கருணாநிதி ஓர் இறை நேசர்!
காதர் மைதீன் கூறுகின்றார்!
அண்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அழைக்கப்பட்டிருந்தார். இப்பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேசும் போது, தனக்கு வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்த கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினார்.
பொதுக்குழுவிலோ, வேறு பொது மேடையிலோ கருணாநிதியைப் புகழ்வதற்கு மட்டுமல்ல! ஸ்தோத்திரம் செய்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கின்றது. அதை நாம் கண்டு கொள்ளப் போவதில்லை.
ஆனால் தேவையில்லாமல் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதியை திருக்குர்ஆன் வசன விரிவுரைகர்த்தாவாக சித்தரித்துப் பேசியிருக்கின்றார். அதுவும் தமிழக அளவில் அல்ல! உலக அளவிலான விரிவுரை கர்த்தாவாக ஆக்கி, முஸ்லிம்களின் உள்ளங்களைக் காயப்படுத்தியிருக்கின்றார். வேலூரில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்காக கருணாநிதியை வலியுல்லாஹ் ஆக்கி முஸ்லிம்களின் மனங்களில் வேல் பாய்ச்சியிருக்கின்றார்.
அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன்24:35
திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்கு 50 ஆண்டுகளாக காதர் மைதீன் ஆராய்ச்சி செய்தாராம். தமிழகத்திலுள்ள வியாக்கியான கர்த்தாக்கள், உலக அளவில் திருக்குர்ஆனின் கமென்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களின் உரையைப் படித்து விட்டாராம். அந்த வசனத்திற்கு இந்த பராசக்தி வசனகர்த்தாவைப் போல் யாரும் வியாக்கியானம் தரவில்லையாம்!
அப்படி அகில உலக திருக்குர்ஆன் விரிவுரையாளர் (?) கருணாநி என்ன தான் வியாக்கியானம் கொடுத்து விட்டார் என்று பார்த்தால் வெறும் கற்பனை தான், வெட்ட வெளி தான் தெரிந்ததே தவிர கருத்தை விளங்கக் கூடிய விளக்கம் ஏதுமில்லை.
கற்பனைக்கு எட்டாத வெட்டவெளியிலிருந்து, தானே எழுந்து வெளிக்கிளம்பி வருகின்ற ஒளி வெள்ளம்!
இது தான் இஸ்லாமிய போதகர்(?) கருணாநிதி கொடுத்த விளக்கம்!
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடு ஒட்டும் என்ற அர்த்தமற்ற தத்துவத்தைப் போன்று தான் இந்த விளக்கமும் அர்த்தமற்று அமைந்திருக்கின்றது.
பொதுவாகவே குர்ஆனுக்குக் குர்ஆனே விளக்கமாகும். குர்ஆனில் விளக்கமில்லையெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் மூலம் விளக்கம் தேட வேண்டும்.
இது சாதாரண முஸ்லிம்கள் கூட விளங்கி வைத்திருக்கும் அடிப்படை விளக்கம்! இது இவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?
24:35 வசனத்திற்கான விளக்கம் அந்த வசனத்திற்குள்ளேயே அடங்கியிருக்கின்றது.
இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும் போது ஏற்புடையதாக இல்லை என்று சிலருக்குத் தோன்றலாம்.
ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணையை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்கு கண்ணாடியால் மூடி ஏற்படுத்தினாலும் அந்த ஒளி, அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவோம். எனவே தான் இது எவ்வாறு அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணமாக அமையும் என்று எண்ணி இது போன்ற வியாக்கியானங்களைக் கொடுக்க முன்வருகின்றனர்.
ஆனால் இங்கே அல்லாஹ் தனது ஒளிக்கு உதாரணம் என்று குறிப்பிடுவதை தனது மார்க்கத்திற்கும் தான் காட்டுகின்ற நேர்வழிக்கும் உதாரணம் என்றே கொள்ள வேண்டும்.
இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 302 வது குறிப்பில் நாம் தெளிவாக விளக்கியுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான்.
இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும்போது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணெய்யை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்குக் கண்ணாடியால் மூடி ஏற்படுத்தினாலும் அந்த ஒளி, அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவோம்.
இது எவ்வாறு அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணமாக அமையும் என்ற கேள்வி இதில் எழுகிறது. ஆனால் இங்கே அல்லாஹ் தனது ஒளிக்கு உதாரணம் என்று குறிப்பிடுவதை தனது மார்க்கத்திற்கும், தான் காட்டுகின்ற நேர்வழிக்கும் உதாரணம் என்றே கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இந்த வசனத்தை நிறைவு செய்யும்போது "தனது ஒளியை நோக்கி நாடியவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவான்'' என்று கூறப்படுகிறது.
நாடியவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவான் என்பது தனது மார்க்கத்திற்கு வழிகாட்டுவான் என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.
அல்லாஹ்வை அதாவது அவனது ஒளியை யாரும் பார்க்க முடியாது என்று 2:55, 4:153, 6:103, 7:143, 25:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
எனவே இவ்வசனத்தில் (24:35) உதாரணமாகக் கூறப்படுகின்ற ஒளி, அவனுடைய மார்க்கத்திற்கும், நேர்வழிக்கும் உதாரணமே தவிர அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் அல்ல.
அல்லாஹ்வுக்கு நிகராக எதுவும் இல்லை என்று 42:11, 112:4 ஆகிய வசனங்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் ஒளி பற்றி மேலும் அறிய 21வது குறிப்பையும் காண்க!
இப்படி குர்ஆனே கூறுகின்ற இந்த விளக்கத்தை விட்டு விட்டு கருணாநிதியின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறதாம். அதோடு நின்றால் பரவாயில்லை! இது சாதாரண மனிதர் சொல்லக் கூடிய விளக்கம் இல்லை! வலியுல்லாக்களும், ஆன்மீகச் செல்வர்களும் கொடுக்கும் விளக்கம் என்றும் காதர் மைதீன் கூறியுள்ளார்.
கருணாநிதி தான் மவ்லானாக்களுக்கெல்லாம் மவ்லானாவாம்! ஆன்மீக குருவாம்!
இவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்! ஆனால் தங்களுக்கு மடிப்பிச்சை போடுபவர்களைப் புகழ்வதற்காக குர்ஆன் ஹதீஸையும், இந்தப் புனித மார்க்கத்தையும் ஒரு போதும் இழுக்கக் கூடாது என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!
01.01.2015. 20:22 PM
கருணாநிதி ஓர் இறை நேசர்!காதர் மைதீன் கூறுகின்றார்!!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode