Sidebar

22
Sun, Dec
38 New Articles

விலக்கப்பட்ட உணவுகள்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விலக்கப்பட்ட உணவுகள்

நூலின் பெயர்: விலக்கப்பட்ட உணவுகள்

ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்

விலை ரூபாய்: 10.00

பக்கங்கள் : 48

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

விலக்கப்பட்ட உணவுகள்!

அசைவ உணவுகளில் உண்பதற்கு தடை செய்யப்பட்டவை எவை?

அனுமதிக்கப்பட்டவை எவை?

தடை செய்ய்ப்பட்டவைகள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப்படும்

என்பன போன்ற விபரங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • செத்தவை
  • இரத்தம் விலக்கப்பட்டதாகும்
  • ஓட்டப்பட்ட இரத்தம்
  • பன்றியின் மாமிசம்
  • அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை.
  • நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது
  • தடை செய்யப்பட்ட உயிரினங்கள்
  • கடல் வாழ் உயிரினங்கள்
  • பறவையினங்கள்
  • விலங்கினங்கள்
  • புழு, பூச்சியினங்கள்
  • கேடு விளைவிப்பவை

விலக்கப்பட்ட உணவுகள்

செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன்.

திருக்குர்ஆன் 2:173

இந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள் யாவை. அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் எவை ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது.

திருக்குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய வசனங்களில் இந்த வசனமும் ஒன்றாகும்.

இந்த வசனத்தையும் இது போன்ற வசனங்களையும் அவற்றின் மேலோட்டமான பொருளில் புரிந்து கொண்டால் ஏனைய வசனங்களை மறுக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் இவ்வசனம் பற்றி நாம் விரிவாக ஆராய்கின்றோம்.

செத்தவை

விலக்கப்பட்ட உணவுகளில் செத்தவை இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. செத்தவைகளை உண்ணக்கூடாது என்றால் அடித்தோ, கழுத்தை நெறித்தோ, வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது. செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அது தான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, சாகடிக்கப்பட்டவை அனைத்தும் செத்தவை என்பதில் அடங்கும்.

கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் அடிப்பட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும் முட்டப்பட்டுச் செத்ததும், வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் 5:3 வசனத்தில் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

செத்தவை என்பது முறையாக அறுக்கப்படாதவற்றைக் குறிக்கும் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

முறையாக அறுக்கப்படாதவைகளை உண்ணக்கூடாது என்பதையும் பொதுவாக விளங்கிக் கொள்ளக்கூடாது. விலங்கினத்தையும், பறவையினத்தையும், மட்டுமே இது குறிப்பிடுகின்றது. கடல்வாழ் பிராணிகள் செத்தாலும் அந்தச் சாவு எந்த முறையில் ஏற்பட்டாலும் அவற்றை உண்ணலாம்.

இந்த வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

سنن الترمذي 

69 - حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، ح، وحَدَّثَنَا الأَنْصَارِيُّ إِسْحَاقُ بْنُ مُوسَى،  قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ مِنْ آلِ ابْنِ الْأَزْرَقِ، أَنَّ المُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَرْكَبُ البَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا القَلِيلَ مِنَ المَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنَ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الحِلُّ مَيْتَتُهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 64, நஸாயீ 59,330, அபூதாவூத் 76, இப்னுமாஜா 370, 381, 382, 3237, அஹ்மத் 8380, 8557, 8737, 14481, முஅத்தா 37, தாரிமி 723, 1926, இப்னு குஸைமா 111, 112, இப்னு ஹிப்பான் 1243, 1244, 5258, ஹாகிம் 491, 492, 493, 498, 4997

திருக்குர்ஆன் 2:173 வசனத்தில் செத்தவை ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. உண்பதற்கு ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறாமல் ஹராமாக்கப்பட்டுள்ளன என்று பொதுவாகக் கூறப்படுகின்றது.

உண்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. வேறு எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்வதா? அல்லது உண்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. வேறு வகையில் பயன்படுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்வதா?

இது பற்றி ஆதாரப்பூர்மான ஹதீஸ்களை நாம் ஆராயும் போது முரன்பட்ட இரு கருத்துக்களுக்கும் சான்றாக ஹதீஸ்களைக் காண முடிகின்றது. ஆனாலும் இந்த இரு வகையான ஹதீஸ்களையும் இணைத்து சிந்திக்கும் போது முரண்பாடற்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

صحيح البخاري

1492 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»

மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாகக் கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் இது தானாகச் செத்ததாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை உண்பது தான் ஹராம் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 1492, 2221, 5531, 3592, 3597, முஸ்லிம் 542, 543, 544, 546, அஹ்மத் 2251, 2861, 2894, 3273, 3282, 3341, 25568, , அபூதாவூத் 3592, 3597, நஸாயீ 4162, 4163, 4164, 4165, 4166, 4188, இப்னுமாஜா 3600, 3601

مسند أحمد بن حنبل

 3027 - حدثنا عبد الله حدثني أبي ثنا عفان ثنا أبو عوانة عن سماك عن عكرمة عن بن عباس قال ماتت شاة لسودة بنت زمعة فقالت : يا رسول الله ماتت فلانة يعني الشاة فقال فلولا أخذتم مسكها فقالت نأخذ مسك شاة قد ماتت فقال لها رسول الله صلى الله عليه و سلم إنما قال الله عز و جل { قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير } فإنكم لا تطعمونه ان تدبغوه فتنتفعوا به فأرسلت إليها فسلخت مسكها فدبغته فأخذت منه قربة حتى تخرقت عندها

تعليق شعيب الأرنؤوط : صحيح

ஸவ்தா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆடு செத்துவிட்டது. அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இந்த ஆடு செத்துவிட்டது என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா? என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள் செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செத்தவை. ஓட்டப்படும் இரத்தம், பன்றியின் இறைச்சி - நிச்சயமாக அது அசுத்தமாகும் - மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை தவி வேறெதுவும் உண்பவர் மீது ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் காணவில்லை என்று கூறுவீராக (6:145) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நீங்கள் உணவாக இந்தத் தோலை உட்கொள்ளவில்லையே? பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்! எனவும் கூறினார்கள். உடனே ஸவ்தா (ரலி) அவர்கள் செத்த ஆட்டின் தோலை உரித்து வர ஆளனுப்பினார்கள். அதைப்பாடம் செய்து அதிலிருந்து தண்ணீர்ப்பை தயாரித்துக் கொண்டார்கள். அது கிழியும் வரை அவர்களிடம் இருந்தது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2870

ஆதாரப்பூர்வமான இவ்விரு ஹதீஸ்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்த ஹதீஸில் செத்த ஆட்டின் தோலைப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அனுமதிக்கிறார்கள். உண்பவர் மீது, உணவாக, உண்பது தான் ஹராம் ஆகிய வார்த்தைகள் தாமாகச் செத்தவற்றை உண்பது மட்டுமே ஹராம், வேறு வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிவிக்கின்றன.

இதற்கு முரணாக அமைந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

صحيح البخاري

2236 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»، قَالَ أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَيَّ عَطَاءٌ، سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

மதுபானம், செத்தவை, பன்றி, (மாற்றாரின்) வழிபாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பதை அல்லாஹ் விலக்கியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் தூதரே! செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்! என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாது. அது ஹராம் தான் என்று கூறிவிட்டு யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பை ஹராமாக்கியவுடன் அதை உருக்கி விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிடலானார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, அஹ்மத் 6702, அபூதாவூத் 3025, திர்மிதீ 1218, நஸாயீ 4183, 4590, இப்னுமாஜா 2158, 13948

مسند أحمد بن حنبل

 2221 - حدثنا عبد الله حدثني أبي ثنا على بن عاصم أنا الحذاء عن بركة أبي الوليد أنا بن عباس قال : كان رسول الله صلى الله عليه و سلم قاعدا في المسجد مستقبلا الحجر قال فنظر إلى السماء فضحك ثم قال لعن الله اليهود حرمت عليهم الشحوم فباعوها وأكلوا أثمانها وان الله عز و جل إذا حرم على قوم أكل شيء حرم عليهم ثمنه

تعليق شعيب الأرنؤوط : صحيح

ஒரு கூட்டத்தினருக்கு ஒரு பொருளை உண்பதற்கு அல்லாஹ் ஹராமாக்கினால் அதன் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்கள்: அஹ்மத் 2111, 2546, 2889, அபூதாவூத் 3026

உண்பதற்குத் தடுக்கப்பட்டால் அவற்றை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

ஆதாரப்பூர்வமான இவ்விரு செய்திகளையும் முரண்பாடில்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது?

ஹலாலாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பிராணியை எடுத்துக் கொண்டால் அதில் உண்பதற்குப் பயன்படும் இறைச்சி, கொழுப்பு, ஈரல், நுரையீரல், குடல் போன்றவைகளும் உள்ளன. உண்பதற்குப் பயன்படாத தோல், மயிர், குளம்பு, குடலில் தேங்கியுள்ள சாணம் மற்றும் எலும்பு போன்றவைகளும் உள்ளன.

அந்த ஹலாலான உயிர்ப்பிராணி செத்துவிட்டால் உண்பதற்குப் பயன்படும் பொருட்களை உண்ணவோ வேறு வகையிலோ பயன்படுத்தக் கூடாது. உண்பதற்கு உதவாத பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளங்கினால் முரண்பாடு நீங்கி விடுகின்றது.

உண்ண ஹராமாக்கியதை விற்கவும் ஹராமாக்கி விட்டான் என்ற வாக்கியம் உண்ண ஹராமாக்கப்பட்ட மாமிசம் கொழுப்பு போன்றவற்றையே குறிக்கின்றது.

செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான் என்ற வாக்கியம் உண்பதுடன் சம்பந்தப்படாத பொருட்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றது.

ஒரு ஹதீஸ் உண்பதற்குரிய பாகங்களைப் பற்றியும், மற்றொரு ஹதீஸ் உண்பதற்குரியதாக இல்லாத பாகங்களைப் பற்றியும் கூறுகின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்டால் இதில் முரண்பாடு நீங்கிவிடும்.

முறையாக அறுக்கப்படாதவை என்பதிலிருந்து வேட்டையாடப்படும் பிராணிகளும் விலக்குப் பெறுகின்றன. எந்த முறையில் அறுக்க வேண்டுமோ அந்த முறையை வேட்டையின் போது கையாள வேண்டியதில்லை. பின்வரும் வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் அறியலாம்.

அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.

திருக்குர்ஆன் 5:4

இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

صحيح البخاري

5477 - حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرْسِلُ الكِلاَبَ المُعَلَّمَةَ؟ قَالَ: «كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ» قُلْتُ: وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ؟ قَالَ: «كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ»

நாங்கள் பயிற்றுவிக்கப்பட்ட நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (தான் சாப்பிடாமல்) உனக்காக அவை கொண்டு வருவதைச் சாப்பிடு! என்றார்கள். அவை கொன்று விட்டாலுமா? என்று நான் கேட்டேன். ஆம்! கொன்று விட்டாலும் தான் என்று விளக்கமளித்தார்கள். நாங்கள் அம்பால் வேட்டையாடுகிறோம் என்று கூறினேன். அதற்கவர்கள் (அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடு! அதன் அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடாதே என்றார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5477, 7397

صحيح البخاري

5483 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الكِلاَبِ؟ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ المُعَلَّمَةَ، وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَإِنْ قَتَلْنَ، إِلَّا أَنْ يَأْكُلَ الكَلْبُ، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ»

நாங்கள் நாய்கள் மூலம் வேட்டையாடுகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். பயிற்றுவிக்கப்பட்ட நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அவை (சாப்பிடாமல்) உங்களுக்காகவே கொண்டு வந்ததைச் சாப்பிடுங்கள்! கொன்று இருந்தாலும் சரியே. வேட்டை நாய் அதைச் சாப்பிட்டிருந்தால் அவை தமக்காகவே பிடித்தன. எனவே அதைச் சாப்பிட வேண்டாம். அதனுடன் வேறு நாய்கள் கலந்திருந்தால் (வேட்டையாடப்பட்டதை) சாப்பிடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5483, 5487

صحيح البخاري

5484 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَمْسَكَ وَقَتَلَ فَكُلْ، وَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ، وَإِذَا خَالَطَ كِلاَبًا، لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهَا، فَأَمْسَكْنَ وَقَتَلْنَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهَا قَتَلَ، وَإِنْ رَمَيْتَ الصَّيْدَ فَوَجَدْتَهُ بَعْدَ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ لَيْسَ بِهِ إِلَّا أَثَرُ سَهْمِكَ فَكُلْ، وَإِنْ وَقَعَ فِي المَاءِ فَلاَ تَأْكُلْ»

صحيح البخاري

5485 - وَقَالَ عَبْدُ الأَعْلَى: عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيٍّ، أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرْمِي الصَّيْدَ فَيَقْتَفِرُ أَثَرَهُ اليَوْمَيْنِ وَالثَّلاَثَةَ، ثُمَّ يَجِدُهُ مَيِّتًا وَفِيهِ سَهْمُهُ، قَالَ: «يَأْكُلُ إِنْ شَاءَ»

நீ உனது நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயர் கூறியிருந்தால் அது (சாப்பிடாமல்) உனக்காக கொண்டுவந்தால் அதைக் கொன்றிருந்தாலும் சாப்பிடு! (வேட்டைப் பிராணியில் ஒரு பகுதியை) அது சாப்பிட்டு விட்டால் நீ சாப்பிடாதே! ஏனெனில் அது தனக்காகவே பிடித்தது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத வேறு நாய்களுடன் கூட்டாக வேட்டையாடி உனக்காக கொண்டு வந்தால் அதைச் சாப்பிடாதே! ஏனெனில் எந்த நாய் அதைப் பிடித்தது என்பதை நீ அறியமாட்டாய். வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒருநாள் இரண்டு நாட்களுக்குப் பின் அவற்றைக் கண்டுபிடித்தால் அதில் உனது அம்பின் அடையாளங்கள் தவிர வேறு அடையாளம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிடு! தண்ணீரில் விழுந்து கிடந்தால் அதைச் சாப்பிடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5485

இது சம்பந்தமான மேலும் பல ஹதீஸ்கள் புகாரி 2054, 5475, 5476, 175; முஸ்லிம் 3560, 3561, 3562, 3563, 3564, 3565, 3566; திர்மிதீ 1385, 1389, 1390, 1391; நஸாயீ 4190, 4191, 4192, 4193, 4195, 4196, 4197, 4198, 4199, 4200, 4201; அபூதாவூத் 2464, 2465, 2466, 2467, 2468, 2470, 2471; இப்னுமாஜா 3199, 3202, 3205, 3206; அஹ்மத் 17534, 17538, 17544, 17547, 18560, 18563, 18570 ஆகிய ஹதீஸ்களைக் காண்க!

வேட்டைக்காக நாயை அல்லது அம்பை அனுப்பும்போது பிஸ்மில்லாஹ் கூறினால் கொன்ற நிலையில் பிடித்து வந்தாலும் அதை உண்ணலாம்.

உயிருடன் பிடித்து வந்தால் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்து சாப்பிடலாம் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம். வேட்டையாடுவது சம்பந்தமான மேலும் பல விதிகளையும் இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

வேட்டை என்ற பெயரால் பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது. வேட்டையாடப் பயன்படுத்தும் கருவி அப்பிராணிக்குள் ஊடுருவிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும். ஊடுருவவும் வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த அடிப்படையில் துப்பாக்கிகளால் வேட்டையாடலாம். ஏனெனில் அதன் குண்டுகள் பிராணிகளுக்குள் ஊடுருவும்.

கவன் (உண்டிவில் - கவட்டை) மூலம் வேட்டையாடி வேட்டைப் பிராணி செத்துவிட்டால் அதை உண்ணக் கூடாது. ஏனெனில், அதிலிருந்து புறப்படும் கல் ஊடுருவிச் செல்வதில்லை. உயிருடன் விழுந்தால் அறுத்து உண்ணலாம்.

கல்லால் எறிந்து வேட்டையாடுவதும், ஈரக் களிமண் உருண்டைகளைக் குழாயில் வைத்து வாயால் ஊதி வேட்டையாடுவதும் இதே வகையைச் சேர்ந்தவை தான். இது போன்ற வேட்டைகளில் பிராணிகள் செத்துவிட்டால் உண்ணக் கூடாது. மேற்கண்ட ஹதீஸிலிருந்து இத்தனை விஷயங்களையும் விளங்கலாம்.

நாம் வேட்டையாட அனுப்புகின்ற ஒரு நாய் வேட்டையாடி விட்டு அதில் ஒரு பகுதியை உண்டால் அதை நாம் உண்ணலாமா என்பதில் இரு கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. உண்ணக் கூடாது எனக் கூறும் ஹதீஸ்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இதற்கு முரணாகத் தோன்றும் மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்.

مسند أحمد بن حنبل

 6725 - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد بن عبد الوارث حدثني أبي ثنا حبيب عن عمرو عن أبيه عن عبد الله بن عمرو أن أبا ثعلبة الخشني أتى النبي صلى الله عليه و سلم فقال : يا رسول الله ان لي كلابا مكلبة فأفتنى في صيدها فقال ان كانت لك كلاب مكلبة فكل مما أمسكت عليك فقال يا رسول الله ذكى وغير ذكى قال ذكى وغير ذكى قال وان أكل منه قال وان أكل منه قال يا رسول الله أفتني في قوسي قال كل ما أمسكت عليك قوسك قال ذكى وغير ذكى قال ذكى وغير ذكى قال وان تغيب عنى قال وان تغيب عنك ما لم يصل يعني يتغير أو تجد فيه أثر غير سهمك قال يا رسول الله افتنا في آنية المجوس إذا اضطررنا إليها قال إذا اضطررتم إليها فاغسلوها بالماء واطبخوا فيها

تعليق شعيب الأرنؤوط : صحيح لغيره وهذا إسناد حسن

வேட்டைக்கு அனுப்பும் நாய்கள் வேட்டையாடப்பட்டதைச் சாப்பிட்டால் (அதை நாம் சாப்பிடலாமா?) என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை சாப்பிட்டாலும் நீ அதைச் சாப்பிடலாம் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 6438, அபூதாவூத் 2496, 2474

இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை தாம். ஒன்று மற்றொன்றை மாற்றிவிட்டது என்று முடிவு செய்ய வழியில்லை. ஏனெனில் எது ஆரம்ப நிலை? எது இறுதி நிலை? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவ்விரு ஹதீஸ்களில் ஒன்று ஆதாரப்பூர்வமானதாகவும் மற்றொன்று பலவீனமானதாகவும் இருந்தால் பலவீனமானதை விட்டுவிட்டு ஆதாரப்பூர்வமானதை எடுத்து நடக்கலாம். ஆனால் இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையே!

இந்நிலையில் இரண்டில் எதைச் செய்வது பேணுதலானதோ எது திருக்குர்ஆனின் போதனையுடன் ஒத்து வருகின்றதோ அதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவதே முறையானதாகும்.

நாம் முன்னர் எடுத்துக்காட்டிய வசனத்தில் வேட்டையாடும் பிராணிகள் (எதையும் உண்ணாமல்) உங்களிடம் அப்படியே கொண்டு வந்தவைகளை உண்ணுங்கள் என்று கூறப்படுகின்றது. புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ்கள் இந்த வசனத்துடன் ஒத்துப் போகின்றன. அஹ்மத், அபூதாவூதில், இடம்பெறும் இந்த ஹதீஸ் இந்த வசனத்துடன் முரண்படுகின்றது.

மேலும் முதல் ஹதீஸை ஏற்று, வேட்டைப் பிராணிகளால் சாப்பிடப்பட்டதை உண்ணாமல் இருப்பதால் எந்தக் கேள்வியும் வராது. பேணுதலுக்கு ஏற்றதாக உள்ள முதல் ஹதீஸினடிப்படையில் செய்யப்படுவதே சரியானதாகும்.

வேட்டையின் போது அம்பால் தாக்கப்பட்ட பறவை மற்றும் பிராணிகள் உடனே தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டால் அதை உண்ணக்கூடாது. ஆனால் அம்பால் தாக்கப்பட்டவை ஓடிச் சென்று பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு செத்துக் கிடக்கக் கண்டால், அது செத்ததற்கு நாம் எய்த அம்புதான் காரணம் என்பதும் உறுதியானால் அதை உண்ணலாம்.

மேலே நாம் எடுத்துக்காடிய புகாரி 5485 வது ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வேட்டையாடப்படும் போது முறையாக அறுப்பு நிகழவில்லையாயினும் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் இதற்குத் தனி விதிகளைக் கூறுவதால் தாமாகச் செத்தவற்றில் இவை அடங்காது என்பதை அறியலாம்.

இவற்றைத் தவிர வேறு வகையில் இறந்த எந்தப் பிராணியும் செத்தவை என்பதில் அடங்கும். அதை உண்ணக்கூடாது.

உயிருடன் உள்ள பிராணியின் ஒரு உறுப்பை அல்லது ஒரு பகுதியை வெட்டி எடுத்தால் அதுவும் தாமாகச் செத்தவற்றில் அடங்கும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

 سنن ابن ماجه

3216 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: "مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ، فَمَا قُطِعَ مِنْهَا فَهُوَ مَيْتَةٌ"

உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி செத்தவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 3207

இரத்தம் விலக்கப்பட்டதாகும்

செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் குறிப்பிடுகிறான். உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியின் இரத்தமும் உண்ண அனுமதிக்கப்படாத பிராணியின் இரத்தமும் விலக்கப்பட்டவையாகும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்டு இரத்தத்தை சர்வ சாதாரணமாக உண்கின்றனர். முஸ்லிம் வியாபாரிகள் இரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விரண்டும் கூடாததாகும்.

இந்த வசனத்தில் பன்றியின் மாமிசத்தையும் தடை செய்திருப்பதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு மதிப்பளித்து பன்றியின் மாமிசத்தை முஸ்லிம்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால் அதே தொடரில் தான் இரத்தம் தடை செய்யப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு முஸ்லிம்கள் மதிப்பளிக்காதது வேதனைக்குரியதாகும். பன்றியின் மாமிசத்தை உண்பதும் இரத்தம் உண்பதும் சம அளவிலான குற்றங்களே என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அதில் சிறிதளவு கூட உட்கொள்வது கூடாது! அதிக அளவு உண்பது எவ்வளவு குற்றமோ சிறிதளவு உண்பதும் அதே அளவு குற்றமாகும் என்பதை நாம் அறிவோம்.

இரத்தத்தைப் பொருத்தவரை இந்த பொது விதியைப் பயன்படுத்த முடியாது. மாமிசத்துடன் ஒட்டியிருக்கும் இரத்தம், மாமிசத்தின் உள்ளே உறைந்து போயிருக்கும் இரத்தம், ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டியதில்லை. சிவப்பு நிறம் மாறும் அளவுக்கு மாமிசத்தைப் பலமுறை கழுவ வேண்டியதில்லை. பிராணியை அறுத்த பின் இரத்தம் வெளியேறிவிட்டால் மாமிசத்தை கழுவாமலேயே உண்ணலாம். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியலாம்.

ஓட்டப்பட்ட இரத்தம்

செத்தவை, ஓட்டப்பட்ட இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று (நபியே) கூறுவீராக!

அல்குர்ஆன் 6:145

நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் 2:173 வசனத்தில் இரத்தம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் 6:145 வசனத்தில் ஓட்டப்பட்ட இரத்தம் என்று கூறப்படுகின்றது. முந்தைய வசனத்தில் கூறப்படும் இரத்தம் என்பது ஓட்டப்பட்ட இரத்தத்தையே குறிக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஓட்டப்பட்ட பின் மாமிசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தம், வேட்டை நாய்களால் உயிரற்ற நிலையில் பிடித்து வரப்படும் பிராணிகளுக்குள் உறைந்து போய்விட்ட இரத்தம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.

அறுக்கப்பட்ட பின் பீறிட்டு வெளியேறும் இரத்தத்தையே இறைவன் தடை செய்திருக்கிறான் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஓட்டப்பட்ட இரத்தம் என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.

கைவிரலில் வெட்டுப்பட்டு இரத்தம் வெளிப்பட்டால் பலரும் உடனே இரத்தம் வடியும் விரலை வாயில் வைத்துச் சூப்புகின்றனர். இவ்விரத்தமும் ஓட்டப்பட்ட இரத்தமே. எனவே அதைத் துப்பிவிட வேண்டும்.

இரத்தம் விலக்கப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் ஒரு ஐயம் தோன்றலாம். நாம் வாழுகின்ற நவீன காலத்தில் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்ததைச் செலுத்திப் பிழைக்க வைக்கின்றனர். இதைச் செய்யலாமா? செய்தால் இறைவனின் கட்டளையை நாம் மீறியவர்களாக ஆவோமா? என்பதே அந்த ஐயம்.

இந்த ஐயத்திற்குரிய விடையை இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை ஆராயும் போது நாம் விளக்குவோம்.

பன்றியின் மாமிசம்

 செத்தவை, இரத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து பன்றியின் மாமிசத்தை இறைவன் விலக்கியுள்ளதாக கூறுகின்றான்.

இந்த வார்த்தை மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த ஆராய்ச்சியில் இறங்கும் முன் தமிழக முஸ்லிம்களிடம் நிலவும் தவறான வழக்கத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இறைவன் பன்றியிறைச்சியைத் தடை செய்துள்ளதால் பன்றியை முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த வெறுப்பு எல்லை மீறிப் பன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை. நாலுகால் பிராணி, கட்டைக்கால், பொல்லாமிருகம் என்பது போன்ற வார்த்தைகளையே பன்றியைக் குறித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

பன்றி என்று கூறிவிட்டால் வாயைக் கழுவ வேண்டும், உலூச் செய்ய வேண்டும், குளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவோரும் நம்மிடையே உள்ளனர். இதன் மூலம் தாங்கள் அதிகம் பேணுதல் உள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இந்தப் போக்கு பக்தியின் வெளிப்பாடோ பேணுதலின் அடையாளமோ அல்ல. பன்றியை உண்ணக்கூடாது என்று இறைவன் நமக்குக் கட்டளையிட்டுள்ளான். அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ நமக்குத் தடை விதிக்கவில்லை.

திருக்குர்ஆனில் நான்கு இடங்களில் கின்ஸீர் (பன்றி) எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கனாஸீர் (பன்றிகள்) என்ற வார்த்தை ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வார்த்தையே தடை செய்யப்பட்டது என்றால் இறைவன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். இறைத்தூதரும் பன்றி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்பு வாய் கழுவவில்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உலூச் செய்யவும் இல்லை. உலூச் செய்ய ஏவவுமில்லை.

எனவே இந்த தவறான நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விடுபடவேண்டும்.

தடை செய்யப்பட்டவற்றை விளக்கும் போது பன்றி எனக் கூறாமல் பன்றியின் மாமிசம் என்று இறைவன் கூறுகின்றான்.

பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டிருந்தால் பன்றி தடுக்கப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். பன்றியின் மாமிசம் என்று இறைவன் இங்கே கூறுகிறான். எலும்பு, கொழுப்பு, குடல், ஈரல், நுரையீரல், கல்லீரல், இறைச்சி என்று பல்வேறு பொருட்கள் பிராணிகளில் உள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி வார்த்தைகள் உள்ளன. பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டவை என்றால் பன்றி தடை செய்யப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். அவ்வாறு கூறாமல் பன்றியின் இறைச்சி என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். அப்படியானால் பன்றியின் இறைச்சியைத் தவிர மற்ற பகுதிகளை உண்ணலமா? என்ற ஐயம் பலருக்கும் தோன்றலாம்!

இவ்வாறு புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தான் பன்றியின் இறைச்சி என்ற வாசகம் அமைந்துள்ளது. ஆயினும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பன்றியின் அனைத்துப் பாகங்களுமே ஹராம் என்று விளங்கலாம்.

صحيح البخاري

2236 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»، قَالَ أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَيَّ عَطَاءٌ، سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மதுபானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகளை விற்பனை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, திர்மிதீ 1218, நஸயீ 4183, 4590, அபூதாவூத் 3025, இப்னுமாஜா 2158, அஹ்மத் 13948, 13971

பன்றியின் மாமிசத்தை மட்டுமின்றி பன்றியையே விற்பனை செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எது விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டு விட்டதோ அதை உண்பதும் ஹராம் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

ஆகவே பன்றியின் மாமிசம் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தாலும் பன்றி முழுமையாகவே தடை செய்யப்பட்டு விட்டதாக ஹதீஸ்களில் கூறப்படுவதால் பன்றியை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறியலாம்.

அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை.

நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஹராம் என இவ்வசனம் கூறுவதைப் பார்ப்போம்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் உஹில்ல என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் சப்தமிடப்பட்டவை என்பதாகும். அன்றைய அறியாமைக் கால அரபு மக்கள் அல்லாஹ் அல்லாத தெய்வங்களின் (?) பெயரைச் சப்தமிட்டுக் கூறிவிட்டு அறுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களுக்காகச் சப்தமிடப்பட்டவை என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்களை சப்தமின்றிக் கூறி அறுத்தால் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்றே இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தில் விலக்கப்பட்ட உணவுகளை இறைவன் பட்டியலிடுவது போல் 5:3 வசனத்திலும் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த வசனத்தில் கற்களுக்காக அறுக்கப்பட்டவை என்று தெளிவாகக் கூறுகிறான். உஹில்ல என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தாமல் துபிஹ (அறுக்கப்பட்டவை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக சப்தமிடப்பட்டவை என்பது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை 5:3 வசனத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யலாம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகள் என்றாலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுமானால் அவற்றை உண்ணக்கூடாது. பன்றியின் மாமிசம், செத்தவை போன்று, இவையும் ஹராமாகும்.

நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக என்று முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், பிராணிகளை அறுக்கின்றனர். உண்கின்றனர். மேற்கண்ட வசனத்தை மறுமை நாளின் விசாரணையை அஞ்சி - சிந்தித்தால் இவ்வாறு அறுப்பதும், உண்பதும் இவ்வசனத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளதை உணரலாம்.

ஆயினும் தெளிவான இந்த வசனத்தைக் கூட அர்த்தமற்றதாக்கும் வகையில் விதண்டாவாதங்களில் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களில் (?) சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நாம் - நமக்காக நாம் உண்பதற்காக பிராணிகளை அறுக்கிறோம். நமது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களுக்காகவும் அறுக்கிறோம். நமக்காகவும் விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவதால் இதுவும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகத் தான் அறுக்கப்படுகின்றது. இதை உண்ணக்கூடாது என்று கூறமுடியுமா? இதுபோல் தான் அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவதும் அமைந்துள்ளது. விருந்தினருக்காக அறுக்கப்படுவதை உண்பது போலவே அவ்லியாக்களுக்காக அறுக்கப்பட்டதையும் உண்ணலாம் என்று அவர்கள் வாதம் செய்கின்றனர்.

இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசங்களை இவர்கள் உணராதிருப்பதே இந்த விதண்டா வாதத்திற்கு அடிப்படையாகும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும் போது அதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அது போலவே அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும்போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்பது அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்பட்டவை என்று சிறிதளவு அறிவுள்ளவரும் விளங்க மாட்டார். அல்லாஹ்வுக்கு என்றால் அவன் உண்பதற்காக அன்று, மாறாக இந்தப் பிராணியின் உயிர் அவனுக்குரியது, அதை அவனுக்கே உரித்தாக்குகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டால் அதை உண்ணக்கூடாது என்பதே இதன் பொருள்.

நமக்காகவும் நமது விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுவதில்லை. அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுகின்றது. இந்த வித்தியாசத்தைத் தான் அவர்கள் விளங்குவதில்லை.

அவ்லியாக்களுக்கு அறுப்பவர்கள் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்ல. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக, புரிந்த அருளுக்கு நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள் புரிவார் என்பதற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது.

அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது மாமிசமோ, இரத்தமோ அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும் பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது.

அவ்லியாவுக்காக அறுக்கும்போதும், இரத்தமோ மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார்.

விருந்தாளிக்காக அறுக்கும் போது மாமிசம் தான் அவரைச் சென்றடைகிறது. அல்லாஹ்வைப் போல் அவர் அருள்புரிவார் என்று எவருமே நம்புவதில்லை. விருந்தாளிகள் மீது பக்தி கொள்வதுமில்லை.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்படுதல் அன்று. மாறாக அவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துதல் என்பதே ஆகும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் அல்லாஹ் அல்லாதவர் உண்பார் என்பதற்காக அறுக்கப்படுவதன்று. அல்லாஹ் அல்லாதவர் மீது நமக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதற்காக அறுக்கப்படுவதே ஆகும். இவ்வாறு அறுக்கப்படுவதே, தடுக்கப்படுகின்றது. அல்லாஹ் அல்லாதவர் உண்பதற்காக அறுக்கப்படுவது விலக்கப்பட்டதாக ஆகாது. இந்த அடிப்படையை உணராதவர்களின் வாதம் விதண்டாவாதமே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களுக்காகப் பிராணிகளை அறுப்போர், அவ்வாறு அறுக்கப்பட்டவைகளை உண்ணலாம் எனக் கூறுவோர் மற்றொரு விசித்திரமான வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் எதன் மேல் கூறப்பட்டதோ அதை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 6:118) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ண அல்லாஹ் அனுமதிக்கிறான். அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள், அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டாலும், அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்கப்படுவதால் அதை உண்ணலாம் என்பது இவர்களின் வாதம்.

இரண்டு வசனங்களும் தனித்தனியான இரண்டு நிபந்தனைகளைக் கூறும் வசனங்கள் ஆகும். இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று கூறினால் இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். உதாரணமாக, தொழுகைக்கு உலூவும் வேண்டும், உடையும் வேண்டும். இரண்டும் தனித்தனி நிபந்தனைகள் ஆகும். ஒருவன் உலூவைச் செய்து விட்டு நிர்வாணமாகத் தொழுதால் அல்லது உடையணிந்து விட்டு உலூவின்றித் தொழுதால் அத்தொழுகை நிறைவேறும் என்று யாரும் சொல்வதில்லை. இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர இருந்தாக வேண்டும் என்றே அனைவரும் புரிந்து கொள்வர்.

இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகளை உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும். என்பது ஒரு நிபந்தனை. அல்லாஹ்வுக்காகவே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக் கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தீர்கள்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூற முடியும். யாருக்காக அறுத்தீர்கள்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூற முடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது.

இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்து விடுகின்றது.

ஒருவர் ஒரு சமாதியில் போய் ஸஜ்தாச் செய்கிறார். சமாதியில் அடங்கப்பட்டவரை மதிப்பதற்காக ஸஜ்தாச் செய்கிறார். இவ்வாறு ஸஜ்தா செய்யும்போது அல்லாஹு அக்பர் என்று கூறுகிறார். அல்லாஹு அக்பர் எனக் கூறிவிட்டதால் சமாதிக்குச் செய்த ஸஜ்தாவை எவ்வாறு நியாயப்படுத்த முடியாதோ அதுபோலவே அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுப்பதும் அமைந்துள்ளது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுவது ஹராம் ஆகும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மேலும் பல சான்றுகள் உள்ளன.

உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக

திருக்குர்ஆன் 108: 23

தொழுவது இறைவனுக்காக மட்டுமே அமைய வேண்டும் என்பது போலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

صحيح مسلم

5239 - حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَسُرَيْجُ بْنُ يُونُسَ كِلاَهُمَا عَنْ مَرْوَانَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِىُّ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ قَالَ كُنْتُ عِنْدَ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَيْكَ قَالَ فَغَضِبَ وَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَىَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِى بِكَلِمَاتٍ أَرْبَعٍ. قَالَ فَقَالَ مَا هُنَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قَالَ « لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الأَرْضِ ».

நான் அலி (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒருவர் வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலி (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்போது நான் அமீருல் மூமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி (ரலி) அவர்கள் யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான். தம் பெற்றோரைச் சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். பித்அத்களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான். பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான். (இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபுத்துஃபைல்

நூல்கள்: முஸ்லிம் 3657, 3659, நஸாயீ 4346, அஹ்மத் 813, 908, 1338

அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இந்த நபிமொழி தெளிவாக விளக்குகின்றது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடுவது ஒரு புறமிருக்கட்டும். அல்லாஹ்வுக்காகப் பலியிடும் போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

سنن أبي داود

3313 حدَّثنا داودُ بن رُشَيد، حدَّثنا شعيبُ بن إسحاقَ، عن الأوزاعيِّ، عن يحيى بن أبي كثيرِ، حدَّثني أبو قِلابةَ حدَّثني ثابتُ بن الضحَّاك، قال: نذرَ رجلٌ على عهدِ رسولِ الله -صلَّى الله عليه وسلم- أن ينحرَ إبلاً ببُوانةَ، فأتى رسول الله -صلَّى الله عليه وسلم -، فقال: إني نذرتُ أن أنحر إبلاً ببُوانةَ، فقال رسول الله -صلَّى الله عليه وسلم-: "هل كان فيها وثنٌ من أوثانِ الجاهليةُ يُعبَدُ؟ " قالوا: لا، قال: "هل كان فيها عِيدٌ من أعيادِهم؟ "

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று கூறினார்கள். அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கை வசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்டதையே அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் நிறைவேற்றக் கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படுவதை உண்ணாமலும் இருக்க வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது

இவ்வசனத்தில் கூறப்படும் விலக்கப்பட்ட உணவுகள் பற்றி விரிவான விளக்கத்தை இதுவரை அறிந்து கொண்டோம். இந்த உணவுகளைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் அவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன?

இதை உண்ணா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப்படுவது தான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர்.

இதை உண்ணா விட்டால் இறந்து விடுவோம் என்ற நிலையை ஒருவர் அடைவது நிர்பந்தம் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒருவர் அன்றாடம் தனக்கும், தன் குடும்பத்துக்கும் போதிய உணவைப் பெறாமலிருப்பதும் நிர்பந்தம் தான் என்று வேறு சிலர் கூறுகின்றனர். முதலிரண்டு நிலைகளையும் நிர்பந்தம் என ஏற்றுக் கொள்ளும் இவர்கள் நிர்பந்தத்திற்கு இன்னும் விரிந்த பொருளைக் கொடுக்கின்றனர்.

நபி வழியில் ஆராயும் போது இந்த மூன்றாவது கருத்துத் தான் சரியானது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

பிறரால் நிர்பந்திக்கப்படுபவரும், உயிர் போகும் நிலையை அடைந்தவரும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்பதைப் போலவே அன்றாட உணவுக்கு வழியில்லாதவர்களும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்ற முடிவுக்கு அனேகச் சான்றுகள் கிடைக்கின்றன.

سنن النسائي

5409 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَزِينٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ عَبَّادِ بْنِ شُرَحْبِيلَ، قَالَ: قَدِمْتُ مَعَ عُمُومَتِي الْمَدِينَةَ فَدَخَلْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا، فَفَرَكْتُ مِنْ سُنْبُلِهِ، فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَأَخَذَ كِسَائِي وَضَرَبَنِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعْدِي عَلَيْهِ، فَأَرْسَلَ إِلَى الرَّجُلِ، فَجَاءُوا بِهِ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى هَذَا؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ دَخَلَ حَائِطِي، فَأَخَذَ مِنْ سُنْبُلِهِ فَفَرَكَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلًا، وَلَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا، ارْدُدْ عَلَيْهِ كِسَاءَهُ»، وَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَسْقٍ أَوْ نِصْفِ وَسْقٍ

ஓர் ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு தானியக் கதிரை எடுத்து உதிர்த்துச் சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்துவிட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று விபரம் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோட்டத்திற்குரியவரிடம் இவர் பசியோடு இருந்த போது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்த போது இவருக்குக் கற்றுக் கொடுக்கவில்லை என்றார்கள். மேலும் எனது ஆடையை என்னிடம் திருப்பித் தருமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். மேலும் எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவு தருமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: அப்பாத் பின் ஷுரஹ் பில் (ரலி)

நூல்கள்: நஸாயீ 5314, அபூதாவூத் 2252, இப்னுமாஜா 2289, அஹ்மத் 16865

இந்த நபித்தோழர் எவராலும் நிர்பந்திக்கப்படவில்லை. சாகும் நிலையையும் அடைந்திருக்கவில்லை. போதுமான உணவு கிடைக்காத நிலையில் பஞ்சத்தில் அடிபட்ட நிலையில் தான் வருகிறார்.

பிறரது தோட்டத்தில் நுழைந்து அதிலுள்ளவற்றை உண்பதும், சேகரிப்பதும் மார்க்கத்தில் விலக்கப்பட்டிருந்தும் அவர் அவ்வாறு செய்ததற்காக கண்டிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. தண்டித்த தோட்ட உரிமையாளரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்தனர். அவருக்கோ போதுமான உணவுகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

இதிலிருந்து நிர்பந்தம் என்பதற்கு உரிய இலக்கணத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. அன்றாட உணவு கிடைக்காமலிருப்பதும் நிர்பந்தம் தான் என்பதற்கு இது சான்றாக உள்ளது.

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் தோன்றலாம்.

இந்த நபித்தோழர் சாப்பிட்ட தானியக் கதிர் பொதுவாக அனுமதிக்கப்பட்ட உணவாகும். அது வந்து சேரும் வழி முறையற்றதாக உள்ளதால் தான் ஹராம் என்ற நிலையை அடைகின்றது. இதே தானியத்தை உரிமையாளரிடம் கேட்டுப் பெற்றால் விலைக்கு வாங்கினால் அது ஹராமாக ஆகப்போவதில்லை.

ஆனால் செத்தவை போன்றவை எல்லா நிலையிலும் ஹராம். விலை கொடுத்து வாங்கினாலும் அது ஹராம். எனவே இந்த வசனத்தில் கூறப்படும் நிர்பந்தத்திற்கு இது விளக்கமாக முடியாது என்பதே அந்தச் சந்தேகம். அந்தக் கேள்வியில் ஓரளவு நியாயமிருந்தாலும் வேறு பல ஆதாரங்கள் இருப்பதால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

مسند أحمد بن حنبل

 21951 - حدثنا عبد الله حدثني أبى ثنا الوليد بن مسلم ثنا الأوزاعي ثنا حسان بن عطية عن أبى واقد الليثي انهم قالوا : يا رسول الله انا بأرض تصيبنا بها المخمصة فمتى تحل لنا الميتة قال إذا لم تصطبحوا ولم تغتبقوا ولم تحتفئوا فشأنكم بها

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் எங்களுக்கு செத்தவை ஹலாலாகும் என்று நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் அருந்தும் பாலையும், மாலையில் அருந்தும் பாலையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.

அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைஸீ (ரலி)

நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரிமி 1912

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு - பால் போன்ற திரவ உணவு - கூட கிடைக்காதவர்கள், எந்தத் தாவரமும் கிடைக்காதவர்கள் விலக்கப்பட்டதை உண்ணலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கிடைக்கவில்லை என்பது, அப்பொருள் அந்தப் பகுதியில் இல்லாமலிருப்பதையும் குறிக்கும். கிடைத்தாலும் வாங்கும் சக்தியில்லாமலிருப்பதையும் குறிக்கும்.

காலையிலும், மாலையிலும் அருந்தும் பால் கிடைக்காத போது என்பதை பசியைப் போக்கும் அளவுக்குப் பால் கிடைக்காத போது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு குறைந்த அளவுக்கு இரண்டு வேளை பால் கிடைக்கிறது. அது அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பசியைப் போக்க போதுமானதாக இல்லை என்றால் அவரும் கூட நிர்பந்தத்திற்கு ஆளானவரே. அவரும் விலக்கப்பட்ட உணவை உண்ணலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

سنن أبي داود

[3816] حدثنا موسى بن إسمعيل حدثنا حماد عن سماك بن حرب عن جابر بن سمرة أن رجلا نزل الحرة ومعه أهله وولده فقال رجل إن ناقة لي ضلت فإن وجدتها فأمسكها فوجدها فلم يجد صاحبها فمرضت فقالت امرأته انحرها فأبى فنفقت فقالت اسلخها حتى نقدد شحمها ولحمها ونأكله فقال حتى أسأل رسول الله صلى الله عليه وسلم فأتاه فسأله فقال هل عندك غنى يغنيك قال لا قال فكلوها قال فجاء صاحبها فأخبره الخبر فقال هلا كنت نحرتها قال استحييت منك.

ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் ஹர்ரா எனுமிடத்தில் தங்கி இருந்தார். அவரிடம் இன்னொரு மனிதர் வந்து எனது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதை நீர் கண்டால் பிடித்து வைத்துக் கொள்வீராக எனக் கூறினார். குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த மனிதர் அந்த ஒட்டகத்தைக் கண்டார். உரிமையாளரைக் காணவில்லை (அந்த ஒட்டகத்தைப் பிடித்து வைத்துக் கொண்டார்) அந்த ஒட்டகம் நோயுற்றது. அதை அறுப்பீராக என்று அவரது மனைவி கூறிய போது அவர் மறுத்து விட்டார். ஒட்டகம் செத்துவிட்டது. அப்போது அவரது மனைவி இதன் தோலை உரிப்பீராக! நாமும் சாப்பிட்டு, இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்துக் கொள்வோம் எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். இது பற்றிக் கேட்டார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறரிடம் தேவையாகாத அளவுக்கு உமக்கு வசதி இருக்கிறதா? எனக் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். அப்படியானால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர் வந்தார். அவரிடம் அந்த மனிதர் விபரத்தைக் கூறினார். இதை நீர் அறுத்திருக்கக் கூடாதா? என்று அவர் கேட்டார் அதற்கு அந்த மனிதர் (நீர் என்னைத் தப்பாக நினைத்து விடுவீர் என்று) நான் வெட்கமடைந்தேன். (அதனால் அறுக்கவில்லை) என விடையளித்தார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா(ரலி)

நூல்: அபூதாவூத் 3320, அஹ்மத் 19998

இந்த மனிதரும் இவரது குடும்பத்தினரும் சாகும் நிலையில் இருக்கவில்லை. போதிய வருமானம் கிடைக்காதவராக இருந்த இவருக்கு தாமாகச் செத்தவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அன்றாடம் இரு வேளை உணவு கிடைக்காதவர்கள், சத்துள்ள திரவ உணவு கூட கிடைக்காதவர்கள் அனைவரும் நிர்பந்தத்திற்கு ஆளானவர்களே. இதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

உயிர் போகும் நிலையை அடைவது தான் நிர்பந்த நிலை எனக் கூறுவது ஆதாரமற்றதும், சாத்தியமற்றதுமாகும்.

உயிர் போகும் நிலையை அடைந்தவன் தாமாகச் செத்தவற்றைத் தேடிச் செல்லும் அளவுக்குச் சக்தி பெறமாட்டான். அவனால் எழுந்து நிற்கக் கூட இயலாது. இத்தகைய நிலையில் உள்ளவனுக்கு இந்த அனுமதியால் எந்தப் பயனும் இல்லை. அல்லாஹ்வின் இந்த அனுமதி அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.

மேலும் பல நாட்கள் உணவு கிடைக்காமல் சாகும் நிலையை அடைந்து படுக்கையில் விழுந்தவனின் குடல் மாமிசத்தைச் சீரணம் செய்யும் நிலையில் இருக்காது. அவனால் அதைச் சாப்பிடவும் இயலாது. திரவ உணவுகள் மூலம் தன்னையும், குடலையும் திடப்படுத்திக் கொண்ட பின்பே மாமிசத்தை உட்கொள்ள முடியும். இந்தக் காரணத்தினாலும் இந்த விளக்கம் ஏற்க முடியாததாக உள்ளது.

அல்லாஹ் ஒன்றை அனுமதிக்கிறான் என்றால் அது சாத்தியமாக வேண்டும். சாத்தியமில்லாதவைகளை அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். அனுமதிப்பதில் எந்தப் பயனும் இருக்காது. எனவே மூன்றாவது கருத்தே அறிவுக்குப் பொருத்தமாகவும், நடைமுறைப்படுத்த ஏற்றதாகவும் தக்க ஆதாரங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அல்லாஹ்வின் தூதருடைய விளக்கத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வோர் இந்த முடிவுக்குத் தான் வரமுடியும்.

எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளின் நிலையை நாம் அறிவோம். கூழுக்கும், பாலுக்கும் வழியின்றி எலும்பும் தோலுமாக அம்மக்கள் காட்சியளிப்பதை தொலைக்காட்சி வழியாக நாம் அறிகிறோம்.

இந்த மக்களுக்கு எந்த உணவும் தடுக்கப்பட்டதன்று. இதை அம்மக்கள் விளங்கி கிடைப்பதையெல்லாம் உண்டால் அந்த அவல நிலையிலிருந்து விடுபடுவார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்தும் இந்தச் சலுகையை அவர்கள் புரிந்து கொள்ளாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிர்பந்தத்திற்கு ஆளானோர் விலக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலியச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் என்பதே அந்த இரு நிபந்தனைகள். தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக்கூடாது, பஞ்சத்தில் அடிபட்ட இந்தப் பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.

நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக் கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு விலக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும். இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்பந்த நிலையை அடைந்தவர்கள் இந்த வசனத்தில் விலக்கப்பட்டவற்றையும் உண்ணலாம். ஏனைய ஆதாரங்கள் மூலம் விலக்கப்பட்டவற்றையும் உண்ணலாம். அதில் எந்தக் குற்றமுமில்ல.

இது போலவே இரத்தம் நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்போருக்கும், அறுவை சிகிச்சைக்குப் போதிய இரத்தமில்லாதவர்களுக்கும் மற்றவர்களின் இரத்தம் செலுத்தப்படுகிறது.

சாதாரண வயிற்றுப் பசியை போக்குவதற்காகவே விலக்கப்பட்டவைகளை உண்ணலாம் எனும் போது உயிரைக் காக்கும் இது போன்ற சூழ்நிலையில் மற்றவர்களின் இரத்தத்தைச் செலுத்தலாம். இதை விட பெரிய நிர்பந்தம் ஏதுமிருக்க முடியாது.

நான்கு மட்டும் தான் ஹராமா

இவ்வசனத்தில் அடங்கியிருக்கும் மற்றொரு செய்தியை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்து தான் விளக்கம் தேவைப்படுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் - குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.

இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரியவில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது.

எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காணவில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் செத்தவற்றைத் தான் ஹராமாக்கியுள்ளான் என்ற வாசக அமைப்பிலிருந்தும் அதை விளங்கலாம்.

எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத் தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். இப்படி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதத்தால் ஏற்படும்.

இவ்வாறு வாதிடக்கூடியவர்கள் தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர். இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர்ஆனை இன்னும் ஆராய வேண்டும்.

ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனத் தேடிப் பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே இத்தகைய வாதங்களை முன் வைக்கின்றனர்.

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெறிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவை யாகும்.)-எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்து விட்டீர் களோ - அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய மார்க்கம் குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சவேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்க ளுக்காக இஸ்லாத்தை உங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆயினும், கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு - பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

திருக்குர்ஆன்: 5:3

இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ்களில் கூறப்படும் போது குர்ஆனுக்கு முரண் எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதை சிந்திக்கத் தவறிவிட்டனர்.

நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான். குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும், கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப்பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.

எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளான். ஆனால், இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.

இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.

இதுவும் அறியாமையின் வெளிப்பாடு தான்.

எவர்கள் எழுதப்படிக்க தெரியாத நபியாகிய நம் தூதரை பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கி விடுவார்; எனவே எவர்கள் மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்) தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.

திருக்குர்ஆன்: 7:157

வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராமாக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

திருக்குர்ஆன்: 9:29

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும், ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

7:157 வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப்பட்டதை அறிவிக்கிறார்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனிமேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி - தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உயிரினங்கள்

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றைத் தவிர வேறு சில உயிரினங்களை உணவாக உட்கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடை தான். அதையும் விளங்கி நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

உயிரினங்களில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணலாகாது என்ற பிரச்சனை மிகவும் சிக்கலானதாக மக்கள் மத்தியில் கருதப்படுகிறது. இதை உண்ணலாமா? இதை உண்ணலாமா? என்ற கேள்விகள் முஸ்லிம் பத்திரிகைகளில் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம்.

உண்மையில் இது மிகவும் எளிமையான விஷயமாகும். சில அடிப்படைகளை மட்டும் நாம் அறிந்து கொண்டால் உயிர்ப் பிராணிகளில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணக் கூடாது என்பதை நாமாகவே அறிந்து கொள்ள இயலும்.

கடல் வாழ் உயிரினங்கள்

உயிர்ப் பிராணிகளில் ஒரு வகை கடல் வாழ் உயிரினங்கள் ஆகும். கடல் வாழ் உயிரினங்களில் எவற்றை உண்ணக் கூடாது என்றால் அப்படி எதுவுமே இல்லை என்பது தான் இதற்கான விடையாகும். கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

சில மார்க்க அறிஞர்கள் நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று கூறுவதை யாரும் நம்பத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறுகிறார்கள்.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 5:96

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

திருக்குர்ஆன் 16:14

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

கடல் வாழ் உயிரினங்களில் செத்தவை உள்ளிட்ட அனைத்துமே ஹலால் என்பதற்கு இவை சான்றுகளாகவுள்ளன.

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

பறவையினங்கள்

இரண்டாவது முக்கிய உயிரினம் பறவையினமாகும்.

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அளவு கோலைத் தந்துள்ளனர்.

صحيح مسلم

5103 - وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِىُّ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ كُلِّ ذِى نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِى مِخْلَبٍ مِنَ الطَّيْرِ.

மிக்லப் உடைய ஒவ்வொரு பறவையையும் உண்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

மிக்லப் என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் சரியான பொருளாகும்.

ஏனைய உயிரினங்களை வேட்டையாடப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இது போன்ற பறவையினங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகம் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும் போது தான் துணைக்கு நகத்தைப் பயன்படுத்தும். உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தனது வாயையே பயன்படுத்தும்.

எனவே வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

பெயர் தெரியாத பறவை நமக்குக் கிடைத்தால் அது வேட்டையாடுகிறதா? அதற்கு நகங்களைப் பயன்படுத்துகிறதா? என்று கவனித்து அப்பறவை பற்றி முடிவுக்கு வந்துவிடலாம். எவரிடமும் கேட்கத் தேவையில்லை.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொருத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

صحيح البخاري 
5530 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ» تَابَعَهُ يُونُسُ، وَمَعْمَرٌ، وَابْنُ عُيَيْنَةَ، وَالمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நயாகம் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸஃலபா (ரலி)

நூல்: புகாரி 5530

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்கைளை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும்.

கழுதையைப் பொருத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூ அலி இப்னு ஸீனா (அவிசென்னா) அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

புழு, பூச்சியினங்கள்

எந்த உயிரினத்தை உண்பதாக இருந்தாலும் அதன் கழுத்து நரம்புகள் அறுக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது.

நாம் அறுக்காமல் தாமாகச் செத்தவை இதனால் தான் ஹராமாக்கப்பட்டுள்ளன.

புழுக்கள், பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், ஈக்கள், எறும்புகள் போன்ற உயிரினங்களில் மார்க்கம் கூறும் முறைப்படி அறுத்தல் ஏற்படுவதில்லை. கழுத்து நரம்பை அறுத்து இரத்தத்தை வெளியேற்றுதல் இவற்றில் இல்லை.

இப்படி அறுப்பதன் மூலம் இரத்தம் ஓட்டப்படாவிட்டால் அவை செத்தவை என்பதில் அடங்கும்.

எனவே செத்தவை ஹராம் என்பதில் புழு பூச்சி வகைகளும் அடங்கும்.

செத்தவைகளில் மீன்கள் வெட்டுக்கிளிகள் ஆகிய இரண்டும் ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

மீன்களைப் பொருத்தவரை அவற்றில் அறுத்தல் இல்லை என்பதால் அவை செத்தவைகளில் அடங்கும் என்றாலும் அவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அது போல் வெட்டுக்கிளிகளில் அறுத்தல் ஏற்படாது. எனவே அவை செத்தவைகளில் அடங்கும். இவை செத்தவையாக ஆனாலும் இவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளனர்.

இந்த அடிப்படையில் புழு, பூச்சி, வண்டு, பாம்பு, தேள் கரப்பான், கரையான், ஈ எறும்பு போன்ற எல்லா உயிரினங்களும் ஹராம் ஆகும்.

எந்த உயிரினமும் முறையாக அறுக்காவிட்டால் ஹலால் ஆகாது.

பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித்தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

صحيح البخاري

5495 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ أَوْ سِتًّا، كُنَّا نَأْكُلُ مَعَهُ الجَرَادَ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக்கிளியைச் சாப்பிட்டவர்களாக ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபூ அல்பா  (ரலி)

நூல்: புகாரி 5495

போரில் தானே சாப்பிட்டார்கள்! சாதாரண நேரத்தில் சாப்பிடவில்லையே எனச் சிலர் கேட்கின்றனர். அவ்வாறு கேட்பவர்கள் சாதாரண நேரத்தில் இவை தடை செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

கேடு விளைவிப்பவை

கடல் வாழ் பிராணிகளிலோ, புழு பூச்சியினத்திலோ எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு மனிதன் சாக வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம்.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

அல்குர்ஆன் 2:195

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்.

அல்குர்ஆன் 4:29

எந்த உணவு மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும், தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

உயிரினங்களில் விலக்கப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்பமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை.

பார்க்க புகாரி 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267

இந்த நபிவழியை அடிப்படையாகக் கொண்டு நமக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு உண்ண அனுமதியைப் பறித்து விடக்கூடாது.

அனுமதிக்கப்பட்டதை மட்டும் உண்டு, தடை செய்யப்பட்டவைகளை விட்டும் விலகிய நன் மக்களாக இறைவன் நம்மை ஆக்கியருள்வானாக!

12.07.2009 . 9:43 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account