36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்
இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான்.
* திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவது
* மக்களைத் தூய்மைப்படுத்துவது
* மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது
* மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது
ஆகியவை அந்த நான்கு பணிகள்.
இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.
திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையில்லை என்ற வாதத்தைத் தற்போது சிலர் முன் வைக்கின்றனர்.
வேதத்தை இறைவனிடம் பெற்று மக்களிடம் கொடுப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் இந்த நான்கு சொற்றொடர்களை இறைவன் கூறியிருக்க மாட்டான். "வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்'' என்பதோடு நிறுத்திக் கொள்வான்.
வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியவுடன் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அம்மக்கள் அதை விளங்கிக் கொள்வார்கள்.
ஆனால் "வசனங்களை ஓதிக் காட்டுவார்; வேதத்தைக் கற்றுக் கொடுப்பார்'' என்று வேதம் தொடர்பான இரண்டு பணிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஓதிக் காட்டுதல் என்றால் வசனங்களை வாசித்துக் காட்டுதல் என்று புரிந்து கொள்கிறோம்.
வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?
வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!
திருக்குர்ஆன் 29:48
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்ததாக ஆகுமே தவிர திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்ததாக ஆகாது.
ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குத் தூதர்கள் அவசியம் இல்லை. அந்த மொழியை அறிந்த யார் வேண்டுமானலும் அதைச் செய்ய முடியும். எனவே "தேவைப்படும் போது சொல்லாலும், செயலாலும் விளக்கம் தருவார்'' என்பது தான் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார் என்பதன் பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டார்கள் என்றால் அவ்விளக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பது தான் பொருள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய திருக்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளதோ அவ்வாறே அவர்களின் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளன என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.
திருக்குர்ஆனை முறையாகவும், முழுமையாகவும் விளங்கிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அமைந்துள்ளன.
வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதுடன் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் அறியாதவற்றை அவர் கற்றுக் கொடுப்பார் என்றும், மக்களைத் தூய்மைப்படுத்துவார் என்றும் கூறுகிறான்.
திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவை இல்லை என்றால் அதற்கு மாற்றமான பொருள் தரும் வகையில் இவ்வளவு சொற்களை இறைவன் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்று கூறுவானா?
எனவே திருக்குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் உண்மையில் திருக்குர்ஆனைத் தான் மறுக்கிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode