பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை!
இந்தியாவின் பல பகுதிகளில் பரேலவிஸம் வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி விஷ விருட்சமாக விரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும் மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்! சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும் உயிருடன் இருக்கிறார்கள்; எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள்!
இவையெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம் இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது.
நாங்கள் சங்கரன்பந்தல் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தீன் விளக்கக் குழு என்ற பெயரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்ற அழைப்போம்.
கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம், இந்தச் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா? என்று கேட்டோம்.
சிலரிடத்தில் தெளிவான பதில் இருக்கும்; சிலரிடம் மழுப்பல் இருக்கும்.
சில அறிஞர்களிடம் நேரடியாகப் போய்க் கேட்டிருக்கிறோம். போன இடத்திலும் அதே நிலை தான்.
இருப்பினும் இம்முயற்சியைத் தொடர்ந்ததற்குக் காரணம் இவர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு பரேலவிஸத்திற்கு எதிரான போர்க்களத்தில் இறங்கலாம் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால் இம்முயற்சிக்கு, தஞ்சையில் நடைபெற்ற வலிமார்கள் மாநாடு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.
(அந்த வரலாறு தனிக் கட்டுரையாக கூறப்பட்டுள்ளது)
அதனால் தனித்துக் களம் இறங்கினோம். பரேலவிஸத்தை எதிர்த்து காயல்பட்டிணத்தில் முபாஹலாவைச் சந்தித்தோம். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீதில் நாள் தோறும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு களம் இறங்கும் முன் யாராவது இதைச் சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கினோம். அதிலும் குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்கள் இதற்குக் கை கொடுக்க மாட்டார்களா? என்றெல்லாம் எதிர்பார்த்தோம். ஏனென்றால் தேவ்பந்த் தாருல் உலூமின் அடிப்படையே பரேலவிஸத்திற்கு எதிராக அமைந்தது தான்.
ஆனால் அவர்களும் இதைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவில்லை. இதற்குக் காரணம், தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் தான்.
இவ்வாறு பரேலவிஸத்தைப் பற்றி அவர்கள் பகிரங்கமாகச் சொல்லாததால் தேவ்பந்தில் ஓதி வந்த ஆலிம்களே இந்த பரேலவிஸத்திற்குப் பலியாகி விட்டனர். அதைப் பரப்பும் பிரச்சாரகர்களாகவும், இருட்டில் உட்கார்ந்து யாமுஹய்யித்தீன் என்று அழைக்கும் முஷ்ரிக்குகளாகவும் மாறி விட்டனர்.
இதில் வேதனைக்குரிய விஷயம், பரேலவிஸத்திற்கு எதிரான சிந்தனை கொண்ட ஆலிம்கள் நமக்கு எதிராகச் செய்த பிரச்சாரத்தில் ஒரு சதவிகிதம் கூட பரேலவிஸத்திற்கு எதிராகச் செய்யவில்லை.
நான்கு மத்ஹபுகள் என்ற சுவர்களுக்குள் இவர்களும் சங்கமிக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களை விட்டு வைத்தார்கள். ஆனால் இன்று அந்த பரேலவிகளை எதிர்த்துக் களமிறங்கியிருக்கின்றார்கள்.
சென்னையிலுள்ள காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி சார்பில் வெளியிடப்படும் மனாருல் ஹுதா என்ற மாத இதழில் பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதிலும் எங்கே தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் இவர்களை ஆட்கொள்ளாமல் இல்லை. அதனால் ஆங்காங்கே வஹ்ஹாபிகளைப் பற்றிக் குறை சொல்லி இருந்தாலும், பரேலவிஸத்தைக் கடுமையாக லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கின்றார்கள்.
இப்படி காலம் கடந்தேனும் இந்த உண்மையைப் போட்டு உடைத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் பரேலவிஸம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அடிப்படைக் காரணம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளை விட்டு வெளியே சென்று, மத்ஹபுகளை இஸ்லாத்தின் அடிப்படையாக்கியது தான் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்ஷா அல்லாஹ் அதையும் இவர்கள் உணரும் காலம் வெகு தூரம் இல்லை.
மனாருல் ஹுதா இதழில் வெளியான, பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.
பரேலவிகள் - ரிளாகானிகள்
பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ 14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார்.
உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்று பிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான். தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர் வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு ரிளாகானிய்யத் என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி பரேலவிய்யத் என்றும் கூறுவர்.
காதியானியிடம் ஆரம்பக் கல்வி
இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர், இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
ஐயமும் தெளிவும்
ஐயம்: ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றி விட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்பு கொடுப்பதற்குக் காரணம் என்ன?
தெளிவு: நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறிய வேண்டுமெனில், பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்திய முஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வித்தியாசங்கள்
பரேலவிகள் தோன்றுவதற்கு முன்பே பித்அத், அனாச்சாரங்கள் இருந்து வந்த போதிலும் பரேலவிகளுக்கும் அதற்கு முந்தைய பித்அத்வாதிகளுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.
முதல் வித்தியாசம்
பரேலவிகளுக்கு முன் எந்த ஆலிமும் பித்அத்தை இஸ்லாத்தின் போதனையாகவோ, மார்க்கத்தின் ஓர் அங்கமாகவோ கூறியதில்லை. இந்த பரேலவிகள் தான் முதன் முதலில் பித்அத்திற்கு இஸ்லாமிய வடிவம் கொடுத்து, இஸ்லாத்தின் ஓர் அங்கம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தினார்கள்.
இரண்டாவது வித்தியாசம்
பித்அத்தைக் கண்டித்து சுன்னத்தை நிலைநாட்டும் உண்மையான உலமாக்களை முதன் முதலில் காஃபிர்கள் என்று முத்திரை குத்தியது பரேலவிகள் தான்.
இதன் விளைவு
தயக்கத்துடன், வெட்கத்துடன் செய்யப்பட்டு வந்த பித்அத்கள் புண்ணியமானதாகவும், நன்மைக்கு உரியதாகவும் கருதப்பட்டு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பகிரங்கமாக அரங்கேற்றம் பெறத் துவங்கின.
முன்பு, கவலையுள்ள ஆலிம்கள் பித்அத்தின் தீய விளைவுகளை எடுத்துக் கூறினால் தவ்பாச் செய்து சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நிலை மக்களிடம் இருந்தது. ஆனால் பரேலவிகள் தலையெடுத்த பின், பித்அத்தை எதிர்த்து நபிகளாரின் சுன்னத்தைப் பேணும் உண்மையான நல்லடியார்களை காஃபிர்கள் என எண்ணும் நிலை உருவானது. இதனால் ஷிர்க்கிற்கு நெருக்கமான பித்அத் என்ற இப்பெரும்பாவத்திலிருந்து பெரும்பாலோருக்கு தவ்பாச் செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
ஆங்கிலேயர்களாவது அந்த உண்மையான தியாகசீலர்களை வஹ்ஹாபிகளாகத் தான் ஆக்கினார்கள். ஆனால் பித்அத்தை மார்க்கமாக்கிய தீய ஆலிம்களோ அவர்களை காஃபிர்களாகவே ஆக்கி விட்டார்கள்.
எந்த உண்மையான உலமாக்கள் வந்திருக்காவிட்டால் இந்தியாவில் இஸ்லாமே அழிந்திருக்குமோ அந்தப் புண்ணியவான்களை, இஸ்லாத்திற்காக இன்னுயிரை நீத்த தியாகச் செம்மல்களை காஃபிர் என்றால் வேறு யார் தான் முஸ்லிமாக இருக்க முடியும்?
இப்போது புரிகிறதா பித்அத்தும், பரேலவியிஸமும் எவ்வளவு கொடூரமானவை என்று?
ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வாவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன?
தினமும் ஏதேனும் ஓர் உண்மையான ஆலிமையோ, ஒரு குழுவையோ காஃபிர் என்று மொத்தமாகவும் சில்லரையாகவும் ஃபத்வா கொடுக்காவிட்டால் ரிளாகான் பரேலவிக்கு அன்றைய பொழுது கழியாது.
இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்களை, தீனுக்காகத் தமது வாழ்நாளை மனத் தூய்மையோடு அர்ப்பணித்த தியாக சீலர்களை அசிங்கமான, கொச்சையான வார்த்தைகளால் வசை பாடியது மட்டுமின்றி, காஃபிர் என்று கூறிய முதல் மனிதர் ரிளாகான் பரேலவி தான்.
ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வா ஒரு வரலாற்றுப் பார்வை
இந்தியாவில் முன்பிருந்தே ஆலிம்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் பல பாகங்களில் பிரிந்து வட்டார அளவில் மட்டும் தம் பணிகளைச் செய்து வந்தார்கள். கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் எழுச்சி ஒரு புறம், மறுபுறம் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் எல்லா மட்டத்திலும் முஸ்லிம்களின் வீழ்ச்சி. இதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பல பாகங்களில் பிரிந்து கிடக்கின்ற பல்வேறு சிந்தனை கொண்ட அனைத்து உலமாக்களும் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயல்படலாம் என்று முடிவானது.
நத்வத்துல் உலமா
இதனடிப்படையில் மௌலானா முஹம்மது அலீ மூங்கீரி (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியால் (கி.பி. 18ம் நூற்றாண்டு பிற்பகுதி) ஹிஜ்ரீ 1311ல் கான்பூரில், நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பல்வேறு சிந்தனை கொண்ட முக்கிய உலமாக்கள் கூடினார்கள். இந்த அமைப்பிற்கு நத்வத்துல் உலமா (உலமாக்கள் சங்கம்) என்றும் பெயரிடப்பட்டது. அநேகமாக இந்திய வரலாற்றில் அதற்கு முன்பு இவ்வாறு அனைத்து உலமாக்களும் கூடிய சரித்திரம் இல்லை.
வெளிநடப்பு
அனைத்து உலமாக்களும் ஓரணியில் திரண்ட பின் இனி இந்திய முஸ்லிம்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் தான் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அந்த முதல் கூட்டத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் ஏதோ காரணம் கூறி வெளிநடப்புச் செய்து, கூட்டத்தைப் புறக்கணித்தார். அவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி.
புறக்கணித்தது மட்டுமன்றி நத்வத்துல் உலமாவின் அனைத்து ஆலிம்களையும் காஃபிர் ஃபத்வா கொடுத்து, சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடி நூலுக்கு மேல் நூல் எழுதினார். கிட்டத்தட்ட நூறு நூல்கள் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு விநியோகித்தார்.
இவ்வளவுக்கும் அவர் சொன்ன காரணம் இது தான். அதாவது, 70 காரணங்களால் காஃபிராகி விட்ட ஷாஹ் இஸ்மாயீலை ஏற்ற வஹ்ஹாபிகளையும் நத்வாவில் இணைத்ததால் எல்லா ஆலிம்களும் காஃபிராகி விட்டனர் .
ஆங்கிலேயரின் மனசாட்சி
இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹ் இஸ்மாயீல் தெஹ்லவீ அவர்களுக்கும், அவர்களது படைக்கும் வஹ்ஹாபிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது ஆங்கிலேயர்கள் தான். அதே பெயரை ரிளாகானும் பயன்படுத்துகின்றார்.
மேலும் இந்தியாவின் அனைத்து உலமாக்களும் சேர்ந்து ஆரம்பித்த நத்வத்துல் உலமா அமைப்பை ரிளாகான் என்ற ஒரு தனிநபர் மட்டும் எதிர்த்து நூல் எழுதவும், அந்த அமைப்பையே இல்லாமல் செய்யவும் முடிந்தது என்றால் ஆங்கிலேயருடன் அஹ்மது ரிளாகான் பரேலவிக்கு ஆங்கிலேயரின் மனசாட்சியாகச் செயல்படும் அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நத்வத்துல் உலமா அமைப்பு மட்டும் துவங்கிய வீரியத்தோடு செயல்பட்டு இருந்தால், இந்தியாவின் சரித்திரமே மாறி முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக மாறி இருப்பார்கள்.
ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் காலம் காலம் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த அஹ்மது ரிளாகான் பரேலவி முஸ்லிம்களின் எதிரி என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?....
...இதே ரிளாகான் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலமாக்களும் முஸ்லிம்களும் போரிட்டு வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேளையில், இந்தியா தாருஸ்ஸலாம் - இஸ்லாமிய நாடு தான்; முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என வலியுறுத்தினார். அதற்காக ஆங்கிலே யரைப் புகழ்ந்தும், ஆங்கிலேயருக்கு எதிரான போரைக் கண்டித்தும் பல நூல்களை எழுதி ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்.
ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்த மௌலானா அப்துல் அஜீஸ் அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் - இறை மறுப்பாளர் என்று ஃபத்வா கொடுத்தார்.
இப்போது சொல்லுங்கள். பரேலவிய்யத் ஆங்கிலப் பிள்ளையா? இல்லையா?
தனது ரிளாகான் என்ற பெயரை அப்துல் முஸ்தபா என்று மாற்றிக் கொண்டார்.
இத்தகைய தவறான கோட்பாடுகளையும், சிந்தனையும் கொண்ட இவராலும் இவரது சீட கோடிகளாலும் பரப்பப்பட்டதே பரேலவிய்யத் ரிளாகானிய்யத்.
இவர்களின் கொள்கைகளில் சில...
அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல் அவ்லியாக் களிடமும் கேட்கலாம்.இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்யலாம்.நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும் ஆஜராகின்றார்கள். அனைத்தையும் பார்க்கிறார்கள். (இறைவனுடன் பொருத்திப் பார்க்கும் அபாயகரமான நம்பிக்கை இது)
சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு ஆஜராகும் தன்மைகள் உள்ளன.மறைவான ஞானம் (இல்முல்கைப்) நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மை தரும் செயல்களாகும்.ஷைக் - ஞான குருவின் காலில் விழலாம். ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் - ஒப்பந்தம் செய்யலாம்.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அனைத்திற்கும் புறம்பான இது போன்ற பல தவறான கொள்கைகளைப் பரப்பி இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்றளவும் பல பிளவு ஏற்படக் காரணமானவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி என்பதைப் புரிந்து கொள்வோம்.
ரிளாகான் பரேலவியின் இது போன்ற தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. நாம் எச்சரிக்கையாக இருப்போம்.
நன்றி: மனாருல் ஹுதா
அக்டோபர் & நவம்பர் 2006
இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் களமிறங்க வேண்டும். அவ்வாறு களமிறங்கிப் பிரச்சாரம் செய்தால், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் இந்த பரேலவிகளை மக்களே அடையாளம் கண்டு விரட்டியடித்து விடுவார்கள். இவர்களின் கொள்கைகளில் சில... என்று தலைப்பிட்டு மனாருல் ஹுதா வெளியிட்டிருக்கும் விஷயங்களைப் பாருங்கள்.
இந்த விஷக் கருத்துகளுக்கு எதிராகத் தான் இறையருளால் கால் நூற்றாண்டாக நாம் போராடி வருகின்றோம். மற்றவர்களைப் போல் இலை மறை காயாக, பட்டும் படாமலும் சொல்லாமல், தயவு தாட்சண்யமின்றி எடுத்துச் சொல்லுங்கள் என்ற இறைக் கட்டளையின் அடிப்படையில் போட்டு உடைத்து வருகின்றோம்.
பரேலவியின் தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று மனாருல் ஹுதா எச்சரிக்கின்றது. ஆனால் அது யார்? என்று தெளிவாக அடையாளம் காட்ட அவர்கள் தயாராக இல்லை. இந்த மென்மையான போக்கு தான் பரேலவிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தான் அது என்று தெளிவாகச் சொல்வதற்கு மனாருல் ஹுதாவிற்குத் தயக்கம் ஏன்?
பரேலவியின் கொள்கையை சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தைரியமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்; அதற்கு ஆதரவாக தவ்ஹீது ஜமாஅத்துடன் விவாதக் களத்திற்கும் வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களைப் பற்றி மக்களிடம் தெளிவாக அடையாளம் காட்டி பிரச்சாரம் செய்யாதது தான். எனவே பரேலவிஸத்தைப் பற்றி கவலைப்படுவதோடு நின்று விடாமல் அதில் மக்கள் வீழ்ந்து நரகத்திற்குச் சென்று விடாமல் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode