தவ்ஹீத் அறிமுகத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்தலாமா?
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் தொழில் வேலை வாய்ப்புகளுக்காக நம்நாட்டில் உள்ள கிளை,மாவட்ட, மாநில நிர்வாகிகள் தன் பதவியை கொண்டு அயல்நாட்டில் உள்ள நம் ஜமாத் கிளை நிர்வாகிகளோடு அறிமுகமாகிக் கொண்டு வியாபாரம் செய்யலாமா? இது மார்க்கத்தை வைத்து பிழைத்ததாக ஆகுமா? இப்படிச் செய்வது மார்க்கப்படியோ அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலிஷிப்படியோ தவறா? விளக்கம் தரவும்?
-முத்துப்பேட்டை அன்சாரி குவைத்
எந்த மாதிரியான தொழில்கள் என்பதைப் பொருத்து நாம் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும். சந்தேகம் ஏற்படுத்தக் கூடிய வகையிலும், மக்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு உள்ள வகையிலும் சேவை சார்ந்த தொழில்களிலும் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள் ஈடுபட்டால் அது ஜமாஅத்தின் நற்பெயரைப் பாதிக்கும்.
உதாரணமாக வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள் அனுப்புதலை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் அதில் சொல்லப்பட்ட பல விஷயங்களில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். சொன்ன வேலை ஒன்று சேர்த்து விட்ட வேலை ஒன்றாக இருக்கலாம். பேசிய சம்பளம் வேறு; கொடுத்த சம்பளம் வேறாக இருக்கலாம். வேலை நாட்கள் வேலை நேரங்களில் சொன்னபடி நடக்காமல் போகலாம். மற்றொரு நிறுவனத்தின் ஏஜெண்டாக இருந்து செய்தாலும் நம்மை பெரிய ஏஜெண்ட் ஏமாற்றினால் அதற்கு நம்மைத் தான் மக்கள் பொறுப்பாளியாக்குவார்கள்.
அது போல் ரியல் எஸ்டேட் என்பதில் நிலத்தின் அளவு மட்டுமே பெரும்பாலும் சொன்ன படி இருக்கும். சிலர் அதில் கூட ஏமாற்றி விடுவார்கள். ஆனால் அது குறித்து சொல்லப்பட்ட வசதிகள் அனுகூலங்களில் பெரும்பாலானவை பொய்யாகவே உள்ளன. காசு கொடுத்து வாங்கிய பின் அந்த லேஅவுட் அப்ரூவல் ஆகாவிட்டால் அந்த இடத்துக்கு தண்ணீர் வசதி, மின்சார வசதி கிடைக்காது. ரேஷன் அட்டை கூட கிடைக்காமல் போய் விடும். இது போன்ற தொழில்கள் நாம் கட்டிக்காத்த நாணயத்தையும், நேர்மையையும் நிச்சயம் பாதிக்கவே செய்யும்.
நான் ஒரு மசாலா பொருள் தயாரிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த மசாலாவை விற்பனை செய்வதற்காக எனக்குத் தெரிந்த நண்பர்கள் வியாபாரிகளை தொடர்பு கொண்டு ஆர்டர் எடுத்தால் அதில் ஒரு தவறும் இல்லை. இதில் ஏமாற்றவோ ஏமாறவோ வழி இல்லை. பொருள் கெட்டுப் போகுதல், டேமேஜ் ஆகுதல் போன்றவை ஆயிரத்தில் ஒன்று என்ற அளவில் ஏற்படக் கூடும். அப்படி ஏற்பட்டால் நாம் அதற்கு மாற்றுப் பொருள் கொடுத்து விட முடியும்.
அது போல் நான் உள்ளிட்ட பலர் நூல்களை எழுதுகிறோம். அதில் உள்ள பக்கங்கள் விலை ஆகியவற்றை தெளிவுபடுத்தி விற்கிறோம். இதில் புத்தகம் கிழிந்து போதல், தபால் துறையால் தவற விடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படக் கூடும். இதற்கு விற்பனையாளர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் இது போன்ற தொழிலைச் செய்யலாம்.
என்னுடைய வியாபார நிறுவனத்தில் விலை மலிவாகவும், தரம் உயர்வாகவும் பொருள்கள் கிடைக்கும் என்று ஒரு வியாபாரி விளம்பரம் செய்வது போல் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் விளம்பரம் செய்யலாம். பொருளைப் பார்த்து விலையெல்லாம் பார்த்துத் தான் மக்கள் வாங்குவார்கள். இது போன்ற வியாபாரங்கள் ஜமாஅத்தை பாதிக்காது.
சுருக்கமாக ஒரு வரியில் சொல்வதாக இருந்தால் எந்தத் தொழில் செய்து அதில் பாதகம் ஏற்பட்டால் ஜமாஅத்தையும் பாதிக்குமோ அது போன்ற தொழில்களை ஜமாஅத்தின் நிர்வாகிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் தொழிலில் ஏற்படும் குறைபாடு ஜமாஅத்தைப் பாதிக்காதோ அது போன்ற தொழில்களை மற்றவர்களைப் போல் நிர்வாகிகளும் செய்யலாம்.
உணர்வு 16:43
08.08.2012. 15:09 PM
தவ்ஹீத் அறிமுகத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்தலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode