இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
நூலின் பெயர்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.
ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்
- இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
- மூஸா நபியும் அற்புதங்களும்
- ஈஸா நபியும் அற்புதங்களும்
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
- மூஸா நபியின் காலத்தில்...
- சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
- நபிகள் நாயகத்துக்கு சூனியம்
- பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
- எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
- இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
- இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
- சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
- ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
- முரண்பட்ட அறிவிப்புக்கள்
- 113, 114வது அத்தியாயங்கள்
- முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
- தவறான மொழிபெயர்ப்பு
- சரியான மொழி பெயர்ப்பு
- ஹாரூத் மாரூத்
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை, அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.
ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.
இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான அந்த முடிவாகும்.
சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்
. இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.
உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.
கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை - மேஜிக் எனக் கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது. ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் - சூனியம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை.
திருக்குர்ஆன் 51:52
ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.
இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.
மூஸா நபியும் அற்புதங்களும்
மூஸா நபியவர்களுக்கு மகத்தான அற்புதங்கள் சிலவற்றை இறைவன் வழங்கி இருந்தான். அந்த அற்புதங்களை ஏற்க மறுத்தவர்கள் அவற்றை ஸிஹ்ர் எனக் கூறியே நிராகரித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 7:107, 108, 109
அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்) என்றனர். உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள் என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:75, 76, 77
நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும் என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்).
திருக்குர்ஆன் 26:31, 32, 33, 34, 35
மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.
திருக்குர்ஆன் 28:36
மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ எனக் கூறினான்.
திருக்குர்ஆன் 51:38, 39
உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்) என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று கவனிப்பீராக!
திருக்குர்ஆன் 27:12, 13, 14
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 40:24
மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் எனும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.
இந்த இடத்தில் சிலர் ஒரு சந்தேகத்தை எழுப்புவார்கள். ஸிஹ்ர் என்ற சொல்லை பித்தலாட்டம் என்ற பொருளில் இறைத் தூதரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன்படுத்தியதாகத் தான் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. ஸிஹ்ர் என்ற சொல்லை இறைவன் தனது சொல்லாகப் பயன்படுத்தவில்லை. இறைத் தூதர்களின் எதிரிகள் பயன்படுத்திய சொல்லை எடுத்துக் காட்டுகிறான். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸிஹ்ர் என்பது உண்மையில்லை என்று எவ்வாறு வாதிடலாம் என்பது தான் அந்தச் சந்தேகம்.
இந்தச் சந்தேகத்திற்கு மேலே நாம் சுட்டிக் காட்டிய 10:77 வசனத்தில் தெளிவான விளக்கம் உள்ளது.
மூஸா நபி கொண்டு வந்த அற்புதத்தை ஸிஹ்ர் எனக் கூறி அம்மக்கள் மறுத்த போது மூஸா நபியர்கள் பின்வருமாறு எதிர்க் கேள்வி எழுப்பியதாக 10:77 வசனம் கூறுகிறது.
உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? இவ்வாறு மூஸா நபியவர்கள் உண்மைக்கு எதிர்ப் பதமாக ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உண்மையை நீங்கள் எப்படி (ஸிஹ்ர்) பித்தலாட்டம் என்று கூறலாம் என்று இறைத் தூதர் கேள்வி எழுப்பியதால் ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் வித்தை தான்; உண்மையானது அல்ல என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
ஈஸா நபியும் அற்புதங்களும்
மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் செய்கிறார் (தந்திரம் செய்கிறார்) எனக் கூறி நிராகரித்து விட்டனர்.
மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களி டம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடை யவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப் படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 5:110
இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன் என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது தெளிவான சூனியம் எனக் கூறினர்.
திருக்குர்ஆன் 61:6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய உண்மையான அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) எனக் கூறினார்கள்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 6:7
மக்களை எச்சரிப்பீராக என்றும், நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர் என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 10:2
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
திருக்குர்ஆன் 21:3
நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே என்று கூறுகின்றனர். அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம் எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:48
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனி தராகவே இருக்கிறார் எனக் கூறுகின்றனர். இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான் எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 34:43
சான்றை அவர்கள் கண்ட போதும் கேலி செய்கின்றனர். இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 37:14, 15
அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர், சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
திருக்குர்ஆன் 38:4
அவர்களிடம் உண்மை வந்த போது இது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள் எனக் கூறினர்.
திருக்குர்ஆன் 43:30
இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் இது தெளிவான சூனியம் என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 46:7
அவர்கள் சான்றைக் கண்டால் இது தொடர்ந்து நடக்கும் சூனியம் எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.
திருக்குர்ஆன் 54:2
சூனியம் என்று பொருள் படும் ஸிஹ்ர் என்ற சொல் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் தெளிவான முடிவுக்கு வந்து விடலாம்.
மூஸா நபி, ஈஸா நபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட நபிமார்கள் இறைவனின் அனுமதியுடன் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய போதெல்லாம் அவர்களின் எதிரிகள் இது சூனியம் என்று வாதிட்டுத் தான் அவர்களை நம்ப மறுத்தனர் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
சூனியம் என்பது உண்மை அல்ல. அது ஓர் ஏமாற்றும் வித்தை. அந்த வித்தையைத் தான் இவர்கள் செய்து காட்டுகின்றனர் என்று எதிரிகள் விமர்சனம் செய்ததிலிருந்து ஸிஹ்ர் என்றால் என்ன என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
ஸிஹ்ர் என்பது உண்மையாகவே நிகழ்த்தப்படும் அதிசயம் என்றிருக்குமானால், நபிமார்களின் அற்புதத்தைக் குறித்து ஸிஹ்ர் என்று விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தான் என்பதற்கு இந்த வசனங்களும் வலுவான சான்றுகளாகத் திகழ்கின்றன.
மூஸா நபியின் காலத்தில்...
மூஸா நபியவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன் வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை உண்மை என்று ஃபிர்அவ்ன் நம்ப மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தனது நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான். மூஸா நபியவர்கள் அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்து காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
திருக்குர்ஆன் 7:116
அவர்கள் செய்தது சாதாரண சூனியம் அல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் என்ன என்பதையும் தெளிவுபடக் கூறுகிறது. மக்களின் கண்களை மயக்கினார்கள் என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம். மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
திருக்குர்ஆன் 20:66
அவர்கள் செய்தது மகத்தான சூனியமே ஆனாலும் கயிறுகளையும், கைத் தடிகளையும் சீறும் பாம்புகளாக மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பு போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது. மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.
உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)
திருக்குர்ஆன் 20:69
இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரன் செய்யும் சூழ்ச்சி தான் என்ற சொற்றொடரிலிருந்து சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் அவனைத் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம் என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கு சூனியம்
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களை தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொரு வர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார் என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான் களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னி டம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்தி விட்டீர் களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3268
தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(புகாரி 5765)
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத் அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்த பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.
தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ - இறை வேதம் - சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும்.
ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட காலம், எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்ட தாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான்.
இது இறைவேதமாக இருக்காது என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.
இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் பண்டிதர்களும் பிரமிப்புடன் பார்க்கும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு எழுத்தறிவை வழங்கவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
எழுத்தறிவு என்பது பெரும் பாக்கியமாக இருந்தும், (68:1, 96:4) அந்த பாக்கியத்தை வேண்டுமென்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன் இறை வேதம் என்பதில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம் என்று மேற்கண்ட வசனத்தில் அறிவிக்கிறான். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக குர்ஆனை வழங்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தான் தவிர்த்ததாக இறைவன் அறிவிக்கிறான்.
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். திருக்குர்ஆன் 17:106 இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
திருக்குர்ஆன் 25:32
சிறிது சிறிதாக அருளினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு சிறிது சிறிதாக அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான். இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் எனவும் இறைவன் பிரகடனம் செய்கிறான். (பார்க்க திருக்குர்ஆன் 15:9) இந்தக் குர்ஆனில் கோனலோ, குறைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்றெல்லாம் கூறி திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையை நிலை நாட்டுகிறான்.
(பார்க்க திருக்குர்ஆன் 18:1, 39:28, 41:42, 4:82)
திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்.
குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.
ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதிவிலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது? என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் தம்மைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள்.
எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத்தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத்தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
திருக்குர்ஆன் 17:94
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர்
திருக்குர்ஆன் 36:15
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
திருக்குர்ஆன் 26:186
நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக! (என்றும் கூறினர்)
திருக்குர்ஆன் 26:154
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:7
இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 23:33
இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர்.
திருக்குர்ஆன் 23:47
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
திருக்குர்ஆன் 21:3
மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள். மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான். தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான். மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது. இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.
(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
திருக்குர்ஆன் 3:184
(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
திருக்குர்ஆன் 7:101
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
திருக்குர்ஆன் 35:25
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம்.
திருக்குர்ஆன் 10:74
உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறை யினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.
திருக்குர்ஆன் 10:13
அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 40:22
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
திருக்குர்ஆன் 9:70
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 64:6
உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
திருக்குர்ஆன் 40:50
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம்.
திருக்குர்ஆன் 57:25
இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.
தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத்தூதர் தன்னை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத்தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்? நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை.
அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத்தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை
. சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 26:153 நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 26:185
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
திருக்குர்ஆன் 17:101
மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்று கிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
திருக்குர்ஆன் 17:47
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்று கிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:8
நபிகள் நாயகம் சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன. இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம். அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.
இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான். ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான்.
சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள்.
இது ஏற்க முடியாததாகும். பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.
திருக்குர்ஆன் 25:9
உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டு கிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
திருக்குர்ஆன் 17:48
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன? அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர்.
திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள் என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம்.
ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது.
நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர். குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி இது என் இறைவனிடமிருந்து வந்தது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொருத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.
எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது.
ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை.
குர்ஆனுடன் மோதும் போது இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.
ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும்.
இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான். புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களை இங்கே நாம் உதாரணமாகக் குறிப்பிட்டால் இதில் அதிகத் தெளிவு கிடைக்கும்.
ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம். இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
பத்து தடவை பாலருந்தினால் தான் தாய் பிள்ளை எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.
ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும். எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம் என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?
குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம் என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?
இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும்.
இது போல் சுலைமான் நபியைப் பற்றி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்ற ஒரு செய்தியையும் உதாரணமாகக் கூறலாம்.
இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கெண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.
இந்தச் செய்தி புகாரி 5242 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம். இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறைகளில் எத்தனை குழந்தைகள் உண்டாகும்? ஒரு கருவறையில் குழந்தை உருவாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
திருக்குர்ஆன் 31:34
தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயத்தில் எந்த இறைத்தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா? என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும்.
இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும். இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விசயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
ஜக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. அல்லாஹ்விடம் அவர்கள் செய்து வந்த பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு ஒரு குழந்தையை அளிப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். தனது மனைவி கருவுற்று விட்டார் என்றால் அதை உடனடியாக அறிந்து கொள்ள அவர்கள் ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். மூன்று நாட்கள் உனக்குப் பேச முடியாமல் போவது தான் அடையாளம் என்று இறைவன் கூறினான்.
ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன் என்று அவர் கூறினார். அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார். என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு! என்று அவர் கேட்டார். குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம் என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 19:7, 8, 9, 10)
தமது மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று குர்ஆன் கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது.
அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை.
ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள்.
அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விசயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.
அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள். மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.
எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம். இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 5242
எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 3424
தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 6639, 6720
அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி 7469
ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.
இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60, 70, 90, 100 என்று முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.
நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்று காரணம் கூறி இதை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும்.
திருக்குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.
மற்றொரு ஹதீஸையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்டார். உடனே வானவர் இறைவனிடம் சென்று மரணத்தை விரும்பாத அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாயே? என்று முறையிட்டார். அதற்கு இறைவன் நீ மீண்டும் அவரிடம் செல்! காளை மாட்டின் முதுகின் மேல் அவரது கையை வைக்கச் சொல்! அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அளவில் வாழ் நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு! என்று சொல்லியனுப்பினான். அவர் வந்து மூஸா நபியிடம் இதைத் தெரிவித்தார். அதற்கு மூஸா நபியவர்கள் இறைவா! அதன் பின்னர் என்ன? என்று கேட்டார். அதன் பின்னர் மரணம் தான் என்று இறைவன் கூறினான். அப்படியானால் இப்போதே மரணிக்க நான் தயார் என்று மூஸா (அலை) கூறினார்.
இது அபூஹுரைரா (ரலி)யின் கூற்றாகவும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும் புகாரி 3407 வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்த ஹதீஸைப் பொருத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது.
ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம். வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 16:49, 50
அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
திருக்குர்ஆன் 21:26,27
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 66:6
இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.
மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்கு செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள். மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப்பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.
இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்கு தம்மை தயார் படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள். மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள். அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்? அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்தால் இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன் என்று இருள் களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
திருக்குர்ஆன் 21:86,87
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்
திருக்குர்ஆன் 68:49
மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விசயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொருத்த வரை அவனது கௌரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும். இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸையும் இறுதியாக நினைவுபடுத்துகிறோம்.
ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம்.
நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இதை சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதனடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.
அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப்படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.
இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும். அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம். சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.
முரண்பட்ட அறிவிப்புக்கள்
எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது.
அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நஸாயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.
நஸாயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான் என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புகளில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.
இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை மட்டும் தான் ஏற்கக் கூடாது என்று தக்க காரணத்துடன் கூறுகிறோம்.
இவ்வாறு இல்லாத பல்லாயிரம் ஹதீஸ்களை நாம் ஏற்கிறோம். ஏற்கத் தான் வேண்டும் என்கிறோம்.
குர்ஆன் மட்டும் போதும், நபிவழி அவசியமில்லை எனக் கூறுவோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பதை திர்மிதீ தமிழாக்கத்தின் முன்னுரையிலும், அல்முபீன் மாத இதழில் தொடர் கட்டுரையிலும் தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறோம்.
113, 114வது அத்தியாயங்கள்
திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.
சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.
மேலும் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் தான் அருளப்பட்டது என்பதற்குக் கூட ஆதாரமில்லை.
இதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது.
அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை என்று கூறுகிறார்.
நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை என்று கூறுகிறார்.
எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர். முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான்.
எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை. ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 2269, 1142)
நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.
முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர்.
மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள். எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 20:26, 27)
நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அபூதாவூத் 651
தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல்குர்ஆன் 2:102)
ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான். ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள். கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.
ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.
அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.
ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும். உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார் என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும்.
இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.
இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன்.
இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான். 2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
சூனியம் என்பது தந்திரமான ஏமாற்று வித்தையாக இல்லாமல் உண்மையாக நிகழ்த்தப்படும் அதிசயமாக இருந்தால் என்ன நிகழ வேண்டும்? சூனியம் வைக்கிறேன் என்று ஏமாற்றும் பேர்வழிகள் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் நாத்திகர்கள் மற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு எதிராக சூனியம் செய்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அப்படி அவர்களால் செய்ய முடிவதில்லை. ஒரு சில தந்திரங்களைக் கற்று வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். யார் அவர்களின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்புகிறார்களோ, அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் செய்வது பித்தலாட்டம் தான் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தவறான மொழிபெயர்ப்பு
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி, அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையும் தராததையுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன் 2: 102)
திருக்குர்ஆனின் 2:102வது வசனத்திற்கு மேற்கண்டவாறு தான் பெரும்பாலான விளக்கவுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் பொருள் காணப்படுகின்றது. வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்தக் கருத்தைத் தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் தருகின்றன. அரபு இலக்கண அடிப்படையில் மேற்கண்டவாறு பொருள் கொள்ள இடமிருந்தாலும் வேறு பல காரணங்களால் இந்த மொழி பெயர்ப்பை ஏற்க முடியவில்லை. அதே அரபு இலக்கண அடிப்படையில் மற்றொரு விதமாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கின்றது. அந்தப் பொருளே சரியானதாகவும் தோன்றுகின்றது.
சரியான மொழி பெயர்ப்பு
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல்குர்ஆன் 2:102)
முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழி பெயர்ப்பு எந்த வகையில் தவறானது என்பதை முதலில் காண்போம்.
ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழிபெயர்ப்பு பொருள் தருகின்றது. அதாவது இந்த சூனியத்தை இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாக மேற்கண்ட பொருள் விளக்குகின்றது.
மலக்குகள் எப்படி இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.
மனித சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள் பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன் மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன். அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்! என்றானாம்.
மலக்குகள் ஹாரூத், மாரூத் என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவரும் பூமிக்கு வந்து மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள் தான் சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்படி போகிறது கதை!
இந்தக் கதையும், இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும் போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.
மனித சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்தவுடனேயே மலக்குகள் தங்கள் ஆட்சேபணையை வெளியிட்டார்கள். அப்போது மனிதர்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள் என்றெல்லாம் குற்றங்களை அடுக்கினார்கள்.
(பார்க்க அல்குர்ஆன் 2:30)
ஆதம் (அலை) அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று கூறி தங்கள் தவறுக்கு மலக்குகள் வருந்தி விட்டனர். (பார்க்க அல்குர்ஆன் 2:34)
அது மட்டுமின்றி மனிதனுக்காக அவர்கள் ஸஜ்தாவும் செய்து தங்கள் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டனர்.
(பார்க்க அல்குர்ஆன் 2:34)
மனிதனின் தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள். இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்? முன்பு ஆட்சேபணை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபணை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும். ஷைத்தான் அவர்கனை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபணைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66:6)
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்
. (அல்குர்ஆன் 21 : 26, 27)
மேற்கண்ட வசனங்களில் மலக்குகளின் பண்புகளும் இயல்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன.
இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறைவன் செயல்பாட்டில் குறை கண்டு ஆட்சேபணை செய்திருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?
மனிதனை இறைவன் படைக்க எண்ணிய போது, மலக்குகள் எப்படி ஆட்சேபணை செய்திருக்க முடியும்? என்று இந்த இடத்தில் கேள்வி எழலாம்.
அந்த சமயத்தில் வானவர்கள் செய்த ஆட்சேபணைக்கும், இந்தக் கதையில் கூறப்படும் ஆட்சேபணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. மனிதனைப் படைப்பதற்கு முன் இறைவன் மலக்குகளிடம் கருத்துக் கேட்டான். இறைவன் அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக் கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப்பிரசங்கித்தனம் என்றோ கூற முடியாது.
இந்தக் கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப் படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.
இறைவனையும், மலக்குகளையும் குறைத்து மதிப்பிடக்கூடிய மேற்கண்ட அர்த்தத்தை ஏற்க முடியாது.
ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும் என்று மேற்கண்ட அர்த்தமே ஒப்புக் கொள்கிறது. இத்தகைய இறை மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது. இறைவனின் அந்தஸ்தையும் மலக்குகளின் அந்தஸ்தையும் குறைக்காத வகையிலேயே மேற்கண்ட வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பொருள் கொள்ள ஏற்ற வகையிலும் மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது. அதை விபரமாகக் காண்போம்.
நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும் பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இந்த சூனியத்தை நியாயப்படுத்த இரண்டு பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கலை தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதன்று; மாறாக, சுலைமான் நபி அவர்கள் வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும் இதன் மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல என்பது அவர்களின் முதல் வாதம். இந்தக் கலையை ஜிப்ரீல் மிக்காயீல் ஆகிய வானவர்கள் தாம் சுலைமான் நபியிடம் கொண்டு வந்தனர் என்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெற்ற செயல் தான் என்பது அவர்களின் மற்றொரு வாதம்.
பொய்யான இந்த இரண்டு வாதங்களும் இந்த வசனத்தில் மறுக்கப்படுகின்றன.
எப்படி என்பதைப் பார்ப்போம்.
வத்தபவூ மாதத்லுஷ்ஷயாதீனு அலாமுல்கி சலைமான்
சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்த (சூனிய)தையே இவர்கள் பின்பற்றுகிறார்கள்.
வமா கபர சுலைமானு சுலைமான்
நிராகரிப்பவராக இருந்ததில்லை.
வலாகின்னஷ்ஷயாதீன கபரூ யுஅல்லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர
இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்களாக இருந்தனர். இந்த மூன்று வாக்கியங்களிலும் ஆழமாக சிந்தனையைச் செலுத்தும் போது ஸிஹ்ர் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும்.
இது போன்ற இறை மறுப்பை ஸுலைமான் நபி செய்ய மாட்டார். ஷைத்தான்கள் தாம் இதைச் செய்தனர் என்ற உண்மை தெரிகின்றது. சூனியத்துக்கும் சுலைமான் நபிக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறது.
இந்த மூன்று வாக்கியங்களுக்கும் பொருள் கொள்வதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. கருத்து வேறுபாட்டுக்கு இடமுமில்லை. வமா உன்ஸில அலல்மலகைனி பிபாபில இந்த வாக்கியத்திற்கு பொருள் கொள்வதில் தான் வேறுபாடு தோன்றுகிறது.
வமா உன்ஸில என்பதில் மா என்ற சொல் இடம் பெறுகின்றது.
அரபு இலக்கணத்தில் இது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
இல்லை என்பது இதன் முதலாவது அர்த்தம்.
மா என்ற சொல்லுடன் வரும் விளைச்சொல் தொழிற்பெயராக மாறுதலடையும் என்பது மற்றொரு அர்த்தம். இதை விபரமாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்கள் காண்போம்.
கரஅ என்றால் ஓதினான் என்பது பொருள். இதன் துவக்கத்தில் மா என்ற சொல் இணைந்து மா கரஅ என்று ஆகும் போது ஓதவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஓதுதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஓதினான் என்பதுடன் மா சேர்ந்ததால் வினைச்சொல் என்ற நிலைமாறி ஓதுதல் எனும தொழிற்பெயராக ஆகின்றது. மா வுக்கு இல்லை என்று பொருள் கொண்டால் ஓதினான் என்பது ஓதவில்லை என்று ஆகும்.
இரண்டு விதமாகவும் மா எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு மேற்கண்ட வசனத்தின் முற்பகுதியையே மற்றொரு உதாரணமாகக் கொள்ளலாம். மா தத்லுஷ்ஷயாதீனு மா கபர சுலைமானு ஆகிய இரு இடங்களில் மா இடம் பெறுகின்றது. தத்லு என்றால் ஓதுவார்கள் என்பது பொருள்.
மாதத்லூ என்றால் ஓதியவை என்று ஆகின்றது.
இந்த இடத்தில் மா என்பது பின்வரும் வினைச் சொல்லை தொழிற்பெயராக மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கபர என்றால் நிராகரித்தார் என்பது பொருள். மா கபர என்று கூறும் போது நிராகரிக்கவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
இங்கே உடன்பாட்டு வினை; எதிர்மறை வினையாக மாறுகின்றது. மேற்கண்ட ஒரு வசனத்திலேயே மா என்பது இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் வமா உன்ஸில அலல் மலகைனி என்பதற்கு அந்த இரண்டு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்பட்டிருக்கவில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.
இரண்டு வானவர்களுக்கு அருளப்பட்டதையும் (அவர்கள் பின்பற்றினார்கள்) என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்த இரண்டாவது அர்த்தத்தையே பெரும்பாலான விரிவுரையாளர்கள் செய்திருந்தாலும், இதற்குச் சான்றாக பொய்யான கதை ஒன்றைப் புனைந்திருந்தாலும் நாம் முன்னர் சொன்ன காரணங்களால் இந்த அர்த்தம் பொருத்தமற்றதாகின்றது. மற்றொரு காரணத்தினாலும் இந்த அர்த்தம் பொருந்தாமல் போகின்றது. ஷைத்தான்கள் இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனத்தின் முற்பகுதி காணப்படுகின்றது. ஷைத்தான்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கும் போது, ஷைத்தான்களிடமிருந்து அவர்கள் அதைக் கற்றிருக்கும் போது அவர்களுக்கு முன்பே தெரிந்த ஒரு கலையை மலக்குகள் வந்த கற்றுக் கொடுத்தார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தவில்லை.
இந்தக் காரணத்தினாலும் இந்த இரண்டாவது அர்த்தம் பொருந்தி வரவில்லை. அந்த இரண்டு மலக்குகள் மீது இந்தக் கலை அருளப்படவில்லை என்று பொருள் கொள்ளும் போது யூதர்கள் இதற்கு மார்க்க அங்கீகாரம் அளிக்க முயன்றது முறியடிக்கப்படுகின்றது. மலக்குகளின் கண்ணியம் காக்கப்படுகின்றது. முன்னுள்ள வாசகத்துடனும் இது ஒத்துப் போகின்றது. வமாகபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை வமா அன்ஸில அலல் மல கைனி - அந்த இரண்டு மலக்குகள் மீதும் அது அருளப்படவில்லை என்று அடுத்தடுத்து வருவது பொருத்தமாகவும் இருக்கிறது.
இரண்டு வானவர்கள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுவது யாரை? இது அடுத்தபடியாக நாம் அலச வேண்டிய விசயமாகும்.
இங்கே அலா மலகைனி என்று இறைவன் குறிப்பிடாமல் அலல் மலகைனி என்று குறிப்பிடுகின்றான். மலகைனி என்பதற்கும் அல் மலகைனி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மலகைனி என்றால் இரு வானவர்கள் என்று பொருள். அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்று பொருள். இறைவன் அல்மலகைனி என்று குறிப்பிடுவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வானவர்களையே இங்கே குறிப்பிடுகிறான்.
இந்த வசனத்திற்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? என்று ஆராயும் அவசியம் நமக்கு ஏற்படுகின்றது. இந்த வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றிக் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது.
அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:98)
இந்த வசனத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு மலக்குகள் பற்றி பேசப்படுகின்றது. அந்த இரண்டு மலக்குகளையே இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான் என்பதே சரியானதாகும்.
இது வரை நாம் ஆராய்ந்த வாசகங்கள் வரையிலான பொருள்களைக் காண்போம்.
வத்தபவூ மாதத்தலுஷ் ஷயாதீனு அலாமுல்கி சுலைமான - சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் போதித்ததை அவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.
வமா கபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை.
வலாகின்னஷ் ஷயாதீன கபரூ யுஅல்லிமூனன் னாஸஸ் ஸிஸ்ர - மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் தாம் காபிர்களாக ஆனார்கள்.
வமா உன்ஸில அலல் மலகைனி பிபாபில - பாபிலோனில் (ஜிப்ரீல் மீகாயில்) ஆகிய அந்த இரு வானவர்கள் மீதும் அந்தக் கலை அருளப்படவில்லை.
இப்படிப் பொருள் கொள்ளும் போது, சூனியக் கலைக்கும் சுலைமான் நபிக்கும் சம்பந்தமில்லாதது போல், ஜிப்ரீல், மீகாயீல் போன்ற வானவர்களுக்கும் சூனியக் கலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெளிவுபடுத்தப்படுகின்றது.
அரபு இலக்கண அடிப்படையில் இவ்வாறு பொருள் கொள்ள இடமிருப்பதாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது வானவர்கள் கண்ணியம் காக்கப்படுவதாலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மா உன்ஸில என்பதற்கு லம்யுன்ஸிலில்லாஹு (அல்லாஹ் இறக்கியருளவில்லை) என்று விளக்கமளித்திருப்பதாலும் இவ்வாறு பொருள் கொள்வதே சரியானதாகத் தோன்றுகிறது.
ஹாரூத் மாரூத்
2:102 வசனம் சூனியத்தின் மூலம் பெரிதாக ஒன்றையும் செய்ய முடியாது என்பதை அறிந்தோம்.
இவ்வசனத்தை எடுத்துக் காட்டி விட்டதால் அதில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பதையும் இது பற்றி விரிவுரையாளர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாட்டையும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.
பில்லி சூனியத்துடன் அந்த விளக்கம் தொடர்புடையது அல்ல என்றாலும் இவ்வசனம் பற்றி சரியான அறிவைப் பெறுவதற்காக இதை விளக்குகிறோம்.
அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. அதையும் விபரமாக நாம் பார்த்து விடுவோம்.
வத்தபவூ மாதத்லுஷ் ஷயாதீனு - ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா? இதை முதலில் நாம் விளங்க வேண்டும். ஷைத்தான் என்ற பதப்பிரயோகம் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்துவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. அரபியரின் வழக்கத்தில் மட்டுமின்றி, திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூட இது போன்ற பிரயோகங்களை நாம் காணலாம்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
இந்த இடத்தில் ஷைத்தான் என்று கூறப்படுவது அவர்களின் தலைவர்களையே என்பதில் ஐயமில்லை.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
(அல்குர்ஆன் 6:112)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
(அல்குர்ஆன் 114:5, 6)
இந்த வசனங்களிலிருந்து மனிதர்களில் மோசமானவர்களையும் ஷைத்தான்கள் என்று கூறப்படுவதுண்டு என்பதை அறிய முடிகின்றது
. தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4193) நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது.
இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் ஹாரூத் மாரூத் என்கிறான். அதாவது இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான். அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை பத்ல் என்று அரபு இலக்கணம் கூறுகிற்து. ஷைத்தான்கள் என்பதன் விளத்ககமே ஹாரூத், மாரூத் என்பது. யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.
தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள். இந்த இடத்தில் அரபு இலக்கண ரீதியாக எழுகின்ற ஒரு ஐயத்தையும் நாம் அகற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று வகைகள் உள்ளன. இந்த இருமை பெரும்பாலான மொழிகளில் கிடையாது. ஒரு வார்த்தைக்கு விளக்கமாக வரும் மற்றொரு வார்த்தை ஒருமைக்கு ஒருமையாகவும், இருமைக்கு இருமையாகவும், பன்மைக்கு பன்மையாகவும் அமைய வேண்டும்.
இங்கே ஷைத்தான்கள் என்பது பன்மையாகவும், ஹாரூத், மாரூத் இருமையாகவும் - இருவரைக் குறிப்பதாக - உள்ளது. எனவே ஷைத்தான்கள் என்பதற்கு ஹாரூத், மாரூத் என்பது விளக்கமாக முடியாது என்பதே அந்த ஐயம்.
சில சமயங்களில் இருமைக்கு பன்மையும் பன்மைக்கு இருமையும் பயன்படுத்தப்படுவதுண்டு என்று குர்துபி அவர்கள் விடையளிக்கின்றார்கள்.
இதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தைச் சமர்ப்பிக்கிறார்கள். இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு (அல்குர்ஆன் 4:11) இங்கே சகோதரர்கள் என்ற பன்மையான பதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இரண்டு சகோதரர்கள் இருக்கும் போதும் இதுவே சட்டமாகும்.
இதில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.
இது போன்ற அரபு இலக்கியங்களிலும் பரவலாக நாம் காண முடியும். ஆகவே இந்த ஐயமும் அடிபட்டுப் போகின்றது.
ஷைத்தான்கள் என்று அவ்வசனத்தில் கூறப்படுவோர் ஹாரூத், மாரூத் என்போர் தான் என நாம் குறிப்பிடுகிறோம். அதன் இலக்கண விதியையும் விளக்கி உள்ளோம்.
ஷயாதீனு என்பதற்கு, ஹாரூத், மாரூத் என்பது விளக்கம் என்றால் ஹாரூது, மாரூது என்று உகரத்தில் அவ்வார்த்தையின் இறுதி அமைய வேண்டும். ஏனெனில் ஷயாதீனு என்பதன் இறுதி உகரத்தில் அமைந்துள்ளது என்று சிலர் ஆட்சேபிப்பர்.
இவ்வசனத்தில் ஷயாதீன் என்பது இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷஹாதீனு என்று உகரக் குறியீட்டுடன் ஒரு தடவையும், ஷயாதீன என்று அகரக் குறியீட்டுடன் ஒரு தடவையும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ள ஷயாதீன என்பதைக் கவனத்தில் கொண்டு ஹாரூத மாரூத என்பதும் அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் இந்தச் சந்தேகம் நீங்கி விடும்.
மனிதர்களில் உள்ள ஷைத்தான்கள் தான் ஹாரூத், மாரூத் என்றால் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். இதைக் கற்று காபிர்களாகி விடாதீர்கள் என்று எச்சரிக்காமல் எவருக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்று இறைவன் கூற மாட்டான்.மலக்குகளாக இருந்தால் தான் அவ்வாறு கூறியிருக்க முடியும் என்பது சிலரது ஆட்சேபனை.
இந்த காரணத்தைக் கூறி அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது.
காரணம் மோசமான அல்லது சிரமமான ஒரு கலையில் தேர்ந்தவர்கள் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் போது உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவது சகஜமானது தான். எனவே அவர்கள் பயன்படுத்திய இந்த வாசகத்தின் காரணமாக அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது.
மேலும் அவர்கள் மலக்குகளாக இருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களை நாம் மேலே கூறியுள்ளோம். அவற்றுக்கு முரணில்லாத வகையிலே இதை விளங்க வேண்டும். நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களே! சோதனையாக இருக்கிறோம் என்பதை மலக்குகள் தானே கூறியிருக்க முடியும் என்று வேறு சிலர் ஆட்சேபனை செய்யலாம். சோதனையாக என்று தமிழாக்க.ம் செய்யுமிடத்தில் ஃபித்னா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஃபித்னா என்ற பதத்துக்கு சோதனை என்ற அர்த்தம் இருப்பது போலவே குழப்பம் என்ற அர்த்தமும் உண்டு. நாங்கள் குழப்பம் செய்பவர்கள் என்று பொருள் கொண்டால் எவ்வித முரண்பாடும் இன்றி எந்த வசனத்துடனும் மோதுதலின்றி பொருந்திப் போகின்றது. உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் துணை செய்வானாக- ஆமீன்!
14.07.2009. 6:19 AM
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode