வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

ஹதீஸ் மறுப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது.

இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். தன்னை இறைத்தூதர் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை மூஸா நபி செய்து காட்டினார்கள். அப்போது ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் அதை சூனியம் எனக் கூறி ஏற்க மறுத்தனர். தமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டியிடத் தயாரா என்று மூஸா நபிக்கு சவால் விட்டனர். அதை மூஸா நபி ஏற்றுக் கொண்டதால் மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் இடையே போட்டி நடத்தப்படுகிறது.

அப்போது மூஸா நபிக்கு வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர்.

அப்போதும் மூஸா நபிக்கு வேதம் அருளப்படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போதும் மூஸா நபிக்கு வேதம் அருளப் பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போதும் மூஸா நபிக்கு வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களை வாசித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.

103வது வசனம் முதல் 141வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்னுடைய அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு, 142 முதல் 145 வரை வேதம் வழங்கப்பட்ட விபரத்தை அல்லாஹ் கூறுகின்றான்.

நாற்பது நாட்களை ஒதுக்கி தூர் மலைக்கு மூஸா நபியவர்களை அல்லாஹ் வரச் செய்தான். அப்போது தான் எழுத்து வடிவிலான வேதத்தை மூஸா நபிக்கு வழங்கினான்.

வேதம் ஏதுமின்றி ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் பல வருடங்கள் மூஸா நபியவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. கடல் கடந்து காப்பாற்றப்படுவது வரை வேதம் இல்லாமல் தான் மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்கு வழிகாட்டி வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

வேதமல்லாத இறைச் செய்தியையும், வழிகாட்டலையும் வேறு வகையில் நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்குவான் என்பதும் தெரிகிறது.

வேதம் இல்லாமல் நபிமார்கள் மார்க்கம் தொடர்பான எதைக் கூறினாலும் அதுவும் இறைச்செய்தி தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் எனும் வேதம் வழங்கப்பட்டது போல் அதற்கான விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்டது. அதையும் பின்பற்றி நடப்பது அவசியமாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account