கிப்லா

பி. ஜைனுல் ஆபிதீன்

42. "(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக!

143. இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை.498 அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

144. (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை507 நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப் பள்ளியின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!430 "இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்று வேதம் கொடுக்கப்பட்டோர்27 அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

திருக்குர்ஆன் 2 : 142, 143, 144

இவர்கள் ஏற்கனவே திரும்பிக் கொண்டிருந்த கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டார்கள்?  என்று அறிவீனர்கள் கேள்வி எழுப்புவதாக 2:142 வசனத்தில் கூறப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், தோழர்களும் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது விட்டு, பின்னர் வேறு கிப்லாவுக்கு மாறியது எதிரிகளின் விமர்சனத்துக்கு ஆளானதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஏற்கனவே இருந்த கிப்லாவை நாம் ஏற்படுத்தியிருந்தது ஏன் என்றால் இத்தூதரைப் பின்பற்றுவது யார்? பின்பற்ற மறுத்து வந்த வழியே செல்பவர் யார்? என்பதைத் தெளிவுபடுத்தவே என்று 2:143 வசனம் கூறுகின்றது.

ஏற்கனவே இருந்த கிப்லாவை இறைவன் மாற்ற மாட்டானா? என்று ஏக்கத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து செய்தி வருவதை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். எனவே அவர்கள் விரும்பியது போலவே மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி இனிமேல் தொழுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.  இந்த விபரங்கள் 2:144 வசனத்தில் கூறப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தினார்கள்.  அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன என்று ஹதீஸ்களையும் மார்க்க ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் கூறுவார்கள்.

ஹதீஸ்களை மார்க்க ஆதாரங்களாகக் கொள்ளாதவர்களால் ஏற்கனவே இருந்த கிப்லா எது என்பதற்கு விளக்கம் கூற முடியாது.  ஆயினும் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கித் தொழுது வந்தனர்.  பின்னர் கஅபாவை நோக்கித் தொழுமாறு கட்டளையிடப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது.

ஏனெனில் ஒரு கிப்லாவிலிருந்து மறு கிப்லாவுக்கு மாற்றப்பட்ட விபரம் இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரங்களாகும்.  நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் அல்ல எனக் கூறுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இதுதான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் ஒரு திசையிலும் பின்னர் ஒரு திசையிலும் தொழுதார்கள் அல்லவா?  இவ்விரண்டு காரியங்களில் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளை, உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்ற சொற்கள் மூலம் பிறப்பிக்கப்பட்டது.  (2 : 144)

அதற்கு முன் மற்றொரு திசையை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்களே, அந்தத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளையும் குர்ஆனில் இருக்க வேண்டும்.  குர்ஆனில் இல்லாத எதுவும் மார்க்கமாக முடியாது என்பது உங்கள் கொள்கை.

முன்னர் ஒரு திசையை நோக்கித் தொழுதார்கள் என்ற தகவல் தான் மேற்கண்ட வசனங்களில் உள்ளது.  அந்தத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளை முழுக் குர்ஆனில் எந்த இடத்திலும் பிறப்பிக்கப்படவில்லை.

குர்ஆனில் கட்டளையிடப்படாத திசையை நோக்கி நபிகள் நாயகம் தொழுதது எதனடிப்படையில்?  எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?  இந்தக் கேள்விக்கு குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் கியாமத் நாள் வரையிலும் பதில் சொல்ல முடியாது.

பைத்துல் முகத்தஸை (அவர்கள் கருத்துப்படி ஏதோ ஒரு திசையை) நோக்கித் தொழுதது இறைவனின் வழிகாட்டுதலின் படி இல்லை, முஹம்மது நபியின் சொந்த அபிப்பிராயத்தின் படி தான் என்று இவர்கள் கூறுவார்களானால் இச்செயலை இறைவன் கண்டித்திருக்க வேண்டும். இதற்காக நபியவர்கள் கண்டிக்கப்பட்ட வசனத்தையும் இவர்களால் குர்ஆனில் எடுத்துக் காட்ட முடியாது.

இறைவன் இந்தக் கிப்லாவிலிருந்து வேறு கிப்லாவுக்கு மாற்ற மாட்டானா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி வானத்தை நோக்கியிருக்கிறார்கள் என்று 2 : 144 வசனம் கூறுகின்றது. அப்படியானால் முதலில் அவர்கள் நோக்கிய கிப்லாவை அவர்களாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களாக ஏற்படுத்தியிருந்தால் அவர்களாகவே அதை மாற்றியிருப்பார்கள்.  முதல் கிப்லா குறித்த கட்டளையையும் இறைவன் தான் பிறப்பித்திருக்கிறான் என்பதாலேயே அதை மாற்றுவதற்கான செய்தியை எதிர் நோக்கி வானத்தைப் பார்க்கிறார்கள் என்பதை அறியலாம்

எனவே மாற்றப்பட்ட முதல் கிப்லாவும் இறைவனின் கட்டளைப்படி தான் தொழும் திசையாக ஆக்கப்பட்டது என்பதைச் சந்தேகமற இதிலிருந்து அறிய முடியும்.

ஏற்கனவே இருந்த கிப்லாவும் இறைக் கட்டளைப்படி தான் தொழும் திசையாக ஆக்கப்பட்டிருப்பது சந்தேகமற உறுதியாகும் போது அதற்கான கட்டளை குர்ஆனில் நிச்சயமாக இருக்க வேண்டும்.  இவ்வசனத்தையே அதற்கான கட்டளை என்று கூறி சமாளிக்கக் கூடாது.  பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுங்கள் என்று எந்தக் கட்டளையும் இங்கே கூறப்படவில்லை.  நீங்கள் ஏற்கனவே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதது எனது கட்டளையின் படி தான் என்ற தகவல் மட்டுமே இங்கே உள்ளது.

இங்கு தான் உண்மை தெளிவாகின்றது.

பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுமாறு கட்டளை பிறப்பித்தவன் இறைவன் தான் என்பது உண்மை.  அந்தக் கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை.  அப்படியானால் இறைவன் கூறுவது பொய் என இவர்கள் கூறப் போகின்றார்களா? (நவூதுபில்லாஹ்)

இறைவன் கட்டளை பிறப்பித்ததும் உண்மை, அக்கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை.  இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றாவது உண்மை, இறைவன் கட்டளை யாவும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இறைத்தூதர்களின் உள்ளங்களில் ஜிப்ரீலின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான்.  அதுவும் இறைக் கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.

ஜிப்ரீல் வழியாக இல்லாமல் வேறு வழியில் பிறப்பித்த கட்டளையை அது குர்ஆனில் இல்லாத போதும் தனது கட்டளையாக இறைவன் கருதுவதே அறிவுடைய மக்களுக்குப் போதிய சான்றாகும்.

இதை நாம் அனுமானமாகக் கூட கூறவில்லை.  அல்லாஹ்வே இதைத் தெளிவாகக் கூறுகின்றான்.

இத்தூதரைப் பின்பற்றுபவர் யார்?  வந்த வழியே திரும்புபவர் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக முந்தைய கிப்லாவை நாம் ஆக்கினோம்.

எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள். குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறக் கூடிய இவர்களுக்காகவே இறங்கியது போல் இது இருக்கவில்லையா?

இந்தக் கட்டளை குர்ஆனில் இல்லை தான், ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம்.  குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேச மாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்ததாக இறைவன் பிரகடனம் செய்கின்றான்.

அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையை குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத்தூதர் வழியாக அவன் பிறப்பித்துள்ளான். இறைத்தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

குறிப்பு:  2 : 143 வசனத்தில் அடிக்கோடிட்ட பகுதிகள் தாம் சரியான மொழிபெயர்ப்பாகும்.  தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இந்த இடம் தவறாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  கஅபாவை நோக்குமாறு இப்போது கட்டளையிட்டது நபியைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டவே, என்ற கருத்துப் பட அம்மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.  கஅபாவுக்கு முன் இருந்த பழைய கிப்லாவை ஏற்படுத்தியது நபியைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டவே என்று நாம் செய்துள்ள மொழிபெயர்ப்புத் தான் சரியானதாகும். 

அல்லதீ குன்த அலைஹா (நீர் ஏற்கனவே இருந்த கிப்லா) என்ற சொற்றொடரைக் கவனிக்காமல் இந்தத் தவறு தமிழ் மொழி பெயர்ப்புக்களில் காணப்படுகின்றது.

அறைகூவல்

குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்போருக்கு அல்முபீன் மாத இதழ் ஒரு அறைகூவல் விடுகின்றது.

பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையைக் கூறும் குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டினால் ஐந்து லட்சம் ரூபாய்கள் அன்பளிப்பாக வழங்க நாம் தயாராக உள்ளோம்.

இந்த வசனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட காரணத்தால் இதிலிருந்து எழுகின்ற வேறு சில கேள்விகளையும் எழுப்புவது பொருத்தமாக இருக்கும்,

இவ்வசனங்களில் எந்த இடத்திலும் தொழுகைக்காக மஸ்ஜிதுல் ஹராமை முன்னோக்குங்கள் எனக் கூறப்படவில்லை. மாறாக கிப்லா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஸின் விளக்கத்தை ஓரம் கட்டிவிட்டு கிப்லாவுக்குப் பொருள் கொள்வது என்றால் முன்னோக்கும் திசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையையே முன்னோக்குங்கள் என்று 2 : 144  வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்பு என்று 2 : 149 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு, நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 150வது வசனம் கூறுகின்றது.

இவ்வசனங்களில் தொழும் போது இவ்வாறு செய்யுமாறு கூறப்படவில்லை.

பிரயாணம் செய்யும் போது கஅபாவை நோக்கியே பயணம் செய்ய வேண்டும் என்பது தான் ஹதீஸ் துணையின்றி விளங்கும் போது தெரியும் விஷயமாகும்.  எனவே இந்திய முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் எந்தப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் ஏறத்தாழ மேற்கு நோக்கியே பயணம் செய்ய வேண்டும். அத்திசையில் தான் கஅபா உள்ளது என்று இவர்கள் வாதிடுவார்களா?

வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது. புறப்பட்டால் கஃபாவை நோக்கியே புறப்படு என்பது தான் மேலோட்டமாக இடப்பட்ட கட்டளை.

அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் அதை மட்டுமே நோக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களின் கட்டளையாகும். நாட்டின் பிரதமரை நாம் சந்திக்கச் செல்கின்றோம். அவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.  நாமும் அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தால் தான் கஃபாவை நோக்க முடியும்.  எங்கிருந்த போதும் அத்திசையையே நோக்குங்கள் என்ற கட்டளையை அப்போது தான் செயல்படுத்த முடியும்.

இது தொழுகையில் எங்கே முன்னோக்குவது என்பது குறித்து அருளப்பட்ட வசனங்கள் எனக் கூறும் ஹதீஸ்களை அலட்சியப்படுத்தினால் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழிபெயர்ப்புகளில் (தொழுகையின் போது) என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருப்பது அரபு மூலத்தில் இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் சேர்த்ததாகும். 

இதுபோன்ற கேள்விகள் அவர்களது குருட்டுக் கண்களைத் திறக்க உதவும் என்பதற்காக இதை நாம் குறிப்பிடுகின்றோம்.  முந்தைய கிப்லா பற்றிய கட்டளை குர்ஆனில் இல்லை என்பதே அடிப்படையான வாதம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷாஅல்லாஹ்

தொடர் - 16

நபிகளார் விதித்த தடையும் அல்லாஹ்வின் அங்கீகாரமும்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனில் கூறப்படாத பல சட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு, அது திருக்குர்ஆனாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக "கிப்லா மாற்றம்' பற்றிய செய்தியைக் குறிப்பிட்டோம்.

அதுபோல் அமைந்த மற்றொரு சட்டத்தைக் காண்போம்.

187. நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.465 உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவன் உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழைபொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2 : 187

நோன்புக் கால இரவுகளில் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வசனம் துவங்குகின்றது.  இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் நோன்புக் காலத்தில் இரவுகளில் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவதை விட தடை செய்யப்பட்டிருந்தது என்றே கூறலாம்.

"நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்து வந்தீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே உங்களை மன்னித்தான்'' என்ற சொற்றொடரிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வசனம் அருளப்படுவதற்கு முன் நோன்பின் இரவுகளில் மனைவியருடன் கூடுவது தடுக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தடையைப் பலராலும் கடைப்பிடிக்க இயலவில்லை.  உணர்ச்சி வசப்பட்டு இத்தடையை சிலர் மீறவும் செய்தனர்.  "உங்களுக்கே நீங்கள் துரோகம் செய்ததை அல்லாஹ் அறிவான்'' என்று இதைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.  இதற்கு முன் இத்தடையை மீறியதை மன்னித்து விட்டதாகவும் கூறுகின்றான்.

அதைத் தொடர்ந்து "இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்'' என்று கூறியதன் மூலம் இதற்கு முன் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றான்.

இந்த வசனத்தை ஓரளவு ஈடுபாட்டுடன் கவனிக்கும் யாரும் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆன் மட்டுமே போதும் என்று வாதிடக் கூடியவர்களிடம் - ஹதீஸ் தேவையில்லை என்று சாதிக்கக் கூடியவர்களிடம் - நாம் கேட்க விரும்புவது இதுதான்.

நோன்புக் கால இரவில் மனைவியருடன் கூடுவது இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வசனம் கூறுகின்றது. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததையும் கூறுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும் என்றால் அந்தத் தடை குர்ஆனில் இருக்க வேண்டும். "நோன்பாளிகளே! ரமளானின் இரவுக் காலங்களிலும் மனைவியருடன் சேரக்கூடாது'' என்ற தடையை கியாமத் நாள் வரை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டவே முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்ததைத் தான் அல்லாஹ் தன்னுடைய தடையாக எடுத்துக் கொள்கின்றான். இப்போது முதல் அனுமதிக்கின்றேன் என்று கூறுகின்றான். இதற்கு முன் நடந்ததை மன்னிக்கிறேன் என்றும் கூறுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாதிருந்தால் அவர்கள் தடை செய்ததற்காக அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை.

நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறிவிட்டார் என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்.  நபி கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான்.  என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறுகின்றான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல.  நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான்.  அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.!

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 17

தடுக்கப்பட்ட இரகசியம்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச் செய்தி தான்.  அதையும் கண்டிப்பாக ஏற்று ஆக வேண்டும் என்பதை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகின்றோம்.  அந்த வரிசையில் மற்றோர் ஆதாரத்தைப் பார்ப்போம்.

8. இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?286 பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் எரிவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

திருக்குர்ஆன் 58 : 8

9. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மையையும், இறையச்சத்தையும் இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

திருக்குர்ஆன் 58:9)

இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்தியுங்கள்.

* இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.

* இத்தடையை சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.

* அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு கெட்ட காரியங்களை இரகசியம் பேச வேண்டாம், நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம் என்றும் கட்டளை இதன் பின்னர் வந்தது,

இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட 58 : 8,9 வசனங்களில் இருந்து அறியலாம்.

குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரம்! நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்பது உண்மையாக இருந்தால் ஏற்கனவே இரகசியம் பேசுவதை விட்டும் அடியோடு தடுக்கப்பட்டார்களே அந்தத் தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அடியோடு இரகசியம் பேசுவதைத் தடை செய்யும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

"இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?'' என்று திருக்குர்ஆன் கேட்பதிலிருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம்.  அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள் தான் குர்ஆனில் உள்ளனவே தவிர தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆனிலிருந்து இந்தத் தடையை எடுத்துக் காட்டவே இயலாது.

குர்ஆனில் தடுக்கப்படாத ஒன்று எப்படி தடுக்கப்பட்டதாக ஆகும்?  இறைத் தூதர் தடை செய்ததைத் தான் இது குறிக்கின்றது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனில் அல்லாஹ் தடை செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தது குற்றமாக இருந்திருந்தால் - நீர் எப்படி தடை செய்யலாம்? என்று அல்லாஹ் பிடித்திருக்க வேண்டும். குர்ஆனில் கூறாததை நீர் எப்படி தடுக்கலாம்? என்று இறைவன் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த தடையை மீறி நடந்து கொண்டவர்களைத் தான் அல்லாஹ் கண்டிக்கின்றான்.

திருக்குர்ஆன் மூலமாக மட்டுமன்றி இன்னொரு வஹீயின் மூலம் - இறைத்தூதரின் உள்ளத்தில் தன் கட்டளையைப் பதியச் செய்வதன் மூலம் - சட்ட திட்டங்களை வழங்குவான் என்று நாம் தக்க சான்றுகளுடன் குறிப்பிட்டது இதன் மூலம் மேலும் உறுதியாகின்றது.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் இத்தடையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டவே முடியாது எனும் போது தங்கள் வாதம் குர்ஆனுக்கே எதிரானது என்பதை உணர வேண்டும்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போர் குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றனர்.

அல்லாஹ் இரகசியம் பேசுவதைத் தடுத்ததாகக் கூறுகின்றானே! அந்தத் தடை குர்ஆனில் இல்லையே! தடுக்காத ஒன்றை தடுக்கப்பட்டதாகக் கூறி குர்ஆன் தவறான தகவலைத் தருகின்றதே! இது எவ்வாறு இறைவேதமாக இருக்க முடியும் என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்பினால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை என்று கூறக்கூடியவர்களால் தக்க பதில் கூற முடியும். அது தேவையில்லை என்போர் தக்க பதில் கூற முடியாது.

குர்ஆன் மீது சந்தேகத்தை எழுப்பும் வாதம் ஒரு போதும் சரியானதாக இருக்க முடியாது.

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளது.  அதுவும் மார்க்க ஆதாரம் தான் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.  அவற்றையும் பார்ப்போம்.             வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர் - 18

பன்னிரு மாதங்கள்

மனிதர்களுக்கு நல்வழி காட்ட விரும்பிய இறைவன் மனிதர்களிலேயே தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் வழியாக வேதத்தை வழங்கினான். இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனை வழங்கி அதன் மூலம் மனித குலத்துக்கு நல்வழி காட்டினான்.

*திருக்குர்ஆனில் சில வசனங்கள் மேலோட்டமாகப் பார்த்தாலே அதன் முழுமையான விளக்கம் தெரிந்து விடும் வகையில் அமைந்துள்ளன.

*வேறு சில வசனங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது அதன் பொருள் மட்டும் தான் தெரியும். அதன் முழுமையான பொருளை ஆழமாகச் சிந்தித்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.

*இன்னும் சில வசனங்கள் உள்ளன. அவற்றை முழுமையான ஈடுபாட்டுடன் ஆய்வு செய்தாலும் அதன் முழுமையான பொருளை விளங்க முடியாமல் உள்ளன.

இத்தகைய வசனங்கள் குர்ஆனில் இருப்பதால் நமக்கு எந்தக் குழப்பமும் வரத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய வசனங்களை எவ்வாறு விளங்குவது என்பதற்கான வழிமுறையையும் அல்லாஹ் நமக்குக் கூறியுள்ளான்.

வேதத்தை இறைவனிடமிருந்து பெற்று நமக்குத் தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது விளக்கத்தின் மூலம் குழப்பமின்றி இத்தகைய வசனங்களை விளங்க முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைப் பின்பற்றுவது அவசியம் என்பதையும் அவர்கள் தமது சொல், செயல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் அளித்த விளக்கங்களும் இறைவனின் வஹீ மூலம் கிடைத்தவையே என்பதையும் திருக்குர்ஆன் சான்றுகளுடன் இத்தொடரில் நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மாட்டோம் எனக் கூறுபவர் உண்மையில் குர்ஆனையே மறுக்கிறார். அவர் முஸ்லிம் அல்ல என்பதையும் திருக்குர்ஆனிலிருந்தே நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் விளங்க முடியாத வசனங்களின் வரிசையில் கீழ்க்காணும் வசனமும் இடம்பெற்றுள்ளது.

36. வானங்களையும்,507 பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்157 உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.55 இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்!53 அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 9:36

உலகம் படைக்கப்பட்டது முதல் மாதங்களின் எண்ணிக்கை 12 என்பது பளிச்சென்று விளங்கி விடுகிறது. ஆழமாகச் சிந்தித்தால் மிகப் பெரிய அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பதும் விளங்கும்.

ஆனால் அம்மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது எனவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு வசனத்தில் மட்டுமின்றி இன்னும் பல வசனங்களிலும் புனித மாதங்கள் பற்றியும் அவற்றில் போரிடக் கூடாது என்பது பற்றியும் திருக்குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுகிறது.

194. புனித மாதத்துக்கு55 (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான்49 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:194

217. புனித மாதத்தில்55 போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், (கஅபா எனும்) புனிதப் பள்ளியை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (புனிதப்பள்ளிக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:217

நான்கு புனிதமான மாதங்கள் உள்ளன என்பதை மட்டும் கூறாமல் அம்மாதங்களுடன் தொடர்புடைய - நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சட்டமும் இவ்வசனங்களில் கூறப்படுகின்றது. எனவே அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை அறிவது அனைத்து முஸ்லிம்களுக்கும் அவசியமாகின்றது.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடுவோர், குர்ஆனில் கூறப்பட்ட அனைத்தையும் குர்ஆனிலிருந்து மட்டுமே விளங்கிட முடியும் எனச் சாதிப்போர் அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை கியாமத் நாள் வரை எவராலும் எடுத்துக் காட்ட முடியாது. சுயமாக வாயில் வந்தவாறு உளற முடியுமே தவிர குர்ஆனிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாராலும் எடுத்துக் காட்ட முடியாது.

இவ்வாறு எடுத்துக் காட்டுவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று பல முறை நம்மால் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யப்பட்டது. ஆயினும் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று சாதிப்பவர்கள் இதற்குப் பதிலளிக்க முடியவில்லை. இந்த வசனம் குர்ஆனில் இல்லாதது போல் மெள்ள நழுவி விடுவதைத் தான் நாம் காண்கிறோம்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை எனும் போது, நான்கு மாதங்கள் யாவை என்பதை எடுத்துக் காட்ட இயலாத போது அவர்களின் அடிப்படையான வாதம் அடிபட்டுப் போகின்றது.

ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய நான்கு மாதங்கள் தாம் புனிதமானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளதை நம்புவோருக்கு இவ்வசனத்தை விளங்குவதிலோ, நம்பிக்கை கொள்வதிலோ எந்தக் குழப்பமும் ஏற்படாது.

ஆனால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுவோரின் நிலை என்ன? குர்ஆனில் அறவே விளங்க முடியாதவைகளும் உள்ளன என்பது தான் அவர்களின் நிலை.

"அனைத்தையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது'' என்ற கருத்தில் அமைந்த பல வசனங்களுக்கும் 9:36 வசனத்துக்கும் முரண்பாடு உள்ளது என்று உலகத்துக்குச் சொல்வது தான் இவர்களது வாதம் ஏற்படுத்திய விளைவு!

இவர்களின் வாதத்தை ஏற்பவர்கள் இறுதியில் குர்ஆனிலேயே சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பது தான் இதனால் ஏற்படும் பயன்.

குர்ஆன் தன்னைத் தானே தெளிவாக்கக் கூடியது என்று இறைவன் கூறுகிறான். விரிவாக அனைத்தையும் விளக்கியுள்ளேன் என்றும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் நான்கு மாதங்கள் புனிதமானவை என பொத்தாம் பொதுவாகக் கூறுகிறானே! இறைவன் கூறியது போல் இது தெள்ளத் தெளிவாக இல்லையே என்ற எண்ணம் வலுப்பெற்று முடிவில் குர்ஆன் மீதே நம்பிக்கை இழப்பதைத் தவிர அந்த வாதத்தினால் உருப்படியான எந்த விளைவும் ஏற்படாது.

இது போலவே அமைந்த மற்றொரு வசனத்தைப் பாருங்கள்!

197. ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.57 அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

திருக்குர்ஆன் 2:197

ஹஜ் எனும் கடமையை நிறைவேற்றும் காலம் "சில மாதங்கள்' என்று இறைவன் கூறுகிறான். ஒரு மாதம் எனக் கூறவில்லை. மாதங்கள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளதால் குறைந்தது மூன்று மாதங்கள் என்று இதன் பொருள். ஏனெனில் அரபு மொழியில் இரண்டைக் குறிக்க தனிச் சொல் (இருமை) உள்ளதால் பன்மையாகக் கூறப்படும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.

ஹஜ் செய்வதற்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் யாவை என்பது குர்ஆனில் எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மாட்டோம் என்று வாதிடுவோரிடம் ஹஜ்ஜுக்குரிய மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டால் அவர்களால் கியாமத் நாள் வரை எடுத்துக் காட்ட முடியாது.

எப்போது எடுத்துக் காட்ட முடியவில்லையோ அப்போது குர்ஆனை விளங்கிட இன்னொன்றின் துணை அவசியம் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். எப்போது இன்னொன்றின் துணை அவசியம் என்பதை ஒப்புக் கொண்டார்களோ அப்போது குர்ஆன் மட்டும் போதும் என்ற தங்கள் வாதத்தைத் தாங்களே மறுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலை தானாகவே ஏற்பட்டு விடும்.

ஹஜ்ஜில் தமத்துஃவ் என்று ஒரு வகை உண்டு. இந்த வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரமிலேயே தொடர்ந்து இருந்து ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றலாம். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன என்பதை நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்பவர்களால் கூற முடியும். அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என்போர் இவ்வசனத்தின் விளக்கத்தை அறியாத நிலையைச் சந்திக்கும் போது குர்ஆனிலேயே சந்தேகம் கொண்டவர்களாக ஆவார்கள்.

இது போன்ற வசனங்கள் இன்னும் உள்ளன.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

தொடர் - 19

இறைவனின் வாக்குறுதி

பி. ஜைனுல் ஆபிதீன்

7. "எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்!358 ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள்155 மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.196

"திருக்குர்ஆன் 8:7

இறைவனால் தூதர்களாக நியமிக்கப்படுவோருக்கு வேதத்தை மட்டும் இறைவன் வழங்குவதில்லை.  மாறாக வேதம் அல்லாத வேறு செய்திகளையும் அவர்களுக்கு இறைவன் அறிவிப்பான்.  வேதத்தில் எழும் சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் தூதர்களுக்கு வழங்குவான் என்பதற்கு ஏராளமான சான்றுகளை இத்தொடரில் நாம் கண்டு வருகின்றோம்.

மேற்கண்ட வசனமும் இது போன்ற கருத்தைத் தரும் மற்றொரு வசனமாகும்.

இவ்வசனம் நேரடியாகக் கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக பயணம் செய்து வந்தனர்.

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுத்தாக வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் புகுந்து பயணம் மேற்கொள்பவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும் தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.

இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது.  வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படைபலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்.  வணிகக் கூட்டத்தை வழிமறித்து பொருட்களைப் பறிமுதல் செய்தால் இத்தகவல் கிடைத்ததும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்றும் கணக்குப் போட்டனர்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள்.  எதிரிகளை "பத்ர்' என்னும் இடத்தில் எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி தான் இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.  இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வணிகக் கூட்டம்

அவர்களைக் காப்பாற்ற வந்த மக்காவின் இராணுவம்

இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று முன்னரே அல்லாஹ் வாக்களித்துள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது.

இறைவனின் இந்த வாக்குறுதியைப் பெற்ற பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

இப்போது நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம்.

இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை வெல்வீர்கள் என்று இறைவன் வாக்களித்தால் அந்த வாக்குறுதி குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும். குர்ஆன் மட்டுமே இறைச் செய்தி என்ற வாதத்தின்படி நிச்சயமாக இத்தகைய ஒரு வசனம் குர்ஆனில் இருந்தாக வேண்டும்.

ஏனெனில் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவு படுத்துகின்றான்.  எனவே இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் முழுவதும் தேடினாலும் இக்கருத்தைச் சொல்லும் வசனம் ஏதும் இல்லை. இறைவன் வாக்களித்ததாகக் கூறுகின்றான். ஆனால் அந்த வாக்குறுதி குர்ஆனில் இல்லை.

குர்ஆன் மட்டுமே போதும் என்பவர்கள் இப்போது குர்ஆன் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாகி விடுகின்றனர்.  குர்ஆன் உண்மைக்கு மாற்றமான செய்தியைக் கூறுகின்றது என்ற கருத்தை இத்தகையோர் ஏற்படுத்துகின்றனர்.

குர்ஆன் மட்டுமின்றி வேறு வகையிலும் இறைவன் புறத்திலிருந்து செய்திகள் இறைத் தூதர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவோருக்குக் குர்ஆன் மீது எந்தச் சந்தேகமும் ஏற்படாது.  ஏனெனில் இறைவன் அளித்த அந்த வாக்குறுதி குர்ஆனில் உள்ளதா என்று தேடிப் பார்ப்பார்கள்.  குர்ஆனில் இல்லாத போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தேடிப் பார்ப்பார்கள்.  "எனக்கு என் இறைவன் இரண்டு கூட்டத்தில் ஒன்றை வாக்களித்துள்ளான்'' என்ற நபிமொழியைக் காண்பார்கள்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் முடிவில் நாத்திகர்களாக மாறும் இழிவைச் சந்திப்பதற்கு அவர்களின் தவறான கொள்கையே காரணமாக அமைந்து விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் அல்லாத மற்றொரு வகையிலும் செய்தியை இறைவன் வழங்குவான் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account