Sidebar

24
Tue, Dec
31 New Articles

ஒரு நாடகம் அரங்கேறியது - கப்ரு வணக்கத்துக்கு எதிரான முதல் போர்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஒரு நாடகம் அரங்கேறியது -

கப்ரு வணக்கத்துக்கு எதிரான முதல் போர்

எம். ஷம்சுல்லுஹா

மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாது என்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால்,

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன் 15:94)

என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

  1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப் பிடிப்பது.
  1. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது சமுதாயத்தில் எதிர்ப்பலைகள் சமுத்திரமாகத் திரண்டெழுந்து வரும். அவற்றை எதிர் கொள்ளும் போது பிழைப்புக்கு மட்டும் பாதகம் வருவதில்லை. புகழுக்கும் சேர்த்துப் பாதகம் வரும் என்பதால் பரேலவிகளுக்கு எதிராக அவர்கள் பொங்கி எழவில்லை.

ஆனால் 1980களில், அந்தச் சமுதாயத்தில் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள், இப்படி எவரேனும் வர மாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்; ஏங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்போது யாரும் கிளம்பி வரவில்லை. அது மட்டுமின்றி ஜமாஅத்துல் உலமாவே பரேலவிஸத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியிருந்தது.

அந்தச் சமயத்தில் சகோதரர் பி.ஜே. தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் செயலாளராகவோ, துணைச் செயலாளராகவோ இருந்தார். நான் துணைச் செயலாளராக அல்லது செயற்குழு உறுப்பினராக இருந்தேன். அப்போது 1985ல் தஞ்சாவூரில் வலிமார்கள் மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது.

நானும், மறைந்த மேதை பி.எஸ். அலாவுதீன், பி.ஜே., மாயவரம் அலீஸ் கைலி சென்டர் உரிமையாளர் மன்சூர் ஆகியோரும் அந்த வலிமார்கள் மாநாட்டில் பார்வை யாளர்களாகக் கலந்து கொண்டோம்.

அப்போது அந்த மாநாட்டில் பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஒரு தரப்பு ஆலிம்களும், அதை எதிர்த்து மற்றொரு தரப்பு ஆலிம்களும் உரையாற்றினர்.

பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிப் பேசிய ஆலிம்கள், அல்லாஹ்வின் தகுதியை அவ்லியாக்களின் தகுதியோடு ஈடாக்கி, இணையாக்கி, ஷிர்க்கை அரங்கேற்றிப் பேசினார்கள். இதைக் கண்டு பொறுக்க முடியாத நாங்கள் அதற்கு ஒரு மறுப்பு வெளியிட வேண்டும் என்று விரும்பினோம்.

அப்போது பொருளாதாரத்தில் ஓரளவு வசதி பெற்றிருந்த சகோதரர் மன்சூர் அவர்கள், நான் என் பெயர் போட்டு வெளியிடுகின்றேன் என்று குறிப்பிட்டார். அதற்கு சகோதரர் பி.ஜே. அவர்கள், அப்படி வெளியிட்டால் அதனால் வரும் எதிர்ப்பலைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு, தானே வெளியிடுவதாகச் சொன்னார். அது போல் தன் பெயரைப் போட்டு ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதற்காக அப்போதைய அவரது மாதச் சம்பளம் 300 அல்லது 350 ரூபாயை அர்ப்பணித்தார்.

அந்தப் பிரசுரம் இதோ:

ஒரு நாடகம் அரங்கேறியது

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் சோழ வள நாட்டின் தலைநகர் தஞ்சையில் மக்கள் மனங்களில் நஞ்சைக் கலந்திடும் எண்ணத்துடன் வலிமார்கள் சிறப்பு மாநாடு என்ற பெயரில் திட்டமிட்டு ஒரு நாடகம் அண்மையில் அரங்கேறியது. பெரியார்களின் பெயர்களால் தில்லுமுல்லுகளும், திருகு தாளங்களும் மலிந்து விட்ட இக்காலத்தில், மாநாட்டில் ஆற்றப்படவிருக்கும் உரைத் தலைப்புகளில் ஒன்றாக, தர்ஹாக்களின் பலா பலன்கள் என்பதும் அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு மனங்குமுறிய பன்னூற்றுக் கணக்கான சன்மார்க்கப் பேரறிஞர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஜமாஅத்துல் உலமா சபை யினுடைய அப்போதைய பொதுச் செயலாளர் மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, தரீக்காக்களின் பலா பலன்கள் என்பது தான், தர்ஹாக்களின் பலா பலன்கள் என்று தவறாக அச்சாகி விட்டது என்று சொல்லி நழுவப் பார்த்தார்.

துண்டுப் பிரசுரங்களில் தவறாக அச்சாகி விட்டது என்கிறீர்கள். நம்புகிறோம். ஆளுயரத்திற்கு ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி களிலும் அச்சுப் பிழையா? நம்ப முடியவில்லையே! என்று மடக்கிக் கேட்ட போது, ஐயா சாமி! ஆளை விடு! இன்றுடன் என் பதவிக் காலம் முடிவடைந்து விட்டது என்ற பொறுப்பற்ற பதிலைத் தான் அவரிடமிருந்து பெற முடிந்தது.

ஒருபுறத்தில் மாநில ஜமாஅத்துல் உலமாவின் பெருந்தலைவர் மவ்லானா எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள், மார்க்கச் சட்ட அடிப்படையில் மண்ணறைகள் மீது கட்டடம் கட்டுதல், அங்கே விளக்கேற்றுதல், சந்தனம் பூசுதல் போன்றவை கூடாது என்று பேட்டிகள் அளித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபுறத்திலோ இரண்டு மாவட்டங்களுக்குப் பொதுவான ஒரு கிளைச் சபை, அவர் கட்டப்படக் கூடாது என்று எதைக் கூறுகின்றாரோ அந்த தர்ஹாக்களுக்கு பலா பலன்களைக் கூற ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. முரண்பாடுகளே உங்களுக்குப் பெயர் தான் ஜமாஅத்துல் உலமா சபைகளா? என்று கேட்கத் தோன்றுகிறதா? இன்னும் இருக்கிறது, வேடிக்கை! கொஞ்சம் பொறுமையாக இதைப் படியுங்கள்.

மாநாட்டில் சில நிர்வாக அலங்கோலங்கள், அதைப் பற்றி நாம் எழுதவில்லை. உங்களுக்கும் இந்த மாநாட்டிற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா? எங்கிருந்தெல்லாமோ, யார் யாரோ வந்து மாநாட்டில் உரை ஆற்றுகின்றார்கள். ஆனால் மாநிலத் தலைவரின் பெயர் நிகழ்ச்சி நிரலில் காணப்பட்டும் உரையாற்றாமல் சென்றதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றெல்லாம் சபையின் அங்கத்தினர் என்ற முறையில் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது, முஸ்லிம் லீகர்கள் எங்களை ஆலோசிக்காமல் தலைப்புக்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து விட்டார்கள் என்று மழுப்பப்பட்டது.

ஆனால் மாநாட்டை காலையில் தலைமை ஏற்று நடத்திய, தஞ்சை புதுகை மாவட்டங்களின் அப்போதைய தலைவரும், இப்போதைய உதவித் தலைவர்களில் ஒருவருமான மவ்லானா அப்துல் கனி ஹஜ்ரத் அவர்கள், மாநாடு முழுக்க முழுக்க எங்கள் ஏற்பாட்டின்படியும், கட்டுப்பாட்டின் கீழும் தான் நடைபெறுகிறது. எனவே மாநாடு முடியும் வரை நாங்கள் தான் மேடையை ஆளுமை செய்வோம் என்று முழங்கினார். ஏன் இந்த முரண்பாடு? இரண்டில் எது உண்மை?

மரணத்திற்குப் பின் வலிமார்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றிய திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் காரீ மவ்லானா உபைதுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் வலிமார்களைப் பற்றிய அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் அந்த உரையில், விலாயத் என்ற வேர் சொல்லில் இருந்து பிறந்த வார்த்தையே வலீ என்றும் அதனுடைய பன்மை அவ்லியா என்றும் குறிப்பிட்டு விட்டு அந்த வார்த்தையை இறைவன் திருக்குர்ஆனில் மூன்று வகையான கருத்துக்களில் பிரயோகித்து இருக்கிறான் என்றார்.

வானவர்கள் ஏகத்துவ நம்பிக்கையாளர்களாகிய நம்மைப் பார்த்து, நாங்கள் தான் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்களுக்கு அவ்லியாக்கள் (அல்குர்ஆன் 41:31) என்று கூறுவதாக திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது. அதற்கு, நாங்கள் தான் இறைவனின் ஆணைகளுக்கேற்ப உங்களைப் பாதுகாக்கும் காவலர்கள் என்பது பொருள்.

அல்லாஹ் தான் அவனை நம்பியவர்களுக்கு வலீயாக இருக்கிறான் என்ற திருவசனத்திற்கு உதவியாளனாக இருக்கிறான் என்பது பொருள்.

அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு (படைப்புகளைப் பற்றிய) அச்சமில்லை. அவர்கள் (மறுமையில்) கவலைப்படவும் மாட்டார்கள் (அல்குர்ஆன்10:62) என்ற வசனத்தில் அவ்லியா என்று மனிதர்களை குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்.

விலாயத் என்ற ஒரே வார்த்தை இறைவனிடம் சேர்க்கப்பட்டு வலீ என்று குறிப்பிடப்படும் போது உதவி செய்பவன் என்ற பொருளிலும், வானவர்களைச் சுட்டும் போது காவலர்கள் என்ற பொருளிலும், மனிதர்களைச் சுட்டும் போது, நேசர்கள் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது என்பதை முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்கள் மூலமே நிரூபித்துக் காட்டினார்.

அல்லாஹ்வின் நேசர்களான அந்த நல்லவர்களை நாம் அறிந்து கொள்வது எவ்வாறு? என்ற வினாவையும் எழுப்பி, அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்றார். ஏனெனில் அவனது நேசர்கள் என்பவர்கள், இறையச்சம் உடையவர்களைத் தவிர வேறு யாருமில்லை என்று இறைவனே குறிப்பிடுகின்றான். ஒருவருக்கு இறையச்சம் இருக்கின்றதா? இருந்ததா? இருக்குமா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தெரிந்தவன் இறைவன் ஒருவனேயன்றி வேறு யாருமில்லை.

ஏனெனில் இறையச்சம் என்பது இதயத்தின்பாற்பட்டது. வெறும் நடத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எந்த முடிவிற்கும் வந்து விட முடியாது என்று காரீ உபைதுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் ஆணித்தரமாக உரையாற்றினார்கள்.

முஸ்லிம் ஒருவரின் ஒரு பாவமும் அறியாத குழந்தை ஒன்று இறந்து, அதனை நல்லடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்ணுற்ற ஆயிஷா (ரலி) அவர்கள், சுவனத்துச் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி என்று அதை விமர்சித்த போது, ஆயிஷா! அவ்வாறு கூறாதே! இறைவனின் திருவுளப்படி தான் எதுவும் நடக்கும். அந்த முடிவிற்கு வருவதற்கு நாம் யார்? என அண்ணலார் கண்டித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கூட அப்படித் தானா? என்று வியப்புடன் ஆயிஷா (ரலி) கேட்ட போது, அந்த வல்லவன் தனது பேரருட் போர்வையினால் என்னைப் போர்த்தினாலே தவிர நானும் அப்படித் தான் என்று அண்ணலார் பதில் கூறியது மவ்லானா அவர்களின் உரைக்கு மிகச் சிறந்த ஆதாரமாகும்.

எல்லா அரபிக் கல்லூரிகளிலும் கொள்கை விளக்கப் பாட நூலாகச் சொல்லித் தரப்படும், ஷரஹ் பிக்ஹுல் அக்பர் என்ற நூலில் அதன் மூல ஆசிரியர் அறிவுக் களஞ்சியம் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள், அண்ணலெம் பெருமானார் (ஸல்) ஏகத்துவ நம்பிக்கை (ஈமான்) மீது உயிர் துறந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் மூலத்திற்கு விரிவுரை எழுதும் முல்லா அலீகாரீ (ரஹ்) அவர்கள், ஏனைய திருத்தூதர்களும் அப்படித் தான் என்று குறிப்பிட்டு விட்டு, மற்றவர்களைப் பற்றி நாம் திட்டவட்டமாக எதுவும் சொல்வதற்கு இல்லை; அதற்கான அதிகாரமும் நமக்குக் கிடையாது; அது முழுக்க முழுக்க இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டது (பக்கம் 131) என்று குறிப்பிட்டிருப்பதையும் மவ்லானா அவர்கள் உரைக்கு உரிய ஆதாரமாகக் கொள்ளலாம்.

அடுத்து, ஷைகுகளும் முரீதுகளும் என்ற தலைப்பின் கீழ் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றிய லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள், முரீது என்ற வார்த்தைக்கு நாடுபவர் என்று பொருள் என்றும், (நபியே) எவர்கள் தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் சகித்திருப்பீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகையவர்களை விட்டு உம் கண்களைத் திருப்பி விடாதீர் (அல்குர்ஆன் 18:28) என்ற திருமறையின் வசனத்திலிருந்து தான் முரீது என்ற வார்த்தை, ஆன்மீகப் பாட்டையில் நடப்பவர்களால் கையாளப்படுகின்றது.

இன்றைய முரீதுகளும் அவர்களால் நாடப்படுபவர்களான ஷைக்மார்களும், இந்த இலக்கணத்திற்கு உட்பட்டவர்களா? என்ற சிந்தையைத் தூண்டும் வினாவை மக்கள் முன்னர் வைத்ததுடன், காலையில் கோழிப் பிரியாணியும், மாலையில் மாட்டுப் பிரியாணியும், இரவில் ஆட்டுப் பிரியாணியும் வயிறு புடைக்க உண்டு விட்டு, அரைப்படி பாலை கால்படியாக சுண்டும்படி வற்றக் காய்ச்சி அதில் குங்குமப்பூவை கலந்து குடிப்பவர்கள் தான் இன்றைய ஷைகுமார்கள் என்பதை மிக அருமையாக அவருக்கே உரிய நகைச்சுவை கலந்த கண்டனக் குரலில் முழங்கினார்.

ஆம்! இன்று தம்மை ஆன்மீக வழிகாட்டிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வீடுகளில் வீடியோ, டெலிவிஷன், நீச்சல்குளம், பட்டுக் கம்பளம், பாட்டுக் கச்சேரி எல்லாம் பாடாதபாடு படுவதையும், சமுதாயத்தில் வசதி மிக்கவர்கள் பலரையும் வளைத்துப் போட்டுக் கொண்டு தீட்சை வழங்குகிறேன் பேர்வழி என்று பெரும் பணத்தைச் சுரண்டுவதையும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் உபசரிப்புகளுக்கு நிகரான சொகுசு வாழ்க்கை வாழ்வதையும், பண்டார சன்னதிகளைத் தோற்கடிக்கும் அளவுக்கு அவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு எழுகின்ற அலங்கோலத்தையும் தான் நாம் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே!

இந்த மாநாடு ஏன்? என்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்பில் அடுத்துப் பேசிய, திருநெல்வேலி பேட்டை, அல்ஹஸனாத்துல் ஜாரியாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லான டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தமது உரையில், மன்னர்களிடம் இருக்க வேண்டிய ராஜாளிப் பறவை ஒன்று அதன் பெருமையறியாத கிழவி ஒருத்தியின் கைகளில் சிக்கிக் கொண்டு, அதற்குப் பேரெழிலையும் பலத்தையும் வழங்கும் நகங்களை இழந்து விட்டு அலங்கோலமான அவலத்திற்கு ஆளான வேடிக்கையும் வேதனையும் நிறைந்த கதை ஒன்றைச் சொல்லிக் காட்டி, அவ்லியாக்கள் அப்படிப்பட்ட தகுதியறியாத சிலரிடம் மாட்டிக் கொண்டு இன்று படாத பாடு படுவதை, சிலேடை நயத்துடன் எடுத்துரைத்தார்.

அவர்களிடமிருந்து அவ்லியாக்களை மீட்டு, பொதுவுடைமை ஆக்கி, அவர்களுக்கு உரிய மரியாதையையும் பெற்றுத் தருவது தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெளிவுபடுத்தினார். உவமை நயமும், சிலேடைச் செறிவும் மிகுந்த இரத்தினச் சுருக்கமான அவரது உரையை மாநாட்டில் கலந்து கொண்ட எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பார்கள்?

அல்லாஹ்வின் நேசர்களான அவ்லியாக்களைப் பற்றிப் பேச உலமாக்களான தங்களை விடத் தகுதி படைத்தவர் யார்? என்று அவர் ஆணித்தரமாகக் கேட்டது, நாங்கள் தான் அவர்களின் ஏகபோக வாரிசுகள் என்று கும்மாளமடிக்கும் கிழவி மனப்பான்மை கொண்ட யாரையோ தோலுரித்துக் காட்டியது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டிருப்பார்களா?

மாலையில் உரையாற்றிய காயல்பட்டிணம் மஹ்ளரத்துல் காதிரியாவின் பேராசிரியர் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ஆலிம் அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே அவ்லியாக்களைச் சாடுவதற்கும், அவர்களின் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்கள், அனாச்சாரங்களைச் சாடுவதற்கும் வேற்றுமை புரியாமல், அவ்லியாக்கள் என்றால் யார்? என்று மவ்லவிகளுக்கே பாடம் நடத்த ஆரம்பித்ததுடன், பைஅத் இல்லாமல் யாரும் கடைத்தேற முடியாது என்றும் ரீல் விட ஆரம்பித்து விட்டார்.

அவரை அடுத்துப் பேசிய மாநில முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் எம்.ஏ., எம்.எல்.ஏ. அவர்கள், கலந்தர் மஸ்தானின் அறியாமைக்கு விளக்கம் அளிப்பது போன்று முத்தாய்ப்பான உரையொன்று ஆற்றினார்.

சாதாரண மனிதன் ஒருவனைப் பற்றிக் கூட தவறாக எண்ணுவதோ, விமர்சிப்பதோ கூடாது என்ற உண்மையை ஒரு அரைகுறைப் பாமரனும் தெரிந்து இருக்கிறான். அப்படியிருக்க மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அறிஞர்கள் வலிமார்களைப் பற்றித் தரக் குறைவாகப் பேசுவார்களா என்ன? வலிமார்கள் எனச் சொல்லப் படுபவர்களின் சன்னிதிகளில் நடைபெறும் அட்டூழியங்களை விமர்சிப்பதற்கும், வலிமார்களை விமர்சிப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் நாம் தர்ஹாக்களை வலம் வந்து கொண்டும், கூடுகளைச் சுற்றிக் கொண்டும், கொடி மரங்களை முத்தமிட்டுக் கொண்டும் அலைகிறோம் என மிக வன்மையாகச் சாடினார்.

மேலும், வலிமார்களை எவராவது இதுபோன்ற தகாத செயல்களால் அசிங்கப்படுத்துவார்கள் என்றால் அந்த அசிங்கங்களை அல்லாஹ் சும்மா விட்டு விட்டுத் தேட மாட்டான் என்று வன்மையாகச் சாடிப் பேசினார்.

இரவு உணவுக்குப் பின், காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) என்ற தலைப்பில் உரையாற்றிய கம்பம் நகர் தந்த சிம்மக்குரலோன் மவ்லானா பி.எம். பீர் முஹம்மது பாக்கவி அவர்கள் கர்ஜிக்கத் தலைப்பட்டார்கள். தமிழகம் முழுவதும் சுற்றி வரும் துடிப்பு மிக்க இந்த இளைஞர், தர்ஹாக்களில் நடத்தப்படும் அனாச்சாரங்களைக் கண்டு மனம் புழுங்கி, கீழக்கரையில் ஒரு மாபெரும் இளைஞர் அமைப்பையே உருவாக்கி புரட்சி செய்து வருபவர். எதிர்பார்த்தது போன்றே சமூகக் கொடுமைகளுக்கு எதிரான அவரது உரை முழுவதிலும் புரட்சிக்கனல் தெறித்தது. மக்கள் அனைவரும் ஆடாது அசையாது வீற்றிருந்து அவரது உரையில் தேனுண்ட வண்டு போல் மயங்கியது குறிப்பிடத்தக்கது.

புரையோடிப் போயிருக்கின்ற சமூகக் கொடுமைகளையும், புனிதர்களின் பெயர்களால் நடத்தப்படும் அக்கிரமங்களையும் எடுத்துச் சொல்லும் போது அந்த உண்மைகள் சிலருக்குக் கசக்கவே செய்யும். நாளாகிப் போய் விட்ட அந்த ரணங்களுக்கு மருத்துவம் செய்யும் போது கொஞ்சம் வேதனை ஏற்படத் தான் செய்யும். அதற்காக உண்மையை மூடி மறைக்க முடியுமா? சத்தியங்களுக்குத் திரை போட்டு மூடலாமா? ஓர் ஆலிம் அப்படி வாய் மூடி மவுனமாக இருக்க முடியுமா? அப்படி இருப்பவனும் ஒரு முஃமினா? இல்லை! இல்லவே இல்லை!! அவன் ஷைத்தான்! ஆம்! அப்படித் தான் வள்ளல் நபி (ஸல்) அவர்கள், அவனை வன்மையாகக் கண்டிக்கிறார்கள் என்று அவர்களை சமுதாயத்திற்கு இனம் காட்டினார்.

ஒரு ஆலிம் உண்மையைச் சொல்வதற்குத் தயங்குவரானால் வேறு யார் தான் உண்மையைச் சொல்வது? அவன் அவ்வாறு உண்மைகளை எடுத்துச் சொல்லும் போது அவனுக்கு வஹ்ஹாபி, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக்குக்காரன் என்ற முத்திரைகள் குத்தப்படுகின்றன என்றும் ஆதங்கப்பட்டார்.

உண்மையை எடுத்துச் சொல்பவனுக்குப் பெயர் வஹ்ஹாபி, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக்குக்காரன் என்றால் நாங்கள் அவர்களாக இருப்பதற்கு அஞ்சவில்லை என்றும் அஞ்சாநெஞ்சத்துடன் முழங்கினார்.

அவரை அடுத்துப் பேசிய வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியர் மவ்லானா ஷப்பீர் அலீ ஹஜ்ரத் அவர்களுக்கு தஞ்சை, புதுகை மாவட்டங்களின் ஜமாஅத்துல் உலமா அப்போதைய பொதுச் செயலர் மவ்லானா ஆவூர் அப்துஷ்ஷுக்கூர் அவர்கள் காலையிலிருந்தே மிகப் பெரும் விளம்பரம் செய்து கொண்டிருந்தார்.

அவர் தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவர் என்றும், மக்கள் தவற விட்டு விடக் கூடாது, மிகச் சிறந்த உரையாற்றப் போகிறார் என்றும் ஒவ்வொரு இடை வேளையின் போதும் முழங்கிக் கொண்டிருந்தார்.

உணர்ச்சிமயமான உரையாற்றிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரங்கள் முடிவதற்கு முன்பே இடையிடையே புகுந்து நிறுத்திக் கொண்டிருந்த பொதுச் செயலர் ஆவூர் அப்துஷ்ஷுக்கூர் அவர்கள், ஷப்பீர் அலீ அவர்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் தந்தது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மிக்க ஆவலுடனும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடனும் துவங்கிய அவரது உரையின் ஆரம்பத்திலேயே காலையிலிருந்து உரையாற்றிய அத்தனை சொற்பொழிவாளர்களின் கருத்துக்களிலும் ஒரு துளி நஞ்சைக் கலந்தார்.

இரண்டு நபர்களுக்கிடையே எப்போது நட்பு உருவாக முடியும் என்பதை விளக்கத் தலைப்பட்டவர், இருவருக்கிடையே நட்பு உருவாவதற்கு அவ்விருவருக்கும் சமமான தகுதியும், தரமும் இருப்பது அவசியம் என்று புதுமை (?) விளக்கம் தந்தார். எங்கேயோ ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் மீது பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் அய்யூப் கானுக்கு அன்பு ஏற்பட்டதாம். உடனே அவனை பாகிஸ்தானுக்கு வரவழைத்து, அவனது தரத்தை தனது தரத்திற்குச் சமமாக உயர்த்தினாராம். பிறகு தான் அவன் மீது நட்பு கொண்டாராம். ஆமாம்! பாகிஸ்தானுக்கு எப்போது இரண்டு அதிபர்கள் இருந்தார்கள் என்பது நமக்குப் புரியவில்லையே! என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. பேசாமல் அந்தக் கருத்தாழம் மிக்க உரையை (?) தலையை ஆட்டிக் கொண்டு ரசிக்க வேண்டும்.

ஆம்! அப்படித் தான் மேடையிலிருந்த பெரும் பெரும் தலைப்பாகைகள் எல்லாம் ஆடிக் கொண்டிருந்தன. அவர் எடுத்து வைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அல்லாஹ் ஒருவர் மீது நேசம் கொள்ள வேண்டுமானால் அவரைத் தனது தரத்திற்கு உயர்த்திய பிறகு தான் நேசம் கொள்கிறானாம். சமமான தகுதியுடைய இருவருக்கு மத்தியிலேயே தவிர நட்பு மலர வழியே இல்லையாம்.

அண்ணலாருடன் அவர்கள் தம் தோழர்கள் நட்பு கொண்ட போது அவர்கள் அனைவரையும் அண்ணலாரின் தரத்திற்கு உயர்த்தப் பட்டதா? அல்லது அண்ணலார் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்தார்களா? என்று யாரும் கேட்கவில்லை. நீங்களும் கேட்காதீர்கள்.

அத்தோடு விடவில்லை, அந்த மகானுபவர்! இங்கே கூடியிருப்பவர்கள் அனைவரையும் அல்லாஹ்வின் தரத்திற்கு உயர்த்தி அவர்களை அவனது தோழர்களாக மாற்றி விட்டுத் தான் இந்தக் கூடடம் கலையும் என்று வேறு பிதற்றினார். தட்டிக் கேட்க ஆளில்லாத வீட்டில் தம்பி சண்டப்பிரசண்டம் செய்த கதை தான்.

அவருக்கு முன்னர் உரையாற்றிய மவ்லானா பீர் முஹம்மது ஆலிம் அவர்கள் தமது உரையில், உலக முடிவு நாள் நெருங்கி விடும் போது மார்க்க அறிவற்ற மடையர்களை எல்லாம் மக்கள் தமது தலைவர்களாக்கிக் கொண்டு அவர்களிடம் மார்க்கத்திற்கு விளக்கம் கேட்பார்கள். அவர்களும் தயங்காமல் தீர்ப்பளிப்பார்கள். தாமும் கெடுவதுடன் பிறரையும் வழி கெடுப்பார்கள் என்ற அண்ணலாரின் அமுத மொழி ஒன்றினை எடுத்துக் காட்டி, யாரோ ஒரு பாமரன் எழுதிய நூல் ஒன்று மாநாட்டுப் பந்தலில் விற்கப் படுவதையும் அந்த நூலில், கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், கப்ருக்கு ஸஜ்தா செய்தல் ஆகிய அனைத்தையும் ஆகும் என்று எழுதப்பட்டிருப்பதுடன் மண்ணறைகளை தரிசிப்பது என்ற விரும்பத்தக்க (முஸ்தஹபு) அல்லது நபிவழி மரபான (சுன்னத்) காரியத்தை ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாயக் கடமை (வாஜிபு) என்று எழுதப்பட்டிருப்பதாகவும் மிக்க வேதனையுடன் எடுத்துக் கூறினார்.

உஹது, பத்ரு, ஹுனைன் போர்க் களங்களில் பட்டொளி வீசிப் பறந்திட்ட இஸ்லாமிய வெற்றிக் கொடிகளுக்குப் பகரமாக இன்று தர்ஹா கொடிகள் மிளிரட்டும் என்று அந்த நூலாசிரியர் கிறுக்கியிருக்கிறார் என்று மனம் குமுறினார். இவற்றை எல்லாம் கூடாது என்று நிரூபிப்பவருக்கு ரூபாய் ஆயிரம் தரப்படும் என்று வேறு சவால் விட்டிருக்கிறார், அந்த மாமேதை என்று ஆத்திரத்துடன் குறிப்பிட்டார்.

அந்நூலை விற்பதற்கு மாநாட்டு அமைப்பாளர்கள் தடை விதிக்க வேண்டும் என்றும் அதைக் கண்டித்துப் பேச வேண்டும் என்று சில மவ்லவிகள் மவ்லானா ஆவூர் அப்துஷ்ஷுக்கூர் அவர்களிடம் கேட்டுக் கொண்ட போதும் அவர் அதைப் பற்றிக் கண்டும் காணாதவாறு கடைசி வரை இருந்து விட்டார். எவ்வளவு பொறுப்பு!

கம்பத்தாருக்குப் பதிலளிக்கத் துவங்கிய அந்த வேலூர் பேராசிரியர் (?) ஜியாரத் செய்வது சட்டப்படி கட்டாயமில்லாத ஒன்றாக இருந்தாலும் நாமாகவே நம்மீது அதைக் கடமையாக்கிக் கொள்கிறோம் என அரை வேக்காட்டுத் தனத்துடன் பதில் கூறினார்.

ஒன்றைக் கடமையாக்குவதற்கும் தடை செய்வதற்கும், ஆகுமாக்குவதற்கும், ஆகாதென்பதற்கும் உரிய இறைவனுடைய அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொண்டு, தான்தோன்றித்தனமாக இவர் உரையாற்றியது குழுமியிருந்த மார்க்க அறிஞர்களைக் கொதிப்படையச் செய்தது.

நாங்கள் இனிமேல் மாமிசம் உண்ண மாட்டோம்; மங்கையர் சுகம் நாட மாட்டோம்; மணப் பொருட்களை உபயோகிக்க மாட்டோம்; உறங்க மாட்டோம்; வணங்கிக் கொண்டே இருப்போம்; பகலெல்லாம் நோன்பு நோற்போம் என்று அண்ணலாரின் அன்புத் தோழர்கள் சிலர் தமக்குத் தாமே சிலவற்றைக் கடமையாக்கிக் கொண்டதையும், தடை விதித்துக் கொண்டதையும் கேள்விப்பட்ட அண்ணலார், அவர்களை மிக வன்மையாகக் கண்டித்தது கூட இந்த மாமேதை(?)க்குப் புரியாதது பேரதிசயம் தான்.

திருக்குர்ஆன், நபிமொழிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஆதாரமின்றி ஏதாவதொன்றை, நல்லது தானே என்று ஒருவன் தன்னிச்சையாகக் கருதுவானேயானால் அல்லாஹ் ரசூலுக்குரிய சட்டம் வகுக்கும் உரிமையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்ட அத்து மீறியவனாகவே அவன் கருதப் படுவான் என்ற சட்ட மேதை இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்களின் கூற்றுக் கூட இந்தப் பேராசிரியருக்குத் தெரியாததும் விந்தை தான்.

அவர் பணியாற்றிக் கொண்டு இருக்கும் பாக்கியாத் அரபிக் கல்லூரியிலிருந்தே, இறைவனல்லாத யாரிடமும் ஒன்றைக் கேட்பதோ, பிரார்த்திப்பதோ, வணங்குவதோ, இறைவனுக்கு இருப்பதைப் போன்ற தன்மைகள் அவருக்கும் இருக்கிறது என நம்புவதோ கூடாது என்றும், அது இறைவனுக்கு இணை கற்பித்தல் (ஷிர்க்) என்ற மாபெரும் மன்னிக்கப்பட முடியாத குற்றம் என்றும் மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இவர், கப்ருகளில் அடக்கமாகியிருப்பவர்களிடம் நேரடியாகவே எதையும் கேட்கலாம் என்று தீர்ப்பு வழங்கியதுடன், அதற்கு ஆதரவாக ஒரு நபிமொழியை எடுத்துச் சொல்லப் போய், அது தனது கருத்துக்கே எதிரான பொருள் உடையது என்பது கூடத் தெரியாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார். எவனொருவன் உயிருடன் இருக்கும் ஒருவனைச் சந்திக்கப் போய் அவனிடமிருந்து உபசரணைகள் எதுவும் செய்யப்படவில்லையோ அவன் செத்த பிணத்தைச் சந்தித்தவனைப் போன்று கருதப் படுவான் இது அவர் எடுத்து வைத்த நபிமொழி. இதிலிருந்தே மய்யித்தைச் சந்திக்கச் செல்பவனுக்கு எதுவும் கிடைக்காது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இவரோ, ஜியாரத் என்றாலே நம்மைப் போல உயிருள்ளவரைச் சந்திப்பதற்கே சொல்லப்படும். எனவே கப்ரில் இருப்பவர்கள் நாம் கேட்டதெல்லாம் வழங்குவார்கள் என்று காதில் பூச்சுற்றிக் கொண்டே போனார்.

மேடையில் இருந்த மேதாவிகள் மட்டுமின்றி அவருக்கு ஜால்ரா தட்டிய சில அறிஞர்களும் (?) தமது காதுகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவரும் பந்து பந்தாக சுற்றிக் கொண்டு தான் போனார்.

அடுத்து ஒரு வேடிக்கை! நான் சிரியாவிற்கு வந்து கொண்டு இருந்தேன். வழியில் ஒரு இடத்தில் இறங்கி உடல் சுத்தம் செய்து கொண்டு அந்த இரவு நேரத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு அங்கிருந்த மண்ணறை ஒன்றில் தலை வைத்துப் படுத்து உறங்கி விட்டேன். பிறகு விழித்துப் பார்த்த போது அந்த மண்ணறையில் அடக்கப்பட்டவர் என்னிடம், இன்றிரவு என்னைத் தொல்லைப்படுத்தி விட்டீரே! நாங்கள் வெளியே நடப்பவற்றைப் புரிந்து கொள்கிறோம், ஆனால் எங்களால் செயல்படத் தான் முடியாது என்று கூறி விட்டு, நீர் தொழுத இரண்டு ரக்அத்களும் உலகத்தையும் அதில் உள்ளவற்றையெல்லாம் விட மிகச் சிறந்தவை. உலகில் வாழ்பவர்களுக்கு இறைவன் நல்ல கைமாறுகளை வழங்குவானாக! எங்களின் ஸலாத்தை அவர்களுக்குத் தெரிவியுங்கள்! அவர்களிடமிருந்து மலைகளைப் போன்ற பேரொளிகள் எங்களின் மண்ணறைகளுக்குள் நுழைகின்றன என்று கூறி மறைந்து விட்டார்.

இவ்வாறு இப்னு அபித்துன்யா என்பார் தமக்கு அறிவித்ததாக அபூகிலா என்பார் அறிவிக்கிறார் என்ற விக்கிரமாதித்தன் காலத்துக் கதையை ஹிஜ்ரி எழுநூறுகளில் மாபெரும் புரட்சி செய்த இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் தமது ரூஹ் என்ற நூலில் எடுத்துச் சொல்லி இவரைப் போன்ற மூடப்பழக்க வழக்கங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை ஒரு வாங்கு வாங்குகின்றார்.

ஆனால் ஷப்பீர் அலீ அவர்கள், அந்தக் கதையை அரபி மூலத்துடன் நீட்டி முழக்கி படித்ததுடன், இது ஒரு ஆதாரத்துடன் கூடிய நம்பத்தகுந்த ஹதீஸ் என்று புளுகினார். ஹத்தஸனா, ஹத்தஸனா என்று இரண்டு தடவை சொல்லிக் கொண்டால் எந்த மாய மந்திரக் கதைகளும் ஹதீஸ் ஆகி விடுமா என்ன?

மேடையிலிருந்த மேதாவிகளில் யாராவது, என்னங்க! இதைப் போய் ஹதீஸ் என்கிறீர்கள். ஹதீஸ் என்பதற்கு உங்கள் அளவு கோல் தான் என்ன? என்று ஒரு வார்த்தை கேட்க வேண்டுமே! ஊஹும்! மூச்சு விடுவது கூடக் கேட்கும் அளவுக்கு அவ்வளவு நிசப்தமாக அதை ரசித்துக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வலிமார்களுக்கு மரணத்திற்குப் பிறகும் கராமத் இருக்கிறது என்பதற்கு அங்கு குழுமியிருந்த பெரும் கூட்டமே சான்று என்றார். பாவம்! ஜெயலலிதா கூட்டங்களுக்கு இவர் போயிருக்க மாட்டார். விட்டு விடுங்கள்! கிடைத்த வரவேற்பில் அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் எதை கராமத் என்பது? கராமத் இல்லை என்பது? என்று கூடப் புரியாத நிலையில் அப்போது வீசிய தென்றலையும், மாநாட்டுப் பந்தலைச் சுற்றியிருந்த மண்ணறைகளின் மகாத்மியம் என்று புருடா விட்டார்.

உங்கள் ஊர் பள்ளிவாசல்களில் தென்றல் வீசினால் சுற்றிலும் கப்ருகள் இருக்கிறதா? என்று பாருங்கள் என அவரைச் சுற்றி இருந்தவர்களின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைத்தார்.

அவரது முழு உரையும், மாநாட்டில் உரையாற்றிய ஏனையோர்களின் உரைகளைப் போன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டு எங்களிடம் பத்திரமாக இருக்கின்றது. இதைப் பற்றி விரைவில் ஒரு சிறப்பு மலரே வெளியிட இருப்பதால் அவரது அபத்தங்களை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

அடுத்துப் பேசினார், அஞ்சா நெஞ்சன், நாவலர், மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் அவர்கள். தமது இளமைக் காலத்திலேயே அவ்லியாக்களை அவமதிக்காதீர்கள் என்ற பெயரில் அனாச்சாரங்களைக் கண்டித்து புத்தகம் எழுதி இருப்பதாகவும், அது அந்தக் காலத்திலேயே பல பதிப்புகள் வெளியாகி மாபெரும் புரட்சி செய்ததாகவும் தமது உரையின் போது குறிப்பிட்டார். கப்ருகளில் சந்தனம் பூசுதல், அதைச் சுரண்டி சாப்பிடுதல், எரியும் விளக்குகளின் விளக்கெண்ணையை வழித்து மேனியில் பூசிக் கொள்ளுதல், சாம்பலைப் புனிதமானது என்று கருதி சாப்பிடுதல் போன்ற அனாச்சாரங்களை மிக வன்மையாகச் சாடியதுடன், அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கும் மார்க்க அறிஞர்களையும் கண்டித்துப் பேசினார்.

சமீப காலமாக தமிழக மேடைகளில் நாலாந்தர அரசியல் பேச்சாளன் கூடப் பேசத் தயங்கும், எழுதுவதற்கே கூசும் ஆபாச வார்த்தைகளைப் பேசி அப்பாவி மக்களை சிரிக்க வைக்கும் கோமாளிப் பேச்சாளர்களில் ஒருவரான மவ்லானா (?) அப்துஸ்ஸமது உக்காஷி போன்றோரும் இம்மாநாட்டில் பங்கேற்றது வேதனைக்குரியது. பெண்களும் அந்த மாநாட்டிற்குத் திரளாக வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும், கம்பு நாட்டி, ஒக்கால ஒலி போன்ற சாக்கடை வார்த்தைகளைச் சொல்லி அந்த மேடையை புண்ணியவான் களங்கப்படுத்தினார்.

யாரோ ஒருவர் என்னவோ சொன்னதால் வாயை இழுத்துக் கொண்டது, வயிற்றை இழுத்துக் கொண்டது என்று பயமுறுத்தினார். அவருக்குப் பின்வரும் இறை வசனத்தைக் கொஞ்சம் சிந்திக்கும் படி வேண்டுகோள் விடுக்கிறோம்.

தன் அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் அல்லவா? அவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உம்மைப் பயமுறுத்துகின்றனர். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவனை நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனுமில்லை.

(அல்குர்ஆன்39:36)

மாநில ஜமாஅத்துல் உலமாவிற்கு எதிராக சமீபத்தில், அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு திருச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் முக்கியப் பங்கும் வகித்த உலமாக்களில் மவ்லானா எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான், மவ்லானா சி.வி. அபூபக்கர், மவ்லானா ஷப்பீர் அலீ ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களைக் கண்டித்து திருக்குற்றாலத்தில் நடைபெற்ற மாநில ஜமாஅத்துல் உலமாவின் செயற்குழு தீர்மானம் போட்டதுடன் இவர்கள் தாமும் வழி கெட்டவர்கள், பிறரையும் வழி கெடுப்பவர்கள் என்றும் அடையாளம் காட்டப்பட்டனர். அந்தத் தீர்மானம் தமிழகத்தின் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளியிடப்பட்டது.

அப்படிப்பட்டவர்களில் சிலரான இம்மூவரையும் வலிமார்கள் மாநாட்டில் பிரமாதப்படுத்தப்பட்டதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாமோ எனப் பரவலாகப் பேசப்பட்டது. அம்மூவரும் தான் தஞ்சையில் நஞ்சை கலந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு எங்களிடம் பத்திரமாக இருக்கின்றன. தஞ்சையில் நடந்தது என்ன? என்பது தெரியாதவர்களுக்கும், வந்து விட்டுக் குழப்பத்தில் ஆளான பொதுமக்கள், உலமாக்கள் ஆகியோருக்கும் உண்மையை புரிய வைப்பதற்காகவுமே இச்சிறு பிரசுரம் இப்போது உடனடியாக வெளியிடப்படுகின்றது. விரைவில் விரிவான விளக்கங்களுடன் புத்தக வடிவில் அது வெளியிடப்படும்.

வலிமார்கள் மாநாட்டைக் கண்டித்து நாம் வெளியிட்ட பிரசுரம் இது தான். தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போரின் துவக்கமாக அமைந்தது இந்தப் பிரசுரம் தான்.

எதிர்பார்த்தது போலவே ஜமாஅத்துல் உலமா சபையின் எதிர்ப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. பரேலவிஸத்தின் எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்ட யாரும் எங்களுக்குத் தோள் கொடுக்க முன் வரவில்லை. இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் நாங்கள் நான்கு மத்ஹபுகள் என்ற சுவர்களைத் தாண்டி வெளியே வரவுமில்லை. அப்படி இருந்தும் அவர்களிடமிருந்து ஆதரவு இல்லை.

அப்போது சங்கரன்பந்தல் மதரஸாவை நோக்கி ஜமாஅத்துல் உலமா சபையினர் படையெடுத்து வந்து பி.ஜே. மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது நாங்கள் சங்கரன்பந்தலில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றானதும் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, தஞ்சை திருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா சபை கூடியது. அழைக்கப்பட்ட நாங்கள் மூன்று பேரும் அதில் கலந்து கொண்டோம். அதற்கு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா தலைமை தாங்கினார். காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

தஞ்சை மாநாட்டில் அல்லாஹ் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறான் என்பதை விட அவர்கள் அவமானப் படுத்தப்பட்டது தான் மேலோங்கி நின்றது.

மன்னிப்புக்கு அல்லது மறு பரிசீலனைக்கு இடம் கொடுக்காது அங்கிருந்து வெளிநடப்புச் செய்தோம். ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து நீக்கவும் பட்டோம்.

அன்றிலிருந்து தவ்ஹீது பிரச்சாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் களமிறங்கினோம். அந்தப் பணியும் பயணமும் தொடர்கின்றது. பயணத்தின் நடுவில் சகோதரர் பி.எஸ்.அலாவுதீன் அவர்கள் உயிர் பிரிந்து விட்டார்கள். இந்தப் பயணத்தில் இணைந்தவர்களும் உண்டு. இதை விட்டுப் பிரிந்தவர்களும் உண்டு. இருப்பினும் இந்தப் பயணம் தொடர்கின்றது.

அரபு நாட்டு வரவைப் பெற்றுக் கொண்டு, வந்ததை வாந்தி எடுக்காது அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் இந்த மார்க்கத்தின் அச்சாணிகள் என்ற நம்பிக்கையுடன் பாதாள நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பரேலவிஸத்திற்கு எதிரான போர்ப் பயணம் இன்றும் தொடர்கின்றது. இன்ஷாஅல்லாஹ் இறுதி மூச்சு வரை இப்பயணம் தொடரும்.

13.08.2009. 1:20 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account