திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சவூதி உதவியில் இலவசமாக வெளியிடலாமே?
கேள்வி :
உங்கள் தர்ஜுமாவை ஏதாவது மத்திய கிழக்கு நாடு ஒன்றின் அனுசரணையில் இலவசமாக வெளியிட முடியாதா? முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் தாவா செய்ய மிகவும் உதவியாக இருக்கும். தற்பொழுது சவுதி அரசால் விநியோகிக்கப்படும் தமிழாக்கம் யாருக்கும் விளங்குதில்லை? அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்ய வேண்டும், உங்கள் மொழி பெயர்ப்பை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுத்தால் இலகுவாக விளங்கிக் கொள்கிறார்கள். விளக்கங்களும் நல்ல உதவியாக உள்ளது. பலர் உங்கள் தர்ஜுமாவைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசினாலும், இரண்டு தர்ஜுமாவையும் கொடுத்து அனுபவ ரீதியாகக் கண்டவர்கள் நாங்கள்.
சனீஜ், இலங்கை
பதில்:
இலவசமாக திருக்குர்ஆனை வழங்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நல்லது தான். ஆனால் அரபு நாட்டில் பணம் பெற்றுத் தான் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாம் இல்லை. இப்போதும் பல்லாயிரக்கணக்கில் ஜமாஅத் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. முஸ்லிம் அல்லாதவர் ஒரு அஞ்சல் அட்டை அனுப்பினால் போதும். உடனே அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஜமாஅத் சார்பில் வழங்கி வருகிறோம்.
ஏராளமான கொள்கைச் சகோதரர்களும், வளகுடா மண்டல அமைப்புகளும் இந்த வகைக்காக தாராளமாக அள்ளித் தருகின்றனர்.
சவூதி அரசாங்கத்தின் மூலம் தமிழாக்கத்தை இலவசமாக வெளியிட நாம் முயற்சித்தால் அதற்காக நாம் பல சமரசங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ள மொழி பெயர்ப்புகளை ஒட்டி இருந்தால் தான் அதை வெளியிடுவார்கள். தவறான முறையில் அவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பின் படி நாமும் மாற்ற வேண்டும். விளக்கம் பகுதியில் உள்ள பல விஷயங்களை நீக்க வேண்டும் என்ற நிர்பந்தம் செய்வார்கள். எனவே இது சாத்தியமில்லை.
இதுதான் பைபிள், இயேசு இறைமகனா?, பித்அத் ஓர் ஆய்வு, திருமறையின் தோற்றுவாய், நோன்பு, அர்த்தமுள்ள இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட பல நூல்களை சவூதி ஜாலியாத் மூலம் வெளியிட்டனர்.
இதற்காக பீஜேயிடம் அனுமதி கேட்டபோது இதற்காக ராயல்டி எதுவும் கேட்காமல் பீஜெ அனுமதி அளித்தார். பணமாகப் பெற்று நாம் வெளியிட்டால் நாம் ஆதாயம் அடைந்ததாக யாரும் கருதுவார்கள் என்பதால் அந்த நூல்களை அவர்களே அச்சிட்டு அவர்களே வினியோகித்துக் கொள்ளும் வகையில் பீஜே அனுமதி அளித்தார். அதை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டனர்.
ஆனால் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை இலவசமாக வெளியிட அவர்கள் அனுமதி கேட்டால் அதற்கு பீஜே அனுமதி அளிக்கத் தயாராக உள்ளார். இதற்காக அவர்கள் எந்த ராயல்டியும் தரத் தேவையில்லை. எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட வேண்டும் என்பது மட்டுமே இதற்கான ஒரே நிபந்தனை.
ஆனால் பீஜேயின் தமிழாக்கம் சவூதி அரசின் சில நிலைபாடுகளுக்கு மாற்றமாக உள்ளதால் அவர்கள் வெளியிட மாட்டார்கள் என்றே நாம் கருதுகிறோம்.
இதே அடிப்படையில் இலவசமாக அச்சிட்டு வெளியிட சவூதி அரசு அனுமதி கேட்டால் அனுமதி அளிக்கப்படும்.
பிறமத சகோதரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் சிறப்பு பதிப்பு அச்சாகிக் கொண்டு இருக்கிறது. திருக்குர்ஆன் அரபு மூலத்திற்கான மொழி பெயர்ப்பு முழுமையாகவும், அதே நேரத்தில் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள், வணக்க வழிபாட்டின் சட்டங்கள் போன்றவற்றிற்கான விளக்கக் குறிப்புகளை நீக்கியும், முஸ்லிமல்லாத மக்கள் ஆர்வம் காட்டாத விளக்கக் குறிப்புகளை நீக்கியும், அவர்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களை மட்டும் உள்ளடக்கிய விளக்கக் குறிப்புகளை மட்டும் கொண்டதாகவும் இந்த வெளியீடு அமைந்துள்ளது. ஒரு குர்ஆன் வழங்கும் விலையில் இரு குர்ஆன் பிரதிகள் வழங்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். அப்போது இன்னும் அதிகமான மக்களுக்கு இலவசமாக வழங்குவது எளிதாகும்.
24.10.2015. 2:55 AM
திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சவூதி உதவியில் இலவசமாக வெளியிடலாமே?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode