நாம்ஸ்ட்ர டாமஸ் மோடி பற்றி முன்னறிவிப்பு செய்தாரா?
தினமலர் நாளேட்டின் புளுகு மூட்டை
மோடி பிரதமரானதும் இது பற்றி தினமலர் நாளேடு பின்வருமாறு புளுகி இருந்தது.
450 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட மோடியின் வெற்றி!
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், 21ம் நூற்றாண்டில் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, தி புரோபெசீஸ் என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தினமலர் புளுகிய போது இது கட்டுக்கதை. இப்படி எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. மேற்கண்ட நூலின் பிரஞ்ச் வடிவத்தையும் அதன் நேரடி மொழிபெயர்ப்பையும் தினமலர் வெளியிடத் தயாரா என்று நாம் சவால் விட்டோம்.
இது குறித்து உணர்வு ஏட்டிலும் பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தோம்.
இந்தச் சம்பவம் உண்மையாயிருந்தால் உலகில் நடக்கவுள்ள அனைத்துப் பிரச்சனைகளும் நாஸ்டர்டாமுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இவர் தனது புத்தகத்தில் மாயமான மலேசிய விமானம் தற்போது எங்கே உள்ளது என்பதைப் பற்றி விளக்கியுள்ளாரா என்பதை தினமலர் விளக்குமா?
மோடி ஆட்சிக்கு வருவார் என்பது பற்றி எழுதிய பிரெஞ்சு கணிப்பாளர் அவர் இராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து அசிங்கப்படுவார் என்பது குறித்து எதுவும் எழுதி வைத்துள்ளாரா என்பதை விளக்குமா?
பின்னர் நடக்கவிருக்கும் செய்திகள் என்பவை மறைவான ஞானத்தில் உள்ளவை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் அதை அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரு அடிப்படையான அறிவு கூட இல்லாமல் இப்படி பிரெஞ்சு கணிப்பாளர் அதைக் கணித்தார்; இதைக் கணித்தார் என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் என்று பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளது தினமலர்.
பகிரங்க விவாதத்துக்கும் வராமல், தான் எழுதியதை நிரூபிக்கவும் முன்வராமல், தவறாக இட்டுக்கட்டிக் கூறியதற்கு மன்னிப்பும் கேட்காமல் கள்ள மவுனம் சாதித்த தினமலர் ஒரு ஆண்டு கழித்து அதே விஷயத்தை மேலும் கொஞ்சம் சேர்த்து புதுச் செய்தி போல் வெளியிட்டு தனது அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திக் கொண்டது.
தினமலர் இப்போது எழுதியதையும், முன்னர் எழுதியதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! முன்னர் சொன்னதை விட மேலும் கூடுதல் பொய்களைச் சேர்த்து தான் ஒரு புளுகு மூட்டை என்பதை பறை சாற்றியுள்ளது.
இன்றய தினமலர் ஏட்டில் அதே பொய்ச்செய்தி இன்று (செப்டம்பர் 20) பின்வருமாறு வெளியிட்டுள்ளது.
புதுடில்லி : 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும். அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ் தான் எழுதிய ஜோதிட குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
பிரெஞ்ச் நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ். இவர், 1555ம் ஆண்டு வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஜோதிட கணிப்பை எழுதி வைத்துள்ளார். பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த ஜோதிட குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்து அவர் எழுதி உள்ளார். நாஸ்டிராடமஸ் எழுதிய ஜோதிட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
குளோபல் மாஸ்டராக இந்தியா
பொறுத்திருங்கள். ராமராஜ்யம் வரப் போகிறது. நடுத்தர வயதுடைய அதீத ஆற்றல் கொண்டு மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும். அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும். துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அவரது தலைமையில் இந்தியா குளோபல் மாஸ்டர் ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகழிடமாக மாறும் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பா.ஜ.,வின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார். அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாஸ்டிராடமஸ் தனது ஜோதிட கணிப்பு புத்தகத்தில் ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சி அடைவது, ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆவது, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் செப்டம்பர் 11ம் தேதி இடிக்கப்பட்டது, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் எழுதி வைத்துள்ளார்.
இந்த இரண்டு கற்பணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தினமலரின் பித்தலாட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
முதலில் வெளியிட்ட புளுகு மூட்டையில் 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும் என்று சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோம்.
அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதும் சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோம்
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றையும் தீர்ப்பார் என்பதும் சொல்லப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.
தினமலர் கூறியபடி மேற்படி நூலில் காங்கிரஸ், வாஜ்பாய், அத்வானி, மோடி, ஒபாமா, ராகுல் என்ற பெயர் கூட கூறப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.
அதை நிரூபிக்க தினமலர் தயாரா?
இந்தியாவில் ராம்ராஜ்ஜியம் வரும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோ. இதை தினமலர் நிரூபிக்குமா?
சீனா பாகிஸ்தான் காஷ்மீர் ஆகிய பிரச்சனைகள் மோடி ஆட்சியில் தீர்க்கப்படும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.
இதை தினமலர் அந்த நூலில் இருந்து எடுத்துக் காட்டத் தயாரா?
மோடி ஆட்சியில் இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்கிறோம்.
அதை எடுத்துக் காட்டி நிரூபிக்க தினமலர் தயாரா?
2026 வரை மோடி ஆட்சியில் இருப்பார் என்று அந்த அந்த நூலில் சொல்லப்படவில்லை என்கிறோம்.
அதை எடுத்துக் காட்ட தினமலர் தயாரா?
செப்டமபர் 11 தாக்குதல் பற்றி அந்த நூலில் சொல்லப்படவே இல்லை என்கிறோம்.
அதை எடுத்துக் காட்டி நிரூபிக்க தினமலர் தயாரா?
ஒபாமா அமெரிக்க அதிபராவார் என்று அந்த நூலில் சொல்லப்படவே இல்லை என்கிறோம்.
தினமலர் அதை எடுத்துக் காட்டத் தயாரா?
இந்தியா இந்து நாடாக ஆகும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்று நாங்கள் சொல்கிறோம்.
தினமலர் அதை எடுத்துக் காட்டுமா?
இந்தியாவில் ராமராஜ்யம் வரப்போகிறது என்றும் அந்த நூலில் சொல்லப்படவே இல்லை என்று நாங்கள் சொல்கிறோம்.
அந்த நூலில் இதை தினமலர் எடுத்துக் காட்டத் தயாரா?
இதில் உள்ள ஒவ்வொன்றையும் அந்த நூலில் இருந்து எடுத்துக் காட்டி நிரூபிக்கும் கடமை தினமலருக்கு உண்டு.
ஒரு தடவை ஒரு பொய்யைச் சொன்னால் தவறுதலாக வெளியிட்டு விட்டதாக எண்ண வழியுண்டு. ஒரு வருடத்துக்கு முன் ஒரு பொய்யை வெளியிட்டு அதை நிரூபிக்குமாறு அறிவுலகம் சவால் விட்ட பின் அதை நிரூபிக்காமல் அல்லது தவறுக்கு மன்னிப்பும் கேட்காமல் அதே பொய்யை ஒரு வருடம் கழித்து புதுத் தலைப்பில் வெளியிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இது பீகார் தேர்தலுக்காக புதுடெல்லியில் இருந்து பரப்பப்படுகிறது. அதனால் தான் செய்தியின் சோர்ஸ் பற்றி சொல்லும் போது புது டெல்லி என்று தினமலர் போட்டுள்ளது.
எந்த மனிதனாலும் எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை அறிய முடியாது என்ற குறைந்த பட்ச அறிவு இல்லாத தினமலர் இனியாவது திருந்துமா?
20.09.2015. 5:45 AM
நாம்ஸ்ட்ர டாமஸ் மோடி பற்றி முன்னறிவிப்பு செய்தாரா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode