நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
அறிமுகம்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இக்கொள்கையைப் புரிந்து கொண்ட மக்களுக்கு சில குழப்பங்கள் உள்ளன.
திருக்குர்ஆனை முழுமையாக நாம் ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனில் ஏற்கத்தக்கவை, ஏற்கத்தகாதவை என்று இரு வகைகள் இல்லை. அனைத்துமே ஏற்கத்தக்கவை தான்.
ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை இட்டுக்கட்டப்பட்டவை என்றும் பலவீனமானவை என்றும் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வமானவைகளை மட்டுமே ஏற்க வேண்டும்.
இதில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகள் தானே? அவை அனைத்தையும் ஆதாரமாக ஏற்க வேண்டியதுதானே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகளில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்பது நபியை மறுப்பதாக ஆகாதா?
என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
நபிகள் நாயகம் சொன்னவை, செய்தவை, அங்கீகாரம் செய்தவை அனைத்துமே ஏற்கத்தக்கதாக இருக்கும் போது அவர்கள் சம்மந்தப்பட்ட சில செய்திகளை ஏற்கத்தகாதவை என்று கூறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த குற்றமாகாதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவை, செய்தவை, அங்கீகரித்தவை அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல்.
அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் நபித்தோழர்கள் தானே? நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.
நாம் நபித்தோழர்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. நபித்தோழர்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சரியான ஹதீஸ்களையும், தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.
பி.ஜைனுல் ஆபிதீன்
சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடு என்ன?
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாக இருப்பது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவையும், செய்தவையும் அல்லாஹ்வால் அருளப்பட்டவை தான். ஏனெனில் மார்க்க விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எதையும் கூற மாட்டார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் மார்க்கம் என்று காட்டித்தருவார்கள். எனவே திருக்குர்ஆனும் இறைச் செய்தி தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச்செய்தி தான். இரண்டையும் முழுமையாகப் பின்பற்றுவது முஸ்லிம்களின் கடமையாகும்.
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.
திருக்குர்ஆன் 53:2,3
அப்படியானால் ஹதீஸ்களில் மட்டும் சரியானவை, தவறானவை என்று எப்படிச் சொல்லப்படுகிறது?
இதற்கான விளக்கம் இதுதான்:
ஒரு ஹதீஸ் தவறானது என்று சொல்லப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பது அதன் பொருளல்ல. அப்படி ஒருவர் சொன்னால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? இல்லையா என்ற சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் தவறானவை என்று சொல்லப்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாம் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் நம்மிடம் ஒரு திருக்குர்ஆன் வசனத்தை ஒதிக்காட்டினால் அதை அப்படியே ஏற்போம். அது போல் திருக்குர்ஆனில் சொல்லப்படாத கூடுதல் செய்தியைக் கூறினால் அதையும் அப்படியே ஏற்றாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நாம் காதால் கேட்டதால் அவர்கள் சொன்னார்களா என்ற சந்தேகத்துக்கு இடமில்லை. அப்போது எல்லா செய்திகளுமே சரியானவை தான்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் வாழும் மக்களுக்கு இந்த நிலை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வந்த மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட சரியான செய்திகளும் கிடைத்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாத பொய்களும் அவர்கள் பெயரால் மக்களை வந்தடைந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது.
ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் அவர்கள் காலத்தில் யாராலும் எழுதப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள்.
பல நபித்தோழர்களும் மனப்பாடம் செய்திருந்தனர்.
இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரிபார்ப்பார்கள்.
صحيح البخاري
6 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கும் வேளையில் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 6
இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.
நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள்.
இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் திருக்குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.
ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ, இரண்டு மூன்று நபித்தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு – அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் – சொன்னார்கள்.
இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு ஹதீஸ்களைக் கொண்டு சேர்த்தார்கள்.
எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் திருக்குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.
திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டான்.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர்ஆன் 15:9
ஒரு குர்ஆன் வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டால் அவர்கள் அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு திருக்குர்ஆனை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டு இருந்த எழுத்தர்களை அழைத்து எழுதிக் கொள்ளச் செய்வார்கள். அவர்களில் பலர் மனப்பாடம் செய்தும் கொள்வார்கள்.
அருளப்பட்ட வசனங்களை கூட்டுத் தொழுகைகளில் சப்தமாக நபியவர்கள் ஓதி வந்ததால் எழுதத் தெரியாத நபித்தோழர்களும் குர்ஆன் வசனங்களை மனனம் செய்தார்கள்.
எழுதிவர்களின் கவனக்குறைவால் தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அனைவரின் எழுத்துப் பிரதிகளும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு பின்னர் மனப்பாடம் செய்தவர்களின் மனனத்துடன் சரிபார்க்கப்பட்டு பிழையற்ற மூலப்பிரதி உருவாக்கப்பட்டது.
திருக்குர்ஆனில் இல்லாத ஒன்றை திருக்குர்ஆன் என்று இட்டுக்கட்டி சொல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் ஹதீஸ்களைப் பாதுகாக்க இத்தகைய ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் யாரும் மனனம் செய்யவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அல்லாத ஒரு செய்தியை, ஒரு சட்டத்தை ஒரு சபையில் சொல்கிறார்கள் என்றால் அந்த சபையில் இருந்தவர்கள் மட்டுமே அதை அறிவார்கள். அவர்கள் தமது வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிப்பார்கள். அது மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தால் சொல்வார்கள். அதை அனைத்து நபித்தோழர்களும் அறிய முடியாது. அதிகமான நபித்தோழர்கள் கூட அறிய முடியாது.
ஒரு நபித்தோழர் வந்து நபிகள் நாயகத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டால் கேள்வி கேட்கும் போது ஓரிருவர் அதை செவிமடுக்கத் தான் வாய்ப்பு உள்ளது. பல்லாயிரம் தோழர்களைக் கொண்ட அச்சமுதாயத்தில் அந்தச் செய்தியை அ|றிந்த ஓரிருவர் தான் இருப்பார்கள்.
அடுத்த தலைமுறையிலும் இது போன்ற நிலைதான் இருந்தது.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள்.
உதாரணமாக பத்து நபித்தோழர்கள் கெய்ரோ நகருக்கு இடம் பெயர்ந்தால் அந்தப் பத்து நபித்தோழர்கள் தமக்குத் தெரிந்த ஹதீஸ்களை மட்டும் தான் அந்த மக்களுக்குச் சொல்வார்கள். இது மொத்த ஹதீஸ்களில் ஒரு சதவிகிதம், இரு சதவிகிதம் என்ற அளவில் தான் இருக்கும். மீதி ஹதீஸ்கள் இவ்வூராருக்குக் கிடைக்க வழியில்லை.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்ற செய்திகளை வாய்மொழியாக மட்டுமே அறிவித்து வந்தார்கள்.
அவர்களிடம் ஹதீஸ்களச் செவியுற்றவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வாய்மொழியாகவே சொன்னார்கள். இப்படி வாய்மொழியாக மட்டுமே ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு வந்தன.
குர்ஆன் வசனம் என யாரேனும் ஒரு வசனத்தைக் கூறினால் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட மூலப்பிரதியைப் பார்த்தும், மனனம் செய்தவர்களைக் கேட்டும் அது குர்ஆனில் உள்ளதா? இட்டுக்கட்டப்பட்டதா என்று கண்டறிந்து விட முடியும். இதனால் குர்ஆனில் இல்லாத ஒன்றை, குர்ஆன் எனக் கூற யாருக்கும் துணிவு வரவில்லை.
ஆனால் ஹதீஸ்கள் ஒருவரால் கூட முழுமையாக மனனம் செய்யப்படவில்லை என்பதாலும், எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்படாததாலும் ஹதீஸ் என்ற பெயரால் இட்டுக்கட்டும் வாசல் அடைக்கப்படாமல் இருந்தது.’
ஒட்டு மொத்த ஹதீஸையே இட்டுக் கட்டினாலும், கூடுதலாக சில வாக்கியங்களைச் சேர்த்தாலும், நீக்கினாலும் அதைக் கண்டறிய முடியாத நிலை இருந்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தீய சக்திகளும், அறிவீனர்களும் பொய்களை ஹதீஸ்கள் என்று கூறலானார்கள்.
இதனால் ஹதீஸ்களுடன் ஹதீஸ் அல்லாதவைகளும் கலந்து விட்டன.
இப்படி ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.
அது குறித்து நாம் அறிந்து கொண்டால் தான் சரியானவை, தவறானவை என்று ஹதீஸ்களப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக அறியலாம்.
1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறிபோய் வருமானம் தடைப்பட்டு விடுமோ என்று கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.
இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்ததால் ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள்.
நம்ப முடியாத உளறல்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள்.
இவற்றைக் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்.
من قَالَ: لَا إِلَه إِلَّا الله خلق الله من كل كلمة طائرا، لَهُ سَبْعُونَ لِسَانا، فِي كل لِسَان ألف لُغَة، وَيَسْتَغْفِرُونَ الله لَهُ – كشف الخفاء
யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும். அவனுக்காக அவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும்.
நூல் : கஷ்ஃபுல் ஃகஃபா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
والباذنجان شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ-الأسرار المرفوعة في الأخبار الموضوعة –
கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூவா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
الْبَاذِنْجَانُ لِمَا أُكِلَ لَهُ – نقد المنقول
எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عَلَيْكُم بالعدس؛ فَإِنَّهُ مبارك، يرق الْقلب، وَيكثر الدمعة، قد بَارك فِيهِ سَبْعُونَ نَبيا، مِنْهُم عِيسَى ابْن مَرْيَم – تلخيص كتاب الموضوعات
பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். ஈஸா நபி உள்ளிட்ட எழுபது நபிமார்கள் அதன் மூலம் பரகத் எனும் அருள் பெற்றனர்.
நூல் : தல்கீஸ் கிதாபுல் மவ்லூஆத்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
لَوْ كَانَ الْأَرُزُّ رَجُلًا لَكَانَ حَلِيمًا مَا أَكَلَهُ جَائِعٌ إِلَّا أَشْبَعَهُ – الأسرار المرفوعة في الأخبار الموضوعة
நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும். அதை யார் சாப்பிட்டாலும் பசியைப் போக்கும்.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
أَحْضِرُوا مَوَائِدَكُمُ الْبَقْلَ فَإِنَّهُ مَطْرَدَةٌ لِلشَّيْطَانِ مَعَ التَّسْمِيَةِ -الموضوعات لابن الجوزي
உங்கள் உணவில் பிஸ்மில்லாஹ் கூறி கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.
நூல் : அல்மவ்லூஆத் இப்னுல்ஜவ்ஸி
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
سَخَّنْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فِي الشَّمْسِ يَغْتَسِلُ بِهِ ، فَقَالَ : لَا تَفْعَلِي يَا حُمَيْرَاءُ فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ -نصب الراية في تخريج أحاديث الهداية
ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.
நூல் : நஸ்புர் ராயா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
مَنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ يَتَصَدَّقُ بِهِ فَلْيَلْعَنِ الْيَهُودَ وَالنَّصَارَى -الأسرار المرفوعة في الأخبار الموضوعة
தர்மம் செய்ய ஏதும் கிடைக்கா விட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
ثَلَاثَةٌ تَزِيدُ فِي الْبَصَرِ النَّظَرُ إِلَى الْخُضْرَةِ وَالْمَاءِ الْجَارِي وَالْوَجْهِ الْحَسَنِ -الأسرار المرفوعة في الأخبار الموضوعة
பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப் பார்ப்பது, பார்க்கும் திறனை அதிகரிக்கும்.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
النَّظَرُ إِلَى الْوَجْهِ الْجَمِيلِ عبَادَةٌ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
الزُّرْقَةُ فِي الْعَيْنِ يُمْنٌ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
أكل السمك يوهن الجسد – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
من أَخذ لقْمَة من مجْرى الْغَائِط وَالْبَوْل، فغسلها ثمَّ أكلهَا؛ غفر لَهُ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عَلَيْكُم بالملح؛ فَإِنَّهُ شِفَاء من سبعين دَاء — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
உப்பை விட்டு விடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
مَا من رمان إِلَّا ويلقح بِحَبَّة من رمان الْجنَّة — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
எந்த ஒரு மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின் தண்ணீர் இருக்கும்.
நூல் : நக்துல் மன்கூல்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عَنْ مُعَاذَ بْنِ جَبَلٍ قَالَ: " لَمَّا بَعَثَنِي رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، قَالَ: إِنَّكَ تَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِنْ سَأَلُوكَ عَنِ الْمَجَرَّةِ فَأَخْبِرْهُمْ أَنَّهَا مِنْ عِرْقِ الأَفْعَى الَّتِي تَحْتَ الْعَرْشِ " —الموضوعات لابن الجوزي
ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.
நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: " جَاءَ رَجُلٌ إِلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَى إِلَيْهِ قِلَّةَ الْوَلَدِ فَأَمَرَهُ أَنْ يَأْكُلَ الْبَيْضَ وَالْبَصَلَ – الموضوعات لابن الجوزي
முட்டையும், பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.
நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
شَاوِرُوهُنَّ وَخَالِفُوهُنَّ " – يَعْنِي النِّسَاءَ –الفوائد الموضوعة في الأحاديث الموضوعة
பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!
நூல் : அல்ஃபவாயிதுல் மவ்லூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
الدَّجَاجُ غَنَمُ فُقَرَاءِ أُمَّتِي –الموضوعات لابن الجوزي
கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.
நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
لَوْ يُرَبِّي أَحَدُكُمْ بَعْدَ السِّتِّينَ وَمِائَةِ جَرْوَ كَلْبٍ خَيْرٌ لَهُ من أَن يُربي ولدا –الأسرار المرفوعة في الأخبار الموضوعة
160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.
நூல் : அல் அஸ்ராருல் மர்பூஆ
இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.
இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.
கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.
பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கீரைக்கும், ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.
ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் மற்றவர்களைப் போல் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர்.
நீல நிறக் கண்கள் படைத்தவர்களிலும் தரித்திரம் பிடித்தவர்கள் இருக்கின்றார்கள்.
இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும்.
2. ஆர்வக் கோளாறு
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர்.
மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.
இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு இவர்கள் நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள்.
நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
أحاديث فضل سور القرآن مائة وأربعة عشر حديثا ذكرها الزمخشري والبيضاوي تبعا للواحدي كلها كذب على رسول الله واتهم المحدثون بوضعها نوح بن ابي مريم –أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش
நூஹ் பின் அபீமர்யம் திருக்குர்ஆனின் அத்தியாயங்களின் சிறப்பு குறித்து 114 ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்.
روى نوح بْن أبي مَرْيَم الْجَامِع فِي فَضَائِل الْقُرْآن سُورَة سُورَة عَن رجلٍ عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس فَقيل لَهُ من أَيْنَ لَك هَذَا قَالَ لِأَن النَّاس قد اشتغلوا بمغازي ابْن إِسْحَاق وَغَيره فحرضتهم على قِرَاءَة الْقُرْآن –اللآلي المصنوعة
நூஹ் பின் அபீமர்யம் என்பாரிடம் இந்த ஹதீஸ்கள் உமக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்கப்பட்ட போது மக்கள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களைக் குர்ஆன் பக்கம் ஈர்ப்பதற்காக நான் தான் இட்டுக்கட்டினேன் என்று கூறினார்.
நூல் : அல்லஆலில் மஸ்னூஆ
அல்ஃபாத்திஹா அத்தியாயம், ஆல இம்ரான் அத்தியாயம், பகரா அத்தியாயம், ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்ஃபு அத்தியாயம், குல்ஹுவல்லாஹு அத்தியாயம், குல்அவூது பிரப்பில் ஃபலக் அத்தியாயம் , குல்அவூது பிரப்பின்னாஸ் அத்தியாயம், இதா ஸுல்ஸிலத் அத்தியாயம், குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயம், தபாரக்கல்லதீ அத்தியாயம் போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.
ومنها أحاديث الاكتحال يوم عاشوراء والتزين والتوسعة والصلاة فيه وغير ذلك من فضائل لا يصح منها شيء ولا حديث واحد و لا يثبت عن النبي صلى الله عليه و سلم فيه شيء غير أحاديث صيامه وما عداها فباطل –المنار المنيف
ஆஷுரா நாளில் சுருமா இட வேண்டும்; அலங்கரித்துக் கொள்ள வேண்டும்; குடும்பத்துக்கு அன்றைய தினம் அதிகமாகச் செலவிட வேண்டும்; அன்றைய தினத்துக்கான தொழுகை போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது பற்றிய ஹதீஸைத் தவிர மற்ற அனைத்துமே ஆதாரமற்றவையாகும்.
நூல் : அல்மனாருல் முனீஃப்
(அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் மட்டும் ஆதாரப்பூர்வமானவை)
حديث " البداءة في قلم الأظافر بمسبحة اليمنى والختم بإبهامها وفي اليسرى بالخنصر إلى الإبهام –تخريج أحاديث الإحياء
நகங்களை வெட்டும் போது வலது கை ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து கட்டை விரலில் முடிக்க வேண்டும்; இடது கை சுண்டு விரலில் ஆரம்பித்து கடைவிரலில் முடிக்க வேண்டும் என்று கஸ்ஸாலி, இஹ்யா நூலில் குறிப்பிட்டுள்ளதும் பொய்யான ஹதீஸாகும்.
நூல் : தக்ரீஜு அஹாதீஸில் இஹ்யா
حَدِيثُ صَلَاةٌ بِخَاتَمٍ تَعْدِلُ سَبْعِينَ بِغَيْرِ خَاتَمٍ هُوَ مَوْضُوعٌ –الأسرار المرفوعة في الأخبار الموضوعة
மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
أن الصلاة بعمامة تعدل بخمس وعشرين وجمعة بعمامة تعدل سبعين جمعة بغير عمامة إن الملائكة يشهدون الجمعة متعممين ولا يزالون يصلون على أصحاب العمائم حتى تغرب الشمس قال ابن حجر موضوع — الفوائد المجموعة للشوكاني
தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது. தலைப்பாகையுடன் ஒரு ஜும்ஆ தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்ததாகும். வானவர்கள் தலைப்பாகையுடன் ஜும்ஆவுக்கு வந்து தலைப்பாகை அணிந்தவர்களுக்காக சூரியன் மறையும் வரை துஆ செய்கிறார்கள்.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ أَوَّلَ لَيْلَةٍ مِنْ رَجَبٍ عِشْرِينَ رَكْعَةً جَازَ عَلَى الصِّرَاطِ بِلَا حِسَابٍ –الأسرار المرفوعة في الأخبار الموضوعة
ரஜப் மாதம் முதல் நாள் இருபது ரக்அத்கள் யார் தொழுகிறாரோ அவர் விசாரிக்கப்படாமல் (நரகின்) பாலத்தைக் கடப்பார்.
நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
ومنها أحاديث صلاة ليلة النصف من شعبان كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد منهما في سبعين –المنار المنيف –
அலீயே! யார் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் குல்ஹுவல்லாஹு அத்தியாயத்தை ஆயிரம் முறை ஓதி நூறு ரக்அத்கள் தொழுகிறாரோ அன்று இரவு அவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் அல்லாஹ் நிறைவேற்றுவான்; என்பது உள்ளிட்ட ஷஅபான் 15 ஆம் இரவு தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை .
நூல் : அல்மனாருல் முனீஃப்
ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب — الموضوعات للصغاني
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.
நூல் : அல்மவ்லூஆத் சகானி
وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه الأبواب لم يصح فيها شئ أصلا –كشف الخفاء
ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலத்துல் கத்ர் இரவுக்கான தொழுகை, குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.
நூல் : கஷ்ஃபுல் கஃபா
إن الله خلق السموات والأرض يوم عاشوراء — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول
ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும், பூமிகளையும் படைத்தான்.
நூல் : நக்துல் மன்கூல்
வானம், பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ, வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாள் ஆஷுரா நாளும், வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.
وَعِنْدَ الثَّانِيَةِ مِنْهَا: قَرَّتْ عَيْنِي بِك يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ مَتِّعْنِي بِالسَّمْعِ وَالْبَصَرِ بَعْدَ وَضْعِ ظُفْرَيْ الْإِبْهَامَيْنِ عَلَى الْعَيْنَيْنِ فَإِنَّهُ – عَلَيْهِ السَّلَامُ – يَكُونُ قَائِدًا لَهُ إلَى الْجَنَّةِ –الدر المختار وحاشية ابن عابدين
مَنْ قَبَّلَ ظُفْرَيْ إبْهَامِهِ عِنْدَ سَمَاعِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فِي الْأَذَانِ أَنَا قَائِدُهُ وَمُدْخِلُهُ فِي صُفُوفِ الْجَنَّةِ –الدر المختار وحاشية ابن عابدين
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்ற பாங்கின் வாசகத்தைச் செவியுறும் போது கட்டை விரல் நகத்தை யார் முத்தமிடுகிறாரோ அவரை நான் வழி நடத்திச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பேன்
நூல் : துர்ருல் முக்தார்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக மத்ஹபு நூல்களில் இட்டுக்கட்டியுள்ளனர்.
அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.
3. தனி மரியாதை பெறுவதற்காக
மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது.
இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
حَدِيثُ إِذَا جَلَسَ الْمُتَعَلِّمُ بَيْنَ يَدَيِ الْعَالِمِ فَتَحَ اللَّهُ عَلَيْهِ سَبْعِينَ بَابًا مِنَ الرَّحْمَةِ وَلا يَقُومُ مِنْ عِنْدِهِ إِلا كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ وَأَعْطَاهُ اللَّهُ بِكُلِّ حَرْفٍ ثَوَابَ سَبْعِينَ شَهِيدًا وَكَتَبَ لَهُ بِكُلِّ حَدِيثٍ عِبَادَةَ سَنَةٍ فِي الذَّيْلِ إِنَّهُ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع
ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவர்கள் எழுகிறார்கள். அவர்கள் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையை அல்லாஹ் தருவான்.
நூல் அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَحْتَاجُونَ إِلَى الْعُلَمَاءِ فِي الْجَنَّةِ وَذَلِكَ أَنَّهُمْ يَزُورُونَ اللَّهَ فِي كُلِّ جُمُعَة فَيَقُول تمنوا عَليّ ماشئتم فَيَلْتَفِتُونَ إِلَى الْعُلَمَاءِ فَيَقُولُونَ مَاذَا نَتَمَنَّى عَلَى رَبِّنَا فَيَقُولُونَ كَذَا وَكَذَا ذُكِرَ فِي الْمِيزَانِ أَنه مَوْضُوع — المصنوع في معرفة الحديث الموضوع
சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ إِنَّ الْعَالِمَ وَالْمُتَعَلِّمَ إِذَا مَرَّا عَلَى قَرْيَةٍ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْفَعُ الْعَذَابَ عَنْ مَقْبَرَةِ تِلْكَ الْقَرْيَةِ أَرْبَعِينَ يَوْمًا قَالَ الْحَافِظُ الْجلالُ لَا أَصْلَ لَهُ –المصنوع في معرفة الحديث الموضوع
ஒரு ஆலிமோ, அல்லது மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ حُضُورُ مَجْلِسِ عَالِمٍ أَفْضَلُ مِنْ صَلاةِ أَلْفِ رَكْعَةٍ كَذَا فِي الإِحْيَاءِ مِنْ حَدِيثِ أَبِي ذَرٍّ قَالَ الْعِرَاقِيُّ ذَكَرَهُ ابْنُ الْجَوْزِيِّ فِي الْمَوْضُوعَاتِ –المصنوع في معرفة الحديث الموضوع
ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عُلَمَاء أمتِي كأنبياء بني إِسْرَائِيل ". لَا أصل لَهُ — النخبة البهية في الأحاديث المكذوبة على خير البرية
என் சமுதாயத்தில் உள்ள உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.
நூல் : அன்னுக்பதுல் பஹிய்யா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ مَنْ أَذَلَّ عَالِمًا بِغَيْرِ حَقٍّ أَذَلَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُؤُوس الْخَلائِقِ مِنْ نُسْخَةِ سَمْعَانَ بْنِ مَهْدِيٍّ الْمَكْذُوبَةِ كَذَا فِي الذَّيْلِ –المصنوع في معرفة الحديث الموضوع
ஒரு ஆலிமை யாரேனும் நியாயமில்லாமல் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث من زار العلماء فقد زارني ومن صافح العلماء فكأنما صافحني ومن جالس العلماء فكأنما جالسني ومن جالسني في الدنيا أجلس الي يوم القيامة في إسناده كذاب –الفوائد المجموعة للشوكاني
யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
مِدَادُ الْعُلَمَاءِ أَفْضَلُ مِنْ دَمِ الشُّهَدَاءِ –الفوائد المجموعة للشوكاني
ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
عَنْ حُذَيْفَةَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عِلْمِ الْبَاطِنِ مَا هُوَ فَقَالَ سَأَلْتُ جِبْرِيلَ عَنْهُ فَقَالَ عَنِ اللَّهِ هُوَ سِرٌّ بَيْنِي وَبَيْنَ أَحِبَّائِي وَأَوْلِيَائِي وَأَصْفِيَائِي أُودِعُهُ فِي قُلُوبِهِمْ لَا يَطَّلِعُ عَلَيْهِ مَلَكٌ مُقَرَّبٌ وَلا نَبِيٌّ مُرْسَلٌ قَالَ الْعَسْقَلانِيُّ مَوْضُوعٌ –المصنوع في معرفة الحديث الموضوع
ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும், எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
நூல் : அல்மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும்.
4. மன்னர்களை மகிழ்விக்க
மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.
மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.
மன்னர்களுக்குத் தண்டனை இல்லை.
மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை.
என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.
5. இயக்க வெறி
மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.
அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்.
துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.
ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.
இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள் ஆவர். அலீ (ரலி)யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.
இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்
மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.
நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.
(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار –مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் குகையில் நுழைந்த உடன் ஒரு சிலந்தி வந்து குகையில் வலை பின்னியது.
நூல் : மிஅது ஹதீஸ்
وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا –أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش
(அபூஜஹில், உமர் ஆகிய) இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.
நூல் : அஸ்னல் மதாலிப்
حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا –المصنوع في معرفة الحديث الموضوع
அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது.
நூல் : அல் மஸ்னூவு
وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل –المصنوع في معرفة الحديث الموضوع
சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை.
நூல் : அல் மஸ்னூவு
حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء –الؤلؤ المرصوع للقاوقجي
ஹிழ்ர், இல்யாஸ் ஆகிய இருவரும் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை.
நூல் : அல்லூலுவுல் மர்சூவு
حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت –الفوائد المجموعة للشوكاني
மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ
حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات — الفوائد المجموعة للشوكاني
முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை.
நூல் : அல்பஃவாயிதுல் மஜ்மூஆ
ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت –المنار المنيف
எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது போன்ற செய்திகள் யாவும் கட்டுக்கதை.
நூல் : அல்மனாருல் முனீஃப்
இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!
إذا صدقت المحبة سقطت شروط الأدب –كشف الخفاء
அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.
நூல் : கஷ்புல் கஃபா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث: أمر بتصغير اللقمة في الكل، وتدقيق المضغ، قال النووي لا يصح –المقاصد الحسنة
சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
நூல் : அல்மகாசிதுல் ஹஸனா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث البخيل عدو الله ولو كان عابدا لا أصل له — المصنوع في معرفة الحديث الموضوع
கஞ்சன் வணக்கசாலியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பகைவன் ஆவான்.
நூல் :அல்மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث فكرة ساعة خير من عبادة ستين سنة –الفوائد المجموعة للشوكاني
சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.
நூல் : அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حب الوطن من الإيمان، لم أقف عليه –المقاصد الحسنة
நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
நூல் : அல்மகாசிதுல் ஹஸனா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث: الفقر فخري وبه أفتخر، قال شيخنا هو باطل موضوع –المقاصد الحسنة
வறுமை எனக்குப் பெருமை.
நூல் : அல்மகாசிதுல் ஹஸனா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث ريق المؤمن شفاء ليس بحديث –أسنى المطالب
முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
நூல் : அஸ்னல் மதாலிப்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
اخلعوا نعالكم عند الطعام فإنه سنة جميلة قال الذهبي فيه متروكان وإسناده مظلم –أسنى المطالب
சாப்பிடும்போது செருப்பைக் கழற்றிவிடுங்கள். அது அழகிய நபிவழியாகும்.
நூல் : அஸ்னல் மதாலிப்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
ي اللآلئ «يَا عَلِيُّ عَلَيْكَ بِالْمِلْحِ فَإِنَّهُ شِفَاءٌ مِنْ سَبْعِينَ دَاءً الْجُذَامَ والبرص وَالْجُنُون» لَا يَصح فِيهِ عبد الله بن أَحْمد بن عَامر وَهُوَ وَأَبوهُ يرويان عَن أهل الْبَيْت نُسْخَة كلهَا بَاطِلَة –تذكرة الموضوعات للفتني
உப்பு பைத்தியம், குஸ்டம் உள்ளிட்ட எழுபது நோய்களுக்கு நிவாரணமாகும்
நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
اللآلئ «الأَكْلُ فِي السُّوقِ دَنَاءَةٌ» لَا يَصح قَالَ الْعقيلِيّ لَا يَصح فِي هَذَا الْبَاب شَيْء — تذكرة الموضوعات للفتني
கடைத் தெருவில் சாப்பிடுவது அநாகரிகமாகும்.
நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
الكلام على المائدة، لا أعلم فيه شيئاً نفياً ولا إثباتاً –المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهرة على الألسنة
உண்ணும் போது பேசக் கூடாது.
நூல் : அல்மகாசிதுல் ஹஸனா
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
كل ممنوع حلولا يعرف بهذا وفي معناه – إن ابن آدم لحريص على ما منع — الجد الحثيث في بيان ما ليس بحديث للعامري
தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
நூல் : அல்ஜித்துல் ஹஸீஸ்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث من جهل شيئا عاداه ليس بحديث — أسنى المطالب
ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
நூல் : அஸ்னல் மதாலிப்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
خبر من حفر لأخيه قليبا وقع فيه قال السخاوي لم أجد له أصلا — أسنى المطالب
அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
நூல் : அஸ்னல் மதாலிப்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث لا أدري نصف العلم — أسنى المطالب
தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.
நூல் : அஸ்னல் மதாலிப்
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث حسنات الأبرار سيئات المقربين من كلام الصوفية — الؤلؤ المرصوع للقاوقجي
நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.
நூல் : அல்லூலுவுல் மர்சூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث ريق المؤمن شفاء وكذا سؤر المؤمن شفاء ليس له أصل مرفوع –المصنوع
முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
நூல் : அல்மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث حبذا السواك يزيد الرجل فصاحة قال الصغاني وضعه ظاهر —الفوائد المجموعة للشوكاني
பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.
நூல் : அல்பவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حديث إنها تنزل الرحمة عند ذكر الصالحين قال العراقي وابن حجر لا أصل له — الفوائد المجموعة للشوكاني
நல்லடியார்களைப் பற்றிப் பேசும் போது அங்கே அருள் இறங்கும்.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
71 – حَدِيثُ إِنَّ الْوَرْدَ خُلِقَ مِنْ عَرَقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ عَرَقِ الْبُرَاقِ قَالَ النَّوَوِيُّ لَا يَصِحُّ وَقَالَ الْعَسْقَلانِيُّ وَغَيْرُهُ مَوْضُوعٌ –المصنوع في معرفة الحديث الموضوع
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வியர்வையில் இருந்து ரோஜா படைக்கப்பட்டது.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ حَسَنَاتُ الأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِينَ –المصنوع في معرفة الحديث الموضوع
நல்லவர்களிடம் நல்லவையாகக் கருதப்படுபவை இறையச்சமுடையவர்களுக்கு கெட்டதாகத் தெரியும்.
நூல்: அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ السَّلامَةُ فِي الْعُزْلَةِ لَيْسَ بِحَدِيث –المصنوع في معرفة الحديث الموضوع
தனிமையில் தான் (ஈமானுக்கு) பாதுகாப்பு
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ عِنْدَ ذِكْرِ الصَّالِحِينَ تَنْزِلُ الرَّحْمَةُ –المصنوع في معرفة الحديث الموضوع
நல்லோரை நினைவு கூறும்போது ரஹ்மத் எனும் அருள் இறங்குகிறது.
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
لَوْلاكَ لَمَا خَلَقْتُ الأَفْلاكَ قَالَ الصَّغَانِيُّ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع
முஹம்மதே நீர் இல்லாவிட்டால் அகிலத்தை நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூரினானாம்.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيث مَا بديء بِشَيْءٍ يَوْمَ الأَرْبَعَاءِ إِلا تَمَّ قَالَ السَّخَاوِيُّ لَمْ أَقِفْ لَهُ عَلَى أَصْلٍ — المصنوع في معرفة الحديث الموضوع
புதன் கிழமை ஆரம்பித்த எந்தக் காரியமானாலும் நிறைவடையாமல் போகாது.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ مَسْحُ الْعَيْنَيْنِ بِبَاطِنِ أُنْمُلَتَيِ الْمُسَبِّحَتَيْنِ بَعْدَ تَقْبِيلِها عِنْدَ سَمَاعِ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَعَ قَوْلِهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا لَا يَصِحُّ رَفْعُهُ عَلَى مَا قَالَ السَّخَاوِيُّ –المصنوع في معرفة الحديث الموضوع
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் எனக் கூறும் போது ஆட்காட்டி விரலை முத்தமிட்டு அதைக் கண்களில் ஒற்றிக் கொள்வது பற்றிய ஹதீஸ்
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع
தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்
நூல்: அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ مَا مِنْ جمَاعَة اجْتمعت إِلَّا وَفِيهِمْ ولي لله لَا هُمْ يَدْرُونَ وَلا هُوَ يَدْرِي بِنَفْسِهِ لَا أَصْلَ لَهُ — المصنوع في معرفة الحديث الموضوع
எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார்.
நூல் : அல் மஸ்னூவு
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.
حَدِيثُ الْمَرِيضُ أَنِينُهُ تَسْبِيحٌ وَصِيَاحُهُ — المصنوع في معرفة الحديث الموضوع
நோயாளி புலம்புவதும், சப்தமிடுவதும் தஸ்பீஹ் ஆகும்.
நூல் : அல் மஸ்னூவு
373 – حَدِيثُ مُوتُوا قَبْلَ أَنْ تَمُوتُوا قَالَ الْعَسْقَلانِيُّ إِنَّهُ غَيْرُ ثَابِتٍ — المصنوع في معرفة الحديث الموضوع
சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
நூல் : அல் மஸ்னூவு
அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.
இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்
ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர்.
இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள்.
யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் எனப் பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.
இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.
ஒவ்வொரு நோய்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.
இன்னும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் தொன்னூறு சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.
8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
சிலர் முதுமையில் மூளை குழம்பி நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.
இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.
தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.
இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும், ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும், ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.
ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன?
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் சரியான செய்திகளும், தவறான செய்திகளும் கலந்து விட்டன.
ஹதீஸ் என்று சொல்லப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதா? அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? சந்தேகத்துக்கு இடமானதா? என்று பிரித்தறியும் அவசியம் இதனால் தான் ஏற்பட்டது.
இப்படிப் பிரித்தறியாமல் இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாதவைகளை மார்க்கம் என்று கருதும் நிலை ஏற்பட்டு இருக்கும். இஸ்லாம் அதன் தூய வடைவில் மக்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.
சரியான செய்திகளுடன் தவறான செய்திகள் கலந்து விட்டதால் சரியான செய்திகளை எப்படிக் கண்டறிவது?’
இதற்கு அறிஞர்கள் இரு வழிகளைக் கண்டறிந்தனர்.
ஹதீஸ்களின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்துவது முதல் வழியாகும்
அக்கருத்து திருக்குர்ஆனுக்கோ, கண்முன்னே தெரியும் உண்மைக்கோ முரணாக இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க முடியாது.
என்பது அவர்கள் கண்டறிந்த முதல் வழியாகும்.
திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்த செய்திகளை நம்பும்போது திருக்குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள் என்று 16:44 வசனம் கூறுகிறது.
திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக, அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.
நபிகள் நாயகத்தின் சொற்களும், செயல்களும் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக இருக்குமே தவிர திருக்குர்ஆனுக்கு எதிராக இருக்காது என்பதே இதற்குக் காரணம்.
இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட விஷயத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் சமமானவை அல்ல. திருக்குர்ஆன் யாராலும் இடைச் செருகல் செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருப்பதால் அதன் நம்பகத் தன்மையுடன் ஹதீஸ்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை முன்னர் சுட்டிக்காட்டியுள்ளோம்.
எனவே தான் கலப்படமான ஹதீஸா? மெய்யான ஹதீஸா என்பதை அறிவதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு முரணில்லாமல் உள்ளதா என்பதை முக்கிய அளவுகோலாக கொண்டனர்.
'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நிராகரிப்பதே குர்ஆனை தக்க முறையில் மதிப்பதாகும்.
அறிவிக்கப்படும் ஹதீஸின் கருத்து சரியானதா என்பதைக் கவனத்தில் கொண்டு சரியான ஹதீஸ்கள் பிரித்தறியப்பட்டது போல் இன்னும் பல வழிமுறைகளை ஆய்வு செய்தும் சரியான ஹதீஸ்கள் பிரித்து அறியப்பட்டன.
ஹதீஸ்களை நூல் வடிவில் ஒருவர் திரட்டினால் அவர் தனக்கு அந்தச் செய்தி யார் மூலம் கிடைத்தது என்பதையும் கூற வேண்டும். அத்துடன் அவருக்கு யார் கூறினார் என்று கூற வேண்டும். இப்படி நூலாசிரியரில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை உள்ள அத்தனை அறிவிப்பாளர்களையும் குறிப்பிட வேண்டும். இடையில் யாராவது விடுபட்டால் அது சரியான செய்தி அல்ல.
அந்த அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் உள்ள ஒவ்வொருவரின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் உள்ளிட்ட விபரங்களுக்கும் ஆதாரம் இருக்க வேண்டும். இதில் குறை இருந்தால் அது சரியான ஹதீஸ் அல்ல.
இப்படி பல காரணங்களை அலசி ஆராய்ந்து தவறான ஹதீஸ்கள் களையெடுக்கப்பட்டன.
ஹதீஸ்களின் வகைகளை நாம் பின்னர் குறிப்பிடும் போது இதைப் பற்றி முழுமயாக அறிந்து கொள்வீர்கள்.
ஹதீஸ் துறையில்
ஸஹீஹ் (சரியானது) என்றால் என்ன?
லயீஃப் (பலவீனமானது) என்றால் என்ன?
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன?
என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களையும், அது குறித்த விளக்கங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்
ஆகிய மூன்றும் ஹதீஸ்கள் எனப்படுகின்றன.
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
صحيح1 ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
موضوع 2மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
متروك3மத்ரூக் விடப்பட்டவை
ضعيف 4ளயீஃப் பலவீனமானவை
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.
இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.
இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
1ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.
ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள்.
எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
1 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وحَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»، قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ» —سنن الترمذي
தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ்.
இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்.
முஸ்அப் பின் ஸஅது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்.
முஸ்அப் பின் ஸஅதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார்.
ஸிமாக்கிடம் வகீவு, அபூ அவானா ஆகிய இருவர் கேட்டனர்.
அதாவது வகீவு என்பார் வழியாகவும், அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.
முதல் வழி
1. நபிகள் நாயகம் (ஸல்)
2. இப்னு உமர் (ரலி)
3. முஸ்அப் பின் ஸஅது
4. ஸிமாக் பின் ஹர்பு
5. இஸ்ராயீல்
6. வகீவு
7. ஹன்னாத்
8. திர்மிதீ
இரண்டாவது வழி
1. நபிகள் நாயகம் (ஸல்)
2. இப்னு உமர் (ரலி)
3. முஸ்அப் பின் ஸஅது
4. ஸிமாக் பின் ஹர்பு
5. அபூ அவானா
6. குதைபா
7. திர்மிதீ
மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார்.
நாம் எடுத்துக்காட்டிய இந்த முதல் ஹதீஸ் மட்டுமின்றி அந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை திர்மிதி கூறுகின்றார்.
உதாரணத்துக்காகத் தான் திர்மிதி என்ற ஹதீஸ் நூலை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எந்த ஹதீஸ் நூலை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு ஹதீஸும் அதன் முழு அறிவிப்பாளர் வரிசைத் தொடருடன் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
எடுத்துக்காட்டாக திர்மிதி நூலிலிருந்து நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.
இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து கேட்டிருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான ஹதீஸ் என்பர்.
அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.
ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
2. மவ்ளூவு الموضوع (இட்டுக்கட்டப்பட்டது)
ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றையோ, செய்யாதவற்றையோ, அங்கீகரிக்காதவற்றையோ அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.
திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.
புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டவை.
இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.
மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.
இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம்.
3. மத்ரூக் المتروك (விடப்படுவதற்கு ஏற்றது)
மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.
அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.
மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
ளயீஃப் الضعيف (பலவீனமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.
சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?
உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே.
திருக்குர்ஆன் 17:36
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
2518 – حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ — سنن الترمذي
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)
நூற்கள் : திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.
பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது.
அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்
அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம்.
1. முர்ஸல் المرسل
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும்.
ஹன்னாத்
வகீவு,
இஸ்ராயீல்,
ஸிமாக்,
முஸ்அப்,
நபிகள் நாயகம்
என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும்.ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும், ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.
அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ, அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.
ஒரு நம்பகமான தாபியீ, நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.
2. முன்கதிவு المنقطع (தொடர்பு அறுந்தது)
நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள்.
உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.
ஹன்னாத்,
வகீவு,
இஸ்ராயீல்,
ஸிமாக்,
முஸ்அப்,
இப்னு உமர்,
நபிகள் நாயகம்.
இதில் உதாரணமாக ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத், வகீவு, இஸ்ராயீல், முஸ்அப், இப்னு உமர், நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தது) என்று ஆகிவிடும்.
இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.
இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.
அ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்து விட்டார்.
ஆ என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம்.
அ என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
ஆ என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.
அ என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.
ஆ என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.
அ என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை.
வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை.
ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஆ என்பார் அ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் அவரிடம் நேரில் கேட்டு அறிவித்திருக்க முடியாது. யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
அ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்
ஆ என்பவர் 115 ல் பிறந்தார்
இப்போது அ என்பவரிடமிருந்து ஆ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அ என்பவர் மரணிக்கும் போது ஆ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.
அ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஆ என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டுபிடித்து விடலாம்.
இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும்; அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும்.
3. முஃளல் المعضل
ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.
ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும்.
4. முஅல்லக் المعلق
ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.
வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.
உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.
அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற தனது ஆசிரியரான அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் வகை தான்.
புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் புகாரி கூறுவார்.
இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால், அல்லது வேறு நூற்களில் அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுச் செயல்படலாம்.
அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அந்த ஹதீஸைப் பலவீனமானது என முடிவு செய்ய வேண்டும்.
பலவீனமான ஹதீஸ்களின் மற்றொரு வகை
அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
1. ஷாத் الشاذ
அரிதானது என்பது இதன் பொருள்.
ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர்.
தொழுகையில் நான்கு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
இப்னு உமர் (ரலி) மூலம்
ஸாலிம்,
நாஃபிவு,
முஹாரிப்
ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார்.
நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது.
இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?
மூன்று பேர் தவறுதலாகக் கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும்.
நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர்.
புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
குதைபா என்ற அறிஞர் கூறியதாக மேற்கண்டவர்களில் எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸாயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும்.
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.
ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் மூஸாவின் மகன் இஸ்மாயீல் என்று குறிப்பிடுகின்றார்.
ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது.
அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிடப்பட்ட முஹம்மதின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவராக உள்ளார். ஆனால் மூஸாவின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.
முஹம்மதின் மகன் இஸ்மாயீல் நம்பகமானவரா? மூஸாவின் மகன் இஸ்மாயீல் நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். மூஸாவின் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும்.
முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்பது தான் சரியானது என்று நாம் முடிவு செய்யும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் முஹம்மதின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவராக உள்ளார்.
அதாவது மூன்று பேர் சொன்ன முஹம்மதின் மகன் இஸ்மாயீல் தான் சரியான அறிவிப்பு என்றாலும் அந்த ஹதீஸ் பலவீனமாக ஆகிவிடுகிறது.
அந்த அறிவிப்பாளர் யார் என்று முடிவு செய்வதற்குத்தான் மூவரின் அறிவிப்பை எடுத்துக் கொள்கிறோம். அந்த அறிவிப்பாளர் தான் இதைக் கூறியவர் என்று ஆகும் போது அவர் பலவீனர் என்பதால் அவர் வழியாக அறிவிக்கப்பட்ட ஹதீஸும் பலவீனமாக ஆகிறது.
ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். ஆனால் முரணாக இல்லாமல் நால்வர் கூறாத ஒரு விஷயத்தை ஒருவர் கூடுதலாகக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும்.
உதாரணமாக முதல் ரக்அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள் என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார்.
இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை ஒருவர் மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றார். இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான்.
இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.
ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பல விதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.
நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் ஒருவர் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது.
ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள்.
எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும், இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.
முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள்.
ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்றால் ஆதாரமாகக் கொள்ளத் தக்கது என்பது பொருள்.
2. முன்கர் المنكر (நிராகரிக்கப்பட்டது)
ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம்.
மற்றவர்களை விட நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.
ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.
ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
(இப்னு ஸலாஹ் என்ற அறிஞர் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றார். )
முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.
அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பதை முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பதை மஃரூஃப் என்போம்.
மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.
பலவீனமான ஹதீஸ்களின் இன்னொரு வகை
அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும்.
1. முதல்லஸ் المدلس
பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் ஹதீஸ் கலையில் தத்லீஸ் எனப்படும்.
உதாரணமாக
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்.
அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹஸன் என்பாரிடம் கூறுகிறார்.
ஹஸன் என்பார் சலீம் என்பாரிடம் கூறுகிறார்.
சலீம் இதை எப்படி அறிவிக்க வேண்டும்? இதை ஹஸன் கூறினார். ஹஸனுக்கு அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தான் அவர் கூற வேண்டும். இப்படிக் கூறினால் அவர் யாரையும் இருட்டடிப்புச் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறாமல்
அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறார் என்று கூறுகிறார் என்றால் இவர் அப்பாஸிடம் தானே கேட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்பாஸ் கூறியதை இவர் செவியுறவில்லை. அப்பாஸ் கூறியதாக ஹஸன் கூறியதைத் தான் செவியுற்றார். தனக்கு கூறிய ஆசிரியரை விட்டு விட்டு அறிவிப்பதால் இது தத்லீஸ் எனப்படும்.
சலீம் என்பார் தனது ஆசிரியரைக் கூறாமல் மறைத்து விட்டதால் அவர் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது. அவர் யார் என்று தெரிந்தால் தான் அவரது நாணயம் நம்பகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்ய முடியும்.
ஆசிரியரைக் கூறாமல் விட்டு விட்ட எல்லா ஹதீஸ்களும் முதல்லஸ் என்ற வகையில் சேராது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே நாம் எடுத்துக் காட்டிய உதாரணத்தில் சலீம் என்பவர் சில செய்திகளை அப்பாஸிடம் நேரடியாக கேட்டு இருக்க வேண்டும். சில செய்திகளை அப்பாஸ் கூறியதாக மற்றவர் சொல்லி கேட்டிருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாக அறிவித்தால் தான் தத்லீஸ் ஆகும்.
சலீம் என்பவர் அப்பாஸ் அவர்களைச் சந்திக்கவே இல்லை. அவர் காலத்தவராகவும் இல்லை. இந்த நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாகச் சொன்னால் இது முன்கதிவு என்ற வகையில் சேரும். சலீம் என்பார் அப்பாஸைச் சந்தித்து இருக்க மாட்டார் என்ற ஆதாரம் உள்ளதால் இவர் அப்பாஸிடம் கேட்டதாகச் சொல்வது தவறு என்ற தெளிவான முடிவுக்கு வந்து விடமுடியும்.
ஆனால் அப்பாஸிடம் இவர் நேரடியாகவும் சில ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். சில ஹதீஸ்களை அப்பாஸ் கூறியதாக மற்றவர்கள் இவருக்கு அறிவித்துள்ளனர். இப்போது இவர் அப்பாஸ் கூறினார் என்றால் இங்கு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் அப்பாஸிடமும் கேட்டுள்ளதால் இதையும் அவர் அப்பாஸிடம் கேட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். இப்படி இருந்தால் தான் முதல்லஸ் எனப்படும்
சலீம் என்ற அறிவிப்பாளர் அப்பாஸ் வழியாக அறிவிக்கும் செய்தியை நான் அப்பாஸிடம் கேட்டேன்; அல்லது அப்பாஸ் எனக்குச் சொன்னார் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் இதில் அவர் இருட்டடிப்பு செய்யவில்லை. நேரடியாகக் கேட்டதாகச் சொல்வதால் இது ஏற்புடைய ஹதீஸ் ஆகும். இப்படிச் சொல்லாமல் அப்பாஸ் சொன்னார் என்று அறிவித்தால் இவரிடம் சொன்னார் என்ற கருத்து இதில் இல்லை. அப்பாஸ் இவரிடம் சொல்லி இருக்கலாம். அல்லது அப்பாஸ் சொன்னதாக மற்றவர் இவருக்குச் சொல்லி இருக்கலாம். இப்படி இருந்தால் அதை ஆதாரமாகக் கொள்ள கூடாது.
இதில் சில அறிவிப்பாளர்கள் விதிவிலக்கு பெறுவார்கள்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.
சலீம் என்பவர் அப்பாஸிடம் நேரிலும் கேட்டுள்ளார். அப்பாஸ் கூறியதாக இன்னொருவர் மூலமும் கேள்விப்பட்டுள்ளார். ஆனால் எதை நேரடியாக அப்பாஸிடம் கேட்டாரோ அதை மட்டுமே அப்பாஸ் கூறியதாக அறிவிப்பார். இன்னொருவர் வழியாக கேட்டதை அப்பாஸ் கூறியதாக அறிவிக்கவே மாட்டார் என்பது நிருபணமாக இருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் முதல்லஸ் ஆகாது. நான் நேரடியாகக் கேட்டேன் என்று சொல்லாவிட்டாலும் அது முதல்லஸ் ஆகாது.
முதல்லஸ் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும்.
ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.
இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
2. முஅன்அன் المعنعن
அன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும்.
அன் அபீஹுரைரா (அபூஹுரைரா வழியாக)
அன் ஆயிஷா (ஆயிஷா வழியாக)
என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.
நமக்குச் சொன்னார்;
நமக்கு அறிவித்தார்;
எனக்குச் சொன்னார்;
என்னிடம் சொன்னார்;
நம்மிடம் தெரிவித்தார்;
நான் காதால் அவரிடம் செவியுற்றேன்
என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக அவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.
அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால் இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் அதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ, மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
அது போல் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பாளர் தொடரைக் கூறும் போது இடையிடையே அறிவிப்பாளர் விடக் கூடியவராக இருந்தால், ஒரு அறிவிப்பாளருக்கும் அவருக்கு அடுத்த அறிவிப்பாளரும் சமகாலத்தவராக இல்லாமலிருக்கும் போது அன் என்று பயன்படுத்தி அறிவித்தால் அதுவும் தள்ளுபடி செய்யபப்டும்.
3. முத்ரஜ் المدرج (இடைச்செருகல்)
ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு.
இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர், இந்த நேரத்தில்இதை ஓது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.
இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.
வேறு அறிவிப்பைப் பார்த்தும் இடைச் செருகலைக் கண்டுபிடிக்கலாம்.
இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று அல்ல; என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ கூறுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.
இது நிச்சயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத் தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்தும் கண்டு பிடிக்கலாம்.
அல்லது இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளலாம்.
பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
பலவீனமான ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை
1. முள்தரப் المضطرب
குழப்பமானது என்று இதன் பொருள்.
முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.
முள்தரப் என்பது ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம்உள்ளது.
ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அது முள்தரப் எனப்படும்.
ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் ஒரு ஆசிரியர் கூறியதாக அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக வேறு ஒரு ஆசிரியர் வழியாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். இரு விதமாக அறிவிப்பவர்களும் சமமான தரத்தில் இருந்தால் தான் இருவர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். ஐஅவரின் தரத்தை விட இருவரின் தரம் உயர்ந்தததாக இருந்தால் அப்போது இருவர் அறிவிப்பது தான் சரியான ஹதீஸ். இது முள்தரப் ஆகாது.
இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும், மதீனாவிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக் கூடாது.
முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.
ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த தவறு) தான்.
கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.
இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர், பின்னொரு சமயத்தில் அப்துல்காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான்.
பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.
2. மக்லுாப் المقلوب (மாறாட்டம்)
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்குமாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்குமாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்குமாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
எது மாற்றிக் கூறப்பட்டது என்று கண்டறியப்படுகிறதோ அந்த ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரைக் கூற வேண்டிய இடத்தில் மாணவரையும், மாணவரைக் கூற வேண்டிய இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.
3. மஜ்ஹுல் المجهول (யாரென அறியப்படாதவர்கள்)
ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.
இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.
அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் இவரும் மஜ்ஹுல் தான்.
ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.
இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.
யாரைப் பற்றிய செய்தி என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல்
இது வரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம்.
யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மர்பூஃவு என்றும்,
நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மவ்கூஃப் என்றும்,
அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்ட செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.
இதை விரிவாகப் பார்ப்போம்.
1. முஸ்னத், மர்ஃபூவு (المسند– المرفوع)
முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள்.
முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான்.
முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும்.
மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, செய்ததாகவோ அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும்.
மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும்.
மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.
2. மவ்கூஃப் الموقوف
சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார்; இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும்.
நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது ஆதாரமாக ஆகாது.
சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.
நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்
எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
எனவே இதை மவ்கூஃப் என்று கூறக் கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர்.
3. மக்தூவு المقطوع (முறிக்கப்பட்டது)
நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும்.
நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.
அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல்
எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. முதவா(த்)திர் المتواتر (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
ஒரு செய்தியை ஒருவர்; இருவர் அல்ல; ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர்.
மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.
நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒருவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அதை அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம்.
குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும்.
குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும் என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர்.
இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஹபருல் வாஹித் خبر الواحد (தனி நபர் அறிவிப்பது)
தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.
இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.
மஷ்ஹூர் مشهور
எல்லா மட்டங்களிலும் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் எனப்படும்.
மூன்று நபித்தோழர்கள் ஒரு செய்தியை அறிவித்து, அம்மூவர் வழியாக கேட்டவர்களும் தலா மூவருக்கு அறிவித்து இப்படி சங்கிலித்தொடராக எல்லா நிலையிலும் மூவர் அல்லது அதைவிட அதிகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் ஆகும். இது முதவாதிர் என்ற வகை ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். இத்தகைய ஹதீஸ்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
அஸீஸ் عزيز
எல்லா மட்டங்களிலும் இருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் அஸீஸ் எனப்படும்.
இரண்டு நபித்தோழர்கள் ஒரு செய்தியை அறிவித்து, அவ்விருவர் வழியாக கேட்டவர்களும் தலா இருவருக்கு அறிவித்து இப்படி சங்கிலித் தொடராக எல்லா நிலையிலும் இருவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் அஸீஸ் ஆகும். இத்தகைய ஹதீஸ்கள் அதிக அளவில் காணப்படும். பெரும்பாலான ஹதீஸ்கள் இந்த தரத்தில் தான் அமைந்துள்ளன.
கரீப் الغريب
எல்லா மட்டங்களிலும் ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் கரீப் எனப்படும்.
கபர் அல் வாஹித் எனும் தனி நபர் ஹதீஸ்களில் இது தரம் குறைந்ததாகும். ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் ஒருவர் வழியாக அறிவிக்கப்படுவதை கடைசித் தரத்தில் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதுகின்றனர். இதை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆதாரமாக எடுக்கலாம் என்பதே சரியானதாகும்.
இவை எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.
எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.
தவறான ஹதீஸ்களில் இருந்து சரியான ஹதீஸ்களைப் பிரித்தறிந்து சரியானதைப் பின்பற்றும் நன்மக்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.
சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode