Sidebar

21
Sat, Dec
38 New Articles

பேய் பிசாசு உண்டா?

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பேய் பிசாசு உண்டா?

நூலின் பெயர் : பேய் பிசாசு உண்டா?

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் .

பேய் பிசாசு உண்டா?

மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்குபடுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர்.

புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர்.

வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும், எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது.

எவற்றைச் செய்யலாம்; எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம்; எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே.

இதன் காரணமாகவே பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பெண் என்றால் பேயும் இரங்கும்

நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்கள் நடமாடுவதாக மக்கள் நம்பினாலும் தமிழகத்தில் இந்த நம்பிக்கை மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்களைக் கற்பனை செய்து அவற்றின் பெயர்களும், தன்மைகளும் மிகத் துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்கள் உள்ளன.

வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்கள் உள்ளன.

பழிவாங்கும் பேய்கள்,

இரத்தம் குடிக்கும் பேய்கள்,

இளைஞர்களை மாத்திரமே தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள்,

வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள்

என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால், பேய் பற்றி கற்பனைக் கதைகளை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும், பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்திலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடனும் ஆராய்வோம்.

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

பேய், பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆவிகள் அனைத்தும் இறைவனது கைவசத்தில் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

صحيح البخاري

6320 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ، فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ، ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ "

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : புகாரி 6320, 7393 முஸ்லிம் 5257

மனிதன் தூங்கும் போது தற்காலிகமாகவும், மரணத்தின் போது நிரந்தரமாகவும் மனித உயிர்களை அல்லாஹ் தன் கைவசத்தில் எடுத்துக் கொள்கிறான் என்று இந்த நபிமொழியும் தெளிவாகக் கூறுகின்றது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.

உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் கூறியதற்கு எதிராக பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், இறைவனையும், இறைத்தூதரையும் நம்பியவனாக முடியுமா?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்! என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99,100

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது.

இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்குத் திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸக் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸக் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள்.

இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு (பர்சக்) திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

திருக்குர்ஆன் 55:19,20

விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

இதில் பயன்படுத்தியுள்ள பர்சக் என்ற வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

மனிதன் இறந்த பின் அவனுக்கும், இவ்வுலகுக்கும் இடையே பர்ஸக் எனும் திரை போடப்படுவதாகக் கூறியதன் மூலம் இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இறைவன் அறிவிக்கின்றான்.

திருக்குர்ஆனின் இவ்வசனத்தை நம்பும் ஒரு முஸ்லிம், இறைவன் ஏற்படுத்திய அந்தத் தடையை ஆவிகள் உடைத்துக் கொண்டு, மண்ணுலகம் வந்து நடமாடும் என்று எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

பர்ஸக் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் இதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் எப்படி இந்த உலகுக்கு வர இயலும்?

பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

صحيح البخاري

1338 - حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: وَقَالَ لِي خَلِيفَةُ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " العَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ، فَأَقْعَدَاهُ، فَيَقُولاَنِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الجَنَّةِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَيَرَاهُمَا جَمِيعًا، وَأَمَّا الكَافِرُ - أَوِ المُنَافِقُ - فَيَقُولُ: لاَ أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ، فَيُقَالُ: لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ، ثُمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلَّا الثَّقَلَيْنِ "

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூற்கள் : புகாரி 1338, 1374, 1379, 6515, முஸ்லிம் 5505

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையைப் பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மனிதர்களுடைய ஆவிகளின் நிலை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்குவதைக் காணுங்கள்!

سنن الترمذي

1071 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ - أَوْ قَالَ: أَحَدُكُمْ - أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ " وَفِي البَاب عَنْ عَلِيٍّ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَابْنِ عَبَّاسٍ، وَالبَرَاءِ بْنِ عَازِبٍ، وَأَبِي أَيُّوبَ، وَأَنَسٍ، وَجَابِرٍ، وَعَائِشَةَ، وَأَبِي سَعِيدٍ، كُلُّهُمْ رَوَوْا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَذَابِ القَبْرِ.: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும், நீலநிறக் கண்களும் உடைய இரண்டு வானவர்கள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர். மற்றொருவர் நகீர். இந்த மனிதர் பற்றி (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். அதற்கு அவர், முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார். அவனது அடியாருமாவார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அவ்வானவர்கள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி உறங்குவீராக! என்று கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாஃபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எலும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும், கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

உலகில் நல்லவனாக வாழ்ந்த மனிதன், வானவர்களின் விசாரணைக்கு சரியான பதிலைக் கூறுகிறான். அதன் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனைக் கண்ட அம்மனிதன் தனது இல்லத்துக்குச் சென்று இதனைத் தெரிவித்துவிட்டு வருவதற்கு அனுமதி கோருகிறான். அந்தக் கட்டத்தில் புது மாப்பிள்ளை போல் உறங்குமாறு இறைவனால் கூறப்படுகின்றது. தற்காலிகமாக சிறிது நேரம் இவ்வுலகுக்கு வந்து விட்டு மீண்டும் திரும்பி வருவதற்குக் கூட நல்ல உயிர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கியாமத் நாள் வரையிலும், இறைவன் எழுப்பும் காலம் வரையிலும் ஆழ்ந்த உறக்க நிலையிலேயே நல்ல உயிர்கள் இருந்து வருகின்றன என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த உறக்கத்தினிடையே காலையிலும், மாலையிலும் அவனுக்கு சொர்க்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை முந்தைய ஹதீஸ் கூறுகின்றது. இது நல்லடியார்களது உயிர்களின் நிலைமை.

மரணித்த மனிதன் கெட்டவனாக வாழ்ந்து மறைந்திருந்தால் அவன் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை பூமியால் நெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கியாமத் நாள் வரை உறக்க நிலையில் இருந்து வரும் நல்ல ஆவிகளும், அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் பூமியால் நெருக்கப்படும் கெட்ட ஆவிகளும் இவ்வுலகுக்கு வர முடியாது என்பதற்கும் இந்த ஹதீஸ் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

இதன் பின்னரும் பேய்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புபவர்கள் முன்னர் நாம் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களை நம்ப மறுக்கிறார்கள். மேலே கூறிய நபிமொழிகளையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படும் முன்கர், நகீர் எனும் மலக்குகளை நம்ப மறுக்கின்றார்கள் என்பதே பொருளாகும்.

 ஆமன்து பில்லாஹி, வமலாயிகதிஹி வகுதுபிஹி வருஸுலிஹி........

என்று கூறி அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்புவதாக உறுதியளிக்கும் முஸ்லிம் பேய் இருப்பதாக நம்பும் போது இந்த நான்கையும் ஒரே நேரத்தில் மறுத்தவனாக ஆகிவிடுகின்றான்.

இங்கே எடுத்துக் காட்டப்பட்ட விஷயங்களே இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரப் போதுமானவை என்றாலும் எஞ்சியுள்ள இன்னும் சில ஐயங்களையும் நீக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மற்றும் சில ஹதீஸ்களையும் காண்போம்.

மனிதன் மரணித்த பின்னர் திரும்பவும் இவ்வுலகுக்கு அவனது உயிர் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்குமானால் மனிதர்களிலேயே மிகவும் உயர்ந்த நிலையைப் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் தூதரான அவர்களுக்குக் கூட இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அல்லாஹ்வின் தூதரே தெரிவித்து விடுகின்றார்கள்.

سنن النسائي

1282 - أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، ح وأَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ»

பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, தாரிமி

இந்த ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தையும் பொறுக்கியெடுத்து பயன்படுத்தியது போல் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக அவர்களது சமுதாயத்தினர் ஸலாம் கூறினால் அந்த ஸலாமைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதற்காகவென்றே இறைவன் வானவர்களை நியமனம் செய்திருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்த இடத்திலிருந்தே நாம் கூறும் ஸலாமை கேட்கக் கூட இயலாது. மாறாக வானவர்கள் தான் அதைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட இறந்தவருக்கும், இந்த உலகுக்கும் நேரடியாக யாதொரு தொடர்பும் கிடையாது என்பதையும் இது தெளிவாகக் கூறுகின்றது. நேரடித் தொடர்பு இருக்கின்றது என்றால் இதற்கென்றே இறைவன் சில வானவர்களை நியமிக்க வேண்டியதில்லை.

سنن أبي داود

2042 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»

உங்களின் இல்லங்களைக் அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! எனது அடக்கத்தலத்தை விழாத் தலமாக ஆக்காதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்து ஸலவாத் கூறினாலும் என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூ தாவூத்

முந்தைய ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் ஸலாம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் கூறும் ஸலவாத் பற்றிக் குறிப்பிடுகின்றது.

ஸலவாத்தை நான் செவியுறுகிறேன் என்றோ, ஸலவாத் கூறும் இடத்திற்கு வருகை புரிகிறேன் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்றே கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட மரணத்திற்குப் பின் இவ்வுலகத்துடன் இவ்வுலகத்து மாந்தருடன் நேரடியாக யாதொரு உறவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித ஆத்மாவின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் ஆத்மாக்கள் எப்படி இவ்வுலகுக்கு வருகை முடியும்? பேய்களாக எப்படி உலா வர முடியும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மனிதர்களில் நபிமார்கள் மிகவும் உயர்வானவர்கள் என்றால் அதற்கு அடுத்த நிலையை உடையவர்கள் ஷஹீத்கள் எனும் உயிர்த்தியாகிகளாவர்.

சத்தியத்தை நிலைநாட்டும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அடியார்களின் கடன் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவர்களின் உயர்வான நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த உயிர்த் தியாகிகளுடைய ஆவிகளின் நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

صحيح مسلم

121 - (1887) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو مُعَاوِيَةَ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْنَا عَبْدَ اللهِ عَنْ هَذِهِ الْآيَةِ: {وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ} [آل عمران: 169] قَالَ: أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ، لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ، ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ، فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلَاعَةً»، فَقَالَ: " هَلْ تَشْتَهُونَ شَيْئًا؟ قَالُوا: أَيَّ شَيْءٍ نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا، فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا، قَالُوا: يَا رَبِّ، نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى، فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا "

உயிர் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சொர்க்கத்தில் விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி தந்து நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். எங்கள் இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில் எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டபின் எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும். மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு விரும்புவர். அப்போது திரும்பச் செல்வது தவிர வேறு தேவை இவர்களுக்கு இல்லை என்பதால் அப்படியே அவர்கள் விடப்படுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் : முஸ்லிம் 3834

இறைவனுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் மிகவும் உயர்வான ஒரு காரியத்திற்காக உலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்கின்றார்கள். உயர்வான பதவியைப் பெற்றவர்கள் உயர்வான பணிக்காக உலகுக்கு வருவதற்கு அனுமதி கேட்டும் இறைவன் மறுத்து விடுகின்றான்.

ஸுனன் சயீத் பின் மன்சூர் நூலில் இறந்தவர்கள் மண்ணுலகுக்கு வர முடியாது என்று விதியாக்கி விட்டேன் என இறைவன் அப்போது கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு தெளிவான ஆதாரங்களைக் கண்ட பிறகு, இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியும் என்று நம்பலாமா? அப்படி நம்புவது இஸ்லாமாக இருக்க முடியுமா?

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நபிமார்களின் ஆத்மாக்களும், உயிர்த் தியாகிகளின் ஆத்மாக்களும் திரும்ப வர இயலாது என்பது நிரூபனமான பின் மற்ற ஆத்மாக்கள் பேய்களாக உலகுக்கு வர முடியும் என்பதை நம்ப முடியுமா?

தங்களின் உள்ளங்களில் ஊறிப்போன பேய்கள் பற்றிய நம்பிக்கையை இஸ்லாம் மறுக்கின்றது என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பேய்களை விரட்டியடித்து விடும் அளவுக்கு உறுதியான ஈமான் உள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை நாம் எடுத்து வைத்த சான்றுகளே போதுமானதாகும். இதற்கு மேல் இவர்களுக்கு விளக்கம் தேவையில்லை.

திருக்குர்ஆனே கூறினாலும், திருத்தூதரே சொன்னாலும் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை விட்டுவிடத் தயங்குபவர்களும் நம்மில் உள்ளனர். அல்லாஹ்வை விடவும், அவனது தூதரை விடவும் இத்தகையவர்களுக்கு இன்னும் ஆயிரம் சான்றுகளைச் சமர்ப்பித்தாலும் இவர்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபடப் போவதில்லை. இவர்களை நாம் விட்டு விட வேண்டியது தான்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாரம்பர்ய நம்பிக்கையையும் விடமுடியாமல், அதே நேரத்தில் நாம் எடுத்துக் காட்டிய பேய்களுக்கு எதிரான சான்றுகளை மறுக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்.

இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இத்தகையவர்கள் இரண்டையும் மறுக்காமல் புதிய விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய்களுக்குப் புதியதொரு இலக்கணத்தை உருவாக்கி வித்தியாசமான கோணத்தில் பேய்களை அறிமுகப்படுத்துகின்றார்கள்.

பேய்களுக்கு இவர்கள் கூறும் புதிய இலக்கணத்தையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு விளக்கமளிப்பது நமக்கு அவசியமாகி விடுகின்றது.

இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் அவ்வாறு கூறுவதால் அதை நாங்கள் மறுக்க மாட்டோம். ஆயினும் இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் உள்ளனர். மனிதன் இறந்த பின் அவனுடன் இருந்த ஷைத்தான் அவனை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த ஷைத்தான் தான் உயிருடன் உள்ளவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றான். இதைத்தான் பேய் என்கிறோம் என்று கூறுகின்றனர்.

இது தான் இவர்கள் பேய்களுக்கு அளிக்கும் புதிய இலக்கணம். தங்களின் நம்பிக்கைக்குச் சான்றாக இவர்கள் குர்ஆன் ஹதீஸையே முன்வைக்கிறார்கள்.

المعجم الكبير للطبراني

8454 - حَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا عَارِمٌ أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بن زَيْدٍ، عَنْ عَطَاءِ بن السَّائِبِ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"أَيُّهَا النَّاسُ، عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ يُقَرِّبُ إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يُقَرِّبُ إِلَى الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ يُقَرِّبُ إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يُقَرِّبُ إِلَى النَّارِ، إِنَّهُ يُقَالُ لِلصَّادِقِ: صَدَقَ وَبَرَّ، وَلِلْكَاذِبِ: كَذَبَ وَفَجَرَ، أَلا وَإِنَّ لِلْمَلَكِ لَمَّةٌ، وَلِلْشَيْطَانِ لَمَّةٌ، فَلَمَّةُ الْمَلَكِ إِيعَادٌ لِلْخَيْرِ، وَلَمَّةُ الشَّيْطَانِ إِيعَادٌ بِالشَّرِّ، فَمَنْ وَجَدَ لَمَّةَ الْمَلَكِ فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَنْ وَجَدَ لَمَّةَ الشَّيْطَانِ فَلْيَتَعَوَّذْ مِنْ ذَلِكَ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: "الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ" [البقرة: 268]، قَالَ: أَلا إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَضْحَكُ إِلَى رَجُلَيْنِ، رَجُلٍ قَامَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ مِنْ فِرَاشِهِ وَلِحَافِهِ وَدِثَارِهِ فَتَوَضَّأَ، ثُمَّ قَامَ إِلَى صَلاةٍ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَلائِكَتِهِ: مَا حَمَلَ عَبْدِي هَذَا عَلَى مَا صَنَعَ؟ فَيَقُولُونَ: رَبَّنَا رَجَاءَ مَا عِنْدَكَ، وَشَفَقَةً مِمَّا عِنْدَكَ، فَيَقُولُ: فَإِنَّي قَدْ أَعْطَيْتُهُ مَا رَجَا وَأَمَّنْتُهُ مِمَّا خَافَ، وَرَجُلٍ كَانَ فِي فِئَةٍ فَعَلِمَ مَا لَهُ فِي الْفِرَارِ، وَعَلِمَ مَا لَهُ عِنْدَ اللَّهِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَيَقُولُ لِلْمَلائِكَةِ: مَا حَمَلَ

ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் தப்ரானி

 

இதன் அறிவிப்பாளர் ஆரிம் என்பார் நம்பகமானவர் என்றாலும் கடைசிக் காலத்தில் ஹிஜ்ரி 120 ஆம் ஆண்டு மூளைக் குழப்பத்திற்கு உள்ளானார். ஹிஜ்ரி 120க்குப் பின் இவரிடமிருந்து அறிவிக்கப்படும் செய்திகள் பலவீனமானவை ஆகும். ஆனால் இந்த ஹதீஸை இவரிடமிருந்து அறிவிப்பவர் அலீ பின் அப்துல் அஸீஸ் ஹிஜ்ரி 120க்கு முன் அதாவது 117 ஆம் ஆண்டு அறிவித்துள்ளார் . எனவே இந்த ஹதீஸில் குறை இல்லை.

وقال العقيلي: سماع على البغوي من عارم سنة سبع عشرة ومائتين.

وقال أبو حاتم أيضا: اختلط عارم في آخر عمره، وزال عقله، فمن سمع منه قبل العشرين ومائتين فسماعه جيد.

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. மனிதனுக்குள் ஷைத்தானின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி குர்ஆனும் பின்வருமாறு கூறுகிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.

திருக்குர்ஆன் 2:275

இந்த வசனமும், மேற்கண்ட நபிமொழிகளும் மனிதனிடமும் ஷைத்தான்கள் ஊடுருவியுள்ளனர் என்பதற்கும், அந்த ஷைத்தான்கள் இறந்தவனிடமிருந்து வெளிப்பட்டு உயிருடன் உள்ளவனைப் பிடித்துக் கொள்கின்றனர் என்பதற்கும் சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.

பேய்க்கு இவ்வாறு விளக்கம் கூறும் போது இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியாது என்பதை மறுக்கும் நிலை ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இவர்களின் வாதங்களும் அந்த வாதங்களை நிலைநாட்டுவதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளும் சரியானவை தாமா? இதனை நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தானும் ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்று இவர்கள் எடுத்து வைத்த நபிமொழி நம்பகமானது தான். ஆனால் இந்த நபிமொழியிலிருந்து அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல.

ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருப்பதை மட்டுமே இந்த நபிமொழி கூறுகிறது. ஒருவரிடம் இருந்த ஷைத்தான், அவரது மரணத்திற்குப் பிறகு இன்னொருவரிடமும் சென்று விடுவான் என்பதற்கு இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இந்த நபிமொழியைச் சிந்திக்கும் போது இவர்களது நம்பிக்கைக்கே இது எதிராக அமைந்துள்ளதையும் நாம் உணர முடியும்.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தான் இருக்கிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. பேய் பிடித்துவிட்டதாக இவர்களால் நம்பப்படுகின்றவர்களிடம் மட்டும் (இவர்களது வாதத்தின் படி) இரண்டு ஷைத்தான்கள் இருக்கின்றனர் என்று ஆகின்றது.

பிறக்கும் போதே இருந்த ஷைத்தானுடன் புதிதாகக் குடியேறிவிட்ட ஷைத்தானையும் சேர்த்து பேய்பிடித்தவனிடம் இரண்டு ஷைத்தான்கள் இருப்பதாக ஆகிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு ஷைத்தான் இருப்பதாகக் கூறுகின்ற நபிமொழிக்கு இது முரண்படுகின்றது.

பேய்கள் என்பது ஷைத்தான்கள் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்பதாகக் கூறும் இஸ்லாம் ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை என்பதையும் சொல்லித் தருகின்றது.

ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என இறைவனும், அவனது தூதரும் சொன்னார்களோ அந்த அலுவல்களையே அவன் செய்வான். ஒரு மனிதனது அறிவை முற்றாக நீக்கி அவன் மீது முழு ஆதிக்கம் செய்வது அவனது அலுவல்களில் ஒன்றல்ல.

இவர்கள் தங்கள் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைத்த நபிமொழியே ஷைத்தானுடைய அலுவலை விளக்கிடப் போதுமானதாக அமைந்துள்ளது.

நம் அனைவரிடமும் ஷைத்தான் இருக்கின்ற காரணத்தினால் நாம் நமது அறிவை முற்றிலும் இழந்து விடுவது கிடையாது. நாம் செய்கின்ற காரியம் யாவை? என்பது நமக்கே தெரியாமல் போவது கிடையாது.

நம்மோடு ஒரு ஷைத்தான் இருந்தாலும் நாம் நாமாகவே இருக்கின்றோம். நாம் ஷைத்தானாகவே ஆகிவிடுவதுமில்லை.

அப்படியானால் நம்முடன் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்பதன் அர்த்தம் என்ன?

ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையுடனும் விருப்பத்துடனும் அதனைச் செய்கிறான்.

இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. மனிதர்களைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும்.

ஒரு மனிதன் நன்மையான எந்தக் காரியமும் செய்யாமல் முழுக்க முழுக்க தீமைகளையே செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய மனிதன் தன்னுடனிருக்கின்ற வானவருக்குக் கட்டுப்படாது முற்றிலும் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்டான் என்று கூறலாம்.

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்ட இந்த மனிதன் தன் அறிவையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடுவதில்லை. பைத்தியமாகி விடுவதில்லை.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தை நாம் அலசுவோம்.

பேய் பிடித்தவனிடம் இரு ஷைத்தான்கள் உள்ளனர் என்று கூறுவோரின் நம்பிக்கைப் பிரகாரம் இரண்டு ஷைத்தான்களைத் தன்னகத்தே கொண்டவன் இரண்டு மடங்கு தீமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் பேய் பிடித்தவர்கள் (?) இரண்டு மடங்கு தவறுகள் செய்வது கிடையாது.

பேய் பிடித்தவன்(?) விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; எத்தனையோ தீமைகளை அவன் செய்வதில்லை. பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவனின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது அவனிடம் இரு ஷைத்தான்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக இருக்கின்ற ஒரு ஷைத்தானே செயலிழந்து விட்டதாகத் தான் தெரிகிறது.

மேலும் எல்லாத் தீமைகளையும் அவன் செய்தாலும் இஸ்லாமியப் பார்வையில் அவன் குற்றவாளி ஆக மாட்டான். ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவனாக மாட்டான். சுயசிந்தனையுடன் வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்காக மட்டுமே மனிதன் விசாரிக்கப்படுவான். என்ன செய்கிறான் என்றே தெரியாமல் செய்யும் காரியங்கள் மற்றவர்களின் பார்வைக்கு தவறு என்று தென்பட்டாலும் அதைச் செய்தவன் குற்றவாளியாக ஆவதில்லை. பைத்தியக்காரன் தொழாவிட்டாலோ, நோன்பு நோற்காவிட்டாலோ இன்ன பிற கடமைகளிலிருந்து தவறி விட்டாலோ அதற்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

இந்த வகையில் ஷைத்தான் அந்த மனிதனுக்கு நன்மையே செய்துள்ளான். அனைவரையும் நரகவாசிகளாக ஆக்கும் ஷைத்தான் பேய் பிடித்தவனை மட்டும் சொர்க்கவாசியாக ஆக்கிவிடுகிறான்.

இது ஷைத்தானுடைய அலுவலுக்கே மாற்றமில்லையா? இது ஷைத்தானுக்கு நஷ்டமில்லையா?

இறந்தவர்களின் ஆவியே பேய் என்று சொன்னாலும் அதுவும் சரியானதல்ல. இறந்தவர்களிடம் இருக்கும் ஷைத்தான்கள் வந்து மேலாடுகிறார்கள் என்றாலும் அதுவும் சரியானதல்ல. இரண்டு விளக்கங்களுமே குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானதாகும்.

பேய் என்பது இறந்தவர்களுடைய ஆவிகளின் ஆதிக்கமன்று. மாறாக இறந்தவர்களிடம் குடிகொண்டிருந்த சாத்தான்கள் உயிருடனுள்ளவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமே என்ற கருத்துடையவர்கள் தங்களின் வலுவான ஆதாரமாக 2:275 வது வசனத்தை முன்வைக்கின்றனர்.

வட்டி உண்போர் ஷைத்தான் பீடிக்கப்பட்டவன் எழுவது போலவே மறுமையில் எழுவார்கள் என இவ்வசனம் கூறுகிறது. மனிதன் ஷைத்தானால் பீடிக்கப்படுவான் என்பது பேய் பிடிப்பதையே கூறுகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் இந்த வாதம் பல காரணங்களால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஷைத்தானால் பீடிக்கப்படுவதாக இவ்வசனம் கூறுவது உண்மை தான். ஷைத்தான்களால் மனிதர்கள் பீடிக்கப்படுகிறார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று தான். இதில் நமக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதற்கு இவர்கள் வழங்கும் அர்த்தம் ஏற்கத்தக்கதல்ல.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதன் பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது அதன் சரியான பொருள் தெரிய வருகின்றது.

ஷைத்தானால் தீண்டப்படுவது என்ற வாசகம் இந்த வசனத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் திருக்குர்ஆனில் கையாளப்பட்டுள்ளது.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

2:575 வசனத்தில் இடம் பெற்ற மஸ் என்ற சொல்லே மேற்கண்ட வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. அய்யூப் நபியவர்கள் பேய் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று எவரும் இந்த இடத்தில் பொருள் கொண்டதில்லை.

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 8:201

இந்த இடத்திலும் அதே மஸ் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இறையச்சமுடையோருக்குப் பேய் பிடிக்கும் என்று எவரும் இதற்குப் பொருள் கொண்டதில்லை.

நம்மை தீமை அனைத்துமே இறைவனால் தான் ஏற்படுகின்றன என்றாலும் தீய மோசமான விளைவுகள் பற்றிக் கூறும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறுவதுண்டு. அந்த அடிப்படையிலேயே அய்யூப் நபியவர்கள் தமக்கு ஏற்பட்ட பல சிரமங்களைக் குறிப்பிடும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களுக்கு ஏதாவது தீய எண்ணம் தோன்றிவிடுவதை ஷைத்தான் தீண்டுவது என இறைவன் குறிப்பிடுவதும் அந்த அடிப்படையிலேயே.

ஆக தீமைகளையும், கேடுகளையும், துன்பங்களையும் குறிப்பிடும் போது ஷைத்தானுடைய தீண்டுதல் எனக் கூறப்படுவதுண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

கஷ்டத்தில் உழல்பவன், தீய காரியங்களில் ஈடுபடுபவன், பைத்தியம் பிடிப்பவன், பரட்டைத் தலையுடன் காட்சி தருபவன், மோசமான கவிதைகளை இயற்றுபவன் இவர்களைப் பற்றியெல்லாம் ஷைத்தான் எனவும் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எனவும் கூறப்படும். குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அந்த அடிப்படையிலேயே 2:275 வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் இடம் பெயர்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் இது வரை நாம் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களுடனும், ஹதீஸ்களுடனும் அது முரண்படும் நிலை உருவாகும்.

எந்த வசனத்தைத் தங்களின் வலுவான ஆதாரமாக இவர்கள் எடுத்து வைக்கின்றார்களோ அந்த வசனத்தில் இவர்களின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒருவனிடமிருந்த ஷைத்தான் இன்னொருவனுக்குள் புகுந்து கொள்கிறான் என்று இந்த வசனமும் கூறவில்லை. வேறு எந்த வசனமும் கூறவில்லை.

மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிக்க முடியும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது. பைத்தியம் பிடிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. மாறாக பேய் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சில பேர் பைத்தியங்களாக உள்ளனர். பல பேர் நடிப்பவர்களாகவே உள்ளனர் என்றே நாமும் கூறுகிறோம்.

பேய் இருப்பதாக ஈமான் கொள்பவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. குர்ஆனையும், ஹதீஸையும் மறுத்து விட்டுத்தான் பேய்களை நம்ப முடியும். இரண்டில் எதை நம்புவது? என்று சிந்தியுங்கள்.

 பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.

பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை. இறந்தவர்களின் ஆவி உயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம் செலுத்துவதும் இல்லை. ஒரு மனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனது மரணத்திற்குப் பின் இன்னொருவரிடம் வந்து குடியேறுவதுமில்லை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் நாம் நிரூபித்தாலும் அதை நம்பாத உள்ளங்களும் இருக்கின்றன. இதற்கு நியாயமான காரணங்களும் அவர்களிடம் உள்ளன. எனவே அந்தத் தரப்பினரின் நியாயமான ஐயங்களை அகற்றினால் மட்டுமே பேய்களை மனித உள்ளங்களிலிருந்து முழுமையாக நீக்க முடியும்.

பேய் பிடித்தவர்கள் நேற்று வரை சாதாரணமாக இருந்தனர். திடீரென்று அசாதாரணமானவர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களின் பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவர்களின் பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சிலர் பேசுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம்.

மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய் பிடித்ததாக நம்பப்படுவோருக்கு எவ்வளவோ உயர்வான மருத்துவ சிகிச்சையளித்தும் நிவாரணம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சாமியாரிடமோ, மந்திரவாதியிடமோ, பூசாரியிடமோ, மௌலவியிடமோ மந்திர சிகிச்சை பெற்றதும் உடனடி நிவாரணம் கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களே தாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டு ஓடிப் போகின்றன.

மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால் ஆகிறது என்பது பேய்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள் மற்றும் கோயில்களில் அதிசயமான முறையில் அவர்கள் குணப்படுத்தப்படுகின்றார்கள். இது பேய்கள் இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது என்று இத்தகையோர் கூறுகின்றனர்.

இந்த அதிசயங்களின் புதிரை விடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும் சான்றுகள் முழுமையான பலனையளிக்காது. எனவே இந்த அதிசயங்கள் பற்றிய புதிரை நாம் முதலில் விடுவிக்க வேண்டும். இது பற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராத அளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம்.

சமூக விரோதிகளும், குற்றங்களில் ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றவும் பேய்களைப் பற்றிய கட்டுக்கதைகளைக் கூறுகின்றனர். பேய்களைப் பற்றி கதைகளைக் கட்டிவிட்டு தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். இதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால் கண்டு கொள்ளப்படக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் பேய்கள் நடமாடுவதாக கதை கட்டும் அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விட இது செலவு குறைந்ததாகவும், முழுப் பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாகச் செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும், மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்கிறார்கள்.

இத்தகைய ஏற்பாடுகளால் உண்மையிலேயே பேய்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்தச் சமூக விரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர். எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கே சமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக் கண்டு கொள்ளலாம்.

அற்பமான நோக்கங்களுக்காகக் கூட பேய்கள் பற்றிய வதந்திகள் கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச் சொந்தமான இடத்தைக் குறைவான விலைக்கு வாங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்பவரைக் காலி செய்ய விரும்பினால் பேய்களை விட எளிய வழி எதுவும் இல்லை. அந்த இடத்தில் பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப் பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும் விதமாக சில காரியங்களைச் செய்தால் விரும்பிய விலைக்கு அந்த இடத்தை வாங்கலாம். வாடகைக்கு இருப்பவரை உடனேயே காலி செய்து விடலாம். இது போன்ற அற்பமான நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாட விடப்படுகின்றன.

இவையெல்லாம் சில உதாரணங்களே. இது போன்ற இன்னும் அநேக காரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாக இருக்கின்றன.

இனி பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

நேற்று வரை சாதாரமாணவனாக இருந்த ஒருவன் பேய் பிடித்ததாக நம்பப்படும் போது அசாதாரணமானவனாக எப்படி மாறி விடுகின்றான்?

இந்தக் கேள்விக்கு நாம் விடை கண்டாக வேண்டும்.

மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும், அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும் பேய்க் கதைகள் கட்டி விடப்படுவது போலவே வேறு சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக தங்களுக்கே பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்களும் உண்டு. அவ்வாறு நடிப்பதால் சில காரியங்களை அவர்கள் சாதித்துக் கொள்வதும் உண்டு.

இப்படி பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும் நடித்து தீர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால் அவர்கள் முழுப்பயனை அடைய முடியாது.

இதைச் சில உதாரணங்கள் மூலம் உணர முடியும்.

ஒரு பெண் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பதாக, அல்லது நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்தவளாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவள் இறைவனை அஞ்சி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவளாக இருந்தால் பிரச்சனையில்லை. அவ்வாறின்றி, அன்னிய ஆடவனை விரும்பி அவனை அவள் அடைவதற்கு குடும்பத்தினரின் கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதை எவ்வாறேனும் உடைக்கவே அவள் முயற்சிப்பாள்.

அத்தகைய பெண் சாதாரண நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய் விரும்பிய ஆடவனைச் சந்தித்து வீட்டிற்குத் திரும்பினால் சமூகம் அவளைச் சும்மா விடாது. இந்தத் தடையை உடைப்பதற்கு அவள் பேயாக மாற வேண்டும். பானை சட்டிகளை உடைக்க வேண்டும். வாயில் வந்ததை உளற வேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைக் கற்பனை செய்து மறைவான செய்திகளைக் கூறுவதாக அவிழ்த்து விட வேண்டும். வேறு மொழி பேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும் அளவுக்கு வாயில் வந்தவாறு உளற வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விரும்பிய ஆடவனைச் சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம் அவளது நிலைக்காகப் பரிதாபப்படும். இதனால் தான் அசாதாரணமானவளாக அவள் ஆகி விடுகின்றாள்.

இது ஒரு உதாரணமே. வேறு பல நோக்கங்களுக்காகவும் இது போல் வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர்.

பெருமளவு கடன்பட்டவன் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும், விரைவிலேயே தனக்குத் திருமணம் செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக் கொண்டு வரவும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் இப்படி நாடகமாடுவதுண்டு.

அவர்கள் அசாதாரணமானவர்களாகக் தோற்றமளிப்பது நடிப்புத் தான் என்பதில் ஐயம் தேவையில்லை. இதற்குச் சில சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இலங்கையில் ஒருவர் மலையாள மொழி அறியாத ஒருவர் பேய் பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாக மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர். அவரைச் சோதிப்பதற்காக டாக்டர் கோவூர் என்பவர் செல்கிறார். இவரது தாய்மொழி மலையாளம். இவர் சென்று அவர் பேசும் மலையாள மொழியைக் கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும் மலையாளச் சொல்லாக இருக்கவில்லை. வெறும் உளறலைத் தவிர வேறு இல்லை.

(பார்க்க: டாக்டர் கோவூரின் மனக்கோலம்)

பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள். இது தான் உண்மை.

மாயம்மா என்றொரு பெண். இளம் விதவையான அவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம் காட்டுகின்றது. சில இளைஞர்கள் நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியே வரும் போது பின்தொடர்ந்து சென்றால் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொரு ஆடவனுடன் அவள்!

(ஜுனியர் விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசி)

ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க அவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்ட போது பேய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

(சில மாதங்களுக்கு முந்தைய மறுமலர்ச்சி)

எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம் போடுகிறாளோ அதற்கு அழகிய கூந்தல் வேண்டும். மொட்டை அடித்தால் எவரும் சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய் ஓடிவிடுகின்றது.

இது நடிப்புத் தான் என்பதற்கும், பேய்கள் கிடையாது என்பதற்கும் மேலும் சில அறிவுப்பூர்வமான சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்பது உண்மையானால் பேய்கள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கின்றார்களோ, அடக்கம் செய்யப்படுகின்றார்களோ, எரிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் இருந்தாக வேண்டும். ஆனால் மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளைத் தவிர உலகின் பல பகுதிகளில் பேய்களுக்கு அறவே இடமில்லை.

கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ள நாடுகளில் பட்டிதொட்டிகள் முதல் பெருநகரம் வரை எவருக்கும் பேய் பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியா போன்ற பகுதிகளிலும் பேய்களைக் காண முடிவதில்லை. இந்தியாவில் கூட மிகப்பெரும் நகரங்களில் பேய்களின் அதிகாரம் செல்லுபடியாவதில்லை.

அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத் தான் செய்கின்றனர். பேய்களின் உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும் சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத் தான் செய்கின்றன. பேய்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும் அங்கெல்லாம் பேய்கள் இல்லாமலிருப்பது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம் அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம் போட்டு எதையும் அங்கே சாதிக்க முடிவதில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.

சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனுடன் விரும்பிய நேரத்தில் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை.

இறந்தவர்களின் ஆவிகளே பேய்கள் எனும் அடிப்படையில் பார்க்கும் போது பேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 500 கோடி என்றால் இன்று மேலும் 100 கோடி அதிகமாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள் அதிகமாகும் போது அவற்றின் அட்டகாசங்களும் அதிகமாகி இருக்க வேண்டும்.

அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள் அதிகமாகியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ குறைந்துள்ளது. இதுவும் பேய்கள் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

பேய்கள் மனிதனை விட அதிக வல்லமை கொண்டவை. ஒரே அடியில் அவை மனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றெல்லாம் பேய் நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள்.

இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒரு மனிதன் தனியாகச் செல்லும் போது பிடித்துக் கொண்டதாகத் தான் பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாக இருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும் பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒரு சுடுகாட்டை அல்லது கல்லறையைக் கடந்து சென்றாலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பேய்கள் இவர்களை அண்டுவதில்லை என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். பேய்கள் உண்மையிலே இருக்குமானால் இவர்களை ஏன் தாக்குவதில்லை?

இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் பேய்கள் வெளிச்சத்தில் வருவதில்லையே அது ஏன்? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் ஏதும் கிடையாது.

இருட்டாக இருக்கும் போது எதையாவது பார்த்து விட்டு பேய் என்று மனிதன் நினைத்துக் கொள்கின்றான். நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதன் உண்மையான வடிவத்தில் காட்சி அளிப்பதால் வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்க முடியவில்லை.

இது போலவே தனியாக ஒரு பெண் செல்லும் போது தைரியம் குறைந்த நிலையில் இருக்கிறாள். அப்போது அவள் கண்களுக்குக் கற்பனைத் தோற்றம் தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும் போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாக ஏதும் தோன்றினாலும் மற்றவர்கள் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்று கூறி விடுகிறார்கள். உண்மையாக இருந்தால் ஐந்து பேருக்கும் தென்பட வேண்டும். பொய்யாக இருப்பதால் தான் ஒருத்திக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே. அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம்.

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் உண்டு. எவ்வளவோ மருத்துவம் செய்தும் குணமடையாத இத்தகையோர் ஒரு சாமியாரின் விபூதியைக் கண்டவுடன், வேப்பிலையைக் கண்டவுடன் ஓம் ரீம் என்ற மந்திரத்தைக் (?) கேட்டவுடன் எவ்வாறு அடங்கி விடுகின்றனர்?

மவ்லவிகள், தங்கள்மார்கள் ஆகியோர் மந்திரித்தவுடன், தண்ணீர் ஓதி முகத்தில் தெளித்தவுடன், அல்லது துணியில் எதையாவது எழுதி அதை எரித்து அந்தப் புகையை முகரச் செய்தவுடன் விட்டுவிடு இனி வரமாட்டேன் என்று கூறிக் கொண்டு பேய்கள் ஓடுகின்றனவே, இது எப்படி? ஒரு பாதிரியாரின் தாயத்தை அணிந்தவுடன் அலறிக் கொண்டு பேய்கள் ஓட்டமெடுப்பது எவ்வாறு? இது தான் அந்த நியாயமான சந்தேகம்.

பேய்கள் பிடித்துள்ளதாக நடிப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் அலறிக் கொண்டு ஓடுவதாகவும் நடித்தாக வேண்டும். மந்திரத்துக்கு அடங்காவிட்டால் பேய் பிடித்ததை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.

இந்தச் சாமியார்களோ, பாதிரிகளோ அல்லது தங்கள்மார்களோ ஜபிக்கும் போது பேய் பிடித்தவர்களிடம் எந்த விளைவும் ஏற்படவில்லையென்றால் பிடித்திருப்பது பேயல்ல என்று மக்கள் நினைப்பதுடன் பேயோட்டிகளே பேயில்லை நோய்தான் என்று சான்று வழங்கி விடுவார்கள். அதன் பிறகு பேய் வேஷம் போட்டதனால் எதிர்பார்த்த பலனை அடைய முடியாது. பேயோட்டிகளே பேய் பிடித்துள்ளது என்று சர்டிபிகேட் வழங்குபவர்களாக உள்ளதால் அவர்களது ஜபத்திற்கு ஏதேனும் எதிர் விளைவைக் காட்டியாக வேண்டும்.

இதனால் தான் எல்லா மந்திரவாதிகளுக்கும் (?) பேய்கள் அடிபணிகின்றன.

இதை யார் வேண்டுமானாலும் சோதித்து அறிய முடியும். பேய் பிடித்ததாக நம்பப்படுபவனின் முன்னால் பேயோட்டி போல் சென்று அமர்ந்து கொண்டு பேயோட்டும் திறமை உங்களுக்கு இருப்பதாக நம்பச் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் வாய்க்குள்ளாக அறிவு கெட்ட மடையா! யாரை ஏமாற்றுகிறாய்....! என்பது போல் எதையாவது கூறி ஓதுவது போல் பாவனை செய்து தண்ணீரில் ஊதித் தெளித்தால் அப்போதும் அந்தப் பேயிடம் எதிர் விளைவைக் காணலாம்.

பேய் பிடித்ததாகக் கூறுவது எப்படி நடிப்பாக உள்ளதோ, மந்திரத்தைக் கேட்டதும் அது விலகுவதாக அலறுவதும் நடிப்புத் தான்.

இது வரை நாம் எடுத்து வைத்த சான்றுகள் பேய்கள் கிடையாது என்பதையும் பேய் பிடிப்பதும் அவற்றின் நடமாட்டமும் திட்டமிட்ட நாடகமே என்பதையும் நிரூபிக்கப் போதுமானவையாக உள்ளன. ஆயினும் பேய்கள் இருக்குமோ என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்தும் இன்னும் சில ஐயங்களும் உள்ளன.

அவற்றையும் அப்புறப்படுத்தாத வரை பேய் நம்பிக்கையை ஒழிக்க முடியாது. அத்தகைய ஐயங்களையும் அது பற்றிய தெளிவையும் காண்போம்.

பேய் பிடித்ததாக நம்பப்படுபவர் அதற்கு முன்னால் அவர் அறிந்திராத மறைவான செய்திகளையெல்லாம் அறிவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.

உதாரணமாக இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞனுக்கு பேய் பிடித்ததாக வைத்துக் கொள்வோம். அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்தவரின் ஆவி வந்து இவனைப் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம்.

இவனுக்குப் பேய் பிடிப்பதற்கு முன்னால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை தெரியாமலிருந்து இப்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பேய் பிடித்துக் கொண்டவுடன் மளமளவென்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை அவன் கூற ஆரம்பித்து விடுவதைக் காண்கிறோம்.

இது போலவே மதுரையில் உள்ள ஒருவனை நாகர்கோவிலில் உள்ள பேய் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது இந்தப் பேய் பிடித்தவன் நாகர்கோவிலில் நடந்த விபரங்களைக் கூறுகிறான்.

பேய் பிடிப்பது என்பது ஒரு நாடகம் என்றால் இந்த அதிசய வல்லமை எப்படி அவனுக்கு ஏற்படுகின்றது? என்று பேய் நம்பிக்கையாளர்கள் வினா எழுப்புகின்றனர். இப்படி ஒரு நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போது எந்த ஆதாரங்களும் அவர்களை அசைத்து விட முடியாது. எனவே இதன் உண்மை நிலையை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். பேய் பிடித்தவரிடம் இத்தகைய ஆற்றல் ஏற்பட்டு விடுவது போல தோன்றுவது பொய்த் தோற்றமே தவிர உண்மை அல்ல. இதைப் பலரும் உணர்வதில்லை.

25 வயதுடைய இளைஞன் பேய் பிடித்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளைக் கூறுவதும் நடிப்புத் தான். அவன் கூறுவது போல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏதும் நடந்தே இராது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்ததை விசாரித்தறிய பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதாலும், தனது சாயம் வெளுக்காது என்ற தைரியத்தாலும் இவன் உளறிக் கொட்டுகிறான். இதைப் பார்த்து விட்டு அவன் மறைவான சங்கதிகளைக் கூறுகிறான் என்று பேய் ஆதரவாளர்கள் முடிவு செய்து விடுகின்றனர்.

கடந்த காலம் பற்றி இப்படி கண்டதையும் கூறும் வசதியை பேய் பிடித்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்கள் உளறும் போது மட்டுமே மக்கள் அதை நம்புவார்கள்.

பேய் பிடித்தவர்களிடம் வந்துள்ள பேய்கள் கடந்த காலத்தை அறிந்துள்ளன; பேய்கள் அவற்றை நமக்கு அறிவிக்கின்றன என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் கடந்த காலம் பற்றி எதை வேண்டுமானாலும் கூற முடிகின்றது. அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர்.

கடந்த காலம் பற்றியெல்லாம் அறியும் ஆற்றல் பேய் பிடித்தவர்களுக்கு எற்படுவது உண்மையானால் நிகழ் காலத்தை அறிவது அதை விட எளிதானதாக இருக்க வேண்டுமல்லவா? நிகழ்காலம் பற்றி எதையேனும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் விடையளிக்க மாட்டார்கள்.

உங்கள் கைகளில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு இதில் என்ன உள்ளது? என்று கேட்டால் அவர்களால் அதைக் கூற முடியாமல் போவது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.

நமது கையில் மறைந்திருப்பதைப் பற்றி அவர் வாயில் வந்தவாறு விட்டு அடிக்க முடியாது. ஏனெனில் உடனேயே நாம் அவரது கூற்று உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டுபிடித்து விடுவோம்.

அது போல் பத்து நிமிடத்துக்குப் பின்னால் என்ன ஏற்படும்? என்ற விஷயத்தைப் பற்றி பேய் பிடித்தவனிடம் கேளுங்கள். அதற்கும் விடை வராது.

ஒரு நாளைக்கு முன் அல்லது ஐந்தாறு நாட்களுக்கு முன் அல்லது சில மாதங்களுக்கு முன் நடந்தவை பற்றி மூச்சு விடுவதில்லை. எனெனில் இதைப் பற்றி விசாரித்தறிந்து பேய் பொய் கூறுகிறது என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம்.

சென்ற காலத்தில் (எந்தச் சென்ற காலம் பற்றி விசாரித்தறிய முடியாதோ) எது நடக்கும் போது பலரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையோ அது போன்ற காலம் பற்றியும் அது போன்ற சம்பவம் பற்றியும் மட்டுமே பேய்கள் கூறுவது ஏன்? இதைச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.

பேய் பிடித்ததாக நடிப்பவர்கள் திட்டமிட்டு திறமையாக நடிப்பதால் ஆற்றல் மறைந்து கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது தான் உண்மையாகும்.

இதை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இன்னொரு விதத்தில் நாம் சோதித்துப் பார்க்கலாம்.

அதாவது ஒரு மனிதன் தன் கண் முன்னே நடப்பதை மட்டுமே அறிய முடியும். அவனது முதுகுக்குப் பின்னால் நடக்கும் எதையும் அவனால் அறிய முடியாது. இது மனிதனின் நிலை. ஆனால் பேய்கள் உருவமற்றவை. அவற்றுக்கு முதுகுப்புறம், முன்புறம், பின்புறம் எல்லாம் கிடையாது. இவ்வாறிருக்க பேய் பிடித்தவரின் முதுகுக்குப் பின்னால் இரண்டு விரல்களைக் காட்டி இது எத்தனை விரல்கள்? என்று கேட்டால் கூட சொல்ல முடிவதில்லை. பேய் பிடித்தவரின் கண்களையும் கட்டி விட்டு அருகில் நடப்பதைக் கேட்டால் அதையும் சொல்ல முடிவதில்லை.

பார்ப்பதற்கு மனிதனுக்குத் தான் கண்கள் வேண்டுமே தவிர பேய்களுக்குக் கண்கள் தேவையில்லை. அப்படியானால் ஏன் பேய்களால் இதைச் சொல்ல முடிவதில்லை?

இந்த இடத்தில் தான் இதுவொரு நாடகம் என்பது தெளிவாகின்றது.

பேய் பிடித்த மனிதனது கண்களும், அவனது காதுகளும் கட்டப்பட்டதும் பேய்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியாமல் போவதிலிருந்து பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும் இந்த மனிதன் தான்; பேய் கிடையாது என்பதை நிரூபிக்கின்றது.

பேய் பிடித்ததாகக் கூறுவது நடிப்பின் ஒரு காட்சி என்றால் மறைவான கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கூறுவது நடிப்பின் மற்றொரு காட்சி என்பதைத் தவிர வேறில்லை.

இது திட்டமிட்ட நடிப்புத் தான் என்பதில் இன்னும் சந்தேகம் இருந்தால் இன்னொரு சோதனையின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடியும்.

உயிரோடு இருக்கும் மனிதனிடம் பேய்கள் வந்து விடுமானால் ஏற்கனவே பெற்றிருந்த வல்லமையை விட கூடுதல் வல்லமை பெறுகின்றான் என்பது பேய் நம்பிக்கையாளரின் முடிவு.

பேய் பிடித்ததாக நம்பப்படும் நிராயுதபாணியான ஒருவனிடம் ஒரு கத்தியை அல்லது கழியைக் காட்டி அவனை அடிக்க முயன்றால் அவன் அலறுவதைக் காண்கிறோம். சாதாரண மனிதனை விட சக்தி வாய்ந்த பேய் அவனிடம் குடி கொண்டிருப்பது உண்மையானால் அவன் என்ன செய்ய வேண்டும்? இந்த ஆயுதங்களைக் கண்ட பின்பும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும். நம்மை வெற்றி கொள்ள வேண்டும். அது தான் முடியாவிட்டாலும் அந்த மனிதனிடமே உள்ள பேய் அவனிடமிருந்து பாய்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். இப்படியெல்லாம் எங்கேயும் நடந்ததில்லை. அப்படியானால் மிரள்வதும், அரள்வதும் அந்த மனிதன் தானே தவிர பேயில்லை என்பது தெளிவாகின்றது அல்லவா!

சில பேர் மிரளாமலும் இருப்பார்கள். எனெனில் மிரட்டுபவர் தன்னை அடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாகத் தெரியும் போது தான் இந்த நிலை. மிரட்டக் கூடியவர் நிச்சயம் அடிப்பார் என்று தெரிந்தால் அப்போது நிச்சயம் மிரள்வார். சிலர் மிரட்டும் போது மிரளாமல் இருப்பதும், வேறு சிலர் மிரட்டும் போது மிரள்வதும் அதனால் தான்.

இவர்களின் மற்றொரு ஐயத்தையும் காண்போம்.

நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்ஹாக்களில் பேய் பிடித்த எத்தனையோ நபர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சங்கிலியால் பூட்டப்படுகின்றனர். இவ்வாறு தர்ஹாக்களைத் தஞ்சமடைந்தவர்களிடம் உள்ள பேய்களை அந்த மகான்கள் வியக்கத்தக்க விதத்தில் விரட்டியடிக்கின்றனர். ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் இதை நாம் காண முடிகின்றதே என்பது சிலரது ஐயம்.

இதுவும் ஒரு நாடகம் தான். ஏனைய ஐயங்களைப் போலவே இதுவும் அடிப்படையில்லாததாகும்.

தர்ஹாக்களில் கொண்டுபோய் விடப்படும் பேய் பிடித்தவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

ஒரு சாரார் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவர்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இவர்கள் இவர்களது உறவினர்களின் அறியாமையினால் பேய்கள் என்று நம்ப வைக்கப்பட்டு தர்ஹாக்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்.

உண்மையாகவே இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளதால் தர்ஹாக்களில் இவர்கள் நிவாரணம் பெற முடிவதில்லை. ஒரு தர்ஹாவிலிருந்து மறு தர்ஹா என்று டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு தமிழகத்தின் அனைத்து தர்ஹாக்களுக்கும் விசிட் செய்வார்கள். முடிவில் நம்பிக்கையிழந்து விதியை நொந்து கொண்டு பைத்தியங்களாகவே விடப்படுவர். பாவம் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்!

ஆரம்பத்திலேயே முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் முழு அளவில் ஆரோக்கியம் பெறும் அளவுக்கு மருத்துவத் துறையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கை இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது.

ஏர்வாடி தர்ஹாவைச் சுற்றியுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்பட்ட பல மனநோயாளிகள் தமிழக அரசால் மீட்கப்பட்டு உரிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததையும் நாம் கண்டோம். அங்கே தீப்பற்றி நூற்றுக்கணக்கான மன நோயாளிகள் எரிந்து கரிக்கட்டைகளாகப் போனதையும் நாம் பார்த்துள்ளோம்.

இரண்டாம் சாரார் நாம் முன்னரே விளக்கிய பிரகாரம் எதேனும் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பேய்களாக நடிப்பவர்கள். இவர்கள் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் காலம் வரை நடித்து விட்டு காரியம் கை கூடிய பிறகு பேய் வேஷத்தைக் களைப்பவர்கள். இவ்வாறு இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் வேஷத்தைக் களையும் போது அதன் பெருமை தர்ஹாவுக்குச் சேர்ந்து விடுகின்றது.

உண்மையில் பைத்தியம் பிடித்தவர்களும், பேய் பிடித்ததாக நடிப்பவர்களும் ஆகிய இந்த இரு சாராரும் பாதிக்கும் குறைவானவர்களே. தர்ஹாவின் பால் மக்களை ஈர்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டவர்கள் மறுபாதியினர்.

ஏறத்தாழ கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் போன்றவர்கள் இவர்கள். இப்படி வெள்ளி, திங்கள் இரவுகளில் பேய்கள் பிடித்ததாக நடிப்பதற்கும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு. சுவையான உணவும் உண்டு.

பேய் பிடித்தவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து குழுமுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஏனையோரை வரவழைக்கவும், உண்டியலை நிரப்பிக் கொள்ளவும் தர்ஹா பூசாரிகள் நடத்தும் நாடகம் இது. இது வெறும் அனுமானம் இல்லை. நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஒவ்வொரு வெள்ளி இரவிலும் ஏனைய நாட்களை விட பேயாட்டம் போடுவோர் அதிக அளவில் காணப்படுவர். வெள்ளிக்கிழமை அவர்களில் பெரும் பகுதியினர் காணாமல் போய் விடுவர். சொல்லி வைத்தாற் போல் வெள்ளி இரவுகளில் மட்டும் இப்படி பேயாடிகள் பெருகி ஏனைய நாட்களில் குறைவதிலிருந்து இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதை உணரலாம். தொடர்ந்து சில நாட்கள் தர்ஹாக்களை நோட்டமிட்டால் இதை எவரும் அறியலாம்.

வெள்ளி இரவுகளில் தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளியன்று மட்டும் இந்த விசேஷ ஏற்பாடு செய்யப்படுகின்றது.

வெள்ளிக்கிழமையில் கூட எல்லா நேரங்களிலும் பேய்களின் ஆட்டங்கள் இருப்பதில்லை. எந்த நேரத்தில் மக்கள் திரளாகக் குழுமுகின்றார்களோ அந்த மாலை நேரங்களில் மட்டுமே இந்த ஆட்டம் உச்சக் கட்டத்தில் உள்ளது. மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்ததும் பேயாட்டம் போடுவோரும் குறைய ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையிலேயே பேய் பிடித்து இயல்பாகவே அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்றால் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் தர்ஹாக்கள் பேயாட்டம் போடுவோரால் நிரம்பி வழிய வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணிசமாக பேயாடிகள் அதிகரிப்பது செட்டப் என்பதை நிரூபிக்கப் போதுமாகும்.

மேலும் தொடர்ந்து சில வாரங்கள் இவர்களை நாம் கண்காணித்து வந்தால் குறிப்பிட்ட அதே முகங்கள் அதே கோலத்தில் தென்படுவார்கள். இதுவும் செட்டப் என்பதற்கு சான்றாக உள்ளது. எவ்வாறெனில் வெள்ளி இரவு பேயாடி விட்டு அன்று காலையிலேயே குணம் பெற்று (?) வீடு திரும்பியவர்கள் ஒவ்வொரு வெள்ளி இரவும் (வெள்ளி இரவு மட்டும்) பேய் பிடித்தவர்களாகக் காட்சி தருகின்றார்கள். ஏனைய நாட்களில் அவர்கள் காணப்படுவது கிடையாது. இது தர்ஹா பூசாரிகளின் திட்டமிட்ட ஏற்பாடே என்பது ஐயமில்லை.

இது போன்ற ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே தர்ஹாக்களில் பேய்கள் நடமாடுகின்றன; விலகி ஓடுகின்றன.

ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டியுள்ள குர்ஆன் ஹதீஸ்களில் இறந்தவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைக் கண்டோம். மனிதன் இறந்து விட்டால் இவ்வுலகத்துடன் அவனுக்கு இருந்த எல்லா உறவுகளும் முடிவுக்கு விடுகின்றன என்பதையும் கண்டோம். தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பேய்களை விரட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்தச் சான்றுகளுக்கு முரணானவை என்பதையும் நாம் கவனிக்கும் போது தர்ஹாக்களில் பேய் பிடித்தவர்கள் குழுமுகிறார்கள் என்பதும், அதை அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்கள் விரட்டுகிறார்கள் என்பதும் ஆதாரம் அற்றவை என்பது மேலும் உறுதியாகின்றது.

பைத்தியமாகி விட்டவர்கள், பைத்தியமாக நடிப்பவர்கள் தவிர மற்றொரு வகையினரையும் மக்கள் பேய் பிடித்தவர்கள் என எண்ணுகின்றனர்.

குடும்பத்தில், சமுதாயத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அதை எண்ணியே ஹிஸ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாகி விடுவர். இதன் மூலம் பிறரைத் தங்கள் பால் ஈர்க்க முயல்வர். தன்னை இன்னொருவராகப் பாவனை செய்ய முற்படுவர்.

அளவுக்கதிகமான கற்பனைகளில் பலவாறான விளைவுகளுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் இன்னொருவராக தன்னைப் பார்க்கத் தொடங்குவர்.

தன்னை யாரும் கவனிப்பதில்லையே என்ற விரக்தியில் எதை எதையோ செய்ய ஆரம்பிப்பார்கள்.

தனக்கு சாமி வந்து விட்டது, அவ்லியா இறங்கி விட்டார், பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் இவர்கள் கருதத் துவங்கும் போது பிறரால் இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அக்கறை செலுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் வேண்டும் என இப்படிச் செய்யாவிட்டாலும் தம்மையுமறியாமல் இப்படியெல்லாம் நடக்கத் துவங்கி விடுகின்றனர். இவர்களுக்கு ஹிஸ்டீரியா எனும் மனநோய் தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் இவர்களை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

இவர்கள் பேயாட்டம் போடும் போதும், சாமி வந்துவிட்டதாகக் கூறும் போதும், அவ்லியா மேலாடுவதாகக் கூறும் போதும் எவருமே அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அந்தச் சமயத்தில் அதிகமாக அவர்களைக் கவனிக்கக் கூடாது. இப்படி நடந்து கொண்டால் இரண்டொரு நாளில் இந்த நோய் குணமாகி விடும்.

பிறரது கவனத்தையும், கவனிப்பையும் பெறுவதற்காக ஏற்பட்ட மனநோய் தானா? என்பதை முதலில் மனநோய் மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொண்ட பின், மேற்கூறிய முறையில் அவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

முற்றிப் போன பைத்தியம் என்றால் அதற்கான முகாம்களில் வைத்து சிறப்பு வைத்தியம் செய்ய வேண்டும்.

நடிக்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தைக் களைய முயல்வதுடன் உரிய பரிகாரமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் பேய்களுக்கு அறவே இடம் இராது.

ஒருவனுக்கு வந்துள்ள பேய் எந்த வகையானது (?) என்பதை தக்கவர்களிடம் சென்று உறுதி செய்வது மிகவும் அவசியம். அதன் பின்னர் சிகிச்சையில் இறங்க வேண்டும்.

பேய் பிசாசுகள் என்று நம்பி ஈமானையும், நிம்மதியையும், பகுத்தறிவையும் பலி கொடுப்பதிலிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.

17.08.2009. 21:10 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account