154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?
வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன.
மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக் கொடுத்து அனுப்பினால் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியுமே என மக்கள் விரும்பினார்கள்.
உண்பவராகவும், பருகுபவராகவும் இருக்கும் மனிதரை விட இந்தப் பலவீனங்கள் இல்லாத வானவர்கள் இறைவனின் தூதர்களாக அனுப்பப்பட்டால் அவர்களை ஏற்பதற்குத் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது.
தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக தூதர்களை மறுத்தார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்பதால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுத்தார்கள்.
இந்தக் காரணங்களால் இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டனர் என்பதற்கு 25:7, 6:8,9, 23:24, 41:14 ஆகிய வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
ஒரு வானவர் இறைத்தூதராக அனுப்பப்பட்டு, அவர் எதையும் உண்ணாமல் பருகாமல் தங்களுடன் வாழும்போது அவரை இறைத்தூதர் என்று எளிதில் நம்ப முடியும். அவர் கொண்டு வந்தது இறைவேதம் என்பதையும் நம்பமுடியும். இது தான் மக்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
அந்தக் கோரிக்கைக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான்.
வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம் என்று 6:9 வசனத்திலும்,
பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம் என்று 17:95 வசனத்திலும்
அல்லாஹ் கூறுகிறான்.
வானவரையே தூதராக அனுப்புமாறு இவர்கள் கேட்கின்றனர். வானவரை அனுப்புவதாக நாம் முடிவு செய்தாலும் அந்த வானவரை மனிதத் தன்மை கொண்டவராக மாற்றித்தான் அனுப்புவோம். மனிதத் தன்மையுடன் அனுப்பப்படும் அவர் உண்பார்; பருகுவார். ஏற்கனவே அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை மீண்டும் எழுப்புவார்கள் என்று அல்லாஹ் விடையளிக்கிறான்.
"வானவரைத் தூதராக அனுப்புவதாக இருந்தால் கூட அவரை மனிதராக மாற்றித்தான் அனுப்புவேன்'' என்று அல்லாஹ் கூறுவதில் இன்னொரு முக்கியமான உண்மையும் நமக்குத் தெரியவருகிறது.
வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டும் தான் தூதரின் பணி என்றால் வானவரைத் தூதராக அனுப்புவதற்குத் தடை ஏதுமில்லை.
தூதரின் வேலை வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமல்ல. வேதத்துக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி மக்களுக்கு விளக்க வேண்டியதும் தூதரின் பணியாக இருப்பதால் வானவரைத் தூதராக அனுப்ப முடியாது. வானவரால் மனிதரைப் போல் வாழ்ந்து காட்ட முடியாது. மனிதர் தான் செய்முறை விளக்கம் தர முடியும். நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும். எனவே தான் வானவரை தூதராக அனுப்பவில்லை.
வேதத்தைக் கொண்டு வரும் தூதர்கள் வேதத்தின் போதனைகளுக்கு விளக்கம் கூறி செயல்முறை விளக்கமும் தர வேண்டியிருக்கின்ற ஒரே காரணத்தினால் தான்,
வானிலிருந்து வேதத்தைப் புத்தகமாக இறக்காமல்
வானவரைத் தூதராக அனுப்பாமல்
மனிதர்களையே தனது தூதர்களாக அனுப்புகிறான்.
வேதம் மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறி வாழ்ந்து காட்டும் வேலையும் தூதர்களுடையது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
திருக்குர்ஆன் மட்டும் போதும்; இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று கூறுவோருக்கு இதில் தக்க மறுப்பு உள்ளது.
திருக்குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், வானவரையே இறைவன் தூதராக அனுப்பியிருப்பான். மனிதரை இறைத்தூதர் என்று நம்புவதை விட வானவரை இறைத் தூதர் என்று நம்புவது எளிதானது.
வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode