ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.
இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.
இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.
அது போல் முஸ்லிம் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது என்பதே உண்மை.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்
ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.
மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமாக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சதந்திரத்தைப் பறிக்கிறது.
வாரிசுரிமைச் சட்டத்தில் ஆன்களுக்கு இரு மடங்கும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாரபட்சம் காட்டுகிறது.
இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குறிப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைக்கிறது.
பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கிறது.
முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை.
முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க்கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் விளக்கம் அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.
ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஅபாவை வணங்குதல், திசையை வணங்குதல், முஸ்லிம்களிடம் சகிப்புத் தன்மை இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.
தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.
முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்
முஸ்லிமல்லாதவர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்
பதிப்புரை
நல்லவை எங்கே கிடைத்தாலும் அவற்றைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.
அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.
இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.
முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.
அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்,
நபீலா பதிப்பகம்
முன்னுரை
இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது!
தக்க தீர்வையும் சொல்கிறது!
அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!
என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.
எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.
ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்தப் பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.
மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனும், பெண்களும்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் பெண்ணுரிமையைப் பேணிப்பாதுகாத்தது. பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியது.
அத்தகைய திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளோம்.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:228
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.
திருக்குர்ஆன் 2:187
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:1
பொருள் திரட்டும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:32
கல்வி கற்றல் கற்பித்தல்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 9:71
சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.
திருக்குர்ஆன் 4:7
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 4:12
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:11
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 4:176
மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
திருக்குர்ஆன் 4:19
திருமணக் கொடை (மஹர்)
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன் 4:4
மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.
திருக்குர்ஆன் 2:236
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
திருக்குர்ஆன் 2:241
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:6,7
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.
திருக்குர்ஆன் 2:233
பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:231
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:228
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:128
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:229
ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.)
திருக்குர்ஆன் 3:195
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 4:124
ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
திருக்குர்ஆன் 16:97
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 40:40
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:32
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 9:72
நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 57:12
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 33:35
பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 24:4
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
திருக்குர்ஆன் 33:58
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 24:23
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:231
நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.
திருக்குர்ஆன் 65:1
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:129
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:2
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்).
திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
திருக்குர்ஆன் 4:19
பண்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 24:30
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
திருக்குர்ஆன் 24:31
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:59
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.
திருக்குர்ஆன் 24:26
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 24:60
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
திருக்குர்ஆன் 33:32
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 24:27
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?
எல்லா விஷயத்திலும் ஆணும் பெண்ணும் சமமா?
இஸ்லாம் மார்க்கத்தில் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகவே உள்ளன. ஆயினும் சில சட்டங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் உள்ளன.
ஆண்களும், பெண்களும் சமமானவர்களாக இருக்கும் போது சட்டங்களில் பாரபட்சம் ஏன் என்று பெண்களின் உரிமையைப் பறிக்கிறது எனக் கூறுவோர் கேள்வி எழுப்புகின்றனர்.
முதலில் இந்தத் தத்துவம் அறிவுக்கு ஏற்புடையது தானா? என்பதை ஆராய்வோம்.'
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற சித்தாந்தத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.
ஆண் வேறு! பெண் வேறு! இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வேறு வேறு!
இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.
எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் உண்மையிலேயே சம நிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது. அந்த அம்சங்களில் ஒரே விதமான சட்டங்களையே இருவருக்கும் இஸ்லாம் விதிக்கின்றது.
எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை.
பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது.
ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும், கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும், சலுகைகளையும் வழங்குகின்றது.
இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும். போலித் தனமான இந்த வாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கின்றது.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு 15 வயதில் ஒரு புதல்வனும், ஒரு வயதிற்குட்பட்ட ஒரு புதல்வனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இரு புதல்வர்களும் அவளது பிள்ளைகள் தாம். இரு பிள்ளைகளையும் அவள் தான் கருவறையில் சுமந்தாள். அவளது பிள்ளைகள் என்ற முறையில் இருவருமே அவளுக்குச் சமமானவர்கள் தாம்.
அதே நேரத்தில் மூத்த புதல்வனுக்கு அந்தப் பெண் கடினமான உணவுகளை வழங்குகிறாள். அவன் விரும்பும் நல்ல உணவுகளை எல்லாம் கொடுக்க மறுப்பதில்லை. ஒரு வயதுக்கு உட்பட்ட மகனுக்கும் அதே உணவை வழங்க மாட்டாள். அப்படி வழங்கினால் அவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள் ஆகிறாள். எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே அவனுக்கு வழங்குகிறாள். மூத்தவனுக்கு வழங்கிய அதே உணவை இளையவனுக்கு வழங்காததால் அவள் பாரபட்சமாக நடந்து விட்டாள் என்று எவரும் கூற மாட்டார்கள்.
இந்தச் சமயத்தில் இளையவனை விட மூத்தவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாகவும் எவரும் கூற மாட்டார்கள்.
இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வயதுக்குட்பட்ட பையனுக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் ஒரே நேரத்தில் பசிக்கிறது. சிறியவனின் பசியைத் தீர்ப்பதற்கே அந்தத் தாய் முதலிடம் தருவாள். அதன் பின்பே மூத்தவனைக் கவனிப்பாள்.
இந்தச் சமயத்தில் மூத்தவனை விட இளையவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.
இரண்டு புதல்வர்களின் ஜீரண சக்தியிலும், பசியைத் தாங்கும் சக்தியிலும் வித்தியாசம் இருப்பதால் அந்தத் தாய் இருவரையும் வித்தியாசமாக நடத்துவதை நமது அறிவு ஏற்றுக் கொள்கிறது.
இரண்டு புதல்வர்களுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசத்தை விட ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசம், நாளடைவில் மறைந்து விடும் தன்மை வாய்ந்தது. ஆண், பெண் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் நிரந்தரமானவை; காலப் போக்கில் மாறாதவை.
எனவே, நிரந்தரமான வித்தியாசங்களின் அடிப்படையில் சில விஷயங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது பாரபட்சமாகாது.
பெண்ணாக இருக்கும் தாய், ஆணாக இருக்கும் தந்தை ஆகிய இருவரில் தாய்க்குத் தான் இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார். அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971
தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள்.
எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது.
எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர்.
எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர்.
எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.
காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறுவோரின் முதலாவது குற்றச் சாட்டைக் காண்போம்.
1 பலதார மணம்
ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்யலாம் என்று இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை முஸ்லிமல்லாதார் அதிகமாக விமர்சிக்கின்றனர். பெண்களிடம் இஸ்லாம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறுவோருக்கு இது தான் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.
இஸ்லாம் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது; மற்ற மதங்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
இக்கருத்து பிரச்சாரமும் செய்யப்படுகிறது. எனவே பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது என்பதை ஆராய்வதற்கு முன் இந்தக் குற்றச்சாட்டை ஆராய வேண்டியது அவசியமாகும்.
பலதார மணத்தை இஸ்லாம் மட்டும் ஆதரிக்கவில்லை.
நபிகள் நாயகத்துக்கு முன்பே உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் நடந்தே வந்துள்ளது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கு உலக வரலாற்றில் அனேக சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத அரபியர்கள் கணக்கு வழக்கின்றிப் பல பெண்களைச் சர்வ சாதாரணமாக மணந்து வந்திருக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உலக மாந்தர் அனைவரும் ஏக பத்தினி விரதத்தை மேற்கொண்டிருந்ததைப் போன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தான் முதன் முதலில் பலதார மணத்தை அனுமதித்தது போன்றும் தவறாகச் சித்தரிக்கின்றனர்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத அரபியர் பல பெண்களை மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கென்று விதி முறைகளோ, வரம்புகளோ அவர்களிடம் இருந்ததில்லை.
அரபுலகில் மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் இருந்திருக்கின்றது. பல மதங்களும் இதனை அங்கீகரித்திருந்தன.
வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்துக்கள் கடவுளாக மதிக்கும் கிருஷ்ணருக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவர் நமது இந்துக்களால் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார்.
எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் பலதாரமணம் செய்த அவர்களை வெறுக்கவில்லை.
பலதார மணத்தை இஸ்லாம் தான் முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப்படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம்.
பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கின்றது? அனுமதிக்கக் கூடாது என்போரின் வாதங்கள் எந்த அளவு நியாயமானவை என்பதை இனி ஆராய்வோம்.
பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்
ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம்.
முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம் என்றால் பலதார மணத்திற்கு மட்டும் அவர்கள் தடை கோரக் கூடாது. மாறாக மனைவி அல்லாத பிற பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது பல பெண்களுடன் விபச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்குமாறு கோர வேண்டும்.
ஆனால் நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்ளவோ, விபச்சாரம் செய்யவோ தடை இல்லை. தங்கு தடையின்றி ஆண்கள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக பெண்ணுரிமை பேசுவோர் கூட குரல் கொடுப்பதில்லை.
இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதை விட இது பெரிய அநியாயமாகும். ஏனெனில் பல பெண்களுடன் உறவு வைத்து அதனால் ஏற்படும் நோயை மனைவிக்கும் அவன் பரப்பும் வாய்ப்பு இதில் உள்ளது.
முதல் மனைவி பாதிக்கப்படுவது தான் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்திடக் காரணம் என்றால் விபச்சாரத்திற்கும், வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் எதிராக பெண்களின் இயக்கங்களோ, பெண்ணுரிமை பேசும் ஆண்களோ ஏன் வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை?
நமது நாட்டுச் சட்டத்தையே எடுத்துக் கொள்வோம்!
நமது நாட்டில் முஸ்லிம்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்.
முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணைச் சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம்.
இது தான் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணை மணந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தடுக்க சட்டம் போட வேண்டும் என்று இது வரை கேட்டார்களா?
விபச்சாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நமது நாட்டில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்துமே விபச்சாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.
விபச்சாரிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெண்ணுரிமை இயக்கத்தினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
விபச்சாரிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை என்றால் அந்த விபச்சாரிகளிடம் செல்லும் ஆண்களையும் ஆதரிக்கிறார்கள். அதாவது மனைவி இருக்கும் போது அவளுக்குத் துரோகம் செய்யும் கணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதைத் தவிர இவர்களது நடவடிக்கைகளுக்கு வேறு என்ன பொருள்?
கட்டிய மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற அக்கரையில் பலதாரமணத்தை இவர்கள் எதிர்ப்பது உண்மை என்றால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் காரணமாக உள்ள விபச்சாரிகளைக் கடுமையாக வெறுக்க வேண்டும். மனைவியுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தும் ஆண்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் காரணமான விபச்சாரிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குமாறு கோர வேண்டும்.
அவ்வாறு கோரக் கடமைப்பட்டவர்கள் விபச்சாரிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
ஆண்கள் பல பெண்களை நாடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதையும், அதைத் தடுக்க முடியாது என்பதையும் அவர்களின் உள்ளுணர்வு உணர்த்துவது தான் அவர்களது இந்த நிலைமைக்குக் காரணம்.
பெண்ணுரிமை பேசுவோரும், முற்போக்குவாதிகளும் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணுடன் ஆண்கள் உறவு வைப்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.
இன்னொரு பெண்ணுடன் நீ உறவை வைப்பதாக இருந்தால் அவளைச் சட்டப்பூர்வமாக மணந்து கொள் என்று இஸ்லாம் கூறுகிறது.
மணந்து கொள்ளாமலேயே எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவ்விரு நிலைகளில் எது சிறந்தது?
இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் போது அவளைச் சட்டப்பூர்வமான மனைவி என்று அறிவித்தால் அந்தப் பெண்ணின் உரிமை காக்கப்படுகிறது. வைப்பாட்டிகளுக்கோ எந்த விதமான உரிமையும் கிடையாது.
வைப்பாட்டியின் மூலம் ஒருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு மகன் என்ற உரிமையும் கிடையாது.
மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை அனுபவிப்பதில் இவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவளை மணந்து கொள்வதில் மட்டும் தான் இவர்களுக்கு மறுப்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆண்கள் பல பெண்களை நாடுவது அடியோடு ஒழிக்கப்பட முடியாத போது அதைக் குறைப்பதற்கு உரிய வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்காக எதிர்காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஆண்கள் சுமக்கத் தேவையில்லை எனும் போது அதிகமான பெண்களை ஆண்கள் நாடிச் செல்வார்கள்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவிப்பதாக இருந்தால் அவளுக்குச் சட்டப்படி மனைவி என்ற உரிமையை அளிக்க வேண்டும். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்குச் சட்டப்படி பிள்ளைகள் என்ற உரிமையை அளிக்க வேண்டும். முதல் மனைவிக்கு உள்ள உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரண்டாம் மனைவிக்கும் வழங்க வேண்டும். எல்லா வகையிலும் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் போது மனைவி அல்லாத பெண்களை நாடுவோர் குறைவார்கள். தவிர்க்கவே இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மட்டுமே இன்னொரு திருமணம் செய்ய முயல்வார்கள். எனவே பலதார மணத்திற்கான அனுமதி தான் முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் உண்மையில் பாதுகாப்பானது.
நமது நாட்டில் உள்ள சட்டப்படி எந்த ஆணும் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் விபச்சாரம் செய்யலாம். 'அந்தப் பெண் மைனராக (18 வயதுக்குட்பட்டவராக) இருக்கக் கூடாது; பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக் கூடாது' என்பது மட்டுமே நிபந்தனை.
மேலும் விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது தான் நமது நாட்டில் குற்றமே தவிர விபச்சாரம் குற்றமில்லை. இதன் காரணமாகத் தான் விலைமாதர்களிடம் ஒரு ஆண் செல்லும் போது விலைமாது மட்டும் தண்டிக்கப்படுகிறாள். ஆண் விடுவிக்கப்படுகிறான்.
இது போல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் சேர்ந்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம். அவள் இன்னொருவரின் மனைவியாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு நிபந்தனை ஏதுமில்லை.
மனைவி பாதிக்கப்படுகிறாள் என்று காரணம் கூறி பலதாரமணத்தை எதிர்ப்பவர்கள் அதை விட அதிகப் பாதிப்பு ஏற்படுத்தும் விபச்சாரத்தை எதிர்ப்பதில்லை.
மேலும் மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு சட்டப்பபூர்வமான தொழில் அனுமதியும் வழங்கப்பட்டு விபச்சாரம் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.
மனைவிடன் வாழும் ஒருவன் அவளுக்குத் தெரியாமல் விபச்சார விடுதிக்குச் சென்றால் அது மனைவியைப் பாதிக்காதா? நிச்சயம் பாதிக்கவே செய்யும். ஆனாலும் அதை ஒழிக்க வேண்டும் எந்தப் பெண்ணுரிமைப் போராளிகளும் குரல் கொடுக்காததது ஏன்?
பலதாரமணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது
எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும்.
நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
முஸ்லிமல்லாத மக்கள் பலதாரமணம் செய்யக் கூடாது என்று போடப்பட்ட தடைச் சட்டத்தின் நிலை என்ன?
யாருக்கு பலதார மணத்திற்கு இந்த நாட்டில் அனுமதியுள்ளதோ அவர்களை விட யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதாரமணம் புரிந்துள்ளனர்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி '1951 ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில்
இந்துக்கள் 5.06 சதவிகிதமும்
முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும்
பழங்குடியினர் 17.98 சதவிகிதமும்
பலதாரமணம் புரிந்துள்ளனர்.
அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது.
சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974 -ல் வெளியிட்ட அறிக்கையிலும் இது வெளியிடப்பட்டது.
பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.
பலதார மணத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்துக்களே அதிக அளவில் பலதாரமணம் செய்துள்ளனர் என்பதிலிருந்து பலதாரமணத் தடைச் சட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்கலாம்.
இதனால் தான் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் முடிகின்றது.
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?
இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்திய கா.காளிமுத்து அவர்கள் பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?
அறந்தாங்கி திருநாவுக்கரசு அவர்கள் பல தடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி?
இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை; எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு AIR 1965 sc 1566)
சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)
ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம்.
(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)
இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.
மனைவி இருக்கும் போது ஒரு ஆண் இன்னும் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்துவது குற்றமில்லை; திருமணம் செய்வது தான் குற்றம் என்பது தான் சட்டத்தின் பார்வையாகும்.
முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற காரணத்துக்காக பலதார மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற வாதம் பொய் என்பது இதன் மூலம் நிருபணமாகின்றது. திருமணம் என்ற முறையில் அல்லாமல் எத்தனை பெண்களுடனும் குடும்பம் நடத்தலாம் என்பது தான் நமது நாட்டில் உள்ள சட்டமாகும்.
இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி விட்டு அவளுக்கு சட்டப்படியான மனைவி என்ற தகுதியைக் கொடுக்காமல் அநீத் இழைப்பதை விட அவளுக்கும் மனைவி எனும் தகுதியை வழங்குவது சிறந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்
ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர்.
மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர்.
வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.
இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதை யாரும் குறை கூற மாட்டார்கள்.
மலேசிய இந்து மக்கள் போர்க்கொடி
இதனால் ஏற்படும் தீய விளைவுகளை மலேசிய இந்து இயக்கங்களின் தீர்மானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமது நாட்டைப் போலவே மலேசியாவிலும் உள்ளது.
அங்கே முஸ்லிமல்லாதவர்கள் தமக்கும் பலதார அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திருமணம் ஆகாமல் பல பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அவர்கள் கைவிடப்படுவதாகவும், தகப்பனில்லாத குழந்தைகள் தாறுமாறாக அதிகரித்து விட்டதாகவும் கருதும் மலேசிய நாட்டு இந்துக்கள் இதைத் தவிர்க்க ஒரே வழி பலதாரமணம் மட்டுமே என்ற உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.
மனைவிக்குச் செய்யும் துரோகம் என்ற அடிப்படையில் பலதார மணத்துக்குத் தடை போடப்பட்டாலும் எதைத் துரோகம் என்று கருதுகிறார்களோ அதைத் தடுக்க முடியவில்லை.
மலேசியாவில் உள்ள பி.பி.பி கட்சி தனது இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பி.பி.பியின் இளைஞர் அணித் தலைவர் முருகையா பின்வருமாறு பிரகடனம் செய்தார்.
'சமுதாயத்தில் திருமணம் புரிந்த பல ஆடவர்கள் மற்ற பெண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவின் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்தப் பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைக் கருதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இரு தார அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்பது தான் அவரது முழக்கம்.
இவரது கருத்துக்கு மலேசியாவில் உள்ள சில பெண்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
ஆனாலும் இந்த எதிர்ப்புகளால் முருகையா தனது கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
'நான் சொன்ன கருத்தும் ஒரு வகையில் பெண்ணுரிமை சம்மந்தப்பட்டது தான். எனது கருத்தை இந்த மகளிர் பிரிவுகள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டன. எனது கருத்துக்கு இவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபமானது இரண்டாவது மனைவிகள் பலரின் உரிமைகளை இவர்களே மறுதலிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பி.பி.பி இளைஞர் உச்சமன்றத்தில் எல்லோரும் கூடிப் பேசியே இந்தக் கருத்தை நான் வலியுறுத்தினேன். இது எனது சொந்தக் கருத்து மட்டுமல்ல. இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இரு தார அனுமதியை அரசாங்கம் தந்தால் அது முஸ்லிமல்லாதாரிடையே நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் என்பதே எனது வாதம். தன்னால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுக்கும் ஒரு ஆண் பொறுப்புள்ளவனாக இருக்கச் செய்யும்' என்று தனது கருத்தை முருகையா ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.
பினாங்கு மாநில பி.பி.பி மகளிர் அணித் தலைவர் எலிசபெத் ஸ்டெனிஸ் லாவ்ஸ் என்பவர் முக்கியமானவர்.
மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இரு தார அனுமதியை வழங்கலாம். என் கணவரே இன்னொரு மனைவியை மணக்க நானே அனுமதிப்பேன். இருவரையும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் நானே என் கணவருக்கு அனுமதியளிப்பேன்.
இது ஒன்றும் பாவம் அல்ல. என் கருத்தைப் பல பெண்கள் ஆமோதிப்பார்கள்.
ஒரு கணவர் இரண்டாவது பெண்ணுடன் வைக்கும் தொடர்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்தே பி.பி.பி இளைஞரணி தனது கருத்தை வலியுறுத்தியது. அதனை நானும் ஆதரிக்கிறேன்.
இந்தக் குழந்தைகள் தகப்பன் இல்லாக் குழந்தைகள் என்று அநியாயமாக முத்திரை குத்தப்படுகின்றனர்.
இரு தார விஷயத்தில் பெண்கள் கனவுலகில் ஒளிந்து கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு வெளியே வர வேண்டும். நடைமுறை உலகுக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்று இவர் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
தகப்பனில்லாத இளைஞர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இளைஞர்களிடையே இந்தக் கருத்து வேகமாகப் பரவி வருகிறது.
மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார்.
ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.
இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து விட்ட நிலையில் தான் மலேசிய இந்து இளைஞர்கள் மத்தியில் முருகையாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபரங்களிலிருந்து பலதாரமணம் என்பது அனைத்து சமுதாயத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள்
பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன
1. பெண்களின் பிறப்பு விகிதம் குறைவு:-
இல்லற வாழ்வு மூலம் பெறப்படும் உடல் சுகம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆண், பெண் இரு பாலருக்குமே இது இன்றியமையாத தேவையாகும்.
மற்ற சுகங்களைக் கூடத் தியாகம் செய்து விடுபவன் இந்த உடல் சுகத்தை எளிதில் தியாகம் செய்வதில்லை.
இந்த சுகத்தைத் தரும் ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் எதுவும் செய்யத் தயாராகி விடுகிறான். உற்றார் உறவினரையும், பெற்றோரையும் கூட உதறி எறிந்து விடத் துணிந்து விடுகிறான். இந்த சுகத்தைத் தருகின்ற ஆணுக்காக ஒரு பெண் எந்தத் தியாகத்தையும் செய்கிறாள்.
சிலர் இந்த சுகத்தை அடைவதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்யத் துணிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதை அடைவதற்கு யாராவது குறுக்கே நின்றால் அவரைக் கொலை செய்தாவது அடைய முயற்சிக்கின்றனர்.
உணர்வுகள் பொங்கி எழும் பருவத்தில் இந்த உடல் சுகம் கிடைக்கவில்லையானால் அத்தகையோர் மன நோய்க்கு ஆளாகி விடுவதை இரு பாலரிடமும் நாம் காண முடிகின்றது. மன நோய் நிபுணர்களும் இதை உறுதி செய்கின்றனர். மனித வாழ்வில் மிகவும் அவசியமான இந்தச் சுகம் எந்த மனிதனுக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தச் சுகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமானால் உலகில் ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். அப்போது தான் இரு பாலரும் இந்தச் சுகத்தைப் பெற இயலும்.
ஆனால் இந்த நிலை உலகில் இருக்கின்றதா? என்றால் பல நூற்றாண்டுகளாகவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பிறக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் வேண்டுமானால் சில கால கட்டங்களில் இதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதமே அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
உலகில் ஆண்களின் எண்ணிக்கைக்கும், பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையே! சிறிய அளவில் தானே பெண்கள் அதிகமாகவுள்ளனர் என்று நினைக்கலாம்.
ஆனால் திருமணத்துக்குரிய தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையையும் நாம் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.
ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யும் நிலையை அடைகிறார்கள். பெண்களோ பதினைந்து வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். (சட்டப்படி 18 வயது என்பதெல்லாம் ஏட்டில் உள்ளதே தவிர நாட்டில் இல்லை).
அதாவது திருமணம் செய்யும் தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்கள் பத்து வருடங்கள் பின் தங்கியுள்ளனர்.
ஒரு ஊரில் ஒரு நாளில் 25 ஆண் குழந்தைகள், 25 பெண் குழந்தைகள் பிறக்கின்றன' என வைத்துக் கொள்வோம். பதினைந்து வருடங்கள் நிறைவடையும் போது 25 பெண்களும் திருமணத்துக்குத் தயாராக நிற்பார்கள். 25 ஆண் குழந்தைகளில் ஒருவனும் திருமணத்துக்குத் தயாராகியிருக்க மாட்டான்.
உடற்கூறு ரீதியாக சீக்கிரமே பெண்கள் முதிர்ச்சியடைவதால் திருமணம் செய்யும் வயதுடைய ஆண்கள், திருமணம் செய்யும் வயதுடைய பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விடப் பெண்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்பதை அறியலாம்.
பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் உள்ள சூழ்நிலையில் கனிசமான பெண்களுக்கு இந்தச் சுகம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.
நொண்டி, முடம், கூன், குருடு போன்ற உடல் ஊனமுற்ற ஆண்களுக்கும், மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளில் ஈடுபட்டு உள்ளம் ஊனமுற்ற ஆண்களுக்கும் சர்வ சாதாரணமாக மனைவியர் கிடைத்து விடுகின்றனர். அழகும், நல்லொழுக்கமும் உள்ள மங்கையர் பலர் இந்தச் சுகத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இது பெண்களின் விகிதாச்சாரம் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதற்கு நிதர்சனமான சான்று ஆகும்.
இந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்ய என்ன செய்வது?
ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை.
சம வயதில் இருவரும் திருமணத்துக்கு உடல் ரீதியாக தயாராக வேண்டும். இது சாத்தியமில்லை.
அல்லது அன்றைய அறியாமைக் கால மக்கள் செய்தது போல் உயிருடன் பெண்களைப் புதைத்து பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
இதற்கு ஏதேனும் பரிகாரம் கண்டே ஆக வேண்டும். பரிகாரம் காணத் தவறினால் பல தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மண வாழ்வை அடைய முடியாத பெண்கள் மன நோய்க்கு ஆளாவது,
அல்லது தவறான வழிகளிலேனும் அந்தச் சுகத்தை அடைந்திடத் துணிவது,
வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளைகளை அதிக விலை கொடுத்து வாங்குவது
போன்ற பல தீய விளைவுகள் ஏற்படும்.
இந்த நிலைகளை உலகம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் மன நோய்க்கு ஆளாவதையும், இயல்பிலேயே வெட்க உணர்வு அதிகம் பெற்றிருக்கின்ற பெண்கள் தெருவில் நின்று கொண்டு வெட்கத்தைத் துறந்து ஆண்களை அழைப்பதையும் நாம் காண்கிறோம்.
எனவே சில ஆண்களாவது பலதார மணம் புரிவதில் தான் மணவாழ்வு கிடைக்காமல் பெருமளவு தேங்கி நிற்கும் பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது.
2. ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம்
போர்க் களங்களும் போராட்டங்களும்:-
பிறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை பெண்களே மிகைத்து நிற்கிறார்கள் என்றால் இறப்பு விகிதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இயற்கையின் சீற்றம், நோய், முதுமை போன்ற காணரங்களால் ஏற்படும் மரணத்தைப் பொறுத்த வரை சமமாகவே இறக்கின்றனர்.
ஆயினும் வேறு சில வழிகளில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறப்பெய்துகின்றனர்.
மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்று வரை பல போர்களை உலகம் சந்தித்துள்ளது. மனிதனின் போர்க்குணம் உலகம் அழியும் வரை மாறுவதாகத் தெரியவில்லை.
இன்னும் சொல்வதென்றால் கடந்த காலத்தை விடப் போர் செய்து மனித சமுதாயத்தை அழித்தொழிப்பதில் மனிதன் மிகவும் முன்னேறியே இருக்கிறான். வாள், வேல் போன்ற ஆயுதங்களால் மட்டுமே போர் செய்து குறைந்த எண்ணிக்கையில் எதிரிகளை அழிக்கத் தெரிந்திருந்த மனிதன் இன்று ஒரு நொடிப் பொழுதில் பல்லாயிரம் எதிரிகளை அழிக்க வல்ல அணு ஆயுதங்களைத் தயார் செய்து விட்டான். கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணைகளைக் கண்டுபிடித்து விட்டான்.
இது போன்ற போர்க்களங்களில் அழிக்கப்படுவது ஆண்கள் மட்டுமே. அவர்கள் மட்டுமே போரில் நேரடியாக ஈடுபடுகின்றனர். இந்த அழிவு பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவதில்லை.
1914 ஆகஸ்ட் 14ல் துவங்கி, 1917 மார்ச் 3ல் முடிவுற்ற முதல் உலகப் போரை எடுத்துக் கொள்வோம். சுமார் 33 மாதங்கள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சம்.
ரஷ்யா 17,00,000
பிரான்ஸ் 13,57,800
பிரிட்டன் 9,08,400
இத்தாலி 6,50,000
அமெரிக்கா 126,000
ருமேனியா 3,35,700
செர்பியா45,000
பெல்ஜியம்13,700
கிரிஸ் 5000
போர்ச்சுகல் 7000
ஜெர்மனி 17,73,700
ஆஸ்திரேலியா 1,20,0000
உஸ்மானியப் பேரரசு 3,25,000
பல்கேரியா 87,500
மொத்தம் 85லட்சத்து 34 ஆயிரம்.
இரண்டாம் உலகப் போரை எடுத்துக் கொள்வோம்
ஆஸ்திரேலியா 23,250
பெல்ஜியம் 7750
பிரேசில் 1000
கனடா 37500
சீனா 1324500
செக் 6750
டென்மார்க் 4250
பிரான்ஸ் 205750
கிரீஸ் 16250
இந்தியா 24250
நெதர்லாந்து 13750
நியூசிலாந்து 12250
நார்வே 4750
போலந்து 320000
தென் ஆப்ரிக்கா 8750
பிரிட்டன் 264500
அமெரிக்கா 405500
ரஷ்யா 13600000
யூகோஸ்லோவியா 305000
ஆஸ்திரேலியா 380000
பின்லாந்து 79000
ஜெர்மனி 3300000
ஹங்கேரி 147500
இத்தாலி 262500
ஜப்பான் 1140500
ருமேனியா 300000
மொத்தம் 2 கோடியே 21 லட்சம்.
ஆதாரம்: மைக்ரோ சாஃப்ட் என்சைக்ளோபீடியா
இது போல் உலகில் நடந்த போர்களில் பல கோடிப்பேர் மாண்டிருக்கிறார்கள். நெப்போலியன் நடத்திய போர்களில் மட்டும் 20 லட்சம் மக்கள் மாண்டிருக்கிறார்கள்.
வியட்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் நிகழ்த்திய படுகொலைகளும், அரபு, இஸ்ரேல், ஈரான், ஈராக் யுத்தப் படுகொலைகளும், இலங்கை, பாலஸ்தீன் மக்களின் உரிமைப் போராட்டங்களும், சமீபத்தில் ஆப்கான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி ஒரு லட்சம் அப்பாவிகளைக் கொன்றதும், இராக் மீது அமெரிக்கா நடத்திய அநியாயத் தாக்குதலும் பெரும்பாலும் ஆண்களையே அழித்தொழித்துள்ளன.
பஞ்சாப், காஷ்மீர், கூர்க்காலாந்து, போராட்டங்களாகட்டும்; ஹிந்து – முஸ்லிம், வகுப்புக் கலவரங்களாகட்டும்; வன்னிய, – ஹரிஜன், தேவர் ஆகியோரிடையே ஏற்படும் சாதிக் கலவரங்களாகட்டும்; வர்க்கப் போராட்டங்களாகட்டும் இதில் எல்லாம் முழுமையாக ஆண்கள் தாம் ஈடுபடுகிறார்கள். அதுவும் இள வயது ஆண்கள்! ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் மாண்டு விடும் இளைஞர்களின் இளம் விதவை மனைவிகளின் நிலை என்ன?
கன்னியர்களுக்கே மணவாழ்வு கிடைக்காத போது ஏற்கனவே இந்த சுகத்தை அனுபவித்த இந்த விதவைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டாமா?
விதவைகளாகவே ஏக்கத்தில் தங்கள் வாழ்வைக் கழிக்க வேண்டுமா?
அல்லது தவறான வழிகளில் அந்த சுகத்தை அடைய வேண்டுமா?
அல்லது உடன் கட்டை ஏற வேண்டுமா?
நியாய உணர்வு படைத்த எவரும் இம்மூன்றில் எதனையும் ஆதரிக்க மாட்டார்.
ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பிறப்பதாலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன் பெண்கள் திருமணத்திற்குத் தயாராவதாலும், பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் மரணிப்பதாலும் அனைத்து பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது அறவே சாத்தியமற்றதாகும்.
தவறான வழியில் சென்று விடுவோம் என்று அஞ்சுவோர் மட்டுமாவது மற்றொரு திருமணம் செய்தால் தான் இந்த எற்றத் தாழ்வைச் சரி செய்து அனைத்துப் பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது சாத்தியமாகும்.
3. தற்கொலைகள்:
போர்க்களங்கள், போராட்டங்களில் மட்டுமின்றி தற்கொலை செய்யும் பெண்களை விட தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.
வருடம் 1982 ஆண்கள் 3314 பெண்கள் 2076
வருடம் 1983 ஆண்கள் 3366 பெண்கள் 2096
வருடம் 1984 ஆண்கள் 4450 பெண்கள் 3021
இது தமிழ்நாட்டில் 82, 83, 84 ஆகிய மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் அதிகாரப்பூர்வமான பட்டியல். (ஆதாரம்: 12.6.88 தினமணி கதிர்)
பிறப்பில் குறைவாக இருப்பதோடு, இறப்புகளிலும் ஆண்கள் அதிகமாகி விடுகிறார்கள் என்பதால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.
ஏற்கனவே குறைவாகப் பிறக்கின்ற ஆண்கள், அதிகமாக அழிவுக்கு ஆளாகும் போது, பலதார மணத்தைத் தவிர வேறு என்ன பரிகாரம் தான் காண முடியும்?
4. வரதட்சணை:
திருமணத்தின் மூலம் மட்டுமே உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பண்பாடுள்ள இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுவதற்கும் இது காரணமாக உள்ளது.
ஆண் மகனைப் பெற்றவர்கள் மாப்பிள்ளையின் ரேட்டை' அதிகமாக்கிக் கொண்டே செல்வதும் கிலோ கணக்கில் நகைகள் கேட்பதும் லாரிக் கணக்கில் சீர் வரிசை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும் அதிகமாகி வருகின்றன. பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஆண்களின் கொடுமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
வசதி படைத்தவர்கள் இந்தப் போட்டியில் ஜெயித்து விடுகிறார்கள். வசதியற்ற ஏழைப் பெண்கள் நாதியற்று நிற்கிறார்கள்.
மானமுள்ள பெண்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள்;
அல்லது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
மானம் கெட்டவர்கள் என்றால் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை வலியுறுத்துவோர் மன வாழ்வுக்கு வசதியின்றி ஏங்கி நிற்கும் இத்தகைய பெண்களுக்கு என்ன பரிகாரம் வைத்திருக்கிறார்கள்?
பரிகாரம் காணத் தவறுவதால் ஏற்படக் கூடிய இந்தத் தீய விளைவுகளை எப்படித் தடுக்கப் போகின்றார்கள்? அந்த அபலைப் பெண்களுக்கு மாற்று வழி காட்டாமல் வெற்றுச் சட்டங்களால் இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து விட முடியும் என்று எண்ணுகிறார்களா?
சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் வரதட்சணை ஒழிந்ததா? ஒழுக்கக் கேடுகள் மடிந்தனவா? இல்லையே! அப்படியானால் இதற்கு என்ன பரிகாரம்?
இத்தனையையும் கருத்தில் கொண்டு தான், நிபந்தனையுடன் இஸ்லாம் ஆண்களுக்கு நான்குக்கு உட்பட்டுப் பெண்களை மணந்து கொள்ள அனுமதி வழங்குகின்றது.
இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என அஞ்சுவோரும், சின்ன வீடு வைத்துக் கொள்வோரும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் இதைச் சமன் செய்ய முடியும். அதனால் மட்டுமே இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு செய்வதால் மட்டுமே பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்ற நிலை மாறும்; அதன் மூலம் வரதட்சணைக் கொடுமையும் ஒழியும்.
இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள் நாம் குறிப்பிட்ட தீமைகளைத் தடுத்திட தக்க வழிகளையாவது கூற வேண்டும்.
5. உயிருடன் சமாதி:
பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உயிருடன் கொன்று விடக் கூடிய கொடுமை பல பகுதிகளில் பரவி வருகின்றது. பஞ்சாப் மாநிலத்திலும், தமிழகத்தின் சேலம், மதுரை, தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் இந்தக் கொடுமை பெருமளவு தலைவிரித்தாடுகின்றது.
கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கண்டறியும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கருவிலேயே பெண் குழந்தைகள் சமாதி கட்டப்படும் நிலை உருவாகி வருகின்றது.
பெற்ற குழந்தைக்காக தமது சுகங்களைத் தியாகம் செய்யும் தாய்மார்கள் ஈவிரக்கமின்றித் தங்கள் பெண் குழந்தைகளைத் தாங்களே கொல்லத் துணிவதற்குக் காரணம் என்ன?
இப்பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம்; ஆண் குழந்தை என்றால் கோவணத்துடன் வெளியில் விட்டு விடலாம்; பெண் குழந்தை என்றால் அப்படி எல்லாம் விட்டு விட முடியாது. அப்பெண் குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் அவளுக்குத் திருமணம் செய்தாக வேண்டும். ஆனால் மாப்பிள்ளைகள் கிடைப்பதில்லை. இதற்காகவே கொல்கிறோம்' என்று பஞ்சாப் மாநிலம் மற்றும் சேலம், மதுரை மாவட்டங்களில் பெண்கள் கூறியதாக பி.பி.சி படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவோர், இதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.
வெறும் சட்டங்களால் இதை ஒழிக்க முடியுமா? இவற்றைக் குற்றமென அறிவிக்கும் சட்டங்கள் முன்பிருந்தே இருக்கத் தான் செய்கின்றன. இந்தச் சட்டங்கள் இருக்கும் நிலையில் தான் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன.
காரணங்கள் களையப்படாத நிலையில் போடப்படும் எல்லாச் சட்டங்களுக்கும் இந்தக் கதி தான் ஏற்படும்.
இதற்குரிய காரணம் என்ன என்பது பெண் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களின் பேட்டியிலேயே தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. மாப்பிள்ளை கிடைக்காததே' அந்தக் காரணம்.
இந்தக் காரணத்தைக் களைய இரண்டே வழிகள் தாம் உள்ளன. மாப்பிள்ளைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமில்லை. இருக்கின்ற மாப்பிள்ளைகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது மிகச் சிலராவது பல திருமணங்களைச் செய்ய வேண்டும். இஸ்லாம் அதைத் தான் கூறுகிறது.
இதை ஏற்க மறுப்பவர்கள் பெண் சிசுக் கொலையை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பெண் சிசுக் கொலைக்கு எதிராக இவர்கள் நடத்தும் போராட்டமே பலதார மணத்தின் அவசியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் வாழ்வதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இவர்கள் சமத்துவம் பேசிக் கொண்டிருப்பது பிரச்சனையின் ஆழத்தை இவர்கள் உணரவில்லை என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறது.
பலதார மணம் அனுமதிக்கப்பட்டால் சில ஆண்டுகளிலேயே பெண் சிசுக் கொலை முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.
சமூக நலனை விட தங்கள் சுய நலனையே பெரிதாகக் கருதுவதால் தான் முற்போக்குப் பெண்டிர் பலதார மணத்தை எதிர்க்கின்றனர்.
சமூகத்தின் மீது பரிவும், கவலையும் கொண்டு சிசுக் கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் அணுகினால் பலதார மணம் தவிர வேறு பரிகாரமே இதற்கு இல்லை என்பதை ஐயமற உணர்வார்கள்.
பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் வரையிலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன்பாகவே பெண்கள் மணவாழ்க்கைக்குத் தயாராவது இருக்கும் வரையிலும் இஸ்லாம் காட்டும் இந்தப் பரிகாரம் கட்டாயம் ஏற்கப்பட்டே ஆக வேண்டும். இதை மறுப்போர் இதற்கு நிகரான அல்லது இதை விடச் சிறந்த மாற்றுப் பரிகாரத்தை முன் வைக்க வேண்டும்.
6. பிரம்மச்சாரியம்:
மனைவி மக்களைக் காப்பாற்ற அதற்குரிய வசதிகள் தம்மிடம் இல்லையே என்று மன வாழ்வை மறுப்பவர்கள் அல்லது மண வாழ்வைத் தள்ளிப் போடுவோர், இந்தப் பற்றாக்குறையை இன்னமும் அதிகப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் என்ன தான் செய்வது? மண வாழ்வுக்கு வழி இல்லாத கன்னியர்களையும், மண வாழ்வை அனுபவித்து இழந்த இளம் விதவைகளையும் கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுவதா? ஒழுக்கக் கேடுகளும், உடன் கட்டைகளும் தான் இதற்குப் பரிகாரமா? எண்ணிப் பாருங்கள்.
7. தாம்பத்ய ஈடுபாடு:
இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே மனிதர்கள் திருமணம் செய்கிறார்கள். இல்லற சுகம் தேவைப்படும் போது அது கிடைக்கவில்லை என்றால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.
ஆண்களின் உடற்கூறையும் பெண்களின் உடற்கூறையும் எடுத்துக் கொண்டால் ஆண்களை விட பெண்கள் சீக்கிரமே தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
தமது உணவுப் பழக்கம், கடந்த கால உடற்பயிற்சி ஆகியவற்றின் காரணமாக மரணிக்கும் காலம் வரை கூட ஆண்கள் இல்லறத்தில் ஈடுபட இயலும். அதை விரும்பவும் இயலும். அறுபது அல்லது எழுபது வயது வரை, ஏன் அதற்கு மேலும் கூடக் குழந்தையை உருவாக்கும் சக்தி பெற்றவனாக ஆண் இருக்கிறான். அவனிடம் குழந்தையை உருவாக்கும் உயிரணுக்கள் முடிந்து போய் விடுவதில்லை.
பெண்களின் நிலை அவ்வாறில்லை. எவ்வளவு திடகாத்திரமான பெண்களும் 50 வயதுடன் ஓய்ந்து விடுகிறார்கள். மாதந்தோறும் ஏற்பட்டு வந்த மாதவிடாயும் அந்தப் பருவத்தில் நின்று விடுகின்றது. உடலுறவிலும் நாட்டமின்றிப் போய் விடுகின்றது.
திடகாத்திரமாக இருக்கும் ஒருவன் தன் மனைவி உடலுறவில் நாட்டமின்றிப் போய்விடும் காலகட்டத்தில் அவனுக்கு அதில் நாட்டமிருந்தால் என்ன செய்வான்? அவனுக்கு ஏதேனும் பரிகாரம் காண வேண்டுமா? கூடாதா?
50 வயதைத் தாண்டியவர்களின் பார்வை தான் அன்னியப் பெண்களை அதிகம் நோக்குவதை நாம் பார்க்கின்றோம். சிறுமிகள், மற்றும் வேலைக்காரிகளைக் கற்பழிப்போரும் இத்தகையோர் தாம். அவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களுக்கு ஆசை இருக்கிறது; உடலில் வலு இருக்கிறது; ஆனால் அவர்களின் மனைவியர் அதற்கு ஏற்றவர்களாக இல்லை. மனைவிக்கு அந்த உணர்வு மங்கி விட்டது என்பதற்காக இவனும் தன் உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா?
ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு நியாயமான முறை உண்டு. இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு ஆளானவர்களையே நாம் கவனிக்க வேண்டும்.
பெண்களின் உடற்கூற்றை அறியாதவர்கள், இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணராதவர்கள் தான், பலதார மணத்தைப் பாவமெனக் கருதுவர்.
வித்தியாசங்களை உணர்ந்து கொண்ட எவரும் இதை மறுக்கவே இயலாது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கு அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மாதம் தோறும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்க் காலத்தில் இந்த உறவை அவர்களால் விரும்ப முடியாது. அப்படியே சில பெண்களின் உள்ளம் அதை விரும்பினாலும் அந்த நேரத்தில் அவர்களின் உடல் அதற்கு ஏற்றதாக இராது. உடலும், உள்ளமும் ஏற்றதாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது போன்ற ஒரு அருவருப்பான சூழ்நிலையில் ஒரு ஆண் கிளர்ச்சியடையவும் முடியாது. அதுவும் ஏற்பட்டு விடும் என்று வைத்துக் கொண்டாலும் மருத்துவ ரீதியாகக் கூடப் பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த உபாதையினால் அவளுடன் அவனால் உறவு கொள்ள இயலவில்லை என்றால் அவனது நிலை என்ன? சில பெண்கள் 15 நாட்கள் வரை கூட மாதவிடாய்த் தொல்லைக்கு ஆளாகி விடுவதுண்டு. இது போன்ற காலக் கட்டத்தில் மாதா மாதம் இப்படி ஒரு நிலையை அவன் எதிர்கொள்ளும் போது அவன் என்ன செய்வான்? இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையினர் தானே என்று அலட்சியப்படுத்துவதா?
இவர்களைப் போன்றவர்கள் தாம் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அழகும், இளமையும் கொண்ட மனைவியர் வீட்டிலிருந்தும் விபச்சாரத்தைச் சிலர் நாடிச் செல்லக் காரணம் இது தான். இயற்கையாக அவர்களுக்கு அமைந்திருக்கும் உணர்வுகளுக்குப் போதிய வடிகால் இல்லை. விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்வதை விட முறையாக இன்னுமொரு மனைவியை மணந்து அந்த இன்பத்தை அடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?
பலதார மணத்தை இவர்களைப் போன்றவர்களுக்கு அனுமதிப்பது இவர்களை மட்டும் செம்மைப்படுத்தவில்லை; இவர்களை நம்பியே தங்களின் தொழிலை நடத்துகின்ற ஒழுக்கம் கெட்ட பெண்களும் செம்மைப் படுத்தப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமின்றிக் கர்ப்ப காலம், பிரசவ காலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் இந்த உறவை நாடாத பெண்களும் உள்ளனர். இத்தகையவர்களை மனைவியாக அடைந்தவன் பல மாதங்கள் இந்த உறவுக்காக ஏங்கும் நிலைமையை அடைகிறான். எத்தனை மாதங்கள் ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வோர் இருக்கத் தான் செய்கிறார்கள். எனினும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
இவ்வளவு நியாயமான காரணங்களினால் தான் பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இஸ்லாம் அகில உலகுக்கும் பொதுவான வாழ்க்கைத் திட்டமாகவும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சரியான தீர்வைக் காட்டும் பரந்த கண்ணோட்டமுடைய மார்க்கமாகவும் இருப்பதால் எல்லாக் காலத்திற்கும், எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் சட்டங்களை வழங்கியுள்ளது.
பலதார மணம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு ஏராளமான காரணங்களை நாம் கூறியுள்ளோம். இக்காரணங்களில் ஒன்றிரண்டு காரணங்கள் சிலருக்கு ஏற்புடையதல்ல என்று தோன்றலாம். அவர்களும் ஏற்கக் கூடிய காரணங்கள் அதன் பிறகும் எஞ்சியிருப்பதை அவர்கள் மறுக்க முடியாது.
மண வாழ்வைப் பெற்றுள்ள பெண்கள் இதில் திருப்தியடைய மாட்டார்கள்; இதற்கு ஒப்ப மாட்டார்கள்; தங்கள் வாழ்வைப் பங்கு வைக்க உடன்பட மாட்டார்கள்.
ஆனால், இந்தப் பரிகாரம் நாளை அவர்களுக்கே தேவைப்படும் போது இதன் அவசியத்தை உணர்வார்கள். வாழ்ந்து கொண்டிருந்த பெண் திடீரென விதவையாகி விட்டு வாழ்க்கையின் வசந்தங்களுக்காக ஏங்கும் பொழுது இதன் அவசியத்தை உணர்வாள்.
விதவையாயினும், கன்னியாயினும் மண வாழ்வு கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் பெற வேண்டுமானால், வசதியுள்ளவர்கள், நேர்மையாக நடக்கும் எண்ணமுள்ளவர்கள், உடல் வலிமையுள்ளவர்கள், தேவையுடையவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
பெண்கள் கிடைக்கவில்லை' என்ற அளவுக்கு மாறினால் மட்டுமே, வரதட்சணை, விபச்சாரம், மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிய முடியும்.
பலதார மணத்தைத் தடை செய்தாலும் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடுவோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கின்றனர். எந்தச் சட்டங்களாலும் இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. இத்தகையோர் சட்டப்படி இன்னொருத்தியை மணந்து கொள்வது விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அழகிகள் கைது' என்ற செய்திகள் இடம்பெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு பெண்கள் ஆண்களை வலை வீசித் தேடிக் கெடுக்கின்றனர். ஆனால் அழகன்கள் கைது' என்ற ஒரு செய்தியையும் நாம் காண்பதில்லை.
பெண்கள் கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், பொழுது போக்கும் இடங்களிலும் மானமிழந்து ஆண்களுக்கு அழைப்பு விடுகிறார்களே! அவர்களுக்கு ஒரு வாழ்வு கிடைத்திருந்தால் இந்த இழிவைத் தாமே தேடிக் கொள்வார்களா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
பொறுப்பைச் சுமக்க வேண்டும்.
திருமணம் விபச்சாரம் போன்றது அல்ல. 'ஒருத்தியை மணந்து கொண்டால் காலமெல்லாம் அவளுக்குரிய உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்; அவள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் சம்பாதிக்க வேண்டும்' என்பதை உணரும் போது ஒரு சதவிகிதம் பேர் கூட அதற்கு முன் வர மாட்டார்கள்.
பலதார மணம் தடை செய்யப்பட்டு விபச்சாரம் தடுக்கப்படாத போது பிற பெண்களை நாடுவோர் மிக அதிக அளவில் இருப்பார்கள்.
விபச்சாரத்தைத் தடுத்து பலதார மணத்தை அனுமதித்தால் அதை விட மிக மிகக் குறைந்த அளவு ஆண்கள் தாம் பிற பெண்களை நாடுவார்கள்.
காரணம் சில ரூபாய்களை வீசி எறிந்து விட்டால் போதும்! வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது எனும் போது பிற பெண்களை சர்வ சாதாரணமாக நாடுவார்கள்.
செய்யும் செயலுக்காக காலமெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் போது பலமுறை யோசித்துத் தான் செய்வார்கள்.
எனவே பிற பெண்களை நாடுவோரின் எண்ணிக்கை பலதார மணத்தினால் பல மடங்கு குறையும். திருமணம் என்ற முறையில் இல்லாமல் எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் உறவு கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பார்க்கட்டும்! அப்போது புரிந்து கொள்வார்கள்.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுபவள் தன் பரிபூரண சம்மதத்துடன் தான் முன் வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாததெனவும் அறிவிக்கிறது.
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்.
எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கமா?
சமீப காலமாக, சிலர் எடுத்து வைக்கும் வினோதமான வாதத்தையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பலதார மணத்தினால் முஸ்லிம்கள் அதிகமாகி நாம் சிறுபான்மையாவோம்; அதனால் பலதார மணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
1961-ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்கள் 36.6 கோடிப் பேர் இருந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991 ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்களின் எண்ணிக்கை 67.2 கோடியாகும்.
இந்தக் கணக்கின் படி முப்பது வருடங்களில் 100 இந்துக்கள் 183 இந்துக்களாக வளர்ந்துள்ளனர்.
இந்த வளர்ச்சியுடன் மதமாற்றத்தினால் இந்துக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முப்பது ஆண்டுகளில் இலட்சம் இலட்சமாக தலித் மக்கள் புத்த மதங்களைத் தழுவியுள்ளனர்.
முப்பது ஆண்டுகளில் சில மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக மாறும் அளவுக்கு கிறித்தவ மதத்தை பல கோடிப்பேர் தழுவியுள்ளனர்.
நாடு முழுவதும் தினந்தோறும் பல நூறு பேர் இஸ்லாத்தையும் ஏற்றுள்ளனர். கிராமம் கிராமமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
பகுத்தறிவு இயக்கங்களின் எழுச்சியின் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று குறிப்பிடக் கூடிய இந்துக்களும் பெருகியுள்ளனர்.
இவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் இந்துக்களாகப் பிறந்தவர்கள் தான். இந்துக்களாகப் பிறந்து விட்டு வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் தான்.
மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மதம் மாறுவதாக இந்துத்துவ இயக்கங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றனர்.
மாதம் ஒரு லட்சம் இந்துக்கள் பௌத்தவர்களாகவும், கிறித்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும், மதம் சாராதவர்களாகவும் மாறுகிறார்கள் என்றால் வருடத்திற்கு 12 லட்சம் பேர் மதம் மாறுகின்றனர். 1961 முதல் 1991 வரை உள்ள முப்பது வருடங்களில் பல்வேறு மதங்களுக்கு மாறிய இந்துக்கள் 3.6 கோடியாவர்.
1961-ல் அதவாது 36.6 கோடியாக இருந்த இந்துக்கள் 67.2 + 3.6 = 70.8 என்ற கணக்கில் பெருகியுள்ளனர். அதாவது நூறு இந்துக்கள் முப்பது ஆண்டுகளில் 193 இந்துக்களாகப் பிறப்பின் அடிப்படையில் பெருகியுள்ளனர்.
இதைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தைக் காண்போம்.
1961-ல் இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி முஸ்லிம்கள் 4.6 கோடியாக இருந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.5 கோடி.
நூறு இந்துக்கள் 193 இந்துக்களாகப் பிறப்பால் பெருகுகின்றனர் என்ற கணக்குப் படி முஸ்லிம்களின் பிறப்பு விகிதமும் இருந்தால் 4.6 கோடியாக இருந்த முஸ்லிம்கள் 8.87 கோடியாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கை விட 63 லட்சம் முஸ்லிம்கள் தான் அதிமாக உள்ளனர்.
அதாவது முப்பது ஆண்டுகளில் இந்துக்களின் வளர்ச்சி விகிதத்தை விட 63 லட்சம் பேர் அதிகம் என்றால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ஆகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணம் பிற மதங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவுவோர் தான். ஆண்டுக்கு இரண்டு லட்சத்தை விட அதிகமாகவே முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.
இந்த நாட்டில் முஸ்லிம்களின் கணக்கு ஜீரோவிலிருந்து தான் துவங்குகிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் காரணத்தினாலேயே முஸ்லிம்கள் இங்கே உருவானார்கள். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடக்கின்றது. எனவே முஸ்லிம்களாக மதம் மாறியவர்களைத் கழித்துப் பார்த்தால் இந்துக்கள் தமது மனைவியர் மூலம் எந்த அளவு மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களோ அதே கணக்குப் படி தான் முஸ்லிம்களும் மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள். நான்கு மனைவியரைத் திருமணம் செய்வதால் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகம் வளர்ச்சியடைந்து விட்டார்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
மேலும் நடைமுறையில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக சதவிகிதத்தில் பலதார மணம் புரிந்துள்ளனர். இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்.
அதிக மனைவியரை மணந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் முஸ்லிம்களை விட அதிக அளவு பலதார மணம் செய்துள்ள இந்துக்களுக்குத் தான் இந்தக் குற்றச்சாட்டு பொருந்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலதார மணத்துக்கு நாம் எடுத்து வைத்த நியாயமான காரணங்களைச் சிந்தித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பலதார மணத்தின் நோக்கம் அல்ல என்பதை உணரலாம்.
பலதார மணம் பெண்களுக்கில்லை:
இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.
ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா? ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு 'தாய் யார்?' என்பது தான் தெரியுமே தவிர, தன் 'தந்தை யார்?' என்பதை அறிந்து கொள்ள முடியாது.
இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் தகப்பன் யார் என்று தெரியாமல் உருவாகக் கூடிய சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?
ஒவ்வொருவனும் என்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்த அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்! அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?
ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.
பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.
இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பதனாலேயே எல்லாம் அறிந்த ஏக இறைவன் ஆண்களுக்கு மாத்திரம் இதை நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறான். நீக்கிவிட முடியாத வித்தியாசங்கள் இருக்கும் வரை பலதார மணத்தை விமர்சனம் செய்பவர் புத்திசாலியாக இருக்க முடியாது.
ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிகமிக முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு.
பல மனைவியரைக் கட்டியவன் நினைத்த போது விரும்பிய மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும்; ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது என்பதைச் சிந்தித்தால் ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணரலாம்.
திருமணத்துக்கு தயார் நிலையில் உள்ள ஆண்களும், பெண்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கும் போது அனைத்துப் பெண்களுக்கும் மண வாழ்வு கிடைத்து விடுவதால் இரண்டாவதாக வாழ்க்கைப்பட பெண்கள் முன்வர மாட்டார்கள். பல தாரமணம் செய்ய ஒருவர் விரும்பினாலும் அது சாத்தியமாகாது. அப்போது எந்தச் சட்டமும் போடாமலேயே பலதார மணம் தானாக நின்று விடும். முதல் தாரத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது எந்தப் பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட விரும்புவாள்?
அந்த நிலை ஏற்படும் வரை எந்தச் சட்டத்தினாலும் இதைத் தடுக்க முடியாது.
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்போரின் அடுத்த குற்றச்சாட்டு தலாக்' குறித்ததாகும். அது பற்றியும் நாம் ஆராய்வோம்.
திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்
இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.
தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.
கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டுப் பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்துச் செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.
பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? யாருமே விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.
அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.
திருமணம் என்பது ஆண்களும், பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.
திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.
விவாகரத்துச் செய்ய அனுமதிக்க முடியாது என்று சட்டம் போட்டால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.
கள்ள உறவு வேண்டாம்; முறையாக இன்னொருத்தியைத் திருமணம் செய்து வாழலாம் என்று அவன் நினைத்தால் முதல் மனைவி அதற்குத் தடையாக நிற்கிறாள் என்பதால் மனைவியை தந்திரமான வழிகளில் கொலை செய்து விடுகிறான். இப்படி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கணவனால் கொல்லப்படுகிறார்கள். அல்லது கணவன் இருந்தும் வாழாவெட்டியாக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இதற்கான ஒரே தீர்வு எளிதான விவாகரத்து தான்.
இது ஆணுக்கு மட்டுமல்ல; மனைவிக்கு கணவனைப் பிடிக்காமல் போனால் அவள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடிப் போகிறாள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் காட்டுகிறாள்.
இது போன்ற சம்பவங்களும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கில் நடக்கின்றன.
மிகப் பெரிய தீமைகள் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் உலகெங்கும் விவாகரத்துச் சட்டம் உள்ளது. இதனால் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க சிறிய பாதிப்புகளைச் சகித்துக் கொள்வது தான் அறிவுடமை.
இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன. விவாகரத்துச் சட்டம் இல்லாத ஒரு நாடு கூட உலகில் இல்லை.
தலாக் கூறுவதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறி முஸ்லிம் கணவனைச் சிறையில் தள்ளும் சட்டம் இயற்றுவோர், அதை ஆதரிப்போர் தமது மதத்துப் பெண்கள் விவாகரத்தினால் பாதிக்கப்படுவது பற்றிக் கவலைப்படவில்லை. இந்துப் பெண்கள் இந்துக் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டும், விவாகரத்து செய்யாமல் கைவிடப்பட்டும் அல்லல் படுகின்றனர். அவர்களின் கணவன்மார்களைச் சிறையில் தள்ளும் சட்டம் இல்லை.
இது நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டியதாகும்.
அடுத்து இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்துக்கும் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்றுக் கொண்ட விவாகரத்துச் சட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமே பெண்களுக்குக் குறைந்த பாதிப்பு கொண்ட சட்டமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தலாக், விவாகரத்து வேறுபாடு
தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்துக்கும், முஸ்லிமல்லாத மக்களின் விவாகரத்துக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
முஸ்லிமல்லாதவர்கள் தமது மனைவியரை விவாகரத்துச் செய்ய முடிவு செய்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றங்கள் பல அமர்வுகள் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும்.
இப்படி விவாகரத்து நடந்து விட்டால் தம்பதியர் நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் தலாக் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜமாஅத்தார் முன்னிலையில் விசாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சட்ட வாசகங்களை மட்டும் தான் கவனிப்பார்கள். வழக்கு தொடுத்த தம்பதிகளின் குடும்பம் பற்றியோ, இன்ன பிற சூழல் பற்றியோ அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தார்கள் அந்தத் தம்பதிகளுக்கு உறவினராக இருப்பார்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் நீதிமன்றங்களை விட உள்ளூர் ஜமாஅத்தார்களுக்குத் தான் அதிக அக்கறையும், இந்த விஷயத்தில் அதிக ஞானமும் இருக்கும்.
இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தில் கணவன், மனைவி இருவரும் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது மற்றவர் எளிதாகச் சுமத்த முடியும். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தில் இப்படி சுமத்த முடியாது.
எனவே ஜமாஅத்தார்கள் முன்னிலையில் செயல்படுத்தப்படும் தலாக் சட்டம் தான் இருவரின் நலனிலும் அக்கறை செலுத்தும் சட்டமாக இருக்க முடியும்.
தலாக்கின் விதிமுறைகள்
ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.
பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.
இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.
இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது கனவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.
இதனால் மனைவியிடம் தவறு இருந்தால் அவள் தன்னைத் திருத்திக் கொள்வாள். கணவனிடம் தவறு இருந்தால் அவன் தன்னைத் திருத்திக் கொள்வாள்.
தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்துத் திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.
இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!
சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:34
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:35
நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழியின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
மூன்று வாய்ப்புகள்:
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் சட்டமாகும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்.)
இப்படி தலாக் கூறும்போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.
இது குறித்து திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:228
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:229
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாதவரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:230
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:231
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:233
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து கூட இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து தம்பதிகளாக வாழலாம்.
இவ்வாறு சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன்படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் மீண்டும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.
இப்படி தலாக் விட்டபின் மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ள மாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.
இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.
திருக்குர்ஆன் 65:1
இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.
முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.
உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்துச் சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாகரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.
எஸ்.எம்.எஸ் மூலம், தபால் மூலம், போன் மூலம், வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்து செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் அது நடக்க வேண்டும்.
இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:2
சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைப்பிடித்துள்ளானா என்பதை அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.
எல்லா முயற்சிகளையும் கடைப்பிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.
இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும் போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது.
இதன் பின் (மூன்றாம் முறை) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:230
விவாகரத்துச் செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.
எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாகரத்துச் செய்கின்றனர். அந்தச் சட்டங்களை விட பெண்களுக்கு அதிக நன்மை இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.
இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முத்தலாக் – ஒரு விளக்கம்:
தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை ஆண்களுக்கு வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர்.
மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.
இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.
தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.
ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.
வேலையை விட்டு நீக்கி, பின்னர் மீண்டும் சேர்த்து, பின்னர் மீண்டும் நீக்கி, பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.
ஒருவன் ஒரு தலாக் சொன்னவுடன் அவள் அவனுக்கு மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691
மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் இஸ்லாம் அவனுக்கு வழங்கிய மூன்று வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியுள்ளான்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.
மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் விவாகரத்து உரிமை:-
ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5273, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிகச் சிரமத்துக்கு பெண்களே ஆளாவதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே இல்லை. இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
குடிகாரக் கணவனை, கொடுமைக்கார கணவனைப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எவ்விதக் காரணமுமின்றி கணவனைப் பிடிக்காவிட்டால் கூட கணவனைப் பிரியலாம் என்பதையும் மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
இதைத் திருக்குர்ஆன் 'உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?' (4:21) என்றும்
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது.
பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
பெண்கள் ஸ்டவ் வெடித்துச் செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள எளிமையான வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஜீவனாம்சம்
'விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாத்தில் ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை' என்பதும் முஸ்லிமல்லாதாரால் அதிகமாக விமர்சனம் செய்யப்படும் விஷயமாகும்.
ஷாபானு வழக்கின் போது தான் இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தைக் குறை கூறின என்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பும் போதெல்லாம் இந்தப் பிரச்சனையை அவர்கள் குறிப்பிடத் தவறுவது கிடையாது.
ஜீவனாம்சம் வழங்குவது அவசியம் என்போர் அதை நியாயப்படுத்துவதற்கு கூறும் காரணங்களைக் காண்போம்.'
இல்லற வாழ்வில் அதிகமான சிரமத்துக்கும், இழப்புக்கும் ஆளாகுபவள் பெண் தான். ஒரு ஆணுடன் சிறிது காலம் அவள் இல்லறம் நடத்துவதால் தனது அழகையும், இளமையையும் இழந்து விடுகிறாள். இந்த நிலையில் அவள் விவாகரத்துச் செய்யப்பட்டால் அவளது எதிர்காலம் என்னாவது? எனவே அவளது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தான் விவாகரத்து செய்த கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்கிறோம்'. ஜீவனாம்சத்தை நியாயப்படுத்துவோர் கூறும் காரணம் இது தான்.
'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்று கூறுவோரும் இவ்வாறு கூறுவது தான் இதில் வேடிக்கை. இவ்வாறு கூறுவது தங்கள் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருவரும் பிரிகிறார்கள் என்றால் கணவன் மட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் ஏன் கொடுக்க வேண்டும்? இருவருமே எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்றல்லவா சமத்துவம் பேசுவோர் கூற வேண்டும்.
கூறுபவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் இந்தக் கூற்றில் உள்ள நியாயத்தை மட்டும் அலசுவோம்.
இந்த நியாயமான காரணத்தை மனிதாபிமானமுள்ள எவரும் மறுக்க முடியாது. இல்லற வாழ்வில் ஒரு பெண் அதிக சிரமத்தை அடைவார் என்பதும், அதிகமாக இழப்பு அவளுக்குத் தான் என்பதும், பெண்ணின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்பதும் உண்மை. இந்தக் காரணத்தை மாற்றார் மட்டுமின்றி எந்த முஸ்லிமும் மறுப்பது கிடையாது.
காரணம் உண்மை என்றாலும் அந்தக் காரணத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வு சரியில்லை என்பதே முஸ்லிம்களின் வாதம். அதாவது மேற்கண்ட காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கச் சொல்வது சரியான பரிகாரமாகாது. ஏனெனில் இவர்கள் நியாயப்படுத்துகின்ற ஜீவனாம்சம் அந்தக் காரணத்தைக் களைய உதவவில்லை என்பதுடன் வேறு மோசமான விளைவையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒருவன் விவாகரத்துச் செய்யும் போது அவனிடம் எந்த விதமான வசதியும் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் ஜீவனாம்சம் வழங்குமாறு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாது. அப்படியே உத்தரவிட்டாலும் அவனால் அதை நிறைவேற்ற முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக அவனைக் கைது செய்ய முடியுமே தவிர விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கு எதையும் அவனிடமிருந்து பெற்றுத் தர முடியாது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவே உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது விவாகரத்துச் செய்யப்படும் பெரும்பாலான பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழியில்லை; இவர்களைப் பொருத்த வரை ஜீவனாம்சம் என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
வசதியுள்ளவர்கள் விஷயத்திலாவது நியாயம் வழங்கலாமே என்று கேட்கலாம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியும் அர்த்தமற்றுப் போகின்றது.
விவாகரத்துச் செய்தவன் வசதி மிக்கவன் என்றே வைத்துக் கொள்வோம். ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று அவன் முடிவு செய்து விட்டால் அதைக் கொடுக்காமலிருக்க அவனால் முடியும்.
தன்னிடம் எவ்வளவு தான் வசதிகள் இருந்தாலும் எந்த வசதியுமே தன்னிடம் இல்லை என்று கூறிப் பொய்யான சான்றுகளை அவனால் தயாரிக்க முடியும். ஆயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகளையே ஏய்த்து ஏப்பம் விடுவோர், ஒரு அபலையை ஏமாற்றுவது பெரிய காரியம் அல்ல. வசதியுள்ளவர்கள் தாமாக மனது வைத்தால் தான் ஜீவனாம்சம் கிடைக்க வழி உண்டு. இல்லையெனில் இவர்கள் விஷயத்திலும் சட்டம் ஏட்டுச் சுரைக்காய் தான். இது முதலாவது காரணம்.
பொருளாதாரத் தகுதியை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் திருமணங்கள் நடக்கின்றன. ஏழைப் பெண்களுக்கு ஏழை ஆண்களும், வசதி மிக்க பெண்களுக்கு வசதி மிக்க ஆண்களும் தான் வாழ்க்கைத் துணைவர்களாகின்றனர். இதில் ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். ஆயினும் பொதுவான நிலைமை இது தான்.
வசதியான ஆடவனை மணந்தவள் – அதாவது வசதியான பெண்மணி- அவனிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருக்க மாட்டாள். அவளைப் பொருத்தவரை இந்த ஜீவனாம்சம் தேவையில்லாத ஒன்று. வசதியற்றவனை மணந்தவளுக்கு – அதாவது ஏழைப் பெண்ணுக்கு – ஜீவனாம்சம் தேவை என்றாலும் அவளது கணவன் அதைக் கொடுக்க முடியாதவனாக இருக்கிறான்.
யாருக்குத் தேவையில்லையோ அவளுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது; யாருக்குத் தேவையோ அவளுக்குக் கிடைக்க வழியில்லை. இது இரண்டாவது காரணம். ஆக மொத்ததில் ஜீவனாம்சம் என்பது நடைமுறைப்படுத்த சிரமமானதாகவும் எந்தக் காரணத்துக்காக அது நியாயப் படுத்தப்படுகின்றதோ அந்தக் காரணத்தைக் களைய உதவாததாகவும் உள்ளது.
ஜீவனாம்சம் வாங்கித் தருவதாக சில வழக்கறிஞர்கள் பெண்களைத் தூண்டி விட்டு ஜீவனாம்சத்தை விட அதிகமாகவே அவர்களிடம் கறந்து விடுவதையும் நாம் காண்கிறோம்.
நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகும் ஜீவனாம்சம் பெற முடியாமல் நீதி மன்றத்துக்கு மீண்டும் மீண்டும் அலைபவர்களையும் பார்க்கிறோம்.
ஒரு சில ஆண்கள் நீதிமன்றத்தில் அற்பமான ஜீவனாம்சத் தொகையைச் செலுத்துகின்றனர். அதை மாதா மாதம் நீதிமன்றத்தில் வந்து பெறுவதற்காக பயணச் செலவு, நீதிமன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே பெண்களுக்கு மிச்சமாவதில்லை என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த ஜீவனாம்சத்தினால் அரைக் காசுக்கு பயனில்லை என்று தெரிந்து கொண்டே தான் இது சிறப்பான தீர்வு' என்று கூறி தங்களைத் தாங்களே சிலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கடந்து, முறையாக ஜீவனாம்சம் கிடைக்கிறது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்போது வேறொரு மோசமான விளைவு ஏற்படக் கூடும்.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் மரணிக்கும் வரை அல்லது அவள் மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும்.'
சட்டம் இப்படித் தான் கூறுகிறது.
முன்னர் நாம் குறிப்பிட்ட இடையூறுகளைக் கடந்து விவாகரத்துச் செய்யப்பட்ட அனைவருக்கும் ஜீவனாம்சம் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்வதால் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்; கணவனின் குடும்பத்திற்கும் பணிவிடை செய்ய வேண்டும்; ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்பதையெல்லாம் விவாகரத்துச் செய்யப்பட்டவள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறாள்.
மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தால் மறுமணம் செய்யும் முடிவுக்கு அவள் வரமாட்டாள். பழைய கணவனிடமிருந்து தொடர்ந்து ஜீவனாம்சம் பெறுவதையே தேர்வு செய்வாள்; சுதந்திரப் பறவையாகத் திரிவதையே அவள் விரும்பி வரவேற்பாள்.
வயிற்றுப் பசியைப் பொறுத்த வரை அவளுக்குக் கவலையில்லை. அவளுடைய உணர்ச்சிகள் என்னாவது? ஒரு முறை நடைபெற்ற திருமணத்தால் கணவனுடன் பிணக்கேற்பட்டுத் அதனால் மனம் புண்பட்ட இவள் திருமணமில்லாத வழிகளில் தான் உணர்ச்சிகளைத் தீர்க்க முயல்வாள்.
இன்னொருவனுக்குச் சுகமளித்து விட்டுப் பழைய கணவனிடம் ஜீவனாம்சம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? திட்டவட்டமாக ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலையில் இந்த விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
விவாகரத்துச் செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் இப்படி நடப்பார்கள் என்று நாம் கூறவில்லை. கணிசமானவர்கள் இப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் நாளடைவில் பரவி விடும் என்றே கூறுகிறோம்.
இந்தப் பெண்களின் நிலைக்குப் பரிகாரம் தான் என்ன? இந்த ஜீவனாம்ச முறை குறைபாடு உடையது என்றால் குறைபாடு இல்லாத மாற்று வழி தான் என்ன? அந்தப் பெண்களின் எதிர்காலம் என்னாவது? என்ற கேள்விகளுக்கு இஸ்லாத்தின் விடை என்ன?
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு மூன்று வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.
முதல் பாதுகாப்பு
ஒன்று, திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்தின் பின் கணவனால் கைவிடப்படும் நிலையும் ஏற்படலாம் என்பதைப் பெண்கள் உணர்ந்து முன் கூட்டியே ஜீவனாம்சத் தொகையை மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாறும், ஆண்கள் அதைக் கொடுத்து விடுமாறும் இஸ்லாம் வழி காட்டுகின்றது.
பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மஹராகக் கேட்கலாம் எனவும், அந்தப் பணத்தில் அவளைத் தவிர எவருக்கும் உரிமையில்லை எனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது.
அரபு நாடுகளில் இன்றும் கூட திருமணத்தின் போது பெண்கள் இலட்சக் கணக்கில் மஹர் தொகை கேட்கிறார்கள்.
திருமணத்தின் போதே இப்படி மஹர் வாங்கிக் கொள்ளும் போது வசதியில்லை என்று கூறி கணவன் ஏமாற்றவும் இடமில்லை. தவறான வழியை மனைவி தேர்வு செய்யவும் இடமில்லை.
மறுமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பழைய கணவனிடமிருந்து தனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அவள் மறுமணத்தையே தேர்வு செய்வாள். அதனால் அவளுக்கு மீண்டும் ஒரு முறை மஹர் கிடைக்கின்றது. அவளுடைய வாழ்க்கைச் செலவுக்கும் புதிய கணவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
இன்றைய இந்திய முஸ்லிம்கள் இதைப் பேணத் தவறி விட்டனர்; பெண்களிடம் வரதட்சணைக் கேட்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதால் இஸ்லாத்தைக் குறை கூற முடியாது; அறிவுடையோர் அவ்வாறு கூற மாட்டார்கள்.
இரண்டாவது பாதுகாப்பு
'விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து பெருந்தொகையை, சொத்தை அவளுக்கு ஜமாஅத்தினரோ அல்லது இஸ்லாமிய அரசோ வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்பது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்திய இரண்டாவது பாதுகாப்பாகும்.
திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
திருக்குர்ஆன் 2:241
இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
விவாகரத்தின் போது நியாயமான பாதுகாப்புத் தொகையை கணவனிடமிருந்து ஜமாஅத்தார் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
ஆயினும் முஸ்லிம்களில் உள்ள சில அறிவீனர்கள் திருக்குர்ஆனின் மேற்கண்ட கட்டளைக்கு தவறான சுய விளக்கம் கொடுத்து பெண்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு தொகையை வழங்க மறுக்கின்றனர்.
அதாவது இத்தா காலத்துக்கு, அதாவது மூன்று மாத காலத்துக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே 2:241 வசனம் குறிக்கிறது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இவர்கள் கூறும் கருத்தை இவ்வசனம் தரவில்லை. அழகிய முறையில், நியாயமான முறையில் வழங்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.
திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்!
திருக்குர்ஆன் 2:236
மனைவியைத் தீண்டாமல் விவாகரத்துச் செய்தவர் தமது வசதிக்குத் தக்கவாறு பெண்களுக்கு வசதிகள் அளிக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.
மனைவியைத் தீண்டி அனுபவித்தவர் விவாகரத்துச் செய்யும் போது இதையே அடிப்படையாகக் கொள்வது தான் பொருத்தமானது.
விவாகரத்துச் செய்தவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பும், சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தரும் பொறுப்பும் ஜமாஅத்துகளுக்கு உண்டு. இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் சில ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது தான். அதை வாங்கிக் கொடுப்பதுடன் இழப்பீட்டுத் தொகையையும் வாங்கிக் கொடுப்பது அவசியமாகும்.
முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் முஸ்லிம்கள் பல விதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.
எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
திருக்குர்ஆன் 65:6 வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.
அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் இவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி திருக்குர்ஆன் 2:241 வசனத்தில் கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் விவாகரத்துச் செய்த கணவன் மூலம் குழந்தைகளைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தைகள் தாயிடமே வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான முழுச் செலவையும் தந்தையே ஏற்க வேண்டும். கைக்குழந்தையாக இருந்தால் அக்குழந்தைக்குப் பாலூட்டுவதற்காகவும் கூட அக்குழந்தையின் தந்தை உரிய தொகை கொடுத்து வர வேண்டும் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன்: 2:233
மூன்றாவது பாதுகாப்பு
இது தவிர மற்றொரு பாதுகாப்பையும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாவிட்டால் அவர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் பிள்ளைப் பாசம் காரணமாக தம்முடனே குழந்தைகளை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. இதையும் இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது.
தான் பெற்ற பிள்ளைகளுக்குப் பாலூட்டினால் கூட அதற்கான கட்டணத்தைக் கணவனிடமிருந்து பெறலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. பாலூட்டுவதற்காக அவளுக்கு எந்த விதப் பொருளாதாரச் செலவும் ஏற்படுவதில்லை. அது இயற்கையாகவே இறைவன் வழங்கிய அருட்கொடையாகும்.
நியாயமான முறையில் கணவனிடமிருந்து தேவையான தொகையைப் பெறலாம் என்றால் குழந்தைகளுக்கான மற்ற செலவுகளும் தந்தையையே சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே குழந்தைகள் தாயிடம் வளர்ந்தாலும் அவர்களுக்கான உணவு, உடை மற்றும் குழந்தைகளின் மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காகவும், தந்தை பொறுப்பேற்க வேண்டும். குழந்தைகளைப் பேணிப் பராமரிப்பதற்கான கூலிக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.
மேற்கண்ட வசனத்தை சிந்தித்தால் இதை எவரும் விளங்கலாம்.
குழந்தை பெறாத பெண்களும், பெற்றும் வளர்க்க விரும்பாமல் கணவனிடமே தள்ளிவிடக் கூடியவர்களும் தான் இவ்வாறு பெற முடியாது.
எனவே ஜீவனாம்சம் சம்மந்தமாக இஸ்லாம் காட்டிய வழி, உலகில் எங்குமே காண முடியாத சிறப்பான வழி தான். காழ்ப்புணர்வு இன்றிச் சிந்திப்பவர்கள் இதைக் குறை கூற மாட்டார்கள்.
உடலை மறைக்கும் புர்கா
பெண்கள் தங்கள் முகங்களையும், முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இது பர்தா, புர்கா, துப்பட்டி என்று குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
புர்கா என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
புர்கா என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
புர்காவை எதிர்ப்பவர்களின் போலித்தனம்
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும்.
ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைப்பாளியாகிய ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். ஆனால் உழைப்பாளியாகிய பெண் மேலாடை ஏதுமின்றி பணி புரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.
தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அதுபோல் நடுத்தர அல்லது மேல்தட்டு ஆடவன் மேலாடை ஏதுமின்றி வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும், கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருக்கிறான். ஆனால் அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்த மனநிலை ஆதாரமாக அமைந்துள்ளது.
புர்காவை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் புர்காவை வற்புறுத்துகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரிநிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
புர்கா பெண்களுக்குப் பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத் தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட புர்காவை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும், உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
பெண்கள் தம்மை யார் என்று கண்டறிய முடியாத வகையில் முகத்தையும் மறைக்கிறார்களே இது சரியா? இது சரியான செயல் அல்ல.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் வெளியே தெரிவது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்பு கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பது தான் வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். புர்கா என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் தான் புர்கா இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் புர்காவைக் குறை கூற முடியாது.
பாகப்பிரிவினையில் பாரபட்சம்
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.
பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் – இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் – ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.
முஹம்மது நபி காலத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ, ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.
இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.
பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.
அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களுக்கே கூடுதல் சுமை.
இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.
ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரமப்படும் போது அவர்களைப் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது. பெண்களுக்கு இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.
இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.
யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும், யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?
ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.
தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும், பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!
பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.
ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற வேண்டுமானால் ஆண்களுக்கு இரு மடங்கு என்ற வாரிசுரிமைச் சட்டத்தால் தான் சாத்தியமாகும்.
உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
அந்த மனிதனின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது. கணவனின் நலனுக்காகக் காதுகளிலும், கழுத்துகளிலும் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் பெண்ணுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.
பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பராமரிக்க வேண்டும்.
பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.
பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் பெண்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். பிறகு அவள் தள்ளப்பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.
அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப்பட்டால் எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.
ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.
சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.
பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?
தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே
உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.
ஒரு தந்தைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.
தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரிக்கப்படுகிறது. தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.
2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னைப் பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தைச் சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ…
…'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர். அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.
கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.
தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும், மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.
ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒரு வேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப்படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'
இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இந்த்த் தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.'
பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!
ஒரு ஆண் சாட்சி இரு பெண் சாட்சிகளுக்குச் சமமா?
'இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்' என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் முஸ்லிமல்லாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!)
திருக்குர்ஆன் 2:282
இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத் திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருத எந்தவித நியாயமும் இல்லை.
பெண்களில் சிலர் சில நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பாக நிர்வகித்து வரும் போது சாதாரண சாட்சியம் கூறும் தகுதியில் கூடப் பாரபட்சம் காட்டுவது அக்கிரமமானது எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த வாதங்கள் நியாயமானவை என்றாலும் சாட்சியம் கூறுவதற்கும், இவற்றுக்கும் சம்மந்தமில்லை என்பதை விளங்கினால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்.
பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும் அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விட இவர்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.
நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனுடைய அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 304, 1463
அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.
மிகைப்படுத்திக் கூறல்
ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம். சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும்.
தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.
ஊசியை உலக்கையாகவும், யானையைப் பூனையாகவும் பார்க்கக் கூடிய இந்த இயல்பு, சாட்சியம் கூறுவதற்கான தகுதியில் குறைவை ஏற்படுத்துகின்றது. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழி இவர்களின் இயல்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
புகுந்த வீட்டில் மகள் பாதிக்கப்படும் போது பேசுகின்ற நியாயத்தில் கடுகளவைக் கூட மருமகள் விஷயத்தில் கடைப்பிடிக்காத மாமியார்கள் பலரை நாம் காண்கிறோம்.
நன்கு அலங்காரம் செய்த பெண்களை அச்சில் ஏற்றத் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து விட்டு அதை விட அதிகமாகத் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அலங்காரம் செய்து கொண்டு அதில் பெருமையடிக்கும் பெண்களும் இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டுக்களாவர்.
இது போல் அனேக விஷயங்களில் பெண்களை இப்படித் தான் காண முடிகின்றது. ஆண்களிலும் இத்தகையோர் சிலர் இருக்கலாம். பெண்களில் இத்தகைய இயல்பு இல்லாதவர்களும் இருக்கலாம். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய விதி விலக்குகள் இவை. மிகப் பெரும்பாலோரின் நிலை இதுவாகத் தான் இருக்கின்றது.
பிடிக்காத ஒருவன் இன்னொருவனிடம் 100 ரூபாய் கடன் வாங்கியதற்குச் சாட்சி கூறும் போது கட்டுக்கட்டாகக் கொடுத்ததாக அறிந்தோ, அறியாமலோ கூறினால் அங்கே நீதி செத்து விடும். பிடித்தவன் விஷயத்தில் குறைத்துக் கூறினாலும் அப்படியே.
இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக இல்லை என்று இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிந்திப்பது, மனனம் செய்வது உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. ஆண்களின் மூளைக்கும், பெண்களின் மூளைக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 100 கிராம் அதிக அளவு கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. சிந்தித்தல், மனனம் செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், கற்பனை செய்தல், ஆசைப்படுதல், கோபப்படுதல் என ஒவ்வொன்றுக்கும் மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிந்தித்து, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளது என்றாலும் ஆண்களின் மூளையில் பெண்களின் மூளையை விட 13 சதவிகிதம் நியூரான்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்களை விட ஆண்கள் சிந்தித்து முடிவு செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.
மூளையின் நினைவாற்றல் பகுதி ஆண்களை விட பெண்களுக்கு 11 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதனால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிக்கிறார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் இதில் பின் தங்கியே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆண்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.
மேலும் கற்பனை செய்யும் தன்மை பெண்களின் மூளையில் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ்சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.
பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும்போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.
இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.
இயற்கையாக அமைந்த பலவீனம்
பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்லர். பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை, மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!
ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள் அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.
உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம்.
இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!
மிரட்டலுக்கு அஞ்சுதல்
பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்குப் பாதகமாகத் தான் அது அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி கூறும் பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இயல்பிலே அமைந்த இரக்க குணம்
மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.
எனவே ஒரு ஆணுடைய சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.
எனவே இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சரியானது தான் என்பதில் சந்தேகம் இல்லை
மேலும் ஒரு பெண் சாட்சியமளிப்பதோ, அளிக்காமல் இருப்பதோ அவளது உரிமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கணவனை இழந்த பெண்ணை அடைத்து வைக்கும் இத்தா
'கணவன் இறந்தவுடன் மனைவியர் உடனே திருமணம் செய்யக் கூடாது; சில காலம் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்; ஆண்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது; மனைவி இறந்த தினத்தில் கூட மறுமணம் செய்யலாம்' என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவும் பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது.
கணவன் இறக்கும் போது அவள் கர்ப்பினியாக இல்லாவிட்டால் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்துத் தான் மறுமணம் செய்ய வேண்டுமே தவிர உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இவ்வாறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா' எனப்படுகிறது.
இது பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் தோற்றமளித்தாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் இது பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கணவன் இறந்தவுடன் மனைவி அவனது கருவைச் சுமந்திருக்கலாம். அந்த நிலையில் அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அதில் பல அநீதிகள் ஏற்பட்டு விடும்.
இறந்து போன கணவனின் குழந்தையைப் புதிய கணவனின் தலையில் சுமத்தும் நிலை ஏற்படும்.
பிறக்கும் குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்தில் இல்லாவிட்டால் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக இரண்டாம் கணவன் கருதுவான். தனது குழந்தை என்று ஒப்புக் கொள்ள மறுப்பான். குழந்தையின் உண்மையான தந்தையாகிய முதல் கணவனிடமிருந்தும் குழந்தைக்கு எந்தச் சொத்துரிமையும் கிடைக்காமல் போய் விடும்.
தன்னுடைய கருவில் முதல் கணவனின் வாரிசு உருவாகவில்லை என்பதை நிரூபித்து விட்டு திருமணம் செய்வது தான் அவளுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.
'ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு மாதமும் பத்து நாட்களும் தேவையில்லையே? அதை விடக் குறைவான காலத்திலேயே இது தெரிந்து விடுமே? முதல் மாதமே மாதவிடாய் வந்து விட்டால் அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே?' என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.
கருவில் குழந்தை இல்லை என்பதை முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
ஆனால் அவளுக்கு மாதவிடாய் வருகிறதா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயம். மாதவிடாய் நின்ற பிறகும் கூட திருமணத்திற்கு அவசரப்பட்டு அவள் மாதவிடாய் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்று பொய் கூறலாம்.
இதற்காக அந்தரங்கச் சோதனையெல்லாம் மேற்கொள்வது அவளை அவமானப்படுத்துவதாகவே முடியும்.
அவளுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டுமானால் நான்கு மாதங்களுக்கு மேல் அவகாசம் தேவைப்படும்.
நான்கு மாதமும், பத்து நாட்களும் கழிந்த பிறகு அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகாவிட்டால் அவள் கருவில் குழந்தை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகி விடும். இப்படி அனைவருக்கும் தெரியும் வகையில் நிரூபிப்பதற்கு சில நியாயங்களும் உள்ளன.
கணவன் இறந்த பின் ஒரு பெண்ணுக்கு வழக்கமான மாதவிடாய் ஏற்பட்டு, கருவில் குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டி, மறு மாதமே திருமணம் செய்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் இரண்டாம் கணவன் மூலம் அவள் கருவுற்று விடுகிறாள். அந்தக் கரு வளர்ந்து பத்தாவது மாதம் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படாது. ஆனால் குறைப் பிரசவமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவனால் பிரச்சினை ஏற்படும்.
இது தனக்குப் பிறந்தததாக இருக்காது. முதல் கணவனுக்குப் பிறந்ததாகத் தான் இருக்க வேண்டும். இரண்டு மாதக் கருவைச் சுமந்து கொண்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டாள் என்று நினைப்பான். அவனது குடும்பத்தினரும் அவ்வாறே நினைப்பார்கள்.
நான்கு மாதம் கழித்து ஊரறிய நிரூபித்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்து, குறைப் பிரசவமாக அவள் குழந்தையைப் பெற்றாலும் அது தனது குழந்தை இல்லை என்று இரண்டாம் கணவன் கூற மாட்டான். சந்தேகப்படவும் மாட்டான். முதல் கணவனின் குந்தையாக இருந்திருந்தால் நான்கு மாதங்கள் வரை அவளது வயிறு பெரிதாகாமல் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.
எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்தின் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், பெற்றெடுக்கும் குழந்தைக்குச் சட்டப் பூர்வமான உரிமையைப் பெற்றுத் தரவும் இந்த ஏற்பாடு மிகவும் அவசியமே. இது பெண் குலத்துக்கு நன்மை பயக்கக் கூடியதே என்பதை இதன் மூலம் அறியலாம்.
கணவன் இறந்து விட்டால் கணவனின் சொத்தில் மனைவிக்கு உரிமை இருப்பது போலவே அவனால் அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் உரிமை உள்ளது.
எனவே அவசரப்பட்டு திருமணம் செய்து குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்றால் முதல் கணவனின் குடும்பத்தினர் அது தமது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை இல்லை என்று வாதிடுவார்கள். அக்குழந்தைக்குச் சேர வேண்டிய சொத்துரிமை இல்லாமல் போய் விடும். இரண்டாம் கணவனும் தனது குழந்தை இல்லை என்று மறுப்பான்.
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார்.
தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்ட போது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.
அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்தியமுண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ,யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது.
நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது.
இது போன்ற நியாயமான காரணங்களால் தான் பெண்கள் மீது இத்தா எனும் கடமையை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.
பெண்களுக்கு ஆட்சித் தலைமையை மறுப்பது ஏன்?
'பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்' என்று முஸ்லிமல்லாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
'பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.
நூல்: புகாரி 4425, 7099
ஆட்சித் தலைமை தவிர வேறு தலைமைகளை அவர்கள் வகிக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.
மக்கள் தேர்வு செய்யும் ஆட்சித் தலைமை எவ்வாறு உருவாகிறது என்பதை முதலில் நாம் சிந்திப்போம்.
கொல்லைப் புறமாக பதவிக்கு வருதல்
அடிமட்டத்திலிருந்து ஒருவன் பாடுபடுவான். போராட்டங்களில் பங்கெடுப்பான். சிறைச் சாலையில் அடைக்கப்படுவான். அடி உதைகளுக்கு ஆளாவான். இப்படிப் பல தியாகங்கள் செய்த பின்னர் தான் படிப்படியாக உயர்ந்து தனது ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே வருகிறான். இதன் மூலம் ஆட்சித் தலைமையை ஏற்கிறான்.
ஆனால் பெண்கள் எவ்வாறு ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள்! கோஷம் போட்டு கொடி பிடித்து, பசைக் கலயம் சுமந்து, சுவரொட்டிகள் ஒட்டி போராட்டங்களில் பங்கு கொண்டு படிப்படியாகத் தான் தலைமைப் பதவியைப் பெறுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
கஷ்டப்பட்டு உழைத்துப் பதவியைப் பெற்றவனின் மனைவியாக அல்லது மகளாக இருப்பது தவிர இப்பதவிக்காக எந்தத் தியாகமும் செய்திருக்க மாட்டார்கள்.
தலைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் கட்சிக்காக கடுமையாக உழைத்து அப்பதவிக்குத் தகுதியானவனாக இருப்பான். ஆனால் தலைவனின் உறவுக்காரப் பெண் என்ற ஒரு காரணத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் தலைமைப் பதவியைப் பெறுகின்றனர்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பின் காங்கிரசில் எத்தனையோ தியாகிகளும், தலைவர்களும் இருந்தார்கள். நேருவின் மகள் என்ற தகுதியில் இந்திரா காந்தி பதவியைப் பெற்றார்.
இலங்கையில் பண்டார நாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் அவரது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஒரு தியாகமும் செய்யாத அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரது மனைவி என்ற காரணத்தினால் பிரதமரானார்.
அது போலவே ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் என்ற காரணத்துக்காகவே சந்திரிகா அதிபராக ஆனார்.
ஜுல்பிகார் அலி புட்டோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பேநஸீர் புட்டோ பாகிஸ்தானில் பிரதமராக முடிந்ததே தவிர அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அளவு கூட அவர் உழைத்ததில்லை.
நுஸ்ரத் புட்டோ பதவியைப் பெற்றதும் பூட்டோவின் மனைவி என்பதால் தான்.
முஜிபுர்ரஹ்மானின் மனைவி என்ற தகுதியின் காரணமாக மட்டுமே ஷேக் ஹஸீனா பங்களாதேஷுக்குப் பிரதமராக முடிந்தது. முஜிபுர்ரஹ்மானுடன் சேர்ந்து விடுதலைக்காகப் போராடி பல தியாகங்கள் செய்த பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஜியாவுர்ரஹ்மானின் மனைவி என்ற ஒரே தகுதியின் காரணமாகத் தான் கலிதா ஜியா இன்றைக்கு பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார்.
இந்தோனேசியாவின் மிகப்பெரும் தலைவராக இருந்த சுகர்னோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மேகவதி அந்த நாட்டுக்கு அதிபராக ஆகியிருக்கிறார்.
தமிழகத்தில் எம்ஜியாரின் மனைவி என்பதால் ஜானகியும், மனைவியைப் போன்றவராக மக்கள் கருதியதால் ஜெயலலிதாவும் பதவிக்கு வர முடிந்தது.
லல்லு பிரசாத் யாதவின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக ரப்ரி தேவி பீகாரின் முதல்வராக முடிந்தது.
என்.டி.ராமராவின் மனைவி என்பதற்காக அவரது கட்சியின் தலைமைப் பொறுப்பை சிவபார்வதியால் பெற முடிந்தது.
ஹிபதுல்லாஹ்வின் மனைவி என்பதற்காகவே நஜ்மா ஹிபதுல்லாவுக்கு பதவி கிடைத்தது.
நாளை சோனியா காந்தியோ, பிரியங்காவோ பிரதமரானால் அதுவும் இப்படிக் கிடைத்த பதவியாகத் தான் இருக்கும்.
ஆண்கள் ஒரு பதவியைப் பெறுவதற்குச் செய்யும் தியாகங்கள் எதையும் செய்யாமல் தான் பெண்கள் ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள். அப்படித் தான் வர முடியும்.
இது எவ்வளவு பெரிய அக்கிரமம்! தனக்கு தலைமைப் பதவி ஒரு காலத்தில் கிடைக்கும் என்பதற்காக பலவித தியாகங்கள் செய்தவர்களின் தியாகங்கள் இதனால் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு மக்கள் செய்யும் பெரியதுரோகமாகும்.
கருணாநிதி எப்படித் தலைவராக ஆனாரோ அப்படி ஜெயலலிதா தலைவியாக ஆகவில்லை! பெண்ணுக்குப் பதவி கிடைக்கிறது என்பதற்காக தியாகங்களைப் புறந்தள்ளி விட முடியாது.
இவ்வாறு இல்லாமல் பதவியைப் பெறுவது என்றால் பெண்கள் வேறு விதமான (?) விலையைக் கொடுக்காமல் பதவியைப் பெற முடியாது என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லை.
இது முதலாவது காரணமாகும்.
கேடயமாக்கப்படும் பெண்மை.
பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தமது தவறுகளுக்குப் பெண்மையையே கேடயமாக்குவார்கள். ஆண்கள் அவ்வாறு ஆக்குவதில்லை.
பெண் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் தக்க காரணத்துடன் விமர்சிக்கப்பட்டாலும் உடனே 'நான் ஒரு பெண் என்பதால் இப்படி விமர்சிக்கிறார்கள்' என்று குண்டைத் தூக்கிப் போட்டு வாயை அடைப்பார்கள். இந்திராவிலிருந்து ஜெயலலிதா வரை இதைக் கையாண்டுள்ளனர்.
அவர்களது நடத்தை, ஒழுக்கம் போன்றவைகளை விமர்சிக்கும் போது இப்படிக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஊழலை விமர்சிக்கும் போது கூட இதைக் கேடயமாகப் பயன்படுத்தினால் இதற்காகவே அவர்கள் அப்பதவியில் இருக்கத் தகுதியற்றுப் போகிறார்கள்.
பெண்மை ஊழலைக் காக்கும் கேடயமல்ல என்று பொங்கி எழ வேண்டிய பெண் அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பெண் என்பதற்காக இந்தப் பாடுபடுத்தலாமா?' என்று பல சந்தர்ப்பங்களில் முழங்கியுள்ளனர்.
இதன் காரணமாகத் தான் பெண் ஆட்சியாளர்கள் செய்யும் சிறிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளை விமர்சனம் செய்ய மீடியாக்கள் தயங்குகின்றன. ஊழலும், அக்கிரமமும் எல்லை மீறிப்போகும் போது தான் பெண் ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.
எவ்வித விமர்சனங்களும் தங்கள் மீது வராமல் பெண்மையைக் கேடயமாகப் பயன்படுத்துவது அப்பெண்ணின் சுயநலத்துக்குப் பயன்படலாம். மக்களுக்கோ, மற்ற பெண்களுக்கோ, நாட்டுக்கோ இது மாபெரும் தீமையாக முடியும்.
இது இரண்டாவது காரணம்.
வாரிசுகள் திணிப்பு.
பொதுவாக ஆண் தலைவர்கள் தமது வாரிசுகளைத் திடீரென்று தினிக்க மாட்டார்கள். படிப்படியாக நுழைத்து தங்கள் வாரிசுகளும் தகுதியானவர்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தினிப்பார்கள்.
பெண்களோ எந்த விதமான தர்மத்தையும், நியாயத்தையும் கடைப்பிடிக்காமல் தமது வாரிசுகளைத் தினிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோவும், நுஸ்ரத் புட்டோவும் இதற்குச் சரியான உதாரணங்களாக உள்ளனர்.
இது மூன்றாவது காரணம்.
சர்வாதிகாரம்
வாய்ப்புக் கிடைக்காத வரை பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள் தான். ஆனால் ஆட்சித் தலைமை கிடைத்து விட்டால் அவர்கள் சர்வாதிகாரம் செய்வதையும் அதிக அளவில் காணலாம்.
இந்திரா, சந்திரிகா, ஜெயலலிதா என்று ஏராளமான உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.
பத்து ஆண் ஆட்சியாளர்களில் ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பது அரிதானது.
பத்து பெண் ஆட்சியாளர்களில் ஒரு ஜனநாயகவாதி இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
இப்படி ஆண்களை மிஞ்சும் அளவுக்கு 'ஆண் தன'த்தை வெளிப்படுத்தினால் தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற மனோ நிலைக்கு ஆளாகி இப்படி நடந்து கொள்கின்றனர்.
இது நான்காவது காரணம்.
இரவு பகல் எந்நேரமும் முழுமையாக ஈடுபட வேண்டிய பணி தான் தலைமைப் பதவி என்பது. இத்தகைய கடினமான ஒரு பணியைப் பெண்கள் சுமக்காமல் இருந்தால் பெண் குலத்துக்கு கேடு ஏதும் ஏற்படாது.
அது போக மாதவிடாய்க் காலம், மாதவிடாய் அடியோடு நிற்கும் வயது ஆகியவை அவர்களைத் தாறுமாறாகச் சிந்திக்க வைக்கும். இந்த நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு நாட்டையே பாதித்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்ணுரிமைக்குச் சம்மந்தமில்லை.
பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதும் அல்ல. 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் 50 கோடிப் பெண்கள் உள்ளனர் என்றால் நாட்டின் அதிபர் பதவி ஒருவருக்குத் தான் கிடைக்கும்.
50 கோடிப் பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ, கணிசமான பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ இருந்தால் தான் அது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதாக இருக்க முடியும்.
கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, மணவாழ்வைத் தேர்வு செய்யும் உரிமை போன்றவை அனைத்துப் பெண்களின் அல்லது கனிசமான பெண்களின் உரிமை பற்றியதாகும். ஆட்சித் தலைமை என்பது பெண்ணுரிமையில் சேராது.
பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா?
பெண்கள் தலைமையேற்றால் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்றும், பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவும் கட்டுக் கதையாகும்.
பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தான் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். பொது இடங்களில் பெண்ணுக்கு இடையூறு செய்தால் இவளுக்கு இது வேண்டும்' என்பது தான் பெண்களின் விமர்சனமாக உள்ளது. ஆண்கள் தான் தட்டிக் கேட்கின்றனர்.
பேருந்தில் பயணம் செய்யும் போது உட்கார இடம் இல்லாத கிழவியாக இருந்தாலும் இன்னொரு பெண் இடம் கொடுப்பது அரிதாகும். ஆண்கள் பெரும்பாலும் தமது இருக்கையைக் கொடுத்து விடுவார்கள்.
அலங்காரம் செய்து கொண்டவளைக் கேவலமாக விமர்சிப்பதும், பெண்களின் நடத்தை பற்றி அவதூறு பேசுவதும் பெண்கள் தான்.
தன்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் வரதட்சணை கேட்பதிலும் பெண்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
முஸ்லிம் ஜமாஅத்துகளில் குடும்பப் பிரச்சினை பற்றிய வழக்கின் போது அனைவரும் பெண்கள் சார்பாக பேசி வருவதைக் காண்கிறோம். இதன் காரணமாகத் தான் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் அதிகப் பாதுகாப்புடன் உள்ளனர். எனவே நாட்டிற்கு, ஜமாஅத்திற்கு பெண்கள் தலைமை தாங்கினால் பெண்களுக்கு நன்மை என்பதெல்லாம் நூறு சதவிகிதம் கட்டுக் கதையாகும்.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.
கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.
ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது.
புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.
இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது.
பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.
எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.
பேருந்துகளில் கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப்படுகின்றன.
ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.
சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?
ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.
ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 900, 873, 5238
பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 865, 899
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
நூல் : புகாரி 578, 372, 867, 872
.'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 707, 862, 708, 709, 710, 868
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று 'பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்' என்று தெரிவித்தார்கள்.
நூல் : புகாரி 866, 569, 862, 864
தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.
நூல் : புகாரி 875, 837, 866
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.
மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.
அடிமைப் பெண்கள்
திருமணம் செய்யாமல் அடிமைப் பெண்களுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
(பார்க்க : திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30)
இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும்.
திருமணம் செய்யாமலேயே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என்பது விபச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது போல் உள்ளது. விபச்சாரத்திற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் கருதலாம்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும், அடிமைப் பெண்களை அனுபவிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் தென்படாததால் அவர்களுக்கு இவ்வாறு ஐயம் ஏற்படுவது இயற்கையே! ஆயினும் இது பற்றிய உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் இந்தச் சட்டம் அறிவுப் பூர்வமானது என்பதை அவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப் பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இருக்கவில்லை.
அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.
அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
மேலும் சில கொடூர மனம் படைத்த மன்னர்கள் வெற்றி கொள்ளப்பட்ட நாட்டில் நுழைந்து போரில் சம்மந்தப்படாத அழகிய பெண்களையும் பிடித்து வந்து அடிமைகளாக்கிக் கொண்டதுமுண்டு. அடிமைகள் இப்படித் தான் உருவானார்கள்.
மொத்த உலகமும் இதை அங்கீகாரம் செய்திருந்த காலத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலானார்கள். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே உலகெங்கும் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை விருப்பம் போல் அனுபவிப்பதும் வழக்கத்தில் இருந்தது என்பதை இந்த விபரங்களிலிருந்து அறியலாம்.
உலகெங்கும் நடந்து வந்த அடிமை வியாபாரத்தை இஸ்லாம் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்ததேயன்றி அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழிகளைக் காட்டியதேயன்றி இஸ்லாமே அடிமைகளை உருவாக்கவில்லை.
எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் இஸ்லாமும் அதை ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு அளித்தால் அரசை நடத்த முடியாது. நஷ்ட ஈடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.
ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும். அந்த எதிரிகள் மீண்டும் படை திரட்டி வரக்கூடிய அபாயமும் உண்டு.
உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.
'நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது; அவருக்குத் தான் இழப்பு ஏற்படும்' என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை இஸ்லாம் செய்தது.
ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:177, 4:92, 5:89, 9:60, 58:3, 90:13)
ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் இஸ்லாம் ஏற்பாடு செய்தது. உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.
(பார்க்க : திருக்குர்ஆன் 24:33)
யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க இஸ்லாம் தூண்டியது.
(பார்க்க : புகாரி 456, 1493, 2155, 2156, 2168, 2169, 2561, 2562, 2563, 2564, 2565, 2578, 2717, 2726, 2729, 2735, 5097, 5279, 5284, 5430, 6717, 6751, 6752, 6754, 6757, 6759)
இத்தகைய சட்டங்கள் மூலம் தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது.
அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.
அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை இருக்கும். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான்.
இந்த நிலையில் அப்பெண்ணைத் தகாத முறையில் அடைய பலரும் முயற்சிப்பார்கள். இதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் அவளுடன் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.
இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.
அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் இல்லாவிட்டாலும் கணவன் அந்தஸ்தில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.
அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவளுக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.
ஒரு முதலாளியிடம் ஓர் இளம் பெண் வேலைக்குச் சேர்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலைக்காரியை அந்த முதலாளி விலை கொடுத்து வாங்கி விடவில்லை. அந்த முதலாளியை விட்டால் அவளுக்கு வேறு கதியே இல்லை என்ற நிலைமையும் இல்லை. அவளுக்காகப் பரிந்து பேசவும் அவளுக்கு நேரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் அவளுக்கென்று சிலர் உள்ளனர்.
இந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமும், பாதுகாப்பும் இருந்தும் கூட எத்தனையோ வேலைக்காரப் பெண்கள் முதலாளியின் காமப் பசிக்கு இரையாகி விடுகின்றனர். விரும்பியும் விரும்பாமலும் இப்படி இறையாவோர் ஏராளம்!
சுதந்திரமும், உறவினர்களும் உள்ள வேலைக்காரிக்கே இந்தக் கதி என்றால் இந்த வேலைக்காரிக்கு இருப்பது போன்ற சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லாத அடிமைப் பெண்ணின் கதி என்ன என்பதை எளிதில் உணரலாம். இத்தகைய நிலையில் அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்கள் அனுபவிப்பதற்குத் தடை விதித்தால் அது அர்த்தமற்ற தடையாகவே அமையும்.
அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.
இவ்வாறு தடை விதிக்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
இஸ்லாம் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கடுமையான தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்குகின்றது. இந்தத் தண்டனைகளுக்கு அஞ்சி மக்கள் குற்றங்களிலிருந்து விலகிக் கொள்வார்கள்.
அடிமைப் பெண்களை அனுபவிக்கக் கூடாது என்று சட்டமியற்றி, அக்குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு என்று அறிவித்தால் கூட இதைத் தடுக்க முடியாது.
ஏனெனில் அடிமைப் பெண்கள் எஜமானர்களின் வீட்டிலேயே எப்போதும் இருப்பதால் அவர்களின் தனிமையைச் சந்தேகப்படவும் முடியாது. அப்படி நடந்து விட்டால் அதற்கு சாட்சிகளும் இருக்க மாட்டார்கள்.
நடப்பதையும் தடுக்க முடியாது. நடந்து விட்டால் நிரூபிக்கவும் முடியாது என்ற நிலையில் தான் அடிமைப் பெண்கள் விஷயத்தில் இந்த அனுமதியை இஸ்லாம் வழங்கியது
வேலைக்காரிகளின் கற்புக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை தானே உள்ளது. எனவே அவர்களையும் அனுபவிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.
வேலைக்காரிக்கும் அடிமைப் பெண்ணுக்குமிடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு வேலைக்காரி, வேலைக்காரியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குறிப்பிட்ட ஒரு முதலாளியிடம் தான் வேலை செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதலாளி ஒரு மாதிரியாக நடக்கக் கூடியவர் என்று உணர்ந்தால் அந்த வேலையை அவள் உதறி விட முடியும். சுருங்கச் சொன்னால் வேலைக்காரி அந்த நிலையை அவளே தேர்ந்தெடுக்கிறாள். அடிமைப் பெண்கள் விருப்பத்துடன் அவர்களாகவே அடிமையாவதில்லை.
ஆக வேலைக்காரி தன் கற்பைக் காத்துக் கொள்ள மனப்பூர்வமாக விரும்பினால், கற்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அடிமைப் பெண் அப்படியெல்லாம் தவிர்த்துக் கொள்ள முடியாது. எனவே வேலைக்காரியுடன் அடிமைகளை ஒப்பிடக் கூடாது.
உடலுறவுத் தேவை என்பது ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் பொதுவானது. பெண்களின் பால் ஆண்களுக்கு நாட்டமிருப்பது போலவே, ஆண்களின் பால் பெண்களுக்கும் நாட்டம் உண்டு. இரு சாராருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவையே!
அடிமைப் பெண் என்பவள் கணவனை விட்டுப் பிரிக்கப்பட்டோ, அல்லது கன்னியாகவோ பிடித்து வரப்படுகிறாள். அவள் பிடித்து வரப்பட்ட நாட்டில் அவளுக்கு மணம் செய்து வைக்க யாருமே இல்லை. யாராவது முன் வந்தாலும் அவளது எஜமானன் அவளை விலை கொடுத்து வாங்கியிருப்பதால் அதற்கு உடன்பட மாட்டான். திருமணம் செய்து வைத்தால் அவளிடமிருந்து முழு அளவில் வேலை வாங்க முடியாது என்பதால் அவன் அதை நிராகரிக்கவே செய்வான்.
அவன் நிராகரிக்க மாட்டான் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொருவனின் முழு நேர அடிமையாக உள்ள ஒருத்தியை மணக்க யாருமே முன் வரமாட்டார்கள்.
அவளது உடல் தேவை முழுமையாக மறுக்கப்படும் நிலை; இந்த நிலையில் அவள் என்ன செய்வாள்? கள்ளத் தனமாக மற்றவரை நாடுவாள். அல்லது தனது எஜமானனையே சபலப்படுத்தி வெற்றி காண்பாள்.
தன்னைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சர்வ சாதாரணமாக அவள் குற்றம் புரியத் துணிந்து விடுவாள். கள்ள உறவு வைத்துக் கொள்வதைத் தடுக்கவும், அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தவும் அவளது எஜமானனுக்கு மட்டும் அதை அனுமதிப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. எப்படித் தடுத்தாலும் இது நடந்தே தீரும் விஷயமாக உள்ளதால் இஸ்லாம் அதை அனுமதிக்கின்றது.
இது மூன்றாவது காரணம்.
இது போன்ற நியாயமான காரணங்களால் அடிமைப் பெண்கள் விஷயத்தில் அன்றைய காலத்தில் பொருத்தமான சட்டத்தையே இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.
09.07.2009. 2:03 AM
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode