பைபிளில் நபிகள் நாயகம்
நூலின் பெயர் : பைபிளில் நபிகள் நாயகம்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பைபிளில் நபிகள் நாயகம்
அறிமுகம்
உலகில் ஏராளமான மதங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பல மதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.
ஆயினும், வாழுகின்ற மதங்களில் முக்கியமான இடத்தை, இஸ்லாமும், கிறிஸ்தவமும் பிடித்திருக்கின்றன. இவ்விரு மதங்களும் நுழையாத நாடுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு முழு உலகையும் இவ்விரு மதங்களும் வசப்படுத்தியுள்ளன.
இவ்விரு மதங்களுக்கிடையே முக்கியமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போலவே, பல ஒற்றுமைகளும் இவ்விரு மதங்களுக்கிடையே நிலவுகின்றன.
இயேசு தந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாமும் வழிமொழிகிறது.
இயேசுவிற்கு முன்னாள் ஏராளமான தீர்க்கதரிசிகள் தோன்றியதாகவும், அவர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டதாகவும், கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இதை இஸ்லாமும் ஒப்புக் கொள்கிறது.
இயேசுவைக் கூட அத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் பரலோக ராஜ்யம் இருக்கிறது. அங்கே, கர்த்தர் நியாயத் தீர்ப்பு வழங்குவார்; எனவே அந்த நாளை அஞ்சி இவ்வுலக வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இஸ்லாம் அத்தகைய நியாயத் தீர்ப்பு நாள் இருப்பதை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.
இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகளில் இவை சில :
அதே நேரத்தில், ஒரு சில அடிப்படைக் கொள்கைகளில் இஸ்லாம் கிரிஸ்தவத்துடன் முரண்படுகிறது. இயேசு கடவுளின் குமாரர் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கை .
கடவுளுக்குப் பெற்றோரும், பிள்ளைகளும், மனைவியரும், ஏனைய உற்றார் உறவினரும் இருக்க முடியாது என்று இஸ்லாம் தெளிவாகப் பரகடனம் செய்து, இயேசு கடவுளின் குமாரர் என்பதை அடியோடு மறுக்கிறது.
ஆபிரகாம், மோசே போன்ற தீர்க்கதரிசிகளில் இயேசுவும் ஒருவர். அவர் கடவுளின் குமாரர் இல்லை என திட்டவட்டமாக இஸ்லாம் தெரிவித்து விடுகிறது.
முதல் மனிதர் ஆதாம் கர்த்தரின் கட்டளையை மீறி, பாவம் செய்தார். எனவே, அவரது வழித்தோன்றல்களாகிய மனிதர்கள் பிறக்கும் பொழுதே பாவிகளாகப் பிறக்கின்றனர் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாகும்.
முதல் மனிதர் ஆதாம் பாவம் செய்ததை இஸ்லாம் ஒப்புக் கொண்டாலும், அந்த பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர முடியாது எனவும் ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது எனவும், எதையும் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தை பிறக்கும் போதே பாவியாகப் பிறக்கிறது என்பது பொருத்தமற்ற வாதம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.
இந்த வகையிலும் கிறிஸ்த்தவத்திலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது.
மேலும், பாவிகளாக மனிதர்கள் பிறப்பதால் அதற்குப் பரிகாரம் காணும் வகையில் ஒரு பலி கொடுத்தாக வேண்டும். இயேசு நாதர் தம்மையே பலி கொடுத்து பாவிகளாகப் பிறக்கும் மனிதர்களின் பாவங்களைச் சுமந்த கொண்டார் எனக் கிறிஸ்தவம் கூறுகிறது.
பைபிளின் கூற்றுப்படி இயேசு தாமாக முன் வந்து பலியாகவில்லை. மாறாக, அவர் விரும்பாத நிலையில் எதிரிகளால் பலியிடப்பட்டார். என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர் என, அங்கலாய்த்திருக்கிறார். எனவே தாமாக முன்வந்து தம்மையே பலியாக்கினார் என்று கூறுவது பைபிளுக்கே முரண் என்று இஸ்லாம் கூறுகிறது.
அத்துடன் ஒரு வாதத்திற்காக இயேசு தாமாக முன்வந்த பலியாகி இருந்தாலும், அவரது பாவத்திற்குத் தான் அது பரிகாரமாக முடியுமே தவிர, மற்றவர்களின் பாவத்திற்கு அது பரிகாரமாக ஆகாது என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு தந்தை கொலை செய்துவிட்டால் அதற்காக அவரது மகனை உலகில் எந்த நாட்டுச் சட்டமும் தண்டிப்பதில்லை. சாதாரண மனிதர்களே சம்பந்தமில்லாதவர்களைத் தண்டிக்கக் கூடாது என்பதை உணர்ந்திருக்கும் போது, கர்த்தராகிய கடவுள் ஒருவர் பாவத்திற்காக மற்றவர் பலியாவதை எப்படி ஒப்புக் கொள்வார்? மனிதர்களை விட கடவுளின் அறிவு குறைவானதா? என்று அறிவுப் பூர்வமான கேள்விகளை இஸ்லாம் எழுப்புகிறது.
இவை இஸ்லாத்திற்கும், கிறித்தவத்திற்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடுகள்.
அது போல், இயேசுவுக்கும், இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் கர்த்தரிடமிருந்து வேதங்கள் அருளப்பட்டதாக கிறித்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டாலும், அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என இஸ்லாம் கூறுகிறது.
ஆயினும், கர்த்தருடைய வார்த்தைகள் முழு அளவுக்கு மாற்றப்பட்டு விட்டன என்று இஸ்லாம் கூறவில்லை. இன்றைக்கு கிறிஸ்தவர்களிடம் வேத நூலாக மதிக்கப்படுகின்ற பைபிளில் கர்த்தருடைய வார்த்தைகள் எஞ்சியிருக்க முடியும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த வார்த்தைகளில் முஸ்லிம்களால் இறுதித் தீர்க்கதரிசியென நம்பப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி எராளமான முன் அறிவிப்புகள் காணப்படுகின்றன.
இயேசுவுக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்தரிசிகளுடைய வேத நூல்களின் தொகுப்பாகக் கருதப்படும் பழைய ஏற்பாட்டிலும் இயேசுவின் போதனைகள் மற்றும் அவரது வரலாற்றுத் தொகுப்பான புதிய ஏற்பாட்டிலும் இத்தகைய முன்னறிவிப்புகளை நாம் காண முடிகிறது.
அந்த முன்னறிவிப்பகளை, கிறிஸ்துவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டி, நபிகள் நாயகத்தை அவர்கள் கர்த்தரின் தூதராக ஒப்புக் கொள்வது பைபிளின் கட்டளை என்பதை உணர்த்தவே இந்நூலை நாம் வெளியிடுகிறோம்.
காய்தல், உவத்தல் இன்றி கிறிஸ்தவர்கள் இந்த முன் அறிவிப்புகளை, தீர்க்க தரிசனங்களை சிந்திப்பார்களானால் அவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள் என்பதே நம் நம்பிக்கை அந்த நம்பிக்கை நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஜைனுல் ஆபிதீன்
பழைய ஏற்பாட்டின் முன்னறிவிப்புகள்.
- மோஸேயைப் போன்றவர் யார்?
பைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.
ஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு,
மற்றொன்று கர்த்தர் மோசேயிடம் சொன்னது.
ஏறக்குறைய ஒரே விதமாக அமைந்த இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கூறுகின்றன.
இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
(உபகாமம் 18:15)
கர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒரு தீ்ர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.
(உபாகமம் 18:17,18)
இங்கே முன்னறிவிக்கப்படுபவர் யார்?
மோசேவுக்குப் பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர். இல்லை இத இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய அழுத்தம் கொடுத்துச் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது, இயேசுவையும் குறிக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவையும் இயேசுவையும் குறிக்காது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
மோசே இதை யாரிடம் கூறினார்? இஸ்ரவேலர்டகளிடம் கூறினார். இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது.
வரக்கூடியவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படி கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது.
அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாக அவர்களின் அதாவது இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
மோசே மக்களிடம் செய்த முன்னறிவிப்பும், மக்களுக்கு முன்னறிவிப்புச் செய்யுமாறு கர்த்தர் இட்ட கட்டளையும் வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது.
இது யோசுவாவைத் தான் குறிக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர்.
அது போல் இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இயேசுவும் இனத்தால் இஸ்ரவேலர் தான்.
எனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வேத வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது.
அப்படியானால் இது யாரைத் தான் குறிப்பிடுகிறது? இதை விரிவாக பைபிளின் துணையுடன் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
இஸ்ரவேலர்களிலிருந்து தோன்றாமல் இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தான் அவர் தோன்ற வேண்டும். இஸ்ரவேலரின் சகோதரர்கள் என்று யாரைக் கூறலாம். பைபிளின் வெளிச்சத்திலேயே இதற்கு விடை காண்போம்.
ஆபிரகாமுடைய சந்தததிகளில் இரு இனத்தவர்கள் உருவானார்கள் ஈசாக் வழியில் தோன்றியவர்கள் இஸ்ரவேலர்கள். இஸ்மவேல் வழியில் தோன்றியவர்கள் இஸ்மவேலர்கள். ஆதியாகாமம் இதை விரிவாக விளக்குகின்றது.
பைபிளில் இஸ்மவேலரின் சகோதரர் என்று கூறப்பட்டால் அவர்கள் இஸ்ரவேலர் தாம். இஸ்ரவேலரின் சகோதரர் எனக் கூறப்பட்டால் அவர்கள் இஸ்மவேலர் தாம். இதைத் தவிர வேறு பொருள் கொள்ள வழி இல்லை. இன்னும் சொல்வதானால் பின் வரும் பைபிள் வசனம் இதைத் தெளிவாகவும் குறிப்பிடுகிறது.
அவர்கள் (இஸ்மவேலின் பனிரெண்டு குமாரர்கள்) கவீலா துவக்கி சூர் மட்டும் வாசம் பண்ணி வந்ததார்கள். சூர் எகிப்துக்குக் கிழக்கே அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கிறது. அவன் தன் சகோதரருக்குக் கிழக்கே குடியேறி இருந்தான்.
(ஆதியாகமம் 25:18)
இஸ்மவேல் தன் சகோதரருக்கு அதாவது இஸ்ரவேலருக்கு கிழக்கே குடியிருந்தான் என்று இவ்வசனம் கூறுகிறது.
இஸ்ரவேலரின் சகோதரரிலிருந்து தீர்க்கதரிசி தோன்றுவார் என்றால் அவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருக்க மாட்டார். இஸ்மவேலர்களிலேயே தோன்றுவார் என்பது தான் மேற்கண்ட முன்னறிவிப்பின் பொருளாக இருக்க முடியும்.
இஸ்மவேலர்களில் தோன்றும் தீர்க்கதரிசியைக் குறிப்பிடும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கோ, யோசுவாவுக்கோ எப்படிப் பொருந்தும் என்பதைக் கிறிஸ்தவர்களும், யூதர்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இந்த முன்னறிவிப்பு செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை இஸ்மவேலர்களில் ஒரே ஒருவர் தாம் தம்மை தீர்க்கதரிசி என்று வாதிட்டிருக்கிறார். அவர் தாம் முஹம்மது நபி (ஸல்) ஆவார். இந்த முன்னறிவிப்பு முஹம்மது நபியைத் தான் குறிக்கிறது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
இந்த முன்னறிவிப்பில் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேவும், உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேயை நோக்கி கர்த்தரும் கூறுகின்றனர். வரக்கூடிய தீர்க்கதரிசி மோசேயைப் போன்றவராக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மோசேயைப் போன்றவர் என்ற ஒப்பு நோக்குதல் தீர்க்கதரிசி என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படவில்லை. மாறாக, எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக அந்தத் தீர்க்கதரிசி இருப்பார் என்பதையே இந்த ஒப்பீடு கூறுகிறது.
மோசேவுக்குப் பின்னர் இயேசு வரை சாலமோன், எசக்கியேல், தானியேல் மற்றும் பல தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற வகையில் இந்த உவமை கூறப்பட்டுள்ளது என்றால் இவர்கள் அனைவருக்குமே இந்த முன்னறிவிப்பு பொருந்தும். இயேசுவைத் தான் குறிக்கும் என்று கூற முடியாது.
மேலும் மோசேவுக்குப் பின் ஒரு தீர்க்கதரிசி அல்ல. பல தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். இதைப் பற்றி முன்னறிவிப்புச் செய்வதென்றால் உன்னைப் போல் பல தீர்க்கதிரிசிகள் என்று தான் கூறவேண்டும். அவ்வாறு கூறாமல் ஒரு தீ்ர்க்கதரிசி என்று கூறப்படுகிறது. எனவே உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்பது எல்லா வகையிலும் மோசேயைப் போன்று திகழும் குறிப்பிட்ட ஒரேயொரு தீர்க்கதரிசியே முன்னறிவிப்புச் செய்கிறது என்பதில் ஐயமில்லை.
இயேசு எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக இருந்தாரா? நிச்சயமாக இல்லை.
தீர்க்கதரிசியா? குமாரனா?
கிறிஸ்தவர்கள் மோசேயை ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இயேசுவைத் தீர்க்கதிரிசி என்று நம்பாமல் கர்த்தரின் குமாரர் என்று நம்புகின்றனர். பைபிளின் முன்னறிவிப்பு இயேசுவையே குறிக்கிறது என்று உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் நம்பினால் இயேசுவும், மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி தாம். கர்த்தரின் குமாரர் அல்லர் என்று நம்ப வேண்டும். அவரைக் கர்த்தரின் குமாரர் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு இந்த முன்னறிவிப்பும் அவரையே குறிக்கிறது என்றும் கூறுவது முரணானதும் நகைப்பிற்குரியதுமாகும்.
முஹம்மது நபியவர்கள் இன்று வரை கடவுளின் குமாரர் என்று நம்பப்படவில்லை. மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி என்றே நம்பப்படுகிறார். இந்த வகையில் இது நபிகள் நாயகத்தைத் தான் குறிக்கிறது.
அதிசயமான பிறப்பு
மோசே தாய், தந்தை வழியாகச் சாதாரணமான முறையில் பிறந்தார். இயேசுவோ தந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார். இந்த வகையிலும் இயேசு மோசேவைப் போன்றவராக இருக்க முடியாது.
முஹம்மது நபியவர்கள் மோசேயைப் போல் தாய் தந்தை வழியாகச் சாதாரணமான முறையில் பிறந்தனர். இந்த வகையிலும் இது நபிகள் நாயகத்துக்கே பொருந்தும்.
பிரம்மச்சாரி
மோசே திருமணம் செய்து சந்ததிகளைப் பெற்றது போல் முஹம்மது நபியும் திருமணம் செய்து சந்ததிகளைப் பொற்றார்கள். இயேசுவோ (பைபிளின் வரலாற்றுப்படி) திருமணம் செய்யாத பிரம்மச்சாரியாகவே இருந்துள்ளதால் இந்த வகையிலும் அவர் மோசேயைப் போன்றவராக முடியாது.
வாழ்நாளிலேயே அங்கீகாரம்
மோசே, தம் ஆயுள் காலத்திலேயே அவரது சமுதாயத்தினரால் தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார். முஹம்மது நபியும் அவர்களது ஆயுள் காலத்திலேயே அவர்களது சமுதாயத்தினரால் தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். இயேசு தம் ஆயுள் காலத்தில் அவரது சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்று வரையிலும் கூட இஸ்ரவேலர்களான யூதர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அவர் (இயேசு) தமக்குச் சொந்தமானவற்றில் வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
(யோவான் 1:11)
இயேசு தமது இனத்தவர்களால் தாம் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை என்று யோவான் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.
எனவே இந்த வகையிலும் நபிகள் நாயகம் அவர்களே இந்த முன்னறிவிப்புக்குப் பொருந்துகிறார்கள்.
ஆட்சி புரிதல்
மோசே தீர்க்கதரிசியாக இருந்ததுடன் முடிவில் தம் மக்கள் மீது ஆட்சி செலுத்தினார். முஹம்மது நபியும் இவ்வாறே தம் மக்கள் மீது ஆட்சி செலுத்தினார்கள். ஆனால் இயேசு தம் வாழ்நாளில் பன்னிரண்டு சீடர்களைத் தவிர எவரையும் உருவாக்கவில்லை. இந்த வகையில் இயேசு மோசேயைப் போன்றவராக இல்லை.
இயற்கையான மரணம்
மோசே தம் வாழ்நாள் முடிந்து இயற்கையான முறையில் மரணமடைந்தார். முஹம்மது நபியும் அவ்வாறே மரணமடைந்தார்கள். ஆனால் இயேசு (கிறிஸ்தவ நம்பிக்கைப்படி) மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதனாலும் இயேசு மோசையைப் போன்றவராக இல்லை.
பொறுப்பை ஒப்படைத்தல்
மோசே மரணிக்கும் சமயத்தில் யோசுவாவின் தலையில் கை வைத்துத் தமக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை யோசுவா நடத்துவார் என்று மறைமுகமாக அடையாளம் காட்டிச் சென்றார். முஹம்மத நபியும் அபூபக்கரை அடுத்து ஆட்சியாளராக சூசகமாக உணர்த்திச் சென்றார். ஆனாலும் இயேசு இவ்வாறு அறிவித்துச் செல்லவில்லை.
எதிரிகளை ஒழித்தல்
மோசே தம் வாழ்நாளிலேயே தம் எதிரிகள் அழிந்து போனதைக் கண்டார். முஹம்மது நபியும் தம் எதிரிகளைத் தம் வாழ்நாளிலேயே அழித்தார்கள். இயேசுவோ எதிரிகளிடம் தோற்றுப் போனார். இந்த வகையிலும் நபிகள் நாயகமே மோசேயைப் போன்றவராக உள்ளார்.
போராளிகள்
மோசேயும் அவரது சகாக்களும் ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர். முஹம்மத நபியவர்களும் அவரது சகாக்களும் அவ்வாறே ஆயுதம் தரித்துப் போர் புரிந்தனர். இயேசுவோ வாழ்நாள் முழுவதும் சமாதானமே பேசியிருக்கிறார். எனவே இயேசு, மோசேயைப் போன்றவராக முடியாது.
குற்றவியல் சட்டங்கள்
திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை மோசே தண்டித்தார். அத்தகைய சட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. முஹம்மது நபிக்கும் அவ்வாறே சட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதைச் செயல்படுத்தினார்கள். விபச்சாரம் செய்த ஒரு பெண் இயேசுவின் முன்னால் நிறுத்தப்பட்ட போது எந்தத் தப்பும் செய்யாதவன் இவள் மீது கல்லெறியட்டும் என்று இயேசு கூறியுள்ளார். எந்த குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தவில்லை.
மோசேயும் முஹம்மது நபியும் ஆடு மேய்த்துள்ளனர். உழைத்து உண்டனர். தீர்க்கதரிசிகளாக ஆவதற்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இது போல் இன்னும் அநேக ஒற்றுமைகள் அவ்விருவருக்கிடையே இருந்தன. இயேசுவோ எல்லா வகையிலும் மோசேயிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார்.
எள்ளளவும் ஐயமின்றி பைபிளின் முன்னறிவிப்பு முஹம்மது நபியைக் குறித்த முன்னறிவிப்புத் தான் என்பதை நடுநிலையுடன் சிந்தித்தால் உணரலாம்.
ஒரு வாதத்துக்காக இயேசு மோசேயைப் போன்றவர் தாம் என்று ஏற்றுக் கொண்டாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவைக் குறித்தது என்று கூற முடியாது. மோசேயைப் போன்ற அந்த தீர்க்கதரிசி இஸ்மவேலர்களிலிருந்து தான் வரமுடியும். இஸ்ரவேலராக இருக்க முடியாது.
இஸ்மவேலர் இனத்தில் தோன்றியவரும் எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவருமான முஹம்மது நபியைத் தான் இந்த தீர்க்கதரிசனம் கூறுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இப்படி ஒருவர் தோன்றுவார் என்று அறிந்து கொள்வதற்காக இந்த முன்னறிவிப்புச் செயல்படவில்லை. மாறாக அவ்வாறு அந்த தீர்க்கதரிசி வரும்போது அவரைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவரது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது தான் இந்த முன்னறிவிப்பின் நோக்கம்.
ஏனெனில் வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி முன்னறிவிப்புச் செய்த மோசே இறுதியாக அவருக்குச் செவி கொடுப்பீராக என்று முடிக்கறார்.
நபிகள் நாயகத்துக்குச் செவி கொடுப்பதன் மூலம் தான் அந்தக் கட்டளையை நிறைவேற்ற முடியும்.
பைபிளை வேத வரிகள் என்றும் கர்த்தரின் வார்த்தை என்றும் நம்புகின்ற கிறித்தவ அன்பர்களே! நடுநிலைக் கண்ணோடு சிந்தித்துப் பார்த்து உண்மையை உணருங்கள்.
- மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்?
பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது. இது தாவீது (தாவூது) ராஜாவின் வேதமாகும். இந்த வேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில் தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார்.
அது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்று கிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த முன்னறிவிப்பில், வரக்கூடிய தீர்க்கதரிசிக்குரிய ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீது ராஜா கூறுகிறார்.
இந்த அடையாளங்களில் ஒன்றிரண்டு அடையாளங்கள் மட்டுமே இயேசுவுக்குப் பொருந்துகின்றன. சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே சரியாகப் பொருந்துகின்றன. அனைத்து அடையாளங்களும் யாருக்குப் பொருந்துகின்றனவோ அவரைப் பற்றிய முன்னறிவிப்பு என்று தான் அறிவுடையோர் முடிவுக்கு வருவார்கள்.
எதிர்காலத்தில் தோன்றக் கூடிய அந்த தீர்க்கதரிசியை மானசீகமாக நோக்கி தாவீது ராஜா நேரடியாகப் பேசுவது போல் அந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவிதையைச் சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
(சங்கீதம் 45:1)
முன்னறிவிப்பில் எடுத்த எடுப்பிலேயே கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையை தாவீது ராஜா நீக்குகிறார். வரக்கூடியவர் ராஜாவாக அரசராக இருப்பார். என்று தாவீது ராஜா கூறுகிறார். இயேசு ஒரு காலத்திலும் மக்களை ஆட்சி செய்யும் அரசராக இருந்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசராக ஆட்சி புரிந்திருக்கறார்கள்.
எல்லா மனு புத்திரரிலும் நீர் மகா சௌந்தர்யமுள்ளவர். உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது. ஆகையால் தேவன் உம்மை என்றைக்கும் ஆசீ்ர்வதிக்கின்றார்.
(சங்கீதம் 45:2)
வரக்கூடியவர் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்று தாவீது ராஜா கூறுகிறார். இயேசு அழகுடையவராக இருந்தார் என்று பைபிள் எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக அழகற்றவராக இருந்தார் என்று கூறுகிறது.
அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமும் இல்லை. அவரைப் பார்க்கும் போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
(ஏசாயா 53:2)
அவருக்கு அழகுமில்லை என்று ஏசாயா ஆகாமம் கூறுகிறது. இது இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பு எனக் கிறித்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் தாவீது ராஜா கூறுவது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது என்பதை கிறித்தவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
ஏனெனில் தாவீதின் முன்னறிவிப்பு அழகுள்ள ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அழகற்றவராக இருப்பார் என்பதும் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்பதும் இயேசுவுக்கு எப்படிப் பொருந்தும் என்று கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும். தாவீது ராஜாவின் முன்னறிவிப்புக்கேற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த அழகுடையவராக இருந்தார் என்று ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.
சவுரியவானே! உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக் கொண்டு .
(சங்கீதம் 45:3)
பட்டயத்தை (அதாவது வாளை-) அரையிலே (அதாவது இடுப்பிலே) கட்டிக்கொண்டு என்பது எதிரிகளுடன் போர் புரிவதைக் குறிக்கின்றது. இயேசு ஒரு போதும் இடுப்பில் வாளைத் தொங்க விட்டதில்லை. எதிரிகளுடன் போர் புரிந்ததுமில்லை. ஆனால் முஹம்மது நபி அவர்கள் வாளேந்திப் போர் புரிந்திருக்கிறார்கள் என்பது கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
சத்தியத்தினிமித்தமும் நீதியுடன் கூடிய சாந்த்ததினிமித்தமும் உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறி வாரும். உமது வலது கரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப் பண்ணும்.
(சங்கீதம் 45:4)
வரக்கூடியவர் மகத்துவத்துடன் வெற்றிபெறுவார் என்றும் அவரது வலது கரம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தாவீது ராஜா கூறுகிறார்.
இயேசு தம் வாழ்நாளில் மகத்துவத்துடன் வெற்றி பெறவில்லை. சாதாரண வெற்றியும் பெறவில்லை. அவரது எதிரிகளே வென்றார்கள். பயங்கரமான முறையில் அவரைக் கொன்றார்கள். (கிறித்தவ நம்பிக்கைப்படி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளிலேயே மகத்தான வெற்றி பெற்றார்கள். எதிரிகளை தம் கரத்தால் சங்காரம் செய்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள். அவைகள் ராஜாவுடைய சத்ருக்களின் இருதயத்துக்குள் பாயும். ஜன சதளங்கள் உமக்கு கீழே விழுவார்கள்.
இயேசு கூர்மையான அம்புகளைப் பயன்படுத்தியதுண்டா? அவை எதிரிகளின் இதயத்தில் தைத்ததுண்டா? அவரைச் சுற்றி இருந்த பல்வேறு கோத்திரங்களும் அவரது ஆளுகையின் கீழ் வந்ததுண்டா? நிச்சயமாக இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெய்யக் கூடியவராக எதிரிகள் மீது குறி பார்த்து வீசக் கூடியவராக அம்பெய்ய ஆர்வமூட்டுபவராக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த எல்லாக் கோத்திரத்தாரும் அவரது ஆளுகையின் கீழ் வந்தார்கள்.
தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஜ்ஜித்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
நபிகள் நாயகம் ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்கள். பாரபட்சமற்ற நீதி வழங்கினார்கள் என்பது எதிரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை. மேலும் அவரது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. என்ற வாசகமும் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே பொருந்துகிறது. அவர்கள் வாழ்ந்த பகுதியில் அவரது சமுதாயத்தினர் 14 நூற்றாண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இது இயேசு விஷயத்தில் எள்ளளவும் பொருந்தாது.
நீர் அநீதியை அக்கிரமத்தை வெறுக்கிறீர். ஆதலால் தேவனே! உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம் பண்ணினார்.
இஸ்ரவேல் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் உரிமையை தேவன் தாவீது ராஜாவிற்கு வழங்கி அவரைச் சந்தோஷப்படுத்தினார். முஹம்மது நபிக்கு உலகின் பல பகுதிகளை ஆட்சி புரியும் சந்தோஷத்தை அருளினார். தன்னை விட பரந்த ராஜ்யத்தை அவர் ஆளுவார் என்பதையே உமது தோழரைப் பார்க்கிலும் (அதாவது என்னைப் பார்க்கிலும்) உம்மை ஆனந்தத்தால் அபிஷேகம் பண்ணினார் என்ற வாக்கியத்தின் மூலம் தாவீது ராஜா குறிப்பிடுகிறார்.
அவர் குறிப்பிட்டவாறு தாவீத ராஜாவை விட மிகப் பெரிய ஆட்சியை நபிகள் நாயகம் நடத்தினார்கள். இயேசுவுக்கு இந்த சந்தோஷம் கிடைக்கவில்லை.
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுமுண்டு. ராஜ ஸ்திரீ ஒப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலது பாரிசத்தில் நிற்கிறாள்.இயேசுவுக்கு பைபிள் நம்பிக்கைப்படி ஒரு மனைவி கூட இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்ந்தார்கள். அரச குலத்தைச் சேர்ந்த ஸஃபிய்யாவும் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். மக்காவில் ஆட்சித் தலைவராக இருந்த அபூஸுஃப்யானின் மகள் உம்மு ஹபீபாவும் மனைவியாக இருந்தார்கள். தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயத்தைத் தவிர யாருக்கும் பொருந்துவதாக இல்லை.
குமாரத்தியே கேள்! நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்! உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு!இஸ்ரவேல் சமுதாயத்திக் குமாரத்தியாகப் பாவித்து இஸ்ரவேலரை அழைக்கிறார். உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிட்டு வரக்கூடியவருடன் சேர்ந்து கொள்ளுமாறு தாவீது ராஜா கூறுகிறார். வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். இஸ்ரவேலர் அல்லாத இனத்தில் தான் அவர் தோன்றுவார் என்பதால் தான் உன் ஜனத்தை மறந்துவிடு என்று குமாரத்திற்குக் கூறுவது போல் இஸ்ரவேலர்களுக்குக் கூறுகிறார்.
இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்றால் உன் ஜனத்தை மறந்துவிடு என்று தாவீது ராஜா கூறியிருக்க மாட்டார்.
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன். இதனிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள்.இயேசுவைக் கிறித்தவர்கள் துதித்தாலும் எல்லா நேரங்களிலும் அவர் துதிக்கப்படுவதில்லை. ஞாயிறுகளிலும் விசேஷ நாட்களில் மட்டுமே அவர் துதிக்கப்படுகிறார். நபிகள் நாயகம் ஒரு வினாடி நேரம் கூட துதிக்கப்படாமல் இருந்ததில்லை. ஐந்து வேளை தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்படுவதை அனைவரும் அறிவோம். பாங்கில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் துதிக்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வினாடியும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்படாமல் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் துதிக்கப்படுகிறார்.
கடமையான தொழுகைகள், மற்றும் உபரியான தொழுகைகளில் நபிகள் நாயகத்தைத் துதிக்கும் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் தொழுகை நடத்தப்படாத எந்த வினாடியும் இல்லை. எனவே நபிகள் நாயகம் ஒவ்வொரு வினாடி நேரமும் மக்களால் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இந்தக் காரணத்தினாலும் அவர் எந்நேரமும் புகழப்பட்டவராக ஆகிறார்.
தாவீது ராஜாவின் இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் அத்தனை தகுதிகளும் நபிகள் நாயகத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன. பைபிளை வேதம் என்று நம்பக்கூடிய கிறித்தவர்கள் தாவீது ராஜாவை மதிக்கும் கிறித்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமது ஜனத்தையும் வீட்டையும் மறந்துவிட்டு மகா சௌந்தர்யமுள்ள நேர்மையாளரை வெற்றி வீரரை ஏற்க வேண்டாமா? தாவீது ராஜாவின் போதனைக்குச் செவிசாய்க்க வேண்டாமா?
நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக் கொள் என்று தாவீது ராஜா கூறியவாறு சிந்திக்க வேண்டாமா?
3.கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஏசாயா என்றொரு ஆகமம் இருக்கிறது. இந்த ஆகமம் இயேசுவுக்கு முன் வாழ்ந்த ஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வேதம் என்று கிறித்தவர்களால் நம்பப்படுகிறது.
இந்த ஆகமத்தின் 42ஆம் அதிகாரத்தில் இனி தோன்றக் கூடிய தீர்க்கதரிசி பற்றியும், அவரது அடையாளங்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்த அடையாளங்கள் ஏசாயாவை நோக்கி கர்த்தர் கூறுவதைப் போல் அமைந்திருக்கின்றன. அந்த அடையாளங்கள் ஏசாயாவுக்கு பின் இன்று வரை உலகில் தோன்றிய யாருக்காவது பொருந்துமென்றால், நபிகள் நாயகத்திற்கே பொருந்தும்.
இயேசு உள்ளிட்ட வேறு எவருக்கும் அந்த அடையாளங்கள் அறவே பொருந்தவில்லை.
கிறித்தவ சமுதாயத்தவர்கள் பைபிளை இறைவேதமென்று உண்மையிலேயே நம்புவார்களானால், ஏசாயாவின் இந்த முன்னறிவிப்பையும் அவர்கள் நம்பியாக வேண்டும்.
இதுதான் அந்த முன்னறிவிப்பு
இதோ நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்தெடுத்தவரும் என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே,
என் ஆவியை அவர் மேல் அமரப் பண்ணினேன்,
அவர் புற ஜாதியாருக்குள் சற்சமயம் பரவச் செய்வார்
அவர் கூக்குரலிட மாட்டார்.
தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப் பண்ணவும் மாட்டார்.
அவர் தெரிந்த நாணலை முறியார்,
மங்கியெரிகிற திரியை அணையார்,
உண்மையைச் சற்சமயம் பரவச் செய்வார்.
சற்சமயத்தை பூமியிலே நிலைநாட்டு மட்டும் அவர் சோர்ந்து போவதுமில்லை.
அவருடைய உபதேசத்தைக் கேட்க தீவுகள் காத்திருக்கும்.
வானங்களைப் படைத்து அவைகளை விரித்தவரும், பூமியையும் அதில் உண்டானவைகளையும் பரப்பினவரும், அதிலுள்ள ஜனங்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுத்தவருமான கர்த்தராகிய கடவுள் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
கர்த்தராகிய நான் நீதியின் படி உம்மை அழைத்தேன்.
உமது கையைப் பிடித்து, உம்மைக் காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், புறஜாதியாருக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
நீர் குருடர் கண்களைத் திறக்கவும் கட்டுண்டர்களைக் காவலிலிருந்தும் இருளிலிருப்பவர்களைச் சிறையிலிருந்தும் வெளியே கொண்டுவரவும் நான் உம்மை அழைத்தேன்.
நானே கர்த்தர், என் நாமம் இதுவே, என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரங்களுக்கும் கொடேன்.
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் இதோ நிறைவேறலாயின. புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன். அவை தோன்றாததற்கு முன்னே அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(ஏசாயா 42:1-9)
கிறித்தவ அன்பர்கள் இது இயேசுவைக் குறிப்பதாக கூறினாலும் உண்மையில் இது இயேசுவைக் குறிக்க முடியாது. நபிகள் நாயகத்தைத் தான் குறிக்கிறது.
முதல் வசனத்தைப் பாருங்கள்! இதோ நான் ஆதரிக்கிற என் தாசன் என்பது முதல் வசனம்.
இயேசு கர்த்தரின் தாசன் என கூறப்படவில்லை. குமாரர் என்றே கூறப்படுகிறார். கிறித்தவ சமுதாயத்தின் நம்பிக்கையும் இதுவே!
ஆனால் நபிகள் நாயகத்தின் நிலை என்ன?
இயேசுவை கிறித்தவ சமுதாயத்தினர் வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை நீ்ங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். என்னை அல்லாஹ்வின் தூதர் எனவும் அல்லாஹ்வின் தாசன் (அடிமை) எனவும் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளனர்.
(புகாரி)
தம்மைக் கர்த்தரின் தாசன் எனவும் இவ்வாறு தான் அழைக்க வெண்டும் எனவும் கூறியவர்கள் நபிகள் நாயகம் தானே தவிர இயேசு அல்ல என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
அவர் புற ஜாதியாருக்குள் சற்சமயம் பரவச் செய்வார் என்பது முதல் வசனத்தில் உள்ள வாசகம்.
நல்ல சமயத்தை மதத்தை புற ஜாதியாருக்குள் பரவச் செய்வார் என்பது நிச்சயம் இயேசுவைக் குறிக்க முடியாது. ஏனெனில் அவர் தம்மை இஸ்ரவேல் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவராகத் தான் அறிமுகப்படுத்தினார்.
(மத்தேயு 15:24,25)
அவர் வாழ்ந்த காலத்தில் புற ஜாதியாரிடம் அவரது மார்க்கம் பரவுவது இருக்கட்டும். அவரது ஜாதியாரிடமே பரவவில்லை. அவரது ஜாதியினர் தான காட்டிக் கொடுத்தனர். கழுவிலேற்றியதும் (கிறிஸ்தவ நம்பிக்கையின்படி) அவரது ஜாதியினர் தான்.
ஆனால் நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே தமது ஜாதியினரையும் கடந்து பல ஜாதிகள், பல பகுதிகளுக்குச் சற் சமயத்தை மார்க்கத்தைப் பரவச் செய்தார்கள்.
அரபகம் முழுவரையும் தமது ஆளுகையின் கீழும் தமது மதத்தின் கீழும் கொண்டு வந்தார்கள். எனவே இந்த வாசகமும் நபிகள் நாயகத்தைத் தான் குறிக்க முடியும்.
கூக்குரலிட மாட்டார், தம்முடைய சப்தத்தை உயர்த்த மாட்டார் என்பது நபிகள் நாயகத்தின் பண்புகளையே குறிக்கின்றன. அவர்களது பண்புகளைக் குறித்து இஸ்லாமிய வரலாறு இப்படித் தான் கூறுகிறது.
சற்சமயத்தை பூமியிலேயே நிலைநாட்டு மட்டும் அவர் சோர்ந்து போவதுமில்லை, தளர்ந்து போவதுமில்லை ,
வாழ்நாளிலேயே சற்சமயத்தை நிலைநாட்டி வெற்றி கண்டார் என்ற இந்தக் கருத்து நிச்சயம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.
அது போல் கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளிலிருப்பவர்களைச் சிறையில் இருந்தும் வெளியே கொண்டுவரும் பணியையும் அவர் மேற்கொண்டார் என 7வது வசனம் கூறுகிறது.
அடிமைப்பட்டுக் கிடந்த எவரையும் இயேசு விடுவிக்கவில்லை. முஹம்மது நபியோ அந்தச் சமுதாயத்தின் அடிமைத் தளையை உடைத்து எறிந்தார்கள். விடுதலை பெற்ற சமுதாயமாக தமது சமுதாயத்தை மாற்றினார்கள்.
தான் இனி கூறப் போவது வருங்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புத் தான் என்று தெளிவாக அறிவித்துவிட்டு ஏசாயா தொடர்ந்து கூறுவதைக் கேளுங்கள்.
சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே! அதிலுள்ளவைகளே! தீவுகளே! அவைகளின் குடிகளே! கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்! பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்! வானாந்திரமும் அதன் ஊர்களும் கேதாரியாவில் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சப்தமிடக் கடவது, கனிமலைகளிலேயே குடியிறுக்கிறவர்கள் கெம்பீரித்து பர்வதங்களில் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக!
(ஏசாயா 42:10,11)
உலகம் முழுவதையும் உள்ள எல்லா மக்களையும் ஏசாயா அழைத்து அனைவரையும் கர்த்தருக்குப் புதுப்பாட்டு பாடச் சொல்கிறார். புதிய மார்க்கம் தான் புதுப்பாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது.
அகில உலக மக்களுக்கு வழிகாட்டக் கூடிய புது மார்க்கம் எது? அதைக் கொண்டு வந்தவர் யார்? ஏசாயாவுக்குப் பிறகு அகில உலகுக்கும் வழி காட்டக்கூடிய எந்தத் தீர்க்கதரிசியும் வந்ததில்லை. குறிப்பிட்ட பிரதேசம், கோத்திரம் ஆகியவற்றுக்கே தீர்க்கதரிசிகள் அனுப்பப்பட்டார்கள்.
இயேசு கூட தாம் இஸ்ரவேலர் என்ற இனத்தக்கு மட்டுமே வழிகாட்டியாக வந்தவர். என்று கூறியுள்ளார். கானானியப் பெண்ணொருத்தி ஆசி கேட்டு வரும் போது பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல என்று கூறியிருக்கிறார்.
(மாத்தேயு 15:25)
இயேசுவுக்கு முன் ஏசாயாவுக்குப் பின் அகில உலகுக்கும் பொதுவான எந்த ஒரு தீர்க்கதரிசியும் வந்ததில்லை.
இந்த முன்னறிவிப்பில் கோதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பில் இது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். யார் இந்தக் கோதாரியர்? இதோ பைபிள் கூறுகிறது.
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத் பின்பு கேதார் அத்பியேல், மீம்சாம்.
(ஆதியாகமம் 25:13)
இஸ்மவேலின் இரண்டாம் மகன் கேதார். அவர் வழித்தோன்றல்களும் அரபியரும் கேதாரியர் என்று கூறப்பட்டு வந்தனர். இஸ்மவேலர்களின் வழித்தோன்றல்களான அரபுகள் கர்த்தருக்குப் புதுப்பாட்டு பாட வேண்டும். உரத்த சப்தமிட்டு கர்த்தரின் புகழைப் பாட வேண்டும். மலைகளின் உச்சியிலிருந்து முழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த முன்னறிவிப்புக் கூறுகின்றது.
இஸ்மவேலரில் இஸ்மவேலுக்குப் பிறகு எந்தத் தீர்க்கதரிசியும் (நபிகள் நாயகத்திற்கு முன்) வந்ததில்லை. கர்த்தருக்குப் புதுப்பாட்டுப் பாடியதில்லை. நபிகள் நாயகம் வந்தபின் தான் கர்த்தரை நம்பினார்கள், புதுப்பாட்டு பாடினார்கள். கேதாரியர் உட்பட அனைத்து மக்களும் மலைகளின் உச்சியிலிருந்து உரத்த சப்தத்துடன் கர்த்தரை துதிப்பது நபிகள் நாயகம் அவர்களின் வருகைக்குப் பின்தான் ஏற்பட்டது. ஹஜ் கடமையின் போது அகில உலகும் அங்குள்ள மலை உச்சிகளில் லப்பைக் என்று கர்த்தரை உரத்த சப்தத்துடன் துதிப்பதை இன்று வரை உலகம் கண்டு வருகிறது.
கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக!
(ஏசாயா 42:12)
இந்தக் கேதாரியர்கள் புதுப்பாட்டை புது மார்க்கத்தைத் தங்களுக்கே வைத்துக் கொள்ளாமல் பாரெங்கும் பரவச் செய்வார்கள் என்று இந்த முன்னறிவிப்புக் கூறுகிறது. நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்ட கேதாரியரான நபித் தோழர்கள் புது மார்க்கத்தைப் பாரெங்கும் கொண்டு சென்றது வரலாறு கூறும் உண்மையாகும்.
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு யுத்த வீரனைப் போல் வைராக்கியம் பூண்டு முழங்கிக் கெர்சித்து தம்முடைய சத்ருக்களை மேற்கொள்வார். நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன். சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப் போலச் சத்தமிட்டு அவர்களை பாழாக்கி விழுங்குவேன்.
(ஏசாயா 42:13,14)
இந்தக் கோதாரியர்களும் அவர்களைச் சுற்றியிருக்கிறவர்களும் பல்லாண்டுகள் அட்டகாசம் புரிந்ததையும் அவர்கள் கர்த்தரால் தண்டிக்கப்படாமல் நீண்டகாலம் விடப்பட்டதையும் அதன் பின் அவர்கள் போர்கள் மூலம் அழிக்கப்பட்டதையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதா? எப்போது நிறைவேறியது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகையினால் தான் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அட்டூழியம் புரிந்தவர்கள் கர்த்தருக்கு ஆத்திரமூட்டியவர்கள் அனைவரும் கருவருக்கப்பட்டனர்.
சித்திர வேலையான விக்கிரங்களை நம்பி வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
(ஏசாயா 42:17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கேதாரியர்களின் தோன்றும் போது அம்மக்கள் விக்கிரங்களைத் தேவர்களென வழிபட்டு வந்ததையும் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்பு அம்மக்கள் வெட்கித் தலை குனிந்ததையும் வரலாறு கூறுகிறது.
ஏசாயா கூறிய முன்னறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறியது.
இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும் சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே செடிகளிலே அகப்பட்டு காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
(ஏசாயா 42:22)
இந்த ஜனம் என்று ஏசாயா தமது இனத்தை இஸ்ரவேலரைக் குறிப்பிடுகிறார். இந்த முன்னறிவிப்பு நிறைவேறும் போது இந்த ஜனங்களின் இஸ்ரவேலர்களின் நிலை எத்தகையதாக இருக்கும் என்பதை அறிவிக்கிறார்.
இஸ்ரவேலர்கள் நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின்னர் இதில் கூறப்பட்ட இழிநிலையை அடைந்தார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை.
எனவே ஏசாயாவின் இந்த முன்னறிவிப்பை நம்புவோர் நபிகள் நாயகத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.
4.கர்த்தரைத் தேடாத சமுதாயம் எது?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா ஆகமத்தில் மற்றொரு முன் அறிவிப்பு காணப்படுகிறது. இந்த முன் அறிவிப்பும் அதில் கூறப்படுகின்ற விவரங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் மட்டுமே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அந்த முன் அறிவிப்பைக் காண்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும், அவர்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினார்களோ, அந்தச் சமுதாயம் குறித்தும் சில விவரங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்வது. இதைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த குறைஷி குலமும், மக்காவில் வாழ்ந்த ஏனைய குலத்தவர்களும் ஒரே இறைவனாகிய கர்த்தரைப் பற்றி சரியான விளக்கமற்றவர்களாகவே இருந்தார்கள். முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், கல்லையும் மண்ணையும் வணங்கக் கூடியவர்களாகவும், அவற்றுக்குப் பலியிடக் கூடியவர்களாகவும் இருந்தனர்.
அந்தச் சமுதாயத்தில் எந்த இறைத்தூதரும் இஸ்மவேலுக்குப் (இஸ்மாயில்) பிறகு தோன்றியது இல்லை. இத்தகைய சமுதாயத்தில் தான் வரக்கூடிய தீர்க்கதரிசி தோன்றுவார் என்று ஏசாயா 65:1 முதல் 65:7 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.
- என்னைக் குறித்து விசாரித்துக் கேளாதர்களாலே தேடப்பட்டேன். என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி இதோ இருக்கிறேன் என்றேன்.
நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின் படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத் தண்டைக்கு நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன். அந்த ஜனங்கள் என் சந்ததியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி தோட்டங்களிலே பலியிட்டு செங்கற்களின் மேல் தூபம் காட்டி. பிரேதக் குழிகளண்டையில் உட்கார்ந்து பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி பன்றியிறைச்சியைத் தின்று தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆனத்தை வைத்திருந்து நீ உன் மட்டிலிரு! என் சமீபத்தில் வராதே! உன்னைப் பார்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள் முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். இதோ அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது. நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிகட்டுவேன்.
- உங்கள் அக்கிரமங்களுக்கும், மலைகளின் மேல் தூபங்காட்டி மேடைகளின் மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிகட்டுவேன். நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பபேனென்று கர்த்தர் சொல்கிறார்.
இதோ எனக்க முன்பாக எழுதியிருக்கிறது என்ற வாக்கியம் இனி நடக்கக்கூடிய நிகழ்ச்சி குறித்த முன்னறிவிப்பு என்பதை விளக்குகின்றது. இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் விபரங்களை ஆராய்வோம்.
இறைவனைப் பற்றிச் சரியாக அறியாத இறைத்தூதர்களின் வருகை நின்று போயிருந்த ஒரு சமுதாயத்திற்கு இதோ நான் இருக்கிறேன் என்று கர்த்தர் கூறுவார் என்று முதல் வசனம் கூறுகிறது.
ஏசாயா தீர்க்கதரிசிக்குப் பின் இயேசு வரை எத்தனையோ தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலர்களில் தோன்றினார்கள். அவர்கள் கர்த்தரைப் பற்றிச் சரியான முறையில் இஸ்ரவேலர்களுக்கு விளக்கினார்கள்.
இயேசு பிறக்கக் கூடிய காலத்திலும் அவர் பிறப்பதற்கு முன்பும் கர்த்தரைச் சரியாக விளங்கியிருந்த மக்கள் பலர் இருந்தனர். இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய யோவான், மேரியை வளர்த்த யோவானின் தந்தை ஸகரியா ஆகியோர் கர்த்தரை நன்கு அறிந்திருந்தார்கள். ஒழுக்கத்திற்கும், பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மக்களும் அன்று இருந்தார்கள். அதனால் தான் கணவனின்றி குழந்தை பெற்றதாக மேரியைப் பழித்தனர். சிலர் தவறான கொள்கையிலும், சிலர் தவறான நடத்தையிலும் ஈடுபட்டிருந்தாலும் மற்றும் சிலர் நல்லடியார்களாகவும் இருந்து வந்தனர். எனவே இந்த முன்னறிவிப்பு இயேசுவின் காலத்து மக்களையோ, இயேசுவையோ குறிப்பிடவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு எந்தத் தீர்க்கதரிசியும் அதற்கு முன் வந்ததில்லை. ஒரு சில நல்ல மனிதர்கள் கூட அன்றைக்கு இருக்கவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.
இயேசுவின் காலத்திலும் கூட மக்கள் அனைவரும் கர்த்தரை விளங்காமல் இருந்தனர் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட இது இயேசுவின் சமுதாயத்திற்கு அறவே பொருந்தாது.
ஏனென்றால் இந்த வசனத்தில் அத்தகைய மக்களால் நான் தேடப்பட்டேன், அவர்களால் கண்டறியப்பட்டேன் எனக் கூறப்பட்டுள்ளது. கர்த்தரை அறியாதிருந்த அந்தச் சமுதாயம் கர்த்தரை தேடும், கர்த்தரை சரியாக அறிந்து கொள்ளும் என்று இந்த வசனம் கூறுகிறது.
இயேசுவின் காலத்து மக்கள் தவறாக நடந்து கொண்டால் கூட இயேசு வந்ததும் கர்த்தரைத் தேடவுமில்லை. கர்த்தரைக் கண்டறியவுமில்லை. மாறாக (கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி) இயேசுவையே சிலுவையில் அறைந்து கொள்ளும் அளவுக்குக் கொடூரமானவர்களாகவும், கர்த்தரின் மகிமையை உணராதவர்களாகவும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தவர் கர்த்தரைவிட்டு எந்த அளவுக்கு விலகியிருந்தார்களோ அந்த அளவுக்கு நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் கர்த்தரிடம் நெருங்கினார்கள்.
கர்த்தருக்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள். கர்த்தருக்காகச் சொல்லொணாத துன்பங்களையும் சகித்துக் கொண்டனார்.
7வது வசனத்தில் இஸ்ரவேல் சமுதாயத்தை நோக்கி உங்கள் அக்கிரமத்துக்காகவும், உங்கள் முன்னோர்களின் அக்கிரமத்திற்காகவும் (புதிதாக வரக்கூடியவர்கள்) மடியில் கணக்குத் தீர்ப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார்.
இஸ்ரவேல் சமுதாயம் செய்த அக்கிரமங்களுக்குத் தண்டனையாக இஸ்ரவேல் அல்லாத இன்னொரு சமுதாயத்திற்கு அந்தஸ்தும் மதிப்பும் அளிக்கப்படுவதையே இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது.
மனோ இச்சைப்படி நடக்கின்ற முரட்டுத்தனம் கொண்ட கல்லையும் மண்ணையும் வணங்கி வந்த தாழ்ந்தவர்களாகவும் கருதி வந்த மக்களே கர்த்தரைக் கண்டறிவார்கள் என்று 3,4,5 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மேலும் இஸ்ரவேலர்கள் செய்த அக்கிரமத்துக்குத் தண்டனையாக இன்னொரு சமுதாயம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் என்று இவ்வசனம் கூறுவதால் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு நிச்சயமாகப் பொருந்தாது. இயேசுவின் காலத்து இஸ்ரவேலர்கள் உட்பட அனைத்து இஸ்ரவேலர்களும் செய்து வந்த அக்கிரமத்தின் காரணமாகத் தான் இன்னொரு சமுதாயத்திடம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பு வழங்கப்படுவதாக 7வது வசனம் கூறுகிறது. ஆகவே அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைக் குறித்த முன்னறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
5.ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள ஏசாயா ஆகமத்தில் மேலும் ஒரு முன் அறிவிப்புக் காணப்படுகிறது.
இந்த முன் அறிவிப்பு இயேசுவைத் தான் குறிக்கிறது என பைபிள் புதிய ஏற்பாடு சாதிக்கிறது. ஆனால், இந்த முன் அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரே ஒரு அம்சம் தான் இயேசுவுக்குப் பொருந்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொருந்தக் கூடிய ஒரே தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.
இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.
கழுதையில் ஏறி வந்தவர்
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறிப் போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்தில் அறியவில்லை இயேசு மகிமை அடைந்த பின்பு இப்படி இவரைக் குறித்து எழுதியிருப்பதையும் தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.
(யோவான் 12:15)
எதிர்காலத்தில் வரக்கூடிய தீர்க்கதரிசி கழுதையில் ஏறிச் செல்வார் என்று முந்தைய வேதங்களில் எழுதப்பட்டுள்ளது எனவும் இயேசு கழுதையில் ஏறியதன் மூலம் அது நிறைவேறியது எனவும் இந்த வசனம் கூறுகின்றது.
பைபிளின் பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பாரத்தால் கழுதையில் ஏறி வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூறப்படுகின்றது. அதைத் தான் யோவான் இங்கே குறிப்பிடுகிறார் என்று கிறித்தவ உலகமும் ஒத்துக் கொள்கின்றது. அந்த வசனம் இதுதான்.
அவன் ஒரு இரதத்தையும் ஜோடு ஜோடான குதிரை வீரரையும் ஜோடு ஜோடாகக் கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏறி வருகின்றவர்களையும் மிகுந்த கவனமாகக் கவனித்துக் கொண்டே இருந்து..
.. (ஏசாயா 21:7)
ஜோடு ஜோடாக கழுதைகளின் மேலும் என்ற சொற்றொடர் ஒவ்வொரு கழுதையிலும் இரண்டிரண்டு நபர்கள் ஏறி வருவதைக் குறிக்கிறது என்பதை யாரும் அறியலாம். இரண்டு கழுதைகளின் மேல் ஒருவர் ஏறுவது என்பதே இதன் பொருள் என்று மாத்தேயு விளங்கிக் கொண்டு பின்வருமாறு கூறுகிறார்.
சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழதையையும் கழுதைக் குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்.
(மத்தேயு 21:7)
இயேசு ஒரே நேரத்தில் இரண்டு கழதைகளின் மீது ஏறியதாக மத்தேயு கூறியது ஏன் தெரிகிறதா? ஜோடு ஜோடாக கழுதைகளின் மேல் என்பதை ஜோடிக் கழுதை எனப் புரிந்து கொண்டது தான் காரணம்.
இந்த முன்னறிவிப்பில் ஜோடி ஜோடியாக வரக்கூடிய குதிரை வீர்ர்கள், கழுதையில் ஜோடி ஜோடியாய சவாரி செய்து வரக்கூடியவர்கள். ஒட்டகத்தில் ஜோடி ஜோடியாக வரக்கூடியவர்கள் என்றெல்லாம் கூறப்படுகிறன்றது. தனி ஒரு மனிதரைப் பற்றி இந்த முன்னறிவிப்புகள் கூறவில்லை. ஒரு சமுதாயத்தைப் பற்றி ஒரு குழுவைப் பற்றி கூறப்படுகின்றது. என்பதை யாரும் விளங்க முடியும்.
ஒரு மனிதரைப் பற்றிய முன்னறிவிப்பு என்றே வைத்துக் கொண்டாலும் கழுதையில் ஏறியது மட்டும் தானே புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஒட்டகங்கள் மீது இயேசு எப்போது ஏறினார்? ஜோடு ஜோடான குதிரை வீரர் எங்கே? இதையெல்லாம் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
இந்த வசனத்தில் கூறப்படும் முன்னறிவிப்பு எது? இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதைத் தொடர்ந்து கூறப்படும் மற்ற வசனங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வசனங்களைப் பாருங்கள்.
இதோ ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின் மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான். பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அதன் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோட மோதி உடைத்தார் என்று பிரதியுத்தம் சொல்கிறான்.
(ஏசாயா 21:9)
21:7 வசனம் ஜோடி ஜோடியாக மக்கள் குதிரையிலும் கழுதையிலும் ஒட்டகத்திலும் வருவதைக் கூறுகிறது. 21:9 வசனம் அந்தக் கூட்டத்தின் தலைவரைப் பற்றிக் கூறுகிறது. அந்தத் தலைவரின் வருகைக்குப் பின் பாபிலோன் நகரம் வெற்றி கொள்ளப்படும். விக்கிரக ஆராதனை ஒழிக்கப்படும் என்றெல்லாம் கூறப்படுகின்றது. நபிகள் நாயகத்தின் வருகையினாலேயே இது நிகழ்ந்தது.
நபிகள் நாயகத்தின் சமுதாயத்தவர்களே இந்த மூன்று வாகனங்களையும் பயன்படுத்தியவர்கள்.
அரபியாவின் பாரம் : திதானியராகிய பயணக் கூட்டங்களே நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள். தேமா தேசத்தின் குடிகளே நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய் தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டு போங்கள்! அவர்கள் பட்டயங்களும் உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும் யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள். ஆண்டவன் என்னை நோக்கி ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்குக்கொத்த ஒரே ஒரு வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும். கேதார் புத்திரராகிய பராக்கிரம வில் வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சம் பேராயிருப்பார்கள் என்றார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
(ஏசாயா 21:13-17)
அரபியாவின் பாரம் என்றால் அரபியாவின் தீர்க்க தரிசனம் என்பது பொருள். அரேபியாவின் தீர்க்க தரிசனம் என்று கூறிவிட்டு ஏசாயா தொடர்ந்து கூறுவதைக் கவனியுங்கள்!
திதானியராகிய வர்த்தகக் கூட்டத்தையும், தேமா தேசத்தின் குடிமக்களையும் ஏசாயா அழைக்கிறார். அவர்கள் ஒரு சமுதாயத்தினருக்கு உதவுமாறு வலியுறுத்துகிறார். யாருக்கு உதவுமாறு கூறுகிறார்?
எதிரிகளின் வாளுக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி அவர்கள் ஊரை விட்டு ஓடிவருகிறார்கள். அவ்வாறு ஊரைக் காலி செய்து ஓடிவரும் மக்களுக்கு உதவுவதற்காக அரேபியாவின் காடுகளில் தங்குங்கள்! தண்ணீர் கொடுங்கள். உணவு கொடுங்கள் என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறு ஓடி வருபவர்கள் நன்மக்கள் கொடுமைக்காரக் கூட்டத்திலிருந்து தப்பிக்கவே ஓடிவருகின்றனர் என்கிறார் ஏசாயா.
அது அரேபியாவில் நடக்கும் எனவும் கூறுகிறார். இவ்வாறு ஓடி வரக்கூடியவர்கள் யார்? இவர்களை விரட்டியடிப்பவர்கள் யார்? அதையும் ஏசாயா கூறுகிறார்.
இஸ்ரவேலின் மகனாகிய கேதார் வழி வந்தவர்களே இத்தகைய கொடுமைக்காரர்கள் இவர்களால் விரட்டப்பட்டவர்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயத்தினர்.
இந்த ஆணவக்காரக் கூட்டத்தின் கேதார் வம்சத்தின் ஆணவம் ஏறக்குறைய ஒரு வருடத்தில் அடங்கும் . கோதாரின் மகிமை அற்றுப் போகும். பெரும்பாலோர் அழிந்து போவார்கள். எனவும் ஏசாயா கூறுகிறார்.
இப்போது நபிகள் நாயகத்தின் வரலாற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்.
நபிகள் நாயகம் கேதார் வம்சா வழியில் தோன்றினார்கள். கேதார் வம்சத்தினர் நபிகள் நாயகத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட மக்களையும் சொல்லெனாத் துன்பத்துக்கு ஆளாக்கினார்கள். இதைத் தாங்க முடியாத முஸ்லிம்கள் அபீசீனியாவுக்கும், மதினாவுக்கும் ஓடலானார்கள்.
இவ்வாறு ஓடி மதீனாவில் ஒரு ஆட்சியையும் நிறுவி ஒரு வருடம் நிறைவடைவதற்குள் பல வழிகளிலும் கேதார் வம்சத்தின் வியாபாரம் முடக்கப்பட்டது. சிரியாவுக்கு வியாபாரம் செய்ய அவர்களால் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையை முஸ்லிம்கள் உருவாக்கினார்கள். முதலாவது போர்க்களமான பத்ரில் கோதாரியர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.
தங்களை எவரும் வெற்றி கொள்ள முடியாது என்ற இறுமாப்புடன் நடந்து வந்த அரபுகளுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது.
இவ்வளவு விபரங்களை ஏசாயா கூறுகிறார். இவையனைத்தையும் கண்டு கொள்ளாமல் கழுதையில் ஏறி வருவார் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என வாதிடுவது எந்த வகையிலும் ஏற்கமுடியாத ஒன்றாகும்.
இன்றைய ஈரான் மற்றும் இராக் நாடுகளில் தலை நகரமாக இருந்த பாபிலோன் இவரது வருகையின் பின்னர் விழும் என்ற வாசகமும் நபிகள் நாயகத்துக்கே பொருந்தும். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் இன்று வரை அப்பகுதியை முஸ்லிம்களே ஆளுகின்றனர். என்பது கவனிக்கத்தக்கது.
இதில் கூறப்பட்ட அனைத்தும் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே முழு அளவுக்குப் பொருந்துகிறது.
இதைக் கர்த்தர் உரைத்தார் என்று ஏசாயா இறுதியில் கூறுகிறார். கர்த்தரே அறிவித்த முன்னறிவிப்பாக இது அமைந்துள்ளது. மேலும் இது அரேபியாவின் தீர்க்கதரிசனம் எனக் கூறப்படுகிறது. அரபு நாட்டில் நடக்கவுள்ள ஒரு புரட்சியைப் பற்றிய முன்னறிவிப்புத் தான் இது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
6.பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் உபாகமம் என்ற ஆகமம் உள்ளது. இந்த ஆகமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) குறித்த மற்றொரு முன்னறிவிப்பு காணப்படுகிறது.
மோசேவின் வேதமான உபாகமம் 33:1,2 ஆகிய இரு வசனங்களில் இந்த முன்னறிவிப்பைக் காணலாம்.
கடவுளின் மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துக் கூறிய ஆசீர்வாதமாவது,
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,
சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,
பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார்.
அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.
(உபகாமம் 33:1,2)
கடவுளாகிய கர்த்தர் தனது வேத வெளிப்பாட்டை தீர்க்கதரிசிகளுக்கு வழங்கிய இடங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி என்பது சீனாய் மலையைக் குறிப்பிடுகிறது. சீனாய் மலையில் தான் மோசேவுக்கு வேதம் அருளப்பட்டது. கர்த்தரின் வழிகாட்டுதல் சீனாய் மலையில் வழங்கப்பட்டதால் கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி எனக் கூறப்படுகிறது. கர்த்தர் எழுந்தருளி என்பதன் பொருள் என்ன என்பதை அறிய முடிகிறது.
சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார் என்பதன் பொருள் என்ன? மோசேவுக்கு அருளப்பட்ட இவ்வேதத்தில் சேயீரிலிருந்த அவர்களுக்கு உதயமானார் எனக் கூறப்படுகிறது. இது சேயீரிலிருந்து ஒரு தீர்க்கதரிசிக்கு வேதம் அருளப்பட்டதைக் குறிக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மோசேவுக்கு அருளப்பட்ட இந்த முன்னறிவிப்பு இயேசுவின் வருகை மூலம் நிறைவேறியது.
பாரான் மலையிலிருந்து பிரகாரமாய்த் தோன்றி என்பதன் பொருள் என்ன?
அதை நாம் அறிந்திட பாரான் மலை எதுவென நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாரான் மலை என்பது மோசே வாழ்ந்த பகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும்.
இதை நாம் சொல்லவில்லை. பைபிளே கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்ரவேல் சந்ததயில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் கிறித்தவர்களும் யூதர்களும் அறிவார்கள். இஸ்மாயீல் என்னும் இஸ்மவேல் மக்கா நகரில் தான் வளர்ந்தார், வாழ்ந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஸம்ஸம் எனும் நீரூற்று இஸ்மவேல் குழந்தையாக இருந்த போது அவரது தாகம் தனிப்பதற்காக கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அந்த நீரூற்று இன்று வரை மக்காவில் இருந்து வருகிறது.
இஸ்மவேல் எந்தப் பகுதியில் வளர்ந்தார், வாழ்ந்தார் என பைபிளும் கூறுகிறது.
கடவுளோ ஆபிரகாமைப் பார்த்து அந்தப் பிள்ளையின் பொருட்டு உன் அடிமைப் பெண்ணின் பொருட்டும் நீ வருத்தப்பட வேண்டாம் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றிற்கும் செவிகொடு, ஈசாக் மகனிடமே உன் சந்ததி விளங்கும். அடிமைப் பெண்ணின் மகனையும் ஒர ஜனமாக்குவேன். அவனும் உன் சந்ததியே என்றார்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, ஆகாரமும் ஒரு துருத்தித் தண்ணீரும் எடுத்து ஆகாரிடம் கொடுத்து, அவள் தோளின் மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப்போய், பெயர்ஷெபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்து தண்ணீர் செலவழியவே, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்ப்பேனோவென்று சொல்லி, அம்பு பாயும் தூரத்தில் போய், எதிரே உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.
கடவுள் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். கடவுளின் தூதனானவன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, ஆகாரே உனக்கு நேரிட்டதென்ன? பயப்படாதே. பிள்ளை இருக்கும் இடத்தில் கடவுள் அவன் சப்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து, அவனை உன் கையால் பிடித்துக் கொண்டு போ! அவனைப் பெரிய ஜனமாக்குவேன் என்றார். கடவுள் அவளுடைய கண்களைத் திறந்தார். திறக்கவே தண்ணீருள்ள ஒரு துரவை அவள் கண்டு, போய், துருத்தியில் தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுள் பிள்ளையோடிருந்தார். அவன் வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானான். பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ் செய்வித்தான்.
(ஆதியாகமம் 21:12-21)
இஸ்மவேல் பாரான் வனாந்தரத்தில் வசித்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்லாமிய வரலாறு மக்கா எனக் கூறுவதும், பைபிள் பாரான் எனக் கூறுவதும் ஒரே பகுதி தான். என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். இந்தப் பகுதியில் வாழ்ந்த இஸ்மவேலின் வழித்தோன்றல்களாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
மோசேயின் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பாரான் மலையிலிருந்து வேத வெளிப்பாடு யாருக்காவது கிடைத்ததா? என்றால் நபிகள் நாயகம் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,
சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,
பாரானில் தோன்றிய பிரகாசம் எது? அப்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் கர்த்தரின் தூதர் எனக் கூறியதில்லை. மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை பாரானின் மக்கள் அறியாமை இருளிலேயே மூழ்கியிருந்தனர். எனவே பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது நபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் தான் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை.
7.ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் தானியேல் என்றொரு ஆகமம் உள்ளது. அந்த ஆகமத்தில் ஒரு முன்னறிவிப்பு காணப்படுகிறது. அது நபிகள் நாயகத்தின் வருகையையும் இஸ்லாமிய எழுச்சியையும் முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமைந்துள்ளது அதன் விபரம் வருமாறு:
நெபு காத்நேச்சர் என்ற அரசன் இருந்தான். அவன் ஒரு கனவு கண்டான். அதன் விளக்கம் அவனுக்குப் புரியவில்லை. மந்திரவாதிகள், குறி சொல்லுகிறவர், சூனியக்காரரையெல்லாம் அழைத்து கனவுக்கு விளக்கம் கேட்டான். விளக்கம் என்ற பெயரில் எதையாவது உளறிவிடக் கூடாது என்பதற்காக தனது கனவை அவன் யாரிடமும் கூறவில்லை.
கனவுக்கு விளக்கம் கூறக் கூடியவர்கள் நான் கண்ட கனவையும் ஊகித்துக் கூறிவிட்டு அதன் பிறகு விளக்கம் கூற வேண்டும் என்று அவன் கூறினான். யாராலும் கூற முடியவில்லை. இதனால் மந்திரவாதிகள், குறி சொல்பவர், சூனியக்காரர் அனைவரையும் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டான்.
இந்தக் கால கட்டத்தில் தானியேல் எனும் தீர்க்கதரிசி வாழ்ந்தார். அவர் அரசரின் கனவையும் அதற்கான விளக்கத்தையும் தன்னால் கூற முடியும் என்றும் அதற்குச் சிறிது அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த விபரங்கள் தானியேல் எனும் ஆகமம் 2:1 முதல் 2:15 வரை உள்ள வசனங்களில் விரிவாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு நடந்தது தான் நமது ஆய்வுக்குரியது. அதை மட்டும் பார்ப்போம்.
அதன் பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட அரியோகினிடம் சென்று, பாபிலோனின் ஞானிகளை அழிக்க வேண்டாம், என்னை ராஜாவின் சமூகத்திற்கு அழைத்துக் கொண்டு போ, ராஜாவுக்குச் சொப்பனத்தின் பொருளைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது அரியோகு விரைவாகத் தானியேலை ராஜ சந்ததிக்கு அழைத்துப் போய், சிறைபட்டு வந்த யுதேயா தேசத்தாரில் ஒருவனைக் கண்டுபிடித்தேன். அவன் ராஜாவுக்கு பொருளைத் தெரிவிப்பான் என்று சொன்னான். ராஜா பேல் தாஷாத்சாரென்னும் பேர் கொண்ட தானியேலைப் பார்த்து, நான் கண்ட சொப்பனத்தையும் அதன் பொருளையும் நீ எனக்கு அறிவிப்பாயாக என்று கேட்க, தானியேல் ராஜாவுக்கு மறுமொழியாக, ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்கு தெரிவிக்க ஞானிகளாலும், குறி சொல்லுகிறவர்களாலும், மந்திரவாதிகளாலும், ஜோசியராலும் முடியாது. பரலோகத்திலிருக்கிற கடவுளோ மறை பொருட்களை வெளிப்படுத்துகிறவர், வரும் நாட்களில் சம்பவிக்கப்போவதை ராஜாவாகிற நெபுக்காத் நேச்சருக்கு அறிவித்திருக்கிறார். உமது சொப்பனமும், உமது படுக்கையின் மேல் நீ கண்ட தரிசனங்களும் இவைகளே, ராஜாவே, உமது படுக்கையின் மேல் நீர் படுத்திருக்கையில் இனிமேல் சம்பவிப்பது என்னவென்று நினைத்துக் கொண்டிருந்தீர், அப்பொழுது மறை பொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப் போகிறது இன்னதென்று உமக்கு அறிவித்தார் நான் உயிரோடிருக்கிற எல்லாரைப் பார்க்கிலும் அதிக ஞானமுடையவன் என்பதினாலல்ல, சொர்ப்பனத்தின் பொருள் ராஜாவுக்குத் தெரிய வேண்டுமென்றும், உமது இருதயத்தின் நினைவுகளை நீ்ர் அறிய வேண்டுமென்றும் இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
ராஜாவே நீர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு பெரிய சிலை காணப்பட்டது. அந்த சிலை மிகுந்த உயரமும் மகா பிரகாசமுமுள்ளதாய் உமக்கு எதிரே நின்றது, அதன் தோற்றம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசம்பொன், அதன் மார்பும் அதன் புயங்களும் வெள்ளி, அதன் வயிறும் அதன் இடுப்பும் வெண்கலம், அதன் கால்கள் இரும்பு, அதன் பாதங்கள் பாதி இரும்பு, பாதி களிமண், நீர் பார்த்துக் கொண்டிருந்த போது, கை படாமலே ஒர கல் பெயர்ந்து உருண்டு வந்தது, அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப் போட்டது. அக்கணமே அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் நொறுக்குண்டு கோடைகாலத்தில் போரடிக்கின்ற களத்திலிருந்து பறக்கும் பதர் போலாயின. காற்று அவைகளை அடித்துக் கொண்டு போகவே, அவை போன இடம் தெரியாமற் போயின, சிலையை மோதிய கல்லோவெனில் ஒரு பெரிய மலையாகிப் பூமியனைத்தையும் நிறப்பிற்று, சொர்ப்பனம் இதுவே. அதன் பொருளை ராஜாவுக்குத் தெரிவிப்போம்.
ராஜாவே, நீர் ராஜாதி ராஜா, அரசாட்சி, பராக்கிரமம், வல்லமை மகிமை இவற்றை பரலோகத்தின் கடவுள் உமக்கு அருளினார். எவ்விடங்களிலுமுள்ள மனிதரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக் கொடுத்தார். அவைகளையெல்லாம் நீரே ஆளும் படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே. உமக்குப் பிறகு உமது ராஜ்யத்திலும் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும். பின்பு வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். அது பூமியனைத்தையும் ஆண்டு கொள்ளும். நாலாவது ராஜ்யம் ஒன்று எழும்பும், அது இரும்பைப் போன்றது, இரும்பு எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிப் போடுவதினால் அது பலமுள்ளது. இரும்பு அழித்துப் போடுகிறது போல இது அவற்றையெல்லாம் உடைத்து அழித்துவிடும். பாதங்களும், கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, நீர் இப்படிக் கண்டது பிரிவுள்ள ராஜ்யம் என்பதைக் குறிக்கும். ஆகிலும் இரும்பின் பலத்தில் கொஞ்சம் அதிலே இருக்கும், களிமண்ணோடே இரும்பு கலந்திருக்கக் கண்டீரே, கால் விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்த படியே அந்த ராஜ்யம் பலமும் பல வீனமுமாயிருக்கும், இரும்பு களிமண்ணோடே, கலந்திருக்க நீர் கண்டபடியே, அவர்கள் மற்ற ஜாதிகளோடே சம்பந்தங்கலப்பார்கள், ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலவாதது போல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்வதில்லை. அந்த ராஜாக்களின் நாட்களில், பரலோகத்தின் கடவுள் என்றென்றும், அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறெ ஜனத்துக்கு விடப்படுவதில்லை. அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்து விடும். தானே என்றும் நிலைத்திருக்கும். ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டுவந்து இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியயும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகத்தான கடவுள் ராஜாவுக்கு அறிவித்திருக்கிறார், சொர்ப்பனம் நிச்சயம், அதன் அர்த்தம் உண்மை என்று சொன்னான்.
(தானியேல் 2:16-45)
நெபுகாத் நேச்சரின் கனவின் விளக்கம் யாரைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன் அவர் எந்தப் பகுதியை ஆண்டு வந்தார் என்பதை அறிந்து கொள்வோம்.
பாபிலோன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இராக், ஈரான் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். எனவே இவர் கண்ட கனவு இராக், ஈரான் ஆட்சி பற்றிய முன்னறிவிப்பாகவே அமைந்துள்ளது.
அப்பகுதியில் நெபுகாத் நேச்சர், அவரைத் தொடர்ந்து அவரது மகன் பெல்ஷாத் சார், அதைத் தொடர்ந்து கி.மு,536 ல் கியானியர், மாவீரர் அலெக்சாண்டர் என சில ஆட்சிகள் தோன்றின.
ஆயினும் எந்த ஆட்சியும் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒரே ஒரு ஆட்சிதான் உலகம் உள்ளளவும் அங்கே நீடித்து நிலைத்து நிற்கும். எல்லா ராஜ்யங்களையும் அடித்து நொறுக்கும். அதுவும் பரலோகத்தின் கடவுள் அந்த ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார் என்ற வாசகம் ஊன்றிக் கவனிக்கத்தக்கது.
நபிகள் நாயகம் (ஸல்) உருவாக்கிய ஆட்சி மன்னராட்சியாக இருக்கவில்லை. கடவுளின் ஆட்சி என்றே அதைக் குறிப்பிட்டார்கள். கடவுளின் சட்டங்கள் தான் ஆட்சி செய்யும் என்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய அந்த ஆட்சி இராக், ஈரானைக் கைப்பற்றியது முதல் இன்று வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் ஆட்சியே நடக்கிறது.
எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் ஆட்சியை ஏற்படுத்துவார் என்பதையும் அவர் கடவுளின் திருத்தூதர் என்பதையும் சந்தேகமற முன்னறிவிக்கின்றது.
புதிய ஏற்பாட்டின் முன்னறிவிப்புகள்
- தீர்க்கதரிசியானவர் யார்?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் மற்றுமின்றி புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் (ஸல்) குறித்து பல முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.
புதிய ஏற்பாட்டின் யோவான், மத்தேயு ஆகிய சுவிசேஷங்களில் இந்த முன் அறிவிப்பைக் காணலாம்.
இந்த முன்னறிவிப்பை விரிவாகப் பார்ப்போம்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தம் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டவாறு மூன்று நபர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.
எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.
(யோவான் 1:19,22)
யோவான் (யஹ்யா நபி) இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர். இயேசுவுக்கே ஞானஸ்நானம் வழங்கியவர். அவர் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்ட போது யூதர்கள் அவரிடம் சென்று கேள்வியைக் கேட்டனர். நீர் கிருஸ்துவா? அல்லது எலியாவா? தீர்க்கதரிசியானவரா? இது தான் அவர்களின் கேள்வி. அன்றைக்கு வேதம் கொடுக்கப்பட்டிருந்த யூதர்கள் உலகைத் திருத்த மூன்று நபர்கள் வர வேண்டியுள்ளது என்பதை விளங்கி இருந்தனர். இது வரை அம்மூவரில் ஒருவரும் வரவில்லை எனவும், இனிமேல் தான் அம்மூவரும் வர வேண்டும் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனால் தான் யோவான் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்ட போது, நீர் கிறிஸ்துவா? எலியாவா? தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டுள்ளனர். இந்த வசனங்களைச் சிந்திக்கும் எவருமே இந்த விபரங்களை அறியலாம்.
இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் பைபிள் வசனத்தைப் பாருங்கள்!
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய் தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார். அவர் யோவான் ஸ்நானகளை குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்போது அறிந்து கொண்டார்கள்.
(மாத்தேயு 17:11-13)
இந்த வசனத்தில் மேலும் சில விபரங்களும் நமக்குக் கிடைக்கின்றன. அதாவது கிரிஸ்துவின் வருகைக்கு முன்னர் எலியா வந்து சீர்படுத்த வேண்டும் என யூத வேதங்களில் கூறப்பட்டிருந்தது.
அதனால் இயேசு தம்மைக் கிறிஸ்து எனக் கூறிய போது நீர் கிறிஸ்து என்றால் உமக்கு முன்னர் எலியா வர வேண்டுமே என்று யூதர்கள் ஐயத்தை எழுப்புகிறார்கள். எலியா வந்து நிலைமையைச் சீர்படுத்துவார் என்பது உண்மை தான். எலியா எனக்கு முன்னர் வந்து விட்டார். அவர் தான் யோவான், யோவான் தான் எலியா என்பதை மக்கள் அறியாமல் அவரைத் தொல்லைப்படுத்தினார்கள். எலியாவுக்குப் பின் நான் வந்துள்ளதால் நான் தான் கிறிஸ்து என்று இயேசு கூறுகிறார்.
இந்த விபரங்களை மேற்கண்ட வசனங்களைச் சிந்திக்கின்ற யாருமே அறிந்து கொள்ளலாம். யோவான் தன்னை எலியா அல்ல என ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். யோவானை அந்த மக்கள் சித்திரவரை செய்ததால் மறுத்திருக்கலாம்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.
எலியாவின் வருகையை யூதர்கள் எதிர்பார்த்தனர். அவர் வந்து விட்டார். அவர் தான் யோவான்.
அவரைத் தொடர்ந்து கிறிஸ்து வர வேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தனர். அவரும் வந்து விட்டார். அவர் தாம் இயேசு கிறிஸ்து.
தீர்க்கதரிசியானவர் வர வேண்டுமே? அவர் யார்? யோவான் காலம் முதல் இன்று வரை தீ்ரக்கதரியாக வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். இயேசுவிற்குப் பிறகு வந்த தீர்க்கதிரிசியானவரை நபிகள் நாயகத்தை கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்கள் பைபிளின் போதனையை மறுக்கிறார்கள் என்பது பொருள்.
இந்த நம்பிக்கையினடிப்படையில் தான் ஜெருசலேமிருந்து யூதர்கள் வலசை புறப்பட்டு மதினாவில் குடியேறினர். தீர்க்கதரிசியானவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இல்லை என்றால் மதீனாவுக்கு யூதர்கள் வரவேண்டிய அவசியமே இல்லை.
கிறித்தவ நண்பர்களே! பைபிளில் காணப்படும் இந்த முன்னறிவிப்பை சிந்திக்க மாட்டீர்களா?
- ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்?
புதிய ஏற்பாட்டில் யோவானின் தரிசனம் உள்ளது. அதில் இயேசு கூறிய ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
யோவானின் தரிசனம் 2:24 முதல் 2:29 வரை இடம் பெற்ற அந்த முன்னறிவிப்பைக் காதுள்ளவர் கேட்கட்டும்!
தியத்தைராவிலிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு, அதாவது, இந்த உபதேசத்தை அங்கீகரியாமலும் சாத்தானின் ஆழங்களென்று சொல்லப்படுவதை அறியாமலுமிருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன். நான் வரும் வரைக்கும் உங்களுக்குள்ளதைப் பற்றிக் கொண்டேயிருங்கள். நான் என் பிதாவினிடமிருந்து பெற்றுக் கொண்டது போல, ஜெயங்கொண்டு முடிவு பரியந்தம் என் கிரியைகளைக் கைக் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். இரும்புக் கோலால் அவன் அவர்களை மேய்த்து நடத்துவான், மண் பாண்டங்கள் போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள். விடி வெள்ளியையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
யோவான் என்பவருக்கு இயேசு தரிசனம் தந்து அவரிடம் கூறிய செய்திகளே யோவானின் தரிசனம். இயேசு கூறிய இந்த முன்னறிவிப்பு நிச்சயம் இயேசுவுக்குப் பின்னர் வரக்கூடியவரைத் தான் குறிக்கும் என்பதில் அறிவுடைய மக்கள் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டார்கள்.
இதில் உள்ள ஒவ்வொரு வாசகமும் ஊன்றிக் கவனிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.
இனி ஒருவர் வரவிருக்கிறார். அவரும் என்னைப் போலவே என் பிதாவிடமிருந்து வேதத்தைப் பெறுவார். இயேசு போதித்த ஒரு கடவுள் கொள்கையை அவர் கைக்கொள்வார். அவர் தனது சாதி மட்டுமின்றி அனைத்து சாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துவார். இரும்புத் தடியால் இரும்புத் தடி போன்ற கடுமையான சட்ட திட்டங்களால் மக்களை மேய்ப்பார் என்றெல்லாம் இந்த முன்னறிவிப்பு கூறுகிறது.
நபிகள் நாயகத்தின் வரலாற்றை அறிந்த ஒவ்வொருவரும் இயேசுவின் இந்த முன் அறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை நபி (ஸல்) அவர்களுக்கும் பொருந்துவதை உணராமல் இருக்க மாட்டார்.
- கண்டித்து திருந்துபவர் யார்?
இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.
இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார். போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.
(யோவான் 16:5-15)
நான் போவதுடன் தீர்க்கதரிசிகளின் வருகை முழுமை பெறாது. இன்னொருவர் வருவார் என்கிறார். அவர் வருதலால் நான் போதுவது நலம் என்கிறார். அதாவது தன்னை விட உயர்ந்தவர் ஒருவர் வர இருந்தால் மட்டுமே நான் போவது நலம் என்று இயேசு கூறியிருக்க முடியும்.
வரக்கூடிய அவர் என்னைப் போல் வலது கண்ணத்தில் அடித்தால் இடது கண்ணத்தைக் காட்டச் சொல்ல மாட்டார். மாறாக உலகைக் கண்டித்துத் திருத்துவார் என்கிறார்.
தயவு தாட்சன்யமின்றி மிகவும் கண்டிப்பான முறையில் திருத்தியவர் நபிகள் நாயகம் தான். திருட்டு, விபச்சாரம், கொலை போன்ற கொடுஞ்செயல்களையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியவர் நபிகள் நாயகம் என்பது உலகறிந்த உண்மை.
சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்கிறார்.
மற்ற சிலரைப் போல் வெறும் வணக்க வழிபாடுகளுடன் அவர் நின்றுவிட மாட்டார். பிறப்பு முதல் இறப்பு வரை, விழித்தது முதல் உறங்குவது வரை மனிதன் சந்திக்கும் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவார். சகல சத்தியங்களிலும் அனைத்துத் துறைகளிலும் அவர் வழிகாட்டுவார் என்று இயேசு கூறியது அப்படியே நபிகள் நாயகத்துக்குப் பொருந்திப் போகின்றது.
நான் செய்த போதனைகளிலிருந்தும் அவர் எடுத்துரைப்பார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருக்குர்ஆனில் இயேசுவின் போதனைகள் உள்ளன. நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலும் இத்தகைய போதனைகள் உள்ளன.
நபிகள் நாயகம் அவர்கள் இயேசு கூறியதைப் போல் அவரை மகிமைப்படுத்தினார்கள்.
தந்தையின்றிப் பிறந்தார், குழந்தைப் பருவத்தில் பேசினார். அற்புதங்களை நிகழ்த்தினார். சாத்தானால் தீண்டப்படாமல் இருந்தார். என்றெல்லாம் பலவாறாக இயேசுவை நபிகள் நாயகம் போற்றிப் புகழ்ந்தார்கள்.
ஆக இந்த முன்னறிவிப்பும் வார்த்தைக்கு வார்த்தை நபிகள் நாயகத்துக்கு அப்படியே பொருந்துகிறது.
- தலைக் கல்லானது எது?
பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு சுவிஷேசம் உள்ளது. அதில் இயேசு அவர்கள் அறிவித்துச் சென்ற ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இயேசுவுக்குப் பொருந்தாவிட்டாலும் அவை இயேசுவைக் குறிப்பதாக கிறித்தவ அறிஞர்கள் சாதிப்பது வழக்கம்.
ஆனால் இயேசுவே கூறிய முன்னறிவிப்பு குறித்து இத்தகைய சமாதானம் எதையும் அவர்களால் கூற இயலாது.
இதோ இயேசு கூறுவதைக் கேளுங்கள்.
இன்னும் ஒரு உவமையைக் கேளுங்கள். வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் உண்டாக்கி, அதைச் சுற்றி வேலியடைத்து, அதில் ஆலை கட்டி, கோபுரத்தையும் கட்டி, குடியானவர்களுக்கு அதைக் குத்தகைக்காக விட்டுப் புறதேசத்துக்குப் போயிருந்தான்.
கனிகாலம் சமீபித்த போது, கனிகளை வாங்கி வரும்படி தன் ஊழியக்காரரைக் குடியானவர்களிடம் அனுப்பினான். அவர்களோ அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்தார்கள், ஒருவனைக் கொலை செய்தார்கள், ஒருவனைக் கல்லெறிந்தார்கள் பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமாக வேறே ஊழியக்காரரை அனுப்பினான், அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவன், என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். குடியானவர்களோ தன் குமாரனைக் கண்ட போது, அவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று இவன் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைப் பிடித்து திராட்சைத் தோடடத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள். அப்படியிருக்க, திராட்சைத் தோட்டத்து எஜமான் வரும் போது, குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் : அந்தக் கொடியோரைக் கொடுமையாய் அழித்துவிட்டு, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறே குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.
இயேசு அவர்களிடம்:
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே
கோடிக்குத் தலைக்கல்லாயிற்று
அது கர்த்தராலே ஆயிற்று
அது நமது கண்களுக்கு ஆச்சரியம்
என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கேளுங்கள் கடவுள் ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதன் கனிகளைத் தரும் ஜனத்திற்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான் இது எவன் மேல விழுமோ அவனை இது நசுக்கிப் போடும் என்றார்
(மத்தேயு 21:33 முதல் 21:44)
என்னே அற்புதமான முன்னறிவிப்பு! நபிகள் நாயகத்தின் வருகையை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி எவ்வளவு தெளிவாக இயேசு கூறியுள்ளார். என்பதைக் கிறித்தவ நண்பர்களே சிந்தியுங்கள்.
இந்த உவமையில் கூறப்படுவது என்ன? இவ்வுலகம் திராட்சை தோட்டத்துக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் உரிமையாளனாக கர்த்தர் குறிப்பிடப்படுகிறார்.
மனித சமுதாயத்தினர் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். அதாவது இந்த உலகத்தை தங்களின் உடமையாக கருதி அவரது கட்டளைப்படியே இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்த்தப்படுகிறது.
தோட்டத்தின் உரிமையாளன் குத்தகை வசூலிக்க அனுப்பும் ஊழியக்காரராக தீர்க்கதரிசிகள் ஒப்பிடப்படுகின்றனர். இயேசு உள்ளிட்ட அனைவரும் ஊழியக்காரர்கள் தான் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்க்கதரிசிகளை நம்ப மறுத்தனர், சிலரைக் கொன்று குவித்தனர். கர்த்தர் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது ஊழியரை அனுப்பினார். பின்னர் குமாரனை இயேசுவை அனுப்பினார். அவரையும் கொன்றுவிடுவார்கள்.
என்றெல்லாம் விளக்கி வந்த இயேசு அவர்கள், தம்மோடு ஊழியர் வருகை முடிந்து விட்டது எனக் கூறவில்லை. மாறாக வீடு கட்டுவதற்கு ஆகாதென்று ஒதுக்ப்பட்ட கல் அதாவது தீர்க்கதரிசிகள் தோன்ற மாட்டார்கள் என்று ஒதுக்கப்பட்ட இஸ்மவேல் கோத்திரம், எதற்கும் உதவ மாட்டார்கள் என்று உலகமே எள்ளி நகையாடும் அளவுக்கு ஈனச் செயல்களில் ஈடுபட்டு வந்த சமுதாயம் வீடு கட்டும் தலைக்கல்லாகவே மாறும் என்கிறார்கள்.
அதாவது எந்தத் தீர்க்கதரிசியும் தோன்ற மாட்டார் என்று புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் தலைக் கல் போல் தலை சிறந்த தீர்க்கதரிசி தோன்றுவார் என்று இயேசு தெளிவாகவே முன்னறிவிப்புச் செய்கிறார்.
அது மட்டுமின்றி கடவுளின் ராஜ்ஜியம் அதாவது வேத வெளிப்பாடு உங்களிடமிருந்து அதாவது யூதர்களிடமிருந்து நீக்கப்படும் குத்தகையை ஒழுங்காகச் செலுத்தும் வேறு ஜனங்களிடம் கொடுக்கப்படும் அதாவது முஸ்லிம் சமுதாயத்திடம் வழங்கப்படும் என்று தெளிவாக இது அறிவிக்கவில்லையா?
இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான். இது எவன் மேல் விழுமோ அவனை இது நசுக்கிப் போடும்.
என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது. அவ்வாறு வரக்கூடிய அந்தத் தீர்கக்தரிசி மற்ற தீர்க்கதரிசிகளைப் போல் இருக்க மாட்டார். மற்றவர்களைக் கொலை செய்தது போல் இவரைக் கொல்ல முடியாது? மாறாக அவருடன் போருக்கு வருபவர்களும் நொறுங்கிப் போவார்கள். அவர் யார் மேல் படையெடுக்கிறாரோ அவர்களும் தோற்றுப் போவார்கள், என்று நபிகள் நாயகத்தின் வலிமையையும் கூறுகிறார்கள்.
இயேசு கூறியதைப் போலவே நபிகள் நாயகம் வலிமை மிக்கவராக எதிரிகள் அனைவரையும் புறமுதுகிடச் செய்தவராக அதே நேரத்தில் கர்த்தரை மாத்திரம் வணங்கும் சமுதாயத்தை உருவாக்கியவராகத் திகழ்ந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.
கிறித்தவ நண்பர்களே! நீங்கள் இயேசுவை மதிப்பது உண்மையானால் அவரது போதனைகளில் நபிகள் நாயகம் குறித்த முன்னறிவிப்புகளை திருச்சபைகள் நீக்கிய பிறகும் எஞ்சியிருக்கிற இந்த முன்னறிவிப்பை ஏற்க மாட்டீர்களா?
இந்த இடத்தில் இன்னொரு முன்னறிவிப்பையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே கோடிக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்றே
என்ற வாசகம் பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 118:22 ல் இடம் பெற்றுள்ளது. இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறித்தவ அறிஞர்கள் கூறுவது வழக்கம்.
இயேசு வீடு கட்ட ஆகாதென்று ஒதுக்கப்பட்ட கல் ஆகமாட்டார். அவர் பிறப்பே அதிசயமானது. சிறு குழந்தைப் பருவத்திலேயே கடவுளைப் பற்றி பேசியவர். எனவே இது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது.
மேலும் இயேசுவே தனக்குப் பின் வரப்போகிறவரைக் குறித்து இதே வாசகத்தைப் பயன்படுத்தியிருப்பதால் இரண்டுமே நபிகள் நாயகத்தையே குறிப்பிடுகிறது என்று அடித்துச் சொல்லலாம்.
சிறித்தவ நண்பர்களே! இங்கே நாம் எடுத்துக் காட்டிய வேதவரிகள் நமது கற்பனை அன்று. மாறாக நீங்கள் பரிசுத்த வேதாகமம் என்று நம்பும் வேதத்தின் வரிகளே. இவ்வேதம் பரிசுத்தமானது என்பது உண்மை என்று நீங்கள் நம்பினால் இந்த வேதவரிகள் கூறுவதும் உண்மை தான். பல தீர்க்கதரிசிகள் பல சந்தர்ப்பங்களில் இனி வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி முன்னறிவித்துள்ளனர். அந்த முன்னறிவிப்பில் தெளிவான அடையங்களையும் கூறியுள்ளார்.
நபிகள் நாயகத்தின் மீது நீங்களே வளர்த்துக் கொண்ட தவறான எண்ணத்தை அகற்றிவிட்டு பைபிளின் இந்த வரிகளையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையும் ஆய்வு செய்து பாருங்கள்!
நபிகள் நாயகம் நிச்சயம் இறுதித்தூதர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.
உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அருளட்டும்
17.08.2009. 21:30 PM
பைபிளில் நபிகள் நாயகம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode